Tuesday, June 05, 2007

குருவும் சீடனும் (ஞானத்தேடலின் கதை) - புத்தக அறிமுகம்


[குருவும் சீடனும் (ஞானத்தேடலின் கதை) - மூலம்: நித்ய சைதன்ய யதி, தமிழில்: ப. சாந்தி, முன்னுரை: ஜெயமோகன் - எனிஇந்தியன்.காம் பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவர இருக்கிற புத்தகம் - பக்கங்கள்: ஏறக்குறைய 193. விலை: ரூபாய் 100 ]

"கேரளத்தில் 1854-ஆம் ஆண்டில் செம்பழஞ்சி என்ற சிற்றூரில் கள் இறக்கும் ஈழவர் என்னும் சாதியில் பிறத்தவர் நாராயண குரு. தந்தை மாடன் ஆசான். தாய் குட்டியம்மா. அச்சாதி அன்று தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டது. சிறுவயதிலேயே தமிழ் கற்று நூல்களை வாசிக்க ஆரம்பித்த நாராயண குரு அன்று திருவனந்தபுரம் சாலைத்தெருவில் இருந்த தைக்காடு அய்யாவு ஆசான் என்ற ஹடயோகியிடம் யோகம் கற்றார். பின்னர் இருபத்து மூன்றாம் வயதில் ஊரை விட்டுக் கிளம்பி துறவு பூண்டு தமிழகத்தில் அலைந்தார். இக்காலகட்டத்தில் பல சித்தர்களை இவர் கண்டதாக ஊகிக்க முடிகிறது. பிற்காலத்தில் கேரள அறிவுத்துறையின் தலைமைப் பேரறிஞராக நாராயண குருவை நிலைநாட்டிய சாஸ்திரக் கல்வி இக்காலத்தில் இவர் பெற்றதேயாகும். வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், அறுவகை மதங்கள், பௌத்த சமண மரபுகள், மூவகை வேதாந்தங்கள் ஆகியவற்றில் நிகரற்ற கல்வி அவருக்கு இருந்தது. தமிழ். சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பெரும்புலமை பெற்றார்.

பின்னர் நாராயணகுரு வெளிப்பட்டது 1888-ல் அவரது சொந்த ஊரின் அருகே உள்ள அருவிக்கரை என்ற சிற்றூரில். அங்கே ஒரு குருகுலத்தை நிறுவி, "ஜாதிபேதம் மத வெறுப்பின்றி அனைவரும் சமமாக வாழும் உதாரணமான இடம் இது" என்று அவர் பொறித்து வைத்தார். அன்று சமூக விடுதலைக்குப் போராடிக் கொண்டிருந்த ஈழவர்களை அவர் பால் ஈர்த்தது. அவரை மையமாக்கி 1903-ல் 'ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா' (எஸ்.என்.டி.பி) என்ற அமைப்பு உருவாயிற்று. அது சமூக சீர்திருத்தத்துக்காகவும் மத மறூமலர்ச்சிக்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவும் போராடிய பெரும் அமைப்பாக வளர்ந்தது. ஆகவே நாராயண குரு கேரள மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 1928-ல் நாராயண குரு தம் சீடர்களைத் திரட்டி 'தர்ம சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் தலைமையகம் கேரளத்தில் வற்கலா என்ற ஊரில் சிவகிரி என்னும் குன்று மீது உள்ளது." (நூலின் முன்னுரையில் ஜெயமோகன்.)

நாராயண குருவின் முதல் சீடர் நடராஜ குரு. நிலவியலில் பட்ட மேற்படிப்பும், உலகப் புகழ்பெற்ற சார்போன் பல்கலைக் கழகத்தில் (·ப்ரான்ஸ்) தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக தத்துவத்தில் முனைவர் ஆய்வை நிகழ்த்தி பட்டமும் பெற்றவர். 1923-ல் ஊட்டி ·பெர்ன்ஹில் பகுதியில் தன் கையாலேயே குடிசை கட்டி தங்கி நாராயண குருகுலம் என்னும் அமைப்பை உருவாக்கியவர்.

நடராஜ குருவின் மாணவர்களில் முதன்மையானவர் நித்ய சைதன்ய யதி. 1923-ல் பந்தளம் என்னும் ஊரில் ஈழவக் குடியில் பிறந்தவர். தத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். பின்னர் நடராஜ குருவின் சீடராக ஆனார். 1969- முதல் உலகப் பயணம் செய்து, வெளிநாட்டுப் பல்கலைகளில் போதித்துப் பின் 1984-ல் இந்தியா திரும்பி ஊட்டியில் நாராயண குருகுலத்தில் தங்கி தன் குருவின் பணிகளை முன்னெடுத்துச் சென்றார். 1997-ல் மறைந்தார்.

நடராஜ குருவின் அருகிலிருந்து பார்த்த தன் அனுபவங்களை இப்புத்தகத்தில் நித்ய சைதன்ய யதி கொடுத்துள்ளார். "நித்ய சைதன்ய யதி தன் ஜான்சனுக்குப் பாஸ்வெல் ஆக இப்பக்கங்களில் வெளிப்படுகிறார்" என்று நடராஜ குரு குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

"குருவின் சொற்களை நினைவில் நிறுத்தவும் மனனம் செய்யவும் உதவும் என அவ்வப்போது கிடைத்த காகிதங்களில்" எழுதிய குறிப்புகள் இவை என்று சொல்லும் நித்ய சைதன்ய யதி, "தத்துவத்திலும் வாழ்வை அழகும் பொருளும் உடையதாக மாற்றும் பிற மானுட விழுமியங்களிலும் ஆர்வமுடைய வாசகர்களூக்கு, குருவும் சீடனும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுவதாகச்" சொல்லியிருக்கிறார்.

இந்நூலுக்குக் "குருகுலமும் கல்வியும்" என்ற தலைப்பில் நான்கு அத்தியாய முன்னுரை எழுதிச் சிறப்பித்திருக்கிறார் ஜெயமோகன். குருகுலத்திற்கும் பள்ளிக்குமான வித்தியாசத்தை விவரிப்பதில் தொடங்குகிற இந்த முன்னுரை, விரிந்து நாராயண குரு, நடராஜ குரு, நித்ய சைதன்ய யதி என்று பயணித்து மொழிபெயர்ப்பாளர் ப. சாந்தியின் மொழியாக்கத்தைக் காரணகாரியங்களோடு பாராட்டுவதில் நிறைவுறுகிறது.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் குருகுல நிகழ்சிகளை மகேந்திரநாத் தத்தர் விரிவாக எழுதியதை (ராமகிருஷ்ண காதம்ருதம்) படிட்த நித்யா அதைப் போல எழுத ஆசைப்பட்டு இக்குறிப்புகளை எழுதியதாகவும் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

**** ***** *****
புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:

ஊட்டி ரயில் நிலையம் தாண்டினால் இடதுபக்கம் ஒரு புல்வெளியுள்ளது. அங்கே தம்பதிகள் இன்பமாக சல்லாபித்துக் கொண்டிருப்பதைப் பசுக்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் குரு இவ்வாறூ சொன்னார். "காமம் நேர்நிலையான மன இயக்கம். அதை யாரும் புரிந்து கொள்ளாமல்தான் நல்லொழுக்கத்தை மதிப்பிடுகிறார்கள். எவரும் நேரடியாக ஒழுக்கமின்மையில் ஈடுபட முடியாது. அது பிறழ்ச்சி. பிறர் வாழ்க்கையில் ஒழுக்கமின்மையைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதுதான் முக்கியமான ஒழுக்கமின்மை. இயற்கைக்குப் பொருந்துமாறு வாழ்வதைத் தவிர யாரும் ஒன்றும் செய்வதில்லை. ஒரு பெண்ணிற்கு அதிக நபர்களின்மீது அன்பு காட்ட முடியும் என்பதில் என்ன தவறுள்ளது? சந்நியாசி எல்லாரிடமும் அன்பு காட்டுகிறாரே. குரு பாலிடம் சொன்னார், 'Paul, you can consider a prostitute as the counterpart of Indian Sanyasin, in principal both of them are absolutists. (பால், ஒரு வேசியையும் இந்திய சந்நியாசியையும் தத்துவ அடிப்படையில் பார்த்தால் ஒன்றாகவே தோன்றும். இரண்டு பேரும் தனக்கு தான் மட்டுமே என ஆனவர்கள். ஆகவே இருவருமே முதல்முழுமைவாதிகள்".)

****
பூபேந்த்ரா (ஒரு பொதுவுடைமைவாதி - பொருளாதாரம் குறித்த விவாதத்தைத் தொடர்ந்து - அந்தப் பகுதிகள் இங்கே கொடுக்கப்படவில்லை. - பி.கே. சிவகுமார்): இப்போது புரிந்தது. பிரச்சினை இவ்வளவு சிக்கலானது என்று இதுவரை நான் எண்ணியதில்லை. மேலும் ஒரு கேள்வியைக் கேட்கட்டுமா? நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறீர்களா?

குரு: நம்பிக்கை என்ற சொல்லே சரியில்லையே. நான் ஒரு விஞ்ஞானி. உண்மையைத் தேடிக் கண்டுபிடித்து அங்கீகரிப்பதுதான் என்னுடைய வழக்கம். கடவுள் இருப்பது கடவுள் குறித்த வரையறை மூலமே. அதனால் அந்த வரையறை சரியா தவறா என்றுதான் கேட்க வேண்டும். அப்படியென்றால் கடவுளுக்கு நான் கொடுக்கும் வரையறையை முதலில் தேட வேண்டும். உங்களுக்குத் தவறூ நடக்கும்போதெல்லாம் எது சரியாகவே இருக்கிறதோ அதுதான் கடவுள். What is that which is right when you are wrong that is God.

பூபேந்த்ரா: புரியவில்லை.

குரு: நீங்கள் இருபதாவது வயதில் ஒரு டாக்டராக வேண்டுமென்று விரும்பினீர்கள். நடக்காததால் கவலைப்பட்டு பின் நாற்பதாவது வயதில் ஒரு நல்ல எஞ்ஜினியரானீர்கள். ஒரு டாக்டராக ஆகாததை நினைத்து சந்தோஷப்படும்போது அன்று தவறான ஆசையை நிறைவேற்றாமலிருந்த கடவுளை சரியென்று சம்மதிப்பீர்கள். உங்கள் கணக்குகள் தவறாக ஆகும் இடங்களில் எல்லாம் நீங்கள் ஒரு சரிக்காக ஏறிட்டுப் பார்க்கிறீர்கள். அதுவே கடவுள்.

*****
குருவின் பேச்சு இவ்வாறு அமைந்தது:

"ஓம் சர்ச வேதாந்த ஸித்தாந்த கோசரம் தமகோசரம்
கோவிந்தம் பரமானந்தம் ஸத்குரும் பிரணதோச் ம்யூகம்

நான் இறைவணக்கமாகப் பாடிய அந்த சுலோகம் சங்கராச்சாரியாரின் விவேக சூடாமணியில் உள்ள முதல் சுலோகம். இதில் நுணுக்கமான ஒரு ரகசியம் அடங்கியுள்ளது. கோவிந்தன் என்ற குரு அறியப்பட முடியாதவன். ஆனால் சர்வ வேதாந்த சித்தாந்தங்களால் அறியப்படுபவன். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ஊனக்கண்களால் அறியப்படுகிற மற்றும் அறிவின் உள்விழிகளால் அறிய முடிகிற இருவகை அறிதல்கள் உண்டு என்பதே. அதில் ஞானவிழிகளால் மட்டுமே காணக்கூடிய ஆத்மகலையைப் பற்றீயே இங்கு சிலநாட்களாக நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். புறவயமான அறிவைப்பற்றி விவாதிப்பதற்கு கட்டளைகளையும் வழிகாட்டுதல்களையும் முறைமைகளையும் காண்கிறோம். உள்ளார்ந்த அறிவைப் பற்றிப் பேசவும் சில வழிகள் உள்ளன. சுருதிகளையும் ஸ்மிருதிகளையும் வேதாந்தங்களையும் புராணங்களையும் எல்லாம் ஒன்றோடொன்று போட்டுக் குழப்பிக் கொள்பவர்களால் எதையும் புரிந்து கொள்ள முடிவதில்லை. சுருதி - ஸ்மிருதி வேறுபாடுகள் இந்தியாவில் மட்டுமல்ல மேலைநாட்டுச் சிந்னனையிலும் உண்டு. A 'priori' என்றும் a 'posteriori' என்றும் இவ்வேறுபாடு அங்கே காணப்படுகிறது. தத்துவ சிந்தனையை மேற்கொள்பவர்கள் இவ்வேறுபாடுகளைப் பற்றிய தெளிவுடன் இருக்க வேண்டியுள்ளது."

*****
குரு: "ஆறு தரிசனங்களையும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்க முடியும். நியாயம் - வைசேஷிகம், சாங்கியம் - யோகம், மீமாம்சங்கள் என இவை ஒரு ஏணிப்படி போன்று உள்ளன. முதல்படி நியாய வைசேஷிகம். இரண்டாம்படி சாங்கிய யோகம். மூன்றாம்படியே மீமாம்சங்கள். நியாய வைசேஷிகம் பெரிதும் புறப்பொருளை வகைப்படுத்தி அறியக்கூடியதாகும். சாங்கியயோகம் புறப்பொருளை அகவயமாகவும் பார்க்கக்கூடிய ஒரு தளத்தை உருவாக்குகிறது. அதாவது physical ஆனதை, psycho-physcial ஆகப் பார்க்க முயல்கிறது. நியாய வைசேஷிகம் பகுத்துப் பார்த்து சாராம்சத்தை அறிய முயல்கிறது. சாங்கிய யோகம் தொகுத்து புறப்பொருளுக்கு அப்பாலுள்ளதை அறிய முயல்கிறது. இதற்கு அடுத்த மூன்றாம் கட்டமே அகத்தை ஆழத்தில் அறிய முயலும் மீமாம்சைகள். வேதாந்தம் என்னும் உத்தரமீமாம்சை கடைசிப்படியாகும்.

*****
ஸ்வரன் குருவின் பாதத்தை வனங்கும்போது கண்ணீர் வடிக்கவும் தேம்பி அழவும் செய்தாள். அவர் போனபிறகு குரு சொன்னார், "அந்தப் பெண்ணுக்கு என்ன நேர்ந்தது? அவளுக்குள் ரொம்ப நல்ல ஏதோ ஒரு குணம் நிறைந்திருக்கிறது. பெண்கள் முன்னரே அழத் தயாராக இருக்கிறார்கள். சன்னியாசிகளின் பாதங்களை வணங்கும்போது அவர்களுக்கு ஏதோ நிறைவு கிடைக்கிறது. நல்லது. அது பித்து வராமலிருக்க உதவும். நித்தியனின் தாடியும், பருத்த கழுத்தையுமெல்லாம் பார்த்தால் பெண்களுக்குக் கொஞ்சம் தடுமாற்றம் உண்டாகும். அதுவும் ஒரு தொந்தரவு. இதெல்லாம் என்ன பக்தியென்று நாம் சொன்னாலும் அடியில் உள்ளது ஒரு மாதிரி 'காதல்'தான்."

*****
கிஷோர் பஞ்சாபிலுள்ள மிகவும் சிறந்த ஒரு வழக்கறிஞரும் சர்வோதயா சேவகருமாவார். சம்பிரதாயமாக ஏதாவது சொல்வதற்கு முன்பே குரு ஜுகன் கிஷோரிடம் கேட்டார், "நீங்கள் வினோபாஜியின் சீடரா?"

ஜுகன்: ஆமாம் சாமி. நான் பூதான் யக்ஞ ஊழியன்.

குரு: யக்ஞம் என்று சொன்னால் என்ன? கீதையில் சொல்லும் யக்ஞமா? நீங்கள் கீதையை ஏற்றுக் கொள்கிறீர்களா?

ஜுகன்: எல்லாம் இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம் என்ற நிலையில் செயல் செய்வதுதான் யக்ஞம். இந்தக் காலத்தில் கர்மத்திற்குத்தான் முக்கியத்துவம். வினோபாஜிகூட கீதைக்கு ஒரு திறனாய்வு எழுதியிருக்கிறாரே.

குரு: கீதைக்கு காந்திஜி ஒரு திறனாய்வு எழுதியிருக்கிறார் அல்லவா?

ஜுகன்: ஆம். 'அனாசக்தியோகம்'

குரு: அதைத்தானா வினோபாஜியும் சொல்கிறார்? அதைத்தான் என்றால் புதிதாக ஏதும் எழுதுவதற்குத் தேவை இல்லையே!

ஜுகன்: அதைப்போல் இல்லை. சில விஷயங்களில் வித்தியாசம் உண்டு.

குரு: வினோபாஜி காந்திஜியின் சீடரல்லவா. பின் எதற்காக குருவைத் திருத்துகிறார்? காந்தி கூட கீதையில் நம்பிக்கை உடையவர் என்றால் கிருஷ்ணர் "யுத்தஸ்வபாரதா" என்ற சொல்லைச் சொன்னது தவறாகி விட்டது என்று சொல்லி அச்சொல்லைத் திருத்தியது எதனால்? அப்படி என்றால் குருநாதர்களைக் குற்றம் சொல்லுகிறவர்கள்தானா காந்தியும் வினோபாவும் மற்றும் உங்களில் பலரும்?

ஜுகன்: குற்றம் சொல்லவில்லை, சில இடங்களில் கருத்து வேற்றுமை உள்ளது; அவ்வளவுதான்.

குரு: கீதை ஓர் அறிவியலா இல்லை அபிப்பிராயம் மட்டும்தானா?

ஜுகன்: கீதை ஒரு மத நூல்.

குரு: மதம் என்று சொன்னால் தர்மம் அல்லவா? 'சர்வதர்மான் பரித்யக்ஞ' என்று சொன்னால் மதங்களை எல்லாம் விட்டுவிட்டு என்றல்லவா அர்த்தம்? அப்படியென்றால் கீதையை மதநூல் என்று சொல்வது தவறல்லவா?

ஜுகன்: அதெல்லாம் உங்களைப் போல உள்ள பண்டிதர்களுக்குத்தான் தெரியும். நாங்கள் சாதாரணமானவர்கள். அதை ஒரு மதநூலாகத்தான் ஏற்றுக் கொள்கிறோம்.

குரு: கீதையில் பதினெட்டு யோகம் சொல்லப்பட்டுள்ளதல்லவா? அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதை அனாசக்தியோகம் என்று சொல்லி அதை ஏன் கேலி செய்கிறீர்கள்?

ஜுகன்: குரு, நான் ஒரு சர்வோதயா சேவகன் என்ற நிலையில்தான் வினோபாவை பின்தொடர்கிறேன். வேதாந்தம் எல்லாம் எனக்குத் தெரியாது.

குரு: நீங்கள் கீதையை நம்புகிறீர்கள் என்று சொன்னதால்தான் நான் இதையெல்லாம் சொன்னேன். ஆன்மீகம் அல்ல, பொருளாதாரம்தான் உங்களுடைய பிரச்சினை என்றால் சர்வோதயம் எந்தப் பொருளாதார நூலை ஏற்றுக் கொள்கிறது?

ஜுகன்: நாங்கள் சர்வோதய பொருளாதாரத்தைத்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

குரு: சர்வோதயத்தின் பொருளாதார நிபுணர் யார்? அவருடைய நூல் எது? ஆடம் ஸ்மித்தின் வெல்த் ஆ·ப் நேஷன்ஸா? இல்லை கார்ல் மார்க்ஸின் டாஸ் காபிடலா?

ஜுகன்: அது ஒன்றும் எனக்குத் தெரியாது. குமரப்ப ஐயாதான் எங்களுடைய நிபுணர்.

குரு: குமரப்பா என்னுடைய நண்பர். அதனால் நான் இதையெல்லாம் ஒப்புக்கொள்ள வேண்டுமென்றில்லை. இவ்வளவு பெரிய அமைப்பை உருவாக்கிக் கொண்டாடும் உங்களுக்கு என்னைப் போன்ற ஒரு சாதாரணனின் நியாயமான சந்தேகங்களைக்கூட தீர்த்து வைக்க முடியவில்லையே. நீங்கள் சொல்லும் பொருளாதார அறிவியலைப் பற்றி ஏதாவது எழுதி வைத்திருந்தீர்கள் என்றால் எடுங்கள் பார்க்கிறேன். நீங்கள் எதற்காகப் போய் பெருவிவசாயிகளிடம் இடம் கேட்கிறீர்கள்? சென்னையிலிருந்து தில்லிக்கு வரும் வழியில் எத்தனை ஆயிரம் சதுரமைல் இடம் விவசாயத்திற்குப் போதுமான தண்ணீரும், வளமும் இருந்தும்கூட தரிசாகக் கிடக்கிறது. இருந்தும் நீங்கள் மக்கள் தொகைப் பெருக்கம் என்று சொல்லி குடும்பக் கட்டுப்பாட்டிற்கு ஆள் பிடிக்கிறீர்கள். இதைவிட கொடுமையானதும் நாகரிகமில்லாததுமான எதையாவது நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

பொருளாதார அறிவியலைப் பற்றிய அடிப்படைத் தத்துவங்கள் எதையாவது தெரிந்தவர்களா உங்களுடைய தலைவர்கள்? கப்பலைச் சுரண்டி பெயிண்ட் அடிக்கும் ஆங்கிலேயனின் மெர்கண்டைல் பொருளாதாரத்தைப் பின்பற்றி ஒரு வேளாண்மை நாடான இந்தியாவில் பொருளாதாரப் பாதுகாப்பைக் கொண்டு வரலாம் என்றா நினைக்கிறீர்கள்? ஒரு கிராமத்துப் பெண் சொந்த நிலத்தில் வளரும் தென்னையிலிருந்து தேங்காயைப் பறித்து மீன்கறியில் சேர்க்க முடியாது. ஆனால் இந்தியாவின் உற்பத்திப் பொருட்களை அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ இருக்கும் ஒரு வியாபாரியால் கட்டுப்படுத்த முடியும். அது எந்தப் பொருளாதாரத்திற்கு உரியது என்று நீங்கள் சிந்தித்தது உண்டா? பரிதாபம்! இதையொன்றும் தெரியாதவர்கள்தான் இந்தியாவின் பொருளாதாரப் பாதுகாப்பை உண்டாக்கத் திட்டம் தீட்டுகிறார்கள்.

ஜுகன்: குருஜி சொன்னது எங்களுடைய கண்ணைத் திறக்க வைக்கும் உண்மைதான். இந்த விஷயத்தைப் பற்றி இவ்வளவு ஆழமாக யாரும் சிந்திக்க மாட்டார்கள். எங்களுடைய பொருளாதார அறிவியலின் உபதேசகர் திருமதி மார்ஜோஷி சைக்ஸ்தான். அவர் வந்து உங்களைப் பார்க்கும்படி நான் அவருக்குக் கடிதம் எழுதுகிறேன்.

*****
தருமம் முடிந்த பிறகு எல்லோருமாக உபசார அறையில் வந்து இருந்தோம். கபூர் இல்லற வாழ்வைத் துறது சந்நியாசம் பெற வேண்டும் என்று சொன்னார். அதைக் கேட்டு குரு, "அப்படி திட்டமிட்டு ஒன்றையும் துறக்கக் கூடாது. மனப்பூர்வமாக எதையாவது துறப்பதுதான் ராஜசதியாகம். எல்லாவற்றையும் துறந்து காட்டிற்குப் போனாலும் ஒரு குடிசை வேண்டும், ஒரு தண்ணீர் பாத்திரம் வேண்டும், தாமிருக்கும் இடத்தைச் சுத்தமாக வைக்க வேண்டுமென்று எண்ணி ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக, நாம் துறந்த இல்லற சுகம் எல்லாம் திரும்பவும் தோன்றும். மட்டுமல்ல, பிரிந்து வந்தவர்களைப் பற்றி அதிக வேதனையோடு நினைக்கவும் செய்வோம். உங்களுக்கு வயதாகி விட்டது. இதோ ஒரு நல்ல பெண் உங்கள் விருப்பங்களை அறிந்து உணவு தந்து உடைகளையும் துவைத்துத் தரவும் கேட்கிறாள். அதையெல்லாம் உதறிவிட்டு வாழ்க்கையின் தொடக்கம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்வது அபத்தம் அல்லவா" என்று சொன்னார்.

குருவின் இந்த வார்த்தைகள் திருமதி கபூருக்கும் அவருடைய அம்மாவிற்கும் மிகவும் பிடித்தது. "பெண்கள் உடன் வாழ்ந்தார்கள் என்பதால் ஒரு தோஷமும் வராது" என்று கூறி குரு பின்னும், "எந்த ஒரு பெண்ணிற்கும் பாவம் செய்ய முடியாது. மிஞ்சிப் போனால் சுத்த முட்டாளாக மடத்தன்மையைக் காண்பிக்கவோ பைத்தியக்காரத்தனமாக நடக்கவோதான் முடியும். ஒருநாளும் ஒரு பெண்ணும் பாவம் செய்ய மாட்டாள்" என்று கூறினார். இதையெல்லாம் கேட்டு எல்லோரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

1 comment:

ஜடாயு said...

இந்து ஞானமரபில் "சம்வாதம்" என்ற உரையாடல் முறை ஞானத்தேடலின் முக்கிய அங்கம்.

விவேகானந்தர் தம் சீடர்களுடன் நிகழ்த்திய உரையாடல்கள் "சுவாமி சிஷ்ய சம்வாதம்" என்ற பெயரில் அருமையாக தொகுக்கப் பட்டுள்ளன. இதில் பல பகுதிகளை நான் படித்திருக்கிறேன். அருமையான அனுபவம் அது.

இங்கே நீங்கள் தந்திருக்கும் இந்த நூலின் பகுதிகள் ஆர்வத்தைத் தூண்டுவனவாக உள்ளன. ஞானத் தேடல்களின் பல பரிமாணங்களை வெளிக்கொணரும் இத்தகைய நூல் ஒருவிதமான நவீன உபனிஷத் என்றே சொல்லவேண்டும்.

நல்ல முயற்சி, பாராட்டுக்கள் சிவகுமார்.