ஊசிப் போன இப்பதார்த்தம் பிடிக்காமல் போனால், தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டியவர் பா.ராகவன்.
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
என் பெயர் பற்றி ஏற்கனவே இங்கே எழுதியிருக்கிறேன். என் அம்மா சிவபக்தை. ஆதலால் சிவகுமார் என்று பெயர் வைத்தார். என் இனிஷியல் P.K. வீட்டின் பெயரும் தந்தையின் பெயரும் சேர்ந்த இனிஷியல். பள்ளி நாட்களில் இருந்து PK என அழைக்கப்பட்டேன். மூன்றாம் வகுப்புத் தோழனும் பக்கத்து வீட்டு நண்பனுமாகிய மாதவன் சிறுவயதில் என் வீட்டிற்கு வந்து ஒவ்வொருமுறையும் “BK இருக்கானா?” என்று கேட்பார். என் அத்தை “BK இல்லை PK" என்று திருத்துவார். அந்தப் பால்யவயது நினைவுகளைக் கடந்தமுறை சந்தித்தபோதுகூட மாதவன் நினைவு கூர்ந்தார். இது தொடர்ந்து, கல்லூரி நாட்களில் பீக்ஸ்,PK அழைக்கப்பட்டேன். பணியிடங்களில் இணையங்களில் PK, PKS ஆனேன். நெருக்கமான சிநேகித சிநேகதிகளுக்கும் மனைவிக்கும் சிவா ஆகிறேன். என் பெயர்கள் எனக்குப் பிடித்தே இருக்கின்றன. என்னை அழைப்பவர்களுக்கும் அப்படி அழைப்பது பிடித்திருப்பதால்தானே அழைக்கிறார்கள்.
2. கடைசியாக அழுதது எப்போ?
சில வருடங்களுக்கு முன் என் மகன் வலியில் அழுதபோது ஒருமுறை நானும் அழுத ஞாபகம். குழந்தைகள், குடும்பம் தொடர்பான விஷயமெனில் அழக்கூடியவனென அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. மோசமான திரைப்படத்தின் சில சாதாரண உணர்வுமீட்டும் காட்சிகள்கூட சிலநேரங்களில் குபீரென்று வெடித்துக் கிளம்பும் துக்கத்தை உண்டாக்கிவிடுகின்றன. அவற்றை நேர்த்தியாக அடக்கிக் கொள்ளும் சாமர்த்தியமும் உடனெழுந்து விடுகிறது. பொதுவாகவே நான் அதிகம் அழுபவன் இல்லை. பிரச்னைகளும் சோகங்களும் வரும்போது அதை எதிர்கொண்டு சமாளிப்பதற்குத்தான் மனம் முனைகிறது. அதில் அமிழ்ந்துபோக அல்ல. ஆக, எனக்குக் கல்லுளி மங்கன், கல்நெஞ்சக்காரன் என்ற பெயர்கள் இருக்கலாம்.
3. உங்களுக்கு உங்க கையெழுத்துப் பிடிக்குமா?
பள்ளிக் கல்லூரி நாட்களில் என் கையெழுத்து மிகவும் நன்றாக இருக்கும். அதற்காகப் பலமுறை மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறேன். இளங்கலை படிக்கும்போது விடுதி நண்பருடன் அவர் பகுதிநேர மாணவப் பொறுப்பாளராக இருந்த கல்லூரியின் தட்டச்சுப் பயிலகத்திற்குச் சென்றிருந்தேன். கையில் என் பாடம் தொடர்பாக நான் எடுத்த குறிப்புகள் என நினைவு. அதைப் பார்த்த, அங்கே வேலை செய்கிற பெண்மணி, “உங்க கையெழுத்து நன்றாக இருக்கிறது, தலையெழுத்தும் மிக நன்றாக இருக்கும்” என்று சொன்னார். இது என்ன சோதிடம் என்று அப்போது மனதுக்குள் சிரித்தேன். இப்போது அந்தப் பெண்மணியைத் தேடிப் பார்த்து நன்றி சொல்ல வேண்டும் போல இருக்கிறது. கணினிக்கு வந்தபிறகு நான் இழந்தவையில் என் கையெழுத்து மிக முக்கியமானது.
4. பிடித்த மதிய உணவு?
நான் ஒரு போஜனப்ரியன். பலநாடுகளின் உணவுகள் பிடித்த பட்டியலில் உண்டு. சைவத்தில் பிடித்தவை, மத்தியானத்திற்குச் சோறு, என் அம்மா செய்த எண்ணெய்க் கத்திரிக்காய் குருமா, என் மனைவி செய்த பருப்பு ரசம், உருளைக் கிழங்கு மற்றும் காலிஃப்ளவர் வறுவல், தொட்டுக் கொள்ள மல்கோவா மாம்பழம். அசைவமென்றால் வெள்ளாட்டுப் பிரியாணி, தயிர் பச்சடி, மட்டன் குருமா.
5. நீங்க வேறு யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
ஓ.. வெச்சுக்குவேனே.
6. கடலில் குளிக்கப் பிடிக்குமா, அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
அருவியில் குளிக்க அதிகம் பிடிக்கும்.
7. ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
பேச்சோடு உடல்மொழியை (Body Language). ஏறக்குறைய 55% சதவீதத் தகவல் பரிமாற்றம் வார்த்தையல்லாத வழிகளில் நிகழ்கிறது என்று அறிவீர்கள் தானே. பெண்ணென்றால் அவர்கள் உடுத்தியிருக்கும் உடை,அணிகலன் ஆகியவற்றையும் கவனிப்பேன். காரணம், நன்றாக இருந்தால் மனைவிக்கும் மகளுக்கும் சிபாரிசு செய்ய.
8.உங்க கிட்ட உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
தன்னம்பிக்கை, நேர்படப் பேசுதல், விஷயங்களை அணுகுவதில் முதிர்ச்சி ஆகியன பிடித்தவைகளில் சில. சோம்பேறித்தனம், முன்கோபம், ஒளிவுமறைவின்றி கருத்துகள் சொல்வதில் நெருங்கியவர்களைக் கூட காயப்படுத்திவிடும் தன்மை ஆகியன பிடிக்காத சில.
9. உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
இது என் துணைவிக்கும் எனக்குமான ரகசியம். பகிர்ந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்.
10. இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
என்னை வளர்த்த என் பெரிய தாத்தாவும், பெரிய பாட்டியும்.
11. இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
மகன் சதுரங்கத்திற்காக வந்த இடத்தில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆக, வெளியே போகும்போது போடுகிற சாதாரண (casual) உடைதான். லேசான சந்தனம், இளம்பச்சை மற்றும் இளங்கலர்கள் குறுக்கு நெடுக்காக கட்டம் கட்டமாய் ஓடும் அரைக்கை பருத்திச் சட்டை, லேசான காக்கி நிற முழுக்கால் பருத்திச் சொக்காய்.
12. என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
இவ்வளவு நாள் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தேன். பாடம் தொடர்பான ஒலியுரைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆதலால் இடையில் எதையும் பார்க்கவும் கேட்கவும் இல்லை. இனி ஆரம்பிக்க வேண்டும். திரைப்படங்கள் நிறைய பாக்கியுள்ளன.
13.வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
மஞ்சள் என்று பிடித்த நிறத்தைச் சொல்ல ஆசை. மஞ்சள் பேனா என்று பொருள் மாறிவிடுகிற ஆபத்து இருக்கிற போதும்.
14. பிடித்த மணம்?
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு. கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா?
15. நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
நான் இதை எழுதுவதே மிகவும் தாமதமாக. ஆனாலும் நீங்கள் கேட்டுவிட்டதால், Michelle Obama, Hillary Clinton, Kate Winset ஆகியோரை அழைக்கிறேன். அவர்களை எழுத வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
பா. ராகவனின் நையாண்டி வெண்பாப் பதிவுகள் மிகவும் பிடிக்கும். அவரிடம் பிடித்த இன்னொரு குணம், தனக்கு எது சரியாக வருமென்று உணர்ந்து அதற்கு மாறிக் கொள்ளுதல். கதை, கவிதை எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவற்றில் தூரம் தாண்ட முடியாது என உணர்ந்தாரோ என்னவோ, தமிழில் எழுத ஆள் குறைவாக இருக்கும், வரலாற்றுத் துறைக்கு சட்டென மாறிவிட்டார். கொடிகட்டிப் பறக்கிறார். அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் இது. அவரின் ஆப்த நண்பரான ஆர்.வெங்கடேஷுக்கு இக்கலையை பா.ரா. சொல்லித்தர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். வெங்கடேஷ் எழுதுகிற கட்டுரைகள், கதைகள் பல நேரங்களில் சோபிப்பதே இல்லை.
18.பிடித்த விளையாட்டு?
பள்ளிக் காலங்களில் இருந்தே விளையாட்டுப் ப்ரியன். ஆட்டக்காரனாக இல்லை. பள்ளி நாட்களில் கிரிக்கெட் ஆடியதுண்டு. கல்லூரி நாட்களில் வாலிபால், பேட்மிண்டன், ஷட்டல் பேட்மிண்டன் ஆடியதுண்டு. எதிலும் சோபித்ததில்லை. இப்போதும் கூடைப்பந்து, கால்பந்து, அமெரிக்கக் கால்பந்து, கிரிக்கெட் ஆகியவற்றைப் பார்க்கும் ஆர்வம் உண்டு. ஆனாலும், மகன் ஆட ஆரம்பித்த பிறகு, சதுரங்கமும் கால்பந்தும் பிடித்த விளையாட்டாகிப் போயின. தினமும் கற்றுக் கொள்ளப் புதிதாய்ப் பல இருந்தாலும், பல நேரங்களில் நான் சொதப்புகிறேன் என்று தெரிந்தாலும், எனக்கு வயதாகிவிட்டது என்பதை உணர்த்தினாலும், நான் ரசிக்கும் விளையாட்டு செ.. ஸாரி, நீங்கள் நினைப்பது இல்லை. செஸ்.
19. கண்ணாடி அணிபவரா?
இதுவரை இல்லை. கடவுளுக்கு நன்றி.
20. எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
என் மனநிலையையும் முதிர்ச்சியையும் பொறுத்து மாறும் விஷயம் இது.
21. கடைசியாகப் பார்த்த படம்?
Spring, Summer, Fall, Winter... And Spring.
22. என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த அயர்ச்சியில் இருந்து இப்போதுதான் மீண்டிருக்கிறேன். சிறிய இடைவெளிக்குப் பிறகே,பிற புத்தகங்கள் பக்கம் திரும்புவேன்.
23. உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
நான் டெஸ்க்டாப் உபயோகிப்பதில்லை. மடிக்கணினிதான். அதுவும்கூட அலுவலகம் கொடுத்தது. அதில் அலுவலக முறைப்படி, அலுவலக logoவே உள்ளது. அதை நான் மாற்றுவது இல்லை.
24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
அலுவலகத்தில் அந்தத் தளம் முழுதும் கேட்கும் அளவிற்கு பேசுகிறவர்களின் சத்தம் இடையூறென்பதால் பிடிக்காது. ஆனால், அனைவருமே அதைச் சகித்துக் கொள்கிறோம். பிடித்த சத்தமென்றால் அது சத்தம் என்ற வகையில் வராது. இசையெனப்படுமே.
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
வீடு எது என்பதைப் பொறுத்தே இதற்குப் பதில் சொல்ல முடியும். வீடு இந்தியா என்றால், அமெரிக்கா. வீடு அமெரிக்கா என்றால், இந்தியா.
26.உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
என் அலுவலக மேலதிகாரிகளும், மனைவியும் குழந்தைகளுமே என்னை அதிகம் அறிந்தவர்கள் என்ற முறையில் இதற்குப் பதில் சொல்ல அதிகம் தகுதியானவர்கள். செய்வன திருந்தச் செய்வதும், செய்வதில் பரிபூரணத்துக்கான தேடலும் என் தனித்திறன் என்கிறார்கள்.
27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
வன்முறை. எந்தக் காரணத்தின் பொருட்டும் எதையும் அழித்து எதையும் உருவாக்குவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒன்றின் அழிவில்தான் இன்னொன்று உருவாகுமென்றால், அது உருவாகாமல் இருப்பதே எனக்கு உசிதமாக இருக்கிறது.
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
பா.ராகவன் மாதிரியான தினமியங்கும் புத்தகத் தொழிற்சாலைகள் இக்கேள்விக்கு சோம்பல் என்று பதில் சொல்லியிருக்கிற அநியாயத்தை என்ன சொல்ல? ஆனாலும் நான் உண்மை சொல்லித்தான் ஆக வேண்டும். சோம்பல்.
29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
அமெரிக்காவில் வர்ஜினியா பீச். இந்தியாவில் கொடைக்கானல்.
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
அவ்விதத்தில் நிஜமாகவே குறையொன்றும் இல்லை. லௌகீக வாழ்க்கையும் ஆன்மீக வாழ்க்கையும் அமைந்த விதத்தில் நான் பாக்கியசாலி.
31. கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
குடும்பம் அருகில் இல்லாவிட்டால் கிடைக்கிற அதிகப்படியான நேரத்தில் இஷ்டத்துக்குத் தூங்கி, இஷ்டத்துக்கு எழுந்து, இஷ்டத்துக்குச் சாப்பிட்டு, இஷ்டத்துக்கு ஊர் சுற்றி, கூட கொஞ்சம் அதிகம் வாசிப்பு, எழுத்து, திரைப்படம் என நேரம் செலவழிக்கப் பிடிக்கும்.
32. வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா.
Saturday, June 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//23. உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
நான் டெஸ்க்டாப் உபயோகிப்பதில்லை. மடிக்கணினிதான். //
காமெடின்னு நினச்சி சொன்னீங்களா? ஐயா! விண்டோஸ் (மற்றும் அதனையொத்த GUI) இயங்குதளங்களில் இருக்கும் desktop-ஐ பற்றி கேட்டால்... ம்ம்.. இதுக்குத்தான் PMP-க்கு எல்லாம் ரொம்ப படிக்கக் கூடாதுன்னு சொல்றது. :)
வாழ்க்கையைப் பற்றி நல்லாச் சொன்னீங்க. ஆனா இப்படி ஒரேயடியா ‘இன்பம்’னா ஏழைகள், விளிம்புநிலை மனிதர்களின் கஷ்டஙக்ள் பற்றியெல்லாம் நீங்க எதுவும் நினைக்கிறதில்ல போல.
//PMP-க்கு எல்லாம் ரொம்ப படிக்கக் கூடாதுன்னு சொல்றது. :)
//
ஹைய்ய்ய் PMPயா அப்ப அதை பத்தி எக்ஸாம் தயார் செஞ்சது பத்தியும் ஒரு பதிவிடுங்களேன் :)
//Michelle Obama, Hillary Clinton, Kate Winset ஆகியோரை அழைக்கிறேன். அவர்களை எழுத வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.//
:)))))
ஆயில்யன், விரைவில் PMP பற்றி எழுதுகிறேன். நன்றி.
// ஆனா இப்படி ஒரேயடியா ‘இன்பம்’னா ஏழைகள், விளிம்புநிலை மனிதர்களின் கஷ்டஙக்ள் பற்றியெல்லாம் நீங்க எதுவும் நினைக்கிறதில்ல போல //
ஐயா,
வசதியாக வாழ்ந்து கொண்டு, விளிம்புநிலை மனிதர்கள் எப்போதும் துயரத்துடன் அழுது கொண்டிருக்கிறார்கள் என்ற கணிப்பில் வருவது தாங்கள் எழுதியிருப்பது.
எனக்குத் தெரிந்து எல்லாச் சோகங்களுடனும் வாழ்க்கையைப் பெரிதும் கொண்டாடுபவர்கள் விளிம்புநிலை மனிதர்கள்தான். அதை நான் நேரில் பார்த்தறிந்திருக்கிறேன்.
உண்மையிலேயே இந்த டெஸ்க்டாப் விஷயம் குழப்பமாகத்தான் இருந்தது. இப்படி ஒரு கேள்வியா என்று? ஆதலால்,டெஸ்க்டாப்பைச் சொல்கிறார்கள்போல என நினைத்து எழுதினேன். நீங்கள் சொன்னபிறகுதான், இயங்குதளங்களின் background screen பற்றிச் சொல்கிறார்கள் எனத் தெரிகிறது. குழப்பத்திற்கு மன்னிக்கவும்.
//குழப்பத்திற்கு மன்னிக்கவும்.//
நான் முதலில் நீங்கள் ஏதோ ‘கடி’ ஜோக்தான் சொல்கிறீர்கள் என்று உங்கள் நண்பர் dynobuoy-டம் கேட்டேன். அவர்தான் உங்களிடமே கேளுங்கள் என்று கெளப்பி விட்டுட்டார். :)
இன்னமும் சில கேள்விகள் கேட்கச் சொன்னார். நாந்தான் அடக்கி வாசிக்கலாம் என்று விட்டுவிட்டேன் :))
//கதை, கவிதை எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவற்றில் தூரம் தாண்ட முடியாது என உணர்ந்தாரோ என்னவோ, //
பிகேஎஸ், உண்மை நிலவரம் வேறு. நான் கதை எழுதுவதை நிறுத்தவோ, குறைக்கவோ இல்லை. எழுதுமிடத்தைத்தான் மாற்றிக்கொண்டேன். வாரப்பத்திரிகைகள் சிறுகதை/தொடர்கதைகளுக்குக் கட்டாய மரணம் கொடுக்கத் தொடங்கிவிட்டபடியால் காட்சி ஊடகத்துக்கு நகர்ந்துவிட்டேன். இங்கே எழுத்தாளனுக்கு நல்ல மரியாதையும் கௌரவமும் சுதந்தரமும் இருக்கிறது. அவர்களோடு இணைந்து வேலை செய்கையில் திருப்தியாக உணர்கிறேன்.
கவிதை - என்னத்தைச் சொல்ல? நான் என்றைக்குமே கவிஞன் இல்லை. அப்படி ஆகவும் முடியாது. எனக்கு அதற்கான தகுதிகள் கிடையாது. ஆனால் இலக்கணம் தெரியும் என்பதாலும் மொழியின்மீது முழு ஆளுமை செலுத்த வருகிறது என்பதாலும் வெண்பா, விருத்தங்களை சகட்டுமேனிக்குக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக்கொண்டிருக்கிறேன்.எனது மரபுநாச விளையாட்டுகளுக்கு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் யாராவது விசிலடிக்கக் கிடைத்துவிடுகிறார்கள் என்பதும் தமிழின் தலையெழுத்து. அன்றைக்கு ஹரிகிருஷ்ணனும் ஆசாத் பாயும் இல்லாது போயிருந்தால் ராகாகியில் வெண்பாம் போட்டிருக்க மாட்டேன். இன்றைக்கு இலவசக் கொத்தனாரும் பெனாத்தல் சுரேஷும் அகப்படாது போயிருந்தால் ட்விட்டரில் அத்தனை அநியாயம் நிகழ்ந்திருக்காது. என்ன செய்ய? விதி.
வரலாறு - இது நானாகத் தேர்ந்தெடுத்தது என்பதைக் காட்டிலும் பகுதியளவு என்மீது திணிக்கப்பட்டது என்றும் சொல்லலாம். குமுதத்தில் பாகிஸ்தான் எழுதியது மட்டும்தான் நானாகச் செய்தது. அதன் வெற்றி மற்ற அனைத்துக்கும் இட்டுச்சென்றுவிட்டது.ஆனால் ஒரு வரலாற்று மாணவனாக இருப்பது பரம சுகம்.அனுபவித்தால் மட்டுமே இது புரியும்.
மற்றபடி என் அழைப்புக்கு நீங்கள் பதில் சொன்னதற்கு நன்றி.
பாரா/
பதில்கள் அனைத்தும் அருமை.
//. பெண்ணென்றால் அவர்கள் உடுத்தியிருக்கும் உடை,அணிகலன் ஆகியவற்றையும் கவனிப்பேன். காரணம், நன்றாக இருந்தால் மனைவிக்கும் மகளுக்கும் சிபாரிசு செய்ய.
//
ஆஹா! காரணம் சொல்லி தப்பித்துக் கொண்டீர்களே!!
//என் மனநிலையையும் முதிர்ச்சியையும் பொறுத்து மாறும் விஷயம் இது.//
நேர்மையான பதில்!
பிகேஎஸ், பதில்கள் அனைத்தும் அருமை. PMP முடிச்சிட்டிங்களா? சூப்பர்... இங்கே ஒரு ஜென்மம் (நான் தான்) PMP முடிக்கணும்ன்னு நினைச்சு அடுத்த ஜெனரேஷன் சிலபஸ் வந்தாச்சு. உங்களை மாதிரி எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து படித்தால் தான் முடிக்க முடியும்ன்னு நினைக்கிறேன்.
கேவிஆர், நலமா? நன்றி. PMP சீக்கிரம் முடிச்சிடுங்க. 125லிருந்து 150 மணி நேரத் தயாரிப்புதான் தேவை. தயாரிப்புத் தகவல்கள் வேண்டுமெனில் தொடர்பு கொள்ளுங்கள்.
நலம் பிகேஎஸ், ஆரம்பகட்ட வேலையெல்லாம் முடிச்சிட்டேன். கொஞ்சம் உட்கார்ந்து படிக்க வேண்டியது தான் மிச்சம். நீங்க சொன்னது போல தான் வேறொரு நண்பரும் சொன்னார். இந்த ஆண்டிற்குள் முடிக்க வேண்டும்.
Post a Comment