Thursday, May 27, 2010

தினம் சில வரிகள் - 27

காலைக் கழுவிக் கீழிருக்கும் மணற்கறையைக் கரைத்துச் செல்லும் அலைபோல உடலைக் கழுவி காமத்தைக் கரைக்கும் கடல் நீ.

நிலவொளியில் தூங்கும் மரக்கூட்டத்தை திடீரென படபடக்கும் தன் இறக்கையொலியில் எழுப்புகிறது பறவை.

கார்க் கண்ணாடியில் விழும் மழையைத் துடைக்கும் வைப்பர்போல மனதைத் துடைத்துக் கொண்டே இருக்கிறது காதல்

ஹெட்லைட்டுகள் பிரகாசிக்கும் காரின் வெளிச்சத்தில் சாலைக்கு அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

உடற்பயிற்சிக் கூடத்தில் அழகான பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் மனப்பயிற்சிக்கான தேவையை உணர்கிறேன்.

சொற்களுக்கான தூண்டிலில் சிலநேரங்களில் வாக்கியங்களும் சிக்குகின்றன.

நனைதலைப் பற்றி எல்லாரும் எழுதிவிட்டார்கள். நான் துவட்டிக் கொள்ளுதலைப் பற்றி எழுதலாமென இருக்கிறேன்.