Sunday, November 11, 2007

சமீபத்தில் படித்த புத்தகங்கள்

இப்போதெல்லாம் நிறைய படிக்கவும், ஆங்கிலப் படங்களைப் பார்க்கவும் முடிகிறது. எழுத்தும் வாசிப்பும் முதலில் தனிப்பட்ட ஆன்ம வளர்ச்சிக்கானது என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்தாலும், நேர இறுக்குதல்களில் சிக்குண்டபின், உணர்ந்ததை முழுமையாகச் செயல்படுத்த முடிகிறது. படித்த பார்த்த அனுபவங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, இதையெல்லாம் எழுதுங்களேன் என்கிறார்கள். (என் மீதுதான் இவர்களுக்கு எத்தனை நம்பிக்கை! இதில் ஒரு நண்பர் நாவல் எழுதுங்கள் என்று வேறு சொல்லிக் கொண்டே இருக்கிறார். மற்ற துறைகளில் நான் கிழித்துவிட்ட மாதிரி! எழுதுவதைவிட என்னைச் செழுமைப்படுத்திக் கொள்வதிலும் நான் எப்படி முன்னகர்கிறேன் என்று பார்த்துக் கொள்வதிலுமே இப்போதைக்கு இருக்கிறேன். அறிவுஜீவிகள் கூட எவ்வளவு பாமரத்தனமாகவும், உணர்வுபூர்வமாகவும் தங்களுக்குப் பிடித்தமான ஒன்றைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார்கள் என்பதில் ஏற்பட்ட தற்காலிக ஆயாசம் இது.)

Gujarat - The Making of Tragedy - Edited By Siddharth Varadarajan - Published by Penguin

ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நிலையின் பொருட்டு இரண்டு வாரங்கள் ஓய்வில் இருந்தபோது படித்த புத்தகம் இது. பல நாட்களாகப் படிக்க வேண்டும் என்று நினைத்த புத்தகத்தை இந்த ஓய்வில்தான் படிக்க முடிந்தது. குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தையும் வன்முறையையும் நரேந்திர மோடியும் அவர் கொள்கை சார்ந்தவர்களும் எப்படித் திட்டமிட்டு நடத்திக் காட்டினர் என்பதை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தியுள்ள பலர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். இப்போது தெஹல்கா டேப்புகள் மோடியின் குஜராத் வன்முறையை அம்பலப்படுத்துகின்றன என்பதைச் சமீபத்தில் படித்த எனக்கு, அதையே இந்தப் புத்தகம் 2002லேயே (குஜராத் வன்முறை நிகழ்ந்த ஆண்டு) அம்பலப்படுத்தி விட்டதே என்ற நினைப்புதான் வந்தது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் முதியோருக்கும் ஏழைகளுக்கும் (அவர்கள் முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்தினால்) எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளைப் படித்த என்னால் பல நாட்கள் இரவில் தூங்கவே முடியவில்லை. ஹிந்துமதம் கூட மோடியையும் அவர் கும்பலையும் மன்னிக்காது என்பது நிச்சயம். நரகம் என்று ஒன்று இருந்தால் அதில் குஜராத் கலவரத்தை நடத்திய மோடியும் அவர் ஆதரவாளர்களும் அதை அமைதியாக அப்போது வேடிக்கை பார்த்த வாஜ்பாய் அரசாங்கத்தைச் சார்ந்தவர்களுக்கும் நிச்சயம் இடம் உண்டு.

மோடி, வாஜ்பாய், பா.ஜ.க. இந்தக் கலவரங்களை நடத்தியது ஆச்சரியமில்லை. அவர்களின் கொள்கை அப்படி. ஆனால் அப்போது மத்தியில் இருந்த பா.ஜ.க. ஆட்சியில் சிறுபான்மையினரின் காவலராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் தி.மு.க. அங்கம் வகித்தது. குஜராத் கலவரம் குறித்த பார்லிமெண்ட் விவாதத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தி.மு.க. வாக்களிக்கும் என்றார் திரு. கருணாநிதி. மதச்சார்பின்மையைவிட மத்திய அரசில் பதவி அவருக்கு முக்கியமாக போய்விட்டது. பெரியார் வாழ்க!

அதேபோல அப்போது பா.ஜ.க. ஆதரவில் உ.பி.யில் மாயாவதி ஆட்சியில் இருந்தார் என்று நினைக்கிறேன். அவரும் குஜராத் கலவரங்களை வேடிக்கை பார்த்தவர்தான். தங்களுக்கு ஆதரவு என்று சொல்கிற தி.மு.க., பகுஜன் சமாஜ்வாதி போன்ற கட்சிகளிடம் சிறுபான்மையினர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இருக்க மாட்டார்கள். இருப்பதிலேயே எது குறைந்த அளவில் ஆபத்தானது என்பதைப் பொருத்துக் கட்சிகளை ஆதரிக்கவேண்டிய நிலையில் இந்தியர்கள் அனைவருமே இருப்பது சாபக்கேடுதான்.

மனசாட்சியும் மனிதநேயமும் உடைய ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. இந்தப் புத்தகத்தைப் பற்றி நீளமான ஒரு வாசிப்பு அனுபவம் எழுத வேண்டும் என்று ஆசைதான். இப்போதைக்கு முடியாது. தேவையான ஆங்கிலப் புலமையும், நேரமும் எனக்கு வாய்த்திருந்தால் இந்தப் புத்தகத்தை நான் தமிழிலேயே மொழிபெயர்த்திருப்பேன். இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் "கரிசனம் காட்டும் இடது, பெரியாரிய சார்பு உடையவர்கள்" (நன்றி: ரோசா வசந்த்) அதன் மூலம் இந்துத்துவாவிற்கு ரோசா வசந்த் சொல்வது போல தீனி போட்டுக் கொண்டிருக்காமல் இப்படிப்பட்ட புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து இந்துத்துவ அடிப்படைவாதத்தின் ஆபத்தான நிகழ்கால முகத்தைத் தமிழ்நாடெங்கும் எடுத்துச் சொல்லலாம். ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும்கூட, பெரியாரிஸ்டுகளுக்குக் காசு கொடுத்து இந்து மதத்தைத் திட்டச் சொல்வதால் விளையாத பல நன்மைகள், இந்தப் புத்தகத்தை முன்னெடுத்து இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்து இலவசமாக வினியோகிப்பதால் உண்டாகும். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இதை மொழிபெயர்த்தால்/பிரசுரித்தால் புத்தகத்தின் நம்பகத்தன்மை குறையுமே என்று ஒரு வாதம் எழலாம். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தற்போது செய்கிற பல பிற்போக்குத்தனமான ஆபத்தான விஷயங்களைவிட இந்தப் புத்தகத்தைத் தமிழில் கொண்டுவருவது உருப்படியான விஷயமாக இருக்கும் என்ற விதத்தில் நான் இதைப் பார்க்கிறேன்.

இந்தப் புத்தகத்தை மொழியாக்கம் செய்வது குறித்து நானே என்னுடைய தனிப்பட்ட முறையில் முயன்றேன். இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த ஒரு பேராசிரியர் இதை மொழிபெயர்ப்பு செய்துதர முன்வந்தார். ஆனால் காப்புரிமை பெறுவது போன்ற விஷயங்களில் அலையவும், கவனம் செலுத்தவும் அவருக்கும் நேரம் இல்லை. தனிப்பட்ட முறையில் இதில் முழுமையாக இறங்க நான் இந்தியாவிலும் இல்லை. மதச்சார்பற்ற அமைப்புகள் அல்லது இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் செய்தாலும்கூட பரவாயில்லை, இந்தப் புத்தகம் தமிழிலும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வரவேண்டியது அவசியம். ஹிந்துக்கள் ஓட்டுகள் கிடைக்காதோ என்பதற்காகவும், ஹிந்துக்கள் மத்தியில் பா.ஜ.க. நாயகனாகிவிடக் கூடும் என்ற பயத்தின் காரணமாகவும் காங்கிரஸ்கூட குஜராத் கலவரங்களைப் பற்றி அதிகம் பேசுவதில்லை என்று என் நண்பர் சொன்னார். எனவே, ஓட்டுப் பொறுக்கிகள் யாரும் மனசாட்சியுடையவர்கள் இல்லை. சமூகத்தின் மனசாட்சிகள் மக்களும் அரசியல் சாரா அமைப்புகளுமே. அவர்கள் மனது வைத்தால், ஹிந்துத்துவ, இஸ்லாமிய, கிறிஸ்துவ அடிப்படைவாத சக்திகள் சமூகத்திலும், அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துவதையும் ஆபத்து விளைவிப்பதையும் தடுக்க முடியும். அதற்கு முதலில் செய்ய வேண்டியது, எந்த மத அடிப்படைவாதமும் செய்கிற வன்முறைகளையும் அதன் ஆபத்தான விளைவுகளையும் அனைவரிடமும் எடுத்துச் செல்வதுதான்.

இந்தியாவில் ஹிந்துத்துவ பயங்கரவாத்தை வெற்றிகரமாக குஜராத்தில் ஹிந்துத்துவ சக்திகள் நடத்திக் காட்டியுள்ளன. அப்போது அவர்களுக்கு மத்தியில் தனிப்பெரும்பான்மைகூட இல்லை என்பது முக்கியமான விஷயம். தனிப்பெரும்பான்மை மத்தியில் கிடைத்துவிட்டால் ஹிந்துத்துவ பயங்கரவாதம் எத்தகைய ஆபத்தான பரிணாமங்களை எடுக்கும் என்பது கவலையாக இருக்கிறது. ஏற்கனவே கர்நாடகாவில் தேவகவுடா/குமாரசாமி குடும்பத்தின் சந்தர்ப்பவாத சுயநல அரசியலால் பா.ஜ.க.வை அரியணையில் அமர்த்தியாயிற்று. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க., பா.ம.க. பகுஜன் சமாஜ்வாதி பார்ட்டி என்று பலவும் தேவையேற்பட்டபோது பா.ஜ.க.வை ஆதரிக்கத் தயங்கியதில்லை. இந்தப் புத்தகம் தமிழில் வெளியாவது நாளைக்குத் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடன் யார் கூட்டணி வைத்தாலும் அவர்களின் மனசாட்சியையும் ஆன்மசுத்தியையும் பொதுமக்கள் கேள்வி கேட்க உதவும்.

தமிழில் இப்புத்தகம் வெளிவர நாளாகலாம். அதனால் இதை நீங்கள் இன்னமும் படிக்கவில்லை என்றால் தேடி ஆங்கிலத்திலேயே படித்துவிடுங்கள்.

மீனின் சிறகுகள் (நாவல்) - தஞ்சை ப்ரகாஷ் - காவ்யா வெளியீடு

வெ.சா. முன்னுரை எழுதியிருக்கிறார். இந்த நாவலின் கருத்தாக்கத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், ஷகீலா படம் பார்ப்பதுபோல நாவல் சுவாரஸ்யமாகப் போகிறது. ஒரு ஆணை எப்படி எல்லாப் பெண்களும் மோகித்துப் படுத்து மகிழ்கின்றனர் என்கிற fantasy நாவலாகி உள்ளது. தி.ஜா.வையே பெண்ணியவாதிகள் விட்டுவைக்கவில்லை. (தி.ஜா.வைப் பற்றி அப்படி அம்பை எழுதிய கட்டுரையொன்று இப்போது ஞாபகம் வருகிறது. திண்ணையில் இருக்கலாம். தேடிச் சுட்டித்தர நேரமில்லை.) தஞ்சை ப்ரகாஷ் படைப்புகள் பற்றிப் பெண்ணியவாதிகள் ஏதும் சொல்லியிருக்கிறார்களா? நான் படித்ததில்லை. படித்தவர்கள் சொல்லலாம். இந்த நாவலைப் பற்றி அதிகம் எழுதினால் எதிர்மறையாகத்தான் எழுத வேண்டியிருக்கும். நான் பொதுவாகப் பிடித்தவற்றையே எழுத விரும்புகிறேன் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

தொ.மு.சி. ரகுநாதன் - வாழ்வும் பணியும் - பொன்னீலன் - NCBH வெளியீடு

தொ.மு.சி. ரகுநாதனை அனைவரும் அறிய வேண்டும். பஞ்சும் பசியும், பாரதி காலமும் கருத்தும் (சாகித்ய அகாதமி விருது பெற்றது), புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாறு, இலக்கிய விமர்சனம் ஆகிய புகழ்பெற்ற நூல்களை எழுதியவர். இந்த நூல் எனக்குப் பிடித்திருந்தது. இதைப் பற்றி வாசக அனுபவம் எழுத வேண்டும். தொ.மு.சி. ரகுநாதன் போன்றவர்களை எதிர்காலத் தலைமுறையினருக்கு நன்றாக அறிமுகப்படுத்துகிற நூல்.

பிடித்த படங்கள்

கடந்த மூன்று மாதங்களில் பார்த்த படங்களில் பின்வரும் இரண்டு படங்கள் பிடித்திருந்தன. இரண்டையும் நான் பரிந்துரைக்கிறேன்.

1. Finding Forrester
2. Little Children

update: Nov 11, 2007 6 PM EST - தி.ஜா. எழுத்து பற்றிய அம்பை கட்டுரைகளின் சுட்டிகள்:

http://www.thinnai.com/?module=displaystory&story_id=699120313&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=699120312&format=html

1 comment:

Raj Chandra said...

Thanks for the list...I did read about Gujarat - The Making of Tragedy - Edited By Siddharth Varadarajan - Published by Penguin, some where in the web(I guess Outlook India), so it is already in my "to buy" list.

Also, A. Marx translated some of the important articles about Gujarat tragedy in Tamil and "Karuppu Prathigal" published it. Bought that book some time ago and waiting to be read.

I am also suggesting you write about the books/articles that you came across as these days these kind of constructive works are rare in tamil blogs.

Regards,
Rajesh
BTW, just two weeks ago I allowed one of your comment you put reg. an article in my blog. That comment was posted sometime in 2006. See how fast I am :).