இந்தவாரத் திண்ணையில் கோபால் ராஜாராம் காந்தியைப் பற்றிய சில கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். காந்தியின்மீது பெருமதிப்பும் மரியாதையும் உடையவர் கோபால் ராஜாராம். அது அவர் எழுத்துகளிலும் தெரிகிறது. இலக்கியத்திற்கு அப்பாற்பட்டு என்னையும் அவரையும் இணைப்பதும்கூட, காந்தி, ஜெயகாந்தன், பெரியார் உள்ளிட்ட பல ஆளுமைகள் குறித்து எங்களுக்கு இருக்கிற பொதுப்பார்வையே என்று சொல்லலாம். பெரியார் எழுதியவற்றையும் பேசியவற்றையும் வாசித்து வந்ததைவிட, ராஜாராமுடனான தனிப்பட்ட உரையாடல்களாலேயெ பெரியார் பற்றிய என் பார்வை வளர்ச்சியும் விசாலமும் அடைந்தது.
நான் சமீபகாலமாகத் திண்ணை, வலைப்பதிவு உள்ளிட்டப் பொதுவெளிகளில் உரையாடலிலும் விவாதத்திலும் ஈடுபடுவதை மிகவும் கவனமாகத் தவிர்த்து வருகிறேன். இது என் நேரத்தையும், ஆற்றலையும், வளர்ச்சியையும் நான் திட்டமிட்டப் பாதையில் செலுத்த உதவுகிறது. ஆதலால், இங்கும்கூட என் கருத்துகளைப் பதிவு செய்துவிட்டு, அத்தோடு அதை மறந்துவிட ஆசை. இதில் மற்றவர்களுக்குக் கருத்துகள் இருந்தால் அதைப் படிப்பதில் தயக்கமில்லை.
காந்தி பற்றி, "கிலாஷபத் இயக்கம் என்ற பிற்போக்கு இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததன் மூலம், முஸ்லீம்களின் நல்லெண்ணத்தைப் பெறமுடியும் என்ற அவர் எண்ணம், அதன் மூலம் மதச்சார்பற்ற கருத்துகள் கொண்ட முஸ்லீம்களைக் கைவிடுவதில் முடிந்து பெரும் வன்முறைக்கு வித்திட்டது." என்று ராஜாராம் எழுதியிருக்கிறார். இந்தக் கருத்து ஆதியிலிருந்து யாரால் ஏன் முன்வைக்கப்படுகிறது என்றவற்றுள் போகாமல், இந்தக் கருத்தின் தன்மையை மட்டும் சற்று அலசுவோம்.
1. அமெரிக்கக் கால்பந்து விளையாட்டில் Monday Morning Quarterbacking என்று ஒரு சொலவடை உண்டு. பொதுவாக, அமெரிக்கக் கால்பந்தின் பெரும்பாலான ஆட்டங்கள் ஞாயிறன்று நடக்கும். ஒவ்வொரு அணியிலும் எதிரணிக்கு எதிராக அந்த அணியின் தாக்குதலை (offense) முடிவுசெய்து வழிநடத்துபவர் Quarterback என்று அழைக்கப்படுவார். தனக்குப் பிடித்த அணியின் குவார்ட்டர்பேக் என்ன தவறு செய்தார், என்ன செய்திருந்தால் வென்றிருக்கலாம் என்று பலவிதமான ஆய்வுகளை விளையாட்டு முடிந்த அடுத்த நாள் (திங்கள்) அன்று அணியின் ரசிகர்களும், விளையாட்டு ஆய்வாளர்களும் செய்வார்கள். அதைக் கிண்டலாக, Monday Morning Quarterbacking என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம், ஆட்டத்தின் போக்கில், ஆட்டத்தின் நடுவில், quarterback தனக்கு அப்போது மிகவும் சரியென்று நம்பி எடுத்த முடிவை, மற்ற அணியின்வீரர்களும் அதன்படி ஆடியதை, அடுத்த நாள் விமர்சிக்கிற போக்கு சரியில்லை என்பதுதான். நிஜமான ஆட்டமும், ஆட்டத்திற்கு வெளியே நின்று பேசுவதும் வேறு வேறு என்பதை உணர்த்துகிற சொலவடை இது. கிலாபத் இயக்கத்திற்குக் காந்தி அளித்த ஆதரவைப் பற்றி, நாம் Many years after quarterbacking செய்து கொண்டிருக்கிறோம் என்பது ராஜாராமுக்கும் தெரியவில்லை என்பது என் ஆச்சரியமே. ஏனென்றால், காந்தியைப் பற்றி இப்படி வைக்கப்படுகிற மற்ற விமர்சனங்களின் தன்மையைச் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கு அசோகமித்திரன் கதையையும் உதாரணம் காட்டுகிற ராஜாராம் அவர்கள், கிலாபத் இயக்கம் பற்றிய விமர்சனத்தையும் அதேவழியில் பார்த்திருந்தால், காந்தி இதில் தன் இயல்புக்கு மாறாக எதையும் செய்துவிடவில்லை என்பதை அறிந்திருக்கலாம். அந்த நேரத்தில், அந்த இடத்தில் தனக்குச் சரியென்று பட்டதைக் காந்தி செய்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யக்கூடியவரல்ல. அவர் மகன் ஹரிலால் கெட்டுக் குட்டிச்சுவரான பிறகும், நாளைக்கே வந்து தான் திருந்திவிட்டதாகச் சொன்னால் அதை நம்பி அவனுக்கு வாய்ப்பு அளிப்பேன் என்று சொன்னவர். அந்த நம்பிக்கையையே அவர் முஸ்லீம்கள், இந்துக்கள் என்று எல்லா மனிதர்கள்பாலும் கொண்டிருந்தார். கிலாபத் இயக்கத்திற்கு அவர் ஆதரவு அளித்ததன்மூலம் மதச்சார்பற்ற முஸ்லீம்கள்கூட காந்தியைக் கைவிட நேர்ந்தது என்றால், அதற்காக வருந்த வேண்டியவர்கள் காந்தியைக் கைவிட்டவர்களே.
2. கிலாபத் இயக்கத்திற்கு காந்தியடிகள் ஆதரவு அளித்தபோது, அதற்கு ஏதும் எதிர்ப்பு உண்டானதா என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அதற்காகக் காந்தியைக் குறை சொல்ல முடியாது. காங்கிரசுக்குள் எதிர்ப்பு உண்டான பல விஷயங்களில் காந்தி பிடிவாதமாகக் தன் கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். நிறைவேற்றியிருக்கிறார் என்பது வரலாறு. ஆதலால், கிலாபத் இயக்கத்திற்குக் காந்தி கொடுத்த ஆதரவின் நோக்கம், முஸ்லீம்களின் நல்லெண்ணத்தைப் பெற முடியும் என்பதே. இதை ராஜாராமும் சொல்கிறார். நோக்கங்கள்தான் முக்கியம், முடிவுகள் அல்ல என்ற காந்தியவழியை வைத்துப் பார்க்கும்போதே இதில் காந்தியைக் குறைசொல்ல ஏதுமில்லை என்றாகிவிடுகிறது. அப்புறம், சறுக்கல் எங்கிருந்து வந்தது.
3. கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததன் மூலம் முஸ்லீம்களின் நல்லெண்ணத்தைப் பெற்றுவிட முடியும் என்று நினைத்தது காந்தியின் சறுக்கல் என்றால், "இந்து மதத்தின் கறைபடிந்த பீடங்களின் மீது ஏறி நின்றே இந்து மதத்தின் பெருமையைப் பற்றிப் பேசுகிறேன்" என்றும், வேதத்தில் எந்த இடத்திலாவது தீண்டாமை சொல்லப்பட்டிருக்கிறதா என்று சொல்ல முடியுமா என்றும் பலவாறாகத் தன்னை ஒரு லட்சியவாத இந்துவாகக் காட்டிக் கொள்வதன்மூலம், இந்துமதத்தில் இருக்கிற அடிப்படைவாதப் போக்குகளின் நல்லெண்ணத்தைப் பெற்றுவிட முடியும் என்று முயற்சித்ததால், அந்த அடிப்படைவாதச் சக்திகள் அவரைவிட்டுப் பிரிந்துபோய், அவரைக் கொன்றனர். இன்று அச்சக்திகள் நாட்டையே ஆள்கிற அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. இதுவும் காந்தியின் சறுக்கலே என்று சொல்ல முடியும். ஆனால், ராஜராமோ அல்லது கிலாபத் இயக்கத்திற்குக் காந்தியின் ஆதரவு சறுக்கல் என்று சொல்கிறவர்களோ இதைச் சொல்வதில்லை. இங்கே காந்தியைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றால், கிலாபத் இயக்க ஆதரவில் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை.
4. காந்தி கொள்கைகளின்/செயல்களின் நிஜ வாழ்வு வெற்றி தோல்வியில் காந்தியை மதிப்பிட ஆரம்பித்தால், காந்தி மிகப்பெரிய தோல்வியே. காந்தியை இப்படி மதிப்பிடக் கூடாது என்று சொல்லிக் கொண்டே நாமும் ஏதோ ஒரு கருத்தில் காந்தியை அப்படியே மதிப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் காந்தியை முழுமையாகப் புரிந்து கொள்ளக் கடக்க வேண்டிய தொலைவு இருப்பதையே காட்டுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அன்புள்ள சிவகுமார்,
முதல் உலகப்போர் முடிவில், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் வெற்றியைத் தொடர்ந்து எழுந்த கிலாஃபத் இயக்கத்தின் நியாயத்தை உணர்ந்ததன் காரணமாகவே மகாத்மா காந்தியின் அறச்சார்பு அதற்குக் கிடைத்தது. காந்தியடிகளின் அகிம்சை அடிப்படையிலான ஒத்துழையாமை வழிமுறைக்கு முதலில் ஆதரவு தெரிவித்தது கிலாபத் இயக்கத் தலைவர்கள் தாம். அகில இந்திய காங்கிரஸ் இந்த வழிமுறையைப் போராட்ட வடிவமாக 1920-ல் அங்கீகரித்தது அதற்குப் பிறகுதான்.
1942-ல் காந்தியடிகள் நிகழ்த்திய 'Quit India' சொற்பொழிவில் (8.8.1942) அவர் கிலாஃபத் இயக்கத்துக்கான தன் ஆதரவைப் பற்றிக் குறிப்பிடுவது இது -
I co-operated in the struggle for the Khilafat solely on order to discharge my obligation to my neighbour who, I saw, was in distress. As an honest man, a true neighbour and a faithful friend, it was incumbent on me to stand by the Mussalmans in the hour of their trial.
காந்தியம் பற்றிய அருமையான ஒரு வலைத்தளத்தை திரு பி.ஏ.கிருஷ்ணன் சுட்டினார் http://www.mkgandhi.org
அங்கே இது குறித்து மேலதிகத் தகவல்கள் கிடைக்கக் கூடும்.
//காந்தியை அப்படியே மதிப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் காந்தியை முழுமையாகப் புரிந்து கொள்ளக் கடக்க வேண்டிய தொலைவு இருப்பதையே காட்டுகிறது.//
காந்தி சறுக்கி இருக்கிறாரோ என்னமோ, அவருடைய குறிக்கோள் வெற்றி பெற்றதுதான் உண்மை. அதாவது சுதந்திரம். When We look into Bolt and Nuts, Yes there are lot of loop holes. Esply, his point of view on Muslims and diversified. ஆனா இப்போ இதை மதிப்பிடறடங்கிறது தேவை இல்லாத ஒன்று.
அன்புள்ள இரா.மு.
நலமா? எங்கிருக்கிறீர்கள்? தங்கள் பின்னூட்டத்திற்கும், கருத்துகளுக்கும், சுட்டிக்கும் நன்றிகள். அந்த இணையதளத்தை அவசியம் பார்க்கிறேன்.
அன்புடன், பி.கே. சிவகுமார்
http://sar.sagepub.com/cgi/content/abstract/27/3/249
Post a Comment