Thursday, May 06, 2010

தினம் சில வரிகள் - 6


கேபிள் சங்கர் பதிவில் வரும் “சாபாட்டுக் கடை” களின் பெயர்களைத் தொகுத்து தனிப்பதிவாக இட்டால் என்னைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று எழுதியிருந்தேன். “யாரோ ஒருவன்” என்ற பெயரில் எழுதும் அன்பர், அவற்றைத் தொகுத்து மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றிகள்.

இரண்டு நாட்களாக அதிர்ச்சியில் எதையும் எழுத மனம் வரவில்லை. என்னுடன் பணிபுரிந்த நல்ல நண்பர் ஒருவரின் 31 வயது மனைவி பிரசவத்துக்குச் சிலநாட்கள் முன்னர், செவ்வாய் இரவு எதிர்பாராவிதமாக அகால மரணமடைந்தார்.ஏறக்குறைய மூன்று வாரங்கள் முன்னர்தான் அவர் வளைகாப்பில் அவரின் சந்தோஷமான தருணங்களைப் பார்த்தேன். இன்னமும் இதை நம்ப முடியவில்லை. 2010-ல் நான் பார்க்கிற இரண்டாவது திடீர் மரணம் இது. இத்தோடு இது முடியட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

வெளிநாடுகளில் என்னதான் வசதியுடன் வாழ்ந்தாலும், மரணங்கள் நிகழும் சந்தர்ப்பங்களில், இவ்வளவு தொலைவில், கையறு நிலையில் இருக்கிற மாதிரியான துக்கம் பொங்குகிறது. என்னதான் நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் அருகில் இருந்தாலும், இங்கே தெரிந்தவர்களின் மரணத்தை எதிர்கொள்கிற வலிமிக்க தருணங்களில், ஊரில் இல்லாமல் போன சுமையும் சேர்ந்து கொள்கிறது. பார்க்கிற நமக்கே இப்படியெனில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி இருக்கும்?