Friday, November 04, 2005

மதிப்பீட்டைப் பாதிக்கிற மூன்று காரணிகள்

(குறிப்பு: நேற்று இரவு இட்ட இந்தப் பதிவு காணாமல் போய்விட்டது. தலைப்பைச் சுருக்கி மறுபடியும் உள்ளிடுகிறேன்.)

படைப்பிலக்கியங்கள் மதிப்பிடப்படும்போது படைப்புக்கு அப்பாற்பட்ட பல கூறுகள் அதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. அவற்றில் முக்கியமானவை மூன்று:

ஒன்று: அப்படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ஆளுமை பற்றிய தகவல்கள்.

இரண்டு: அப்படைப்பு நின்று பேசும் அரசியல் சந்தர்ப்பமும் அப்படைப்பு வெளிப்படுத்தும் அரசியல் நிலைப்பாடும்.

மூன்று: அப்படைப்பு உருவாக்கும் புதுமை அம்சம். அதாவது, அப்படைப்பு ஒரு படைப்புச் சூழலில் கவரும் முதற்கட்ட கவனம்.

தேர்ந்த வாசகன் இவற்றுக்கு அப்பால் சென்று படைப்பை ரசிக்கவும் மதிப்பிடவும் கூடியவன் என்பது கொள்கையளவில் சரிதான். ஆனால், பெரும்பாலான தருணங்களில் அப்படி நிகழ்வதில்லை.

தேர்ந்த விமரிசகன்கூட இம்மூன்று புறக்காரணிகளின் தாக்கத்திலிருந்து மீள்வது கடினம். ஆனால், மீளவேண்டும் என்ற தன்னுணர்வுடன் - இது ஒரு மொழி வடிவம், இது ஓர் உணர்வு வடிவம் மட்டுமே என்று தனக்குத்தானே மீண்டும் மீண்டும் அறிவுறுத்திக்கொண்டு - அவன் படைப்புகளை மதிப்பிட வேண்டியுள்ளது. அத்தகைய மதிப்பீடே காலத்தில் நீடித்து நிற்கும் தன்மை கொண்டது. அதுவே சீரான இலக்கிய வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடியது. அனைத்தையும் விட மேலாக அத்தகைய ஒரு மதிப்பீடே ஒரு படைப்பை சிறந்த வாசிப்பின் மூலம் கௌரவிக்கும் முறை.

உதாரணங்களைக் காணலாம்.

காப்காவின் படைப்புகளை, அவரது சோகம் நிரம்பிய இருண்ட வாழ்வின் பின்னணி ஓயாமல் மனதில் எழுந்து கொண்டிருக்கும் நிலையிலேயே வாசிக்கிறோம். தமிழில் ஆத்மாநாம் தற்கொலை செய்துகொண்டார் என்ற பிரக்ஞை அவர் கவிதைகள் மீது ஓர் உபரி அர்த்தத்தை அளித்தபடியே உள்ளது. எழுத்தாளர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்வு பற்றிய ஐதீகக் கதைகளைத் தாங்களே உற்பத்தி செய்து பரப்புவதன் மூலம் தங்கள் எழுத்துக்கு உபரி வண்ணம் சேர்ப்பதும் எல்லாச் சூழலிலும் உள்ளதுதான். (நள்ளிரவில் கதவைத் தட்டும் நாடோடி, குடிகாரப் போக்கிரி.)

அரசியல் சார்ந்த முக்கியத்துவம் படைப்பில் ஏறுவதற்குச் சிறந்த உதாரணம் மாக்ஸிம் கார்க்கியின் "தாய்." தமிழில் பல முற்போக்கு, தலித்திய படைப்புகள் அவை வெளிவந்த சூழலில் அவை வெளிப்படுத்திய தனிக்குரல் காரணமாகவே கவனமும் அழுத்தமும் பெற்றுள்ளன. ரகுநாதனின் 'பஞ்சும் பசியும்' முதல் இமையத்தின் 'கோவேறு கழுதைகள்'வரை பல உதாரணங்கள் கூறலாம்.

இவ்விரண்டையும் விட ஒரு படி மேலானது இலக்கியத்தில் ஒரு படைப்பு தன் புதுமை மூலம் பெறும் முக்கியத்துவம். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் இந்த முக்கியத்துவம் அவசியமானதும் தவிர்க்க முடியாததும் ஆகும் என்பதே. இப்படிப் புதுமை மூலம் நம் கவனத்தைக் கவரும் படைப்புகள்தான் இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கின்றன. இவை உருவாக்கும் தத்துவார்த்தமான அழகியல்ரீதியான சிக்கல்களை எதிர்கொள்வதன் மூலம் அடுத்தகட்டப் பெரிய படைப்புகள் உருவாக முடியும். ஆகவே, புதுமையுடன் வெளிவரும் ஓர் இலக்கியப் படைப்பை நோக்கிச் சூழல் திரும்புவதும் அதன் அழகியலை மதிப்பிடவும் உள்வாங்கவும் முயல்வது ஆரோக்கியமான விஷயங்கள்தான். ஆனால், இந்தப் "புதுமை" அம்சம் சீக்கிரத்திலேயே காலாவதியாகிவிடக் கூடியது. பிறகு படைப்பு தன் படைப்பியல்பால் மட்டுமே நிலைநிற்கிறது. அதாவது அப்படைப்பு வாழ்வு மீது வீசும் வெளிச்சம் என்ன என்பதன் அடிப்படையில். முப்பது வருடம் பழைய படைப்பு முன்னூறு வருடம் பழைய படைப்பின் வரிசையில்தான் நிற்க நேர்கிறது. ஆகவே, ஒரு புதிய படைப்பை அதன் புதுமை அம்சத்தை மானசீகமாகத் தவிர்த்துவிட்டு மதிப்பிட வேண்டிய பொறுப்பும் திறனாய்வாளரிடம் இருக்க வேண்டும்.

- ஜி. நாகராஜன் படைப்புகளைப் பற்றி "நவீனத்துவ ஒழுக்கத்தின் குரல்" என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதிய விமர்சன கட்டுரையின் தொடக்கத்திலிருந்து. (நன்றி: நவீனத்துவத்தின் முகங்கள் - ஜெயமோகன் - தமிழினி, 342, டி.டி.கே. சாலை, சென்னை - 14)

எதற்கு இந்தப் பகுதியை இப்போது இங்கே தந்திருக்கிறேன்?

1. ஜெயமோகன் தமிழகத்தின் சொத்து என்கிறார் பி.ஏ.கே. அதற்கான சான்றும் நிரூபணமும் வேண்டாமா. ஒரு சோறு பதமாக இது.

2. இதைப் படித்து முடித்தவுடன், "ஆஹா, எவ்வளவு எளிமையாக, தர்க்கபூர்வமாக, ஒரு விமர்சகருக்கான இலக்கணங்களை இங்கே வரையறுத்து விடுகிறார் என்று படித்தவுடன் எனக்குத் தோன்றியது. அதைவிடவும், அறிவுஜீவி என்றும், அறிஞர் என்றும், முற்போக்கு என்றும் ஜல்லியடிக்கிற கும்பல்கள் பலவும் விமர்சனம், திறனாய்வு என்ற பெயரில் இக்காரணிகளால் பாதிக்கப்பட்டுக் கொண்டு எழுதுவதை எல்லாம் பார்த்துக் கைதட்டுகிற வாசகர்களிடம் இதைப் பகிர்ந்து கொள்ளலாம்" என்றும் தோன்றியது.

3. முதற்காரணியை வைத்துப் பார்ப்போமானால், சாரு நிவேதிதா உடனடியாக நினைவுக்கு வருகிறார். தன் எழுத்தைப் பேச வைப்பதைவிட தன்னைப் பற்றிப் பேசுவதன்மூலம் தன் எழுத்துக்கான மதிப்பையும் மரியாதையையும் பெற்றுவிட முயல்கிற எழுத்தாளர் அவர். அவர் தன்னைப் பற்றிப் பேசிக் கொள்வதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டுத்தான், அவரை ஒரு வாசகர் மதிப்பிட வேண்டும் என்று முதற்காரணி சொல்கிறது. இரண்டாவது காரணியை எடுத்துக் கொண்டால், இன்றைக்கு இணையத்தில் ஜெயகாந்தனை விமர்சிப்பவர்கள் எல்லாம் அவர் படைப்பு நின்று பேசுகிற அரசியல் நிலைப்பாட்டைக் கவனத்தில் கொண்டாலும் பரவாயில்லை. ஆனால், அவர்கள் அதைச் செய்யாமல், பெரும்பாலும் அவரது சொந்த அரசியல் நிலைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு (இது இன்னமும் மோசம்) அவரைப் பற்றியத் தீர்ப்புகளையும், வசைகளையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அது அபத்தத்தின் உச்சகட்டம் என்று உள்ளுக்குள் தெரிந்தாலும், இதை ஒரு காரணியாக ஜெயமோகன் விளக்கும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை. மூன்றாவது காரணியை எடுத்துக் கொண்டால், இணையத்தில் சிலர் (பெயர் சொல்லத்தான் துடிக்கிறேன். ஆனால் வேண்டாம்!) சில எழுத்தாளர்களைப் பற்றி எழுதும்போது, அவர் காலாவதியாகிவிட்டார், அவருக்குப் பின்னர் தமிழ் இலக்கியம் பல மடங்கு வளர்ந்துவிட்டது என்றெல்லாம் திருவாய் மலர்ந்தனர். அவர்கள் படைப்பில் காணப்படும் புதுமை அம்சத்தை மட்டும் கணக்கில் கொண்டு படைப்பை மதிப்பிடுபவர்களாக உள்ளனர். ஜெயமோகன் சொல்வதுபோல படைப்பு வாழ்க்கையின்மீது பாய்ச்சுகிற வெளிச்சத்தை அவர்கள் கணக்கில் கொள்வதேயில்லை. அப்படி கொள்பவர்களாக அவர்கள் இருந்திருந்தால், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற ஒரு பாடல் இரண்டாயிரம் வருடங்களாகத் தமிழில் போற்றப்பட்டு வருவதற்கான காரணத்தை உணர்ந்து, ஒரு நல்ல படைப்போ படைப்பாளியோ காலாவதியாவதில்லை என்ற பொதுப்புத்தியுடன் பேசியிருப்பர். இப்படி இந்த மூன்று காரணிகளை வைத்துப் பார்க்கும்போது, இணையத்தில் (வலைப்பதிவுகளில் என்று வாசிக்கவும்) படைப்பாளிகளைப் பற்றி வெளிவந்திருக்கிற பல விமர்சனங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் மூட்டைகள் மட்டுமே என்று ஒரு வாசகர் முடிவுக்கு வர முடியும். இவ்வளவு நாள், அவை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் மூட்டை என்று தெரிந்திருந்தும், அதை எப்படி நிரூபிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஜெயமோகனின் இந்தக் காரணிகள் அதற்கு உதவின. நல்லவேளையாக, நான் விமர்சகனாகவில்லை. பிடிப்பவற்றைப் பற்றி வாசக அனுபவம் எழுதுகிற அளவில் நின்று விடுகிறேன். அதற்காக இறைவனுக்கு நன்றிகள்.

4. என்னால் இப்படியெல்லாம் எழுத முடியவில்லையே என்று ஏக்கமாக இருக்கிறது.

5. இதைப் படித்து முடிக்கிற வாசகர்கள் ஒவ்வொருவரும் (நான் உட்பட) - இனிமேல் தாங்கள் படைப்பைப் பற்றி எழுதப் போகிற, வாசிக்கப் போகிறவைகளில் இக்காரணிகளின் தாக்கம் இருக்கிறதா இல்லையா என்பதை வைத்து, விமர்சனத்தின் நேர்மையையும் தரத்தையும் முடிவு செய்வார்கள் என்ற optimistic நம்பிக்கை.

6. ஜெயமோகனின் இந்தக் கட்டுரையை முழுவதும் படிக்கிற முயற்சியெதுவும் எடுக்காமலேயே, "அப்போதைக்கு இருப்பதை வைத்துக் கொண்டு, முழுமையாகத் தெரியாவிட்டாலும், விமர்சனம்/கருத்து எழுதுவதில் தவறில்லை" என்று சொல்கிற விமர்சன அறிவுஜீவிகள் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்கிற அறிவுத்தாகம். :-)

நன்றி: ஜெயமோகன், தமிழினி.

No comments: