Monday, January 02, 2006

புத்தாண்டும் எனிஇந்தியனும்

வாசகர்களுக்கும் அன்பர்களுக்கும் எனி இந்தியன் புத்தக நிறுவனம் சார்பாகவும் என் சார்பாகவும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

***** ***** *****

நடந்ததும் நடக்க இருப்பதும்:

புத்தாண்டில் புதிய செய்திகளுடன் உங்களைச் சந்திக்க வருவது புத்தாண்டின் உவகைக்கு அணி சேர்க்கிறது. எனிஇந்தியன் புத்தக நிறுவனத்தின் தொடக்கம் குறித்த அறிவிப்பு முதலில் என் வலைப்பதிவிலும், அடுத்து குழுமங்கள், இணையதளங்கள் என்று பிற இணைய ஊடகங்களிலும் வெளியாகியது. அதன் பின்னரே, பிற ஊடகங்களில் வெளியானது. இவ்வாறாகத் தொடக்கம் முதலே, இணையவெளியின் முக்கியத்துவம் உணர்ந்து செயலாற்றிவரும் எங்கள் நிறுவனத்தின் புதிய அறிவிப்புகளைத் தொடர்ந்து இணையம் வழியாகப் பகிர்ந்து கொள்வது பொருத்தமானதாகும்.

மார்ச் 23, 2005-இல் தொடங்கப்பட்ட எனிஇந்தியன் புத்தக நிறுவனம் தமிழ்ப் புத்தகங்களை உலகம் முழுவதும் உள்ள வாசகர்களுக்கு அறிமுகம் செய்விப்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. தமிழ்ப் புத்தகங்களைப் படிக்க ஆர்வம் கொண்டுள்ள வாசகர் குழு எங்கள் முயற்சிக்கு தொடக்கம் முதலே பெரும் ஆதரவும் வரவேற்பும் அளித்து வந்திருக்கிறது. அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களுக்கு அளித்துவரும் ஆதரவையும் உற்சாகத்தையும் எங்கள் இணையதளத்தில், நுகர்வோர் அனுபவம் என்ற பக்கத்தில் காணலாம்.

புத்தகச் சந்தையைத் தொடர்ந்து , சென்னை தி. நகரில் புத்தகக்கடை ஒன்றும் ஜூன் 2005-இல் தொடங்கப்பட்டது. வெளி ரங்கராஜன் புத்தகக் கடையின் விற்பனையைத் தொடங்கி வைக்க, சீனி. விசுவநாதன் முதல் புத்தகத்தை வாங்கிக் கொண்டார். தமிழின் புகழ்பெற்ற பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு எனிஇந்தியனைச் சிறப்பித்தனர்.

எனிஇந்தியன் முயற்சிகளின் அடுத்த கட்டமாக சிறுவர் புத்தகங்களையும் ஆங்கிலப் புத்தகங்களையும் மட்டுமே விற்பனை செய்யும் தளம் ஒன்றும் எனி இந்தியன் சார்பில் உருவாக்கி வருகிறோம் . www.anyindianbooks.com என்ற முகவரியில் இத்தளம் விரைவில் செயல்படும்.

புத்தகங்கள் மீதுள்ள எங்கள் தீராக் காதலின் தொடர்ச்சியாக - எனிஇந்தியன் புத்தகப் பதிப்புத் துறையிலும் புத்தாண்டிலிருந்து காலடியெடுத்து வைக்கிறது. எனிஇந்தியன் பதிப்பகத்தின் முதற்கட்டமாக நான்கு புத்தகங்கள் சென்னை புத்தக விழாவில் - ஜனவரி 6, 2006-இல் - வெளியாகவிருக்கின்றன. தமிழில் அதிகம் புத்தக உருப்பெறாத அறிவியல், மானுடவியல், சமூகவியல், இணைய எழுத்துகள் ஆகிய துறைகளில் எனிஇந்தியன் பதிப்பகம் சிறப்பு கவனம் செலுத்தும். எனிஇந்தியன்.காம் இணைய புத்தகக் கடையையும், எனிஇந்தியன் தி.நகர் புத்தகக் கடையையும் வரவேற்று ஆதரித்து வரும் வாசக அன்பர்கள், எனிஇந்தியன் பதிப்பகம் வெளியிடும் புத்தகங்களையும் வரவேற்று ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம். வரவேற்று ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.

***** ***** *****

சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்:

ஜனவரி 6, 2006-லிருந்து ஜனவரி 16, 2006-வரை சென்னையில் நடைபெறவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில், கடை எண் S-59-இல் (Stall Number S-59 - Naveena Virutcham Stall) எனிஇந்தியன் பதிப்பகப் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்துப் புத்தகங்களும் கிடைக்கும். சென்னை புத்தகக் கண்காட்சியில் கடை எண் S-59-இல் விற்கப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% சதவீதச் சிறப்புத் தள்ளுபடியும் உண்டு. எனவே, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்கிற வாய்ப்பை எனிஇந்தியனுக்குத் தாருங்கள்.


***** ***** *****

எனிஇந்தியன் பதிப்பக வெளியீடுகள்:

1. அட்லாண்டிக்குக்கு அப்பால் - பி.கே. சிவகுமார்


வாசக அனுபவம், இலக்கியம், விவாதம், கவிதை கேளுங்கள், சமூகம், அமெரிக்கா என்று ஆறு பிரிவுகளில் பி.கே. சிவகுமார் எழுதிய 45 கட்டுரைகள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 288 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை இந்திய ரூபாய் 120.

புத்தகத்துக்கு எனிஇந்தியன் பதிப்பகம் சார்பாக எனிஇந்தியனின் தலைமை நிர்வாக இயக்குநர் கோபால் ராஜாராம் பதிப்புரை எழுதியிருக்கிறார். "எனிஇந்தியன் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக பி.கே. சிவகுமாரின் கட்டுரைத் தொகுப்பு வெளிவருவது மிகவும் பொருத்தமே" என்று பதிப்புரையில் எழுதுகிற கோபால் ராஜாராம் தொடர்ந்து எழுதுகிறார். "பி.கே. சிவகுமார் தமிழ் அறிவுலகில் நிகழும் கருத்துப் போராட்டங்களில் தம்முடைய கருத்துகளை உறுதியாய் முன்வைக்கத் தயங்காதவர். தம்முடைய ரசனையை எப்போதும் செழுமைப்படுத்திக் கொள்ள தயாராய் இருப்பவர். ஜெயகாந்தனின் எழுத்திலும் ஆளுமையிலும் கொண்டுள்ள ஈடுபாட்டை ஆக்கபூர்வமாய் தன்னுடைய படைப்புகளில் இணைத்துக் கொள்வதன் மூலம் கோஷங்களையும், வெற்று வாதங்களையும் தாண்டிய தெளிவை அளிப்பவர். பழம் இலக்கியங்களில் அவர் கொண்டுள்ள ஈடுபாடு புத்திலக்கியங்களின் மீதான நவீன பார்வைக்கு அடித்தளமாய் இருப்பதால் அவருடைய ரசனை சமநிலை கொண்டு விளங்குகிறது. அவருடைய பார்வைகளும், கோணங்களும் இலக்கிய ரசனைக்கு புதிய வெளிச்சத்தைக் கொண்டு வருகின்றன. பாசாங்கு இல்லாமல் தான் ரசித்தவற்றை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தெளிவான நடையில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிற திறந்த மனம் சிவகுமாருக்கு வாய்த்திருக்கிறது. பி.கே. சிவகுமாரின் மனதை அசைத்த சொற்கள் நிச்சயம் வாசகர்கள் மனத்தையும் அசைக்கும் என்பது எங்கள் நம்பிக்கை."

இப்புத்தகத்துக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் அணிந்துரை வழங்கியிருக்கிறார். புத்தகத்திலுள்ள கட்டுரைகள் அனைத்தையும் "ஒரே மூச்சில் என்னால் படிக்கவும் முடிந்தது" என்று ஆரம்பிக்கிற ஜெயகாந்தன், "இந்தக் கட்டுரை தொகுதியைப் படிக்கும் எவரும் கட்டுரை ஆசிரியருக்குள்ள தமிழ் இலக்கியம், சமூகம் குறித்த அக்கறையையும் ஈடுபாட்டையும் உணர்ந்து கொள்ள முடியும்." என்றும், "நண்பர் சிவகுமார் தமது வாழ்வின் எல்லா நிலைகளையும் சுவைபடக் கூறிச் செல்வது எனக்குப் பல தெளிவுகளைத் தருகிறது." என்றும் எழுதுகிறார். தொடர்ந்து, "சிவகுமார் நன்கு சிந்திக்கிறார். தெளிவாக வெளிப்படுத்துகிறார். ஒரு படைப்பாளிக்கு இந்த இரண்டும் மிக முக்கியம். எனவே இவர் பிறரையும் சிந்திக்கத் தூண்டுகிறார். சிந்திக்கத் தூண்டுதலுக்கு "சீண்டுதல்" என்று அனுபவத்தில் பலரும் பொருள்படுத்தி விட்டார்கள். அப்படிப் பார்த்தால் சிவகுமார் நன்றாகவே, ஆரோக்கியமாகவே சீண்டுகிறார்." என்றும் ஜெயகாந்தன் எழுதுவது குறிப்பிடத்தக்கது.

இப்புத்தகத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் "சாளரத்தினூடே தெரியும் கண்கள்" என்ற தலைப்பில் முன்னுரை எழுதியிருக்கிறார். "பி.கே. சிவகுமாரின் எழுத்துக்கள் வாசகனாகத் தொடங்கி மெல்ல மெல்ல முதிர்ந்து எழுத்தாளனாக ஆகும் ஒருவரின் பதிவுகள் என்ற வகையில் முக்கியமானவை. ஒரு புதிய வாசக உலகத்தை, தமிழில் உருவாகி வரும் வலுவான ஒரு தரப்பை பிரதிநிதித்துவம் செய்பவை இவை." என்று முன்னுரையில் எழுதும் ஜெயமோகன், "பி.கே. சிவகுமார் இந்நூலில் தன் ரசனையின் அடிப்படையில் நூல்களை மதிப்பிட்டு எழுதியுள்ளவை ஒரு முக்கியமான காரணத்தினால் குறிப்பிடத்தக்கவை. பி.கே. சிவகுமார் தமிழ்ச் சூழலுக்கு அப்பால் நின்று, வெறும் ஒரு வாசகனாக இவற்றை மதிப்பிடுகிறார். இவை இங்கு உருவாக்கும் பலவிதமான கணக்குகளுக்கு வெளியே அவர் இருக்கிறார். ஆகவே அவரது மதிப்பிடுகளில் ஓர் உண்மை இருக்கிறது. இரண்டுவகை மாயைகளில் அவர் சிக்குவதில்லை, ஒன்று 'இதுதான் இப்போது வெளிநாடுகளில் ·பேஷன்' என்ற இலக்கியப் பம்மாத்து. வெளிநாடுகளில் இருந்து இங்கு நோக்கும் வாசகர்கள் அதிகமான பிறகே இந்த வகை எழுத்துக்கள் தமிழில் செல்வாக்கிழந்தன. இரண்டு இங்கே இலக்கியக் குழுக்கள் சார்ந்து உருவாக்கப்படும் மதிப்பீடுகளில் அவர் சிக்குவதில்லை. ஆனால் சில விஷயங்களில் அவருக்குத் தொலைவு எல்லையாக உள்ளது. ஏற்கனவே சொன்ன இரண்டாவது கூறு இந்நூலில் உள்ளது. புதிய அனுபவக் களங்களை புதிய வாழ்க்கைச்சூழலை காட்டும் எழுத்துக்களை இதில் நாம் காண்கிறோம். இக்கட்டுரைகளில் நேர்மையான நேரடியான ஒரு பதிவுமுறை உள்ளது. இத்தகைய எழுத்துக்களில் காணும் இருவகைக் குறைகள் இல்லை. ஒன்று , மேலைநாட்டு விஷயங்களை மிதமிஞ்சிப் புகழ்ந்தேத்தி இந்தியாவை இறக்கி நோக்கும் பார்வை. இரண்டு, என்ன இருந்தாலும் இந்தியா போல வருமா என்ற நோக்கு. ஒருவகை நடுநிலை வாய்த்திருப்பதைப் பாராட்டவேண்டும். அத்துடன் இணைய எழுத்துக்களில் சுஜாதா மற்றும் இரா.முருகனிடம் இருந்து பெற்றுக் கொண்ட செயற்கையான விளையாட்டுப் பாவனையைப் பலர் கையாண்டு உண்மையான அனுபவங்களைக் கூட சாரமிழக்கச் செய்துவிடுகிறார்கள். பி.கே. சிவகுமார் தன் ஆத்மார்த்தமான குரல் மூலம் அந்தத் தடையைத் தாண்டியிருக்கிறார்." என்று பாராட்டுகிறார்.


***** ***** *****

2. எதிர்காலம் என்று ஒன்று (அறிவியல் புனைகதைத் தொகுப்பு) - தொகுப்பாசிரியர்: கோபால் ராஜாராம்

திண்ணை இணைய இதழும் மரத்தடி யாஹ¥! இணையக் குழுமமும் இணைந்து நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டி அனைவரும் அறிந்ததே. எழுத்தாளர் சுஜாதா நடுவராக இருந்து பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுத்தார். அப்போட்டியில் பரிசு பெற்ற கதைகளுடன், போட்டிக்கு வந்திருந்த கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளும், திண்ணை இதழில் வெளியான அறிவியல் புனைகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஜெயமோகன், நான்சி க்ரெஸ் (மொழியாக்கம்: ராமன் ராஜா), சேவியர், ரெ. கார்த்திகேசு, நளினி சாஸ்திரி, அருண் வைத்யநாதன், என். சொக்கன், துகாராம் கோபால்ராவ், நாகரத்தினம் கிருஷ்ணா, சன்னாசி, மண்ணாந்தை, நா. சுவாமிநாதன், மீனாக்ஸ், கி. சீராளன், இரா. மகேசன், நந்தன், நடராஜன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் எழுதிய 21 அறிவியல் புனைகதைகள் இத்தொகுப்பிற்கு அழகு சேர்க்கின்றன. ஏறக்குறைய 174 பக்கங்கள் உடைய இப்புத்தகத்தின் விலை இந்திய ரூபாய் 80.

"இந்தச் சிறுகதைத் தொகுப்பு அறிவியல் மீதும் அறிவியல் புனைகதைகள் மீதும் தமிழ் வாசகர்கள் ஈடுபாடு கொள்ள உதவினால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்." என்று பதிப்புரை சொல்கிறது.

"இந்தத் தொகுப்பில் இருக்கும் பல கதைகள் சிறிது வித்தியாசமாக இருக்கின்றன என்பதே ஒரு மகிழ்ச்சிக்குர்¢ய செய்தி." என்று இப்புத்தகத்துக்கு அணிந்துரை எழுதிய பி.ஏ. கிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

இப்புத்தகத்துக்கு தொகுப்பாசிரியர் கோபால் ராஜாராம் முன்னுரை எழுதியிருக்கிறார். கோபால் ராஜாராம் தமிழ் இலக்கியம் மற்றும் அறிவியல் துறைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர். வானம்பாடி, கசடதபற ஆகிய இலக்கிய இயக்கங்களில் பங்கு பெற்றவர். வீதி நாடக இயக்கம், சிற்றிதழ்கள் ஆகியவற்றில் முனைப்புடன் ஈடுபட்டவர். புகழ்பெற்ற திண்ணை.காம் இணைய இதழின் ஆசிரியர். கோபால் ராஜாராமின் முன்னுரை அறிவியல் புனைகதைகளின் பாரம்பரியத்தைச் சுவாரஸ்யமாக அலசுகிறது. புனைகதைகளுடன் ஆசிரியர்களைப் பற்றிய குறிப்புடனும் இப்புத்தகம் அழகாக வெளிவந்திருக்கிறது.

இத்தொகுப்பிலுள்ள கதைகள் அறிவியல் புனைகதைகளின் தகுந்த முன்மாதிரியாகச் சொல்லத்தக்கவை. தமிழில் பல எழுத்தாளர்களின் அறிவியல் சிறுகதைகளின் முதல் தொகுப்பு இதுவே.


***** ***** *****

3. ஓவியத்தின் குறுக்கே கோடுகள் - பாரி பூபாலன்.

பாரி பூபாலன் திண்ணை இணைய இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கிறார். திண்ணையில் பாரி பக்கம் என்ற பிரிவின்கீழ் பிரத்யேகமாக எழுதி வருபவர். பாரி எழுதிய 27 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஏறக்குறைய 96 பக்கங்களுடைய இப்புத்தகத்தின் விலை இந்திய ரூபாய் 40.

"பாரி கிராமம், பெருநகரம், அமெரிக்க நகரம் என்று பல இடங்களில் வாழ்ந்தவர். அவரைச் சுற்றி நிகழும் மனித நாடகங்களை உன்னிப்பாய்க் கவனிப்பவர். வெறும் பதிவு என்ற அளவீட்டைத் தாண்டி, உணர்வுப் பூர்வமாய் அவர் நிகழ்ச்சிகளுடனும் மனிதர்களுடனும் ஒன்றிப் போகிறார். அதனாலேயே அவருடைய "பாரி பக்கங்கள்" பகுதி திண்ணை.காம் வாசகர்களின் அனுபவத்தில் ஏதோ ஒரு பகுதியைத் தொட்டுக் காட்டியது. தமிழில் நடைச்சித்திரங்கள், மனித உணர்வுக் கட்டுரைகள் மிகவும் அருகி வருகின்றன. பத்திரிகை நிகழ்ச்சிக் குறிப்புகளுக்கு வெளியே, இலக்கியம், அரசியல் சாராத வாழ்முறை சார்ந்த கட்டுரை இலக்கியம் அருகி வருகிறது. தி.ஜ.ரங்கநாதன் முதல் தி.ஜானகிராமன் வரை எழுதிவந்த வாழ்வியல் கட்டுரைகளின் தொடர்ச்சியாய் நான் பாரியின் வாழ்வியல் கட்டுரைகளைக் காண்கிறேன். அவருடைய படைப்பாளி அனுபவம் வாசக அனுபவமாய் மாறும் வகையில் திறந்த மொழிநடையில் அமைந்த பாரியின் கட்டுரைகள் தமிழுக்கு வளம் சேர்க்கும்." என்று பதிப்புரையில் கோபால் ராஜாராம் எழுதுகிறார்.

இந்தப் புத்தகத்துக்கு எழுத்தாளர் பாவண்ணன் அணிந்துரை எழுதியிருக்கிறார். "திண்ணை இணைய இதழில் பாரி பக்கம் என்றொரு பகுதியைத் தொடங்கியபிறகுதான் அவரது எழுத்துகளை நான் கவனமாகப் படிக்கத் தொடங்கினேன்." என்று ஆரம்பிக்கும் பாவண்ணன், "தொடக்கத்தில் ஒருசில கட்டுரைகளைப் படித்தபோதே அவர் எழுத்தின்மீது ஒருவித ஈர்ப்பு எனக்குள் உருவாகியது. ஏராளமான அளவில் புதிய புதிய சம்பவங்கள் நிகழக்கூடிய ஒரு தேசத்தில் அவர் இருந்தாலும், ஒரு தகவலுக்காகவது அவற்றைப்பற்றி சொல்லி ஆற்றிக்கொள்ளத்தக்க வாய்ப்புகள் இருந்தாலும், அவற்றை மனஅளவில் ஒரு தேர்வுக்கு உட்படுத்திப் பகிர்ந்துகொள்ளத்தக்கவற்றை மட்டுமே எழுதிய கட்டுப்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்க்கையைப்பற்றிய ஒரு புது உண்மையைப் புரிந்துகொண்டவையாக அல்லது புரிந்துகொள்ள முன்வைப்பவையாக அப்பதிவுகள் இருந்ததை உணர்ந்தேன்." என்று எழுதுகிறார்.

இந்தப் புத்தகத்துக்கு எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி முன்னுரை எழுதியிருக்கிறார். "மன உணர்வு பற்றி உளவியல் ரீதியான சிறு ஆய்வுகள், அன்றாடம் ஏற்படும் சாதாரண அனுபவங்கள், சமூகப் புற நிகழ்வுகள், கலாசார மாற்றம் ஏற்படுத்தும் புதிய கண்ணோட்டம் இவை போன்றவை பாரியின் கட்டுரைகளுக்குக் கருப்பொருளாய் அமைந்துள்ளன" என்கிற இந்திரா பார்த்தசாரதி, "எளிய நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலை அனைவரும் படிக்கவேண்டும்" என்று பரிந்துரைக்கிறார்.

***** ***** *****

4. பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் - பாகம் 1 - மார்வின் ஹாரிஸ்; தமிழில்: துகாராம் கோபால்ராவ்

ஏறக்குறைய 155 பக்கங்களுக்கும் மேல் உள்ள இந்தப் புத்தகத்தின் விலை இந்திய ரூபாய் 95. துகாராம் கோபால்ராவ் திண்ணையில் மொழிபெயர்த்த மார்வின் ஹாரிஸ் கட்டுரைகள் பல திருத்தங்களுக்கு உள்ளாகி மேம்பட்ட வடிவம் மற்றும் உள்ளடக்கத்துடன் இப்புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

"மார்வின் ஹாரிஸ் 1927-இல் நியூயார்க்கில் பிறந்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராகவும், பிறகு துறைத்தலைவராகவும் பணியாற்றினார். 1981-இல் ·ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் மேற்பட்டப்படிப்பு ஆய்வுத்துறையின் தலைவராய்ப் பணியாற்றினார். அவருடைய நூல்கள் பல்கலைக்கழகங்களில் மானுடவியல் துறையில் பாடமாய் வைக்கப்பட்டுள்ளன. தன்னை மார்க்ஸியராய் அடையாளம் காட்டிய மார்வின் ஹாரிஸ், கலாசாரத்தின் பொருளியல் அடிப்படையை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தினார். ஒரு சமூகத்தின் கலாசாரம் சார்ந்த செயல்பாடுகள், தெய்வாதீனமாகவோ, அல்லது தற்செயலாகவோ ஆனவை அல்ல என்பதும், அவற்றிற்கு சமூகச்சூழல் மற்றும் பொருளியல் அடிப்படைகள் உண்டு என்பதும் அவருடைய கருதுகோள்கள். மானுடவியலில் தன் ஆய்வு முறையை "கலாசாரப் பொருள்முதல்வாதம்" [Cultural Materialism] என்று பெயரிட்டு அவர் அழைத்தார். அவர் 16 புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் இடம் பெறும் ஆய்வுகள் "பசுக்கள், பன்றிகள், யுத்தங்கள், சூனியக்காரிகள்" (Cows, Pigs, Wars, and Witches ) என்ற நூலில் இடம் பெற்றவை. நாம் அறிந்திருக்கும் பல விஷயங்களின் மீது புது வெளிச்சம் பாய்ச்சுவதாய் அமைந்துள்ள இந்தத் தொகுப்பு வாசகர்களின் கவனம் பெறும் என்று நம்புகிறோம்." என்று பதிப்புரையில் கோபால் ராஜாராம் எழுதுகிறார்.

இந்தப் புத்தகத்துக்கு ஓர் அருமையான முன்னுரையை எழுதியிருக்கிறார் பிரக்ஞை வி. ரவிஷங்கர். தமிழில் பல பத்தாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்து அது வெளிவந்த குறுகிய காலத்தில் அறியப்பட்டதோடு மட்டுமில்லாமல் தாக்கங்களையும் உண்டுபண்ணிய பிரக்ஞை என்னும் சிற்றிதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தவர் ரவிஷங்கர். அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் சமூகவியல் துறையில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்துவரும் ரவிஷங்கரின் முன்னுரை, மார்வின் ஹாரிஸ் கட்டுரை அளவுக்குக் கனமானது.

***** ***** *****

எனிஇந்தியன் பதிப்பகத்தின் வெளியீடுகள் அனைத்தும் ஜனவரி 6, 2006 முதல் எனிஇந்தியன்.காம், எனிஇந்தியன்.காம் தி. நகர் புத்தகக் கடை, சென்னை புத்தகக் கண்காட்சி 2006-இல் கடை எண் S-59 (Naveena Virutcham Stall) - ஆகிய இடங்களில் பத்து சதவீதச் சிறப்பு தள்ளுபடியில் கிடைக்கும்.

13 comments:

Boston Bala said...

Vaazhthukkal

சன்னாசி said...
This comment has been removed by a blog administrator.
சன்னாசி said...
This comment has been removed by a blog administrator.
Arun Vaidyanathan said...

I wish AnyIndian success in all its future endevours as a well wisher! The design of books looks really nice and beautiful..I am sure the contents will be also nice and different. Wising again a great success!

Jayaprakash Sampath said...

அமோகமான வாழ்த்துக்கள் பிகேஎஸ்...

Jayaprakash Sampath said...

அமோகமான வாழ்த்துக்கள் பிகேஎஸ்...

Srikanth Meenakshi said...

PKS,

Congratulations on your book first! The cover looks good, and I am eager to read it...Great intro from Jayakantan!

//அத்துடன் இணைய எழுத்துக்களில் சுஜாதா மற்றும் இரா.முருகனிடம் இருந்து பெற்றுக் கொண்ட செயற்கையான விளையாட்டுப் பாவனையைப் பலர் கையாண்டு உண்மையான அனுபவங்களைக் கூட சாரமிழக்கச் செய்துவிடுகிறார்கள்.//

இந்த flank attack தேவையா? :-)

Good wishes for AnyIndian's success in the fair.

Srikanth

PKS said...

Srikanth,

I asked for foreword from Jeyamohan. So, its my duty to publish his views. In fact he has also commented about my views on Vallikannan in his foreword. It actually criticises Vallikannan. I dont agree with JM's views on Vallikannan but he has right to record it in a book for which he writes foreword (if that books contains appreciative piece on someone he criticises.) So, Jeyamohan has a right to say his views. If we dont agree, we all can debate it. What you and I may not do, others may have reasons to do it. Read his foreword fully when the book is available and I would appreciate if you can write a reply for it, quoting your views :-) I will publish it in my blog too.

Sannasi wrote a comment yesterday and I guess he removed it later. I dont know why he removed it. I will wait for everyone to read the book and write reviews before opening my mouth :-)

I dont understand Era.Mu's comment either :-) The way I have taken JM's that sentence is "people get inspired by Sujatha and Era.Mu and try to imitate them. Thats how every new writer (imitating their favorite writer) starts but one has to sooner find his own style in writing." I dont think of it as an attack but as a candid observation. However, JM is the right person to answer such questions :-)

Probably, reading the foreword fully would help to understand the context better.

Thanks and regards, PK Sivakumar

Jayaprakash Sampath said...

ஜெயமோகன் அப்படி நினைத்தால், அவ்வாறு சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அவர் கருத்துக்களிலே எனக்கு உடன்பாடு கிடையாது. எழுத்திலே சாரம், சாரமின்மைன்னு முடிவு செய்யறது, படிக்கிற நேரத்தையும், மூடையும் பொறுத்த விஷயம். இன்னிக்கி காலையிலே ஒரு கதையை படிச்சிட்டு, இது தேறும், தேறாதுன்னு சொல்ல முடியுமா? காலம் தான் முடிவு செய்யணும்..

பிகேஎஸ் : சன்னாசி, she இல்லை , he தான்னு எப்படி முடிவு செஞ்சீங்க?:-)
மத்தளராயன்னு பின்னூட்டம் அளித்தது அவரில்லைன்னு நினைக்கிறேன்.

PKS said...

Prakash, Thanks for your views and clarifying its not a comment by real Mathalaraayan (Era.Mu.). We all have to do something to prevent people writing in others' names. :-((

Sannasi, "he" enru avare enaku sonnaar enru poi sollatumaa ;-)

Anbudan, PK Sivakumar

Mey said...

Congratulations and expect more books from you

எம்.கே.குமார் said...

சாதனைகள் தொடர வாழ்த்துகள்.

எம்.கே.

எம்.கே.குமார் said...

சாதனைகள் தொடர வாழ்த்துகள்.

எம்.கே.