Saturday, March 18, 2006

கனிவு - சுகுமாரன்

தமிழினி வெளியிட்ட சுகுமாரனின் சிலைகளின் காலம் என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட கவிதை இது. சுகுமாரன் 1957-இல் கோவையில் பிறந்தார். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். பத்திரிகையாளர். தொலைக்காட்சி செய்தி ஆசிரியர். கோடைக்கால குறிப்புகள், சிலைகளின் காலம், பயணியின் சங்கீதங்கள், வெட்டவெளி வார்த்தைகள் (கன்னட வசன கவிதைகள்), பாப்லோ நெருதா கவிதைகள் (100 கவிதைகளின் மொழிபெயர்ப்பு), கவிதையின் திசைகள் (8 உலகக் கவிஞர்களின் 40 கவிதைகள்), மார்க்சிய அழகியல் - ஒரு முன்னுரை (விமர்சன நூல்), திசைகளும் தடங்களும் (கட்டுரைத் தொகுதி), இதுதான் என் பெயர் (சக்கரியாவின் மலையாள நாவலின் மொழிபெயர்ப்பு) உள்ளிட்ட புத்தகங்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய திசைகளும் தடங்களும் கட்டுரைத் தொகுதிக்கு நான் ஏற்கனவே வாசக அனுபவம் எழுதியிருக்கிறேன்.

கனிவு
- சுகுமாரன்

நாள்கணக்காய்
பக்குவப்படாமல் வெம்பும் கேள்வி
'உறவில் கனிவது எப்படி?'

சொற்கள் புகைந்த மனதில்
வாழையானேன்
மிஞ்சியது சருமம்.

ஸ்பரிசங்களின் தவிட்டுச் சூட்டில்
மாங்காயானேன்
எஞ்சியது கொட்டை.

உடற்காயத்தில் சுண்ணாம்புத் தகிக்கப்
பலாவானேன்
மீந்தது பிசின்

இப்படிப் பழுப்பது
இயல்பல்ல

எனவே
கனியத் தொடங்குகிறேன் இப்போது
ஓட்டுறவு இல்லாத புளியம்பழமாக.

நன்றி: சுகுமாரன், தமிழினி.

No comments: