Thursday, November 03, 2005

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - IV

சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க - இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய - இந்த டாய்லெட்டைவிட - ஒரு பெரிய உலகம் இருக்கு. அங்க பல காரியங்கள் நடக்குது. அந்தக் காரியங்கள் நம்ம வாழ்க்கையைப் பாதிக்குது - நீங்க டாய்லெட்ல போய் ஒளிஞ்சிண்டாலும் உங்க வாழ்க்கையை அது பாதிக்காம இருக்காது. So, அப்படிங்கற ஒரு consciousness நம்ம சிறுபத்திரிகைக்காரங்களுக்கு என்னிக்குமே இருந்ததில்லை.

டெக்ஸன்: (சாமிநாதனைப் பார்த்து) ஒருவிதத்துல இவர் சொல்றதுலே நியாயம் இருக்கு. இப்போ - ஜெயமோகன் அவரை (கருணாநிதியை) இலக்கியவாதி இல்லைன்னு சொல்லிட்டு அல்மோஸ்ட் சாகப்போனாரா இல்லையா - அந்த மாதிரி. ஓபனா திராவிட இயக்கத்தைப்பத்தி விமர்சனம் பண்ண முடியுமா? திராவிட இயக்கம் பத்தி புஸ்தகம் எழுத முடியுமா?

ராஜாராம்: பொன்னீலன் எழுதினார் - புதிய தரிசனங்கள் என்று.

சாமிநாதன்: அவருக்கு வந்து C.P.I பேக்கிரவுண்ட் இருக்கு. பார்ட்டி லைன் பேக்கிரவுண்ட்

ராஜாராம்: ஆனா வந்து - இதுமாதிரி ஒரு இயக்கத்தை - இப்ப நவீன சரித்திர நாவல் என்றால் - அதுதானே வரணும்.

துக்காராம்: ஜெயகாந்தன் அவர் கதைகள்ல கொஞ்சம் கொஞ்சம் hint பண்ணிட்டுப் போறாரு இல்ல?

ராஜாராம்: ஆமாம். கொஞ்சம் கொஞ்சம் hint பண்ணிட்டுப் போறார். ஆனால், அது ஒரு bloating பண்ணப்படலை.

துக்காராம்: ஜெயகாந்தன் பில்ட் பண்ணும்போதும் ஒரு லும்பன் இமேஜ்தான் பில்ட் பண்றார்.

சாமிநாதன்: ஞான. ராஜசேகரன் பாரதி படம் எடுத்தாரே. அதில் பாரதியைச் சாதாரண மனிதராகக் காட்ட முடிந்தது. பெரியாரைப் பற்றி அப்படி ஒரு படம் எடுக்க முடியுமா? பெரியாரை ஒரு சாதாரண மனிதராகக் காட்டும்படியான படத்தை எடுக்க முடியுமா?

துக்காராம்: ஞாநி எடுத்து இருக்காரே, எப்படி இருக்காம்?

ராஜாராம் & சாமிநாதன்: Glorify பண்ணிதான் எடுத்திருக்கார்.

சாமிநாதன்: சாதாரணமா எடுத்தா அடிவிழும். பிலிமை எரிச்சிடுவாங்க.

டெக்ஸன்: MGR பத்தி ஒழுங்கான புக் எங்க வந்திருக்கு சொல்லுங்க. அவருடைய real history, real influence பத்தி ஏதும் வந்திருக்கா?

ராஜாராம்: நீங்க MGR-ஐப் பத்தி மட்டும்னு சொல்ல முடியாது. ஒண்ணு தெரியுமா? எஸ்.எஸ். வாசனைப் பத்தி ஒரு biography தான் எழுதப் போறேன்னு மணியன் announce பண்ணினார் இதயம் பேசுகிறது இதழ்ல. announce பண்ணவுடனே next issue-ல வரப்போறதில்லைன்னு வந்திடுச்சு. என்னன்னா ......... (பெயர் தரப்படவில்லை) கூப்பிட்டு அவரை மிரட்டியதாகத் தகவல். Everybody has a darker side. அவர் வாழ்க்கைல என்ன நடந்துச்சு என்று தெரியாது இல்லையா?

சு.ரா.: வாசன் லைப்ல நிறைய உண்டு.

சாமிநாதன்: ஜெமினி ஸ்டுடியோவைப் பத்தி எழுதியதால்தான் அசோகமித்ரனுக்கு வந்து ஆனந்தவிகடன்லே சான்ஸே கிடைக்காது. போட மாட்டாங்க. உண்மைதானே சார் அது?

சு.ரா.: அது எனக்குத் தெரியாது. இருக்கலாம். தமிழ்நாட்டைப் பொருத்தவரைக்கும் நீங்க என்ன சொன்னாலும், அது உண்மையாக இருக்கலாம். (கூட்டத்தில் சிரிப்பு. சு.ரா.வும் சிரிக்கிறார்.)

அண்ணாமலை: ராஜாராம் சொன்னது - ஆட்சியைப் பற்றியோ கட்சித் தலைவர்களைப் பற்றியோ கதைகள் வரவேண்டுமென்பதில்லை. அவை மக்களுடைய வாழ்க்கையை எந்த அளவு பாதித்தது? பலபேருடைய வாழ்க்கையைப் பாதிச்சிருக்கு. social attributes எவ்வளவோ மாறியிருக்கு. அது கதைகள்ல வரலையே.

ராஜாராம்: ஆமாம்.

சாமிநாதன்: ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது - நிறைய பேரு தீக்குளிச்சாங்க இல்லையா? தீக்குளிச்ச ஒரு family மட்டும் trace பண்றோம்னு வச்சிக்குங்க. இந்த மாதிரி bread winner செத்ததால, அவங்க என்னென்ன கஷ்டப்பட்டாங்க - இன்னைக்கு என்ன நிலையிலே இருக்காங்க என்பதை trace பண்ணி, அவர்கள் நன்றாக இல்லையென்றால் - அதைக் கதையாகவோ படமாகவோ எடுக்கிறோம் என்றால் - அதை திராவிட இயக்கம் விடுவாங்களா?

ராஜாராம்: விடுவாங்களா என்பது கேள்வியே கிடையாது. ஏன்னா - அதைவிடவும் inflammatory - infact - திராவிட இயக்கத்தை எதிர்த்து எடுத்தீர்கள் என்றால் - அதை சப்போர்ட் பண்றதுக்கு ஜெயலலிதா மாதிரி ஆட்கள் இருக்காங்க. It was not the reason. இவர் (சு.ரா.) சொல்றமாதிரி நம்ம உலகத்தை ரொம்பக் குறுக்கிக்கிட்டு, வெளியே போகும்போது நாம என்னதான் கருணாநிதி, ஜெயலலிதா பற்றிப் பேசினாலும், அப்புறம் கருணாநிதிக்கு ஓட்டுப் போட்டாலும், சிறுபத்திரிகை உலகத்துக்குள் வரும்போது ஒரு சிறுகூட்டுக்குள் அடைஞ்சிட்டோம் அப்படீங்கறதுதான் உண்மை.

சு.ரா.: அவங்களுக்கு (சிறுபத்திரிகைகாரங்களுக்கு) ஜெயகாந்தன்னு ஒரு ரைட்டார் இருக்கார் என்பதே அவங்களுக்குத் தெரியலையே இன்னும். (கூட்டத்தில் சிரிப்பு.) இது பாருங்க. சிறுபத்திரிகைகளின் வளர்ச்சியும், அவர் வளர்ச்சியும் ஒரே காலத்தில் நிகழ்ந்தது தமிழ்ல. இவங்க கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துட்டு வராங்க. அவரும் ஒரு பெரிய ரைட்டரா டெவலப் ஆயிட்டே வரார். ஆனா, அவரை யாரோ தீர்மானிச்சாங்க. நாம அவரை consider பண்ண வேணாம்னு. எங்க எந்தச் சதிகாரக்கூட்டம் அப்படித் தீர்மானிச்சதுன்னு தெரியலை (கூட்டத்தில் சிரிப்பு) ஆனால், அதைப் பேசக்கூடாது என்பதிலே எல்லாருக்கும் ஒரே aimதான் இருக்குது.

ராஜாராம்: அப்படியா?

சு.ரா.: ஆமாம். எங்க சிறுபத்திரிகைல ஏதும் புக் ரிவ்யூஸ் இருக்கா. இல்ல, ஏதும் சீரியஸ் ஆர்டிகிள்ஸ் இருக்கா?

ராஜாராம்: அதுக்கு ரீசன் சிறுபத்திரிகையுலகம் has duality. அதாவது, ரெண்டு உலகம் இருக்கு. கமர்சியல் உலகம். சிறுபத்திரிகை உலகம். ரெண்டுக்கும் நடுவுல காமன் கிரவுண்ட்ஸ் கிடையாது. "அவர் வந்து வர்த்தக உலகம். சிறுபத்திரிகை உன்னதமான எழுத்து"ன்னு நினைச்சு, விட்டுட்டாங்க.

சு.ரா.: சார், அப்படீன்னு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க. இதைத்தான் நான் இன்டாக்ஸிகேஷன் என்கிறேன். (கூட்டத்தில் சிரிப்பு) என்னைத் தேடி ஒருத்தன் வரான்ங்க. நீ ஏன் என்னைத் தேடி வந்தாய்னு கேட்டேன் நான். கேட்பேன் நான். எதுக்காக் என்னைத் தேடி வராய்னு கேட்டா அவன் சொல்லுவான். தான் ஜெயகாந்தனைப் படிச்சேன் என்கிறான். ஜெயகாந்தனைப் படிச்ச காரணத்தினால்தான் என்னைத் தேடி வரேன் என்கிறான். ஜெயகாந்தன் வழியாத்தான் என்கிட்ட வரேன் என்கிறான். அப்புறம் நான் எப்படி அவனைக் கன்சிடர் பண்ணாம இருக்க முடியும்?

ராஜாராம்: நீங்க சொல்றது எனக்குப் புரியுது. நான் என்ன சொல்றேன்னா - ஜெயகாந்தன் மூலமா உங்ககிட்ட வந்தவன் - அவனுக்குச் சிறுபத்திரிகைல - சுந்தர ராமசாமி தவிர - மத்தவங்க மேல - அதேமாதிரியான அபிப்பிராயம் இருக்குமான்னு எனக்குத் தெரியாது.

சு.ரா.: சார், ரொம்பப் பேரு - எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் - இந்த சீரியஸ் லிட்டரேச்சருக்கு வந்தவங்க - ரொம்ப ஆட்கள் - இந்த ஜெனரேஷன்ல - இப்ப அவங்களுக்கு ஐம்பது ஐம்பத்தைஞ்சு வயசு ஆயிடுச்சு - அவங்களுக்கெல்லாம் இன்னும் இருபது இருபத்தைஞ்சு வயசுன்னு நான் நினைச்சுட்டிருக்கேன் - அவங்க எல்லாருமே இந்த சீரியஸ் லிட்டரேச்சருக்கு வரதுக்கு முக்கியமான காரணம் ஜெயகாந்தன்தான்.

ராஜாராம்: ஆமாம். ஜெயகாந்தன்தான்.

சு.ரா.: இந்த ரெண்டுக்கும் நடுவுல (வர்த்தகப் பத்திரிகைக்கும் சிறுபத்திரிகைக்கும்) ஒண்ணை அவர் கிரியேட் பண்ணார். அப்புறம் ஒருநாள் - ஒரு டைம்ல - அவர் போட்ட சாப்பாடு இவனுக்குக் காணல. அவன் பாட்டுக்குத் தன்னால இங்க வந்துட்டான்.

சாமிநாதன்: சுஜாதா இதே மாதிரி ஒண்ணும் கிடையாதா?

சு.ரா.: சுஜாதா ஒண்ணும் கிரியேட் பண்ணலை. சும்மா சொல்லுவார். அவருக்குத் தெரியும். அவர் மாடர்ன் இலக்கியமும் படிச்சிருக்கார். பழைய இலக்கியமும் படிச்சிருக்கார். அவர் படிக்காத எதுவுமே கிடையாது அப்படீங்கறதுக்காக அவர் சொல்லுவார். ஆனா, இவர் (ஜெயகாந்தன்) கிரியேட் பண்ணி வெச்சிருக்கார். ஒரு நூத்தம்பது கதை கிரியேட் பண்ணிருக்கார். கதையைக் கிரியேட் பண்ற நேரத்திலேயே ஒரு அஞ்சு லட்சம் ஆறு லட்சம் வாசகர்கள் அதைப் படிக்கறாங்க. அது இன்னொரு சங்கதி. அப்புறம் இன்னொன்னு - யாருமே அதைப் பொழுதுபோக்காப் படிக்கலை. உணர்ச்சிவசப்படறாங்க. ஜெயகாந்தனுக்கும் ரீடர்களுக்கும் எமோஷனலா ஒரு கான்டாக்ட் இருக்கு. சுஜாதா வந்து ஒரு என்டர்டெயினர்தான். படிப்பான். நாளைக்குத் தூக்கிப் போட்டுட்டு அவன் பாட்டுக்குப் போவான். இங்க அப்படியில்லை. உடனே, அந்த விஷயத்தோட அவன் சம்பந்தப்படறான். (கொஞ்சம் இடைவெளிவிட்டு) எப்படித் தமிழச்சிங்க வயசானதுக்கு அப்புறம் குழுந்தைங்க பெத்துக்கலாம்னு எப்படி ஜெயகாந்தன் சொல்றார் - பெத்துக்கிட்டு இருக்கா அது வேற விஷயம் - ஆனால், அவர் எப்படிச் சொல்லலாம். (சிரிக்கிறார்.)

ராஜாராம்: (சிரித்துக் கொண்டே) பெத்துக்கலாம். ஆனால் சொல்லக் கூடாது.

சு.ரா.: பெத்துக்கலாம். சொல்லக் கூடாது. (சிரிக்கிறார்.) இந்த மாதிரி அவரோட ஒவ்வொரு கதையும் ஒரு controversy-ஐ கிரியேட் பண்ணியிருக்கு. (கொஞ்சம் இடைவெளிவிட்டு) எனக்கு பர்சனலா அவர் நல்ல ரைட்டர் என்ற அபிப்ராயம் கிடையாது. நான் அதைச் சொல்லிடறேன். But, tamil society-ல யார் யாரு influence பண்றாங்க, யார் யாரு என்னென்ன காரியங்கள் செய்யறாங்க என்பதுபற்றி, சிறுபத்திரிகைக்காரங்க எந்தவிதமான இன்டாக்ஸிகேஷன்ல இருக்காங்க அப்படீங்கற விஷயத்துக்காகத்தான் இதைச் சொல்றேன்.

ராஜாராம்: இது ஏன் சொல்றீங்க. அவர் ஏன் நல்ல எழுத்தாளர் இல்லைன்னு சொல்றீங்க.

சு.ரா.: அது வந்து சார் - முதல்ல வந்து - ரொம்ப opinionated அவர். அவருக்கு வந்து - ஒரு சுதந்தரமான சஞ்சாரமே கிடையாது. கிரியேட்டிங் என்கிற ப்ராஸஸை வந்து - நீங்க ஒரு சுதந்தரமான சஞ்சாரத்துக்காக - அதுக்காக நீங்க எல்லாமே சுதந்தரமா போய்விடலாம் என்ற அர்த்தம் இல்லே - but நீங்க உங்களை டிஸ்கவர் பண்றீங்க. உங்களோட உண்மையான அபிப்ராயம் என்ன என்று நீங்க டிஸ்கவர் பண்றீங்க. அதற்கான ஒரு ப்ராஸஸை மேற்கொள்றீங்க. இந்த விஷயமே அவர்கிட்டே கிடையாது. அவர் வந்து - ஏற்கனவே society-ல இருக்கக் கூடிய பலவகையான அபிப்ராயங்களை - பல முக்கியமான ஆட்களோட அபிப்ராயங்களைக் கதையா - ஐடியாஸை கதையா transform பண்ணறது என்கிறது எனக்கு ஒத்துக்கறது இல்லே. எனக்கு எக்ஸ்பீரியன்ஸ், இமேஜினேஷன் எல்லாம் எனக்கு முக்கியமான விஷயம். அதன்மூலம் அவன் அடையக்கூடிய - அவனுக்கே தெரியாமல் அவன் அடையக்கூடிய - அவனுக்கே தெரியாமல் அவன் அடையக்கூடிய விஷயங்கள் இருக்கே - அதெல்லாம் ரொம்ப முக்கியமான விஷயம். அதுதான் கிரியேட்டிவ் ரைட்டருடைய முக்கியமான குவாலிட்டி. அந்தக் குவாலிட்டி அவர்கிட்ட இல்லை. social-ஆ அவர் ரொம்ப நல்லா function பண்றார். அதைப் பத்தி நான் question பண்ணல. அவருடைய ஐடியாஸ் எல்லாம் question பண்ண முடியாது.

சாமிநாதன்: அந்த மாதிரி தமிழ்ல எத்தனைபேர் இருக்காங்கன்னு சொல்றீங்க மாடர்ன் ரைட்டர்ஸ்ல.

சு.ரா.: அவரை மாதிரியா?

சாமிநாதன்: இல்லை இல்லை, நீங்க சொல்ற கிரியேட்டிவ் ரைட்டர் மாதிரி.

சு.ரா.: எப்பவுமே - எல்லாத் தேசங்களிலுமே - number of writers ரொம்ப அதிகம் இருப்பாங்க. நல்ல ரைட்டர்ஸ் இருக்காங்களே, அது எல்லாத் தேசங்களிலும் குறைவுதான். இந்தக் country-ல கூட பார்க்கலாம். நல்ல ரைட்டர்ஸோட எண்ணிக்கை ரொம்பக் குறைவுதான் (பெண்கள் பக்கம் பார்த்து) அம்மா பேசிட்டு இருக்கும்போது சொன்னாங்க. தமிழர்களுக்குத் தமிழர் என்ற உணர்வு இருக்கா, தமிழ் என்ற உணர்வு இருக்கான்னு. அப்படி இருக்காது. பெரும்பாலான தேசங்களில், அவாளுக்கு அப்படி இருக்காது. ஆனா, அந்த சொஸைடில இருக்கக்கூடிய முக்கியமான குரூப்ஸ் - language கூட சம்பந்தப்பட்டவர்கள் - அவங்க எப்படி இருக்காங்க. அவங்க இது என்ன என்றுதான் நாம ஆராயணுமே ஒழிய, நீங்க சந்தைக்குப் போனா அவங்ககிட்ட தமிழைப் பத்திப் பேச முடியாது. அவங்களுக்கு அது தெரியாது. (கொஞ்சம் இடைவெளிவிட்டு) இப்ப நான் சொன்னேன். இந்தக் கன்ட்ரில ரொம்ப பிஸிக்ஸ் பத்தி அற்புதமான புக்ஸ் வருது. நீங்க மீட் பண்ற எந்த அமெரிக்கன் கிட்டயாவது கேளுங்க. அந்த ரைட்டரோட எக்ஸிஸ்டென்ஸ்-ஏ அவருக்குத் தெரியாது. அப்படி ஒருத்தர் இருக்காருன்னே அவருக்குத் தெரியாது. அது ரொம்ப நேச்சுரல்.

ராஜாராம்: ஆமாம். நேச்சுரல்.

சு.ரா.: (தொடர்ந்து) ஆனா ஒரு விஷயம் - அதை அவர்கல் பேப்பர்பேக்கா போடும்படியாகவும், அதை வந்து ரீ-பிரிண்ட் பண்ணும்படியாகவும் ஏதோ ஒரு காரியம் நடந்திட்டிருக்கு. அதை யாரு படிக்கிறான்னு தெரியாது. நான் மீட் பண்ற அவா ஆட்கள் யாருக்குமே - அமெரிக்கன்ஸ் யாருக்குமே - சயின்ஸ்லயோ லிட்டரேச்சரிலோ இன்ட்ரஸ்ட் உள்ள ஆட்களை நான் மீட் பண்ணதில்லை. (கூட்டத்தில் சிரிப்பு) ஆனால், இந்த மாதிரி புஸ்தகங்கள் தொடர்ந்து விக்கணுமானால், சொஸைடில எங்கேயோ ஒரு நீட் இருக்கு.

முருகானந்தம்: யெஸ். ரீடர்ஷிப் இருக்கு.

அண்ணாமலை: நடுவுல இருக்கிறது வந்து - அதுல கல்ச்சர்ஸ் வித்தியாசப்படற மாதிரி இருக்கு. தமிழ் கல்ச்சரிலே, சராசரி - இந்த average-ல வர்றவங்களுக்கு - they are closer to the bottom than to the top. இந்த மாதிரி சொஸைடில (அமெரிக்கா) அல்லது ஈரோப்பியன் சொஸைடில இதைவிட அதிகமா நாம் பார்க்கும்போது - அவங்க thye are little up - closer to the top. அதனாலதான், இந்த மார்க்கெட் function ஆவுது.

சு.ரா.: ஆமா கரெக்ட். நீங்க சொல்றது ரொம்ப absolutely கரெக்ட்.

அண்ணாமலை: தமிழ்நாட்டுல அது (closer to bottom than top) எப்படி வந்ததுன்னு தெரியலை. Why they have brought down rather than keeping up?

சு.ரா.: அந்த consiciousness இருக்கு இல்லையா. நான் வந்து என் ஆர்ட்டிகள்ஸ்ல எல்லாம் இந்த விஷயத்தைத் திரும்பத் திரும்பத் திரும்ப சொல்றேன். அதாவது - தமிழ்நாட்டுல மணியனுடைய புக்ஸ் நிறைய விக்குது இல்லைன்னா கல்கியோட புக்ஸ் நிறைய விக்குது. இதைப்பத்தி questions-ஏ இல்லை. அப்படித்தான் எல்லா ப்ளேஸஸ்லயும் விக்கும். கேரளாவுல நீங்க பார்த்தீங்கன்னா - ஒரு பத்திரிகை 15 லட்சம் காபி விக்குது - கேரளாவுல maximum. மங்களம்னு. குப்பை. அதை ரேஷன் கடைலதான் போட்டு வெச்சிருப்பான். ரேஷன் கடைல அந்த ஒரு பத்திரிகை மட்டும்தான் இருக்கும். வேறெந்தப் பத்திரிகையும் ரேஷன் கடைல கிடையாது.

ராஜாராம்: (இடையில்) ஏன் அது?

சு.ரா.: (தொடர்ந்து) ஏன்னா, அரிசி வாங்கறவங்க, உளுந்து வாங்கறவங்க அதையும் வாங்குவாங்க. அது உண்மையாகவே grocery ஐட்டத்துல ஒண்ணு. (கூட்டத்தில் சிரிப்பு) ஆனால், நீங்க சீ·ப் மினிஸ்டரை பார்த்துப் பேசுங்க, ரேடியோ ஸ்டேஷன்ல இருக்கக் கூடிய ஒரு ஆபிசர் அவரைப் பார்த்துப் பேசுங்க - ஒரு காலேஜ் ப்ரொபசர் பார்த்துப் பேசுங்க - அவர் கண்ட கண்ட குப்பை எல்லாம் படிக்கக் கூடியவர் - அவர் சொல்லுவார். "இதையெல்லாம் நான் படிக்கறேன். ஆனா எங்க லாங்வேஜுல தகழிதான் முக்கியம், எங்க லாங்வேஜுல பஷீர் தான் முக்கியம்" அப்படீன்னு - சீ·ப் மினிஸ்டரிலிருந்து கீழேவரை சொல்லுவான். இந்த consiciousnessதான் தமிழ்ல கிடையாது. தமிழ்ல நீங்க வந்து - ஆல் இந்தியா ரேடியோல போனீங்கன்னா - அங்க இருக்கறவங்க சொல்வாங்க - யாரெல்லாம் முக்கியமான ரைட்டர்ஸ்னு - இதே மாதிரி சீ·ப் மினிஸ்டர் கிட்டப் போனாலும் - சீ·ப் மினிஸ்டர்தான் உங்களுக்குத் தெரியுமே - அவங்க செலக்ஷன்ஸ் எப்படியிருக்கும்னு - ஜெயலலிதா சீ·ப் மினிஸ்டரா இருந்தாலும் சரி, கருணாநிதி சீ·ப் மினிஸ்டரா இருந்தாலும் சரி - அவங்களுடைய பெஸ்ட் புக்ஸ் செலக்ஷன் எப்படியிருக்கும்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அங்க இருந்து ஆரம்பிச்சி கீழே வரைக்கும் வேல்யூஸ் பத்தின consiciousness-ஏ இல்லை. அதுதான் விஷயம்.

அண்ணாமலை: நான் செக்கோஸ்லேவியாவுக்குப் போயிருந்தேன். அங்கே தமிழ் சொல்லித் தராங்க. அந்த மாணவர்களைப் பார்த்து நான் பேசிட்டு இருந்தபோது - அவங்களுக்குத் தமிழ் படிக்கணும்னு ரொம்ப ஆசையிருக்கு. தமிழ்நாட்டுக்குப் போயிருந்திருக்காங்க. போயிட்டு அங்க அவங்களுக்கு இருக்கற நண்பர்கள் - யார் அவங்களுக்குத் தெரிஞ்சவங்களோ - தமிழ் ஸ்காலர்ஸ் பார்த்து - எந்த மாதிரியான புக்ஸை நாங்க படிக்கணும்னு கேட்டபோது - அங்கே பலபேர் ரெகமண்ட் பண்ணது வைரமுத்து, சுஜாதா, ...

சு.ரா.: கரெக்ட்.

அண்ணாமலை: இதை வந்து அவர் பெருமையாச் சொன்னார். நான் அவங்களோட published எல்லாமே வாங்கிட்டு வந்துட்டேன்னு. So, நாம average தமிழன்கிட்டப்போய் என்ன படிக்கணும்னு கேட்டா, சொல்ற யோசனைமாதிரிதான் எல்லாரும்...

சு.ரா.: அதே நீங்க ஒரு மலையாளியைக் கேட்டீங்கன்னா, அவன் என்ன வேணா படிக்கட்டும். தகழியைச் சொல்வான். பஷீரைச் சொல்வான். அப்படித்தான் பண்ணுவான் அவன். அவனுடைய லாபிவந்து - இன்னைக்கு டெல்லில வந்து - actual-ஆ நீங்க பார்த்தீங்கன்னா - ரொம்ப ஸ்ட்ராங்க். மலையாளிஸ் லாபி ரொம்ப ஸ்ட்ராங்க். தமிழன் கிட்டயே போக முடியாது.

ராஜாராம்: ஆனா, மலையாளத்துல நான் translation-ல படிச்ச வரைக்கும் - வைக்கம் முகம்மது பஷீர் தவிர - மத்தவங்களை - ரொம்ப மிகச் சிறந்த - ஒரு மௌனி மாதிரியோ, லா.ச.ரா. மாதிரியோ, தி. ஜானகிராமன் மாதிரியோ இல்லை உங்களை மாதிரியோ (சு.ரா.வைச் சொல்கிறார்) ...

சு.ரா.: கிடையவே கிடையாது. தமிழ் short stories இருக்கு இல்லையா? தமிழ் short stories பத்தி என்னுடைய ஜட்ஜ்மெண்ட் - பர்சனல் ஜட்ஜ்மெண்ட் - world-ல best short stories create பண்ண country-ல ஒண்ணு தமிழ். தமிழ் மட்டும்தான்னு நான் சொல்லலை. அப்படிச் சொல்லக்கூடிய ஆட்கள் இருப்பாங்க. ஆனா, தமிழும் அப்படிப் பண்ணியிருக்கு. ஆனா, ஷார்ட் ஸ்டோரில நீங்க பெரிய மாஸ்டர்ஸ் என்பதை உலகத்தில கேரளால முதற்கொண்டு அக்சப்ட் பண்ண மாட்டான். கர்நாடகால பண்ண மாட்டான். தெலுகுகாரன் பண்ண மாட்டான். அப்புறம் world-la அக்சப்ட் பண்ற question-ஏ கிடையாது.

அண்ணாமலை: இதனால effects-ம் இருக்கு. இப்ப நீங்க hindi translation-ஐப் பார்த்தீங்கன்னா - எந்த மாதிரி வொர்க்கை translate பண்றாங்க - கன்னடத்துல ஒரு translation பார்த்தா - அதைத்தான் மத்தவங்க ரெகமண்ட் பண்றாங்க.

துக்காராம்: இல்லீங்க. இவங்க கொடுக்கற சாகித்ய அகாடமியையே அந்த மாதிரி ஒரு குப்பைக்குத்தான் கொடுப்பாங்க. கொடுத்ததைத்தான் அவங்க translate பண்ணுவாங்க. translate பண்ணதைப் படிச்சிட்டு அவன் என்ன சொல்லுவான். "இது என்ன குப்பையா இருக்கு. ஏதோ கொடுக்கணும்னு கொடுத்திட்டான் போல"

சு.ரா.: ஆங். இருங்க. இங்க வந்து சாகித்ய அகாடமி நிறுவின காலத்தில் இருந்து - இன்னிய வரையிலும் - ரொம்ப பெரிய மாஸ்டர்ஸ் இருக்காங்க கேரளாவுல - எல்லாரும் ஒத்துக் கொள்ளக் கூடிய - ஓரளவு பெட்டர் ரைட்டர்ஸ¤க்கு விருது போயிருக்கு. ஒரு தேர்ட் ரேட் ஆள் இதுவரை அந்தப் பரிசை வாங்கியதே இல்லை. ஏன் என்பதை நீங்க யோசிக்க வேணும். அதுதான் முக்கியமான விஷயம். (கொஞ்சம் இடைவெளிவிட்டு) அங்க வேல்யூஸை காப்பாத்துறாங்க.

அண்ணாமலை: அது votingதான். Its more a cultural thingதான். Not just political.

ராஜாராம்: Let me go back. Still I am not able to understand your answer about Jayakanthan. இப்போ அது வந்து - எக்ஸ்பீரியன்ஸ்னா ...

சு.ரா.: நான் என்ன சொல்றேன்னா - கிரியேஷன்க்கும் ரிப்ளக்ஷனுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. You can reflect many things. அது வந்து சொஸைடியை ரொம்ப அளவுக்க்குப் பாதிக்கவும் செய்யுது. இப்போ, பாரதியாரே - நிறைய பழசு வந்து ரிப்ளக்ஷன்தான். ஏன்னா பாரதி emerge ஆன பீரியட்ல - ஜாதிக்கு எதிரா மனோபாவங்கள், equality சம்பந்தப்பட்ட - ஏன்னா கம்யூனிசம் என்கிற பிலாசபி உலகத்துல இருக்கு - இந்த மாதிரி தாட்ஸ் எல்லாம் சொஸைடில டெவலப் ஆக ஆரம்பிச்சிடுச்சு. இதுக்கெல்லாம் அவர் பல உருவங்களைக் கொடுக்கறார். ஆனா, அவருக்குச் சொந்தமான ஒரு பர்சனாலிட்டி - ஒரு பாட்டுல - குறிப்பா - குயில்லயோ அல்லது வேற ஒரு பாட்டிலயோ வரது. அதை வச்சிதான் - பாரதியை ஜட்ஜ் பண்றோம்.

ராஜாராம்: அப்படி ஒரு பர்சனாலிட்டி ஜெயகாந்தன்கிட்ட எந்தப் படைப்பிலும் வரலையா?

சு.ரா.: எனக்கு வந்து தெரியலை. தெரியலை. அதனால வந்து நான் என்ன நினைக்கிறேன்னா - இப்போ நு·மான் இருக்காரே.. அவர் வந்து உங்களுக்குத் தெரியும். (தெரியும் என்கிறார் ராஜாராம்). அவர் வந்து leftist. leftist-னா தமிழ்நாட்டில் லெப்ட் என்று சொல்லக்கூடிய ஆட்கள் எல்லாம் left-ஏ இல்லை. (கூட்டத்தில் சிரிப்பு) இவர் உண்மையான லெப்டிஸ்ட். இப்போ சாமிநாதனுக்கு இந்தப் பரிசு கனடால கொடுத்ததுல - உண்டு இல்லைன்னு பாத்துடணும்னு என்பதில் அவர் ரொம்ப keen-ஆ இருக்கார். அது அவரோட ஹானஸ்டியைக் காட்டுது. அவர் வந்து - he is also a Marxist. So literature வந்து - இந்த சொஸைடிக்கு என்ன contribute பண்ண முடியும்னு பத்தி அவருக்கு consciousness உண்டு. அவர் சொல்றார். என்கிட்டே இல்லை. ஒரு இண்டர்வியூவில - "எனக்கு அவரோட (ஜெயகாந்தனோட) எந்தக் கதையும் படிக்க முடியல. என்னால படிக்கவே முடியல"ன்னு. இந்த எக்ஸ்பீரியன்ஸ் வந்து எனக்கு ஏறத்தாழ இருக்கு. நாளைக்கு இந்த எண்ணிக்கை கூடுமேயொழிய குறையாது.

அண்ணாமலை: நீங்க முன்னாடி சொன்னமாதிரி - அது ஒரு படியா இருக்கலாம் இல்லையா?

சு.ரா.: நிச்சயமா.

அண்ணாமலை: ரீடர்ஸ் வந்து கல்கில ஆரம்பிச்சு, ஜெயகாந்தன் வழியா மேல போறதுக்கு - அது ஒரு வகையிலே வழி கொடுக்குது.

சு.ரா.: ஆமாம். அதை நீங்க விட்டாக்கூட - social thoughts-ல, social சம்பந்தமா நமக்குப் பல விஷயங்களில் awareness வரதுக்கு அவருடைய பல கதைகள் பயன்பட்டிருக்கு. Students-க்குப் பயன்பட்டிருக்கு. Girls-க்குப் பயன்பட்டிருக்கு. ஏன்னா, அவர் சின்சியரா சொல்றார் அப்படீன்னு ஒரு பீலிங் வருது. அதுதான் முக்கியம். இவர் சொன்ன பல விஷயத்தை இவருக்கு மேலேயே சொல்லியிருக்கார் பாலகுமாரன். பெண்களுடைய சாம்ராஜ்யம் உடனடியாத் தமிழ்நாட்டுல வரணும். அதுமாதிரி பல விஷயங்களை. பெண்கள் அதுக்கு அழுவாங்களே ஒழிய, நம்ப மாட்டாங்க. (கூட்டத்தில் சிரிப்பு) அவர் நாவலைப் படிச்சிட்டு அழுவாங்க. ஆனால், நம்ப மாட்டாங்க. ஜெயகாந்தன் என்ன சொல்றாரோ அதை ஹானஸ்ட்டா சொல்றார். அதுவும் லிட்டரேச்சர்ல சின்சியரிட்டி என்பது ரொம்ப முக்கியமான குவாலிட்டி. அந்தக் குவாலிட்டி அவர்கிட்ட இருக்கு. இன்னிய வரை இருக்கு. அவருக்கு - எனக்குத் தெரிஞ்சு - இந்த சாகித்ய அகாடமி பரிசு அவரைத் தேடி வந்தது. நான் அதை எழுதி இருக்கேன் - அவரைத் தேடி அந்தப் பரிசு வந்ததுன்னு. மத்த அத்தனை பேரும் எனக்குத் தெரிஞ்சு அந்தப் பரிசைத் தேடிப் போனவங்கதான். தேடிப் போனவங்கதான்.

சு.ரா.: (கொஞ்சம் இடைவெளி விட்டு) இப்போ அவர் இருபது வருஷமா எழுதாம இருக்காரே. Twenty years-ஆ அவருடைய காத்து - டயர்ல காத்து இறங்கும் இல்ல - கொஞ்சம்கூட இறங்கல. அணுப்பிரமாணமும் இறங்கல. இதுமாதிரி ஒரு mystery world-லயே கிடையாது எனக்குத் தெரிஞ்சு. நான் யோசிச்சிண்டே இருக்கேன். என்ன காரணம்னு எனக்குத் தெரியலை. (கொஞ்சம் இடைவெளி விட்டு) ரொம்பப் பேர் - இந்த மாதம் என் மேட்டர் வரலைன்னா, நான் செத்துப் போயிட்டேன்னு பயப்படறான். (கூட்டத்தில் சிரிப்பு) ஒரு மாசம் - அவன் அந்த இஷ்யூல அடுத்த மாசம் போடறேன்னு சொல்லிட்டான். இந்த மாசம் நான் உயிரோட இருக்கணுமே. (கூட்டத்தில் சிரிப்பு) அதுக்கு என்ன வழின்னு யோசிக்கக்கூடிய ஒரு தேசத்துல, அவர் பாட்டுக்கு இருபது வருஷமா ஒண்ணுமே எழுதாம உட்கார்ந்திருக்கார். (கொஞ்சம் இடைவெளிவிட்டு) ஒண்ணும் படிக்கறதும் கிடையாது.

அண்ணாமலை: அவர் எழுதாம இருப்பதற்கு என்ன காரணம்னு நினைக்கறீங்க?

(தொடரும்)

1 comment:

Badri Seshadri said...

Looking forward to rest of the installments. Interesting viewpoints. Honest views.