Monday, March 13, 2006

சுந்தர ராமசாமி - பிரமிள் - ரவி ஸ்ரீனிவாஸ்

ரவி ஸ்ரீனிவாஸ் தன் வலைப்பதிவில் சவால் என்கிற சுந்தர ராமசாமியின் கவிதையை நான் எடுத்துப் போட்டது பற்றி எழுதியிருக்கிறார். அலுவலகத்திலிருந்து அவசரமாக அதற்கு நான் ஆங்கிலத்தில் எழுதிய பின்னூட்டங்களை அந்தப் பதிவிலேயே காணலாம்.

"சுந்தர ராமசாமியின் சவால் என்ற இந்தக் கவிதை பிரமிளுக்குப் பதிலாக எழுதப்பட்டது என்று ந.முத்துசாமில் சுந்தர ராமசாமி அஞ்சலிக் குறிப்பொன்றில் எழுதியிருந்தார்." என்று என் பதிவில் எழுதியிருந்தேன். என் வாசகம் ந.முத்துசாமியை மேற்கோள் காட்டித் தொடங்குகிறது. ரவி ஸ்ரீனிவாஸ் ந.முத்துசாமி என்ன சொன்னார் என்பதையும் படிக்கவில்லை. அதனால், "ந. முத்துசாமி இதை மாற்றிச் சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகம் வருகிறது" என்கிறார் ரவி. அந்தச் சந்தேகம் வருகிற ரவி, முதலில் முத்துசாமி என்ன சொன்னார் என்பதை அறிந்து கொள்ள முயற்சித்திருக்க வேண்டும். "பி.கே. சிவகுமார் சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்து கொள்ளாமல் எழுதியிருக்கிறார் குறைந்த பட்சம் அந்தக் கவிதை எப்போது எழுதப்பட்டது என்பதையாவது அவர் யோசித்திருக்க வேண்டும். ந. முத்துசாமி இரங்கல் குறிப்பில் என்ன எழுதினார், ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது" என்று "புராணத்தை" ஆரம்பித்துவிட்டார்.

முத்துசாமி என்ன சொன்னார் என்பதைப் படிக்காமலேயே, எனக்கு அடிப்படை தெரியவில்லை என்று குற்றம் சாட்டி (முத்துசாமிக்கு அடிப்படை தெரியவில்லை என்று சொல்லியிருந்தாலாவது ரவியின் தைரியத்தையும் நேர்மையையும் பாராட்டலாம்!) பதிவு எழுதுகிற ரவியின் குற்றத்தைவிட படித்ததைப் பற்றிச் சொல்லி எழுதுகிற என் குற்றம் கடுமையானது என்று ரவி சொல்கிறார் என்று எடுத்துக் கொள்கிறேன்.

அப்புறம், ஜெயமோகனின் சு.ரா. பற்றியப் புத்தகத்தில் பிரமிள் பற்றி இருப்பதை நேரம் கிடைக்கும்போது எடுத்துப் போடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அந்தப் புத்தகத்தை நான் முழுமையாகப் படித்திருக்கிறேன். புத்தகத்தைப் படித்த உடனேயே அதில் இருக்கிற பிரமிள் பற்றிய பகுதி, காந்தி பற்றிய பகுதி என்று பல பகுதிகளை பாஸ்டன் பாலாஜி உள்ளிட்டப் பல நண்பர்களுக்குத் தொலைபேசியிலும் வாசித்துக் காட்டியிருக்கிறேன். ஆனால், அந்தப் புத்தகத்தில் பிரமிளும் சு.ரா.வும் நண்பர்களாக இருந்தது பின்னர் பிரமிள் சு.ரா.வுக்கு என்னவெல்லாம் செய்தார் என்பது உள்ளிட்ட பல விவரங்கள் உள்ளன. எந்த இடத்திலும் நான் என் பதிவில் சு.ரா.வும் பிரமிளும் விரோதிகளாக இருந்தார்கள் என்று சொல்லவில்லை. அதைப் பின்னர் எடுத்துப் போடுகிறேன் என்று மட்டுமே சொன்னேன். உடனே ரவி தன் கதையை ஆரம்பிக்கிறார். "சு.ரா.வும் பிரமிளும் எப்போதுமே விரோதிகளாக இருந்ததில்லை என்பது தமிழ்ச் சிற்றிதழ் இலக்கிய வரலாற்றையும், சு.ரா. எழுதியவற்றை வாசித்தவர்களுக்கும் தெரியும்." அடடா, அப்படியா, ந. முத்துசாமியும் நானும்தான் தவறு செய்துவிட்டோம் (பிரமிளும் சுராவும் விரோதிகள் என்று முத்துசாமியோ நானோ சொல்லாவிட்டாலும்கூட) போலிருக்கிறது என்று நான் நிஜமாகவே இந்த வரிகளைப் படித்துவிட்டு வருந்தினேன்.

அடுத்த பத்தியிலேயே, ரவி அடிக்கிறார் ஒரு அந்தர் பல்டி. என்ன சொல்கிறார் பாருங்கள் ரவி. "பின்னர் சு.ரா.விற்கும் பிரமிளுக்கும் இருந்த நட்பு முறிது போனது. ஜே.ஜே. சில குறிப்புகளை மிகக் கடுமையாகப் பிரமீள் விமர்சித்தார். அது போல வெ.சா.வின் எழுத்துகளையும் கடுமையாகச் சாடினார்..." என்று எழுதிக் கொண்டு போகிறார். என்ன எழுதுகிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் முன்னுக்குப் பின்னாக எழுதுவது ரவியின் ஸ்டைலோ?

அடுத்து ரவி எழுதுவதுதான் ஜோக். உலகிற்கு உண்மைகளை உபதேசிக்கும் அவசரத்திலும், உதாரணம் காட்ட வேண்டிய தேவைக்காகவும் சிலவற்றை நானாக அனுமானித்துக் கொண்டேன் என்கிறார். கவிதையில் ஆதாரமே இல்லை என்கிறார். இந்தக் கவிதையில் ஆதாரம் இல்லை என்கிற வரி இருக்கிறதே அது சூப்பர் ஜோக். இனிமேல் ஒரு கவிதையோ கதையோ பிறந்ததற்கான நதிமூலத்தையும் ரிஷிமூலத்தையும் நாம் அந்தப் படைப்பிலேயே காணவில்லை என்றால் அது எப்படிப் பிறந்தது என்று யார் சொன்னாலும் நம்பக்கூடாது என்பது ரவியின் லாஜிக்கோ? பலே பலே.

என்னுடைய பதிவில் நான் எழுதியது. "தமிழில் மட்டுமல்ல பிற மொழிகளிலும்கூட தனிப்பட்ட சண்டைகளும் சச்சரவுகளும் பொருட்டுப் பிறக்கிற எதிர்வினையான படைப்புகள் மிகவும் இலக்கியத்தரமானதாக இருக்க முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இதுவும் ஓர் உதாரணம்." ஏற்கனவே (கடந்த காலத்தில்) உதாரணங்களிலோ புள்ளிவிவரங்களிலோ பிழை இருக்கிறதென்பதற்காகச் சொல்ல வரும் கருத்தைப் புறக்கணிக்கக் கூடாது என்று என் பதிவிலேயே எழுதியிருக்கிறேன். எனவே, இந்த உதாரணம் தவறென்றாலும், இதைப் போன்ற வேறு உதாரணங்களைத் தர முடியும். இந்த உதாரணத்தை மட்டுமே காட்ட வேண்டிய தேவை எனக்கில்லை. ரவிக்குத்தான் படிக்காத விஷயத்தைப் பற்றிக் கூட எனக்கு எதிராக அவசரப்பட்டு வாயை விட்டு மாட்டிக் கொள்கிற தேவை இருக்கிறது :-)

இப்போது என் பரிதாப நிலையைப் பார்த்தீர்களா? :-) ரவியைப் போன்றவர்கள் ந. முத்துசாமி என்ன சொன்னார் என்பதைப் படிக்காமலேயே அதை மேற்கோள் காட்டியதற்காக என்னைப் போட்டுச் சாத்துவார்கள். அது அறிவுஜீவித்தனம். திராவிட அறிவுஜீவித்தனமா அல்லது இடதுசாரி அறிவுஜீவித்தனமா அல்லது ரவியின் அப்போதைய தேவைகளுக்கேற்ப இரண்டும் கலந்த கலப்படமா என்று அவரிடம்தான் கேட்க வேண்டும். ரவி படிக்காமலேயே பதில் எழுதினாலும் (அது அவருக்குப் பழகிவிட்டது!), ரவியின் பதிவைப் பொருட்படுத்திப் பதில் எழுதுவதற்குக் காரணம், அவர் மேற்கோள் காட்டுகிற புத்தகம். ரவியின் மீது வைக்காத நம்பிக்கையை நான் புத்தகங்களின்மீது வைக்கிறேன். அவர் சுட்டி சொல்லிய பல நல்ல கட்டுரைகளை அவர் வலைப்பதிவின் மூலம் படித்திருக்கிறேன். பயன் பெற்றிருக்கிறேன். அந்தக் காரணத்தினாலேயே, வானமற்ற வெளி என்ற பிரமிளின் கட்டுரைத் தொகுதியை ரவி மேற்கோள் காட்டியதும், ந. முத்துசாமி என்ன சொன்னார் என்பதைத் தேடியெடுக்க முயற்சித்தேன். ஜனவரி உயிர்மையை நண்பர்கள் யாரோ எடுத்துப் போயிருக்க, நண்பர் ஒருவர் அந்தப் பக்கத்தை scan செய்து அனுப்பி வைத்து உதவினார்.

ந. முத்துசாமி எழுதிய கட்டுரை அல்ல அது. உயிர்மை ஏற்பாடு செய்திருந்த சுந்தர ராமசாமியின் நினைவரங்கில் ந. முத்துசாமி பேசிய பேச்சின் சுருக்கம் ஜனவரி - 2006 உயிர்மையில் வெளியாகியிருக்கிறது. அதில் ந. முத்துசாமி சொன்னது பின்வருமாறு (முழுமையாகப் படிக்க உயிர்மையைப் பாருங்கள். தொடர்புடைய பத்திகள் மட்டுமே இங்கே. தருமு சிவராமு என்பது பிரமிள்தான்.)

"சவால் என்ற கவிதையை அதில் குறிப்பிட வேண்டும். சிவராமு சுந்தர ராமசாமியோட வீட்டில் எல்லாம் தங்கியிருக்காரு. சுந்தர ராமசாமியைக் குறை சொல்லிட்டு வெளியே வரது பலபேருக்கு நடந்திருக்கு. அதேபோல சுந்தர ராமசாமியைக் குறை சொல்லிட்டுத்தான் சிவராமுவும் வெளியே வர்றார். அதற்கப்புறம்தான் சவால் என்ற அந்தக் கவிதை எழுதப்படுது. அது சிவராமுவுக்கான பதில்னு நான் சொன்னேன். ஓய்ந்தேன் என மகிழாதே / உறக்கமல்ல தியானம் / பின்வாங்கல் அல்ல பதுங்கல். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இந்தச் சவால் இருக்கு. இப்படிப் பலமுறை படிச்சு படிச்சு எங்களோட பிரக்ஞையில் நின்ற இந்தச் சவால் கவிதையைக் கூத்துப் பட்டறையின் தேசிய அளவிலான presentation-க்கு எடுத்துக் கொள்ளலாம் என்று பசுபதிகிட்டே சொன்னேன். முடிவாக ரவிவர்மா இந்தக் கவிதையைச் சொல்லி முடிப்பார். இந்தியா முழுவதுமிருந்து வந்திருந்த அத்தனை நாடகக் கலைஞர்களும் stunned. இதுக்கு மேல வேற எதுவும் எடுபடாதுன்னு எல்லாரும் சொன்னாங்க. அவரோட கவிதை அப்படி ஒரு consciousness-க்குள்ள ஊடுருவி, அதுக்குள்ள தங்கியிருக்க முடியும் என்பதைக் காட்டுவதற்காக இதைச் சொல்றேன்"

எனவே, என் ஞாபகத்தில் இருந்து நான் எழுதியதில் நான் செய்தது ந.முத்துசாமியின் பேச்சை எழுத்து என்று சொன்னது மட்டுமே. ஒருநாளைக்குப் பலவற்றைப் படிக்கிறேன். பல நேரங்களில் படித்த விஷயம் நினைவுக்கு இருக்கிறதே தவிர எங்கு படித்தேன் என்று நினைவுக்கு இருப்பதில்லை. இந்த விஷயத்திலும் அப்படித்தான். ஆனாலும், பேச்சை எழுத்தில் படித்தபோதும், ந. முத்துசாமி எழுதிய அஞ்சலிக் குறிப்பு என்று சொன்னதற்கு வருந்துகிறேன். மற்றபடிக்கு நான் ந.முத்துசாமியை மேற்கோள் காட்டிச் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ந. முத்துசாமி சொல்கிறார் அது பிரமிளுக்குப் பதிலாக எழுதப்பட்டதாக அவர் சொன்னதாக. ஜனவரிபோய் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. பிப்ரவரி, மார்ச் என்று இரண்டு உயிர்மை இதழ்கள் வந்துவிட்டன. இந்த இரண்டு உயிர்மை இதழ்களிலும் ந.முத்துசாமி சொன்னதுபோல அந்தக் கவிதை பிரமிளுக்கான பதில் இல்லை என்று சு.ரா.வை நன்கறிந்தவர்களோ, பிரமிளை நன்கறிந்தவர்களோ எதுவும் எழுதியதாக நினைவில்லை. (மார்ச் உயிர்மை இதழில் புதிய தொடர் ஆரம்பித்திருக்கிற சுரேஷ்குமார இந்திரஜித் பிரமிள் பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனாலும் அவர்கூட இதைப் பற்றி எதுவும் எழுதவில்லை.)

இத்தகைய சூழலில் ரவி ஸ்ரீனிவாஸ் என்ன செய்ய வேண்டும். என்னை நோவதை விட்டுவிட்டு, அது பிரமிளுக்கான பதில் இல்லை என்று நிச்சயம் நம்புவாரானால், ஏப்ரல் உயிர்மை இதழில் ந.முத்துசாமி சொன்னது தவறு என்று ரவி எழுத வேண்டும். எழுதுவாரா? என்னிடம் பயன்படுத்திய அதே வார்த்தைகளை, "ந. முத்துசாமி அடிப்படை உண்மைகளைத் தெரியாமல் பேசுகிறார். கவிதை எப்போது எழுதப்பட்டது என்பதை ந.முத்துசாமி யோசித்திருக்க வேண்டும். சு.ரா.வைப் பாராட்டிப் பேச வேண்டிய அவசியத்திலும், சு.ரா. கவிதைக்கு உதாரணம் தர வேண்டிய தேவையிலும் அவராகவே சிலவற்றை அனுமானித்துக் கொண்டு, கவிதையில் அதற்கான எந்த ஆதாரமும் இல்லாதபோது சில கருத்துகளை முன்வைத்திருக்கிறார் ந. முத்துசாமி" என்று எழுதுகிற தைரியம் ரவிக்கு இருக்குமானால் என் முன்கூட்டிய பாராட்டுகள்! உண்மைகள் வெளிவர அது உதவும். இலக்கிய இதழான உயிர்மையில் வந்த செய்தியை மேற்கோள் காட்டியே நான் எழுதினேன். அதுவும் முத்துசாமி பேசிய மேடையில் இருந்தவர்கள் தமிழ் இலக்கியத்தில் பிரமிளையும் சு.ரா.வையும் நன்கறிந்தவர்கள். ஒரு பத்திரிகையில் ஒரு செய்தி வரும்போது அதை நம்பி மேற்கோள் காட்டி எழுதுவதை ரவி உட்படப் பலரும் செய்து வருகிறார்கள். இப்போதெல்லாம், ரவி படிக்காமலேயே கூட ஒருவிஷயத்தைப் பற்றி எழுதுவார் என்பது வெட்ட வெளிச்சம்தான். அந்தச் செய்தி பிற்பாடு தவறென்றால், அதற்காக வலைப்பதிவில் யாரும் வருத்தம் தெரிவிப்பதில்லை. உதாரணமாக, ஜெயகாந்தனை மு.கருணாநிதி பார்க்க விரும்பியதாகச் சொல்லப்பட்ட செய்தியை ஜீனியர் விகடன் கழுகுவில் கிசுகிசுவாக வெளிவந்ததை வைத்து இணையத்தில் ஜெயகாந்தன் கருணாநிதியை அவமானப்படுத்திவிட்டார் என்று பலரும் பொங்கி எழுந்தார்கள். என்ன நடந்தது என்பதை ஜெயகாந்தன் விளக்குகிற பேச்சின் வீடியோவை நான் இணையத்தில் இட்டேன். கழுகு சொன்னது தவறு என்று நிரூபணமாகியது. அதை வைத்துக் குத்தாட்டம் போட்ட யாரும் வருத்தம் தெரிவிக்கவில்லை. அப்படி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவும் முடியாது. ஏனென்றால், அப்புறம் யாரும் பத்திரிகைச் செய்திகளை வைத்து எதுவுமே எழுத முடியாது. குறிப்பிட்ட கட்டுரைகளை அல்லது புத்தகங்களைப் படிக்காமலேயே ரவி கருத்து எழுதுவதுபோலத்தான் எழுத வேண்டும். :-) ஜோக்ஸ் அபார்ட், செய்தி வெளிவருகிற பத்திரிகை, சொல்கிற நபர் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒரு செய்தியின் நம்பகத்தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த இடத்தில் உயிர்மை மீதும் ந. முத்துசாமி மீதும் இருக்கிற நம்பிக்கையின் அடிப்படையில் செய்தி உண்மையாக இருக்கலாம் என்று நான் நம்பினேன். இன்றைக்குப் பிரமிளும் இல்லை, சு.ரா.வும் இல்லை, சு.ரா.வுக்குப் பிரமிள் செய்ததை எல்லாம் எழுதுவது இறந்தவர்கள் குறித்துப் பேசுவது என்ற தயக்கம் பலருக்கு இருக்கலாம். லயம் பிரசுரங்கள் சு.ரா.வுக்கு எதிராகத் தாங்கிவந்தக் கருத்துகள் பற்றி ஜெயமோகன் நினைவின் நதியில் நூலில் கோடிட்டுக் காட்டுகிறார். ஆதலால், பிரமிள் நண்பர்கள் ஒருவாறு சொல்கிறார்கள், ந. முத்துசாமி போன்றவர்கள் வேறாகச் சொல்கிறார்கள். என்னைப் போன்ற அந்தக் காலகட்டம் அறியாத வாசகர்கள் எதை நம்புவது? பிரமிள்மீது அவதூறு சொல்வது என் நோக்கம் இல்லை. ஓர் எழுத்தாளரின் தனிப்பட்ட குணாதிசயங்கள், வாழ்க்கை முறை ஆகியன எப்படி இருந்தாலும், அவரின் படைப்பு என்னுள் ஏற்படுத்துகிற தாக்கத்தின அடிப்படையில் மட்டுமே நான் அவர் படைப்பை மதிப்பிடுவேன். அதனால், இந்த விஷயத்தில் உண்மை ரவி மூலம் வெளிவந்தால் மகிழ்ச்சியும் நன்றியும்.

கொசுறாகத் தொடர்பு இல்லாத இன்னொரு விஷயம், திலகவதி புத்தக வெளியீட்டு விழாவில் சுஜாதா என்ன சொன்னார் என்பது மார்ச் 2006 இதழில் கட்டுரையாக வெளிவந்துள்ளது. சுஜாதா என்ன சொன்னார் என்பது தெரியாமலேயே கட்டுரை எழுதிய ரவி உள்ளிட்ட பலரும் இப்போதாவது அதைப் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.

ரவி, இனிமேல் நீங்கள் படிக்காமல் எதைப் பற்றியாவது எதிர்வினை எழுதினால் என் நேரத்தை வீணடித்துப் பதில் சொல்கிற விருப்பம் இல்லை. இதுதான் கடைசி.

3 comments:

PKS said...

மேலதிகத் தகவல் ஒன்று:

இன்று ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். சுந்தர ராமசாமி பிரமிள் குறித்து எழுதிய நினைவோடை நூல் காலச்சுவடு வெளியீடாக வந்திருப்பதை அவர் சொன்னார். அதில் பிரமிள் பற்றிய தன் கருத்துகளையும் விமர்சனங்களையும் சுந்தர ராமசாமி மிகக் கடுமையாக முன்வைத்திருப்பதாகவும் சொன்னார். நினைவின் நதியில் புத்தகத்தில் இல்லாத பல விஷயங்களும் அதில் இருப்பதாகவும் சொன்னார். சு.ரா. எழுதிய அந்தப் புத்தகத்தை விரைவில் வாங்கிப் படிக்க இருக்கிறேன். சு.ரா.வுக்கும் பிரமிளுக்கும் விரோதமே இருந்ததில்லை என்று எழுதிய ரவி அந்தப் புத்தகத்தைப் படித்தாரா என்று தெரியவில்லை. அதைப் படிக்கிற ஆர்வத்தைத் தூண்டிவிட்டிருக்கிற நண்பருக்கு நன்றிகள்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

ROSAVASANTH said...

//சு.ரா.வுக்கும் பிரமிளுக்கும் விரோதமே இருந்ததில்லை என்று எழுதிய ரவி அந்தப் புத்தகத்தைப் படித்தாரா என்று தெரியவில்லை.//

I think you misread what Ravi wrote. I do not think he says there was no enemity between them all the time(which is clearly absurd and everyone knows about that). I think he says 'SuRa and Pramil were not always enemies'. This means they are friends for sometime(and enemies for the rest of the time).

I do not have any commenst on the rest of the issue, but still enjoyed reading. I hope no one would ask me why I do not have commnets on the rest of the issue. Thanks!

PKS said...

Roza,

Thanks for your comment. I have also never said that there is any enemity between them. But Ravi However, Ravi started like that in first para in his post saying they were not enemies. And in next para, he says they had differences. I have not missed what Ravi wrote. I am just pulling him for writing authoritatively without reading the concerned pieces :-)

People who knew Pramil well say that Pramil started as friends with all and ended up fighting with most of them. Again, this wont prevent me in appreciating Pramil for whatever good he has written (in my opinion).

Now, I will wait to read Ravi in April Uyirmmai on this issue. I have done some research and talked to some people on this. Lets see what Ravi comes back with his research in Uyirmmai or in public :-)

Thanks and regards, PK Sivakumar