Friday, May 28, 2010

Sherlock Holmes - சில குறிப்புகள்

தினம் சில வரிகள் - 28

ஷெர்லாக் ஹோம்ஸ் வரும் கதைகளைப் படித்த என் மகன் ஆர்வத்துடன் பார்க்க விரும்பியதால் இப்படத்தைப் பார்த்தேன். துப்பறியும் கதையை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். இரண்டுமணி நேரப் படம் தொய்வில்லாமல் போகிறது. ஷெர்லாக் ஹோம்ஸாக ராபர்ட் டௌனி ஜூனியர் அனாயசமாக நடித்துள்ளார். எந்த இடத்திலும் மிகை தெரியவில்லை. கச்சிதமாகப் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது. மிகையாக நடிக்கும் தமிழ் நடிகர்கள் சிலர் ஏனோ அவர் நடிப்பைப் பார்க்கும்போது தன்னிச்சையாக நினைவுக்கு வந்தார்கள். ராபர்ட் டௌனி ஜூனியரின் பிற படங்களைப் பார்க்கும் ஆர்வத்தை இப்படம் உண்டாக்கியுள்ளது. ஜீட் லாவுக்கு டாக்டர் வாட்சன் மாதிரியான கனவான் பாத்திரம் இயல்பாகப் பொருந்துவதை இப்படத்திலும் உணர்கிறேன். ஷெர்லாக் ஹோம்ஸ் புதிர்களுக்கு விடைகாணும் போக்கைப் பார்க்கும்போது, லார்ட் ப்ளாக்வுட்டை மிஞ்சிய மந்திரவாதியாக இருப்பாரோ எனத் தோன்றுகிறது. கடைசியில், எப்படிக் கண்டுபிடித்தார் என்பதை அவரே விளக்கி, மாயமந்திரமெல்லாம் மோசடி என்று செய்தியும் தருகிறார். படத்தினூடே மெல்லிய ஓடைபோல ஓடும் wit (இதற்குத் தமிழில் என்ன?) படத்தை ரசிக்கச் செய்கிறது. படத்தின் இயக்குநர் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரத்திலும் நிகழ்வுகளிலும் சிலவற்றை மாற்றியெடுத்திருக்கிறார் என்று IMDB இணையதளத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திரைக்கதையாக்கும்போது சில மாறுதல்களைச் செய்ய வேண்டி இருக்கும் என்பதே நான் இதிலிருந்து புரிந்து கொள்வது.