Monday, December 24, 2007

பூக்களில் உறங்கும் மௌனங்கள்

எழுதத் தொடங்குகிறான்
இருண்மையை
வெறுப்பின் மையெடுத்து

வெளிச்சம் போதவில்லை
சன்னலைத் திறந்து வைக்கிறான்
சன்னல் திறந்திருப்பதில் பிரச்னையில்லை
எந்த வெளிச்சமும் போக்காத
இருண்மையைத்தான் எழுதப் போகிறான்

உள்ளறைகளின்
நாற்றம் தாங்கவில்லை
வார்த்தைகளுக்கு
வாசனை தடவுகிறான்
வார்த்தைகளுக்கு வாசனை தடவுவதில் பிரச்னையில்லை
எந்த மருந்தடித்தாலும் குமட்டுகிற
இருண்மையைத்தான் எழுதப் போகிறான்

காமத்தை
காதலை
நட்பை
விரக்தியை
நம்பிக்கையை
சோகத்தை
இன்பத்தை
குரூரத்தை
பகைமையை
பொறாமையை
சுயநலத்தை
வாழ்க்கையை

பாதங்களாலும் அலகாலும்
சீய்த்துச் சீய்த்துக்
கோழி வரைகிற மலஓவியம்போல
கவிதை விரிகிறது
காலத்தின் இருள்வெளியில்

சிறுநீர் விரவும் மண்தரை மாதிரி
பரவுகிறது இருள்
அறையெங்கும் மெதுவாக

பிணத்தின் மாலைகளிலிருந்து
வீசுகிற மணம்போல
இருள்துளிகளிலிருந்து
வெளியேறி நிறைக்கின்றன
விதவிதமாய்ப் பூக்கள்
மௌனமாய் அறையை

பூக்களால் உயிர்பெறும் பிணம்போல
ஒளிபெற்று மணக்கிறது
இருண்மையின் கவிதை

பி.கு: சிறில் அலெக்ஸ் நடத்தும் நச் கவிதைப் போட்டிக்காக

4 comments:

cheena (சீனா) said...

கவிதை அருமை. வித்தியாசமான சிந்தனை. உவமை என்பது உயர்ந்ததின் மாட்டே ! இது எழுதாத இலக்கணம். சிந்திக்கலாம்.

PKS said...

சீனா அவர்களுக்கு, தங்கள் கருத்துகளுக்கு நன்றி. உவமை என்பது உயர்ந்ததன் மாட்டே என்பது கம்பர் காலத்திலேயே காலாவதி ஆகிவிட்டது என்பது என் தாழ்மையான அபிப்ராயம். பால காண்டத்திலே ஆற்றுப் படலத்திலே ஒரு பாடல்.

தலையும் ஆகமும் தாளும் தழீஇயதன்
நிலைநி லாதிறை நின்றது போலவே
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்
விலையின் மாதரை ஒத்தது அவ்வெள்ளமே.

வெள்ளத்தை விலைமாதருக்கு ஒப்பிடுகிற பாடல். அதேபோல தனிப்பாடல் திரட்டுகளில் பலபாடல்கள் பெரிய விஷயத்திற்கும் சிறிய விஷயத்திற்கும் சிலேடையாக அமைந்திருக்கின்றன என்று படித்த ஞாபகம். ஆனாலும் தங்கள் கருத்தை நினைவில் கொள்கிறேன். அன்புடன், பி.கே. சிவகுமார்

Boston Bala said...

கவிதை பிடித்திருக்கிறது. நன்று

PKS said...

நன்றி பாஸ்டன் பாலாஜி.