Tuesday, January 10, 2006

மன்னிப்பு கேட்கிறோம்...

எனிஇந்தியன் பதிப்பகத்தின் 4 புத்தகங்களும் புத்தகக் கண்காட்சி தொடங்கிய ஜனவரி 6-ஆம் தேதியே வந்திருக்க வேண்டியன. எங்கள் தரப்பு வேலைகள், புத்தக வடிவமைப்பு வேலைகள், அட்டைப்பட வடிவமைப்பு ஆகியன திட்டமிட்டபடி முடிக்கப்பட்டு, புத்தகங்கள் அச்சகத்துக்கு பலநாட்கள் முன்னரே அனுப்பப்பட்டிருந்தன. ஜனவரி 6 அன்று புத்தகங்கள் நிச்சயம் கைக்குக் கிடைத்துவிடும் என்று திரும்பத் திரும்பக் கேட்டு அறிந்த பின்னரே, புத்தகக் கண்காட்சியின் ஆரம்ப நாளன்றே எங்கள் புத்தகங்கள் கிடைக்கும் என்பதை வாடிக்கையாளர்களுக்கும், நண்பர்களுக்கும், அறிவியல் புனைகதைகளின் ஆசிரியர்களுக்கும் அறிவித்தோம். எதையும் மிகவும் திட்டமிட்டும், நேரத்துக்குள்ளும் செய்து பழகிப்போன எங்களுக்கு ஆறாம் தேதியன்று புத்தகங்கள் எதிர்பார்த்தபடி கைக்கு வராதது மிகுந்த ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

விசாரித்துப் பார்த்ததில் - நிறைய பதிப்பகங்களின் பல புத்தகங்கள் இப்படிக் குறித்த நேரத்தில் வெளிவராமல் அச்சகங்களில் காத்துக் கொண்டிருக்கின்றன என்ற விவரம் தெரிய வந்தது. பல பதிப்பகங்களின் சில புத்தகங்கள் வெளிவந்து சில வெளிவராமலும் இருக்கிற நிலையும் கண்டோம். இப்படிப் பலருக்குப் புத்தகங்களைக் குறித்த நேரத்தில் அச்சடித்துத் தராததற்கு அச்சகங்களுக்கு என்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதினுள் நான் இப்போது நுழைய விரும்பவில்லை. இன்றுவரை அப்படி வெளிவராமல் பல புத்தகங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன என்று நண்பர்கள் சொல்கிறார்கள். இவையெல்லாம் கேட்பதற்கு மிகவும் வருத்தம் அளிக்கின்ற செய்திகள். பதிப்புத் துறையில் இத்தகைய தாமதங்கள் சகஜம் என்ற நிலை காணப்படுவதும் எங்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கிறது.

பதிப்புத் துறையில் அடியெடுத்து வைக்கும் எங்களுக்கு இந்த அனுபவம் பல பாடங்களையும், எச்சரிக்கைகளையும் கற்றுத் தந்திருக்கிறது. இனிவரும் காலங்களில் இத்தகைய தாமதங்கள் நிகழாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்திருக்கிறோம்.

நாங்கள் எதிர்பார்க்காவண்ணம் நேர்ந்துவிட்ட இந்தத் தாமதத்துக்கு எனிஇந்தியன் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பாக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

கோபால் ராஜாராம் தொகுத்த எதிர்காலம் என்று ஒன்று என்ற அறிவியல் புனைகதைத் தொகுப்பும், பாரி பூபாலனின் ஓவியத்தின் குறுக்கே கோடுகள் புத்தகமும் எங்களின் தொடர்ந்த முயற்சிகளுக்குப் பிறகு இன்று கைக்குக் கிடைத்தன. மீதி இரண்டு புத்தகங்களும் நாளைக்குக் கைக்குக் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். நம்புவோமாக. மீதி புத்தகங்கள் கிடைத்தவுடன் அத்தகவலையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த இரண்டு புத்தகங்களும் கைக்குக் கிடைத்த விஷயத்தை எங்கள் வாடிக்கையாளர்கள், நண்பர்கள், சென்னையில் இருக்கிற அறிவியல் புனைகதைத் தொகுப்பின் கதாசிரியர்கள் ஆகியோருக்கு - அவர்கள் தொலைபேசி எண்ணை எங்களுக்குத் தந்துவிட்டுச் சென்றிருந்தால் - ஹரன்பிரசன்னா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தி விட்டார். அமெரிக்காவிலிருந்து விசாரித்துவருகிற நண்பர்களுக்கு நான் தொலைபேசியில் தகவல் சொல்லிவிட்டேன். இணையம் மூலம் இந்தப் புத்தகங்களை ஏற்கனவே ஆர்டர் செய்திருக்கிற நண்பர்களுக்கு இன்னும் சில தினங்களில் அனைத்துப் புத்தகங்களும் அனுப்பி வைக்கப்பட்டு விடும்.

எங்கள் நண்பர்கள், வாடிக்கையாளர்கள், அறிவியல் புனைகதைகளின் ஆசிரியர்கள் ஆகியோர் இதுவரை மிகவும் பொறுமையாகப் புத்தகங்களுக்குக் காத்திருந்தார்கள். எங்களைப் புரிந்துகொண்டு ஒத்துழைத்த அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

நாங்கள் எதிர்பாராதவண்ணம் ஏற்பட்டுவிட்ட இந்தத் தாமதத்திற்கான முழுப்பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக் கொண்டு மீண்டுமொருமுறை எங்கள் வாடிக்கையாளர்கள், நண்பர்கள் அனைவரிடமும் மனமார்ந்த மன்னிப்புகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்
(எனிஇந்தியன் பதிப்பக பங்குதாரர்கள், ஊழியர்கள் சார்பாக)
பி.கே. சிவகுமார்

3 comments:

Jayaprakash Sampath said...

இந்த பெரிய தொல்லையான விஷயம். இந்த ஜனவரி மாசத்தில் திருவல்லிக்கேணியில் பலர் பைத்தியம் புடித்து சுற்றுவார்கள் என்பார்கள். நான் நேரிலேயே பார்த்தேன். ( நான் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அச்சடித்து வெளியிடும், பிரசுரமும் இங்கே மாட்டிக் கொண்டு நான் பட்ட பேஜார் இருக்கே).. இதுக்கு ஒரே வழி, backward integration தான்.. நாலைந்து பதிப்பாளர் ஒன்றாகச் சேர்ந்து, ஒரு அச்சகத்தை நிறுவி, தங்கள் புத்தகங்களை அச்சிட்டுகொண்டு, மற்றவர்களுக்கும் அச்சடித்துக் கொடுக்கலாம். ( எனக்கு அச்சகம் வைக்க எத்தனை காசாகும், என்றல்லாம் தெரியாது.. சும்மா தோன்றியது.. சொன்னேன்)

PKS said...

Comment from Ki. Seerlan. Since he had problems posting it in blogspot, I am posting it for him. - PK Sivakumar.

Ki. Seeralan:
சிவக்குமார், என்ன இப்படி வருத்தப்படுறீங்க. சின்னதாக ஒரு வருத்தம் தெரிவிச்சா போதாதா? மன்னிப்பு பெரிய வார்த்தை, விடுங்க. சிகரம் ஏறும் போது சிராய்ப்புகள் இருக்கத்தான் செய்யும். எல்லாம் அனுபவம்தானே. இது நீங்கள் மகிழ வேண்டிய நேரம். இந்த முயற்சி எடுத்துக்கொண்டதற்காகவே உங்களை பாராட்ட வேண்டும். வாழ்த்துக்கள். புத்தகத் திருவிழாவில் பிரசன்னாவை பார்த்தேன், மகிழ்ச்சி. அவரும் தொலைபேசியில் தெரிவித்தார், குழந்தை பிறந்துவிட்டதாக. தங்கள் முயற்சி மேலும் தொடர, வாழ்த்துக்கள்.
அன்புடன் கி. சீராளன்.

Arun Vaidyanathan said...

அன்புள்ள பி.கே.எஸ்,
புத்தகம் அருமையாக வந்திருக்கிறது என்று எனது சகோதரி சொன்னாள். ஏழாவது கதை, அறுபத்தைந்தாம் பக்கத்தில் எனது பிம்ப உயிர்கள் வந்திருப்பதாகவும், ஆசிரியர்களைப் பற்றிய முன்னுரை பதினேழாம்பக்கத்தில் வந்துள்ளதாகவும்...மகிழ்ச்சியாகக் கூறினாள். அறிவியல் புனைக்கதைத் தொகுப்பை அட்டகாசமாகக் கொண்டு வந்திருக்கிறீர்கள்...சந்தோஷப்பட வேண்டிய நேரமிது. வாழ்த்துக்கள்!

- அன்புடன், அருண் வைத்யநாதன்