இது தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரத்தில் கேஷ¤வலாகச் சிலவாரங்கள் முன்னர் பகிர்ந்து கொண்டது. அதில் கொஞ்சம் சேர்த்து, கொஞ்சம் மாற்றி இங்கே சேமித்து வைக்கிறேன்.
உடல்நிலை சரியில்லாமலோ தளர்வாகவோ இருக்கிற நேரங்களில் நான் புத்துணர்வுக்கும் சலிப்பைத் தொலைக்கவும் சுவாரஸ்யம் நிறைந்த புத்தகங்களையே படிப்பது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு பொழுதில் - மீனின் சிறகுகளைக் கூட - அதில் இருக்கிற பாலியல்ரீதியான விவரணைகள் பற்றி முன்னமே அறிந்திருந்ததால்தான் - அந்த சுவாரஸ்யத்திற்காகப் - படித்தேன். பால்யப் பருவத்தில் காமம் தெரியாத வயதில் (உண்மையைச் சொன்னால், காமத்தைக் கடக்கிற செயற்முறை வழிகள் இல்லாத நிலையில் என்று சொல்வது சரியாக இருக்கும்) இளைஞர்கள் நீலப்படம் பார்த்து ஆதங்கத்தைக் கனவுகளை ஓரளவு தீர்த்துக் கொள்வார்கள். அப்படி தளர்ந்தும் சோர்ந்தும் இருக்கிற நேரங்களில் நான் சுவாரஸ்யமான புத்தகங்களைப் படித்து என்னையும் சுவாரஸ்யமாக்கிக் கொள்வது வழக்கம். வாழ்க்கையும் சுவாரஸ்யமும் போல, இலக்கியமும் சுவாரஸ்யமும் நல்ல ஜோடி என்பது என் எண்ணம். சுவாரஸ்யம் என்றால் கையில் எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்கத் தோணாத புத்தகம் என்று நான் வரையறுக்கிறேன். என்னால் பல நேரங்களில் சிற்றிதழ்களையும் இலக்கியப் புத்தகங்களையும் தொடர்ந்து படிக்க முடிவதில்லை. என் மனஒருமையின்மை அதற்குக் காரணம் என்று சொல்லி வைக்கிறேன். இந்த இடத்தில் நேநோ என்ற சாரு நிவேதிதாவின் கதைத் தொகுதிக்கு அசோகமித்ரன் எழுதிய முன்னுரை கலங்கலாக நினைவுக்கு வருகிறது. சாருவின் நல்ல கதைகளைப் புகழ்ந்த அ.மி, அவருடைய மற்ற கதைகளைத் அவர் புரிதலுக்கு மிஞ்சிய கதைகள் என்ற பொருளில் அடக்கத்துடன் சொல்லியிருப்பார். ஆனால் அந்த அடக்கத்தினூடே தெரியும் அசோகமித்ரனின் நுட்பமான கிண்டலை வாசகர் புரிந்து கொள்ள முடியும். என் மனஒருமையின்மை என்கிற வரியின் அங்கதம் உங்களுக்குப் புரியவேண்டுமே என்று நானோ இங்கே உதாரணம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். மேலும், பலநேரங்களில் முக்கியமாக வாசிக்கிற வழக்கம் இடையில் விட்டுப் போயிருந்தாலோ குறைந்து போயிருந்தாலோகூட அதை மீண்டும் முழுஅளவில் தொடங்குவதற்கு முன் நான் சுவாரஸ்யமான புத்தகங்களுடனேயே ஆரம்பிக்கிறேன். அந்தப் புத்தகத்தை ஏற்கனவே படித்திருந்தாலும் படிப்பது உண்டு. அப்படியே படிப்படியாக சீரியஸான புத்தகங்களுக்கு மீண்டும் செல்ல எனக்கு அது உதவுகிறது.
எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவிற்கான புத்தகங்களைத் தமிழில் எழுதுகிறவர்கள் என் ரசனையின்படி வெகுசிலர்தான். பெயர் சொன்னால், ஏன் இந்தப் பெயரைச் சொல்லவில்லை, ஏன் இந்தப் பெயரைச் சொன்னேன் என்ற விவாதங்கள் நீளுமோ என்று பயமாக வேறு இருக்கிறது. ஆனாலும் என் ரசனைப்படி என்ற தப்பித்தலை இட்டுவிட்டதால் பெயர்களைச் சொல்கிறேன். ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா, சரோஜாதேவி. சரோஜாதேவியுடன் மற்றப் பெயர்களை இணைத்து அவர்களைத் தாழ்த்திவிட்டேன் என்று என் வீட்டருகில் யாரும் வந்து போராட்டம் நடத்தப் போகிறார்களோ என்று பயமாக வேறு இருக்கிறது. அதுமட்டுமில்லை, சரோஜாதேவி புத்தகங்களுக்கு வாசக அனுபவங்கள் எழுதச்சொல்லி வேண்டி எத்தனை தனிமடல்கள் வரப்போகின்றனவோ என்று கவலையாகவும் இருக்கிறது. இங்கே சரோஜாதேவி என்பது நீலக்கதைகளுக்கு ஒரு குறியீடு. கொச்சையான மொழியில். அவ்வளவுதான். பெரியார்கூட கொச்சையான (ஆபாசமாக அல்ல) பேச்சுமொழியில்தான் கூட்டங்களில் பேசுவாராம். விடுதலையில் அவர் பேச்சின் கொச்சை நீக்கப்பட்டு உரைநடை வடிவம் வெளிவருமாமே. எனவே, சரோஜாதேவி என்ற பெயரை நேரடியாக அப்படியே எடுத்துக் கொண்டு, அப்படிப்பட்ட கதைகளில் தெறிக்கும் முறையற்ற வார்த்தைகள், பெண் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்செயல்களை நான் ஆதரிக்கிறேன் என்று சுவாரஸ்யத்திற்காகச் சேர்த்த வார்த்தை என் மீதே பூமராங்காகப் பாய்ந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. ஏன் சொல்கிறேன் என்றால், "ஷகீலா" என்ற வார்த்தையைக் கூகுள் தேடுஇயந்திரத்துள் தேடியவர் என் வலைப்பதிவுக்கு வந்திருக்கிறார் என்று கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தெரிந்தது. ஷகீலா பற்றி நாம் ஏதும் எழுதவில்லையே, பாவம் வந்து ஏமாந்து போயிருப்பாரே என்று நினைத்தேன். எதிர்காலத்தில் அப்படி வருகிறவர்களை ஏமாற்றுகிற பாவம் நமக்கெதற்கு என்றும் தோன்றியது. அதனால் கொஞ்சநாள் கழித்து மீனின் சிறகுகள் பற்றி எழுதியபோது, நாவல் ஷகீலா படம்போல சுவாரஸ்யமாகப் போகிறது என்று சொல்லியிருந்தேன். உடனே, அறிவுஜீவி நண்பர் ஒருவரிடமிருந்து எனக்குத் தனிமடல். அந்த வாக்கியம் உங்கள் எழுத்துத் தரத்திற்கு ஏற்ற மாதிரி இலலை, மாற்றிவிடுங்கள் என்று. நான் என்ன எழுதவேண்டும் என்றுகூட நண்பர்கள் சொல்கிறபடி ஆகிவிட்டதே என் சமூக சுதந்திரம் என்றாகிப் போனது. எந்த ஷகீலா படத்தையும் நான் பார்த்ததில்லை. கவனிக்கவும், ஷகீலா நடித்த படத்தை மட்டுமே பார்த்ததில்லை என்றே சொல்கிறேன். மற்றபடிக்கு, ஷகீலா என்கிற வார்த்தை அங்கே ஒரு குறியீடு என்பதைக் கூட என் அறிவுஜீவி நண்பர் அறியவில்லையே என்ற கவலையே இங்கே இவ்வளவு இதை நீட்டி முழக்க வேண்டியிருக்கிறது. பாருங்கள், ஒரு தமிழ் எழுத்தாளன் நாலுவரி எழுதுவதற்கும் எதைப் பற்றியெல்லாம் பொலிடிகலி கரெக்ட்டாக யோசிக்க வேண்டியிருக்கிறது. அதையும் மீறித் தமிழன்னையின் மீதான காதலால் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து பாராட்டுவீர்களாக.
அப்படித்தான் சலிப்பும் தளர்வுமாக இருந்த இந்த ஒரு மாதத்தில் வாத்தியாரிடம் (சுஜாதா) திரும்பப் போனேன். யவனிகாவையும், நிலா நிழலையும் படித்தேன். நிலா நிழல் தினமணி கதிரில் தொடராக வந்தபோது ஏற்கனவே படித்ததுதான். இருக்கையின் நுனியில் உட்கார்ந்து திகில் படம் பார்க்கிற மாதிரி, அடுத்து என்ன என்ன என்று காக்க வைக்கிற கலையில் வாத்தியார் வாத்தியார் பட்டத்துக்குத் தகுதியானவர். யவனிகா நன்றாக ஆரம்பிக்கிறது. கணேஷ்-வசந்த் வேறு. சுவாரஸ்யத்திற்குக் கேட்கவா வேண்டும், ஜுரவேகத்தில் ஓடுகிறது. ஆனால், கடைசியில் திசைமாறி ஜவ்வு ஜவ்வென்று இழுத்து (வாத்தியார் தமிழ் சினிமாக்களுக்குத் திரைக்கதை/வசனம் என்று போனதால் அங்கிருந்து வந்த தாக்கமோ.) திருப்பத்திற்கு மேல் திருப்பம் என்று எப்போடா முடியும் என்று ஆகிவிடுகிறது. தமிழ்ச்சினிமா மாதிரியே வில்லனுக்கு கடவுள் - சரி வேண்டாம் இயற்கை - தண்டனை தருகிறது. தேஜ்மயி என்ற நடிகையும் பாத்திரமும் கதையில் வருகிறார்கள் பாதிக்குப் பாதி. அதற்கும் முக்கியக் கருவான யவனிகா என்ற சோழகாலத்துச் சிலை காணாமல் போனதற்கும் என்ன சம்பந்தம் என்று இறுதிவரை புலப்படவில்லை. தமிழ்ச்சினிமாவில் காமெடியை கதைக்கு வெளியே தனிடிராக்கில் ஓட்டுவதுபோல இது ஒரு டிராக் என்று வாத்தியார் ஓட்டுகிறார் என்று நினைத்துக் கொண்டேன். இந்த நாவலைத் தொடராக எழுதிக் கொண்டிருந்தபோது வாத்தியாருக்கு உடல்நலம் சரியில்லாதுபோய், மீதி அத்தியாயங்களை அவர் சொல்லச் சொல்ல வேறு ஒருவர் எழுதினாராம். வாத்தியார் அதைக் கொஞ்சூண்டு சிலாகித்துச் சொல்லியிருந்தார். அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவார் என்று சொல்லப்படுகிற தி.ஜானகிராமனும், தன்னுடைய பல கதைகளை/நாவல்களை வார்த்தை பிசகாமல் தான் சொல்ல மற்றவர்களை எழுதவைத்த ஜெயகாந்தனும் நினைவுக்கு வந்தார்கள். ஆனாலும் வாத்தியார் என்றைக்கும் இளமையானவர் என்பதே அவர் எழுத்துகளின் ரகசியம். அது இந்தப் புத்தகத்திலும் தெரிகிறது. எனக்கோ இப்போதே என் குழந்தைகளுடனான தலைமுறை இடைவெளி தெரிய ஆரம்பித்துவிட்டது போல இருக்கிறது. இவர் என்னடாவென்றால், மனதை இளமையாக வைத்திருப்பதால் அந்த இளமையை எழுத்தில் கொண்டு வருகிறார்.
நிலா நிழல் யவனிகாவைவிடப் பிடித்திருந்தது. அதில் ஒரு அத்தியாயம் முதல் பதிப்பில் பிரசுரமாகாமல் போய்விட்டதாம். இந்தப் பதிப்பின்போது தொடராக வந்ததிலிருந்து தேடி எடுக்க முடியாமல், வாத்தியார் அந்த அத்தியாயத்தைத் திரும்ப அப்படியே எழுதிவிட்டாராம். எழுத எழுத ஞாபகம் வந்துவிட்டதாம். நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தினரின், இளவயதினரின் வாழ்க்கையையும் மனநிலைகளையும் சிறப்பாகச் சொன்னவர்களில் ஆதவனுக்கு முன்னதாக வைக்கப்பட வேண்டியவர் வாத்தியார் என்று நான் சொல்வது உண்டு. அப்படி யாருடனாவது சம்பாஷிக்க செய்ய வேண்டி வருமானால், உதாரணமாக நிலா நிழலையும் காட்டலாம்.
கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது என்ற தலைப்பில் அ. முத்துலிங்கம் தொகுத்த 20 எழுத்தாளர்களுக்குப் பிடித்தமான புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளைப் படித்தேன். சா. கந்தசாமியின் புத்தகத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வரும்போது அசோகமித்ரன் சொல்கிறார். "மிகப்பெரிய விபரீதங்கள் அரைவாக்கியத்தில் கூறப்பட்டுவிடுகின்றன. மிகச்சாதாரண சம்பவங்கள் என்று நினைக்கக் கூடியவை மிக விரிவாகக் கூறப்படுகின்றன. இந்த நோக்கு ஒரு ஆன்மீக இலக்கைத்தான் சுட்டுகின்றன" என்று. எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், சமீபத்தில் படித்த மூன்று புத்தகங்கள் என்று தலைப்பு வைத்துவிட்டு, அதைப்பற்றி அரைகுறையுமாக எழுதிவிட்டு, மற்றவற்றை நான் வியாக்கியானப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் உங்களுக்கு எழுமானால், என்னுடைய ஆன்மீக இலக்கை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என்று பொருள். :-)
அ. முத்துலிங்கம் முன்னுரை எழுதியிருக்கிறார். சுஜாதாவுக்கு இணையாக/அடுத்தபடியாக தமிழில் சுவாரஸ்யமாக எழுதுகிறவர் அ. முத்துலிங்கம் என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். எழுத்தாளர்களை அவர்களுக்குப் பிடித்த புத்தகம் பற்றி எழுதச் சொன்னவுடனேயே முன்னுரை எழுத ஆரம்பித்துவிட்டார் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு எழுத்தாளரும் எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டார்கள், எவ்வளவு ஒத்துழைப்புத் தந்தார்கள் என்று டைரிக் குறிப்பு மாதிரி சுவாரஸ்யமாக நீள்கிறது முன்னுரை. கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது என்ற தலைப்பில் சூத்ரதாரியின் மணல்கடிகை பற்றி ஜெயமோகன் எழுதிய கட்டுரையின் தலைப்பே புத்தகத்தின் தலைப்பு. "இயல்புவாதம் உலகம் முழுக்க மனிதனின் சிறுமையையும் வீழ்ச்சியையும் சொல்லவே கையாளப்பட்டுள்ளது. இயல்புவாதம் உண்மையில் சற்று முதிர்ந்த மனம் கொண்டவர்களுக்கான அழகியல்" என்கிறார் ஜெயமோகன். முதிர்ந்த மனமே சிறுமையையும் வீழ்ச்சியையும் குரூரத்தையும் அவற்றின் விவரிப்பையும் உள்வாங்கி ரசிக்க முடியும் என்பது உண்மையாக இருக்கலாம். ஏனென்றால், எனக்கு இன்னமும் டிராஜடியில் முடிகிற திரைப்படங்களைப் பார்க்கப் பிடிப்பதில்லை. காதல் என்ற திரைப்படத்தை அதனாலேயே பார்க்கவில்லை. ஆனால், சிறுமையும் வீழ்ச்சியும் குரூரமும் நிறைந்த வாழ்க்கைகள் பொதுவாக சந்தோஷத்தையும் வாழ்க்கையையும் கொண்டாடுகிற வாழ்க்கையாகவும் இருக்கும். உதாரணமாக, சுனாமி தாக்கியபோதும், நிவாரண முகாம்களில் இருந்தவர்கள் குடித்தும் பழைய துணிகள் வேண்டாமென்று மறுத்தும் நன்றாகச் சாப்பிட்டும் நேரத்தைக் கழித்தார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு சில பத்திரிகைகளில் வந்தது. எந்தச் சிறுமையிலும் வீழ்ச்சியிலும் வாழ்க்கையின் சந்தோஷங்களை, கொண்டாட்டங்களைக் கைவிடாத தன்மைக்கு அடையாளமாக நான் அதைப் பார்த்தேன். அதுதான் சரியென்றும் தோன்றியது. அதனால் இயல்புவாதம் என்பது சிறுமையையும் வீழ்ச்சியையும் சொல்லவே கையாளப்பட்டுள்ளது என்ற வாக்கியம் என்னளவில் கொஞ்சம் அதிரடியான வாக்கியம்தான். இயல்புவாதம் என்பது சந்தோஷத்தையும் கொண்டாட்டத்தையும் சொல்லக் கூட ஏன் இருக்கக் கூடாது, இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இத்தொகுப்பில் உள்ள எல்லாக் கட்டுரைகளுமே எனக்குப் பிடித்திருந்தன. புத்தக விமர்சனங்களையும் வாசக அனுபவங்களையும் தேடிப் படிப்பதில் எனக்குள்ள ஆர்வம் ஒரு கூடுதல் காரணமாக இருக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கொஞ்சம் பெரி...........ய்ய பதிவாகிவிட்டது.
Post a Comment