Showing posts with label தினம் சில வரிகள். Show all posts
Showing posts with label தினம் சில வரிகள். Show all posts

Sunday, June 13, 2010

23 மணிநேரம் அடர்த்தியுடனும் ஆழத்துடனும் சிந்தித்து 1 மணி நேரத்தில் எழுதியவை

தினம் சில வரிகள் - 36

தமிழ்சினிமாவில் வெற்றிபெற என்னவழியென்று நண்பரைக் கேட்டேன்.யோசனைக்குப் பின்சொன்னார்.ஆணென்றால் சாரும்,பெண்ணென்றால் மேடமும் போடத்தெரியணும்.

தமிழ் எழுத்தாளனாய் வெற்றிபெற என்னவழியென்று கேட்டேன். உடனடியாக நண்பர் சொன்னார். நல்ல பதிப்பாளர் கிடைக்க வேண்டும்.

உலகஉதைபந்தாட்டம் முடியும்வரை அலுவல் விடுப்பு எடுக்க இயலாதென்ற வருத்தத்தில் விடுமுறை நாட்களிலும் ரெகார்டட் வர்ஷன் பார்க்கலாமென இருக்கிறேன்.

ரெஸ்யூமைமாற்றித் தருகிறேனெனச் சொன்னேன். செய்யலை.என்னை நானே புகழ்ந்தெழுத கூச்சமாக இருக்கிறது.காசுகொடுத்தால் சிறப்பாகச் செய்துதருகிறார்களாம்.

இந்த உலக உதைபந்தாட்டத்தில் அணிகள்,வெற்றி தோல்விக்கு இணையாக பத்திரிகைகளுக்கு வழக்கம்போல மாரடோனாவும் செய்தியாவார்.

நள்ளிரவில் மைக்ரோவேவில் தேநீர் தயாரிக்கும்போது அன்று இரண்டாம் ஆட்டத்துக்குப் பின் குடித்த தேநீர்க் கடைகளும் மனிதர்களும் உடனிருக்கிறார்கள்.

விளையாட்டுவீரர்கள் ரிடையர் ஆனபின் கோச்சுகளாகிறார்கள். எழுத்தாளர்கள் ரிடையர் ஆனபின் என்னவாகிறார்கள்?

ஆயில் ஸ்பில்லில் இருந்து சாரா பாலின் மார்பக உருமாற்று சிகிச்சை செய்துகொண்டாரா என்பதுவரை அமெரிக்கர்களுக்குத்தான் எத்தனை கவலை.

எனக்குத் தெரிந்த ஓர் எழுத்தாளர் எழுத்திலிருந்து ரிடையர் ஆனதும் எழுத ஆரம்பித்தார்.

இந்த வருடம் புல்வெட்டுகிறவரை மாற்றிப் பார்த்தேன். ஆனாலும் புற்கள் வளர்ந்தபடியேதான் இருக்கின்றன.

நடைபாதைக்குள் கிளைநீட்டிப் பூக்கும் தோட்டத்து ரோஜாவின் முட்கள் கிழித்துவிடுமோவென்று தள்ளி நடக்கின்றேன்.

டிவிட்டருக்குத் தமிழர்கள் நன்றி சொல்லவேண்டும். பல எழுத்தாளர்களை அது விழுங்கி, தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

பதிவில் பின்னூட்டவசதியை எடுத்தபின், இயல்பாக எழுத முடிவதாக உணர்கிறேன். பிறர் படிக்கும் வசதியையும் எடுத்துவிட்டால் இன்னும் இயல்பாக எழுதவருமோ.

ஜெயமோகனின் இணைய இடைவெளியைப் பார்த்தால், எத்தனை புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது.

ஒருவாரமுழைத்து அலுவலில் பங்குதாரர்க்கு அறிக்கை தயாரித்தேன்.அதிலுள்ள புள்ளிவிவரத்துக்கு ஆதாரம் கேட்டார்கள். தரமுடியாது.தொழில்தர்மம் என்றேன்.

தமிழுக்கு உழைக்க வேண்டுமென்ற உந்துதலில் இப்போதெல்லாம் கனவிலும்கூட எழுதிக் கொண்டிருக்கிறேன்.

எஸ்.ரா.விடம் பிடித்தது. அமைதியாக எழுதிக் கொண்டு மட்டும் இருக்கிறார்.முக்கியமாக பின்னூட்டம்,வாசகர் கடிதம் வெளியிடுவதில்லை.

எனனைப் பதின்மவயதுக்குத் திரும்ப அழைத்துச் செல்கிறார். விளையாட்டுகளின்போது தொலைகாட்சியே பழியென்று கிடக்கும் மகன்.

நேற்று லாக்-அவுட் செய்தபின் ஒரு கவித்துவமான டிவிட் மனதில் தோன்றியது. காலை எழும்போது கவனித்தேன்.அது நாவலாக வளர்ந்திருப்பதை.

மனைவி,குழந்தைகள்,குடும்பம் பற்றி எழுதி விட்டேன்.பெரிய எழுத்தாளனாக ஒன்றே ஒன்றுதான் தடுக்கிறது. ஒருநாய் வாங்கி பின் அதைப்பற்றி எழுதவேண்டும்.

Saturday, June 12, 2010

ஒரு போஸ்டர்

தினம் சில வரிகள் - 35

தனிப்பட்ட கடிதங்களையும் போஸ்டர் ஒட்டினால்தான் தமிழ் எழுத்தாளன் ஆக முடியும். எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் நண்பர் அருணாசலம் வெற்றிவேல் என் டிவிட்டுகளைப் படித்துவிட்டுக் குழுமத்தில் எழுதிய கடிதங்கள்.

கடிதம் - 2:

மற்ற ட்விட்டுகள் பற்றி தெரியவில்லை..ஆனால்..தங்களுக்கு இந்த form இயல்பாகவே , எளிதாகவே வருகிறது என்று நினைக்கிறேன்..ஆகவே தான் அற்புதமான வரிகள் அடிக்கடி தென்படுகிறது.. வாழ்த்துக்கள்.

- அருணாசலம் வெற்றிவேல்

கடிதம் - 1:

ட்விட்டர் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது..பி.கே.எஸ்ஸின் ட்விட்டுக்கள் தான் எனக்கு முதல் அறிமுகம்.

பி.கே.எஸ்ஸின் ட்விட்டுகள் அருமை என்றால் சுகா கொடுத்த பின்னூட்டம் மிக அருமை..

என்னைப் போன்ற அரைகுறைகளுக்கு ட்விட் என்றால் என்ன என்று விரிவாக சொல்லவும்.

- அ.வெற்றிவேல்

என் பதில்

அருண் வெற்றிவேல் தமிழின் இலக்கியத்தையும் அரசியலையும் நன்கு அறிந்தவர். திறமை எங்கிருந்தாலும் பாரட்டக்கூடியவர். அவருக்கு என் அருமை தெரிவதில் ஆச்சரியமில்லை. அவரைப்போல, மனதில் நினைப்பதோடு நின்றுவிடாமல், இந்த மாதிரி நிறைய கடிதங்களை எனக்கு எழுதுகிறவர்களே நுட்பமான வாசகர்கள். அவர்களுக்காகவே நான் பல வேலைகளுக்கிடையிலும் விடாமல் எழுதுகிறேன்.

மீண்டும் டிவிட்டுவம்

தினம் சில வரிகள் - 34

அந்த எழுத்தாளரைப் பிடிக்குமென்றார் நண்பர்.எப்படி என்றேன்.வம்புகளை வாய்ப்பேச்சில் வைத்துக்கொள்கிறார்.எழுத்தில் கொணர்வதில்லை என்றார்.

புரியாவிடினும் ஸ்பானியமொழி உதைபந்து நேர்முகவர்ணனையாளர்கள், ஆட்டத்தின்மீதான உயிர்ப்பையும் உச்சத்தையும் ஆர்வத்தையும் உணரவைக்கிறார்கள்.

என் குடைக்கு வெளியே பெய்யும் மழையில் என் எழுத்துகள் நனைகின்றன.

படிச்சா புத்தி வரும். நல்லவனா இருக்கவும் வாழவும் படிப்பு அவசியமில்லை என்று இன்று வாழ்க்கை மீண்டும் சொல்லித் தந்தது.

கோடையின் கொடுமையை டிவிட்டரிலும் உணருகிறேன்.

சனி காலை மசாலோதோசை கிடைத்தும் சந்தோஷப்படாமல் வேர்க்கடலை சட்னி இருந்தால் நல்லா இருக்குமே என நினைக்கிற நான் நிச்சயம் ஆணாதிக்கவாதிதான்.

ஒருவாரமாக வலைப்பதிவுகளைப் படித்த அலுப்பு நேற்று மாலை அலுவலிலிருந்து வந்ததும் இரவு உணவைக்கூட அருந்தவிடாமல் தூக்கம் கண்களைத் தழுவிக்கொண்டது.

சனி காலை 5:45க்கே எழுந்துவிட்டேன்.நான் தேர்வெழுதுகிற பருவங்களில்கூட இப்படிச் செய்ததில்லை. மகன் தேர்வெழுதுகிறார்.

எனக்குப் பிடித்த சைனீஸ் உணவைச் சாப்பிடும் ஒவ்வொரு கணமும் மா சே துங்குக்கு என்னை நிச்சயம் பிடித்திருக்கும் என நினைத்துக் கொள்கிறேன்.

குடிக்கலாமா கூடாதா என்ற குழப்பத்தில் முடிவெடுக்கும்முன் வெள்ளியிரவு பல நேரங்களில் வீணாகிவிடுகிறது.

வெற்றுத்தாளில் இருந்தும் கதையோ கவிதையோ கண்டெடுக்க முடிந்தால் நீங்கள் நுட்பமான வாசகர் ஆகிவிட்டீர்கள்.

நள்ளிரவில் கேட்கும் தொலைதூர மின்வண்டி ஓட்ட சத்தத்தில் என் சிறுவயது ஊரின் புகைவண்டி நிலைய சித்திரம் நினைவுக்கு வருகிறது.

மின்விசிறியா குளிரூட்டப்பட்ட அறையா என்றுதான் கேள்வியெழுகிறது. ஜன்னலைத் திறக்கலாமென்பதை மறைக்கிறது திரைசீலை.

கொடுத்த வேலையை மட்டும் செய்யவேண்டுமென்ற ஞானோதயம் கூடுதலாய்ச் செய்த வேலை கவனிக்கப்படாமல் போகும்போதெல்லாம் வருகிறது.

கடைசி நிறுத்தத்தில் மின்வண்டியைத் தனியே விட்டுவிட்டு நடக்கும்போது பிரிவுத்துயரை தற்காலிகமாக உணர்ந்திருக்கிறீர்களா?

அறிவியல் இல்லாமல் அறிவியல் கதை எழுத முடியும். கதையே இல்லாமல் கதை எழுதுவதில்லையா. அப்படித்தான்.

கால்பந்தா செக்ஸா என்று கேட்டதற்குப் பலர் கால்பந்து என்றார்களாம். புரிகிறது.கால்பந்தை 90 நிமிடங்கள் அனுபவிக்கலாம்.

Monday, June 07, 2010

தினம் சில வரிகள் - 33

நேற்று இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் பார்த்தேன். இரண்டும் தெலுங்கில் வெற்றி பெற்ற படங்கள். நாயகி, குணச்சித்திர நடிக நடிகையர் என்று பல தமிழ் முகங்கள். உருவாக்கத்தில் உழைத்தவர்களிலும் தமிழர்கள் இருந்திருக்கலாம். உதவி எழுத்துடன் (சப்-டைட்டில்) தமிழ்ப்படம் பார்த்தது மாதிரியே இருந்தது. இதில் ஒருபடம் பின்னர் தமிழ் நாயகனை வைத்துத் தமிழிலும் வந்து வெற்றிகரமாக ஓடியது. ஒரே கதையும் ஒரே நடிகர்களும் தென்னிந்திய மொழிகளில் வலம் வருவது கலாசாரப் பரிவர்த்தனையும் ஒருமைப்பாடுமென்று சொல்லுவதா? கதைப் பஞ்சத்திலும், கலைஞர்கள் பஞ்சத்திலும், அதைமீறி ஒரே மாதிரியான ரசனைகொண்ட ரசனை பஞ்சத்திலும் இருக்கிறோமென்று சொல்லுவதா? இவை எதுவுமில்லை. எது வெற்றி பெறுகிறதோ எது அந்த நேரத்தில் புகழில் இருக்கிறதோ அதை வைத்து வேகமாகப் பணம் பண்ண முடியுமா என்று பார்க்கும் உத்தி என்றே தோன்றுகிறது. வாயசைவு (டப்பிங்) உதவியுடன் தெலுங்கு பேசுகிற தமிழ்நாயகிகள் தமிழ்ப்படங்களில் தெரிவதைவிட கவர்ச்சிகரமாக தெரிகிறார்கள். இது நமக்குத் தெரியாத ஒன்றைப் பேசுகிறவர் (செய்கிறவர்) மீது வரும் இயல்பான கவர்ச்சியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனாலும், சுந்தரத் தெலுங்கை சுந்தரிகள் பேசக் கேட்பது சுகமே.

Thursday, June 03, 2010

தினம் சில வரிகள் - 32

40 வயதுக்குமேல் பலவருட இடைவெளிக்குப் பின் வேலை தேடுகிற நண்பர் சொன்னார். 18 வயது பெண்ணின் காதலை வெல்லும் பிரயத்தனம் தேவைப்படுவதாக.

டிவிட்டரில் எல்லா எழுத்துவகைகளும் வந்துவிட்டன. ரெஸ்யூம் (பயோடாட்டா) வந்திருக்கிறதா?

இந்த வாரம் நல்ல வெயில். எஸ்.ராமகிருஷ்ணனை நினைத்துக் கொள்கிறேன். கஷ்டங்களை இன்பமென ரசித்தெழுத அவரால் முடியும்.

எதிரணி மீது உளவியல்ரீதியான சீண்டல்களைத் தான் செய்யாமலேயே தன் அணியால் வெல்லமுடியுமென்பதை அறியாத பலவீனம் கோச் பில் ஜாக்சனுக்கு இருக்கிறது.

ராக்கிங் சேரிலிருந்து பார்க்கும்போது உலகமும் ஆடுவது தெரிகிறது.

என்னுடன் சண்டையிட்டவர்களே என்னை மன்னியுங்கள். அடுத்த சண்டையை இன்னும் சிநேகமான மனநிலையுடனும் கரிசனத்துடனும் போடுவோம்.

பேசியென்ன பலனென நினைக்கும்போது மௌனமாக இருக்கிறேன். பேசாமல் இருந்து என்ன பலனென நினைக்கும்போது பேசுகிறேன்.

என் மகன் விமர்சகராகி விடுவாரோ என பயமாக இருக்கிறது. ஷேக்ஸ்பியர் மொழியில் நவீனமே இல்லை என்கிறார்.

டிவிட்டெழுத்துக்குப் பொருத்தமான உவமை கேட்டார். எலவேட்டர் செக்ஸ் என்றேன்.

Monday, May 31, 2010

Outposts in Chess - Kavinayan Sivakumar

It's complicated

தினம் சில வரிகள் - 30

2000-களின் தொடக்கத்தில், Bridges of Madison County என்று ஒரு படம் பார்த்தேன். அந்தப் படம் அப்போது மிகவும் பிடித்திருந்தது. அதன் குழந்தைகள் வழியேயான ஃபாளாஸ்பேக் கதைசொல்லலை மட்டும் வேறு மாதிரியாக எடுத்திருக்கலாம் என அப்போதே நினைத்தேன். இப்போது மீண்டும் பார்த்தால் அப்படம் அதே அளவுக்குப் பிடிக்குமா என்றொரு கேள்வி இருக்கிறது. அதற்கான பதிலை அறிந்து கொள்ளவாவது அப்படத்தை மீண்டுமொருமுறை பார்க்க வேண்டும். ஆனால், அப்படத்தைப் பார்தத் நாள் முதலாக மெரில் ஸ்ட்ரீப் எனக்குப் பிடித்தமான நடிகைகளுள் ஒருவராக ஆகிப்போனார். அவருடைய வசன உச்சரிப்பும், உடல் மொழியும், அலட்டிக்கொள்ளாத நடிப்பும் எனக்குப் பிடித்துப் போயின. ஹாலிவுட்டில் ஜாக் நிக்கசன், மெரில் ஸ்ட்ரீப் என்று நடிக/நடிகைகளில் ஒரு புனிதப் பட்டியல் (revered list) இருக்கிறது என்று பின்னர் தெரிந்தது. அந்தப் பட்டியலுக்கு மெரில் தகுதியானவர்தான் என நினைத்துக் கொண்டேன்.

மெரிலுக்காகப் பார்க்க வேண்டுமென்று எடுத்து வைத்த It's complicated படத்தை இந்த நான்கு நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்து முடித்தேன். தியேட்டரைத் தவிர வீட்டில் ஒரே அமர்வில் என்னால் ஒரு படத்தை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. ஆகையால் அதை இப்படத்தின் குறையாகச் சொல்ல முடியாது. மெரிலுக்கு வயதாகிவிட்டது என்பது படத்தில் தெரிகிறது. நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. விவாகரத்து பெற்ற தம்பதியினருக்கிடையே மீண்டும் உறவு மலர்வதை நிஜவாழ்வில் கேட்டிருக்கிறேன். அதனால் மெரிலுக்கும் அவர் முன்னாள் கணவருக்குமான மீள்உறவு படத்தில் ஆச்சரியம் தரவில்லை. அதேநேரத்தில் மெரில் ஸ்டீவ் மார்ட்டினுடனான புது உறவையும் விரும்புகிறார். இந்தக் குழப்பத்தை மெரில் பாத்திரம் வெளிப்படுத்துகிற உடல்மொழி, சிரிப்பு, குறைவான வசனங்கள் ஆகியன பிடித்திருந்தன. உறவுச் சிக்கலும், குழப்பமும், சீரியசுமான ஒரு கதைக் கருவை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்கள். இத்தகைய கதைகளைச் சீரியஸாகச் சொல்லப்போனால் அபத்தத்திலும், தோல்வியிலும் முடியும் என்பது என் தனி எண்ணம். இத்தகைய படங்களை நகைச்சுவையே சிறப்பாக ஆக்குகின்றன. அலெக் பால்ட்வினுக்கும் ஸ்டீவ் மார்டினுக்கும் நகைச்சுவையில் சோபிக்க மெரில் முன்னாலும் கதையிலும் அதிக இடமில்லை. வயதுக்கு வந்த குழந்தைகள் உடையவர்களின் பிரச்னைகள், உறவுமுறை, காதல் ஆகியவற்றைச் சொல்லும்படியான படங்கள் அதிகம் இல்லை. அதிலும் இந்த வயதுடைய பெண்களின் பிரச்னைகளை அணுகும் படங்கள் அதிகம் இல்லை. அதனால் இயக்குநரின் மிகவும் தைரியமான முயற்சி இப்படமெனச் சிலர் பாராட்டுகிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு உண்டு. இப்படத்தில் மெரில் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று படம் முடிந்தவுடன் தோன்றுகிறது. அதுவே அவர் சிறப்பு.அவரில்லாமல் வேறு ஒருத்தர் அவ்வேடத்தில் நடித்திருந்தால் மட்டுமே மெரிலின் சிறப்பை நம்மால் உணர முடியும். 6/10.

Saturday, May 29, 2010

தினம் சில வரிகள் - 29

நான் வேலையில் மூழ்கிப் போயிருக்கும்போது எதையும் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ப்து உட்பட.

மலச்சிக்கலின்போது உணர்கிறேன்.முந்தையநாள் அப்புத்தகத்தைப் படித்திருக்கக் கூடாதென்றோ அத்திரைப்படத்தைப் பார்த்திருக்க வேண்டாமென்றோ.

குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதைப் பார்க்கும்போது மீண்டும் மாணவனாகும் ஆசை வருகிறது.

பொய் சொல்வதில் உள்ள த்ரில் போய்விட்டது. எல்லாரும் சொல்வதைச் சுலபமாக நம்புகிறார்கள்.

டெஸ்டர்களுக்கும் புரோகிராமர்களுக்கும் உள்ள நேச-வெறுப்பு உறவுமுறையைப் பார்க்கும்போது விமர்சக-எழுத்தாள உறவு நினைவுக்கு வருகிறது

கல்ப் ஆயில் ஸ்பில்லுக்கு யார் காரணமென்று பலதையும் படித்துக் குழம்பிப் போன நண்பர் கேட்டார். ஆயில்தான் காரணமென்றேன்.

நடைப்பயிற்சிக்குப் பின்னான ஆசுவாசத்தில் நம் சுவாசத்தின் வயது தெரிகிறது.

துணுக்கெழுத்துக்கும் டிவிட்டெழுத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் குறித்து 100 டிவிட்டுகள் எழுத வேண்டும்.

தயிரை எப்படிச் சிறப்பாகத் தாளிப்பது என்பது குறித்து ஒரு கட்டுரை தமிழில் இதுவரை எழுதப்படவே இல்லை என்பது வருத்தம் தருகிறது.

அரசியல் எழுதவேண்டாமென கொஞ்சநாளாக இருக்கிறேன். நானெழுதாத அரசியல் போரடிக்கத்தான் செய்கிறது.

இன்றிரவு எழுத வேண்டும். இன்பம் சொட்டும் இவ்வாழ்வின் ஆனந்த வரிகளை, நெரூதாவுக்கு நன்றி சொல்லி.

பேசவராமல் போகிற தருணங்களை எழுதிவிடலாமென்றும், எழுதவராத தருணங்களைப் பேசிவிடலாமென்றும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

சிறுநீர் கழிக்க எழ மனம் வராமல் தூக்கமும் வராமல் படுக்கையில் புரளும் அவஸ்தையெனும் உவமைக்கு எதை ஒப்பிடவெனும் ’கிரியேடிவ் தாட்’டில் உள்ளேன்.

Friday, May 28, 2010

Sherlock Holmes - சில குறிப்புகள்

தினம் சில வரிகள் - 28

ஷெர்லாக் ஹோம்ஸ் வரும் கதைகளைப் படித்த என் மகன் ஆர்வத்துடன் பார்க்க விரும்பியதால் இப்படத்தைப் பார்த்தேன். துப்பறியும் கதையை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். இரண்டுமணி நேரப் படம் தொய்வில்லாமல் போகிறது. ஷெர்லாக் ஹோம்ஸாக ராபர்ட் டௌனி ஜூனியர் அனாயசமாக நடித்துள்ளார். எந்த இடத்திலும் மிகை தெரியவில்லை. கச்சிதமாகப் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது. மிகையாக நடிக்கும் தமிழ் நடிகர்கள் சிலர் ஏனோ அவர் நடிப்பைப் பார்க்கும்போது தன்னிச்சையாக நினைவுக்கு வந்தார்கள். ராபர்ட் டௌனி ஜூனியரின் பிற படங்களைப் பார்க்கும் ஆர்வத்தை இப்படம் உண்டாக்கியுள்ளது. ஜீட் லாவுக்கு டாக்டர் வாட்சன் மாதிரியான கனவான் பாத்திரம் இயல்பாகப் பொருந்துவதை இப்படத்திலும் உணர்கிறேன். ஷெர்லாக் ஹோம்ஸ் புதிர்களுக்கு விடைகாணும் போக்கைப் பார்க்கும்போது, லார்ட் ப்ளாக்வுட்டை மிஞ்சிய மந்திரவாதியாக இருப்பாரோ எனத் தோன்றுகிறது. கடைசியில், எப்படிக் கண்டுபிடித்தார் என்பதை அவரே விளக்கி, மாயமந்திரமெல்லாம் மோசடி என்று செய்தியும் தருகிறார். படத்தினூடே மெல்லிய ஓடைபோல ஓடும் wit (இதற்குத் தமிழில் என்ன?) படத்தை ரசிக்கச் செய்கிறது. படத்தின் இயக்குநர் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரத்திலும் நிகழ்வுகளிலும் சிலவற்றை மாற்றியெடுத்திருக்கிறார் என்று IMDB இணையதளத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திரைக்கதையாக்கும்போது சில மாறுதல்களைச் செய்ய வேண்டி இருக்கும் என்பதே நான் இதிலிருந்து புரிந்து கொள்வது.

Thursday, May 27, 2010

தினம் சில வரிகள் - 27

காலைக் கழுவிக் கீழிருக்கும் மணற்கறையைக் கரைத்துச் செல்லும் அலைபோல உடலைக் கழுவி காமத்தைக் கரைக்கும் கடல் நீ.

நிலவொளியில் தூங்கும் மரக்கூட்டத்தை திடீரென படபடக்கும் தன் இறக்கையொலியில் எழுப்புகிறது பறவை.

கார்க் கண்ணாடியில் விழும் மழையைத் துடைக்கும் வைப்பர்போல மனதைத் துடைத்துக் கொண்டே இருக்கிறது காதல்

ஹெட்லைட்டுகள் பிரகாசிக்கும் காரின் வெளிச்சத்தில் சாலைக்கு அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

உடற்பயிற்சிக் கூடத்தில் அழகான பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் மனப்பயிற்சிக்கான தேவையை உணர்கிறேன்.

சொற்களுக்கான தூண்டிலில் சிலநேரங்களில் வாக்கியங்களும் சிக்குகின்றன.

நனைதலைப் பற்றி எல்லாரும் எழுதிவிட்டார்கள். நான் துவட்டிக் கொள்ளுதலைப் பற்றி எழுதலாமென இருக்கிறேன்.

தினம் சில வரிகள் - 26

நூலகத்தில் புத்தக அடுக்குகளில் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு அமர்ந்தபடி வாசகர்களை எதிர்நோக்கித் தவம் செய்யும் எழுத்தாளர்களைப் பார்க்கிறேன்.

மகன் ரோபாட்டுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். மனிதர்களைவிடச் சொல்வதை அப்படியே கேட்கும் ரோபாட்டுகள் எனக்கும் பிடித்துதான் இருக்கின்றன.

குடியிருப்பில் ஒரு பெண் குழந்தை சைக்கிள் பழகுகிறது. சைக்கிள் தந்தையிடம் பதறாதே,நான் பார்த்துக் கொள்கிறேன் என்றதைக் கேட்டேன்.

3D போர்ன் வரவிருப்பதாகப் படித்தேன். சந்தோஷம்.போர்ன்ல் வரும் பெண் திரையிலிருந்து நேரடியாக இறங்கி நம்மிடம் வராதவரை இது முன்னேற்றமில்லை.

கச்சேரிக்குச் சென்று வந்ததில் பெற்ற கேள்வி. ஏன் எல்லா ராகங்களின் பெயர்களையும் பெண்களுக்கு வைப்பதில்லை.

Sunday, May 23, 2010

கருத்துக்கே எதிரி


தினம் சில வரிகள் - 25

வலைப்பதிவில் பின்னூட்டப் பெட்டியை ஏன் மூடிவிட்டீர்கள் என்று சிலர் கேட்டார்கள். நான் நிம்மதியாக எழுதிக் கொண்டிருப்பது பிடிக்கவில்லையா சிரித்தபடி கேட்டேன். யோசிக்கும்போது பின்வரும் காரணங்கள் சொல்லலாம்.

1. முதலில் எனக்குப் பின்னூட்ட மழை பொதுவாகப் பெய்வதில்லை.வருகிற பின்னூட்டங்கள் சொற்பம்தான்.
2. அப்படியே பின்னூட்டத்தைத் திறந்து வைத்தாலும், கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்ட சில நேரங்களில் நேரமில்லாத என் சூழ்நிலையில் நிறைய உழைக்க வேண்டியிருக்கும்.
3. பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டதால் என்னைக் கருத்துச் சுதந்திரத்தின் எதிரி என்று சொல்லமாட்டார்களா? இணைய அகராதிப்படி பின்னூட்டத்தை மட்டுறுத்தினால் அல்லது வெளியிட மறுத்தால் மட்டுமே கருத்துச் சுதந்திரத்தின் எதிரி. பின்னூட்ட வாய்ப்பே தரவில்லை எனில் கருத்துக்கே எதிரி என்று புதியதாக வேண்டுமானால் சொல்லலாம். அப்படி என்னைப் பற்றிச் சொல்கிறவர்களை வரவேற்கிறேன்.
4. இணையதளங்களில் தான் தடை செய்யப்பட்டபோது வானத்துக்கும் பூமிக்கும் கருத்துச் சுதந்திரத்துக்காகக் குதித்த மகானுபவர்கள், தாங்கள் வலைப்பதிவு ஆரம்பித்துப் பார்த்துப் பின்னூட்டங்களில் வரும் கருத்துகளை மட்டுறுத்த வேண்டி வந்தபோது, ”என் கருத்தை எழுத வலைப்பதிவு வைத்திருக்கிறேன். உங்கள் கருத்தை உங்கள் இடங்களில் சொல்லுங்கள்” என்று அருளிய நியாயவானாக மாறிய கதைகள் இங்குண்டு. அந்த மாதிரி தேவைக்கெற்ப வந்த திடீர் ஞானோதயமா என்று கேட்பவர்களுக்கு வலைப்பதிவின் என் சென்ற இன்னிங்க்ஸில் பின்னூட்டமிடும் வசதி இருந்ததை நினைவுபடுத்துகிறேன்.இந்த முறை சண்டைபோட நிஜமாகவே நேரம் இல்லை. மற்றபடி பதில் சொல்ல விரும்புபவைக்குப் பதிவிலேயே பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.
5. பின்னூட்டங்கள் உற்சாகப்படுத்தும் வழியல்லவா? பின்னூட்டம் இல்லாமல் எப்படித் தொடர்ந்து எழுதுவது? பாராட்டுகிற பின்னூட்டங்கள் தற்காலிக மகிழ்ச்சியைக் கொண்டு வருகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நான் தொடர்ந்து எழுத உத்வேகம் எனக்கு உள்ளிருந்துதான் வரவேண்டும். வெளியிருந்து இல்லை.
6. பெரிய எழுத்தாளர்கள் பலர் பின்னூட்டப் பெட்டி வைத்திருக்கவில்லை. அவர்களுக்கு வாசகர்கள் கடிதங்கள்தான் எழுத வேண்டும். அப்படி வருகிறவற்றில் பாராட்டாய் வருகிற கடிதங்களை மட்டும் தேவைக்கேற்ப மாற்றி எழுத்தாளர்கள் தங்கள் தளத்தில் பிரசுரித்துக் கொள்வது சில சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் இணையத்துக்குக் அளித்த கொடை. அந்த மாதிரி தாங்களும் என்னைப் பாராட்ட விரும்பினால்... :-)

Peaceful Warrior


தினம் சில வரிகள் - 24

ஆர்லாண்டோ மேஜிக் கூடைப்பந்து அணியின் டிவைட் ஹொவர்ட் இன்றைய NBA-வில் Center ஆக ஆடுகிறவர்களில் மிகச் சிறந்தவர். இவ்வருடம் ஆர்லாண்டோ மேஜிக்கின் ப்ளேஆஃப்ஸ் முதல் ரவுண்டில் ஹொவர்ட் நிறைய foul trouble-களில் அவதிப்பட்டார். அதைவிட்டு வெளியே வர இப்படத்தைப் பார்த்ததாக அவர் சொல்லியிருந்தார். இப்படம் அவர் உள்ளமைதியை மீட்க உதவியதாக ஹொவர்ட் சொல்லியிருந்தார். அதனால் இப்படம் என் கவனம் பெற்றது. இணையத்தில் தேடியபோது டான் மில்மேன் எழுதிய அவரின் நிஜவாழ்க்கை குறித்த புத்தகத்திலிருந்து சினிமா வடிவம் பெற்றது என அறிந்தேன். நான் புத்தகத்தைப் படிக்கவில்லை. ஆதலால் புத்தக வடிவம் சரியாக திரைபப்டமாக்கப் பட்டிருக்கிறதா என்று தெரியாது.

என் வீட்டில் ஒரு வளரும் விளையாட்டு வீரர் இருக்கிறார். அதனால் அவருக்கு இப்படம் உதவுமோ எனத் தோன்றியது. அவர் பார்ப்பதற்கு முன் நான் ஒருமுறை பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் பரிந்துரைக்கலாம் என்று முதலில் பார்த்தேன்.

திரைப்படமாக இப்படம் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு. உதாரணமாக, காட்சிகள் தாவித் தாவிச் செல்வது, நேரடியான அறிவுரைகள், சொல்லப்படுகிற அறிவுரைகளில் தென்படும் ஸ்டீரியோத்தன்மை, அறிவுரையைப் பெற்றுத் தருவதாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளின் போதாமை, குருவின் வேடத்தில் நடித்தவர் சிறப்பாகச் செய்யாமை, மெசேஜ் சொல்லும் படங்களின் அப்பட்டமான யதார்த்தமின்மை என்று அடுக்கலாம்.

ஆனாலும், உங்கள் வீட்டில் பதின்ம வயதில் விளையாட்டில் ஆர்வமுடைய, ஈடுபடுவதில் வெல்ல நினைக்கிற குழந்தைகள் இருக்குமானால், அவர்கள் ஒருமுறை இப்படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம். படுக்கையறை காட்சிகளும், குடிக்கும் காட்சிகளும் சில இடங்களில் வருகின்றன. படம் PG-13. ஆனால், அவை அப்பட்டமானவை எனச் சொல்ல இயலாது.இக்காட்சிகளை உங்கள் குழந்தைகள் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறீர்கள் என்றால், அக்காட்சிகள் வரும்போது அவற்றைத் தாண்டிச் செல்லும்படி பார்த்துக் கொள்ளவும்.

இப்படத்தில் வரும் வசன மேற்கோள்களை http://www.imdb.com/title/tt0438315/quotes> என்ற முகவரியில் தொகுத்திருக்கிறார்கள். இவைகளில் பெரும்பாலானவை நம் குழந்தைகள் ஏற்கனவே நம் மூலமோ, பள்ளியிலோ அறிந்தவைதான். இவற்றை நாம் சொல்லும்போது குழந்தைகளுக்கு அவற்றைக் கேட்பதில் ஓர் அலுப்பும்கூட வரலாம். ஆனால், திரைப்படமாகப் பார்க்கும்போது அவர்கள் மனதில் பதியும் வாய்ப்பு உருவாகலாம்.

என் குழந்தைகள் இனிமேல்தான் பார்க்கப் போகிறார்கள். பார்த்துவிட்டு ஏதும் சுவாரஸ்மாகச் சொன்னால் எழுதுகிறேன்.

பரிசோதனை முயற்சிகள்


தினம் சில வரிகள் - 23

1. மரத்தடி இணையக் குழுவில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம். ஒருநாள் பிற்பகல் ஓர் இணைய நண்பருடன் இணைய அரட்டை. அவர் நகைச்சுவையாக எழுதுவது கடினம் என்றார். பொதுவாக அவர் அதைச் சொல்லியிருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பேன். நான் பெரிய அபிப்பிராயம் வைத்திராத ஓர் எழுத்தாளரைச் சொல்லி, அவரைப்போல நகைச்சுவையாக எழுதுவது கடினம் என்றார். அதனால், உந்தப்பட்டு, அது ஒன்றும் கடினமில்லை. தேர்ந்த நகைச்சுவையாக எழுதுவதுதான் கடினம் என்றேன். ஜாலியாக என்னைச் சீண்டும்விதமாய் எழுதிப் பார்த்தால்தான் தெரியும் என்றார் நண்பர் . அவருடன் அரட்டையை முடித்துவிட்டு, ஒருமணி நேரத்தில் ஒரு பகடியை எழுதினேன். மரத்தடி உறுப்பினர்களை மையமாக வைத்த பகடி. மூன்று பிரிவுகளாக எழுதிய அதைப் பெரும்பாலோர் ரசித்தார்கள். சிலர் வருந்தினார்கள்.

2. அப்புறம் டிவிட்டரில் வந்ததும் வெண்பாம். பா.ராகவன் புண்ணியத்தில் எழுதலானேன். இலவசம் உள்ளிட்ட நண்பர்கள் எதிர்ப்பா எழுதினார்கள். அப்படி எழுதிய பல வெண்பாம்களை எழுத்தும் எண்ணமும் குழுமத்தில் பகிர்ந்து கொண்டபோது வ.ஸ்ரீநிவாசன், பாரதிமணி உள்ளிட்ட நண்பர்களுக்கு அவற்றில் பிடித்தவை இருந்தன என்று அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. வெண்பாமுக்கு முன்னோடி பா.ராகவன். அதனாலேயே வெண்பாம் எழுதுகிறவர்கள் அவரைக் காப்பியடிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை.

3. டிவிட்டரில் ரைட்டர்பேயோன் என்ற பெயரில் ஓர் அன்பர் எழுதுகிறார். அவர் டிவிட்களைப் பலரும் பாராட்டுகின்றனர். எனக்கும் அவரின் பல டிவிட்கள் கவனத்தைக் கவரும் வண்னம் இருக்கின்றன. நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அவரும் ரைட்டர்பேயோனைப் பாராட்டினார். இப்படி எழுதுவது சிரமமில்லை என்றேன். சிரமமும் சிரமமற்ற தன்மையும் ஒவ்வொருவரைப் பொருத்தும் வேறுபடக் கூடியது. ஆகையால் ஒருவருக்குச் சிரமமற்றதாகத் தோன்றக்கூடியது இன்னொருவருக்குச் சிரமமாகத் தோன்றலாம். ஒருவருக்கு சிரமமாகத் தோன்றக் கூடியது இன்னொருவருக்குச் சிரமமற்றதாகத் தோன்றலாம். மேலும், என் தன்னம்பிக்கை என் பலமும் பலவீனமும். என்னால் முடியாதவற்றையும் சிலநேரங்களில் முடியும் என்று நினைக்கக் கூடியவன். நண்பர் முய்ற்சியுங்களேன் பார்க்கலாம் என்று தூண்டிவிட்டார். அதனடிப்படையில் சிலவற்றைச் சிலநாட்களாக எழுதி வருகிறேன். இந்த மாதிரி எழுதுவதற்கு ரைட்டர்பேயோன் ஒரு முன்மாதிரி. அந்தப் பெருமை கண்டிப்பாக அவருக்கு உண்டு. ஆனாலும், அவர் காட்டிய வடிவ அடிப்படையில் என் சிந்தனைகளைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், நான் தான் ரைட்டர்பேயோனா என்று டிவிட்டரில் நண்பர்கள் கேட்கிறார்கள். நான் அவர் இல்லை. என் தனிவட்டார நண்பர்கள் இப்படி நான் எழுதுவதில் பல டிவிட்கள் பிடித்திருக்கின்றன என்கிறார்கள். எனக்கும்கூட ஒரு கட்டுரையோ சிறுகதையோ ஆகக் கூடிய விஷயத்தை இப்படிச் சீக்கிரம் சுருக்கமாக 140 எழுத்துகளில் எழுதிவிடுவது 1. எழுதிவிட்ட திருப்தியைத் தருகிறது, 2. நேர நெருக்கடியில் உதவுகிறது. அதனால் எனக்கே சலிப்படிக்கும் வரையில் தொடர்ந்து எழுதலாம் என்றே நினைக்கிறேன். டிவிட்டரில் நானறியாத சிலர் கொஞ்சம் மேலேபோய் நான் ரைட்டர்பேயோனைக் காப்பியடிக்கிறேன் என்கிறார்கள். சுஜாதா போன பின்னும் அவர் நடையை விடாமல் தொடர்ந்து பிடித்து எழுதிக் கொண்டிருக்கும் பலருக்கு மாங்கு மாங்கென்று பாராட்டிப் பின்னூட்டம் விழும் வலையுலகிலிருந்து இந்த மாதிரி கருத்துகளைக் கேட்பதில் எனக்கு வருத்தமில்லை. மேலும் இதையே நான் ரைட்டர்பிசாசோன் என்ற பெயரில் எழுதியிருந்தால் இப்படிப் சொல்கிறவர்களேகூட பாராட்டக்கூடும். முகம் மறைத்துக் கொண்டு எழுதுகிறவர்களையும், பிரபலங்கள் பாராட்டுகிறவர்களையும் பாராட்டும் உளவியல் தமிழ் வலையுலகில் உண்டு என அறிவேன். ரைட்டர்பேயோனே மேற்குலகில் டிவிட்டரில் செய்வதைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர். அதற்காக அவரைக் காப்பி என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் கவிதை எழுதுகிற ஒருவரால் உந்தப்பட்டு கவிதை எழுதுகிற இன்னொருவரைக் காப்பியடிக்கிறார் என்று சொல்வதும்.

நான் மேற்சொன்ன மூன்றுமெ, நேரம் இருப்பின் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவதில் எனக்கிருக்கும் ஆர்வத்தை மட்டுமே காட்டுகின்றன. அந்தப் பரிசோதனை முயற்சிகளுக்கு என்னைத் தூண்டுகிறவர்களுக்கு நன்றிகள். எந்த எழுத்தாளரை முந்தியும் நகைச்சுவையோ, வெண்பாமோ, டிவிட்டோ எழுதிவிட வேண்டும் என்ற அணையாநெருப்பு எதுவும் என்னுள் எரிவதில்லை. ஒரு புத்தகம் போட்டதுமே எழுத்தாள ஆசை போய்விட்டது. அது என்னளவில் நான் நினைப்பதை மிகவும் வெளிப்படையாகவும் திறந்த மனதுடனும் அணுகவும் சொல்லவும் உதவுகிறது.

இந்த மாதிரி பரிசோதனைகளில் ஈடுபடும்போது அதுகுறித்துப் பிறர் சொல்லக் கேட்கும் கருத்துகள் தமிழ் இணையச் சூழலின் உளவியலைப் புரிந்து கொள்ளவும் கொஞ்சம் உதவுகின்றன என்பது கூடுதல் பலனும்கூட.

Saturday, May 22, 2010

Punishing in Chess - Kavinayan Sivakumar


தினம் சில வரிகள் - 22

Thanks to ChessGurukul.com, the article can be read at the following link.

Punishing in Chess by Kavinayan Sivakumar at ChessGurukul.com

நாளைக்காக எழுதிய இன்றைய டிவிட்டுகள்


தினம் சில வரிகள் - 21

கூட்டங்களில் காலணி அறையைப் பார்க்கும்போது எது எந்தக் காலுக்குப் பொருந்தும் எனக் கற்பனை.

வீட்டருகில் வயலில் ஒரு மானைப் பார்த்தேன். என்ன ஆச்சரியம். அதுவும் என்னைப் பார்த்தது. பின் சாவதானமாக பெண்ணைப்போல தலையைத் திருப்பிக் கொண்டது.

குடிக்கும்போதெல்லாம் நிறைய அமைதி கிடைக்கிறது. அமைதியாக உணரும்போதெல்லாம் அந்தப் பதட்டத்தில் இன்னும் குடிக்கத் தோன்றுகிறது.

நண்பர் பறவையியல் ஆர்வலர். அவர் தொடர்பால் பறவைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். சிலநாட்களில் எனக்கு இறக்கைகள் முளைத்திருப்பதை அறிந்தேன்.

வாரக்கடைசியில் பெய்கிற மழை வாரவிடுமுறையில் செய்கிற அலுவலக வேலைபோல என்று வருணபகவானுக்குத் தெரியவில்லை.

பெரிய மார்பகங்களுக்கு ஆசைப்படும் மனநிலை கொண்ட தமிழன், பெரிய கட்டுரைகளைக் கண்டு கேலிசெய்யும் மனநிலை வினோதமானது.

டிவிட்டுவம்


தினம் சில வரிகள் - 20

கவிதை என்றாலே பிடிக்காமல் போகும் தருணம் காதலில் நம்பிக்கை போய் புணர்ச்சியில் நம்பிக்கையுடவராக மாறும் தருணம்.

என்ன வித்தியாசம்.தொலைகாட்சித் தொடரில் நடிப்பவர், பார்ப்பவர் இருவருமே அழுகிறார்கள். வலைப்பதிவில் வாசிப்பவர் மட்டும் அழுகிறார்.

டிவிட்டரை என் இலக்கிய ஆயுதமாகப் பயன்படுத்த முடிவெடுத்துவிட்டேன். மேற்குலகில் அதைத்தான் செய்கிறார்களாம்.

நாள் முழுக்கக் குழந்தைகளின் கர்நாடக சங்கீதக் கச்சேரி. கேட்டபோது புரிந்தமாதிரி இருந்தது. வெளிவந்தவுடன் ஒன்றும் புரியாத மாதிரி இருக்கிறது.

சங்கீதக் கச்சேரியில் நிகழ்ச்சி அறிவிப்பாளரின் அறிவிப்புப் பேச்சு என்ன ராகம் என்று கேட்டால் பக்கத்து இருக்கைக்காரர் ஏன் முறைக்கிறார்.

கச்சேரிக்கு வரும் இளவயது மாமிகளின் சேலைகளெங்கும் சங்கீதத் துகள்கள் பூத்திருக்கின்றன.

கச்சேரிக்கு இடையில் ஒலியின் அளவைக் கூட்டிக் குறைத்து வெறுப்பேற்றும் ஒலியமைப்பாளரை அடுத்தபடியாக மேடையேற்றிப் பாடச் சொல்ல வேண்டும்.

சில டிவிட்டுகள்


தினம் சில வரிகள் - 19

உயிரெழுத்துகளை அறியத் தொடங்கும்போது தமிழ் எழுத்தாளன் ஜனிக்கிறான். தங்கிலீஸ் தெரியவரும்போது அவன் பத்திரிகையாளனாக உருமாறுகிறான்.

மருந்தே போதையாகும் வஸ்துகளுக்கு இரண்டு உதாரணங்கள்: டிவிட்டர், வலைப்பதிவுகள்

நேர்க்கோடாய் ஒழுங்கினைத் தொடரும் மனிதர்கள் எறும்பாகிறார்கள். சுருக்குவழியில் முந்துவோர் அரசியல்வாதியாகவோ ஆட்டோ ஓட்டுநராகவோ ஆகிறார்கள்.

உடற்பயிற்சிக்காக வெயிலில் வியர்வையோடு ஓடிக் கொண்டிருந்தவரை, காரில் ஏசி ஓடப்பார்த்துப் பரிதாபப்பட்டேன். என் தொப்பையை அவரால் பார்க்க முடியாது.

டிவிட்டரில் Profound ஆக எழுத.தெரிந்த காட்சிகளையும்,இல்லையென்றால் பழமொழியையும்,மாற்றிப்போட்டு, கொஞ்சம் கவிதைத்தொனியைச் சேர்க்க வேண்டும்.

Tuesday, May 18, 2010

இன்றைய தமிழ்த் திரைப்பாடல்களில் கண்ணதாசன் தாக்கம் இருக்கிறதா?


தினம் சில வரிகள் - 18

மரபின் மைந்தன் முத்தையாவும் நானும் ஒரே கல்லூரியில் அதே வருடங்களில் இருவேறு முக்கியப் பாடங்களில் (மேஜர்) இளங்கலை பட்டப்படிப்புப் படித்தவர்கள். அவர் தின்ம் வீட்டிலிருந்து கல்லூரி வருபவர் (டே ஸ்காலர்). நான் விடுதியில் வாழ்ந்தவன் (ஹாஸ்டலர்). அவருடைய வகுப்பில் படித்த நண்பர் இரண்டாம் ஆண்டில் விடுதியில் என் அறைத் தோழர். ஆனால், அப்போதும் முத்தையாவை எனக்குத் தெரியாது. மூன்றாம் ஆண்டில் முத்தையா வகுப்பிலிருந்து கல்லூரி மாணவர் தலைவர் (சேர்மன்) பதவிக்கு ஒருவர் போட்டியிட்டார். அவரை என் நண்பர்களும் நானும் ஆதரித்தோம். அப்போது அந்த வேட்பாள நண்பருக்கு “ராஜகுரு” ரோலில் ஒருவரைப் பார்த்தேன். அவர்தான் முத்தையா. வாக்களிப்புக்கு முன் வேட்பாளர்கள் பேசவேண்டிய முக்கியமான பேச்சை முத்தையா எழுதித் தந்தார். “நீங்கள் நடக்கும் பாதையில் ரோஜா இதழ்களைத் தூவாவிட்டாலும், அங்கிருக்கும் முட்களை நீக்குவேன் என உறுதியளிக்கிறேன்” என்ற மாதிரியான கல்லூரி மாணவ,மாணவிகளைக் கவரும் பஞ்ச், கவிதை வரிகள் ஆகியன கொண்டிருந்தது அந்தப் பேச்சு. இப்படியாக,அத்தேர்தலில் முத்தையா எனக்கு அறிமுகமானார். நான் கல்லூரி சார்பாகப் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்வதுண்டு. அதையறிந்த முத்தையா கோவை கம்பன் கழகம் நடத்திய ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார். தலைப்பைப் போட்டிக்கு ஐந்து நிமிடம் முன்னர்தான் தருவார்கள். உடனடியாகப் பேச்சைத் தயார் செய்து, உடனடியாகப் பேச வேண்டும். “கம்பனில் தெரிவது சமூக உணர்வா,...” என்ற மாதிரி இன்னும் இரண்டு உணர்வுகளைச் சேர்த்துக் கொடுத்து, பேசுபவர் ஏதேனும் ஓர் உணர்வை ஆதரித்துப் பேசவேண்டும் என்று தலைப்பு கொடுத்தார்கள். கம்பனில் தெரிவது சமூக உணர்வு என்று எதையோ பேசி மூன்றாம் பரிசு வாங்கினேன். நன்றாகப் பேசுகிறீர்கள், கம்பன் கழகக் குழுவினருடன் அறிமுகம் செய்கிறேன், மேடைகளில் பேச வாய்ப்பு கிடைக்கும் என்றார் முத்தையா. சரி என்று தலையாட்டிவிட்டு அப்புறம் அதைக் கல்லூரி வாழ்க்கை தரும் பிற சந்தோஷங்களில் மறந்துபோனேன். அந்த ஆண்டு மாணவர் தேர்தலில் நாங்கள் ஆதரித்த நண்பர் வென்றதால், கல்லூரி ஆண்டுமலருக்கு முத்தையா பொறுப்பாளராக இருந்தார். அவர் என்னிடம் கேட்டு வாங்கி என்னுடைய புகைப்படத்தைக் கல்லூரி சார்பாகப் போட்டிகளில் பங்கெடுப்போர் புகைப்படங்களுடன் இணைத்துப் போட்டார். அப்போது கல்லூரியில் விடுதி மாணவர்களுக்கு என்று சிந்தனை மன்றம் என்ற அமைப்பு இயங்கி வந்தது. அதில் தட்ட்சச்சு செய்து பின்னர் அதில் சைக்ளோஸ்டைல் செய்து பிரதியெடுக்கும் பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தோம். குயிலிசையோ என்னவோ பெயர். தட்டச்சு உதவிகள் செய்கிற நண்பர் இந்தப் பெயர் வைத்தால்தான் உதவி செய்வேன் என்று சொன்னதால் அவர் சொன்ன பெயரை வைத்துவிட்டோம். அதற்காக உள்ளுக்கு வெளியே என்று ஒரு சிறுகதை எழுதினேன். அதில் பெண் கதாபாத்திரத்தை அது, இது என்று விளிக்கிற மாதிரி வாக்கியங்கள் வந்தன. பொறுப்பாளராக இருந்த தமிழாசிரியர் உயர்திணைக்கு அஃறிணைச் சொல் போடக்கூடாது. திருத்திக் கொடு, பிரசுரிக்கலாம் என்றார். ஐயா, அது உறவின் நெருக்கத்தில் சொல்வதாக எழுதியது. இப்படி எழுதினால்தான் இயல்பாக இருக்கிறது என்று சொன்னதைக் கேட்கவில்லை. அதனால் அந்தக் கதையை அப்படியே வைத்திருந்தேன். இதைக் கேள்விப்ப்ட்ட முத்தையா, அவர் பிரசுரிக்க மறுத்தால் என்ன, கொடுங்கள், கல்லூரி மலரிலேயே போட்டுவிடலாம் என்று அந்தக் கதையையும், அந்தக் காலத்தில் அச்சுபிச்சென்று எழுதிய காதல் கவிதையொன்றையும் கல்லூரி மலரில் பிரசுரித்தார். காலப்போக்கில் இடப்பெயர்ச்சிகளில் அக்கல்லூரி மலர் எங்கே போனது என்று தெரியவில்லை. இப்போது இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது. இளங்கலைப் படிப்பை முடித்தபிறகு முத்தையாவிடம் தொடர்பு விட்டுப் போனது. அவ்வப்போது பத்திரிகைகளில் மரபின் மைந்தன் முத்தையா என்று படித்தபோது, இவர் நம்முடன் படித்தவராயிற்றே என்று நினைத்துக் கொள்வேன். ஜெயமோகன் மூலம் இயக்குநர் சுகா அறிமுகமாகி நல்ல நண்பரானபோது, ”எனக்குக் கல்யாணத்துக்குப் பெண் பார்த்துக் வைத்தது மரபின் மைந்தன் முத்தையாதான், அவர் எனக்கு உறவுமுறை” என்றாரே பார்க்கலாம். அடடே, அவரை எனக்கு நன்றாகத் தெரியுமே என்றேன். முத்தையாவுக்கு கவிதை, பேச்சு, இலக்கியம், நடிப்பு ஆகியவற்றோடு கல்யாண புரோக்கர் என்ற முகமும் இருப்பது அப்போது தெரிய வந்தது. எதில் நுழைந்தாலும் பேரை நாட்டிவிடும் திறமையும் மிக்கவர் அவர். 2008-ல் இந்தியா சென்றபோது பலவருடங்களுக்குப் பின் அவரை நேரில் சந்தித்தேன்.

முத்தையாவுக்கு கண்ணதாசனும் வைரமுத்துவும் மிகவும் பிடித்தமான கவிஞர்கள். அவர் வலைப்பதிவில் “இப்படித்தான் ஆரம்பம்” என்ற தலைப்பில் கண்ணதாசன் குறித்த தன் மனப்பதிவுகளைத் தொடராக எழுதி வருகிறார். பலரும் பாராட்டுகிற, விரும்பிப் படிக்கிற தொடர் அது. அத்தொடரைப் பாராட்டி “எழுத்தும் எண்ணமும்” குழுமத்தில் முத்தையாவுக்கு எழுதிய மடலில் திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம் பின்வருமாறு குறிப்பிட்டார். “இன்றைய தமிழ் சினிமா கலைஞரின் வசனத்தைத் தாண்டி வந்து விட்டது. சிவாஜி
கணேசனின் நடிப்புப் பாணியைத் தாண்டி வந்து விட்டது. பீம்சிங்,பாலசந்தரின் இயக்கமுறைகளைத் தாண்டி வந்து விட்டது ஆனால், தமிழ்சினிமாப்பாடல்கள் கண்ணதாசனுக்கு எழுதப்பட்ட அடிக் குறிப்புகளாகவே உள்ளன என்பது கண்ணதாசனின் மேதைமைக்கு ஒரு சான்று.”

கண்ணதாசனிடம் மரபின் நீட்சி இருந்தது. அவர் நவீனம் மரபின் மீது ஏறி நின்று வளர்ந்த நவீனம். உதாரணத்துக்கு, ஜெயகாந்தன் மாதிரி. 90க்கு அப்புறம் திரைப்பாடல்களில் நவீனம் இருக்கிறது. ஆனால் அவற்றில் மரபின் நீட்சி இல்லை. இருக்கிறதெனில் தெரிந்தவர்கள் சொல்லலாம். 90க்கு அப்புறமான திரைப்பாடல்கள் உதாரணத்துக்கு சுந்தர ராமசாமி எழுத்துகள் போன்றவை. நவீனமானவை. அவற்றில் மரபின் அடையாளமே இருக்காது. அந்தவகையில், அப்பாடல்கள், கண்ணதாசனின் நீட்சி இல்லை. அதனால், தமிழ் சினிமாப்பாடல்கள் இன்னும் கண்ணதாசனுக்கு எழுதப்பட்ட அடிக்குறிப்புகளாகவே உள்ளன என்பது சரியா என்ற கேள்வி எனக்கு எழுகிறது.

இரண்டாவதாக, எம்.எஸ்.வி, இளையராஜா இசைக்கு எழுதிய கண்ணதாசன் இன்று இருந்திருந்தால் இசைக்கருவிகளும் வாத்தியங்களும் ஆட்சிபுரிந்து வார்த்தைகள் பின் தொடரும் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா போன்றோர் இசைக்கு எவ்விதமான பாடல்கள் எழுதியிருப்பார் என்ற கற்பனையும் ஓடுகிறது. அப்படிப்பட்ட இசை அவருக்கு இசைந்ததாக இருந்திருக்குமா என்ற கேள்வியும் பிறக்கிறது.

ஆர்லேண்டோ மேஜிக் Vs பாஸ்டன் செல்டிக்ஸ்


தினம் சில வரிகள் - 17

இத்தொடரின் இரண்டாம் ஆட்டத்தின் மூன்றாம் கால்பகுதி நடந்து கொண்டிருக்கும்போது இதை எழுதுகிறேன்.

மேஜிக் அணி ஆறு ஆட்டங்களில் செல்டிக்ஸை வெல்லும் என தொடர் தொடங்கும்முன் நினைத்தேன். செல்டிக்ஸ் அணி ஆடுகிறவிதத்தைப் பார்த்தால் அதற்கு எதிர்மாறாக அது ஆறு ஆட்டங்களில் வெல்லலாம் எனத் தோன்றுகிறது. க்ளீவ்லாண்ட் கவாலியர்ஸ் அணியை வென்றதில் இருந்து செல்டிக்ஸ் அணியின் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. மேஜிக்குடனான இப்போது நடந்து கொண்டிருக்கும் இரண்டாம் ஆட்டம் வரை செல்டிக்ஸ்ஸின் கையே மேலோங்கியுள்ளது. முதல் ஆட்டத்தைவிட மேஜிக் அணி இரண்டாம் ஆட்டத்தில் முன்னேற்றம் காட்டுகிறது என்றாலும் வெல்வதற்கு இது போதுமா எனத் தெரியவில்லை. மேஜிக் அணியின் கோச் ஸ்டேன் வான் கண்டி திறமையான கோச் என்று பெயரெடுத்தவர். அவருடைய இளைய சகோதரரும், நெடுங்காலம் நியூயார்க் நிக்ஸ் அணியின் கோச்சாக இருந்தவரும், பின்னர் ஹூஸ்டன் ராக்கெட்ஸ் கோச்சாக இருந்து இப்போது NBA கூடைப்பந்து ஆட்டங்களின் வர்ணனையாளராக இருக்கிற ஜெப் வான் கண்டி தன்னைவிட தன் சகோதரர் திறமையானவர் என்று சொல்லி அவருக்கு தன் முந்தைய ஹெட்கோச் பேட் ரெய்லியிடம் அஸிஸ்டெண்ட் கோச் வேலை வாங்கித் தந்தார். பின்னர் ஸ்டேன் ஹீட் அணிக்குக் கோச்சாக இருந்து இப்போது மேஜிக் அணிக்குக் கோச்சாக இருக்கிறார். ஸ்டேன் கோச் செய்யும் அணிகளில் நல்ல முன்னேற்றங்களைக் கொண்டுவருபவர். இவர் ஒரு பர்பக்‌ஷனிஸ்டும் கூட. எப்போதும் கொஞ்சம் டென்ஷனுடன் இருப்பவர். தன்னுடைய அணி மிகவும் சுலபமாக ஜெயித்த ஆட்டங்களில்கூட ”இன்னும் நன்றாக ஆட வேண்டும், இந்தத் தவறுகளைக் களைய வேண்டும்” என்று சொல்கிறவர். ஆகையால் ஸ்டேன் வான் கண்டி மேஜிக் அணி சார்பாக ஆட்டமுறையில் நிறைய சிறுசிறு மாறுதல்களை (அட்ஜெஸ்ட்மெண்ட்ஸ்) கொண்டுவருவார். செல்டிக்ஸ் அணியின் கோச் டாக் ரிவர்ஸ்-ஐ விட இவர் திறமையான கோச்தான். ஆனாலும் வின்ஸ் கார்ட்டரும், ரஷார்ட் லுயிஸும் இதுவரை இத்தொடரில் சரியாக ஆடவில்லை. அவர்கள் டிவைட் ஹொவர்டுக்குக் கைகொடுக்காமல் மேஜிக் அணி இத்தொடரில் வெல்ல வாய்ப்பில்லை. மேஜிக் அணி இதுவரை த்ரீ பாயிண்டர்களும் சரியாகப் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், செல்டிக்ஸ் அணியில் ராண்டொ, கார்னெட்,பியர்ஸ், ரே ஆலன் என்ற நான்கு முக்கிய ஆட்டக்காரர்கள் மட்டுமில்லாமல் உதவி ஆட்டக்காரர்களும் (ரோல் ப்ளேயர்ஸ்) இத்தொடரில் இதுவரை நன்றாக ஆடுகிறார்கள். இவர்களில் யார் ஜெயித்தாலும் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ்க்கு ஈடுகொடுப்பார்களா என்பது இன்னொரு நாளுக்கான பதிவாக வேண்டிய விஷயம்.