Showing posts with label வேதாந்தி. Show all posts
Showing posts with label வேதாந்தி. Show all posts

Saturday, September 22, 2007

வேதாந்தியும் கலைஞரும்

தமிழக முதல்வர் மீதான வன்முறையைத் தூண்டும்படி பேசிய வேதாந்தி மாதிரியான மதஅடிப்படைவாதிகள் ஒருபக்கம் பிறமத அடிப்படைவாதிகளின் வன்முறையைத் தூண்டும் பேச்சைக் கண்டித்துக் கொண்டே இன்னொருபுறம் தங்கள் எதிரிகள் போலவே தாங்களும் செயல்பட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஊருக்குத்தான் உபதேசம். இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்க்கிற பல இந்துத்துவ நண்பர்கள் உள்ளுக்குள் இப்படிப்பட்ட இந்துத்துவ வன்முறைக்கு வக்காலத்து வாங்குவதில் சளைப்பதில்லை. வேதாந்தியை அரசு உடனடியாகக் கைது செய்யவேண்டும். சட்டப்படி அதிகபட்சத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், 84 வயதான, அரசியல் முதிர்ச்சியும் அனுபவமும் உடைய தமிழக முதல்வர் ராமரைப் பற்றி மட்டுமில்லை, எந்த மத நம்பிக்கையைப் பற்றியும் (பிற மதங்களைப் பற்றி அவர் பேசமாட்டார்!) நம்பிக்கையாளர்கள் மனம் புண்படும்படி பேசுவதையும் கண்டிக்கிறேன்.

தினமணி நாளிதழ் சிலநாட்களுக்கு முன்னர் எழுதிய தலையங்கத்தின் பின்வரும் வரிகள் அப்படியே என் எண்ணப் போக்கை ஒத்திருக்கின்றன. இந்த முறை ஆட்சியில் இவ்வளவு நாட்கள் அவர் செய்த பல நல்ல விஷயங்களை இப்படிப்பட்ட உளறல்கள்மூலம் தமிழக முதல்வர் கெடுத்துக் கொள்கிறார்.

"முதல்வர் கருணாநிதிக்கு ஒரு ராசி உண்டு. தனது சொந்த பலம், செல்வாக்கைவிட சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவரை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்திருக்கின்றன. ஒவ்வொருமுறை ஆட்சியில் அமரும்போதும், அவருக்குப் பேராதரவு உருவாகும். அவரை விமர்சித்தவர்கள்கூட, அவர் கனிந்துவிட்டார், மாறிவிட்டார் என்றெல்லாம் கூறி புளகாங்கிதம் அடைவார்கள்.

இவையெல்லாம் ஓரிரு ஆண்டுகளுக்குத்தான். பிறகு, தேவையில்லாத எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவார். அவரது ஆட்சி மக்களால் விரும்பப்படாத ஆட்சியாக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துவிடும். அந்த ராசி இந்தமுறையும் வேலை செய்யத் தொடங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. கடவுள் காப்பாற்றட்டும்."

- பி.கே. சிவகுமார்