Friday, July 13, 2007

பிராமண நண்பர்களுக்கு...

பெரியார் ஏன் பிராமணர்களை எதிர்த்தார் என்று பார்க்கும்போது, காங்கிரஸில் அவர் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் போனதற்கு பிராமணர்கள் காரணம் என்று அவர் நம்பினார். அதில் பெருமளவு உண்மை இருக்கிறது. அதனால்தான் (ஜீவாவா சிங்காரவேலரா திரு.வி.க.வா என்று தெரியவில்லை. நினைவிலிருந்து எழுதுகிறேன்.) பெரியாருடன் உடன்பட்டவர்கள் காங்கிரசுக்குள் இருக்கிற பிராமணீய செல்வாக்கை, காங்கிரசின் உள்ளிருந்தே எதிர்க்க வேண்டும். காங்கிரசைவிட்டு வெளியே போகக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால், பெரியார் காங்கிரசை விட்டு வெளியே சென்றுவிட்டார். அவர் காங்கிரசுக்குள்ளிருந்தே போராடியிருந்தார் என்றால், தமிழகத்தின் சரித்திரம், காங்கிரஸின் சரித்திரம் தலைகீழாக மாறியிருக்கும். நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். ஒரு சிலர் செய்கிற தவறுக்கு ஒரு இனத்தையே குற்றம் சாட்ட முடியாது என்ற முதிர்ச்சியும் தெளிவும் அப்போது பெரியாருக்கு இல்லையா என்ன? இருந்திருக்கலாம். ஆனாலும், உணர்ச்சி வேகத்தில் அவர் அந்த முடிவையெடுத்ததாக வைத்துக் கொண்டாலும், காலம் முழுதும் பிராமணிய எதிர்ப்பை அவருக்குள் விதைக்கிற உத்வேகத்தை அவருக்குத் தந்தது என்ன? சமூகத்தில் அங்கும் இங்கும் அவர் சந்தித்த சில மோசமான பிராமண ஆளுமைகள்தான் என்று தோன்றுகிறது. அந்த ஆளுமைகளைப் பார்த்துப் பார்த்து, அந்த ஆளுமைகளுக்கு சமூகத்தில் எதிர்ப்படாத எதிர்ப்பையும் அந்த ஆளுமைகள் நினைத்ததை சாதித்துக் கொள்வதையும் பார்த்துப் பார்த்துப் பெரியார் இன்னும் பிடிவாதமாக பிராமணிய எதிர்ப்பைக் கைகொள்ள ஆரம்பித்தார் என்று நம்புகிறேன். பெரியார் செய்தது தவறுதான். அதை நியாயப்படுத்தவில்லை. அதே பெரியாரும் தான் சந்திக்க நேர்ந்த நல்ல பிராமண நண்பர்களைப் பாராட்டவும் தயங்கவில்லை என்பதிலிருந்து அவர் உணர்வின் வேகத்தைப் பார்க்க முடியும். பிராமணிய எதிர்ப்பு அல்லாமல், சமூகத்தில் மற்றவர்கள் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துகிற துறைகளில் முன்னேற பெரியார் உழைத்திருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், அப்படி அவர் ஏதும் செய்தாலும், அதையெல்லாம் மறைத்து பிராமண எதிர்ப்பை மட்டுமே முன்னிலைப்படுத்துகிற இடைநிலைச் சாதி சக்திகள் இன்றைக்குப் பெரியாரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஒருவர் செய்கிற தவறுக்கு ஓர் இனத்தைக் குறை சொல்ல முடியாது என்ற முதிர்ச்சி எனக்கு இருப்பதாக நான் நினைத்துக் கொள்கிறேன். பெரியாரை நிறைய படித்திருக்கிறேன். முழுவதுமாகப் படித்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. தேவையான அளவு படித்திருக்கிறேன் என்று தன்னடக்கத்துடன் சொல்லிக் கொள்ள முடியும். அவ்வளவு படித்தும் பெரியார் என்னை இன்றுவரை பிராமணீய எதிரியாக மாற்ற முடியவில்லை. பெரியாருக்கான அனுபவங்கள் எனக்கில்லை அல்லது பிராமணிய எதிர்ப்புக்கு அவர் சொல்கிற காரணங்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதுதான் அதற்குக் காரணம்.

இதற்கு முன்னர்வரை வாழ்க்கையில் நான் சந்தித்த எந்தப் பிராமணரும், அவர்கள் சமூகத்தையே ஒட்டுமொத்தமாக நான் வெறுக்கும் அளவிற்கு நடந்து கொள்ளவில்லை. அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டது அதிகம். அவர்களும் மற்றவர்களைப் போல மனிதர்களே என்பதாகவே என் அனுபவம் இருந்திருக்கிறது. இணையத்தில் எழுத ஆரம்பித்த இந்த நான்கைந்து வருடங்களில் இணையத்தில் பிராமணர்களையும் சந்தித்திருக்கிறேன். பலரும் நல்லவர்கள் அல்லது தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிற அப்பாவிகள். ஆனால், இன்னும் சில பிராமணர்களைச் சந்தித்திருக்கிறேன். நான் எவ்வளவோ அவரைப் படித்தும் என்னை பிராமண எதிரியாக மாற்றப் பெரியாரால் இயலவில்லை. ஆனால், இந்தச் சில பிராமணர்கள் தங்களின் சுயநலமும் கோழைத்தனமும் மிகுந்த செயற்பாடுகளால் என்னை பிராமணர்கள் எல்லாருமே இப்படித்தான் இருப்பார்களோ என்று நினைக்கிற விளிம்பு நிலைக்குத் தள்ளியிருக்கிறார்கள். பிராமண எதிர்ப்பு என்ற படுகுழியில் நான் அப்படி விழாமல் என்னைக் காத்தது இறையருளும், மனிதர்கள் மீது நான் வைக்கிற பொதுவான நம்பிக்கையும்தான் என்று தோன்றுகிறது.

இப்படித் தங்களின் சுயநலத்தாலும் கோழைத்தனத்தாலும் பிராமண சமூகத்திற்கு கேவலத்தை உண்டாக்குகிறவர்களைப் பற்றிய மற்ற இணைய பிராமண நண்பர்களின் கருத்துகள் எப்படியுள்ளன? சாத்வீகமாகவும், அட்ஜஸ்ட் செய்து கொண்டும், அவர் அப்படித்தாங்க அவரைத் திருத்த முடியாது என்ற மாதிரியான சமாதானங்களுடன் அவர்கள் போய்விடுகிறார்கள். இப்படி அவர்கள் செய்து கொள்கிற சமாதானத்தின் பின்னர் ஜாதி ஒரு காரணமாக இருக்கலாம். ஜாதி ரீதியான அபிமானம் இல்லாத ஆட்களைத் தமிழ்நாட்டில் தேடுவது அரிது. பிறந்த ஊர், படித்த காலேஜ், ஆகியவற்றின் மீது இருக்கிற அபிமானம் போல பிறந்த ஜாதியின் மீது இருக்கிற அபிமானத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அந்த அபிமானத்தின் காரணத்தால், தமது சமூகத்திற்கே கேடு கொண்டுவருகிற சிலரைச் சகித்துக் கொள்வது எங்ஙனம் நியாயம் என்று தோன்றுகிறது. உண்மையான ஜாதி அபிமானிகள் இப்படிப்பட்ட சுயநலமிகளையும்/கோழைகளையும்தானே தாங்களாகவே முன்வந்து சமூகத்தில் தோலுரிக்க வேண்டும். அதைச் செய்யத் தயங்குவதால்தான் பெரியார் கட்சிக்காரர்கள் இப்படிப்பட்ட விஷயங்களைக் கையில் எடுத்துக் கொண்டு, எல்லா பிராமணர்களுமே இப்படித்தான் மோசம் என்று பிரசாரம் செய்கிறார்கள்.

மற்ற ஜாதிக்காரர்களில் சுயநலமிகளோ கோழைகளோ இல்லையா என்று கேட்கக் கூடும். கண்டிப்பாக இருப்பார்கள். ஆனால், இன்றைக்கு இங்கே நடக்கிற பிராமணிய எதிர்ப்புப் பிரசாரத்தில் ஏற்கனவே நிறைய பாதிக்கப்பட்ட பிராமணர்கள்தான் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருந்து தன் சமூகத்தின் களையை எடுக்க வேண்டும். பிராமணர்களின் தவறுகளே பூதாகாரமாக வெளிச்சம் போடப்படுகின்றன. மேலும், ஒரு காலத்தில் (பெரியார் காங்கிரஸை விட்டு வெளியே வந்தபோது) பிராமணர்கள் செல்வாக்கான இடங்களில் இருந்தார்கள் (காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கூட). அந்தச் செல்வாக்கின் அடிப்படையில் குழு மனப்பான்மையுடன் நடந்து கொண்டார்கள். அந்த மனப்பான்மைக்கு எதிராக, பதில் குழுவையோ எதிரணியையோ வைத்து உள்ளுக்குள்ளிருந்து போரிடுகிற நீண்ட கால செயல்திட்டத்தை விட்டுவிட்டு, பிராமணிய எதிர்ப்பு என்கிற குறுகிய காலத்தில் பயன் தரக்கூடிய அபாயமான ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டார் பெரியார். அதனால் இப்போது, பல ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகத்தில் அதிகாரங்கள் பிராமணர்கள் வசம் இல்லை. அவர்கள் ஒரு victim போலவே நடத்தப்பட்டு வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையிலும், அவர்கள் தங்களுக்குள் இருக்கிற களைகளைக் களையாது, அமைதியாகவும், அனுசரனையாகவும், விட்டுக் கொடுக்காமலும் போய்க் கொண்டிருந்தால், அதிகாரம் போயும் அவர்களிடம் குழுமனப்பாமமை போகவில்லை என்ற எண்ணத்தையே அது மற்றவர்கள் மனத்தில் ஏற்படுத்தும். இது சரியில்லை.

எனவே, பிராமண சமூகத்து நண்பர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான். உங்கள் எதிரிகள் உங்கள் சமூகத்திற்கு வெளியே இல்லை. அந்த எதிரிகளை நீங்கள் விலக்கி வைத்து, அவர்கள் பிராமண சமூகத்திற்குக் கேடு என்று சொல்லாவிட்டால், மனதில் முதிர்ச்சியும் அறிவில் தெளிவும் உள்ளவர்கள்கூட, ஏதோ ஒரு உணர்வின் தடுமாற்றத்தில், சுயநலமி பிராமணர்களால் பாதிக்கப்படும்போது, பெரியார் வழி சென்றுவிடுகிற அபாயம் இருக்கிறது. சொல்லப்போனால், அதுதான் நடந்து கொண்டும் இருக்கிறது.

7 comments:

Anonymous said...

சிறப்பான கருத்துக்கள்.

பெரியாரின் பொய்களை மற்றவர்களை விட பார்ப்பனர்களே மிகவும் சிலாகித்து ஏற்றுக்கொண்டார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. அதற்கு முக்கியமான காரணம், அதுவரை இந்திய வரலாற்றில் இல்லாத ஒரு முக்கியத்துவத்தை பார்ப்பனர்களுக்கு பெரியார் தந்தார்.

உதாரணமாக, வர்ணாசிரமம் பற்றிய பெரியாரின் பொய்களை பாருங்கள். நான்கு வர்ணங்கள் இந்தியாவில். ஆனால், தடாலடியாக பார்ப்பனர் தவிர மற்றவர்கள் எல்லோரும் சூத்திரர்கள் என்று பெரியார் பொய் சொன்னதும், சத்திரிய குல வன்னியர்களும், சத்திரிய தேவர்களும், சத்திரிய நாடார்களும் ஏற்றுக்கொண்டார்கள். வைஸிய செட்டியார்களும் ஏற்றுக்கொண்டார்கள். பார்ப்பனர்களுக்கு அப்படியே உச்சி குளிந்து போய் விட்டது போலிருக்கிறது.

பார்ப்பனரை தவிர வேறொருவருக்கும் எழுத படிக்க தெரியாது என்று பொய்யை சொன்னார். பார்ப்பனர்கள் மற்றவர்களுக்கு படிப்பை தடுத்தார்கள் என்று பொய் சொன்னார்.

மற்றவர்களுக்கு எண்ணும் எழுத்தும் சொல்லிக்கொடுத்து ஜீவனம் பண்ணிக்கொண்டிருந்த பார்ப்பனர்களது திண்ணை பள்ளிக்கூடத்தை ஒழித்து அவர்களை நகரத்துக்கு ஓட வைத்து மற்றவர்களை படிப்பறிவில்லாதவர்களாக ஆக்கியது பிரிட்டிஷ்காரர்களும் கிறிஸ்துவ் மிஷனரிகளும். ஆனால், வெள்ளைக்காரர்களுக்கு வால்பிடிக்கவென்றே, அன்றைய ஏகாதிபத்தியத்துக்கு வால்பிடிக்கவென்றே உருவான பெரியார், இதில் பிரிட்டிஷ் காரர்கள்தான் ஏழை எளியவர்களுக்கு படிப்பு கொடுத்தார்கள், பார்ப்பனர்கள் தடுத்தார்கள் என்று கூசாமல் பொய் சொன்னார். எல்லோரும் நம்பினார்கள்.

இதையெல்லாம் எதிர்த்து அன்று பார்ப்பனர்கள் உண்மையை சொல்லியிருந்திருக்கலாம். ஆனால், அன்று வரலாற்றை, சமூகவியலை பார்க்க தேர்ந்த மக்கள் இல்லை. இன்றும் இல்லை. பார்ப்பனர்கள் தங்களுக்கு பெரியார் கொடுத்த பொய்யான முக்கியத்துவத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள்.

இன்று அனுபவிக்கிறார்கள்.

எஸ்.கே said...

பெரியார் தமிழ்நாடு காங்கிரஸில் இருந்தபோது அவர் தலைவராகத்தான் இருந்தார். அப்படி இருக்கும்போது பிராமணர்கள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியிருக்க முடியும் என்பது புரியவில்லை.

//பெரியார் ஏன் பிராமணர்களை எதிர்த்தார் என்று பார்க்கும்போது, காங்கிரஸில் அவர் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் போனதற்கு பிராமணர்கள் காரணம் என்று அவர் நம்பினார். அதில் பெருமளவு உண்மை இருக்கிறது//

உங்களுக்குத் தெரிந்த அந்த "உண்மை" என்ன? எந்த பிராமணர்கள், எந்தெந்த வகையில் காரணமாக இருந்தார்கள், அப்படி பிராமணர்கள் எதிர்த்த கருத்துக்கள்தான் என்னென்ன - இவற்றை விளக்க முடியுமா? ஈவேரா காங்கிரசை விட்டு விலகிய சூழ்நிலையைப் பற்றி முழுதும் அறிந்தவராக உங்கள் இடுகை வெளிப்படுத்துகிறது. ஆகையால் இதையும் தெளிவுபடுத்தினால் நலம்.

மேலும் ஈவேராவின் அத்தகைய பிராமண எதிர்ப்பு இயக்கத்தால் அன்றைய சமுதாயத்தில் அடிமட்டத்தில் இருந்த தலித்துக்களுக்கு ஏதேனும் பயன் இருந்ததா, அல்லது வேறு ஒரு சாராருக்கு மட்டுமானதொரு agenda கொண்டு அவர் இயங்கினாரா என்பதையும் விளக்கக் கோருகிறேன்.

தவிர அவருடைய அந்த வெறுப்பை உமிழும் பிரசாரத்தால் பிராமணர்கள் எத்தகைய பதிப்புக்களுக்கு உள்ளானார்கள் என்ற விவரங்களையும் எடுத்துரைத்தால் இது ஒரு நடுநிலையான பதிவாக இருக்கும் என நம்புகிறேன்.

நன்றியுடன்,

எஸ்.கே

PKS said...

எஸ்.கே.,

அதற்கென்ன எழுதிவிட்டால் போயிற்று. பெரியாரின் வாழ்க்கையைப் படித்தவர்களுக்குத் தெரிந்த விஷயமாக இருக்கும் என்று விவரித்து எழுதவில்லை. இன்னொருமுறை எழுதும்போது நீங்கள் கேட்கிற விவரங்களைத் தர பார்க்கிறேன்.

ஆனால், தலைவராக இருக்கும்போது மற்றவர்கள் எப்படி ஆதிக்கம் செலுத்தமுடியும் என்கிற வாதம் இங்கே பொருந்தாது. வாஜ்பாய் (என்ற தலைவர்) எங்களுக்குத் தேவையான முகமூடி (mask) என்று ஏதோ ஒரு சங்-பரிவார் தலைவர் சொல்லியிருந்தாரே. பெரியார் அப்படி யாருக்கும் முகமூடியாக காங்கிரஸில் இல்லை என்றுதான் நம்புகிறேன். சரி, பங்காரு லட்சுமணன் கூடத்தான் பா.ஜ.க.வின் தலைவராக இருந்தார். கட்சியின் எல்லாப் பதவிகளிலும் தலித்துகளை உட்கார வைத்துவிட அவரால் முடிந்ததா என்று நான் கேட்காவிட்டாலும் மற்றவர்கள் கேட்கக் கூடும். இது உங்கள் கேள்வியின் லாஜிக்கை எப்படி உடைக்க முடியும் என்பதற்காக நான் கேட்கிற விதண்டாவாதம் என்றே வைத்துக் கொள்வோம். பெரியார் காங்கிரஸிலிருந்து வெளிவரும்போது என்ன நடந்தது என்பதைப் பெரியார் பற்றிய புத்தகங்களிலிருந்தே காணலாமே. என்னைக் கேட்டால், சாமி சிதம்பரனார் எழுதிய புத்தகத்தில் கூட இருக்கிறது. சாமி சிதம்பரனார் மீது நம்பிக்கை இல்லையென்றால் சொல்லுங்கள். இன்னும் சில புத்தக ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்கிறேன். இல்லையென்றால், நேரம் கிடைக்கும்போது எழுதப் பார்க்கிறேன் ஒருகாலத்தில் புத்தகங்களில் இருப்பதைத் தட்டச்சு செய்து தொடர்ந்து பகிர்ந்து கொண்டவன்தான். இப்போதுதான் நேரம் இறுக்குகிறது.

பெரியாரால் தலித்துகளுக்குப் பிரயோசனம் உண்டா இல்லையா என்பது இக்கட்டுரையின் கருத்து இல்லை. அப்படியென்றால், தலித் சகோதரர்களுக்கு என்று தலைப்பு வைத்திருப்பேனே :-) அதனால் அதைச் சொல்லவில்லை. இந்தக் கட்டுரையின் கருத்து பெரியாரின் அபாயமான ஆயுதத்திற்கு எப்படிச் சில சுயநலமி/கோழை பிராமணர்கள் நெய்யூற்றி மெருகேற்றுகிறார்கள் என்பது பற்றியது.

உங்கள் கருத்துகளைப் பார்க்கும்போது பெரியாரைப் பற்றி நான் சொன்னதில்தான் உங்களுக்கு ஏதோ சிறுமுரண்பாடு போல தோன்றுகிறது. பிரச்னையில்லை பேசித் தீர்த்துக் கொள்வோம் :-) சுயநலமி/கோழை பிராமணர்களை மற்ற நல்ல பிராமணர்கள் சகித்துக் கொண்டும், ஏற்றுக் கொண்டும், அரவணைத்துக் கொண்டும் சென்று பிராமண சமூகத்திற்கு விளைவிக்கிற கேட்டைப் பற்றி நான் எழுதியது குறித்துத் தாங்கள் ஒன்றும் சொல்லாததால், அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஆமெனில், என் கட்டுரையின் மையக் கருத்து அதுதான். மற்றவை அனைத்தும் அப்படிப் போவதனால் விளைகிற தீமைகளை விளக்கச் சொல்லப்பட்டவை. மற்றவற்றை ஏற்க முடியாவிட்டாலும் சரி, மையக் கருத்துடன் மக்கள் ஒத்துப் போனால் போதும் என்று நினைக்கிறேன். நன்றிகள்.

- பி.கே. சிவகுமார்

ஜீவி said...

அருமயானது எடுத்துக்கொண்ட விஷயம். பெரியாரின் பார்ப்பன
எதிர்ப்பு, வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடுகின்ற நாயை கல்கொண்டு துரத்தி
இன்னும் ஓடஓட விரட்டியது தான் என்று தோன்றுகிறது. தாழ்த்தப்பட்ட,
சகல கோணங்களிலும் சுரண்டப்பட்ட
அவமானப்படுத்தப்பட்ட சமூகத்திற்கு
இதனால் ஏதாவது உடனடியான,அல்லது நீடித்த பலன் ஏதாவது ஏற்பட்டது என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஏனென்றால் அவர்களை ஏறி மிதித்து அவமானபடுத்தியவர்களின் சதவீதத்தில் பார்பனர்கள் 1% கூட இல்லை. இன்னொன்று அவர்களின் இழிவு நிலை குறித்து பெரியார் சிந்தித்தாகக்கூடத் தெரியவில்லை.
சிந்தித்திருந்தால், மற்ற 99% நோக்கி
பெரியாரின் சுட்டு விரல் கூட நீண்டிருந்தால், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும். இன்னொரு உண்மை என்றால், இன்று இந்திய பொதுவுடமைக்கட்சிகளைச்சார்ந்த பல பிராமண இளைஞர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல நண்பர்களுக்கு, அவர்கள் குடும்பங்களுக்கு தோன்றாத்துணையாக இருக்கிறார்கள். இதையெல்லாம் பற்றி நிறைய எழுத வேண்டும்.

வரவனையான் said...

//இப்போது, பல ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகத்தில் அதிகாரங்கள் பிராமணர்கள் வசம் இல்லை. அவர்கள் ஒரு victim போலவே நடத்தப்பட்டு வருகிறார்கள்.//

எந்த வகையான அதிகாரங்கள் இல்லாமல் இருக்கிறார்கள் என்று தெளிவாக சொன்னால் நன்று. யூத எதிர்ப்பு என்பது யூதர்க்|ளின் மீதான எதிர்ப்பு அல்ல அதன் பாசிச தன்மைகெதிரான எதிர்ப்பே. இன்னும் இன்னும் நீங்க|ளும் அரைகுறை பார்ப்பனிய எதிர்ப்பாளர் போல கட்டுரையை கையா|ண்டிருகி\றீர்கள்.





பின்னர் விரிவான பின்னுட்டமிடுகி\றேன். நேரமின்மை :(

TBCD said...

//*பெரியார் செய்தது தவறுதான். அதை நியாயப்படுத்தவில்லை.*//

பெரியார் செய்தது தவறுதான்...என்ன தவறு செய்தார், எடுத்த காரியத்தை முடிக்காமல் சென்றாரே அது தவறு தான். ...என்னா காரியம்...உங்களுக்கு காரியம் செய்யுறது தான்...

பென்மனி அவள் கன்மனி (படம் பெயர் தவறாகவும் இருக்கலாம், ஆனால் கண்டிப்பாக சென்சார் அனுமதித்த வசனம்) படத்தில் வரும் வசனம் நினைவுக்கு வருகின்றது...

"என் சேலை அவுந்தது தப்பு இல்ல..அடுத்த வீட்டுக்காரன் பார்த்தது தான் தப்பு"...

வரிசையா கேப் விடாம எழுதினா போதுமா.. என்ன எழுதுறோமன்னு பாக்க வேன்டாமா...

நேரமின்மையால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.. ஆனா மீன்டும் உம்ம பதிவ படிச்சு கிழிக்க வருவேன்..

PKS said...

ஜீவி, வரவனையான் மற்றும் TBCD கருத்துகளுக்கு நன்றி. இணையத்தில் இப்போதெல்லாம் தெரியாதவர்களிடம் விவாதிப்பதில் பலனில்லை என்ற ஞானம் வந்திருக்கிறது. அதனால், கருத்துகளை வைத்துவிட்டுப் போவதோடு நிறுத்திக் கொள்கிறேன். மற்றபடிக்கு, எனக்கு அரைகுறை அறிவு அல்ல, அறிவே இல்லை என்றுகூட நினைத்துக் கொள்கிற உரிமை அனைவருக்கும் உண்டு.

பெரியார் பிராமணியத்தின் பாசிசத்தன்மையை எதிர்த்தார், பிராமணர்களை எதிர்க்கவில்லை என்று வரவனையான் சொல்வதைக் கேட்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், என்ன செய்வது, பிறப்பால் பிராமணர்கள் என்பதாலேயே பெரியாரைப் பெரியாரின் தொண்டர்களைவிட ஆவேசமாகத் தூக்கிப் பிடிக்கிற தோழர்களை (ம.க.இ.க.வுடன் எனக்குக் கடுமையான கருத்து வேறுபாடு உண்டு. அவர்கள் கருத்துகளை நான் ஆதரிக்கவில்லை என்பதையும் சொல்லி வைக்கிறேன்) சாதி அடிப்படையில் தூற்றுவதுதான் பெரியார் சொல்லிக் கொடுத்த பாசிசத்தன்மையை எதிர்ப்பது என்றால், வரவனையான் அவர்களே, உங்களுக்கு நன்றி, வணக்கம். வாழ்க பல்லாண்டு! (உங்களுக்கும் ம.க.இ.க.வுக்குமான விவாதத்தில் நுழைவது எனக்கு நோக்கமில்லை. பெரியாரின் பிராமணிய எதிர்ப்பு பிராமண எதிர்ப்பாகத் திரிந்து போகிற அபாயம் இருக்கிறது என்று தெரியாமல் பெரியாரைத் தூக்கிப் பிடிக்கிறவர்கள் அதற்கே இரையாக வேண்டும் என்பதை அறியாமல் இருந்த ம.க.இ.க. தோழர்கள் இப்போது இப்படி ஒரு ஆபத்து இருப்பதை அறிந்தாவது இருப்பார்கள். இது பெரியாரின் தவறா பெரியாரின் தொண்டர்களின் தவறா என்று ஒரு கேள்வி எழக்கூடும். இந்தத் தவறில் நிச்சயம் பெரியாருக்குப் பங்கிருக்கிறது. அதைப் பற்றி இங்கே பேசப்போவதுமில்லை. ஆனால், ஒருநாள் எழுதுகிற உத்தேசமிருக்கிறது). வரவனையான் எழுத்துகளில் நான் அவ்வப்போது ரசிக்கிற நகைச்சுவைகளும் நினைத்ததைச் சொல்கிற விதமும் இருப்பதே என்னை இந்தப் பதிலைக்கூட எழுதத் தூண்டியது. மற்றபடிக்கு, கும்மிக்கோ விவாதத்திற்கோ எனக்கு விருப்பமில்லை. நான் சொல்வது தவறென்றால், அதை விவரித்து அல்லது கிழித்து நீங்கள் தாராளமாக எழுதுங்கள். நானும் வந்து படிக்கிறேன்.

த. சிவகுமார் என்ற பெயரில் ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. நான் எழுதிய கட்டுரையின் மைய நோக்கத்திற்கும், அவர் பின்னூட்டத்திற்கும் என்ன தொடர்பு என்று எனக்குப் புரியாததால் அதை அனுமதிப்பது திசை திருப்புவதாகிவிடும் என்பதால் அனுமதிக்கவில்லை. மன்னிக்கவும்.