தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர் வைக்கலாமா வேண்டாமா என்கிற அரசியல் விவாதம் போய்க் கொண்டிருக்கிறது. மொழிப் பித்து அரசியல் பித்தாகவும் அரசியலில் லாபமீட்டித் தரும் முதலீடாகவும் ஆகி வருடங்கள் பல ஓடிவிட்டன. அது இருக்கட்டும். இது ஒரு விவாதம் என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம். திரைப்படங்களுக்கு ஆங்கிலக் கலப்பு அல்லது ஆங்கிலப் பெயர்களை வைக்கலாமா, வேண்டாமா என்ற கேள்வி எழுப்பப்பட்டால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், தாய் மொழியின் பேரில் இருக்கிற பிரியத்தால், தமிழை ஆதரிக்கிறோம் என்று முழங்குகிற பலரை நான் அறிவேன். அப்படியே ஆங்கிலக் கலப்பு தவிர்க்க இயலாதது என்று சொல்கிறவர்களும் மொழி வெறி கூடாது என்கிற கருத்துடன் நிறுத்திக் கொள்கிறார்கள்.
அதற்குக் காரணம், திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் வைக்கக் கூடாது என்பவர்களும், ஆங்கிலக் கலப்பு பெயர்கள் திரைப்படங்களில் தவிர்க்க இயலாது என்பவர்களும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பிற மொழிகள் எவ்வாறு மற்றும் எந்த அளவில் பங்கெடுத்து வந்துள்ளன என்பதைப் பற்றிய பாரம்பரிய அல்லது வரலாற்று அறிவுடன் வாதங்களை வைக்கவில்லை. (அல்லது அப்படி வைக்கப்பட்ட வாதங்களை நான் படிக்கவில்லை.) இந்த நேரத்தில் திரைப்படத்துறை நிபுணத்துவம் அல்லது தமிழ்த்திரை மீது அதிக ஆர்வம் இல்லாத என்னைப் போன்றோர்க்கு, தமிழ்த் திரையில் பிற மொழிகள் ஆதிகாலம் தொட்டு எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்கிற வரலாற்றை - அரசியல்வாதிகள் அல்லாமல் - திரைக்கலைஞர்கள் எழுதினால் நன்றாக இருக்குமே என்று தோன்றுவது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட வரலாற்று மற்றும் நிகழ்கால நடைமுறை அறிவு ஒரு பிரச்னையின் உண்மையான தாக்கத்தையும் பரிமாணத்தையும் அது பாதகம் மட்டும் செய்கிறதா என்பதையும், அதன் பின்னே இருக்கிற உளவியலையும் என்று பலவற்றை அறிந்து கொள்ள உதவும்.
ஜூன் 2005 மாத காலச்சுவடு இதழில் தமிழ்ப் படங்களில் பிற மொழிகள் என்னும் தலைப்பில் இயக்குநர் அம்ஷன் குமார் எழுதியுள்ள கட்டுரை தமிழ்ப் படங்களில் பிற மொழிகளின் வரலாற்றையும், இடத்தையும், பிற மொழிகள் பயன்படுத்தப்படுவதற்கான தமிழ் மன உளவியலையும், இன்ன பிறவற்றையும் மிகவும் விரிவான உதாரணங்களுடன் அலசி ஆராய்கிறது. தமிழ்ப் படங்களில் பிற மொழிகளை ஆதரிக்கிறவர்களும் எதிர்க்கிறவர்களும் படிக்க வேண்டிய கட்டுரையாக இந்தக் கட்டுரையை நான் நினைக்கிறேன்.
இயக்குநர் அம்ஷன் குமார் திரைப்படம் மீதான ஆர்வத்தால் தான் பார்த்து வந்த பணியை உதறி விட்டுத் திரைப்படத்துறையில் நுழைந்தவர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உலக சினிமாவையும், தமிழ் சினிமாவையும் அவதானித்து வருபவர். சினிமா குறித்த பல கட்டுரைகளை எழுதியவர். ஒருத்தி திரைப்படத்தின் இயக்குநர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவந்த சுப்ரமணிய பாரதி என்கிற டாக்குமெண்டரியின் இயக்குநர். அசோகமித்திரனைப் பற்றியும் சாகித்திய அகாடமிக்காக ஒரு டாக்குமெண்டரி இயக்கியுள்ளார். சினிமா மட்டுமில்லாமல் இலக்கியத்தின் மீதும் ஆர்வம் உள்ளவர்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Neevir pallandu pallandu..pallandu vaazga! Amshankumarin katturai arumai...!!!
- Regards,Arun
Post a Comment