Sunday, July 03, 2005

தினமணி கதிரில் எனிஇண்டியன்.காம்

இந்த வார தினமணி கதிரில் எனிஇண்டியன்.காம் பற்றிய கட்டுரை ஒன்று வந்துள்ளது. அருள் கார்த்திக் என்பவர் எழுதியிருக்கிறார். தினமணி கதிருக்கும், அதன் ஆசிரியருக்கும், அருள் கார்த்திக்கும் நன்றி சொல்லி அக்கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கட்டுரையின் சுட்டி http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNK20050629085225&Title=Kadhir&lTitle=%A7%5DU%A6+L%A7o&Topic=0

வலைவீச்சு: இணையத்தில் ஒரு புத்தகப் புதையல்

- அருள் கார்த்திக்

புத்தகம் படிக்கும் வழக்கம் மிகவும் குறைந்து வருகிறது.

பெரும்பாலான அறிஞர்களின் கூக்குரல் இது! இதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் கூட, புத்தகம் படிக்கும் வழக்கம் என்றைக்கும் மறையாது என்பது நிதர்சனம்.

காலங்கள் மாறலாம். ஆனால் கதைகள், கட்டுரைகள், கவிதைகளில் காதல் கொண்டு, தேடித் தேடிப் படிப்பவர்கள் தொடர்ந்து கொண்டேதான் இருப்பார்கள். ஆளை வசீகரிக்கும் இன்பச் சுவையுடையவை புத்தகங்கள்!

இந்த நம்பிக்கையை வளர்க்கும் பல விஷயங்கள் தோன்றிக் கொண்டே இருப்பது மகிழ்ச்சியளிக்கும் சேதி! அதுவும் நவீன தொழில் நுட்பங்களைச் சார்ந்து அமைவது இரட்டிப்பு மகிழ்ச்சி.

காற்று வாங்கப் போய், கவிதை வாங்கி வந்த காலங்கள் உண்டு. இன்று கணினிக்குள் போய், அதற்கு மேலும் வாங்கலாம்.

அப்படி ஒரு முயற்சியாக நடத்தப்பட்டு வருவது எனிஇண்டியன்.காம் என்ற இணையதளம். சென்னையில் அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்த இணையப் புத்தகக் கடையில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றனவாம்.

இதனுடைய பெரும்பாலான பக்கங்கள் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் காணக் கிடைப்பது நிச்சயமாகப் பலனளிக்கும் விஷயம்.

"எல்லாத் தமிழ் பதிப்பாளர்களின் எல்லாப் புத்தகங்களையும் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே நோக்கம்' எனக் கூறுகிறது இத்தளம்.

ஆன்மிகத்திலிருந்து அறிவியல் வரை, சிறுவர் நூல்களிலிருந்து ஜோதிடம் வரை, நாட்டுப்புறவியலிலிருந்து நவீன இலக்கியம் வரை, சினிமா விமர்சனத்திலிருந்து சீனி.விஸ்வநாதனின் பாரதி-கால வரிசைத் தொகுப்பு வரை, கவிதையிலிருந்து கணினி வரை, தலித்தியத்திலிருந்து பெண்ணியம் வரை... இப்படி இந்த இணையதளத்தில் குவிந்து கிடக்கும் புத்தகங்களுக்கு எல்லையே இல்லை.

குழந்தைகளுக்கான நூல்கள் பிரிவில் 500 நூல்களுக்கு மேலும் பொது அறிவுப் பிரிவில் 250 நூல்களுக்கு மேலும் வாழ்க்கை வரலாற்றில் 95-க்கு மேலும் இடம்பெற்றுள்ளன. நாள்தோறும் வளர்கிறது இந்த எண்ணிக்கை.

நிறையப் பதிப்பகங்களின் அனைத்துப் புத்தகங்களும் இங்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல பதிப்பகங்களின் புத்தகங்களை இணையத்தில் விற்பதற்கு முன்னுரிமை பெற்ற அங்கீகாரம் பெற்றுள்ளது இத் தளம்.

பட்டியலில் இல்லாத புத்தகத்தை ஆர்டர் செய்தாலும் அனுப்பிவிடுவார்களாம்.

இதெல்லாம் சரி... புத்தகத்தை நமக்கு அனுப்பத் தபால் செலவு எனத் தாளித்து விடுவார்களே?

ஆனால் இதற்கு அந்த இணையதளம் தரப்பிலிருந்து ஆச்சர்யமான பதில் வருகிறது.

புத்தகங்களை அனுப்ப வேண்டிய முகவரி தமிழகத்துக்குள் இருந்தால், அனுப்பும் செலவு எதையும், வாங்குபவர் தர வேண்டியதில்லையாம். இதைக் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் என இத்தளம் அறிவித்திருப்பதையும் கவனித்துதான் ஆக வேண்டும்.

இந்தியாவின் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு இந்தச் செலவு உண்டு. ஆனால் மற்றவற்றுடன் ஒப்பிட்டால், இது மிகக் குறைவு என்கிறது இத் தளம்.

தபாலில் அனுப்பிய புத்தகம் சேதமடைந்திருந்தால் அதையும் மாற்றித் தருவார்களாம்.

கடனட்டை, வரைவோலை, மணி ஆர்டர், தனிப்பட்ட காசோலை எனப் பணம் அனுப்புவதற்கும் வழிகள் பல.

இதெல்லாம் போக, இந்த மாத எழுத்தாளர், இந்த மாத பதிப்பகம் என்று எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் தேர்ந்தெடுத்து வாடிக்கையாளர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் செய்கிறது இத்தளம். மேலும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை தங்களது நண்பர்களுக்கு வாடிக்கையாளர்கள் பரிந்துரை செய்ய முடியும்.

புத்தகங்கள் போக, ஓவியம், கைவினைப் பொருள்கள் ஆகியவற்றையும் விற்க இத் தளம் திட்டமிட்டுள்ளது.

வெறுமனே லாப நோக்கம் மட்டுமல்லாமல், சேவையாகவும் கருதப்படும் வியாபாரங்களில் ஒன்றாக இதையும் தமிழ் ஆர்வலர்கள் நிச்சயம் சேர்ப்பார்கள் என்பது நிச்சயம்.

நன்றி: தினமணி கதிர், அருள் கார்த்திக்

No comments: