இந்த குஷ்பு பிரச்னை தொடர்பான இழையுடன் தொடர்புடையது இது என்பதால் இடுகிறேன். அக்டோபர் 12 தேதியிட்ட இந்தியா டுடே தமிழ் இதழ் "குஷ்புவுக்கு குறி" என்கிற அட்டைப்படத்துடன் வெளியாகியிருக்கிறது. கவர் ஸ்டோரியே அதைப் பற்றித்தான். சரவணனும் பீர் முகமதுவும் எழுதியிருக்கிறார்கள். அது இல்லாமல் விருந்தினர் பக்கமாக வாஸந்தியும் திருமாவளவனும் எழுதியிருக்கிறார்கள். 7 பக்கங்கள் கொண்ட உள்ளடக்கம். இந்தியா டுடே விமான அஞ்சலில் இப்போதுதான் வந்ததால் இப்போதுதான் பார்க்கிறேன். இவையில்லாமல் முதிர்ச்சியுடன் எழுதப்பட்ட வாசகர் கடிதங்களும் உள்ளன. இதை ஸ்கேன் செய்து போடுவதில் ஏதும் காபிரைட் பிரச்னைகள் வருமா என்று தெரியவில்லை. எனவே அதிலிருந்து என் கவனம் கவர்ந்த சில துளிகள்:
1. செப்டம்பர் 28, 2005 இந்தியா டுடே இதழில் செக்ஸ¥ம் இளம் பெண்களும் என்பது பற்றி, இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட அறிவியல்பூர்வமான சர்வேயின் அடிப்படையிலான கட்டுரை வெளியானது. அந்த சர்வேயின் அடிப்படையில் கிடைத்த புள்ளிவிவரங்கள் குறித்த கருத்தாக குஷ்பு சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். பெண்களில் பாலியல் சுதந்திரம் பற்றிய முற்போக்கான கருத்துகள் சிலவற்றை பொதுவான தளத்தில் வைத்துக் கொண்டிருந்தார் குஷ்பு. ஆனால், அந்தக் கருத்துக்கள் "தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்துவதாக" ஒரு தரப்பினர் கருதுகிறார்கள்.
2. கண்ணகி சிலை அகற்றப்பட்ட பிரச்னை எழுந்தபோது கற்பு என்பதே இந்துத்துவ கருத்து என்று சொன்ன திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிடமிருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியது எதிர்பாராத விஷயம் என்று இந்தியா டுடேயிடம் கூறினார் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் கவிஞருமான கனிமொழி.
3. "இந்தப் போராட்டம் தேவையற்றது. மேலும் குஷ்புவை மும்பைக்கு ஓடச் சொல்வது. ஜனநாயக விரோதக் கொள்கை" என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவி உ.வாசுகி.
4. குஷ்பு மீது வழக்கு போடத் தூண்டிய அரசியல் தலைவர்களின்மீதே வழக்குப் போடப்போவதாகச் சொல்கிறார் மதுரையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான ரஜினி.
5. இதே கட்டுரையில் - கருத்துச் சுதந்திரம் என்ற பத்தியை எழுதியுள்ள செந்தில்குமார் கூறுவது: "உனது கருத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் எனது உயிரைக் கொடுத்தாவது உனது கருத்தை வெளியிடும் உரிமையை நான் காப்பாற்றுவேன் என்று ஒரு பொன்மொழி உண்டு. அந்தக் கருத்துச் சுதந்திரத்தை உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை இப்போது தமிழகத்தில் உருவாகியுள்ளது."
6. செந்தில்குமார் எழுதிய பத்தியிலிருந்து எடுத்த இன்னொரு பகுதி: தமிழ்நாட்டு அரசியலில் இன்று காண நேர்ந்திருக்கும் சகிப்புத்தன்மையற்ற பாஸிஸ போக்கின் நிதர்சன அடையாளம்தான் குஷ்பு விவகாரம். இதற்குப் பின்னணியில் இருப்பது கொள்கையுமில்லை, புண்ணாக்குமில்லை என்கிறார் வாஸந்தி. "தேசியம் என்பதே ஒரு கற்பிதம் என்று விவாதிக்கப்படுகிற இந்தக் காலத்தில், தமிழ் தேசியம் என்பது மற்றொரு கற்பிதம். அதைக் கையில் ஏந்தி அவர்கள் அடிக்காத இடமில்லை. சமகால பெண் கவிஞர்கள் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்றூ ஆபாசமான குற்றச்சாட்டுகள் எழுப்புகிறார்கள். சினிமாவின் தலைப்பு தமிழில் இல்லை என்றூ வன்முறை தாக்குதல் நடத்தப்படுகிறது" என்கிறார் வாஸந்தி.
7. (மறுபடியும் முக்கியக் கட்டுரையிலிருந்து) "குஷ்பு இந்தியா டுடேவுக்குத் தெரிவித்துள்ள ஒவ்வொரு வரியிலும் எனக்கு உடன்பாடு உண்டு. அவர் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. ஒரு தேர்ந்த சமூகவியலாளரைப்போல அவர் கருத்துக் கூறியிருக்கிறார். மாறிவரும் சமூகப்போக்கினை குஷ்பு புரிந்து கொண்ட அளவுக்குக்கூட நமது அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது அபத்தமாக இருக்கிறது" என்கிறார் குஷ்புவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் துண்டுபிரசுரங்களை வெளியிட்டிருக்கும் பேராசிரியர் அ.மார்க்ஸ். "திருமணமான பெண்கள் கணவரைத் தவிர பிற ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்வது தவறாகாது என்று 1970ஆம் ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தீர்மானம் போட்ட பெரியார் பிறந்த மண்ணில் சிவசேனை கலாச்சாரம் உருவாவது கண்டிக்கத்தக்கது. ஆண்கள் இரண்டு ஆசைநாயகிகளை வைத்தால் நீங்களும் நான்கு ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன பெரியார் வாழ்ந்த மண்ணில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்கள் பால் தாக்கரேயின் இடத்தைப் பிடிக்கப் போட்டி போடுவது வேதனைக்குரியது" என்கிறார் அவர்.
8. இதற்கிடையில் தலித் அமைப்புகள் சிலவும் குஷ்புவுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திவரும் திருமாவளவனின் போக்கைக் கண்டித்திருக்கின்றன. "திருமாவளவன் மீடியாவில் இடம் பிடிக்கும் மலிவான விளம்பர ஆசையில் தலித் பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு விஜயகாந்த், குஷ்பு பிரச்னைகளில் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது" என்கிறார் தலித் மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளரும் வழக்கறிஞருமான மு.சு. திருநாவுக்கரசு.
9. "தொடர்ந்து அவதூறு வழக்குகளைப் போடுவதன் மூலம் குஷ்புவுக்கு மனஉளைச்சலைக் கொடுக்கிறார்கள்" என்கிறார் பெண்ணுரிமை கருத்துகளை வெளியிட்டதற்காக குஷ்புவை வாழ்த்திச் சென்னை முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கும் பெரியாரியவாதியான நடராஜ்.
10. விடுதலைச் சிறுத்தைகள் இந்த விவகாரத்தில் எடுத்திருக்கும் நிலைப்பாட்டைக் கடுமையாக எதிர்க்கிறார் தலித் கவிஞரான தய். கந்தசாமி. "குஷ்பு சொன்னது முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துதான். பெண்களின் பாலியல் சுதந்திரம் பற்றிப் பேசியதை ஏன் எதிர்க்க வேண்டும்" எனக் கேள்வி எழுப்புகிறார் அவர்.
11. "கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதையும் பேசிவிடக் கூடாது" - இல. கணேசன். "கற்பு என்பதையே எதிர்த்தவர்கள் இன்று நேர்எதிர்நிலை எடுக்கிறார்கள்" - கனிமொழி (இந்த இரண்டு மேற்கோள்களும் கட்டுரையில் தனியாக உள்ளன.)
12. குஷ்பு விவகாரத்தின் பின்னணியில் செயல்படும் அரசியலைப்பற்றி ஆராய வேண்டும் என்கிறார் நடிகர் சாருஹாசன். குஷ்புவுக்கு ஆதரவான கருத்துகள் அடங்கிய மின்னஞ்சல் ஒன்றைத் தனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் அனுப்பி குஷ்புவுக்கு ஆதரவு கோருகிறார் சாருஹாசன்.
13. "இந்தச் சகிப்புத்தன்மையற்ற சூழலை ஒரு சில இயக்கங்கள் மட்டும் உருவாக்கவில்லை. சகிப்புத்தன்மையற்ற சூழல், சமூகத்தின் குரலாகவே இருக்கிறது. உடைக் கட்டுப்பாட்டுக்கு ஆதரவு தரும் பெரும்பான்மை மனோபாவமே கண்டிக்கத்தக்கது" என்கிறார் அரசியல் விமர்சகரான ரவிக்குமார். இந்தப் பெரும்பான்மை மனோபாவத்தை அரசியலாக்கும் முயற்சியாகத்தான் குஷ்பு விவகாரத்தை அரசியல் கட்சிகள் கையிலெடுத்துக் கொண்டன என்கிறார் அவர். "பா.ம.க. முதலான ஜாதிக் கட்சிகள் தங்களது குறுகலான வரையறையிலிருந்து வெளிவர நினைக்கின்றன. அதனால்தான் பெரும்பான்மை கருத்தியல் ஆதரவைப் பெற இதுபோன்ற பிரச்னைகளைக் கையிலெடுக்கிறார்கள். அந்த வகையில் குஷ்பு விவகாரத்தை இப்போது ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துகிறார்கள்" என்கிறார் ரவிக்குமார்.
14. ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பெண்களிடம் எடுக்கப்பட்ட பேட்டி என்று சொல்லி ஜெயா டிவி ஒரு செய்தித் தொகுப்பை ஒளிபரப்பியது. அந்தச் செய்தி தொகுப்பில், 'ஏதோ கூப்பிட்டாங்க. கோஷம் போடச் சொன்னாங்க. அதான் வந்தேன்' என்று குஷ்புவுக்கு எதிரான போராட்டத்திற்கு வந்த பெண் ஒருவர் பேட்டியளித்தார். குஷ்பு எந்தப் பத்திரிகையில் பேட்டியளித்தார் என்ற கேள்விக்கு 'டுட்டோரியல்' என்று ஒரு பெண் பதிலளிக்கிறார்.
15. "நடிகர் சங்கம் குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அவருடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்கிறார் தொல்.திருமாவளவன். தங்கர் பச்சானுக்கு ஒரு நீதி, குஷ்புவுக்கு ஒரு நீதியா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அவர்.
16. இங்கு அடிப்படை விஷயங்களைப் பற்றி யாருக்கும் கவலையில்லை என்கிறார் எழுத்தாளரும் கட்டுரையாளருமான வாஸந்தி.
17. போராட்டம் நடத்தும் கட்சிகள் மக்கள் விரோத, சமூக விரோத இயக்கங்கள் என்கிறார் உயிர்மை பத்திரிகையின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரன். "மக்களின் கடுமையான பிரச்னைகள் எதற்கும் முகம் கொடுக்கத் திராணியற்ற நிலையில் ஊடகங்களுக்குத் தீனி போட்டு, தம்மை நிலைநிறுத்திக் கொள்ள பாலியல் சார்ந்த பிரச்னைகளை இந்தக் கட்சிகள் முன்னெடுக்கின்றன. பிற்போக்குத்தனமான நிலமானிய மதிப்பீடுகளைத் தமிழ்ப் பண்பாடு என்ற பெயரில் முன்னிறுத்துவதும் கலாச்சார பாஸிஸத்தின் வெளிப்படையான உதாரணம்" என்கிறார் அவர்.
18. சர்வேயின் முடிவுகளின்படி கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்து அது. அதை இந்த அளவு பிரச்னையாக்கியிருக்கத் தேவையில்லை என்கிறார் ரவிக்குமார். பலரும் இதே கருத்தைக் கூறுகிறார்கள்.
19. ஆக, இதைக் குஷ்பு என்கிற தனிநபருக்கு எதிரான பிரச்னை என்று மட்டும் சுருக்கிப் புரிந்து கொள்ள முடியாது. ஒரே சமூகத்திற்குள் இருக்கும் இரண்டு பிரிவினர்களுக்கிடையேயான முரண்பாடு இது. ஆரோக்கியமான, வெளிப்படையான விவாதங்கள் மூலம்தான் இந்த முரண்பாட்டைக் குறைக்க முடியும். மிரட்டல்கள், வன்முறைகளால் அல்ல - கட்டுரையாசிரியர்கள்.
20. விருந்தினர் பக்கத்தில் புனிதப் பூச்சுகள் உதிரட்டும் என்ற தலைப்பில் தொல். திருமாவளவன் எழுதியிருக்கிறார். அதில் அவர் சொல்வது: "ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்புச் சிதையாமலும் நம்பிக்கைச் சிதையாமலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தேவையின் அடிப்படையில் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் வரையறை எழுந்ததாகவே கருத முடியும். இத்தகைய உடைமை மற்றும் உரிமை சார்ந்த உறவுகளும் கட்டாயச் சூழல்களும் ஈன்றெடுத்த வாரிசுதான் கற்பு என்னும் கற்பிதக் கருத்தியலாகும். கற்பு என்பது மானுடச் சமூகத்தின் பொது ஒழுங்காக, வரையறுக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான ஒழுங்குகள் யாவும் தலைமுறை தலைமுறையாய் சிதைவின்றித் தொடரவும், பாதுகாக்கப்படவும் மனித இனங்களின் வாழ்நிலை மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, அவையே காலப்போக்கில், ஒழுக்கம் அல்லது பண்பாட்டு மரபுகளாக அடையாளம் பெற்றுள்ளன. இத்தகைய அடையாளங்களைப் பாதுகாப்பதன் மூலமே குடும்பம், சொத்து, வாரிசு போன்ற உடைமை உறவுகளைப் பாதுகாத்திட முடியுமென்ற நம்பிக்கையில்தான், திருமணம், கற்பு போன்ற புனித பூச்சுகள் இங்கே நிலைபெற்றுவிட்டன." என்று தொடங்குகிற இக்கட்டுரையை காபிரைட் பிரச்னைகள் வருமோ என்பதால் முழுவதும் தரத் தயக்கமாக உள்ளது. அக்கட்டுரையில் அவர் மேலும் சொல்வது, "திருமணத்துக்கு முன் கன்னித்தன்மை தேவையில்லை. கர்ப்பமில்லா, நோயில்லா பாதுகாப்பான பாலியல் உறவு தவறில்லை" என்ற கூற்று, இச்சமூக அடிப்படையை உணராத, குடும்ப உறவுகளாய் வளர்ந்துள்ள உடைமை உறவுகளில் வரலாற்றுப் பின்னணியை உணராத, உடனடி எதிர்வினைகளைப் புரியாத, வறட்டுப் பெண்ணியத்தின் உளறலாகவே முடியும். இந்தப் புரிதலின்றி பேசப்படும் பெண்ணியம் பெண்களாலே எதிர்க்கப்படும் என்பதுதான் நடிகை குஷ்புவுக்கு எதிரான கண்டனங்களாகும். ஆகவே, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அன்புச் சிதறாமல், நம்பிக்கைச் சிதறாமல், குடும்ப உறவுகளைப் பாதுகாப்போம். அப்போது புனிதப் பூச்சுகள் உதிர்ந்து போகும்" என்று முடிக்கிறார். மேலும், "பாதுகாப்பான செக்ஸ் என்பது ஆணுறை விளம்பரத்திற்கே உதவும். ஆணாதிக்கத்தை ஒழிக்காது" என்ற கட்டம் கட்டிய மேற்கோளும் அவர் கட்டுரையில் உள்ளது.
21. இதே இதழில், "கலாச்சாரக் காவலர்களின் போலித்தனம்" என்ற தலைப்பில் ஆனந்த் நடராஜன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதிலிருந்து: "தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் தொல். திருமாவளவன், இதே இந்தியா டுடேயில் (ஜனவரி 16, 2002) கண்ணகி சிலை தேவையா என்ற ஒரு கட்டுரையில் கற்பு பற்றி சில முற்போக்கான கருத்துகளைப் பதிவு செய்திருந்தார். "ஆண்களின் நலனுக்காக ஆண்களால் கற்பிக்கப்பட்டு பெண்களின்மீது திணிக்கப்பட்ட வன்முறைதான கற்பு. ஊரறிய திருமணம் செய்து கொண்டாலும், பிறக்கிற குழந்தை தனக்குப் பிறந்ததே என்று உறுதி செய்து கொள்வதற்காக பெண்கள் மீது திணிக்கப்பட்டதுதான் கற்பு. ஆண்களின் சொத்தாசைதான் கற்பு என்கிற கற்பிதத்தை உருவாக்கியுள்ளது" என்று புரட்சிகரமாக எழுதிய அவரும் அவருடைய இயக்கத் தொண்டர்களும் ஏறக்குறைய அதே ரீதியில் கற்பு பற்றி குஷ்பு எழுதிய கருத்தைப் படித்துவிட்டுப் பொங்கி எழுவதும் திகைக்கவைக்கக் கூடிய முரண்பாடாகவே இருக்கிறது.
பி.கு.: அவசரத்தில் தட்டச்சு செய்தது. எழுத்துப் பிழைகள் என்னுடையவை.
நன்றி: இந்தியா டுடே தமிழ் இதழ் மற்றும் இக்கட்டுரைகள்/மோற்கோள்களின் ஆசிரியர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
தமிழ் வலைப்பூ வித்தகர்கள்.. தொல். திருமாவளவனின் முந்தைய கருத்துக்கு என்ன சொல்லப்போகின்றனர்.. ????
திருமாவும், ஒரு சாதாரண அரசியல்வாதியைப்போல் நடந்து கொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை...
//திருமாவும், ஒரு சாதாரண அரசியல்வாதியைப்போல் நடந்து கொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை...
//
நான் அதை அப்பவே சொன்னேன்.. சில லூஸுகள் சண்டைக்கு வந்தார்கள்
இந்தியா டுடே வும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், தங்களுக்கு(குஷ்பு) ஆதரவாக வந்து கருத்துக்களை மட்டுமே போட்டிருப்பார்களோ?? அவர்கள் பேட்டி எடுத்த யாருமே எதிர் கருத்து சொல்லவில்லையோ??
ஜெ குஷ்பு பேச்சு தவறு என்று சொல்லியிருக்கும் போது, ஜெயா டிவி இப்படி ஒரு தொகுப்பை போட்டிருக்கிறதா?? அட!!
//"உனது கருத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் எனது உயிரைக் கொடுத்தாவது உனது கருத்தை வெளியிடும் உரிமையை நான் காப்பாற்றுவேன் என்று ஒரு பொன்மொழி உண்டு//
அன்புள்ள பி.கே.எஸ்
இந்தப் பழமொழியைச் சொன்னது ப்ரெஞ்ச் எழுத்தாளர் , வால்டேர்
I disapprove of what you say, but I will defend to the death your right to say it. - voltair
நிற்க
குங்குமம் , குமுதம் , தேவி , வலைப்பூ எங்கு பார்த்தாலும் குழ்ஹ்பூ சர்ச்சை தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஊடகங்கள் செய்யும் கொடுமை என்னவென்றால் , குஷ்பூவிற்கு ஆதரவாக எழுதவதைப் போல் அவரிடமிருந்து ஒரு பேட்டி வாங்கிவிட்டு , அடுத்த சில பக்கங்களில் நையாண்டியாக குஷ்புவைப் பற்றியே எழுதுகிறார்கள்
தேவி இதழில் சு.செந்தில்குமரன் என்று ஒருவர் தங்கர்பச்சானைத் தூக்கிப் பிடித்து , குஷ்பூவை கீழே போட்டு மிதித்துள்ளார்
"ஓடிவந்ததுகள் எல்லாம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு கற்பைப் பற்றி பாடம் எடுக்க வந்துவிட்டன " என்பது போன்று எழுதியிருக்கிறார்.
ஹ்ம்... உன் நாவை அடக்கமாக வைத்திரு , இல்லையென்றால் அது உன்னை அடக்கிவிடும் னு சொல்லுவாங்க , இதைக் கடைபிடித்தால் யாருக்கு
I think there are people liek Ila. Ganesan who commented against Kushbu. That is in that essay. I have also given Ila.Ganesan's quote. There could be others too. May be I thought they are no good to be mentioned.
Thanks and regards, PK Sivakumar
Post a Comment