Thursday, April 01, 2004

சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ

தன்னைக் குறித்தத் தனிப்பட்ட விஷயங்களைத் தராமல், "யார் இவரோ?" என்று பிறர் புருவம் உயர்த்தும்படி, புனைபெயரிலோ பொதுப்பெயரிலோ இணையத்தில் எழுதுபவர்களை முகமூடிகள் என்று யாரோ புண்ணியாவான் வரையறுக்க, அந்தப் பழக்கம் வாழையடி வாழையாய் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இதைக் குறித்து நண்பர் காசி அவர் வலைப்பதிவில் எழுதியபோது, நான் எழுதிய கருத்துகளும், நண்பர் பத்ரி எழுதிய கருத்துகளும் நினைவுக்கு வருகின்றன.

தொகுத்துப் பார்த்தால் - எவரும் நிஜமுகங்கள் இல்லை; எல்லாருமே முகமூடிகள்தான் என்பது பத்ரியும் நானும் எழுதியவற்றின் சாரம். எனவே, சொல்லுபவரின் குலம், கோத்திரம், நட்சத்திரம் என்று ஆராயாமல், என்ன சொல்கிறார் என்று ஆராய்வது மேலானதாக இருக்கும்.

தனிப்பட்ட அடையாளத்தைத் தர நேராமல் ஒருவரைக் காப்பது இணையத்தின் சிறப்புகளில் ஒன்று. அதற்காக இணையத்தைக் குறை கூறாமல், இணையம் வழங்குகிற அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்பவரைக் குறை சொல்வது சரியல்ல.

இப்படி தன்னைப் பற்றிய விவரங்களைத் தராமல் எழுதுபவர்கள் மோசமாகவும், ஆபாசமாகவும் எழுதக் கூடும் என்கிற வாதத்திலே உண்மையிருக்கிறது. அத்தகைய விபத்துகள் நேரிடுமானால், அப்படி எழுதுபவர்களை முற்றிலும் அலட்சியம் செய்துவிட்டுப் போகிற வழி இருக்கிறது. அல்லது, தனிப்பட்ட முறையில் வரம்புமீறி கொடுமைப்படுத்தப் படுவோமேயானால், இப்படி எழுதுபவர்களைக் கண்டுபிடித்து அவர்களின் மேல் நடவடிக்கை எடுப்பது பெரிய காரியமில்லை. ஆனாலும், எனக்குத் தெரிந்து தமிழ் மடலாடற்குழுக்களிலே வரம்புமீறி யாரும் பேசியதைப் பார்த்த நினைவில்லை. கடுமையாகவும், ஆவேசமாகவும், ஒருதலைப்பட்சமாகவும் கருத்துகளை வைப்பவர்கள் இருக்கக்கூடும். அவற்றையெல்லாம் நம்புகிற மாதிரியான நிஜமுகத்துடன் செய்பவர்களும் இருக்கிறார்களே.

விமர்சனத்தை விரும்பாதவர்களும், மாற்றுக் கருத்துகளை அனுமதிக்காதவர்களும், எல்லா விஷயங்களிலும் தாங்கள் சொல்வதே முடிவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுமே, அடுத்தவர் ஒரு விஷயத்தைச் சொன்னால், அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்காமல், சொல்பவர் யார் என்று புரளி கிளப்பிக் கொண்டு போலீஸ் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

தன்னுடைய தனிப்பட்ட விவரங்களைக் காரணங்களினாலோ காரணங்கள் இல்லாமலோ வெளியிட மறுக்கிற ஆனால் குழுமங்களில் உரையாட விரும்புகிற நண்பர்களைக் கேள்வி கேட்க நமக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றே நான் நம்புகிறேன். இப்படி இந்த விஷயத்தில் நான் நினைப்பதை எழுதுவதில் எனக்குச் சங்கடங்கள் உள்ளன. இதையெல்லாம் நான் முன்னர் நண்பர் காசி வலைப்பதிவில் எழுதப்போய், அதற்கப்புறம் சொந்த விவரங்களைத் தராமல் யாரேனும் எழுதினால், அது நான் என்று நினைத்து ஒவ்வொரு முறையும் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தார் வலைப்பதிவு வைத்திருக்கிற வம்புகளில் ஆர்வமுள்ள நண்பர் ஒருவர். டைனோ, இட்லி வடை, பெயரிலி, ஆப்பு என்று பலரை நான் என்று நினைத்து என்னிடமே கேட்டிருக்கிறார். வம்புக்கும் கிசுகிசுக்கும் முக்கியத்துவம் தருகிற மனோபாவம், நீங்கள் அவரா, நீங்கள் இவரா, இல்லையென்றால் இவர் யாராக இருக்கும் என்று வாக்கெடுப்புகள் நடத்திக் கொண்டிருப்பது. எனவே, அவரைப் போன்ற நண்பர்கள் அவர்களின் கற்பனையின் சுதந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை அளித்துவிட்டுத் தொடர்கிறேன்.

மீண்டும் இதுகுறித்து மேற்கண்ட கருத்துகளை எழுதவும் விவரிக்கவும் அவசியமில்லை. ஆனால், இணையத்தில் முகமூடி என்பதற்கு நாம் வைத்துள்ள வரையறையைக் கொண்டு பார்க்கும்போது, அதிர்ச்சியளிக்கக் கூடிய பல உண்மைகளைத் தமிழ் இலக்கியத்திலும் காணமுடியும்.

அவைகளில் முதலாவது -

திருவள்ளுவரும் ஒரு முகமூடியே என்று சொல்லலாம்.

திருவள்ளுவர் எந்த மதத்தவர் என்று நமக்குத் தெரியாது. அவர் சைவர் என்றும், சமணர் என்றும் இன்றுவரை வாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எல்லா ஜாதிகளும் அவரை தம் ஜாதிக்காரர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்கின்றன. அவர் எவ்வளவு காலம், எங்கு வாழ்ந்தார் என்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. அவரின் பெற்றோர் பெயர் தெரியாது. அவர் குறளிலிருந்து அதை ஊகிக்கிறார்கள். திருவள்ளுவரைப் பற்றி வழங்கிவருகிற கதைகளுக்கு ஆதாரங்கள் எதுவும் கிடையாது. திருக்குறளில் தமிழைப் பற்றியும் எங்கும் அவர் சொல்லவில்லை. திருவள்ளுவரைப் பற்றிய நிஜவிவரங்கள் எதுவும் தெரியாது என்பதால் திருவள்ளுவர் ஒரு முகமூடி என்று ஒருவர் வாதிட முடியும்.

திருவள்ளுவர் மட்டும் முகமூடியில்லை. சங்க காலம் முதல் இன்றுவரை சாகாவரம் பெற்ற பாடல்களை எழுதிய எத்தனையோ பேரை இப்படி முகமூடி என்று வகைப்படுத்தலாம். எழுதியவரின் பெயர், ஊர் போன்ற விவரங்கள் தெரியாமல் எழுதிய பாடலின் பெயராலேயே அழைக்கப்படுகிற புலவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். செம்மண் நிலத்தில் பெய்த மழைநீரைப் பற்றிய தொடரைத் தன் பாடலில் பயன்படுத்திய செம்புலப்பெயல்நீரார், பாழடைந்த ஓர் ஊரின் வீட்டு முற்றத்தில் அணில் விளையாடிய காட்சியை விளக்கிய அணிலாடுமுன்றிலார், குளத்தின் காட்சிகள் இரண்டை வர்ணித்த கயமனார், வெள்ளத்தின் நுரை பாறையில் மோதிக் கரையும் காட்சியை உவமையாக்கிய கல்பொருசிறுநுரையார், குப்பைமேட்டுக் கோழிகளின் சண்டையைப் பாடிய குப்பைக்கோழியார் என்று பலர் முகமூடி என்கிற வரையறைக்குப் பொருந்துபவர்கள்.

ஆனால், இப்படியெல்லாம், முகமூடி என்கிற வரையறையை நம் முன்னோர்கள் செய்ததில்லை. யார் எழுதியது என்று தெரியாவிட்டாலும், அவர்கள் எழுதியதை வைத்தே அவர்களுக்கு புகழ்ப்பெயர்கள் சூட்டியிருக்கிறார்கள். காலத்தை வென்று தம் படைப்புகளினால் - தாங்கள் சொல்லிய கருத்துகளினால் - அப்புலவர்கள் நிலைத்திருக்கிறார்கள்.

அதை நாம் இணையத்திலும் தொடர்வதுதான், தமிழ் மரபாக இருக்கும் அல்லவா?

No comments: