Thursday, November 10, 2005

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - V

சு.ரா.: அவர் எழுத முடியாதுன்னுட்டார்.

அண்ணாமலை: அதாவது அவருக்கே...

சு.ரா.: ஆமாமா. அவருக்கே அந்த block. ஆனா அது ஒரு தப்பான blockதான். அவர் அப்படி நினைச்சுண்டு - தனக்கு எழுத முடியாதுன்னுட்டு - அவருக்கு ஒரு block. இந்த writers block என்கிற விஷயத்த - இந்த country-ல உடைச்சு எறிஞ்சிடுவாங்க.

அண்ணாமலை: ஆமா.

(சு.ரா. தொடர்ந்து பேசுகிறார். யாரோ தொடர்ந்து பலமாக இருமுகிறார்கள். சு.ரா. பேசுகிற அடுத்த ஒன்றிரண்டு வாக்கியங்கள் தெளிவாகப் பதிவாகவில்லை.)

சு.ரா.: (தொடர்ந்து) Writers block-ஐ தீர்த்துக்கறதுக்கு courses இருக்கு. Writer-வோட block. அதையெல்லாம் இங்கே மதிக்கவே மாட்டாங்க. உட்கார்ந்து தொடர்ந்து daily அஞ்சு மணி நேரம் எழுது. என்ன வேணாலும் குப்பையானாலும் எழுது. தொடர்ந்து எழுது. அதுக்கப்புறம் விஷயங்கள் வரும். முதல்ல act பண்ணு. எழுது. உடனடியா எழுது. எதைப் பத்தியாலும் எழுது. உன் wife-ஐத் திட்டி எழுது. ரோடுல போறவனைப் பத்தி எழுது. (கூட்டத்தில் சிரிப்பு.) அல்லது இன்னைக்குக் குடிக்காம இருக்கறதுல இருக்கிற வருத்தத்தைப் பத்தி எழுது. எதை வேணும்னாலும் எழுது.

துக்காராம்: (சிரித்தபடியே) முதல்ல சொன்னீங்களே - பொண்டாட்டியைத் திட்டி எழுதறது - எல்லாரும் ஆர்வமா எழுதுவாங்க.

சு.ரா.: இந்த cretive process இருக்கே அது ஒண்ணு. Creative Process என்ற thought இருக்கே, அது ஒண்ணு. தமிழ்ல Creative Process என்ற thought-ஏ கிடையாது.

பி.கே. சிவகுமார்: நீங்க ஒருதடவை "எழுதும்போது கலைஞன். எழுதாமல் இருக்கும்போது இன்னும் கலைஞன்"ன்னு சொல்றீங்க இல்லையா. அந்த aspect-ல...

சு.ரா.: இல்லை. நான் சொன்னதில்லை. அது என்னுடைய sentence மாதிரியே இல்லை அது.

பி.கே. சிவகுமார்: ஓ... அப்படி நீங்க சொன்னதா அதை நான் படிச்சிருக்கேன்.

சு.ரா.: சொல்லியிருப்பாங்க. சொல்லியிருப்பாங்க. நான் சொன்னதா எங்கிட்டயே நிறைய பேரு பல விஷயங்களைச் சொல்றாங்க. (கூட்டத்தில் சிரிப்பு) அப்படியிருக்கும்போது உங்ககிட்டே சொல்றதிலே ஆச்சரியமில்லை.

பி.கே. சிவகுமார்: எழுத்திலேயே இதை நான் படித்தேன். இணையதளத்தில்.

சு.ரா.: (தொடர்ந்து) கூட்டங்களிலே சொல்றபோது - எனக்கு மறுக்க முடியாம ஆயிடறது. ஏன்னா நிறைய பேரு இருக்காங்க. அவன் என் close friend. அவன் சொல்றான். ஏதோ ஒண்ணு தப்பா சொல்றான் basic-ஆ. நான் சின்ன வயசுல ரொம்ப மறுத்துப் பேசுவேன். உடனே எழுந்து நான் அப்படிச் சொல்லலைன்னு. இப்ப நான் வந்து சண்டை சச்சரவுகளைத் தாங்க முடியாமல், சரி சொல்றியா சொல்லு, ஞானபீட பரிசு கிடைச்சிருக்குன்னு சொல்றியா - நான் சும்மா இருப்பேன். அப்படிங்கற ஒரு இடத்துக்கு நான் வந்துட்டேன். அந்த அளவுக்குக் கூட்டங்களிலே தப்பான விஷயங்களை நம்ம ஆட்கள் சொல்றாங்க.

ராஜாராம்: அதான், இதுமாதிரி, யாரோ ஒருத்தர் சொல்லி, யாரோ ஒருத்தர் எழுதி...

பி.கே. சிவகுமார்: சொல் புதிதுல வந்த ஜெயகாந்தன் இண்டர்வியூல ஜெயமோகன்தான் எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன் - if I remember correctly.

ராஜாராம்: அதான், இது they just think that he has told.

சாரதா: ஜெயகாந்தன் எழுதாம இருக்கறதுக்குக் காரணம் - he may be thinking that he has contributed enough... and he is not in need of ...

சு.ரா.: அப்படிக் கிடையாதும்மா... அப்படிக் கிடையாது.

அண்ணாமலை: He has reached the peak of creative புகழ் என்பது இருக்கட்டும். Does he think that he has reached his creative peak?

துக்காராம்: அவர் எழுதணும்னு நினைக்கும்போது எழுதுவார்னு நினைக்கறேன்.

சு.ரா.: (சாரதாவுக்கு) அது ஒரு காரணம்னு சொல்ல முடியாதும்மா. Writers-வோட history-ஐ நீங்கப் பார்த்தேள்னா, இந்த brain disorder வருது இல்லையா, அது ஒண்ணுதான் writers-ஐ stop பண்ணும். வேற ஒண்ணுமே Paralytic attack, (இன்னொன்றின் பெயர் சொல்கிறார். சரியாகக் கேட்கவில்லை), வேற எதுவுமே - stop பண்ண முடியாது. எழுத முடியாம ஆயிட்டா, அவர் wife-கிட்டே சொல்வார். wife எழுதுவார். இதுதான் history-ல நடந்திருக்கு. ஆனா, அவனுக்குப் பயித்தியம் பிடிச்சிட்டதுன்னு வச்சிக்குங்க... நிறைய பேருக்குப் பயித்தியம் பிடிச்சும் எழுதிண்டிருக்கா. அது வேற விஷயம் (கூட்டத்தில் சிரிப்பு) ஆனா, உண்மையாகவே genuine-ஆ பயித்தியம் புடிச்சா அவனால எழுத முடியாது. வேற எதுவும், கண்ணு பாக்க முடியாதது, காது கேக்காதது எதுவும் writer-ஐ stop பண்ணவே செய்யாது.

ராஜன் குறை: ஜெயகாந்தனோட சஞ்சாரம் பத்திச் சொன்னீங்க இல்லையா. சில, I mean, அவர் நிறைய விஷயம் வந்து idea வச்சிதான் பண்ணியிருக்கார். ஆனா, ரிஷிமூலம் மாதிரி படைப்பு எல்லாம் ரொம்ப ஒரு ...

சு.ரா.: (இடையில்) நான் inspiring-ஆ இல்லைன்னு சொல்லவே வரலை.

சாரதா: (இடையில்) Creative-ஆ இல்லை என்கிறார்.

சு.ரா.: (தொடர்ந்து) நன் சொல்ல வர பாயிண்ட், அவர் கடைசியா எங்கே போய்ச் சேரப் போறார்னு அவர் எழுதறதுக்கு முன்னாடியே தெரியும். நான் இங்கே வரதுக்கு முன்னே - இங்கே ராஜாராம் வீட்டுக்குத்தான் போகப் போறேன்னு - அப்படீன்னு நேக்கு தெரியறது மாதிரி - கடைசியா எங்கே போய்ச் சேரப் போறார் - அதே மாதிரி - நான் என்னென்ன விஷயங்களைச் சொல்லப் போறேன் - என்னென்ன விஷயங்களைச் சொல்லாம இருக்கப் போறேன் - இந்த ரெண்டு விஷயமுமே அவருக்கு clear-ஆ தெரியுது. அப்படித் தெரியக் கூடாது writer-க்கு. writer வந்து ரொம்ப புரளணும். அவனை அறியாமலே அவன் உருச் செய்யப்பட்டு - பல விஷயங்களை அவன் சொல்ல வேணும்னு நினைக்காத விஷயங்களைச் சொல்லலாம். சொல்ல நினைக்காத விஷயங்களுக்கு வந்து சேரணும். கடைசில வந்து - அவனுக்கே அவனுடைய கதை வந்து surprise-ஆ இருக்கணும்.

சாமிநாதன்: அப்போ structural problem வராதா உங்களுக்கு?

சு.ரா.: சீச்சீ.. அதையெல்லாம் deal பண்றதுக்கு வேற அம்சங்கள் இருக்கு. அவனை ஒரு creative writer-ஆ - அவனை guide - பண்ணிட்டுப் போறதுக்கான - இப்ப நீங்க - இப்ப நம்ம short stories ரொம்பப் பிரமாதமா இருக்குன்னு சொன்னேன் இல்லையா - தமிழ்ல உள்ள short stories-க்கு equal-ஆக நான் படிச்ச மத்த நாட்டுல உள்ள short stories-கூட ரொம்ப favorable-ஆ compare பண்ணக் கூடியது. அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஆனா, தமிழ்ல இருக்கக்கூடிய எந்தக் கதையை translate பண்ணி - இவங்க (அண்ணாமலையை மற்றும் பார்னியைக் காட்டுகிறார்.) - professors கிட்ட கொடுங்க. அதுல ஏதாவது POV சரியில்லை - point of view சரியில்லை. இப்படி நூறு இலக்கணங்கள் வெச்சிருக்காங்க - நாம பழைய பாட்டுக்கு இலக்கணம் வெச்சிருக்கோம் இல்லையா - அதேமாதிரி வெச்சிருக்காங்க. வெச்சிண்டு இது structure சரியில்லை என்பாங்க. ஆனா, கதை எப்படியிருக்கு. கதை effective-ஆ இருக்கு. structure சரியில்லை. இன்னொரு கதை, structure நூறு பர்சண்ட் கரெக்ட். கதையை மனுஷன் படிக்க முடியாது. இந்த ரெண்டு example-ம் இருக்கு. ஆனா - அப்படி இருந்தாலும் கூட - மனுஷன் வந்து இந்த creative இதைத் தெரிஞ்சு கொள்வதன்மூலம் - தன்னுடைய quality improve பண்ண முடியுது. Final point-க்கு அவனைக் கொண்டுவிடும்படி முடியாவிட்டாலும்கூட - அதை அவங்களே சொல்றாங்க - இந்த teachers-ஏ சொல்றாங்க - வரமுடியும்னு சொல்றாங்க. நம்ம short stories ஒண்ணுமே இவங்க சொல்லிக் கொடுக்கறபடி இல்லை. இஷ்டத்துக்குத்தான் இருக்கு. இஷ்டத்துக்குத்தான் இருக்கு. இவங்க எக்கச்சக்கமா மார்க் பண்ணுவாங்க. Teachers. பர்ஸ்ட் பாரால வந்து author-வோட POV எப்படி இருக்கு. செகண்ட் பாரால வந்து கேரக்டரோட POV எப்படி இருக்கு - இப்படி மார்க் பண்ணுவாங்க. நான் வந்து இந்த விஷயத்தைக் கொஞ்சம் படிச்ச பின்னாடி - என்னுடைய கதைகளைத் திரும்பப் படிச்சபிறகு - இவங்களுடைய பாயிண்ட் ஆ·ப் வியூவிலே - flaw இல்லாம ஒரு கதைகூட தமிழ்ல எழுதினது இல்ல - என்னுடைய கதைகள் அம்புட்டுலயும் flaw-தான்.

அண்ணாமலை: அதாவது, அவங்க பாயிண்ட் ஆ·ப் வியூவில இருந்து... எல்லா இலக்கியமும் அதேமாதிரி இருக்கணும்னு அவசியம் இல்லே.

சு.ரா.: ஆமா. அவங்க பாயிண்ட் ஆ·ப் வியூவில இருந்து. இல்லை அவசியம் இல்லைன்னு நானே சொல்றேன். ஆனா, இவர் (சாமிநாதன்) கேட்கிறார். உங்களுக்கு வந்து - இந்த மாதிரி இங்க வந்து சுதந்தரமான பிரயாணம் மேற்கொண்டீர்களேயானால், எங்க வேணும்னாலும் போயிடலாமே - இப்ப form-ஐயே கவனிக்காம போயிடலாமேன்னு. ஆனா, அதுக்கான guidance creative writer-க்கு இருக்குன்னு சொல்றேன். எந்தவிதமான சட்டதிட்டங்களுக்கும் ஆட்படாமலேயே அவன் எழுதியும்கூட - ரொம்ப epic-ஆன ஸ்டோரிஸை எழுதியிருக்காங்கன்னு சொல்றேன்.

அண்ணாமலை: அதாவது உள்ளுக்குள்ளே இருந்து வருதுன்னு... வெளியே இருந்து வராம...

ராஜாராம்: அதுல ஒரு சின்னப் பிரச்னை என்னன்னா - நீங்க சொல்றத நான் ஒத்துக்கறேன். ஆனா இது வந்து - நவீன காலம் என்கிற பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு அப்புறம்தான் - இதுமாதிரி form பத்தி, ஒரு creative process பத்தி, ஒரு ஐடியாஸ் form ஆகும். அதுக்கு முன்னால வந்து - we have been just talking. நினைச்சா எழுதறோம். நினைச்சா பேசறோம். அது ஒரு கலை உருவம் என்ற உணர்ச்சி இல்லாமலே, கலையும் இலக்கியமும் வேற வேற விதமா நீங்க சொல்ற மாதிரி வந்துட்டு இருந்திருக்கு. ஒரு தமிழ்நாடு - இந்தியக் கலாசாரத்துல வந்து - நீங்க சொல்ற இந்த வடிவ நேர்த்தில வந்து...

சு.ரா.: (இடையில்) வடிவ நேர்த்தியைச் சொல்லவே இல்லை.

ராஜாராம்: (தொடர்ந்து) இல்ல, கிரியேட்டிவ் ப்ராஸஸ் அப்படீங்கறது வந்து

சு.ரா.: (இடையில்) கிரியேட்டிவ் ப்ராஸஸ்ல தன்னை அறியாமலே dissolve ஆவது...

ராஜாராம்: (தொடர்ந்து) அது வந்து - அதுவந்து ரொம்ப ஆன்மீக லெவல்லே நம்ம இந்திய ப்ராஸஸ்லே இருக்கே தவிர, கதை சொல்றதுக்கு அதுமாதிரி இல்லை. கதை சொல்றது ஒரு சஞ்சாரம். கதை சொல்றது வந்து - ஒரு ecstacy மாதிரி. ஒரு சந்தோஷம் மாதிரி. நான் எது எல்லாம் தோணுதோ அதையெல்லாம் பண்ணுவேன்.. திடீர்னு வந்து...

சு.ரா.: (வீடியோ காம்கார்டரைக் காட்டி) இதை வந்து ஆன் பண்ணி வெச்சிருக்கேளா. நான் எக்கச்சக்கமா உளறிண்டிருக்கேன். அதையெல்லாம் record பண்றேளா... (கூட்டத்தில் சிரிப்பு.)

ராஜாராம்: ஆமாம். ரெக்கார்ட்தான் பண்றேன். அழிச்சிடலாம்... அழிக்கறதா இருந்தா. (சு.ரா. சிரிக்கிறார்.)

ராஜாராம்: (தொடர்ந்து) நான் என்ன சொல்றேன்னா - அதுதான் நம்ம கதை கலாசாரம். எனக்குப் பிரச்னை வந்து என்னன்னா - வெங்கடாசலபதி "நாவலும் வாசிப்பும்"னு ஒண்ணு எழுதியிருக்கார். அதுல கூட மறுபடியும் எனக்கு என்ன பிரச்னைன்னா - மறுபடியும் அவர் நாவலை வந்து - ஐரோப்பிய நாவல்கூட கம்பைன் பண்றாரே தவிர - நம்மகிட்டயும் ஒரு கல்ச்சர் இருக்கு - நம்மகிட்ட கதை இல்லாம ஒரு கல்ச்சர் கிடையாது. எல்லாக் கல்ச்சரிலும் கதை இருக்கு - அதோட ஒரு தொடர்ச்சியா நம்ம நாவலைப் பார்க்க முடியாம, அவரோட ஐரோப்பியப் படிப்பு அவரைப் பண்ணிடுது. நீங்க சொல்ற இந்த நவீன கால உத்வேகம் இது எல்லாம் - முன்னாடி வந்து - பஞ்சதந்திரக் கதைகளை உதாரணமா எடுத்துப்போம் - அருமையான கதைகள் எல்லாமே - ஆனா அந்தக் கதைகள் எல்லாமே இப்படித்தான் எழுதப்பட்டிருக்கு கடைசியில் என்னவா முடியப் போகுதுன்னு - நீதி சொல்றதுக்காகத்தான் எழுதப்பட்டிருக்கு. அந்த நீதியைத் தூக்கி ஒரு ஓரத்துல போட்டுட்டா கூட - அந்தக் கதைகள் அருமையாத்தான் இருக்கு. அந்தக் கதைகள்ல வந்து கதைகளா ஓர் அர்த்தம் இருக்கு. அந்த மாதிரி - ஜெயகாந்தன் வந்து ஒரு நீதியைச் சொல்றார் என்றாலும் - அந்த நீதி வந்து எனக்கு உடன்பாடில்லை - நீதி சொல்றது எனக்கு ரொம்ப உறுத்துது என்றாலும் - அந்த நீதியை - உறுத்தலைத் தூக்கிப் போட்டுட்டா, பல கதைகள் நல்லாத்தானே இருக்கு.

சு.ரா.: (சில நொடிகள் யோசிக்கிறார். பின்னர்) இப்போ ஜெயகாந்தன் வந்து - பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.. ம்ம். பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவர் சிறுகதைகள் எழுதல. கதைகள்தான் எழுதியிருக்கிறார் அப்படீன்னு சொன்னால், எனக்கு அது பிரச்னையே இல்லை. ஆனா, அவர் வந்து...

ராஜாராம்: (இடையில்) அப்படியும் வெச்சிக்கலாம். அது...

சு.ரா.: அப்படி வெச்சிக்கிட்டாதான், அந்த writer-க்கு -அது ஒரு பெரிய disqualification.

ராஜாராம்: இல்ல. அது பெரிய disqualification-னு நான் நினைக்கலை.

சு.ரா.: என்னை ஒரு வருஷம் பின்னாடி தள்ளினாகூட நான் கோபப்படுவேன்.

ராஜாராம்: இல்ல. Actual-ஆ, I would think பின்னாடி முன்னாடி என்பது question-ஏ கிடையாது. மறுபடியும் நாம வந்து பழைய விஷயத்துக்கே போயிட்டு இருக்கோம். இப்போ சார்லஸ் டிக்கன்ஸ் வந்து - nineteenth century-ல வந்து he was the greatest writer. Twentieth century-ல ஒரு first fifty to sixty years வரைக்கும் he was discredited. அவர் வந்து என்ன serialதானே எழுதினார். தொடர்கதை எழுதினவர் அவர்னு. I think you can relate to what I am saying. இப்ப வந்து they are rehabilitating him. அவர் வந்து - he is the greatest star story teller. He is the greatest story teller-ன்னு இப்ப வந்து அவரை rehabilitate பண்றாங்க. So, இந்த முன்ன பின்ன என்கிறது வந்து நாம சொல்ல முடியாது. Because its like going back and forth.

பி.கே. சிவகுமார்: பழந்தமிழ் இலக்கியத்தில்கூட அந்த மாதிரி - ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு இலக்கியம் famous ஆகியிருக்கு.

சு.ரா.: ராஜாராம், ஒரு விஷயம் வந்து நான் உங்களுக்குச் சொல்றேன். நீங்க அதைக் கவனிச்சுக்குங்க. அதாவது வந்து - வாழ்க்கையை வந்து எளிமையாப் பார்க்கறது ஒண்ணு. வாழ்க்கையை complex-ஆ பார்க்கறது ஒண்ணு. வாழ்க்கையை எளிமையா பார்க்கவே முடியாது. எளிமையா வாழ்க்கையைப் பார்த்தார்னா - அவரை வந்து - என்னைப் பொருத்தவரை - ரைட்டர் என்று ஒத்துக் கொள்ளவே மாட்டேன். அவர் அம்மா சொல்லிக் கொடுத்ததைச் சொல்லிக் கொண்டிருப்பார். எனக்கெதுக்கு அது வேணும். அதுதான் எங்க அம்மாவே சொல்லிக் கொடுத்து இருக்காங்களே. வாழ்க்கைதான் வந்து ரொம்ப complex ஆன விஷயம் அப்படீங்கற உணர்வு வந்து தமிழனுக்கு எப்ப வந்தது. எதன் மூலம் வந்தது? short story-க்கும் story-க்கும் சொல்லப் போனேள்னா, சம்பந்தமே இல்லை. short story வேற, story வேற அப்படீன்னு நான் feel பண்றேன்.

ராஜாராம்: இல்ல, தமிழைப் பொருத்தவரைக்கும் - வாழ்க்கையின் சிக்கலை வந்து ஜெயகாந்தன் - எந்தப் பரந்த தளத்தில் (பரந்த தளத்தில் என்பதை அழுத்திச் சொல்கிறார்) deal பண்ணியிருக்காரோ, அந்த அளவுக்கு மத்தவங்க deal பண்ண மாதிரி எனக்குத் தெரியலை. நீங்க ஏன் இப்படிச் சொல்றீங்கன்னு எனக்குப் புரியலை.

அண்ணாமலை: நான் புரிஞ்சிகிட்டது - இவர் (சு.ரா.) நினைக்கறது - ஜெயகாந்தன்...

சு.ரா.: சரி, இப்ப கொஞ்சம் intoxicate பண்ணிக்குவோமா? (கூட்டத்தில் சிரிப்பு)

(கொஞ்சம் சீரியஸாகப் போய்க் கொண்டிருந்த விவாதம் நின்று, சூழல் கலகலப்பாகிறது. உரையாடல் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே, "என்ன சாப்பிடுகிறீர்கள்" என்று சு.ரா. உபசரிக்கப்பட்டார். அதற்கு இப்போது அவர் மேற்கண்டவாறு பதில் சொல்கிறார். "என்ன சாப்பிடுகிறீர்கள்" என்றபடியே எழுகிறார் ராஜாராம். சூழல் அன்னோன்னியமாக மாறுகிறது. சாரதா எழுந்து போவதைப் பார்த்த சு.ரா., "அம்மா, நீங்க எங்க போறீங்க. நீங்கதானே இவ்ளோ நேரம் preside பண்ணிட்டிருந்தீங்க" என்கிறார். கூட்டத்தில் சிரிப்பு. ஓர் இரண்டு நிமிடம் ஆளுக்கு ஆள் பேசிக் கொள்கிறார்கள். கொஞ்சம் இரைச்சல். சு.ரா. தனக்கு என்ன வேண்டும் என்று சொல்கிறார். திடீரென்று யாரோ ஏதோ கேட்கிறார்கள். கேள்வியும் கேட்டவரும் சரியாகப் பதிவாகவில்லை.)

சு.ரா.: நான் வருஷத்துக்கு ஒரு ஒண்ணேகால் கதை எழுதியிருக்கேன். ஒண்ணேகால். அதிலிருந்து பார்த்தீங்கன்னா நான் எவ்வளவு எழுதியிருக்கேன்னு...

சாமிநாதன்: இல்ல சார், டோட்டலா எவ்வளவு எழுதியிருக்கீங்கன்னு கேட்கறார் சார்.

சு.ரா.: டோட்டலா வந்து நான் ஒரு அம்பது வருஷமா எழுதிட்டு இருக்கேன். அறுபது கதைகள் கிட்டே எழுதியிருக்கேன்.

(ராஜன் குறையின் துணைவியாரைச் சு.ரா. யாரென்று விசாரிக்கிறார். அவர் தன் பெயர் சொல்கிறார். சு.ரா. சட்டென்று புரிந்து கொண்டு அடையாளம் தெரிந்து கொள்கிறார். உங்களை எனக்கு நல்லாத் தெரியுமே என்கிறார். "எல்லாரும் தெரிஞ்ச ஆட்களா வந்து உட்கார்ந்திருக்கீங்க. நான் எல்லாரும் புதுசுன்னு நினைச்சு வந்திருக்கேன்" என்கிறார். ராஜன் குறை பக்கம் திரும்பி, "அப்ப நீங்க ராஜன் குறையா? நீங்க இங்கே வந்துட்டேளா?" என்கிறார். ராஜன் குறை "ஆமாம்" என்கிறார். அன்னோன்னியமான தொனியுடன், "நீங்க அங்கதானே கலாட்டா பண்ணிட்டிருந்தேள்" என்கிறார் சு.ரா. ராஜன் குறையப் பார்த்து. கூட்டத்தில் சிரிப்பு. ராஜன் குறை தான் அமெரிக்கா வந்தது பற்றி, தான் இங்கே செய்து கொண்டிருப்பது பற்றியெல்லாம் சு.ரா.வுக்குச் சொல்கிறார். )

சு.ரா.: இந்த அம்மாவை (மோனிகாவை) - இவங்க வந்து இவரை (ராஜன் குறையை) - marry பண்ணிக்கறதுக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். இவரை (ராஜன் குறையை) நான் வந்து - இவரைப் பார்த்துப் பேசியதில்லைன்னு நினைக்கிறேன். ஆனா, இவர் பண்ண கலாட்டா எல்லாம் எனக்குத் தெரியும். (ராஜன் குறையிடம் தொடர்ந்து அவரைப் பற்றி, அவர் வசிக்கும் இடம் பற்றியெல்லாம் உரையாடுகிறார். யாரோ சு.ரா.வின் குடும்பம், மகள்கள் பற்றிக் கேட்கிறார்கள். அவற்றுக்குப் பதில் சொல்கிறார்.)

சு.ரா.: (ராஜன் குறையிடம்) நீங்க இப்போ தமிழ்ல எழுதறதே இல்லையா?

ராஜன் குறை: ரொம்ப இல்லை. இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன் மறுபடியும்.

சு.ரா.: நீங்க எழுதாதது ஒரு பெரிய இதுவா இருக்கு சார். உண்மையைச் சொல்றேன். exaggerate பண்ணலை. நீங்க எழுதாதது ஒரு பெரிய இதை (இடத்தை) create பண்ணியிருக்கு. அப்பப்ப உங்க articles படிச்சிருக்கேன். நீங்க அப்பப்ப எழுதினது ஒரு controversy-ஐ கிரியேட் பண்ணியிருக்கு. அது வந்து தமிழுக்குத் தேவை.

(நண்பர்கள் தமக்குள் பேசிக் கொள்கின்றனர். ஒரு இரண்டு நிமிடங்கள் இப்படிப் போகின்றன.)

துக்காராம்: (ராஜன் குறையிடம் ஜாலியாக) ..... என்ற பெயரில் (பெயர் தரப்படவில்லை) எழுதுவது நீங்கதானா?

ராஜன் குறை: இல்லை. அவர் என் பிரெண்ட்தான்.

சு.ரா.: (துக்காராமிடம்) இந்த question-ஐ நீங்க அவர்கிட்டே கேட்கறீங்களே - அதை நான் object பண்றேன். நீங்க ஒரு ரைட்டர் உயிரோட இருக்காரா இல்லையான்னு தெரியாம ஒரு மேட்டரைப் போடவே கூடாது. யாருன்னு தெரியாம போடவே கூடாது. அது ரொம்ப அளவுக்குப் பத்திரிகையைக் கெடுக்கக் கூடிய விஷயம்.

துக்காராம்: அப்படியா!

சு.ரா.: எல்லா விஷயத்தையும் நீங்க போடுங்க. லிபரலா என்ன வேணும்னாலும் போடுங்க. ராஜாராம்கிட்ட இந்த விஷயத்தை இந்தக் கூட்டத்திலே சொல்லணும்னு நினைச்சுட்டு வந்தேன். ஆனா, அந்த ஆள் யார், அவர் எதற்காக எழுதுகிறார், அவர் நோக்கம் என்னன்னு தெரிஞ்சுண்டு...

துக்காராம்: சரிங்க.

சாமிநாதன்: இணையத்திலே அது அந்த அளவு possible இல்லை சார்.

சு.ரா.: possible இல்லைன்னா, possible-ஆ இல்லையான்னு எனக்குத் தெரியாஅது. ஆனா சந்தேகம் வர மாதிரி இருக்கக் கூடாது.

(நாலைந்து பேர் தமக்குள் பேசிக் கொள்கிறார்கள். ஒன்றும் சரியாகப் பதிவாகவில்லை.)

சு.ரா.: இன்னிக்கு ஏகப்பட்ட சர்ப்ரைஸஸ். (மோனிகாவைப் பார்த்து) நீங்க இங்க வந்து எத்தனை வருஷமாச்சு? (மோனிகா பதிலளிக்கிறார்.)

சு.ரா.: (ராஜன் குறையைப் பார்த்து நட்புடன்) உங்களுக்கு அவங்களைத் தெரிஞ்சதைவிடக் கூடுதலா number of years எனக்குத் தெரியும். அதை ஞாபகம் வெச்சுக்குங்க. உங்க wife-தான் ஆனா எனக்கு number of years கூடுதலாத் தெரியும். (ராஜன் குறை சிரிக்கிறார்.)

ராஜன் குறை: அவங்க பிறக்கும்போதே, ஆஸ்பத்திரிக்குப் போய் நான் பார்த்திருக்கேன். (கூட்டத்தில் சிரிப்பு.) ஆனா, உங்களைச் சந்தித்தது, கடிதம் எழுதியது பத்தி எல்லாம் அவங்க சொல்லியிருக்காங்க.

சு.ரா.: அப்படியா.

(ராஜாராம் திரும்ப இருக்கைக்கு வருகிறார்.)

ராஜாராம்: என்ன, திண்ணைல ஏதும் abusive-ஆ நிறைய வருதா?

சு.ரா.: நான் அதைச் சொல்லலை. இவர் (துக்காராம்) இவர்ட்ட (ராஜன்குறையிடம்) கேட்டார். .... வந்து(பெயர் தரப்படவில்லை) நீங்கதானான்னு. ஒரு பத்திரிகை நடத்தறவங்க அப்படிக் கேட்கக் கூடாது. யாருன்னு identify பண்ண பிறகுதான் நீங்க மேட்டரே பப்ளிஷ் பண்ணனும். அப்படி identify பண்ணாம பத்திரிகை நடத்தறதன் மூலம் ரொம்ப வந்து பத்திரிகையின் status குறையுதுன்னு நான் பர்சனலா feel பண்றேன்.

ராஜாராம்: ப்ராப்ளம் என்னன்னா - இன்டர்நெட்ல வந்து - some people dont want to give their identity. They just want to give ideas. Ideas-தான் important, we are not important-ங்கறாங்க.

சு.ரா.: நான் வந்து என் பேரு சுந்தர ராமசாமின்னு சொல்ல மாட்டேன். என்னுடையக் கதையைப் போடுங்கன்னா, நீங்க என்ன சொல்வேள். சார், தயவுசெய்து உங்கப் பேரை அதுல பொடுங்கன்னு நீங்க சொல்ல மாட்டீங்களா?

ராஜாராம்: X-ன்னு போட்டு போட்டுடுவோம்.

சு.ரா.: அப்படி நீங்க பண்ணக் கூடாது. அப்படி நீங்க பண்றதாலே, நீங்க பலவிதமான விஷயங்களுக்கு opportunities open பண்ணித் தரீங்க. நான் உங்ககிட்ட சொல்லணும்னு முக்கியமா நினைச்சுட்டு வந்த விஷயம் இதுதான். திண்ணையைப் பற்றிய என் impressions. நான் ரொம்ப deep-ஆ படிக்கறதில்லை. கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து எனக்குப் படிக்கறது கஷ்டம். எல்லாம் எனக்குப் பிரிண்ட்-அவுட் எடுக்கவும் முடியாது. கம்ப்யூட்டரே நான் ரொம்ப லேட்டாக் கத்துண்டவன் நான். எனக்கு என்ன தோணறதுன்னா - நடக்கக் கூடாத சில காரியங்கள் - நடந்திருக்கக் கூடாத சில காரியங்கள் - திண்ணைல நடந்திருக்கு. (இவ்வளவு நேரம், 'ம்' கொட்டியபடி கேட்டுக் கொண்டிருந்த ராஜாராம், "சொல்லுங்க, திருத்திக்கலாம்" என்கிறார்.) (சு.ரா. தொடர்ந்து) அது வந்து - ஆட்கள் வந்து - எனக்கு என்ன சுதந்திரம் இருக்கு - இப்போ நீங்க இந்த country வந்த பிறகு ரொம்ப லிபரலா மாறியிருக்கலாம் - தமிழ்நாட்டுல இருந்தா உங்களுக்கு அப்படி இல்ல - அது பாரதீய ஜனதாவா இருக்கட்டும், காங்கிரஸா இருக்கட்டும், டி.கே.வா இருக்கட்டும் - எல்லாமே opinism உள்ளவங்கதான். discuss பண்ணலாம். நாம திட்டவட்டமா முடிவுக்கு வரவேண்டிய ஒரு காலம் வந்து சேரல. இப்ப இந்த திசைல நாம என்ன செய்யலாம் என்கிற consciousness வந்து எனக்கு ரொம்ப உடன்பாடானது. முழுக்க நூத்துக்கு நூறு உடன்பாடானது. ஆனா, உங்க பத்திரிகையை ஒரு ஆள் வந்து பயன்படுத்திக் கொள்வது வேற. உங்களை ஏமாத்துறது வேற. ஒரு எடிட்டரானால், எந்தக் காரணம் கொண்டும் நீங்க ஏமாறக் கூடாது. அந்த அளவு conscious வேணும். நான் சும்மா வந்து, என் பேரில ஒரு மேட்டரைப் போடச் சொல்றேன். அப்புறம் இன்னொரு மேட்டரை என் friend கிட்ட போடச் சொல்றேன். அவன் என்னைப் பத்தி பிரமாதமா ஒண்ணு எழுதிப் போடுவான். இதுக்கெல்லாம் நீங்க இடம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டுல வந்து ஒரு பெரிய ரைட்டரோட மேட்டரை ஒரு சின்ன ரைட்டர் திருத்தமாட்டார் அப்படீன்னு நீங்க எழுதியிருந்தீங்க. அதை நான் மறுத்து எழுதினேன். திண்ணை தமிழ்ச் சூழல் பத்திய ஒரு அறியாமைல இருக்குன்னு நான் சொன்ன ஞாபகம். ஒரு பெரிய சீனியர் ரைட்டரோட இதை ஒரு ஜூனியர் ரைட்டர் திருத்த மாட்டார்ன்னு சொந்த name-ல வந்தவரைக்கும்னு சொன்னப்போ, Am I correct? (Yes என்கிறார் ராஜாராம்), அப்ப நான் சொன்னேன். அப்படிச் சொல்லாதீங்க. அப்படிச் சொன்னீங்கன்னா, உங்களுக்குத் தமிழ்ச் சூழல் என்னன்னே தெரியாது. பெரிய ரைட்டர் மட்டுமில்லை. இருக்கறதிலேயே சாமிநாத அய்யருடைய மேட்டர் கூட நான் திருத்தியிருக்கேன். உ.வே. சாமிநாத அய்யர் மேட்டர் நான் திருத்தியிருக்கேன். தைரியமா திருத்துவேன். அதுக்கு evidence இருக்கு சார். அதுக்கு evidence இருக்கு. இப்போ காலச்சுவடுல நீங்க வரதைப் பாத்தீங்கன்னா, பப்ளிஷிங் சம்பந்தமா, என்னென்ன சரியா இருக்கு என்பது பற்றி - பெருமாள் முருகன் என்ற ஒரு தமிழ் ஸ்காலர் - ஒரு தமிழ் டிபார்ட்மெண்ட்ல head of the department-ஆ ஒரு காலேஜ்ல இருக்கக் கூடியவர் - தொடர்ந்து எழுதிட்டு இருக்கார். அவர்கிட்ட நிறைய சரக்கு இருக்கு. எனக்கு அதோட அடிப்படை தெரியும். எனக்கு அடிப்படை தெரியும்.

ராஜாராம்: இன்டர்நெட்ல பத்திரிகை நடத்துறதுல ஒரு பெரிய ப்ராப்ளம் - ஒவ்வொரு தடவை போடும்போதும் இது யார் எழுதினா - இவங்க நிஜமா - சிலசமயம் அதுக்கப்புறம் நாங்க என்ன பண்ணோம்னா, சில பேர் வந்து, இவர் அண்ணாமலை எங்களுக்கு அனுப்பச் சொன்னார்னு அனுப்பும்போது, we tell them. No, we dont do it. அண்ணாமலையையே அனுப்பச் சொல்லுங்க. இல்லீன்னா, அவர் permission அனுப்பச் சொல்லுங்கன்னு. என்ன பண்றாங்கன்னா, அண்ணாமலை அட் யாஹ¥ டாட் காம்னு போட்டு, we give permission-னு அனுப்பறாங்க. Then we have to take it at face value. ஏன்னா, நாம personal-ஆ போய்க் கேட்கற அளவுக்கு - நம்ம ஊரா இருந்தா, மதுரைல அண்ணாமலை மேல மாசி வீதில இருக்காரான்னு போய் பார்க்கலாம். போன் போட்டுக் கேட்கலாம். We dont have that kind of luxury here. So, we have to depend. சிலசமயம், அந்த மாதிரி we come to know it is a forgery என்றால், we removed the link to the article. அது ஒரு சவுகரியம் இதுல.

சு.ரா.: சார். உங்களுக்கு prove பண்ண முடியாது சார். நான் எப்படி prove பண்ணுவேன். எனக்கும் wife-க்கும் நடந்த conversation-ஐ ஒருத்தன் - யாருக்கும் - எனக்கும் wife-க்கும் நடந்த conversation-ஐ உங்களுக்கு லெட்டர்ல போடுறான். நான் அப்போ நினைச்சுட்டிருக்கேன். உலகத்திலே நானும் wife-ம் தவிர யாருமில்லைன்னு. நான் முட்டாள் என்பதால் அப்படி நினைச்சுட்டிருக்கேன். ஆனா அவன் ஒட்டு கேட்டிருக்கான். லெட்டர் போடறான். அதிலிருந்து நேக்கு ஒண்ணு தெரியறது. என்னோட personal life தெரிஞ்ச ஆள்தான் இவன்னு. அவனுக்கு உங்க பத்திரிகைல என் பர்சனல் லைப் சொல்றதுக்கான ஒரு பிஸினசும் அவனுக்குக் கிடையாது. நீங்க அப்படி ஒரு editorial policy வெச்சிக்கவும் இல்லை. அதுதான் உங்களோட editorial policy-ஆ இருக்குமானால் எனக்குப் பிரச்னை இல்லை.

ராஜாராம்: இல்ல இல்ல (அது எங்க பாலிஸி இல்லை என்ற அர்த்தத்தில்)

சு.ரா.: நீங்க உங்க editorial policy-ஐ வேற ஒரு level-ல வெச்சிருக்கீங்க. ஆனா, இந்த மாதிரி செய்யறது வந்து...

ராஜாராம்: ஆனா, அது மாதிரி பயன்படுத்திக் கொள்ளும்போது, the problem is we want to edit. நிறைய edit பண்ணிதான் போடறோம். முதல்ல edit பண்ணாம போட்டுட்டு இருந்தோம். ஒரே குப்பையா ஆயிடுச்சு. அப்புறம் edit பண்ணாலும், we are also human. We dont know how to do this. அப்படியெல்லாம் கட் பண்ணி - பலவற்றைப் பெரிய ரைட்டர்ஸ¥க்குக் கூடத் திருப்பி அனுப்பியிருக்கோம். Please correct and send-ன்னு சொல்லி. Even then வந்து, sometimes we sleep. நீங்க சொல்றதும் உண்மைதான். அதனால்தான், திண்ணைல இதுவரை வந்த authors-க்கு ஒரு பட்டியல் மாதிரி போடப் போறோம். அந்தப் பட்டியல் வந்தவுடனே, எல்லாருக்கும் எழுதி - உங்க ஈமெயில் என்ன, அட்ரஸ் என்ன, போன் நம்பர் என்ன - அதிலே போடப் போறோம் நாங்க - அப்படீன்னு எழுதப் போறோம்.

சு.ரா.: இது இப்ப தெரியுது இல்லை. அது உங்களுக்குப் பத்து வருஷத்துக்கு முன்னாலே தெரிஞ்சிருக்கலாமே. ஏன் தெரியலை.

ராஜாராம்: தெரியலையே.

(தொடரும்)

No comments: