Sunday, May 21, 2006

பூனைகள் பற்றி ஒரு குறிப்பு

நடுநிசி நாய்கள், நான் கண்ட நாய்கள், நாய்க்குரைப்பின் காலங்கள் என்று நாய்களை வைத்து சுந்தர ராமசாமி மூன்று கவிதைகள் எழுதியிருக்கிறார். அவரும் நாய்களால் தொல்லையை அனுபவித்தவர் போலிருக்கிறது. :-) நான் கண்ட நாய்கள் கவிதையை நண்பர் பாஸ்டன் பாலாஜி அவர் பதிவில் http://etamil.blogspot.com/2006/05/sundara-ramasamy.html பிரசுரித்திருக்கிறார். ஆந்தைகள் என்ற தலைப்பில் "மண்ணாந்தைகளைப்" பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். "ஆந்தையைப் பார்த்து நாளாச்சு, அந்த ஒரிஜினல் ஆந்தையை" என்று ஆந்தைகள் கவிதை தொடங்கும். நானும்கூட ஒரிஜினல் ஆந்தையைப் பார்த்து நாளாச்சுதான். இப்போதெல்லாம் ஒரிஜினல் ஆந்தைகள் ஒளிந்து கொண்டு, களத்திற்கும் காரியத்திற்கும் மண்ணாந்தைகளைப் பலி கொடுக்கின்றன. சு.ரா.வின் ஆந்தைகள் கவிதை எழுதப்பட்ட காலத்தில் சர்ச்சைக்குள்ளானது. அவரது நடுநிசி நாய்கள் கவிதையும்கூட சர்ச்சைக்குள்ளானதுதான். சர்ச்சை என்றால் என்ன? கவிதை யாரைப் பற்றிச் சொல்கிறது என்று அறியத் துடிக்கிற ஆர்வமும் அதனால் எழுகிற ஊகங்களும், மறுப்புகளும்தான். பூனைகள் பற்றியும் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இவையெல்லாம் விலங்குகளைப் படிமங்களாக வைத்து எழுதப்பட்ட கவிதைகள். நல்லவேளையாக, அன்றைக்கு யாரும் "தமிழனை நாயென்று சொல்லிவிட்டார்", "தமிழனை ஆந்தை என்று சொல்லிவிட்டார்.", "தமிழனைப் பூனை என்று சொல்லிவிட்டார்" என்று அவரிடம் சண்டைக்குப் போகவில்லை. இவையில்லாமல், சூரிய அஸ்தமனத்தை மறைத்த ஆட்டுக்குட்டியும் ஒரு கவிதையில் வருகிறது. இங்கே ஆட்டுக்குட்டி படிமம் இல்லை. காட்சியில் ஓர் அங்கம்தான். எனவே, அக்கவிதையை விட்டுவிடலாம். ஆனால், நாய்கள், ஆந்தை, பூனை பற்றிய கவிதைகள் யாரைப் பற்றி எழுதப்பட்டதாயினும் இக்கவிதைகள் யாருக்கும் பொருத்திப் பார்க்கிற பொதுத்தன்மையுடன் அமைந்துள்ளன. அவரின் பூனைகள் கவிதையைக் கீழே தந்துள்ளேன். நானறிந்த ஆண்/பெண் பூனைகளை நினைவுபடுத்திய இக்கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

பூனைகள் பற்றி ஒரு குறிப்பு
- சுந்தர ராமசாமி

பூனைகள் பால் குடிக்கும்.
திருடிக் குடிக்கும். கண்களை மூடிக் கொள்ளும்.
மூடிய கண்களால் சூரிய அஸ்தமனம் ஆக்கிவிடும்.
மியாவ் மியாவ் கத்தும்.
புணர்ச்சிக்கு முன் கர்ண கடூரச் சத்தம் எழுப்பும்.
எப்போதும் ரகசியம் சுமந்து வெளிவரும்.
வெள்ளைப் பால் சம்பந்தமாக சர்வதேசக் கொள்கை கொண்டவை.
பெண் பூனைகள் குட்டி போடும்.
போடும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று
குட்டிகளுக்கு மியாவ் மியாவ் கத்தச் சொல்லித் தரும்.
வாலசைவில் அழகைத் தேக்கிச் செல்லும்.
இரண்டு அடுக்குக் கண்களில் காலத்தின் குரூரம் வழியும்.
பூனைகள் குறுக்கே வராமலிருப்பது அவற்றுக்கும் நமக்கும் நல்லது.
குறுக்கே தாண்டிய பூனைகள் நெடுஞ்சாலைகளில்
தாவரவியல் மாணவனின் நோட்டில் இலைபோல ஒட்டிக் கிடப்பதைக்
கண்டதுண்டு. சிறிய பூனைகள்தான் பெரிய பூனைகள் ஆகின்றன.
பூனைகளின் முதுமையைக் கண்டறிவது கடினம்.
அவற்றின் மரணத்திற்குச் சாட்சியாக நிற்பது கடினம்.
அவற்றின் பேறுகால அனுபவங்கள் பற்றி நாம் யோசிப்பது காணாது.
இருப்பினும் அவை இருக்கின்றன பிறப்பிறப்பிற்கிடையே.

நன்றி: சுந்தர ராமசாமி கவிதைகள், தொகுப்பாசிரியர்: ராஜமார்த்தாண்டன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

1 comment:

PKS said...

ஒரு மேலதிகத் தகவல்:

சுந்தர ராமசாமி "வித்தியாசமான மியாவ்" என்ற தலைப்பிலும் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதனால், அவர் பூனையைப் பற்றி இரண்டு கவிதைகள் எழுதியிருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

- பி.கே. சிவகுமார்