(இந்த வார திண்ணையில் அட்லாண்டிக்குக்கு அப்பால் புத்தகம் பற்றிய தன் கருத்துகளைப் படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம் என்ற தலைப்பில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதியிருக்கிறார். அவருக்கும் திண்ணைக்கும் நன்றி சொல்லி, அக்கட்டுரையை இங்கே மீள்பதிவு செய்கிறேன். - பி.கே. சிவகுமார்)
'தெருவெல்லாம் தமிழ் முழக்கம்' செய்யச் சொன்னான் பாரதி. இன்று கடல் தாண்டி, விண்வெளி தாண்டி, மின் தமிழ், இணயத்திலும், வலைப் பூவிலும் ஒளிர்கின்றது. அமெரிக்காவை யார் கண்டுபிடித்தார்கள் என்ற சர்ச்சை இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் நான் அமெர்க்காவைக் கண்டுபிடிக்காவிட்டாலும், அமெரிக்காவில், இணையத்திலும் வலைப்பூக்களிலும் தமிழ் செழுமையாக வாழ்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது என் பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.
பி.கே சிவகுமார் தாம் திண்ணை.காமிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருபவர். அவர் அவ்வாறு எழுதிய கட்டுரைகள் 'அட்லாண்டிக்குக்கு அப்பால்' என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. 'எனிஇந்தியன்.காம்' என்ற அமெரிக்கப் பதிப்பகத்தாரின் முதல் பிரசுரமாக-இது சிவகுமாரின் முதல்நூல்கூட- வெளிவந்திருக்கிறது. வாசக அநுபவம், இலக்கியம், விவாதம், கவிதை, சமூகம், அமெரிக்கா என்ற பல்வேறு தலைப்புக்களில் தொகுக்கப் பட்டிருக்கும் நூல்.
'சமையலும் எழுத்தும்' என்ற கட்டுரையில் சிவகுமார் எளிய உணவு சமைப்பதையும் இலக்கியம் சமைப்பதையும் ஒப்பிடுகிறார். எளிய உணவு சமைப்பது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு கடினமானது எளிய நடையில் எழுதுவதும் என்கிறார். இது முற்றிலும் உண்மை. இதயத்திலே ஒளி இருந்தால்தான் சொல்லிலும் தெளிவு இருக்கும். சாதாரணமான கருத்துக்களைச் சிக்கலான நடையில் எழுதிப் படிக்கின்றவர்களைக் குழப்புவதுதான் உயர்ந்த இலக்கியம் என்று கருதும் பல அறிவுஜீவி எழுத்தாளர்கள் இதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். சிவகுமார் சிந்தனையில் தெளிவு இருக்கின்றது. எழுத்தில் எளிமை இருக்கின்றது. இதுவே அவர் இலக்கிய பலம். போலந்து அறிவு ஜீவியிடம் 'நீங்கள் எழுதுவது எனக்குப் புரிகிறது' என்று ஒருவன் சொல்லிவிட்டால் அவருக்குக் கோபம் வந்து விடும் என்பார்கள். இக்காலத்திய தமிழ் அறிவு ஜீவி படைப்பாளிகளுக்கும் இது பொருந்தும் என்று தோன்றுகிறது.
இவர் கட்டுரைகளைப் படிக்கும்போது தமிழிலக்கிய பண்பாட்டுக் குடும்பப் பின்னணி நன்றாகப் புலப்படுகிறது.. 'ஆசை பற்றி அறையலுறும் வாசகப் பூனையெழுப்பும் ஓசைகள்' என்ற கட்டுரையினின்றும், இவர் தாத்தாவுக்கும் தந்தைக்கும் அவர்கள் சார்ந்திருந்த அரசியல் சார்பைக் கடந்த இலக்கிய ரஸனை இருந்திருக்கின்றது என்று தெரிகிறது.
கம்பனுக்கு ஏன் ஒர் அடியார்க்குநல்லாரோ, பரிமேலழகரோ அல்லது நச்சினார்க்கினியரோ உரை எழுதவில்லை என்று தெரியவில்லை. இராமயணத்திலிருந்து பல மேற்கோள்களை எடுத்துக்காட்டும் திவ்வியப் பிரபந்த உரையாசிரியர்கள் கூட வால்மீகி இராமாயணத்திலிருந்துதான் காட்டுவார்களே தவிர கம்ப ராமாயணத்தின் அருகில் போவதில்லை. கம்ப ராமாயணம் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருந்தால் இதைப் புரிந்து கொள்ளமுடியும். கிட்டத்தட்ட சமகாலத்துப் புலவரை இவ்வுரையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ளாமலிருந்திருக்கலாம். சிவகுமாரும் ராமாயணம் பன்னிரெண்டாம் காலத்தது என்கிறார்.
போன நூற்றாண்டில்தான் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் கம்ப ராமாயணத்துக்கு உரை எழுதியிருக்கிறார்.அதுவும் பல ஆண்டுகள் மறு பதிப்புக் காணாமல் இருந்தது. 'கலைஞன் பதிப்பகம்' அண்மையில் அச்சிட்ட உரையைக் கண்டதின் விளைவாக எழுதப்பட்டதுதான் சிவகுமாரின் கட்டுரை. இக்கட்டுரையைப் படிக்கும்போது எனக்கு கீட்ஸ் எழுதியிருக்கும் உவகை பொங்கும் கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. கிரேக்கக் கவிஞர் ஹோமெரை சாப்மென் என்பவர் ஆங்கிலத்தில் அற்புதமாக மொழிபெயர்த்து வெளியிட்டார். ஹோமரின் தங்க மயமான இலக்கிய சாம்ராஜ்யத்தைக் காண எனக்கு சாப்மென் எப்படி உதவினார் என்று உணர்ச்சிகரமாகப் பாடுகிறார் கீட்ஸ். அதுபோல் வை.மு.கோவின் உரை என்ற ஒளிவிளக்கு கம்பனின் வீச்சையும் இலக்கியப் பரப்பையும் காண எவ்வாறு தமக்கு உதவி செய்திருக்கிறது என்று எழுதுகிறார் சிவகுமார்.
இக்கட்டுரை மட்டுமன்று, பொதுவாகவே எல்லாக் கட்டுரைகளுமே ஆசிரியரின் அகநிலை வெளிப்பாடுகளாக ( personalized experiences) அமைந்திருக்கின்றன.
இவர் தம் தாத்தாவைப் பற்றி இக்கட்டுரையில் கூறும் செய்திகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. கட்டுரையோடு பொருந்தியும் வருகின்றன. மூன்றாம் தலைமுறையும் இக்கட்டுரையில் இடம் பெறுகின்றது. இதுதான் யதார்த்த உலகம். கம்ப உலகத்திலிருந்து விடைபெறவேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்த்துகின்றது. 'விழித்திருந்து பார்க்கையிலே சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல், பத்திரிகைக் கூட்டம், பழம்பாய்' என்று பாரதி கூறுவது போல், ' கணிணி, டி.வி,, சோபா..' என்று சிவகுமாரின் யதார்த்த உலகம் வேறுபடக் கூடும்.
சிவகுமாரின் அறிவு உலக அக்கறைகள் பரந்துபட்டவை. ஒவ்வொன்றையும் நுட்பமாகக் கவனித்து, தம்முடைய தனித்வம் தோன்றும் பார்வையுடன், ஒளிவு மறைவு, பாசாங்குகள் ஏதுமில்லாமல் ஆணித்தரமாக, கலாசார நாகரிகத்தினின்றும் சிறிதும் வழுவாமல் தம் அபிப்பிராயங்களைக் கூறுகிறார். மாலன், அரவிந்தன் ஆகியோர் ஜெயகாந்தன் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு இவர் அவர்களை விவாதத்துக்கு அழைக்கும் பாங்கு அறிவு சார்ந்து இருக்கிறது.
கவிதையைப் பற்றி எழுதும்போது இவர் 'புதுக் கவிதை என்று ஏதுமில்லை, எல்லாமே மரபுக் கவிதைக்குள் அடங்கி விடும் ' என்பது எனக்கும் உடன்பாடு. சங்க அகத்துறை இலக்கியத்தில் இல்லா படிமங்களா? யாப்பு வகையிலும் எதுகை மோனை, சந்தம் இல்லாமல் எழுதினாலும் செந்தொடைப் பாகுபாட்டில் அது அடங்கிவிடாதா? உள்ளூர 'ஆழ்பிரதியின் படிமங்களும் உடைக்கப்பட்டமௌனங்களும்' நிறைந்த பல சங்க இலக்கியப் பாடல்கள் இருக்கிறன. இவற்றை உணர்வது நம் அவற்றை எப்படிப் படிக்கின்றோ என்பதைப் பொருத்த விஷயம்.
ஜெயகாந்தன் 'அணிந்துரை'யில் கூறியிருப்பது போல சிவகுமார் படைப்பிலக்கியம் உருவாக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பமும் கூட. அவற்றிற்கு அச்சாரமாகத்தான் இக்கட்டுரைத் தொகுதியை நான் கருதுகின்றேன்.
-இந்திரா பார்த்தசாரதி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இ.பா.வே சொல்லிட்டார். எப்ப inhibitions-ஐத் துறந்து புனைவு பக்கம் எட்டிப் பார்க்க போகிறீர்கள்?
Great to hear this PKS
Post a Comment