Wednesday, June 29, 2005

எனிஇண்டியன்.காமும் புத்தக மதிப்புரைகளும்

ஜெயா தொலைகாட்சியின் காலை மலர் நிகழ்ச்சியின் என் நேர்காணல் மே 4, 2005 புதன் அன்று காலை 7:30 இந்திய நேரத்துக்கு ஒளிபரப்பானது. 40 நிமிட நிகழ்ச்சி அது. ஏறக்குறைய 30 நிமிடங்களுக்கான கேள்விகள் எனிஇண்டியன்.காம் பற்றி இருந்தன. அப்போது எனிஇண்டியன்.காம் நோக்கம், அது எப்படித் தற்போது செயல்படுகிறது, அதன் சிறப்பம்சங்கள், எதிர்காலத் திட்டங்கள் என்று பலவற்றைப் பற்றிப் பேசினேன். மீதி 10 நிமிடங்கள், என்னுடைய மென்பொருள் ஆலோசகர் பணியைப் பற்றியும், என் இலக்கிய ஆர்வம் பற்றியும் இருந்தன.

எனிஇண்டியன்.காம் இணையதளத்தில் இருக்கிற புத்தகங்களுக்கு பயனர்கள் மதிப்புரையும் கருத்தும் எழுதுகிற வசதி ஏற்கனவே இருக்கிறது என்பதை அப்போது நான் சுட்டிக் காட்டினேன். அதுமட்டுமில்லாமல், எங்களிடம் இருக்கிற புத்தகங்கள் பற்றிய விமர்சனங்களும் மதிப்புரைகளும் பிற இடங்களிலோ பத்திரிகைகளிலோ வெளியாகி இருந்தால், அவற்றையெல்லாம் தொகுத்து எனிஇண்டியன்.காம் இணையதளத்தில் இருக்கிற அந்தப் புத்தகப் பக்கத்தின் கீழேயே "கருத்துகள்" என்று இருக்கிற தலைப்பின்கீழ் கொடுக்கிற திட்டமும் இருக்கிறது என்று எடுத்துச் சொன்னேன். இதன் நோக்கம் ஒரு புத்தகத்தைப் பற்றிய எல்லா விவரங்களையும் ஒரு பயனர் ஓர் இடத்திலேயே அறிந்து கொள்ள வேண்டும் என்பதே. அதன்படி கடந்த ஒரு மாதத்தில் சில புத்தகங்கள் குறித்துச் சில தினசரிகளில் வெளியான மதிப்புரைகள் எனிஇண்டியன்.காம் தளத்தில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் இன்னும் பல புத்தக மதிப்புரைகளை எங்கள் தளத்தில் சேர்க்கவோ, அல்லது அவற்றுக்குச் சுட்டி கொடுக்கவோ (மதிப்புரைகள் இணையத்தில் இருந்தால்) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது ஒரு தொடர் நிகழ்வாகும்.

என்னுடைய ஜெயா தொலைகாட்சி நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் இவற்றை அறிந்திருப்பார்கள். அப்படிப் பார்த்தும் மறந்து போனவர்களுக்காகவும், பார்க்காதவர்களுக்காகவும் இத்தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஜெயா தொலைகாட்சி நேர்காணலில் நான் சொன்ன இன்னொரு விஷயம் - தெரியாத ஒரு புத்தகத்தை வாங்க விரும்புகிற பயனர் புத்தகக் கடைக்குப் போகிறார். புத்தகத்தைக் கையில் எடுத்துப் பார்க்கிறார். அட்டையைப் பார்க்கிறார். புரட்டிப் பார்க்கிறார். சில பக்கங்களைப் படிக்கவும் செய்கிறார். பின்னட்டையில் புத்தகம் பற்றிய blurb இருந்தால் அதைப் படிக்கிறார். பின்னர் - இந்த ஆய்வுகளின் அடிப்படையில் திருப்தியடைந்தால் அந்தப் புத்தகத்தை வாங்குகிறார். எனிஇண்டியன்.காமின் நோக்கம் பயனர் புத்தகக் கடைக்குப் போகாமல், இணையத்தின் மூலம் புத்தகம் வாங்கும்போதும், அவருக்கு இத்தகைய சலுகைகளை முடிந்தவரை அளிக்க முயல்வதாகும். அதன்படி - ஒரு தொடர்நிகழ்வாக எங்களிடம் இருக்கிற புத்தகங்களுக்கான அட்டைப் படங்கள், blurbs, மதிப்புரைகள் ஆகியவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கிற வேலையை எனிஇண்டியன்.காம் தொடர்ந்து செய்து வரும் என்றும் அந்த நேர்காணலில் சொன்னேன்.

இனிவரும் காலங்களில் புத்தகத்திலிருந்து சில பக்கங்களைப் பயனரிடம் பகிர்ந்து கொள்கிற ஆசையும் திட்டமும் எங்களிடம் இருக்கிறது.

2 comments:

முகமூடி said...

PKS, can you send a mail to mugamoodi at hotmail dot com... or if u can tell your mail id, that would be great. I have some news for you.

PKS said...

Hi, I sent an email to you at your hotmail id after seeing this msg. My email is pksivakumar at yahoo dot com. Thanks.