Tuesday, January 16, 2018

பி.கே. சிவகுமாரின் ஃபேஸ்புக் பக்கம்


நண்பர்களுக்கு,

ஏறக்குறைய 11 மாதங்களாக, ஃபேஸ்புக்கில் என் பெயரில் ஒரு பக்கம் உருவாக்கி, அங்கே நான் எழுதுகிறவற்றைப் பகிர்ந்து வருகிறேன். வலைப்பதிவைவிட ஃபேஸ்புக்கில் பகிர்வது சுலபமாக இருப்பது பெரிய காரணம். கைத்தொலைபேசியில் எழுதி, கைத்தொலைபேசியிலிருந்தே விரைவாக அங்கே இட்டுவிட முடிகிறது.  ஒவ்வொரு பதிவையும் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது மாதிரியான விவரங்களைப் பெறுவதும் ஃபேஸ்புக்கில் ”மிகவும் சுலபமாகவும் உடனுக்குடனும்” இருக்கிறது. கூடவே பின்னூட்டம் இட நேரமில்லாவிட்டால், விருப்பக்குறி உள்ளிட்ட பல எமோஜிகளை இடும் வாய்ப்பும்.

என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தை https://www.facebook.com/thinkerpks என்னும் முகவரியில் காணலாம்.

என் வலைப்பதிவை படித்து வந்த நண்பர்கள் என் ஃபேஸ்புக் பக்கத்துக்கும் வருமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி!

Sunday, January 14, 2018

பி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வுஜனவரி 2018-ல் பிரக்ஞை பதிப்பகம் வெளியிட்ட தி. பரமேசுவரியின் “தனியள்” கவிதைத் தொகுப்பு (இரண்டாம் பதிப்பு) மற்றும் பி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” (முதல் பதிப்பு) ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்ச்சி, தற்போது நடைபெற்று வரும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில், ஜனவரி 12 - 2018 (வெள்ளி) மாலை, சிக்ஸ்த் சென்ஸ் (புத்தகக் கடை எண்: 700-ல்) சிறப்பாக நடந்தேறியது.

தி. பரமேசுவரியின் தனியள் கவிதைத் தொகுப்பைக் கவிஞர் பெருந்தேவி வெளியிட்டு, கிருத்திகா பெற்றுக் கொண்டு சிறப்பித்தனர்.


பி.கே. சிவகுமாரின் உள்ளுருகும் பனிச்சாலை கவிதைத் தொகுப்பின் முதல் பிரதியைக் கவிஞர் சல்மா வெளியிட்டு, தேர்ந்த இலக்கிய வாசகரும், இலக்கிய ஆர்வலரும்,  நண்பருமான அ. வெற்றிவேல் பெற்றுக் கொண்டு சிறப்பித்தனர்.பி.கே. சிவகுமாரின் உள்ளுருகும் பனிச்சாலை கவிதைத் தொகுப்பின் இரண்டாம் பிரதியைக் கவிஞர் பெருந்தேவி வெளியிட்டு, அமெரிக்க வாழ் தமிழ் அன்பரும், வாஷிங்டன் டி.சி. வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (ஃபெட்னா) முன்னாள் தகவல்-தொடர்பு இயக்குநருமான மயிலாடுதுறை பரமசிவம் சிவகுமார் (எம்.பி. சிவா) பெற்றுக் கொண்டு சிறப்பித்தனர்.

பிரக்ஞை பதிப்பகத்தின் உரிமையாளர் விலாசினி ரமணியுடன் தமிழின் பல நிகழ்காலக் கவிஞர்களும், இலக்கிய ஆர்வலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. புகைப்படம் எடுத்து உதவிய நண்பர்களுக்கு நன்றி.)

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பி.கே. சிவகுமாரின் கவிதைத் தொகுதி உள்ளிட்ட பிரக்ஞை பதிப்பகத்தின் புத்தகங்கள், புத்தகக் கடை எண்கள், 661, 662, 663, 664, 699 மற்றும் 700 புத்தகக் கடைகளில் கிடைக்கும்.

பிரக்ஞை பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்தும் https://www.commonfolks.in/ ஆன்லைனில் கிடைக்கும்.

பி.கே. சிவகுமாரின் கவிதைத் தொகுப்பை ஆன்லைனில் வாங்குவதற்கான நேரிடையான சுட்டி https://www.commonfolks.in/books/d/ullurugum-panichchaalai

உள்ளுருகும் பனிச்சாலை - ஒரு குறிப்பு

தமிழ் இணைய இலக்கிய வாசகர்களுக்குப் பரிச்சயமான பெயர் பி.கே. சிவகுமார். 2000-களின் ஆரம்பத்தில் இணைய பத்திரிகைகள், குழுமங்கள், வலைப்பதிவுகள் ஆகியவற்றின் மூலம் இலக்கிய வாசகர்களின் கவனம் ஈர்த்தவர். சென்னையில் பிறந்த பி.கே. சிவகுமாரின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் வசிக்கிறார்.

நண்பர்களுடன் இணைந்து - தமிழ்ப் புத்தகங்களை இணையத்தில் விற்கத் தொடங்கப்பட்ட முன்னோடி இணையதளமான எனி இந்தியன்.காம் தளத்தையும், எனி இந்தியன் பதிப்பகத்தையும், வார்த்தை மாத இதழையும் நடத்தியவர். வார்த்தை இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்து, அவர் எழுதிய தலையங்கங்கள் கவனம் பெற்றவை.

2006-ல் ஜெயகாந்தன் அணிந்துரையோடும், ஜெயமோகன் முன்னுரையோடும் இவர் எழுதிய இணையக் கட்டுரைகளின் தொகுப்பு, “அட்லாண்டிக்குக்கு அப்பால்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. தன் கருத்துகளை உறுதியாக முன்வைக்கத் தயங்காத தன்மை, தன் ரசனையை எப்போதும் செழுமைப்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கும் திறந்த மனம், கோஷங்களையும் வெற்று வாதங்களையும் தாண்டிய தெளிவு, பழம் இலக்கியங்கள் புத்திலக்கியங்கள் ஆகியவற்றின் மீதான ரசனை சமநிலை, பாசாங்கு அற்ற தெளிவான நடை ஆகியன சிவகுமார் எழுத்தின் சிறப்பம்சங்களாகச் சுட்டப்படுகின்றன. கோபால் ராஜாராம், ஜெயகாந்தன், ஜெயமோகன், இந்திரா பார்த்தசாரதி, வெங்கட் சாமிநாதன், வண்ணதாசன் உள்ளிட்டப் பலரின் பாராட்டுகளைப் பெற்றவர்.

பதினான்கு ஆண்டுகளாக பி.கே. சிவகுமார் எழுதிய கவிதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு - உள்ளுருகும் பனிச்சாலை.

”சிவகுமாரின் கவிதைகளில் தொடர்ந்த சரடாய் இருப்பது நம்பிக்கை. நம்பிக்கை தான் சிவகுமாரின் அடிப்படையான அடையாளம். அது கவிதைக்காக மேற்கொண்ட பாவனை அல்ல.” என்றும் ”சிவகுமாரின் கவிதைளில் வேறு பல தமிழ்க் கவிதைகளில் காணாத ஒரு பதிவு குழந்தைகள் பற்றியது. குழந்தைகளின் மனோபாவங்களை, சந்தோஷங்களை, அச்சங்களை தமிழ்க் கவிதைகளில் வெகு அரிதாகவே நாம் காண்கிறோம்.குழந்தைகளின் உலகில், அவர்களை அங்கிகரித்து, , நுழைவதும் அவர்களை வியப்பதும் இயல்பான கவிதைக் கணங்களாக சிவகுமாரிடம் ஆக்கம் கொள்கின்றது.” என்றும் ”சிவகுமாரின் கவிதைக் குரல் ஒரு தனித்த குரல். புதுக் கவிதையின் வீரியமான மரபுகளை சுவீகரித்துக் கொண்டு, தன் ஆளுமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். தன் இயல்புகளை கவிநயங்களாக்கி, இயல்புக்கு மாறானவற்றை அவற்றின் விமர்சனத்தோடு, ஆனால் கவிதைத் தன்மை மாறாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். பதினான்கு வருடங்கள் எழுதி வந்த கவிதைகளை தேர்வு செய்து காத்திரமான தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே ஆங்காங்கே படித்தவை என்றாலும், தொகுப்பாக படிக்கும் போது ஒரு நிறைவான கவிதானுபவம் கிடைக்கிறது. வெற்று ஓசைகளையும், கூறியது கூறலையும் தவிர்த்து சொல் புதிது , பொருள் புதிது என்று வாசகர்கள் உணரும் வகையில் பதிவு செய்திருக்கிறார். வரவேற்போம்.” என்றும் தொகுப்புக்கு எழுதியுள்ள முன்னுரையில் கோபால் ராஜாராம் குறிப்பிடுகிறார்.

கவிஞர் கல்யாண்ஜி (வண்ணதாசன்) “உள் உருகுதல்” என்ற தலைப்பில் தொகுப்புக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார். ”முதல் வரிதான் எப்போதும் எழுத்தில் நுழைய அனுமதி தரத் தயங்குவது. தொகுப்புக் கவிதைகளின் முதல் வாசிப்பு முடிந்த கையோடு இதை எழுதியிருக்க வேண்டும். நிறைய முறைகள் வாசித்தாகிவிட்டது. ஒவ்வொரு வாசிப்புக்குப் பிந்தியும் ஒவ்வொரு முதல் வரி தோன்றினால், நான் என்ன செய்வேன்?” என்று ஆரம்பிக்கிற கல்யாண்ஜி, சிவகுமார் கவிதைகளின் வரிகளை வைத்தே ஒரு கவித்துவமான அணிந்துரையை எழுதியிருக்கிறார். ”குடியிருப்பில் ஒரு பெண் குழந்தை சைக்கிள் பழகுகிறது. தந்தையிடம் சைக்கிள்,’பதறாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்கிறது. அந்தப் பெண் ஞானக்கூத்தனின் ’சைக்கிள் கமலம்’ ஆக இருக்கலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சைக்கிள் கமலத்தின் தங்கை’ ஆக இருக்கலாம்” என்று சிவகுமாரின் கவிதையை ஞானக்கூத்தனுடனும் எஸ். ராமகிருஷ்ணனுடனும் இணைத்து அன்புடன் அழகு பார்க்கிறது கல்யாண்ஜியின் ரசனை. ”இன்று நான் சிரிக்கிறேன். நானும் ‘மனம் லேசாகிற நாட்களில்’ சிரிப்பவன் தான்.” என்று முடிகிற அந்த அணிந்துரை, இளைய தலைமுறைக்கு மூத்த தலைமுறை அளிக்கும் ஆசிர்வாதம் என வாசகர் உணரமுடியும்.

நன்றி!

Wednesday, May 21, 2014

ஃபேஸ்புக் கரைச்சல்கள்

(Storing here what I shared on my Facebook Wall.)

பாவத்தை
நதியில் கரைக்கலாம்
வரலாற்றை
எதில் கரைப்பது?

(May 18, 2014)
*****

தனியாக இருப்பதும்
தனிமையில் இருப்பதும்
ஒன்றல்ல என்பவர்கள்
தனியைத் தனிமையாகச்
சமாளித்துக் கொள்கிறார்களென
சம்சயம்

(May 11, 2014)
*****

எல்லா அம்மாக்களும்
ஒன்றல்ல
மருமகள்களிடம் கேட்டுப் பாருங்கள்!

(May 11, 2014)
*****

பயன்படுத்தி நாளாகிவிட்டது
தூசி படர்ந்திருக்கிறது
பெரும்பாலுமதன் கைப்பிடியில்
ஈரத்துண்டு உலர்கிறது
சிலநேரங்களில் அவரவர்
கழற்றிமாட்டிய துணிமணிகள்
ஆனாலுமிந்த டிரெட்மில்லைத்
தூக்கியெறிய மனமில்லை
என் காலடித்தடங்களை
வைத்திருக்கிறதே.

(May 11, 2014)
*****

ஒவ்வொரு காலையிலும்
பிளஷ்-அவுட் செய்யப்படுகின்றன
நேற்றைய தினங்கள்.
நினைவில் நிற்கவேண்டுமானால்
தேவையாயிருக்கிறது
வயிற்றுக்கடுப்போ அஜீரணமோ.

(May 11, 2014)
*****

எது கலையென
அறியப்படும் தருணம்
கலைஞன் மரிக்கிறான்
நுட்பாளன் பிறக்கிறான்

(May 11, 2014)
*****

 

மலைகள் இதழ் 43ல் வெளிவந்த கவிதைகள்


நண்பர் சிபிச்செல்வன் நடத்தும் மலைகள்.காம் இணைய இதழின் 43வது இதழில் வெளியான கவிதைகள் இவை. நன்றி சிபிச்செல்வன்.

*****

வானத்தைக் கூண்டுக்குள்
வரவழைக்கத் தெரிந்த கணம்
விடுதலையானது பறவை.

*****

அசைவத்தின் பிரச்னை
உண்பதல்ல
உண்பதற்காக வளர்ப்பது.
இல்லாமலானது
ஜீவகாருண்யமல்ல
வேட்டையின் அறம்.

*****

பனிப்புதையலில் இரைதேடும்
பறவையின் இலக்கு
பனியின் ரகசியங்கள்

*****

அந்தரங்கத் தருணங்களை
அதன்பொருட்டான வார்த்தைகளை
சண்டைகளில் மீட்டெடுத்து
சந்தியில் உலர்த்துகையில்
காய்ந்துபோவது காதலென்று
இவர்களுக்கேன் தெரிவதில்லை?

*****

இலையுதிர்வின் சோகத்தை
மரம் அறியக்கூடும்
பறவை அறியும்
இலையுதிர்த்துப் பருவம் வாழும்
சுயநலம் மரத்துக்குண்டு
இலையில்லாமல் போனால்
இடம்பெயர்வது பறவைதானே.

*****

என் வீட்டில் ஒரு பறவை
இருக்கிறது,
நான்கு சுவர்களுக்குள்
பாதுகாப்பாய் பறக்கிறது
வெயில் மழை பனிப்பொழிவு
பிரச்னைகள் அதற்கில்லை
பதப்படுத்தப்பட்ட விதைகள்
 பறவைக்கான பிரத்யேக உணவு
பாதாம் பிஸ்தா இட்லி தோசை
பிட்ஸா பாஸ்தாவென உண்கிறது
தானாய்க் கற்றுக் கொண்டு பேசுகிறது
பெயர்ச்சொல்லி எங்களையழைக்கிறது
தோள்களில் அமர்ந்தபடி சிறகுகள் கோதுகிறது
தடவிக்கொடுக்க கண் கிறங்குகிறது
ஆளில்லாமல் போனால் தவிக்கிறது
ஆள் நுழையக்கண்டு ஆனந்தக்கூச்சலிடுகிறது
குழந்தையாய் எங்களிடம் உரிமையெடுக்கிறது
சொல்வதைப் பலநேரம் கேட்பதில்லை
என் வீட்டில் ஒரு பறவை
இருக்கிறது
வாழ்கிறது என்றெழுத
ஏனோ தயக்கமாய் இருக்கிறது.

*****
 

கொஞ்சம் கவிதைகள்

எல்லாருக்கும்
தேவையாயிருக்கிறது
ஒரு சித்தாந்தம்
ஒரு தத்துவம்
ஒரு தலைவன்
அல்லது
சிலவரி கவிதை
தன்னை
அடையாளப்படுத்திக்கொள்ள அல்ல‌
வேறுபடுத்திக் கொள்ள

*****

இலக்கியத்தைக் கொண்டாடினோம்
இலக்கியவாதிகளைக் கொண்டாடினோம்
இலக்கியமுகாம்களைக் கொண்டாடுகிறோம்

*****

நம்பிக்கை

கிளையொடிந்த‌ செடிபோல‌
நம்பிக்கை தோற்றாலென்ன‌
வேர்கிளைத்த வாழ்விருக்க‌

நம்பிக்கை நம்மை விடலாம்
நாமதை விட்டோமில்லையென‌
வாழ்ந்திருந்து பார்ப்பதற்கே
தோல்விகள் தேவையன்றோ?

விழுந்தோம்தான்
புண்ணாற்றித் தாய்ம‌டியில்
விழுதுக‌ளாய் எழுவோம்
அதுவ‌ரை கொண்டாடு
உம் வெற்றியை
எம் கைத்த‌ட்ட‌லில்.

Tuesday, February 18, 2014

ஜெயமோகனின் வெண்முரசு - உவமைகள் வர்ணனைகள் - 3


முந்தைய தொகுப்புகளை இங்கே வாசிக்கலாம்:
  1. அத்தியாயங்கள் 1 - 17
  2. அத்தியாயங்கள் 18  - 34

ஜெயமோகனின் வெண்முரசு: எனக்குப் பிடித்த உவமைகளும் வர்ணனைகளும்: 3

வெண்முரசு - நூல் ஒன்று - முதற்கனல்

நீலம் பாரித்துக் குளிர்ந்து கிடந்த சடலத்தில் இருந்து முலைப்பால் வரவில்லை என்பதை மதியம் வரை அழுதபின் கண்டுகொண்ட குழந்தை அவளுடலில் இருந்து பேன்கள் இறங்கிச்சென்றதைப்போல தானும் சென்றது. (Chapter: 35)

முலைகளையே மனமாகக் கொண்டிருந்த அந்தப் பெண்பன்றி தன் காலைச் சற்று விரித்து குழந்தைக்கு இடம் கொடுத்தது. (Chapter: 35)

அவள் முலைகள் ஒடிக்கப்பட்ட கள்ளிச்செடியின் தண்டுகள் போல பால் சுரந்து சொட்டிக்கொண்டிருந்தன. முகத்தை மறைத்த சடைமுடிக்கற்றைகளை விலக்கி சற்றே குனிந்து புழுதியில் நெளியும் புழுவெனக்கிடந்த குழந்தையைப் பார்த்தபின் மெல்ல அமர்ந்து அதைத் தொட்டுப்பார்த்தாள். பின்பு அதை எடுத்து தன் மார்புடன் அணைத்துக்கொண்டு இன்னொரு முலைக்காம்பை அதன் வாய்க்குள் வைத்தாள். (Chapter: 35)

அவளுடனேயே அக்குழந்தை வளர்ந்தது. பாம்பைப் பற்றியபின் விடுவதறியாத வானரம் போல அவள் கங்கைக்கரை ஊர்களெங்கும் பதறியலைந்தாள். எரிந்த வீட்டில் எஞ்சிய மரச்சிற்பம் போன்றிருந்தாள். (Chapter: 35)

அவளுக்குள் ஏற்றம் ஒன்று ஊறிநிறையாத கிணறொன்றை அடியற்ற அகழிக்கு இறைத்துக்கொண்டிருப்பதுபோல. உடலால் துடுப்பிட்டு நிலத்தில் படகொன்றைச் செலுத்துபவள் போல. (Chapter: 35)

எந்நிலையிலும் பின்னடையாமலிருப்பதே வலிமை என்று சிகண்டினிக்கு பன்றிகள் சொல்லின. தன்உயிரை அஞ்சாத கண்மூடித்தனமான முன்னோக்கிய வேகத்தைத்தடுக்கும் ஆற்றலென ஏதும் மண்ணில் இல்லை என்று அறிந்து அதுவானாள். (Chapter: 35)

வராகியின் பெரும்பசி கொண்டிருதாள் சிகண்டினி. முட்டிமுட்டி உழுதுபுரட்டி அழுகலும் குப்பையுமாக அனைத்தையும் அவள் உண்டாள். அவள் கரிய உடல் திரண்டு பருத்தது. முலைகள் முன்னெழுந்து, இடைதிரண்டு விரிந்து, இருளுலகம் விட்டு எழுந்த அரக்கிபோலானாள். அவள் சருமம் இளமையின் ஒளிகொண்டு நனைந்த கரும்பாறை என மின்னியது. அவள் பற்கள் வெண்பளிங்குக் கற்களென மின்னின. அவள் இரு மேலுதட்டு ஓரத்திலும் பன்றியின் தேற்றைகள் என கோரைப்பற்கள் முளைத்தன. (Chapter: 35)

புயலில் ஆடும் பாய்மரம் கொடிமரத்திலறைவது போல மார்பில் மாறி மாறி அறைந்துகொண்டாள். (Chapter: 35)

நாவாய்கள் நகர்ந்த பெருநீர்ப்பரப்பில் வடக்கு வானில் இருந்து தெற்குநோக்கி களைத்த சிறகுகளுடன் தனித்துச்செல்லும் கடைசி வலசைப்பறவைகள் போல அவர்கள் இருவரும் நீந்திக்கொண்டே இருந்தனர். (Chapter: 35)

கரையிலிருந்து நீரில் இறங்கிய ஆலமரத்துப் பெருவேர்களில் கட்டப்பட்ட சிறியபடகுகள் முலைகுடிக்கும் பன்றிக்குட்டிகள்போல துறையை ஒன்றையொன்று முந்தி முட்டிக்கொண்டிருந்தன. வந்தமரும் நாரைகள் சிறகுமடக்குவதுபோல பாய்சுருக்கியபடி பெரும்படகுகள் கரையை அணைந்தபோது அப்பால் முரசுமேடைகளில் இருந்தவர்கள் ஒலியெழுப்பினர். (Chapter: 35)

*******

சிகண்டி ஒருமுறை இமைத்தபின் திடமான குரலில் “ஆம்” என்றான். நெய்கொதித்து ஆவியாவதுபோலஅன்னை உடலில் இருந்து அவள் உயிர் பெருமூச்சுகளாக வெளிவந்துகொண்டிருந்தது. “நான் காசிமன்னன் மகள் அம்பை. அஸ்தினபுரியின் பீஷ்மனால் ஆன்மா அழிக்கப்பட்டு பித்தியானவள். அகத்தின் கனலில் எரிந்து பேயானவள்” என்றாள் அன்னை. மெல்லமெல்ல அவள் உடலில் இருந்த மிருகத்தன்மை ஒழுகிச்சென்றதை, கருகிச்சுருண்டு சேறும் அழுக்கும் படர்ந்த உடலிலேயே பெண்மை குடியேறியதை சிகண்டி வியப்புடன் பார்த்தான். “மகனே, நீ எனக்காகச் செய்யவேண்டிய கடமை ஒன்றிருக்கிறது” என்றபோது அது கைவிடப்பட்ட பெண்ணின் கோரிக்கையாகவே ஒலித்தது. (Chapter: 36)

மட்கிய மரப்ப‌ட்டைபோன்ற கன்னங்களில் விழுந்த கண்ணீர் சுருக்கங்களில் பரவி தாடையில் சொட்டியது. (Chapter: 36)

செய்கிறேன்” என்றான் சிகண்டி. “நீ பீஷ்மரைக் கொல்லவேண்டும்” என்று அன்னை சொன்னாள். சிகண்டி அவள் கையைப்பற்றி “கொல்கிறேன்” என்றான். திடுக்கிட்டவள்போல அம்பை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். “உனக்கு அவர் யாரெனத்தெரியுமா?” என்றாள். சிகண்டி மெல்லிய திடமான குரலில், “யாராக இருந்தால் என்ன?” என்றான். அவள் கைகள் மேல் தன் கைகளைவைத்து மெல்லிய குரலில் “அது நிகழும்” என்றான். “நீ பீஷ்மரை போர்க்களத்தில் கொல்லவேண்டும். அவர் நெஞ்சை என் பெயர்சொல்லி விடும் உன் வாளி துளைத்தேறவேண்டும்” என்றாள். அவள் கைகள் சிகண்டியின் கைகளைப்பற்றியபடி நடுங்கின. சிகண்டி “ஆம்” என்றான். அன்னையின் பேய்முகத்தில் அழகியபுன்னகை ஒன்று எழுவதை சிகண்டி பார்த்தான். அவள் அவன் இருதோள்களையும் பிடித்துக்கொண்டாள். பெருமூச்சுடன் “ஆம், நீ அதைச்செய்வாய். ஒற்றை இலக்குக்காக மட்டுமே வாழ்பவன் அதை அடைந்தாகவேண்டுமென்பது பெருநியதி…இப்போதே அக்காட்சியைப் பார்த்துவிட்டேன்.. பீஷ்மர் உன் அம்பு துளைத்த நெஞ்சில் இருந்து வழியும் குருதியுடன் களத்தில் கிடக்கிறார்…. நீ என் கனல்…” என்றாள். (Chapter: 36)

அழியாத ஒன்றுக்கென்றே வாழ்பவன் சிரஞ்சீவி மகனே. நீ என்றென்றும் சொல்லில் வாழ்வாய்” என்றாள். (Chapter: 36)

நிருதன் வந்து வணங்கினான். அன்னை அவனை நோக்கித்திரும்பினாள். “நிருதரே, இதன்பின் உங்கள் இல்லம் திரும்புங்கள். என் சிதைச்சாம்பலைக் கொண்டு சென்று நீங்களும் உங்கள் குலமும் உங்கள் சிறுதங்கைக்கு நீர்க்கடன் செய்யுங்கள். உங்கள் குலத்தில் நான் என்றென்றும் பிறந்துகொண்டிருப்பேன்” என்றாள். நிருதன் “தங்கையே, அது என் தவப்பயன்” என்றான். (Chapter: 36)

கற்களை உரசி நிருதன் ஏற்றிய நெருப்பு மெல்லச்சிவந்து படபடவென்ற ஒலியுடன் பொற்சிறகுகள் கொண்டு எழுந்தது. அண்டபேரண்டங்களை துப்பும் ஆதி நாகத்தின் செந்நா என தழல் மேலெழுந்து பொறிகிளப்பியது. அலகிலா எல்லைவரை நிறைந்த இருளில் பொறிகள் விழுந்து மறைய காடு மெல்லிய காற்றோடும் மூச்சொலியாகச் சூழ்ந்திருந்தது. அன்னை எழுந்து சிகண்டியின் தலையைத் தொட்டாள். நிருதனின் பாதங்களைத் தொட்டபின் மெல்ல நெருப்பைநோக்கிச் சென்றாள். காதலனை அணுகும் பெதும்பை என தளரும் காலடிகளுடன். பின்பு பசித்தழும் குழந்தையை நோக்கிச்செல்லும் அன்னைபோல. தீ அவள் உடலில் பிரதிபலித்து அவள் செவ்விழிகள் சுடர்ந்த இறுதிக்கணத்தை சிகண்டி தன் நெஞ்சில் பதித்துக்கொண்டான். அருகே சென்ற கணம் அவளில் நெருப்பு தழலாடியது. அவளே ஒரு செந்தழலாகத் தெரிந்த மறுகணத்தில் நெருப்பின் இதழ்கள் விரிந்து அவளை உள்ளே அள்ளிக்கொண்டன. செந்திரை அசையும் பல்லக்கிலேறுவது போல அவள் எரிசிதைமேல் ஏறிக்கொண்டாள். தலைமேல் தூக்கிய கரங்களுடன் அலறியபடி நிருதன் தரையில் விழுந்தான். புற்பரப்பில் முகத்தைப்புதைத்து இருகைகளாலும் செடிகளைப்பற்றியபடி மண்ணுக்குள் புதைந்து விடமுயலும் மண்புழு போல உடல் நெளிந்தான். நின்ற இடத்தில் அசையாமல் சிகண்டி நின்றிருந்தான். அவன் முகத்தில் சிதைநெருப்பின் செம்மை அலையடித்தது. நெருப்புக்குள் அன்னையின் கரிய கைகால்களின் அசைவை, கருஞ்சடைகள் பொசுங்கும் நாற்றத்தை, அவளுடன் எம்பி விழுந்து எரிவிறகில் மெல்லப்படிவதை, அவள் உடல் திறந்து ஊன்நெய் சொட்டி சிதை நீலச்சுவாலையாவதை, உண்டுகளித்த செந்தழல்கள் நின்று நடமிடுவதை இமையா விழிகளுடன் அவன் பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு அவன் களம்படும் கணம் வரை விழிமூடவில்லை என்றனர் சூதர். அவன் துயிலறிந்ததே இல்லை. அவன் கண்ணிமைத்ததேயில்லை என்று அவர்களின் பாடல்கள் பாடின. (Chapter: 36)

நெற்றியில் உந்தப்பட்ட கடா என எம்பி முன்சென்றது. (Chapter: 36)

மீண்டும் சிலையாக நின்ற அவன் முன் கூழாங்கல்லை அடைகாக்கும் பறவைபோல சிகண்டி அமர்ந்திருந்தான். (Chapter: 36)

அதில் எலியின் உடல்போல மெல்லிய மீசையும் தாடியும் முளைக்கத்தொடங்கியிருந்ததைக் கண்டான். (Chapter: 36)

*******

செஞ்சதுப்பில் உழுதுவாழும் காட்டுப்பன்றி மதமெழுந்து நகர்நுழைந்ததுபோல சிகண்டி காட்டிலிருந்து வெளியே வந்தான். (Chapter: 37)

உண்ணும்போது சருகை எரித்து எழும் நெருப்பு போன்ற ஒலி அவனிடமிருந்து எழுவதை அவன் கைகளும் நாக்கும் உதடுகளும் தீயின் தழலாகவே நெளிவதை ஊரார் கண்டனர். (Chapter: 37)

சிகண்டி அவ்வழியாகச் சென்றபோது வியர்த்த பளிங்குமேல் விரலால் இழுத்ததுபோல அமைதியாலான வழியொன்று உருவாகி வந்தது. (Chapter: 37)

தொங்கியிருந்த செம்பட்டுத்திரைச்சீலைகள் காற்றில் நெளிய தீபூத்த வனம்போலிருந்தது அது. (Chapter: 37)

“நான் பீஷ்மரைக் கொல்லவேண்டும்” என்று சிகண்டி சொன்னான். சோமகசேனர் அதிர்ந்து அறியாமல் உயிர்பெற்ற கைகளை மார்பின்மேல் கோர்த்துக்கொண்டார். “நீ சொல்வதென்னவென்று தெரிந்துதான் இருக்கிறாயா? பீஷ்மரைக் கொல்வதென்பது பாரதவர்ஷத்தையே வெல்வதற்குச் சமம்” என்றார். மாற்றமில்லாத குரலில் “அவர் எவரோ ஆகட்டும். அது என் அன்னையின் ஆணை” என்றான் சிகண்டி. சோமகசேனர் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. உதடுகளை அழுத்தியபடி “இக்கணம் நான் பீஷ்மரை எண்ணி பொறாமைகொள்கிறேன். மகத்தான எதிரியைக் கொண்டவன் விண்ணகத்தால் வாழ்த்தப்படுகிறான்” என்றார். (Chapter: 37)

சிகண்டி செல்வதைப் பார்த்தபோது சாளரத்திரைச்சீலைகளை அசைத்து உள்ளே வந்த காற்றை உணர்வதுபோல அவர் நிம்மதியை அறிந்தார். அவருள் இருந்த புகைமேகங்களெல்லாம் அள்ளி அகற்றப்பட்டு ஒவ்வொன்றும் ஒளியுடன் துலங்கி எழுந்தன. (Chapter: 37)

மறுநாள் சிகண்டி அம்பால் மரக்கிளைகளை வெட்டி வீழ்த்தினான். பறக்கும் அம்பை இன்னொரு அம்பால் துண்டித்தான். அவன் கையில் கரியவில் பெருங்காதல் கொண்ட பெதும்பைப்பெண் என நின்று வளைந்தது. அவன் யாழின் தந்தியைத் தொடும் சூதனின் மென்மையுடன் நாணைத்தொட்டபோது குகைவிட்டெழும் சிம்மம் போல அது உறுமியது. வில்குலைத்துநாணேற்றி அவன் அம்புவிடுவதை மீன் துள்ளி விழும் அசைவைப்போலவே காணமுடிந்தது. (Chapter: 37)

*******

அக்னிவேசர் உரத்தகுரலில் சொன்னார். “இளையவர்களே, படைப்பில் அழகு அழகற்றது, நல்லது கெட்டது, தேவையானது தேவையற்றது என்ற அனைத்துப்பிரிவினைகளும் நாம் செய்துகொள்வதென்று அறியுங்கள். அதைச்செய்யும் ஒவ்வொருமுறையும் பிரம்மனிடம் மன்னிப்பு கோருங்கள். அவற்றை பிரம்மனின் விதி என எண்ணிக்கொள்ளும் மூடன் அந்த ஒவ்வொரு எண்ணத்துக்கும் என்றோ பதில்சொல்லக் கடமைப்பட்டவன்.” (Chapter: 38)

சிகண்டி “நான் எப்படி இருக்கவேண்டுமென நானே முடிவெடுத்தேன்” என்றான். (Chapter: 38)

“அறிதலை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை” என்றான் சிகண்டி. (Chapter: 38)

கண்கள் சற்றே விரிய உறுமலின் ஒலியில் சிகண்டி சொன்னான் “என் அன்னையின் சொல்லன்றி எனக்கு எக்கடமையும் இல்லை.” (Chapter: 38)

நடனம்போல மெல்லிய கரம் பின்னால் பறந்து வில்லின் நாணை பூங்கொடி போல வளைத்தது. நாணேறியதை வில் விடுபட்டதை எவரும் காணவில்லை. ஆடித்துண்டில் இருந்து ஒளிக்கதிர் எழுவதுபோல அவரிடமிருந்து கிளம்பிய அம்பு சிகண்டியின் சிகையை வெட்டிவீசியது. (Chapter: 38)

அக்னிவேசர் “உன் அன்னை…” என்று சொல்லவந்த கணமே அனைத்தையும்புரிந்துகொண்டார். நடுங்கியபடி தன் இரு கரங்களையும் விரித்தார். “குழந்தை, என் அருகே வா. என்னுடன் சேர்ந்து நில்!” என்றார். சிகண்டி அருகே வந்ததும் அவனை தன் மார்புடன் அணைத்துக்கொண்டார். “ரஜோகுணத்தை ஆள்பவன் ஷத்ரியன். நீ ஒவ்வொரு அணுவிலும் ஷத்ரியன். என் வித்தையெல்லாம் உன்னுடையது” என்று அவன் தலையில் கையை வைத்தார். கண்கள் கலங்க நடுங்கும் கையுடன் அக்னிவேசர் சொன்னார் “பிறரை வாழ்த்துவதுபோல செல்வம், போகம், மைந்தர், அரசு, புகழ், ஞானம், முக்தி எதையும் நீ அடையும்படி நான் வாழ்த்தமுடியாது என்பதை நான் அறிவேன் மகனே. உன் அன்னையின் பொருட்டு காலகால மடிப்புகள் தோறும் அவமதிப்பையும், வெறுப்பையும், பழியையும் மட்டுமே பெறுபவனாக வந்து நிற்கிறாய். மானுடனுக்கு பிரம்மம் இட்ட தளைகள் அனைத்தையும் கடந்தவன் நீ. கர்மத்தை யோகமாகக் கொண்ட ஞானியை தெய்வங்கள் அறியும். எளியவனாகிய இந்த ஆசிரியன் யுகபுருஷனாகிய உன் முன் பணிந்து உன்னை வாழ்த்துகிறேன் மகனே, நீ வெல்க!” என்றார். (Chapter: 38)

*******

இளவரசே, வீரம் வேறு  படைநடத்தல் வேறு” என்றார் தளகர்த்தரான பிரசேனர். (Chapter: 39)

முதல் மலையுச்சியில் நின்று கீழே நோக்கியபோது அடர்காட்டின் கொடிப்பின்னலுக்கு நடுவே கங்கபுரி வட்டமான தாலத்தில் அள்ளிவைத்த சிறிய சிமிழ்கள் போலத் தெரிந்தது. (Chapter: 39)

யானைகள் முட்டினாலும் தாங்கும்படி உள்ளே பெரிய தடிகள் முட்டுக்கொடுக்கப்பட்டு சாய்ந்து ஊன்றி நிற்க அந்த மதில்சுவர் நூறு கால்கள் கொண்ட முதலை வளைந்து நிற்பதுபோலத் தோன்றியது. (Chapter: 39)

அங்கே கங்கை குலப்பெண் சன்னதம் கொண்டதுபோல பெரும்பாறைகளில் மோதிச்சிதறி வெண்கொந்தளிப்பாக சுழித்துச்சென்றது. (Chapter: 39)

அது நீரில் குருதிபோலக் கரைந்து இறகுபோல நீண்டு புடவைபோல இழுபட்டுச் சென்றது. (Chapter: 39)

ஆயிரம் தலையும் படமெடுத்த வெள்ளிநாகம் போலிருந்தது கங்கை. ஒரு படத்திலிருந்து இன்னொன்றுக்குத் தாவினான். கங்கையின் ஆயிரம் பறக்கும் நாவுகளுடன் சேர்ந்து பறந்து அவள் மடியில் விழுந்து எழுந்தான். (Chapter: 39)

*******

அவளுடைய முலைக்கண்கள் ஊமத்தைப்பூவின் குவளை போல மிகப்பெரிதாகி நீண்டிருக்கின்றன.  (Chapter: 40)

அம்பாலிகையின் வலதுமுலை பெரிதாகிச் சரிந்திருக்கிறது. காம்புகள் நீலோத்பலத்தின் புல்லிவட்டம்போல நீண்டிருக்கின்றன. (Chapter: 40)

சிவையின் இருமுலைகளும் சமமாகச் சரிந்துள்ளன. முலைக்கண்கள் நீலச்செண்பகம் போல நீண்டிருக்கின்றன. (Chapter: 40)

அவன் கண் தூக்கி நோக்கியபோது மாலைநேரத்தின் மங்கிய ஒளியில் கீற்றுநிலா செம்பட்டில் விழுந்த சங்குவளைக்கீற்று போலத் தெரிந்தது. (Chapter: 40)

காட்டெருதின் கொம்புகளைப் பிணைத்ததுபோல் அலகுள்ள சாதகப்பறவையான கௌரன்... (Chapter: 40)

இறகுகள் முழுக்க உதிர்ந்து கருக்குழந்தைபோல ஆன சுப்ரை சிறகுகள் முளைக்காமல் புழுக்கள் போல நெளிந்த சிறு குஞ்சுகளுடன் மரப்பொந்தில் காத்திருந்தது. (Chapter: 40)

நெறிகளை அறியாத பருவத்தில் செய்யும் பிழைகள் பாவங்களாகா - என்று உரைத்து மறைந்தான். (Chapter: 40)

பன்றியைக் கவ்வி விழுங்கமுடியாமல் நெளிந்து இறக்கும் மலைப்பாம்பு போல நான்குநாட்கள் அன்னையை கதறித்துடிக்கச்செய்தது அது. (Chapter: 40)

*******

கீழ்வாயுவை வெளியேற்றும் உடலின் நிம்மதி என நினைத்துக்கொண்டதும் அவர் உதடுகள் மெல்லிய புன்னகையில் வளைந்தன. (Chapter: 41)

ஆனால் திமிறும் குழந்தையின் உடல்போல அவ்வசைவுகளில் ஒரு புறக்கணிப்பு வெளிப்பட்டது.  (Chapter: 41)

காற்றில் நழுவி பின்னால்செல்லும் பொன்பட்டு மேலாடை போல நகர் நீங்குகையில் அஸ்தினபுரியை உணர்வது அவர் வழக்கம். அன்று தோள்சுமையொன்று உதிர்ந்ததுபோல நினைத்துக்கொண்டார். (Chapter: 41)

மதூகமலரை அழுகச்செய்து நீரில் கொதிக்கவைத்து எடுக்கப்படும் அந்த மது சிந்தனையின் அனைத்துச் சரடுகளையும் எண்ணையில் நெளியும் மண்புழுக்களாக ஆக்கிவிடும் என பீஷ்மர் அறிந்திருந்தார். (Chapter: 41)

ஒருபெண்ணை விரும்புபவனை தண்டிக்க சிறந்தவழி அந்தப்பெண்ணையே அவன் அடையும்படிச் செய்வது அல்லவா? (Chapter: 41)

அவர் மணக்கோரிக்கையை முன்வைத்தபோது கங்கை நான் என்ன செய்தாலும் உன் மைந்தன் ஏன் என்று கேட்கலாகாது என்று சொன்னாள். அன்றிலிருந்தே அக்கோரிக்கையை அனைத்து மணமகள்களும் முதல்நாளிரவில் முன்வைக்கும் நிலை மண்ணில் உருவாகியது என்றறிக! ஓம், அவ்விதி என்றும் அவ்வாறே ஆகுக! (Chapter: 41)

நீ செய்யும் தீமைகளை முழுக்க நல்ல நோக்குடனயே செய்வாய். ஆகவே உனக்கு எப்பாவமும் சேராது, நீ பிறவியறுப்பாய் என்றாள். (Chapter: 41)

******

சப்தசிந்து என்றழைக்கப்பட்ட ஏழுநதிகளான சுதுத்ரி, பருஷ்னி, அஸிக்னி, விதஸ்தா, விபஸ், குபா, சுஷோமா ஆகியவை இமயமலைச் சரிவிறங்கியபின் அடர்ந்த காட்டுக்குள் புதர்கள் அசையாமல் செல்லும் புலிக்குட்டிகள் போல ஒலியெழுப்பாமல் ஓடி அப்பால் விரிந்த நிலவெளிநோக்கி ஒளியுடன் எழுந்து கரைகளைத் தழுவிச்சென்றன. (Chapter: 42)

கரைநோக்கியவர்கள் உரக்கப்பேசினர். நீரை நோக்கியவர்கள் தங்களுக்குள் மூழ்கியிருந்தனர். (Chapter: 42)

இருள்படர்ந்தபின் அப்பகுதியில் செல்பவர்கள் மின்மினிக்கூட்டம்போல எருமைவிழிகள் மின்னுவதைக் கண்டார்கள். அவை மெல்ல உறுமியபடி தங்களுக்குள் பேசிக்கொண்டும், காட்சிகளைக் கண்டு தொங்கிய காதுகளை அசைத்தும், காதுகள் வழியாக வழிந்து வளைந்த கொம்புகளை மெல்லச்சரித்து அழகிய கருவிழிகளால் நோக்கியும் பெரும்பாலும் நீருக்குள்ளேயே கிடந்தன. (Chapter: 42)

ஒரு நீர்ப்பாம்பு வயலையே அலையிளகச்செய்தபடி சென்றது. ஏடு வழியாகச் செல்லும் எழுத்தாணி போல என பீஷ்மர் நினைத்துக்கொண்டார். (Chapter: 42)

அஸ்வமேதக்குதிரை அணிகளுடன் வேள்விமேடைக்கு வந்ததுபோலிருந்தாள். (Chapter: 42)

“தங்கள் தோள்களில் நாண்பட்ட தழும்பு உள்ளது” என்றாள் அவள் சிரித்தபடி. “ஆனால் அது கூடத் தேவையில்லை. எதையும் குறிபார்ப்பவராகவே நோக்குகிறீர்கள்.” (Chapter: 42)

உடைதிருத்திக்கொண்ட பெண் போல காற்றில் உலைந்த இலைகளை எல்லாம் மீண்டும் படியவைத்து தாமரைக்குளம் அமைதியாகக் கிடந்தது. (Chapter: 42)

பெண்ணின் அன்பைப்பெறாதவன் பிரம்மஞானத்தால் மட்டுமே அந்த இடத்தை நிறைத்துக்கொள்ளமுடியும். (Chapter: 42)

******

"சினமின்றிப் போர்புரிய மனிதர்களால் இயலாது. சினமே போருக்கு பெரும் தடையும் ஆகும். இந்த முரண்பாட்டை வெல்வதற்காகவே எந்தப் போர்க்கலையும் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார் அக்னிவேசர். (Chapter: 43)

“புறத்தை கட்டுப்படுத்தியவன் அதன் அகப்பிம்பமான அகத்தையும் கட்டுப்படுத்தியவனாவான். இருபுடை வல்லமைகொண்ட அவனையே ஸவ்யசாச்சி என்று தனுர்வேதம் போற்றுகிறது” என்றார் அக்னிவேசர். “ஒருகையால் உள்ளத்தையும் மறுகையால் உடலையும் கையாள்பவன் அவன். ஒருமுனையில் அம்பும் மறுமுனையில் இலக்கும் கொண்டவன். அவன் ஒருமுனையில் பிரபஞ்சமும் மறுமுனையில் பிரம்மமும் நிற்கக்காண்பான்.” (Chapter: 43)

அங்கே பாறை ஒன்றின் நடுவே சிறிய நீலநிறமான சுனை ஒன்று மான்விழி போலக் கிடந்தது. (Chapter: 43)

பொறுப்புகள் அச்சமாகக் கனிகின்றன. அச்சம் வஞ்சகமாகிறது. வஞ்சகம் அனைத்து ஞானத்தையும் விஷமாக்கிவிடுகிறது - என்றார். (Chapter: 43)

“உன் ஆசை உன் வித்தைமேல் இருக்கிறது. மண்ணில் பிறந்த மாபெரும் வில்லாளிகளில் ஒருவனாக ஆகவேண்டுமென்ற கனவுடன் இருக்கிறாய். அக்கனவு உன்னுள் பதற்றத்தை நிறைக்கிறது. நீ நாணை இழுக்கையில் இங்குள்ள அத்தனை மாவீரர்களையும் போட்டியாளர்களாக நினைத்துக்கொள்கிறாய். உன்னுள் அலை எழுகிறது.” - (Chapter: 43)

தீக்கோல் படுவதற்கு முன்னரே சருமம் கூசிக்கொள்வதுபோல நீர்ப்பரப்பு அதிரத் தொடங்கியது. (Chapter: 43)

அக்னிவேசர் தனக்குள் ஆழ்ந்தவராகச் சொன்னார் “கருவுறுதல் என்றால் என்ன? காமத்தால்தான் கருவுறவேண்டுமா, கடும் சினத்தால் கருவுறலாகாதா? உடலால்தான் கருவுறவேண்டுமா, உள்ளத்தால் கருவுறலாகாதா?" - (Chapter: 43)

“தந்தையைக் கொல்ல விழையும் கணம் ஒன்று எல்லா மைந்தர் நெஞ்சுக்குள்ளும் ஓடிச்செல்லும். நீ அக்கணமே காலமாக ஆகிய மைந்தன், அவ்வளவுதான்” என்றார். (Chapter: 43)

“தந்தையர் அனைவருக்கும் இருமுகம். ஒன்று கொலை இன்னொன்று ஆசி. நீ கொலைமுகத்தை மட்டும் கண்டிருக்கிறாய். பெரும்பாலான அன்னையர் அதையே மைந்தருக்கு அளிக்கிறார்கள். தானும் தந்தையாக ஆகி தந்தையை இழந்தபின்பு மட்டுமே மைந்தர்கள் தந்தையின் ஆசியை உணர்கிறார்கள்” என்றார். (Chapter: 43)

“மைந்தரிலும் இருமுகங்கள் உண்டு. தந்தையைக் கொல்லவும் தந்தையாக வாழவும் வருபவன் மைந்தன். தன்னைக் கொன்று தன் காட்டை கைப்பற்ற வந்தது மகவு என்று அறியாத வேங்கை இல்லை” என்றார் அக்னிவேசர். “சிகண்டியே, தந்தை மைந்தன் விளையாட்டுதான் இப்புவியில் நிகழும் உயிர்நடனங்களிலேயே அழகியது, மகத்தானது. அதைப்புரிந்துகொள்பவன் அனைத்தையும் புரிந்துகொள்கிறான். ஏனென்றால் பிரம்மமும் பிரபஞ்சமும் ஆடும் லீலையும் அதைப்போன்றதே. பரமாத்மனும் ஜீவாத்மனும் கொண்டுள்ள உறவும் அதற்கு நிகரானதே.” - (Chapter: 43)

இருள் படர்ந்து விழிக்காடு மறைந்து செவிக்காடாகியது. “தத்வமசி” என்ற சொல் அவனைச் சூழ்ந்திருந்தது. இருளாக, மின்மினிகளாக, விழியொளிகளாக, காற்றாக, இலையோசையாக, விண்மீன்களாக, பால்வழியாக, முடிவின்மையாக. (Chapter: 43)

“சொல், நீ கண்ட அந்தக் கனவில் வந்த கிளிஞ்சல்மாலையணிந்த கிராமத்துப்பெண் எப்படி இருந்தாள்?” சிகண்டி பார்வையை விலக்கி சில கணங்கள் நின்றான். அவன் கை நாணை நெருட சிறு ஒலி எழுந்தது. பின்பு “என் அன்னை அம்பாதேவியைப்போல” என்றான். (Chapter: 43)

******

அஷிக்னியில் பாய்விரித்த படகுகள் சிறகசையாமல் மிதக்கும் பருந்துகள் போல அசையாத பாய்களுடன் தெற்குநோக்கிச் சென்றுகொண்டிருந்தன. மீன்பிடிப்பவர்களின் தோணிகள் மெல்ல அலைகளில் எழுந்தமர்ந்து நிற்க அவ்வப்போது அவற்றிலிருந்து தவளை நாக்குநீட்டுவதுபோல வலைகள் எழுந்து நீரில் பரவி விழுந்தன. (Chapter: 44)

சிறிய உருளைக்கற்களைக்கொண்டு கட்டப்பட்ட அந்தக்கோட்டை மழையில் கறுக்காத மஞ்சள்நிறமான கல்லடுக்குகளுடன் செதில்கள் நிறைந்த சாரைப்பாம்பு போலத் தோற்றமளித்தது. அதன்மேல் மரத்தாலான காவல்கோபுரங்களில் வெண்பட்டில் செந்நிறமாகத் தீட்டப்பட்ட சூரியனின் சின்னம் இருந்தது. (Chapter: 44)

******

சிகண்டி நிமிர்ந்து அந்த மலைகளைப் பார்த்தான். அவை ஒன்றுக்குப்பின் ஒன்றாக வெவ்வேறு வண்ண அழுத்தங்களில் பளிங்குப்புட்டிக்கு அப்பால் பளிங்குப்புட்டியை வைத்ததுபோலத் தெரிந்தன. (Chapter: 45)

அவற்றுக்கருகே பறவைக்கூட்டம் ஒன்று சிறுகாற்றில் சுழன்று படியும் சருகுக்குவியல் போல பறந்தது. (Chapter: 45)

பாறை இடுக்கு ஒன்றில் உடும்பு ஒன்றை ஒருவன் சுட்டிக்காட்டினான். கல்லால் ஆன உடல்கொண்டதுபோலிருந்த அது அவன் அருகே நெருங்கியதும் செதில்களை விரித்து தீ எரிவதுபோல ஒலியெழுப்பி நடுங்கியது. (Chapter: 45)

தொலைவிலிருந்து பார்க்கையில் யாரோ விட்டுச்சென்ற கம்பளி ஆடை போலத்தெரிந்த காடு நெருங்கியதும் குட்டை மரங்களான ஸாமியும் பிலுவும் கரிரும் அடர்ந்த சிறிய சோலையாக ஆகியது.  (Chapter: 45)

விண்மீன்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் சிறிய கனல் உருளைகளாக இருளில் மிதந்து நின்றன. (Chapter: 45)

பெரிய மண்பானைகளைக் கவிழ்த்து வைத்ததுபோலவோ மண்குவியல்கள் போலவோ தெரிந்தன அந்நகரின் அனைத்துக் கட்டடங்களும். (Chapter: 45)
நான்கு மூலைகளும் மழுங்கி வட்டமாக ஆன நீள்சதுர வடிவில் மண்நிறத்தில் இருந்த அவ்வறை தன் வெம்மையால் ஓர் இரைப்பைக்குள் இருப்பதுபோல உணரச்செய்தது.  (Chapter: 45)

******

முதுமையால் தளர்ந்த கீழ்த்தாடை பசு அசைபோடுவதுபோல அசைந்தது.  (Chapter: 46)

அவரது கண்விழிகள் மீன்கள் திளைக்கும் மலைச்சுனை போல சலனம் கொண்டது. (Chapter: 46)

“ஆம்” என்றார். “நெடுநாட்களாகின்றன… நான் அவனை வென்றேன். அல்லது நாங்கள் இருவரும் வெல்லவில்லை. அல்லது இருவருமே தோற்றோம்.. என்ன நடந்தது என்று என்னால் இப்போது சொல்லமுடியவில்லை” என்றார். (Chapter: 46)

நான் அஸ்தினபுரியின் பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் காளான் போலிருக்கிறார்கள். மெலிந்து வெளுத்து. வீரர்கள் ஒருபோதும் அந்த அந்தப்புரத்து குழிமுயல்களை காதலிக்க முடியாது. (Chapter: 46)

கோடைகால நதிபோல அவள் மெலிந்து வற்றி மறைந்தாள் என்று அஸ்தினபுரியின் சூதர்கள் பாடிக்கேட்டிருக்கிறேன். (Chapter: 46)

இரைவிழுங்கும் பாம்புபோல கண்கள் பிதுங்கி வாய் திறந்து பற்கள் தெரிய அதிர்ந்து கூவி நகைத்தார். (Chapter: 46)

******

தண்டகர் என்ற நாகசூதர் சொன்னார். “வீரரே, பருந்துகளுக்கு தொலைப்பார்வையையும் எலிகளுக்கு அண்மைப்பார்வையையும் அளித்த அன்னைநாகங்களை வாழ்த்துங்கள். பார்வையின் எல்லையை மீறியவர்கள் தங்களை இழக்கிறார்கள். அவர்கள் மீண்டுவருவதற்கு பாதைகள் இல்லை.” அவர் முன் அமர்ந்திருந்த பீஷ்மர் “திரும்புவதற்கு பாதையில்லாமல் பயணம் செய்பவர்களே வீரர்கள் எனப்படுகிறார்கள்” என்றார். “ஆம், அவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் பிறந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்” என்றார் தண்டகர். (Chapter: 47)

"... முடிவின்மையின் எளிமையை உணர்ந்தவனே விடுதலை பெறுகிறான். அந்த அறிவைத் தாளமுடியாதவன் பேதலிக்கிறான்…” தண்டகர் சொன்னார். “அதை நீங்கள் இந்த யானத்து நீரில் பார்க்கவேண்டியதில்லை. ஒரு கைப்பிடி கூழாங்கற்களில் காணலாம். ஒரு மரத்தின் இலைகளில் பார்க்கலாம். பார்க்கத்தெரிந்தவன் உள்ளங்கையை விரித்தே உணர்ந்துகொள்ளலாம்.” - (Chapter: 47)

இலவம்பஞ்சு விதையைச் சுமந்து செல்வதுபோல அவர்களின் தவம் அவர்களைக் கொண்டுசென்றது. (Chapter: 47)

கருவறை திறந்து வரும் குழந்தை போல, உறையிலிருந்து எழும் வாள்போல அவள் மெல்ல எழுந்துவந்தபோது முதியமன்னர் காமத்தின் உச்சிநுனியில் அவர் நின்றிருப்பதை உணர்ந்தார்.. (Chapter: 47)

பெண்ணில் பெண்ணுக்கு அப்பாலுள்ளவற்றைத் தேடுபவனின் காமம் நிறைவையே அறியாதது. (Chapter: 47)

வீரரே, ஆயிரம் பெண்களை ஒரு பெண்ணில் அடைபவனே காமத்தை அறிகிறான். (Chapter: 47)

வீரரே, உள்ளூர நிறைவின்மையை அறிபவர்கள் பொய்யாக அகந்தையை காட்டுவார்கள்” என்றார். (Chapter: 47)

******

நீர்வளம் மிக்க மண்ணில் பிறந்து வளர்ந்த எவருக்கும் பாலையைப் பார்க்கையில் வரும் எண்ணங்கள்தான் முதல்முறையாக அந்த வெற்றுநிலவிரிவைப் பார்க்கையில் அவருக்கும் எழுந்தன. கல்லில் செதுக்கப்பட்ட பறைவாத்தியத்தை பார்ப்பதுபோல. ஓவியத்தில் வரையப்பட்ட உணவைப்போல. பயனற்றது, உரையாட மறுப்பது, அணுகமுடியாதது. பிறிதொரு குலம் வணங்கும் கனியாத தெய்வம். (Chapter: 48)

பாலைநிலம் என்பது ஒரு மாபெரும் நிகழ்தகவு. இன்னும் நிகழாத கனவு. யுகங்களின் அமைதியுடன் காத்திருக்கும் ஒரு புதிய வாழ்வு. எழுந்து நின்று அந்தமண்ணைப் பார்த்தபோது திகைப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. உறங்கும் காடுகள். நுண்வடிவத் தாவரப்பெருவெளி. மண்மகளின் சுஷுப்தி. அந்தப் பொன்னிறமண் மீது கால்களை வைத்தபோது உள்ளங்கால் பதறியது. (Chapter: 48)

அவரை அணுகிய பாலைவன உடும்பு தன் சிறு கண்களை நீர்நிரம்பும் பளிங்குமணிக் குடுவைகள் போல இமைத்து கூர்ந்து நோக்கியபின் அவசரமில்லாமல் கடந்து சென்றது. (Chapter: 48)

பின்னர் அவர் அறிந்தார், பாலைநிலம் அவருக்கு
ள்தான் சுருண்டு சுருங்கி அடர்ந்து ஒரு ரசப்புள்ளியாக மாறிச் சென்று அமைகிறது என்று. எந்த இருளில் கண்களை மூடினாலும் பொன்னுருகிப் பரந்த பெருவெளியை பார்த்துவிடமுடியும். அங்கே துயிலும் விதைகளில் ஒரு விதைபோல சென்றுகொண்டிருக்கும் மண்மூடிய நெடியமனிதனை பார்த்துவிடமுடியும். தனிமையில் அவன் அடையும் சுதந்திரத்தை. அவன் முகத்தில் நிறைந்திருக்கும் புன்னகையை. (Chapter: 48)

பீஷ்மர் புன்னகைசெய்தபோது சூதர் சிரித்துக்கொண்டு ‘சுமைகளால் வடிவமைக்கப்பட்ட உடல்கொண்டவர்கள் பின்பு சுமைகளை இறக்கவே முடியாது’ என்றார். (Chapter: 48)

“ஆம், பாலைவனம் போல அன்னியர்களை நண்பர்களாக ஆக்கும் இடம் வேறில்லை” என்றார் பீஷ்மர். (Chapter: 48)

ஆம், எது மெய்யான நாடோ அதைத் தேடுகிறேன். எது நிலையான அரியணையோ அதை அடையவிரும்புகிறேன்” என்றார் பீஷ்மர். (Chapter: 48)
அவன் மூச்சுக்கும் மட்கிய மாமிசத்தின் வெம்மையான வாசனை இருந்தது. (Chapter: 48)

“ஆம். நானும் அவரும் உருவும் நிழலும்போல என்று நாகர் சொன்னார். அல்லது ஒன்றின் இரு நிழல்கள் போல. அவர் செய்ததைத்தான் நானும் செய்தேன்” என்றான் சிகண்டி . “அவரில்லாமல் நான் இல்லை. அவர் ஒரு நதி என்றால் அதில் இருந்து அள்ளி எடுக்கப்பட்ட ஒரு கை நீர்தான் நான்.” (Chapter: 48)

“பீஷ்மரைப் பார்த்ததும் உன் சினம் தணிந்துவிட்டதா?” என்று பீஷ்மர் கேட்டார். “ஆம், என் முகமாக அவரைப் பார்த்த அக்கணத்திலேயே நான் அவர்மேல் பேரன்புகொண்டுவிட்டேன். அவர் உடலில் ஒரு கரம் அல்லது விரல் மட்டுமே நான்” என்றான். “நாகர் என்னிடம் சொன்னார், அவரைச் சந்திக்கும் முதற்கணம் அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவேன் என்று. அவருக்கும் எனக்குமிடையே இருப்பது என் அன்னையின் பெருங்காதல் என்று அவர் சொன்னார்.” (Chapter: 48)

“நான் எதன்பொருட்டு உன்னை மாணவனாக ஏற்கவேண்டும்?” என்றார் பீஷ்மர். சிகண்டி உளவேகத்தால் சற்று கழுத்தை முன்னால் நீட்டி பன்றி உறுமும் ஒலியில் “என் அன்னைக்காக. அவள் நெஞ்சின் அழலுக்கு நீதி வேண்டுமென நீங்கள் நினைத்தால்…” என்றான். “உங்கள் நெஞ்சத்தைத் தொட்டு அங்கே வாழும் நீதிதேவனிடம் கேட்டு முடிவெடுங்கள் குருநாதரே!” பீஷ்மர் இருளுக்குள் இருள் போல நின்ற அவனைப் பார்த்துக்கொண்டு சில கணங்கள் நின்றார். தலையை அசைத்துக்கொண்டு “ஆம், நீ சொல்வதில் சாரமுள்ளது” என்றார். வானத்தை அண்ணாந்து நோக்கி துருவனைப் பார்த்தபின் “காசிநாட்டரசி அம்பையின் மைந்தனும் பாஞ்சால இளவரசனும் வழுவா நெறிகொண்டவனுமாகிய சிகண்டி எனும் உனக்கு நானறிந்தவற்றிலேயே நுண்ணிய போர்வித்தைகள் அனைத்தையும் இன்று கற்பிக்கிறேன். அவை மந்திரவடிவில் உள்ளன. உன் கற்பனையாலும் பயிற்சியாலும் அவற்றை கைவித்தையாக ஆக்கிக்கொள்ளமுடியும்” என்றார். சிகண்டி தலைவணங்கினான். “என்னை வணங்கி வடமீன் நோக்கி அமர்வாயாக!” என்றார் பீஷ்மர். சிகண்டி அவர் பாதங்களை வணங்கியபோது அவனுடைய புழுதிபடிந்த தலையில் கைவைத்து “வீரனே நீ உன் இலக்கை அடைவாய். அடைந்தபின் ஒருகணமும் வருந்தமாட்டாய். வீரர்களுக்குரிய விண்ணுலகையும் அடைவாய்” என்று வாழ்த்தினார். (Chapter: 48)

******

வெண்கல்கோபுரம் போல எழுந்து நின்றிருந்த மருதத்தின் வேர்கள் மேல் அமர்ந்திருந்த முதியவர் இருவர் கண்கள் சுருக்கி தங்கள் எண்ணங்களுக்குள் மூழ்கியிருந்தனர். (Chapter: 49)

அவன் காலடியில் பணிபவர்களை தன்னிலிருந்து கீழானவர்களாக எண்ணும் மனநிலையை கடந்துவிட்டிருந்தமையால் அவ்வணக்கங்களுக்கு முற்றிலும் உரிய முனிவனாக இருந்தான். அவர்களை சிரம்தொட்டு ஆசியளித்தான். (Chapter: 49)

அந்தக்கலத்தை தன் கையில் வாங்கிய ஆஸ்திகன் அதைத்திறந்து உள்ளே இருந்து கரிய தழல்போல கணத்தில் எழுந்த ராஜநாகத்தின் குழவியை அதே கணத்தில் கழுத்தைப்பற்றித் தூக்கினான். அதை தன் கழுத்தில் ஆரமாகப் போட்டுக்கொண்டு உள்ளே இருந்த ஊமைத்தைப்பூவின் சாறும் நாகவிஷமும் கலந்து சுடப்பட்ட மூன்று அப்பங்களையும் உண்டான். (Chapter: 49)

******

இருத்தல் என்னும் தட்சனும் பிறப்பு என்னும் பிரசூதியும் இணைந்தபோது இருட்டு கருக்கொண்டது.  (Chapter: 50)

உண்பதும் உண்ணப்படுவதுமாக இரு பேருடல்களும் ஒன்றை ஒன்று அறிந்தன. (Chapter: 50)

விலகும்போது தழுவலையும் தழுவும்போது விலகலையும் அறிந்தன. (Chapter: 50)

இரு பேருடல்களும் புயலைப் புயல் சந்தித்ததுபோல ஒன்றோடொன்று மோதின. இரு பாதாள இருள்நதிகள் முயங்கியது போலத் தழுவின. (Chapter: 50)

தன் அனைத்துச் சொற்களையும் சொல்லிமுடித்தபின்பு சொல்லில்லாமல் நின்ற தட்சன் சொல்லாக மாறாத தன் அகத்தை முடிவிலியென உணர்ந்து பெருமூச்சுவிட்டான். அவளோ அவனுடைய இறுதிச் சொற்களையும் கேட்டவளாக அப்பெருமூச்சை எதிரொலித்தாள். (Chapter: 50)

தட்சகிக்குள் வாழ்ந்த கோடானுகோடி நாகக்குழந்தைகள் மகிழ்ந்தெழுந்து அவள் உடலெங்கும் புளகமாக நிறைந்து குதூகலித்தன. (Chapter: 50)

******
Note: Source: http://www.jeyamohan.in. Author of these text: Writer Jeyamohan. Jeyamohan owns the copyright for his works. If he objects, this post will be removed.
 

Friday, February 14, 2014

ஜெயமோகனின் வெண்முரசு - வர்ணனைகள் உவமைகள் - 2


இதன் தொகுப்பு ஒன்றைப் பின்வரும் சுட்டியில் படிக்கலாம். http://pksivakumar.blogspot.com/2014/01/blog-post.html


ஜெயமோகனின் வெண்முரசு: எனக்குப் பிடித்த வர்ணனைகளும் உவமைகளும் தொகுப்பு: 2

வெண்முரசு - நூல் ஒன்று - முதற்கனல்

அவனுடைய கால்களில் ஒன்று பலமிழந்து கொடிபோல நடுங்கியது. (Chapter: 18)

அவன் கண்களை நோக்கிய அவரது கண்கள் நெடுநாட்களாக துயிலின்றி இருந்தமையால் பழுத்த அரசிலை போல தெரிந்தன. (Chapter: 18)

“மூத்தவரே, பெரும்பாவங்களுக்கு முன் நம் அகம் கூசவில்லை என்றால் எதற்காக நாம் வாழவேண்டும்?  (Chapter: 18)

விசித்திரவீரியன் வேதனையைத் தொட்டுவைத்த புள்ளிகள் போன்ற கண்களுடன் ஏதும் பேசாமல் படுத்திருந்தான்  (Chapter: 18)

“என் அன்னையின் வீரியம் என் உள்ளமாகியது. அவள்முன் திகைத்து நின்ற தந்தையின் பலவீனம் என் உடலாகியது.  (Chapter: 18)

அவர்களின் இரு கைகளுக்கு அடியிலும் விரியும் மீன்சிறகுகள் உண்டு என்றனர் சூதர்கள். (Chapter: 18)

அன்னையைக் கண்ட குழந்தைகள் போல இலைகளை விலக்கிச்சென்று அதை அடைந்தனர். (Chapter: 18)

இளஞ்சூரியன் கடலில் மறைவதுபோல அவள் கங்கைநீருக்கு அப்பால் சென்று மறைந்தாள். (Chapter: 18)

ஆண்களின் தனிமையைப்போல பெண்களை கனிவுகொள்ளச்செய்வது ஏதுமில்லை. கனிவுபோல பெண்களை காதல்நோக்கி கொண்டுசெல்வதும் பிறிதில்லை. (Chapter: 18)

நீருள்நீர் போல சேர்வதே உயர்காமம். நீரில் உள்ளன காமத்தின் விதிகள். நீரில் நிகழ்வன காமத்தின் எல்லைகள். மழைக்கால நதியும் கோடைகாலநதியும் பெண்ணே. குளிர்கால உறைவும் வெம்மை கரந்த வசந்தமும் பெண்ணே. மலர்சூடிச்செல்லும் ஓட்டமும் உள்ளொழுக்குகள் காலைக்கவ்வி இழுக்கும் சுழிப்பும் அவளே.  (Chapter: 18)

நீராடிமுடிக்கத்தக்க நதியும் காமத்தால் தாண்டிச்செல்லத்தக்க பெண்ணும் பிரம்மன் அறியாதவை. உன் அடையாத காமத்தால் அவன் அடைந்த காமத்தை ஆயிரம்முறை பெரிதாக நீ அறியமாட்டாயா என்ன? (Chapter: 18)

*******

இரு சிறு கைகளையும் விரித்து இடையை நெளித்து நாகக்குழவி போல நெளிந்து தவழ்ந்து அன்னையின் மடியில் ஏறமுயன்றான். (Chapter: 19)
ஒவ்வொருநாளும் அவள் நெய்யிழந்த வேள்விநெருப்பு என தளர்ந்து வெளுத்தாள். (Chapter: 19)

கருமுதிர்ந்தபோது அவள் வயிறு குலைதாளா வாழைபோல சரிந்தது.  (Chapter: 19)

அவள் உடலில் இருந்து மழைக்கால ஓடைபோல குருதி வெளியேறிக்கொண்டிருந்தது. கண்களும் உதடுகளும் அல்லியிதழ்கள் போல வெளுத்தன. பேசவும் சொல்லற்றவளாக சுவரில் கையூன்றி அவள் நடந்தபோது உடலின் மூட்டுகளெல்லாம் ஒலியெழுப்பின. ரதம் ஊர்ந்துசென்ற பாம்பு போல மெல்ல நெளிந்தபடி படுக்கையிலேயே கிடந்தாள். ஈற்றுவலி வந்தபோது முதியவள் நினைவிழந்தாள். அவள் உடல் அதிர்ந்துகொண்டே இருக்க, மழைக்கால சூரியன் போல மெல்ல வெளிவந்த சந்தனுவை அவள் பார்க்கவேயில்லை.  (Chapter: 19)

சுனந்தையின் சித்தம் புயல்காற்றில் படபடத்துப் பறந்துசெல்லும் கொடிபோல அவள் உடலில் இருந்து விலகிவிட்டிருந்தது. (Chapter: 19)
தேன்சிட்டுபோல சிறகடித்து காற்றிலேயே மிதந்துநிற்கிறாள் என அவளது தூய இளமையை அவர் அன்று உணர்ந்தார். (Chapter: 19)

நண்டின் கொடுக்குகள் போல எழுந்த பெருங்கரங்களுடன் பால்ஹிகன் வந்து முன்னால் நிற்பான். விலங்கின் விழிகள் போல அறிமுகம் மறுக்கும் பார்வையுடன் என்ன என்று கேட்பான். (Chapter: 19)

அவன் நிழல்பட்ட செடிபோல வெளிறிச்சூம்பிய உடல்கொண்டவன் ஆனான். (Chapter: 19)

பால்ஹிகன் மீது ஏறிச்செல்லும் தேவாபியைக் காணும்போது மரம் மீது பரவிய ஒட்டுண்ணிக்கொடி என நினைத்தான். (Chapter: 19)
“இன்னொருவன் மேலேறி நடப்பவன் சிரிக்கப்படவேண்டியவனே என்றுணர்ந்தேன். (Chapter: 19)

தீயெரியும் கலம்போன்ற உடலுடன் வந்த பால்ஹிகன் அனைத்துச் சடங்குகளையும் அந்தணர் சொல்லியபடி செய்தான். (Chapter: 19)

கோபுரம் போன்ற உயரமும் கற்பாறைத் தோள்களும் கொண்ட கங்கர்குலத்தின் வலிமை தன் குலத்தில் சேர்ந்தால் அந்த தீச்சொல்லில் இருந்து தப்பிவிடலாமென அவன் நினைத்தான். (Chapter: 19)


*******

வேள்வியாகும் அவியின் பேரின்பத்தையே சந்தனு கங்காதேவியில் அடைந்தார். மண்ணில் நெளியும் புழு விண்ணில் பறக்கும் வழி என்ன மானிடரே? விண்ணாளும் புள்ளுக்கு உணவாவது மட்டும் தானே? (Chapter: 20)

பின்னர் மீண்டும் அவளது காமத்தின் பொன்னிற இதழ்களுக்குள் விழுந்து எரியத்தொடங்கினார். (Chapter: 20)

இந்த கங்கை என் பிறவிப்பெரும் துயரத்தின் பெருக்கு. சொல்லற்று விழிக்கும் பலகோடிக் கண்களின் வெளி. என் மூதாதையர் கரைந்திருக்கும் நிலைக்காத நினைவு. என் உலகைச் சூழ்ந்திருக்கும் கருங்கடலின் கரம். (Chapter: 20)

அறங்கள் அனைத்தையும் அறிந்தவரும், அறத்தினால் வேலிகட்டப்பட்ட தனிமையில் வாழ்பவருமாகிய பீஷ்மரை வணங்குவோம்! தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்ளும் மாமனிதர்களால்தான் மானுடம் வெல்கிறது என்று அறிக! அவர்களின் குருதியை உண்டுதான் எளியமக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் தசைகள்மேல் வேரோடியே தலைமுறைகளின் விதைகள் முளைக்கின்றன. (Chapter: 20)

நதிகளெல்லாம் நிற்காதொழுகும் தன்மை கொண்டவை. கரைகளால் நதி கட்டுப்படுத்தப்படுவதில்லை, கரைகளை நதிகளே உருவாக்கிக் கொள்கின்றன. (Chapter: 20)

இழந்தவற்றை மறக்க எவராலும் இயல்வதில்லை. பேரிழப்புகள் நிகரெனப் பிறிதிலாதவை.  (Chapter: 20)

பெரிய பாறைகளே பெரிய பாறைகளை அசைக்கமுடியும் என்றறிவீராக. மாபெரும் அறத்திலிருந்தே மாபெரும் தீமை பிறக்கமுடியும். எல்லையற்ற கனிவே எல்லையற்ற குரூரத்தின் காரணமாகக்கூடும். பெரும்புண்ணியங்கள் பெரும் பழிகளைக் கொண்டு வரலாகும். விதியால் அல்ல, செய்கைகளாலும் அல்ல, எண்ணங்களினாலேயே மாமனிதர்கள் உருவாகிறார்கள். வேழங்கள் மரங்களை விலக்கி, பாறைகளைப் புரட்டி, காடுகளைத் தாண்டிச்சென்று வேழங்களையே போரிடத் தேர்ந்தெடுக்கின்றன.” (Chapter: 20)

*******

“பொருளறிந்து வாழ்வது எவருக்கும் சாத்தியமல்ல அரசே” என்றாள். (Chapter: 21)

சிக்கிக்கொண்ட பலா அரக்கை அறுத்துக்கிளம்பும் ஈபோல அக்கணத்தை தாண்டமுடிந்ததைப்பற்றி அவளே வியந்துகொண்டாள். (Chapter: 21)

அவள் தன்னுடையதாக ஏற்றுக்கொண்ட நகரம் ஒவ்வொரு கட்டிடமாக உதிர்ந்து பின்சென்றது. பின்னால் அவை உடைந்து குவிவதை அவள் உணர்ந்தாள். அவள் பயணம்செய்து பழகிய சாலை ரதத்துக்குப்பின்னால் அறுந்து அந்தரத்தில் ஆடியது. அவள் வாழ்ந்த அரண்மனை அடியற்ற ஆழத்தில் விழுந்து மறைந்தபடியே இருந்தது. (Chapter: 21)

உலைந்த மாலையில் இருந்து மலரிதழ்கள் உதிர்வதுபோல அவளுடையவை என அவள் நினைத்திருந்த ஒவ்வொரு நினைவாக விலகின.  (Chapter: 21)

மகேந்திரனின் ஒளியால் முகமும், அக்கினியால் முக்கண்ணும், யமனின் ஒளியால் கருங்கூந்தலும், விஷ்ணுவின் ஒளியால் பதினெட்டு வெண்கரங்களும், இந்திரன் ஒளியால் இடையும், வருணன் ஒளியால் அல்குலும், பிரம்மனின் ஒளியால் மலர்ப்பாதங்களும், சூரியகணங்களின் ஒளியால் கால்விரல்களும், வசுக்களின் ஒளியால் கைவிரல்களும், பிரஜாபதிகளின் ஒளியால் வெண்பற்களும், வாயுவின் ஒளியால் செவிகளும், மன்மதன் ஒளியால் விற்புருவங்களும் கொண்டு தேவி எழுந்தாள். (Chapter: 21)

விறகை எரித்து அழிக்க முடியா தீயூழ் கொண்ட நெருப்பைப்போல அவள் சிந்தை அவள் மேல் நின்றெரிந்தது. (Chapter: 21)

தனிமையில் தலைகுனிந்து அமர்ந்திருப்பவள் இலைநுனியில் கனக்கும் நீர்த்துளிபோல ததும்பித் ததும்பி ஒருகணத்தில் உடைந்தழத் தொடங்கினாள். (Chapter: 21)

கண்களை மூடினாலும் தெரியும் வெயிலொளி போல அவளுக்குள் அம்பை தெரிந்துகொண்டிருந்தாள். (Chapter: 21)

நீர் அது இருக்கும் பாத்திரத்தின் வடிவை அடைகிறது என்பது எவ்வளவு மேலோட்டமான உண்மை. பூமியிலுள்ள அனைத்துப் பாத்திரங்களும் நீருக்கு உகந்த வடிவத்தை அல்லவா வந்து அடைந்திருக்கின்றன? அன்று தன் வயிற்றில் கைவைத்து அவள் அடைந்த தன்னிலையே அவளாக அதன் பின் என்றுமிருந்தது. (Chapter: 21)

ஒவ்வொன்றையும் நோக்கி கைநீட்டும் வேட்கையே அம்பை. எதையும் தானாக ஆக்கிக்கொள்ளும் தூய்மை அவள். அவளுடைய சினம் கடைசிக்கணம் வரை எரிப்பதாக இருந்தது. (Chapter: 21)

தீப்பட்டு எரிந்த சருமத்தில் தைலம் வழிவதுபோலிருந்தது. (Chapter: 21)

புராவதியின் அகம் மணலில் வற்றும் நீர் போல மறைந்துகொண்டிருந்தது. அவள் கண்களுக்குமேல் மதியவெயில் பொழிய அவள் சித்தத்துக்குள் ஒரு வெண்கடல் அலையடித்து விரிந்தது. அதன் நடுவே விரிந்த வெண்தாமரையில் அவளுடைய தெய்வம் வெண்கலை உடுத்தி நிலவெழுந்ததுபோல அமர்ந்திருந்தது. புராவதி நடுங்கும் உதடுகளால் ‘அம்பை அம்பை’ என உச்சரித்துக்கொண்டிருந்தாள். கண்களை அழிக்கும் வெண்மை, நிறங்களெல்லாம் கரைந்தழியும் வெண்மை. இரு கரியகழல்கள். அவையும் வெண்மைகொண்டு மறைந்தன.. (Chapter: 21)

*******

அதன் நூற்றுக்கணக்கான காவல்கோபுரங்களில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடிகளனைத்தும் கோட்டையை தூக்கிச்செல்ல விழையும் செம்பொன்னிறப் பறவைகள் போல தென் திசை நோக்கி படபடத்துக் கொண்டிருந்தன. (Chapter: 22)

பல்லியின் திறந்த வாய்க்குள் ஏதோ விதியின் கட்டளைக்கேற்ப என நுழையும் சிறுபூச்சிபோல அவள் சென்றுகொண்டிருந்தாள். (Chapter: 22)

நகரின் அத்தனை மாளிகைச்சுவர்களும் இரைநோக்கி பாயப் பதுங்கும் புலிகலின் விலாக்கள் போல அதிர்ந்தன. (Chapter: 22)

*******

அவன் பட்டுத்துணியாலான தூளித்தொட்டிலில் சுள்ளிக்கட்டுபோல தூங்கிக்கொண்டிருந்தான்.  (Chapter: 23)

“மிருகங்களில் அரசும் அரசனும் இல்லையல்லவா?” என்றார் ஸ்தானகர். விசித்திரவீரியன் கண்களை திறக்காமலேயே உரக்கச்சிரித்து “ஆனால் தாய் இருக்கும். அனைத்து வல்லமைகளும் கொண்ட காளி” என்றான். (Chapter: 23)

"... புனுகை அள்ளும் குறுதோண்டியால் கடலை அள்ளுவது போன்றது இப்பிரபஞ்சத்தை புலன்களால் அறிய முயல்வது. ஒருநாளில் ஒருநாழிகையில் நம்மைச்சுற்றி வந்து நிறையும் உலகை அள்ள நமக்கு கோடி புலன்கள் தேவை." (Chapter: 23)

தன் சொற்களாலேயே வசியம் செய்யப்பட்டவனைப்போல விசித்திரவீரியன் பேசிக்கொண்டிருந்தான். (Chapter: 23)

“இந்த தீபச்சுடர் அந்த திரைச்சீலையில் ஏறிக்கொண்டால் அதை வேறு நெருப்பு என்றா சொல்வீர்கள்?” என்று அகத்தியர் சொன்னபோது தெளிந்தார். (Chapter: 23)

“ஒரு வலையின் கண்ணியை வலையைப்பார்க்காமல் சரிசெய்யமுடியுமா?” என்றார் அகத்தியர்.  (Chapter: 23)

மூலாதாரத்தில்தான் வாழ்க்கையை அழகாக்கும் மூன்று தேவதைகள் வாழ்கிறார்கள். காதல்கொள்ளச் செய்யும் பிரேமை, ஒவ்வொன்றையும் அழகாக்கும் சைதன்யை, ஒவ்வொன்றையும் அன்றே அக்கணமே என்று காட்டும் ஷிப்ரை.” (Chapter: 23)

"... துளியென வந்தாலும் அது முடிவிலா நீர்க்கடலேயாகும். அக்கடலை உணர்ந்தவன் துளியுதிர்வதையும் கடலெழுச்சியையும் ஒன்றாகவே பார்ப்பான்’”என்றார். (Chapter: 23)

*******

தேவி, நான் என் மனதில் காதல்கொண்டிருந்தேனென்றால் ஒரே ஒரு மணிநகை போதுமானதாகும். அதில் குபேரபுரியை நான் கண்டுகொள்வேன்” என்றாள். (Chapter: 24)

இடைநாழியின் மரத்தாலான தரையில் தன் காலடிகள் ஒலிப்பதை அம்பிகை அந்தக் கட்டடத்தின் இதயத்துடிப்பு போல கேட்டாள். பெரிய மரத்தூண்கள் பூமியைத்தாங்கி நிற்கும் பாதாள சர்ப்பங்களாக தோன்றின. மானுட வாழ்க்கையெல்லாம் தலைக்குமேலே நிகழ்ந்து கொண்டிருக்க அவள்மட்டும் புதையுண்டுவிட்டதாக எண்ணிக்கொண்டாள். இதோ ஒவ்வொரு காலடியாக வைத்து ஒருபோதும் விரும்பாத ஒன்றைநோக்கி சென்றுகொண்டிருக்கிறேன். இருண்ட பெரும்பள்ளம் நோக்கி தன் இயல்பினாலேயே ஓடிச்செல்லும் நீரோடையைப்போல.. (Chapter: 24)

ஆனால் அலைகுளத்தின் அடிப்பாறைபோல அந்தமுகம் கலைந்து கலைந்து தன்னை காட்டிக்கொண்டே இருந்தது.. (Chapter: 24)

அவன் நீர்மேல் படகுபோல மெதுவாக ஆடியபடி நின்று சிவந்த பெரிய கண்களால் அவளைப்பார்த்தான். சீனத்து வெண்குடுவை போன்ற வெளிறிய சிறுமுகத்தில் கன்ன எலும்புகளும் கண்குழியின் விளிம்புகளும் மூக்கும் புடைத்து நிற்க, கீழே வெளுத்த உதடுகள் உலர்ந்து தோலுரிந்து தெரிந்தன.. (Chapter: 24)

துரத்தப்பட்ட முயல் சுவர்களில் முட்டிக்கொண்டது போல சீறித்திரும்புகிறீர்கள். (Chapter: 24)

தான் என்ன செய்தோமென்பதை செய்தபின்னரே அவள் அறிந்தாள். இருகைகளையும் விரித்து அவனை அள்ளி அணைத்து தன் விம்மும் மார்புடன் சேர்த்துக்கொண்டாள். ஒரு கைக்குழந்தையாக அவனை ஆக்கி தன் கருவறைக்குள் செலுத்திக்கொள்ள வேண்டுமென்பதுபோல. அவன் தலையை இறுக்கியபோது அவள் முலைகள் வலித்தன. அவன் மூச்சடங்கி அவளுடன் இணைந்துகொண்டான்.. (Chapter: 24)

“மஞ்சத்தைப் பகிர பல்லாயிரம் பெண்கள் கிடைப்பார்கள். நகைச்சுவையைப் பகிர பெண்ணை பிரம்மனிடம் கேட்டுத்தான் வாங்கவேண்டும் என்று என் அமைச்சர் சொல்வார்…” என்றான். (Chapter: 24)

“அவரிடம் சொல்லுங்கள் பெண்ணுடன் சேர்ந்து அழாத ஆணுக்கு சேர்ந்து சிரிப்பதற்கு உரிமை இல்லை என.” (Chapter: 24)

“இளவயதிலிருந்தே இந்த மனநிலை என்னிடமிருக்கிறது. சிறுநாய்க்குட்டிகள் கண்திறந்த மறுநாளே மனிதர்களை நம்பி பின்னால் செல்வதைப்போல நான் உலகை நம்புகிறேன். இவ்வுலகிலுள்ள அத்தனைபேரும் என்னைவிட வலிமையானவர்கள். வலிமையானவர்கள் ஒருபோதும் பலவீனர்களை துன்புறுத்துவதில்லை…எல்லா மனிதர்களும் நெஞ்சுக்குள் ஒரு சிறுமுலையையாவது வைத்திருக்கிறார்கள்” என்றான். (Chapter: 24)

இளமையில் எப்போதுமே அவளுடன் அம்பை இருந்தாள். அது குலதெய்வத்தை கூடவே வைத்துக்கொள்வதுபோல என்று சேடி பிரதமை சொல்வதுண்டு.. (Chapter: 24)

குயவன் போல கையாலேயே அவனை வனைந்துவிட முடியும் என்பதைப்போல. (Chapter: 24)

“எல்லா பெண்களும் எளிய ஆண்களிடம் அருள்கொண்டவர்கள் அல்ல” என்று அவள் பேச்சை மாற்றுவதற்காகச் சொன்னாள். சிரிப்பு மறைந்த கண்களுடன் “ஆம், எளியோரிலும் தீயூழ்கொண்டவர்களுண்டு” என்று விசித்திரவீரியன் சொன்னான். “என் தந்தை அவர்களில் ஒருவர். எளியோருக்குள் இச்சை மட்டும் வேகம் கொண்டிருந்தால் அது பெரிய சுமை. ஓர் எளியோன் வலியோனின் இச்சைகொண்ட கண்களுடன் தன்னைப்பார்க்கையில் பெண்களின் அகத்தில் ஒரு விஷநாகம் சீறி எழுகிறது. பாவம் சந்தனு மன்னர். வாழ்நாளெல்லாம் புலிக்குட்டிகள் தட்டி விளையாடும் முயல்போல பெண்களிடம் துன்புற்றார்.” மீண்டும் உரக்கச்சிரித்து “பெண்கள் அவருக்கு எச்சம் வைத்த கடன்களை எல்லாம் நான் பெற்றுக்கொண்டிருக்கிறேன்” என்றான். (Chapter: 24)

கண்மூடினால் காலத்தின் இருளில் எத்தனை கண்களை பார்க்கமுடிகிறது!” என்று விசித்திரவீரியன் சொன்னான். “இருண்ட மரத்தில் வௌவால்களை அண்ணாந்து பார்ப்பதுபோல. எத்தனை அன்னையர். எத்தனை பாட்டியர் முப்பாட்டியர்….” அம்பிகை “அத்தனை அரசகுலத்திலும் அதுதானே நிகழ்ந்திருக்கும்?” என்றாள்.. (Chapter: 24)

இரவெல்லாம் அவள் பேசிக்கொண்டிருந்தாள். அருவி பொழிவதுபோல தன்னுள்ளிருந்து வெளிவரும் அவையெல்லாம் தன்னால் தன்னுள் ஆயிரம் முறை சொல்லப்பட்டவை என்று உணர்ந்தாள். அவையெல்லாம் பேசப்பட்டபின்பு அவள் சொல்லிக்கொண்டிருந்தவை அவளே அறியாமல் அவளுக்குள் இருந்தவை என்று அறிந்தாள். ஒளிபடாத இருளுக்குள் இருந்து வெட்கிக்கூசிய முகத்துடன் அவை ஒவ்வொன்றாக வெளிவந்து நின்றன. தயங்கி விழி தூக்கி புன்னகைசெய்து பின் தன்னை வெளிக்காட்டின. அவன் கண்களையே பார்த்து பேசிக்கொண்டிருந்த அவள் ஒரு கணம் ஏதோ உணர்ந்து நிறுத்திக்கொண்டாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “எப்படி இதையெல்லாம் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்? சிதைநெருப்பு மட்டுமே அறியவேண்டியவை அல்லவா இவை?” விசித்திரவீரியன் சிரித்து மல்லாந்து படுத்து தலைமேல் கை நீட்டி “சரிதான், நான் உன் சிதை” என்றான். “சீ என்ன பேச்சு இது?” என அவள் அவன் வாயில் மெல்ல அடித்தாள்.. (Chapter: 24)

“சூதர்மொழியில் சொல்வதென்றால் இவ்வளவு கூரிய கண்களுடன் வாழ்வது வேல்முனையுடன் திருவிழாவுக்குச் செல்வதுபோல” என்றான். (Chapter: 24)

பின் அவன் கண்களைப்பார்த்து புன்னகையுடன் “பீஷ்மரின் கண்களும் கூட அவ்வாறுதான்” என்றாள். “ஆனால் புறக்கணிப்பின் திரைக்கு அப்பால் வேட்கை.” விசித்திரவீரியன் “இப்போது மட்டும் அவரைப்பற்றி சொல்லலாமா?” என்றான். “இப்போது நான் உன்னிடம் எதைப்பற்றியும் சொல்வேன், என் நெஞ்சின் துடியல்லவா நீ?” என்று சொல்லி சிரித்துக்கொண்டு அவன் முகத்தில் தன் முகம் சேர்த்துக்கொண்டாள்.. (Chapter: 24)

*******

விசித்திரவீரியன் விழிகளை அவளைநோக்கித் திருப்பி “நான் ஆணென்று உணராத ஒரு கணமும் இல்லை அன்னையே” என்றான். “சொல்லப்போனால் இவ்வுலகின் ஒரே ஆண் என்றும் உணர்ந்திருக்கிறேன்.” சத்யவதி திகைத்தவள்போல நோக்கினாள். “புரவிகளின் கடிவாளத்தை எப்போதும் கையில் வைத்திருக்கிறவன்தான் சாரதி எனப்படுவான்” என்றான் விசித்திரவீரியன். “எனக்கு விரைவின் விதிகளை நீங்கள் கற்பிக்கவேண்டியதில்லை.” (Chapter: 25)

“அன்னையே, பெண் என்பவள் ஒரு வயல் என்றாலும்கூட அதை பண்படுத்தவேண்டியிருக்கிறதல்லவா?” விசித்திரவீரியன் கேட்டான். (Chapter: 25)

என் உயிர் சிலந்திவலையில் ஒளிரும் நீர்த்துளி போன்றது என்றார் அவர்” என்றான் விசித்திரவீரியன். (Chapter: 25)

விளையாட்டுப்பேழையைத் திறந்து மயிற்பீலியையும் வண்ணக்கூழாங்கற்களையும் எடுத்துக்காட்டுவதுபோல அவள் தன் அகம் திறந்துகொண்டிருந்தாள். அவளுடைய மங்கலமும் அழகும் எல்லாமே என் மெல்லிய உயிரில் உள்ளது என்று அறிந்தபோது நேற்றிரவு என் அகம் நடுங்கிவிட்டது. என்ன செய்துவிட்டேன், எப்படிச்செய்தேன் என்று என் உள்ளம் அரற்றிக்கொண்டே இருந்தது. அந்த இரு கன்னியரையும் அமங்கலியராக்கி அந்தப்புர இருளுக்குள் செலுத்திவிட்டு நான் செல்வது எந்த நரகத்துக்கு என்று எண்ணிக்கொண்டேன்.”(Chapter: 25)

“அவர் கடலாமை போல. முட்டைகளைப் போட்டுவிட்டு திரும்பிப்பார்ப்பதேயில்லை. அவை தானே விரிந்து தன்வழியை கண்டுகொள்ளவேண்டும்…” என்றான். ஸ்தானகர் “திரும்பிப் பார்ப்பவர்களால் ஆணையிடமுடியாது அரசே” என்றார். (Chapter: 25)

உயரமற்ற மரங்கள் கொண்ட குறுங்காட்டுக்குள் மான்கூட்டங்கள் நெருப்புக்கதிர்கள் போல சிவந்து தெரிந்து துள்ளி ஓடின. (Chapter: 25)

சித்ராங்கதன் இளமை ஒளிரும் முகத்துடன் சிரித்து “பிரியமான முறையில் பாழ்படுத்திக் கொள்வதற்காகத்தானே வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது சிறியவனே?” என்றான்.  (Chapter: 25)

*******

விசித்திரவீரியன் அவள் முகத்தை நோக்கி “உனக்கு ஒன்று தெரியுமா? உண்மையில் மனிதர்களுக்கு பிறர் பேசும் அனைத்தும் பொருளற்றவையாகவே தெரிகின்றன” என்றான். “பிறர் பேச்சில் அவர்கள் தன்னை மட்டுமே காண்கிறார்கள். தான் இடம்பெறாத பேச்சைக்கேட்டால் ஒன்று விலகிக்கொள்வார்கள். இல்லையேல் அதற்குள் தன்னை செலுத்த முயல்வார்கள்.” (Chapter: 26)

ஆடைகளைக் கழற்றிவிட்டு அருவிக்குக் கீழே நிற்பவள்போல அவன் முன் நின்றிருந்தாள். (Chapter: 26)

“நிமிர்ந்து தருக்கி நிற்கும் மனிதனைப்போல பொருளற்றவன் வேறில்லை” என்றாள். (Chapter: 26)

விசித்திரவீரியன் “சிலசமயம் குழந்தைகளும் பேருண்மைகளை சொல்லிவிடுகின்றன” என்றான். “நான் அதை வேறுவகையில் நினைத்துக்கொண்டேன். நான் பொறுப்பேற்கிறேன் என்று சொல்லும் மனிதனைப்போல பரிதாபத்துக்குரியவன் வேறில்லை. அவனைப்போன்ற மூடனும் இல்லை.” நன்றாக மல்லாந்துகொண்டு “ஆனால் எப்போதும் மாமனிதர்கள்தான் அப்படி நினைக்கிறார்கள். பேரறிஞர்கள்தான் அவ்வாறு நிற்கிறார்கள். அவ்வாறு எவரோ பொறுப்பேற்றுக் கொள்ளாமல் மானுடம் வாழவும் முடிவதில்லை.” (Chapter: 26)

மலர்வனத்தில் சிக்கிய ஒற்றை வண்ணத்துப்பூச்சி போல அவள் ஒன்றிலும் அமராமல் படபடத்துப் பறந்துகொண்டிருந்தாள்.. (Chapter: 26)

பசுக்களை மேய்த்து அதைமட்டும் கொண்டே வாழ்பவர்கள் முற்பிறவியின் பாவங்களைக் கழுவுகிறார்கள். (Chapter: 26)

“இல்லை. வளையைவிட்டு வெளியே வரும் குழிமுயல் போலிருக்கிறாய். கன்னியாக வந்து பூங்காவில் உலவுகிறாய். ஆனால் உன் காதுகள் எச்சரிக்கையாக உள்ளன. சிறிய ஆபத்து என்றாலும் ஓடிச்சென்று உன் குழந்தைமைக்குள் பதுங்கிக்கொள்கிறாய்.” (Chapter: 26)

*******

தொங்கிய வெண்மீசையும் உலர்ந்த தேங்காய்நெற்று போன்ற முகமும் கொண்ட முதுசூதரான அஸ்வகர் எழுந்து தள்ளாடிய நடையில் சென்று மன்றுமேல் ஏறினார்.  (Chapter: 27)

மெல்லிய சிறு கழுத்தும், ஆடும் தலையும் கொண்ட வயோதிகன். அடுத்தவேளை உணவுக்கு காடுகளையும் மலைகளையும் தாண்டிச்செல்லவேண்டிய இரவலன். ஆனால் அளவற்ற அதிகாரம் கொண்டவன். (Chapter: 27)

“எங்கள் வயல்களின்மேல் உப்புபோல உன் தீவினை பரந்துவிட்டதே…" (Chapter: 27)

மக்கள் நீங்கிய இடங்களிலெல்லாம் வேளாண்நிலத்தில் எருக்கு முளைப்பது போல வீணர் குடியேறினர்.  (Chapter: 27)

ஆயிரம் முலைகளால் உணவூட்டும் அன்னைப்பெரும்பன்றி போன்ற கருணைகொண்டவன். (Chapter: 27)

ஆம்” என்றார் பீஷ்மர் தலையை அசைத்து. “மானுடரில் அவன் கண்களில் மட்டுமே நான் முழுமையான அச்சமின்மையை கண்டிருக்கிறேன்.” பெருமூச்சுடன் “போரும் படைக்கலமும் அறியாத மாவீரன் அவன்” என்றார்.  (Chapter: 27)

வீரத்தால் வென்றவருண்டு, மதியுரத்தால் வென்றவருண்டு, நட்பால் வென்றவருண்டு, குலத்தால் வென்றவருண்டு. பெருங்கனிவால் வென்றவன் புகழ்பாடுக!  (Chapter: 27)

*******

அவர் ஒரு பெரிய அடிமரமாக ஆகிவிட்டதுபோலத் தோன்றியது.  (Chapter: 28)
நான்குயானைகள் காலையில் குளித்து தழைகளைச் சுமந்தபடி அலைகளில் கரியநாவாய்கள் போல உடல்களை ஊசலாட்டியபடி சென்றுகொண்டிருந்தன. நெளியும் வால்களில் அவற்றுக்கு ஆசியளிக்கப்பட்ட மாறாத குழந்தைமை. (Chapter: 28)

“மக்களின் நம்பிக்கைகள் எப்போதுமே அச்சங்களில் இருந்து உருவானவை… அவர்கள் தங்கள் கன்றுகளுக்காகவும் வயல்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அஞ்சிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றாள் சத்யவதி. (Chapter: 28)

மிகமிக நுட்பமாக நகைசெய்யும் பொற்கொல்லனின் கவனத்துடன் சொல்லெடுத்து வைத்து “நான் இருப்பதோ செல்வதோ அவர்கள் அறியாதவாறு இருப்பேன்” என்றார்.. (Chapter: 28)

"... ஆனால் அந்த காசிநாட்டு இளவரசி அழுததைப் பார்த்தேன். அக்கணமே நெஞ்சு திறந்து இறந்துவிடுபவள் போல…அப்போது என் மனம் நிறைந்தது. ஒரு பெண்ணின் மனதை நிறைத்துவிட்டுச் செல்வதுதான் ஆண்மகன் ஒருவன் மண்ணில் வாழ்ந்தமைக்கான அடையாளம்…” (Chapter: 28)

மகனைவிட அன்னைக்குப் பிரியமான ஆண்மகன் யார்? (Chapter: 28)

சத்யவதி “நான் உன்னிடமன்றி எவரிடமும் மனம் திறந்து பேசுவதேயில்லை தேவவிரதா. பேரரசர் சந்தனுவிடம்கூட….ஏனென்றால் அவர் என்னை பார்த்ததே இல்லை. என்னில் அவர் வரைந்த சித்திரங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்” என்றாள். (Chapter: 28)

“ஒரு பெண்ணை யாரோ ஓர் ஆண் மட்டும்தான் முழுப்பெண்ணாக்குகிறான் என்று தெரியுமா உனக்கு? அப்படிப்பட்ட ஆணை சந்திப்பவளே நல்லூழ்கொண்டவள்….ஆனால் ஒன்று சொல்கிறேன். அந்த ஆணை தன் மகனாகக் கொண்டவள் பெரும்பேறு பெற்றவள். அவள் நான். என் மகன் விசித்திரவீரியன் அன்றி எவரையும் நான் ஆணாக எண்ணியதில்லை. அவன் புன்னகையை அன்றி எதையும் நான் எனக்குள் கனவாக நிறைத்துக்கொண்டதுமில்லை. அதனாலேயே அவனிடம் நான் ஒருநாளும் இன்சொல் பேசியதில்லை. என்னை அவன் அறியக்கூடாதென்றே எண்ணினேன். என் அன்பினால் நான் ஆற்றலிழந்துவிடக்கூடாதென்று நினைத்தேன். ஆனால் அவன் என் கண்களை மட்டும்தான் பார்த்தான். என் சொற்களை கண்கள்முன் கட்டப்பட்ட திரையாக மட்டுமே எடுத்துக்கொண்டான்.”. (Chapter: 28)

சற்று முன்னகர்ந்து திடமான குரலில் “…நான் மீனவப்பெண். என்னுடன் இந்த வம்சம் அழிந்தது என்றால் வம்சக்கலப்பால் அழிந்தது என்றுதான் புராணங்கள் சொல்லும். ஷத்ரியர்களும் பிராமணர்களும் அதை எங்கும் கொண்டுசெல்வார்கள்… அதை நான் விரும்பவில்லை…ஒருபோதும் நான் அதை அனுமதிக்கப்போவதில்லை” என்றாள்.. (Chapter: 28)

“தேவவிரதா, ஷத்ரியர்கள் என்பவர்கள் யார்? நாட்டைவென்று ஆள்கின்றவன் எவனோ அவன் ஷத்ரியன். பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பு இந்நிலமெல்லாம் காடாக இருந்தபோது இங்கு ஒலித்த ரிஷிகளின் வேதங்களால் இவை ஊர்களாக மாறின. இங்கே அரசுகள் உருவாகி வந்தன. தொல்குடிவேடர்களும் ஆயர்களும் அரசர்களானார்கள். இங்குள்ள அத்தனை ஷத்ரியர்களும் அவ்வாறு உருவாகி வந்தவர்கள்தான். ஆனால் இன்று அவர்கள் தங்களை தூயகுருதியினர் என்று நம்புகிறார்கள். பிறதொல்குடிகளில் இருந்து உருவாகிவரும் புதிய ஆட்சியாளர்களை எல்லாம் படைகொண்டு சென்று அழிக்கிறார்கள். அதற்காக ஒருங்கிணைகிறார்கள். அதற்குக் காரணமாக ஷத்ரியர்கள் அல்லாத எவரும் அரசாளலாகாது என்று நெறிநூல்விதி உள்ளது என்கிறார்கள்.” (Chapter: 28)
சூத்திரர்களிடமிருந்து புதிய அரசகுலங்கள் பிறந்து வரவேண்டும். இல்லையேல் பாரதவர்ஷம் வளரமுடியாது…அதற்கு ஷத்ரியசக்தி கட்டுப்படுத்தப்பட்டாகவேண்டும்.. (Chapter: 28)

“என்னை எவரும் சுயநலமி என்று சொல்லலாம். ஆனால் மண்ணில் எந்த அன்னையும் சுயநலமி மட்டுமே” என்றாள். (Chapter: 28)

உடல் கற்சிற்பம் போல கனத்து கால்களில் அழுந்த மெல்ல நடந்து வெளியே வந்து வெயில் பொழிந்துகிடந்த முற்றத்தை அடைந்தபோது பீஷ்மர் திடீரென்று புன்னகை செய்தார். அவர் உள்ளே நுழைவதற்கு முன்னரே சத்யவதி வியாசரை அழைப்பதற்கான திட்டத்தை முழுமைசெய்துவிட்டிருந்தாள் என அவர் உணர்ந்தார்.. (Chapter: 28)

*******

அதன் உறுமல்கள் அதன் வயிற்றுக்குள் ஒலிக்க, மனதுக்குள் மூடுண்ட அறைக்குள் சிக்கிக்கொண்ட வௌவால் போல பிரக்ஞை பரிதவித்துக்கொண்டிருந்தது. (Chapter: 29)

வெள்ளை எலும்புகள் நடுவே உயிருடனிருந்த தசைநார் புழுப்போல அதிர்ந்து அதிர்ந்து துடிக்க அந்தக்கால் மட்டும் இழுத்து இழுத்து அசைந்தது. (Chapter: 29)

“நான் என் அன்னயையே அறியாமல் வளர்ந்தவன்.” குஹ்யஜாதை “அன்னையை அறியும் கணம் வாய்க்காத மைந்தர் எவரும் மண்ணில் இல்லை” என்றது. வியாசர் புன்னகைசெய்து “ஆம் தாய்மையை அறியும் கணமொன்று எனக்கும் வாய்த்திருக்கிறது.” குஹ்யஜாதை முன்னால் வந்து முகத்தை நீட்டி “அதனால் நீ ஞானம் அடைந்தவனானாய்” என்றது.. (Chapter: 29)

“தாய் ஒரு நிலம்…என்னில் விழுந்ததை முளைக்கவைப்பதே என் கடன். அது வாழ்வதற்காக நான் என்னில் இறப்பவற்றை எல்லாம் உண்பேன். என் அனல் அனைத்தையும் அளிப்பேன்” என்றாள். “தாய்மையை எந்தப் பாவமும் சென்று சேராது என்கின்றன நூல்கள்” என்று சொன்ன அவளை நோக்கிச் சீறியபடி கங்கையில் ஒரு கைப்பிடி அள்ளி மேலே தூக்கி “என் தவமும் ஞானமும் உண்மை என்றால் நீ இப்போதே மீண்டும் யமுனையில் மீனாக மாறு” என்று தீச்சொல் விடுத்தேன். ஆனால் அவள் புன்னகையுடன் அங்கேயே என்னை நோக்கியபடி நின்றிருந்தாள். மீண்டும் மும்முறை வேதமோதியபடி அவளை தீச்சொல்லால் சுட்டேன். அவள்முகத்தின் கனிந்த புன்னகை விலகவில்லை.. (Chapter: 29)

ஞானமே அவர்களை முனிவர்களாக்கியது. பிறப்பு ஒரு தொடக்கம் மட்டுமே.. (Chapter: 29)

என் தந்தை ‘நாம் நூல்களில் வேதம் கற்றோம். அவன் கங்கையில் கற்றான். நூல்களின் ஏடுகளுக்கு முடிவுண்டு. கங்கையின் ஏடுகளுக்கு முடிவேயில்லை” என்றார். “முனிவர்களே, மலர்களில் தேன்அருந்திச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிக்குத்தான் வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தழை தின்னும் பசுவுக்கு அல்ல. (Chapter: 29)

*******

குளிருக்கு வைக்கும் செம்புக்கணப்பு போல உள்ளூர கனல் இருந்துகொண்டிருந்தது.  (Chapter: 30)

அறியாத யட்சி ஒருத்தி தன் தோளில் அவளைத் தூக்கிக்கொண்டு அலைவதுபோலிருந்தது. அரண்மனைத் தூண்களெல்லாம் விறைத்து நிற்பதுபோல, சுவர்கள் திரைச்சீலைகளாக மாறி அலையடிப்பதுபோல, கூரை அந்தரத்தில் பறந்து நிற்பதுபோல. இரவு துளித்துளியாக தேங்கித் தயங்கிச் சொட்டியது. வெளியே அறுபடாத நீண்ட சில்வண்டு ஒலியில் அத்தனை ஒலிகளும் கோர்க்கப்பட்டிருந்தன. மௌனமாக வந்து முகர்ந்துநோக்கும் கரடிபோல கரியவானம் அரண்மனைமுகடில் மூக்கு சேர்த்து வெம்மூச்சுடன் குனிந்திருந்தது. (Chapter: 30)

கருநிற அரக்குபூசப்பட்ட உடல் கொண்ட கனத்த நாவாய் போல மெல்ல திரும்புபவள்.. (Chapter: 30)

ஒரே ஒரு நெய்யகலில் செம்முத்துபோன்ற சுடர் அசையாமல் நிற்க வெண்பட்டுப்படுக்கையில் மழைநீர்சொட்டி கலைந்த வண்ணக்கோலம்போல அம்பிகை கிடப்பதைப்பார்த்தாள். (Chapter: 30)

விசித்திரவீரியனை எவரும் மறக்கமுடியாதென்று அவளுக்குத் தெரியும். விரல்நுனியில் ஒற்றியெடுத்த பனித்துளி என அவனை அவள் எப்போதும் நினைத்திருந்தாள். நிலையற்று ஒளிவிடுபவன், தூயவன், அரியவன். அகம் பதறாமல் அவனிடம் பேசமுடிந்ததில்லை அவளால். ஆனால் அவள் அவனை அறியவே இல்லையோ என்று அப்போது தோன்றியது. அவனை முதன்முதலாக அறிந்தவள் இவள்தானா? இவள்மட்டும்தான் இனி இவ்வுலகில் அவனை நினைத்திருக்கப்போகிறாளா? மலைச்சரிவில் பிளந்து சரிந்து சென்ற பாறையின் எஞ்சிய குழித்தடம்போல இவள் மட்டும்தான் இனி காலகாலமாக அவனை சொல்லிக்கொண்டிருப்பாளா? (Chapter: 30)

அவளுக்குத் தோன்றியது, அவள் அப்படி எந்த ஆணிடமும் உணர்ந்ததில்லை என. அவள் உள்ளறைகள் வரை வந்து எந்தக்காற்றும் திரைச்சீலைகளை அசைத்ததில்லை. தீபத்தை நடனமிடச் செய்ததில்லை. அவளுக்குள் விசித்திரவீரியனின் புன்னகைக்கும் முகம் என்றும் இருந்தது. மூடப்பட்ட கோயில் கருவறைக்குள் இருளில் இருக்கும் தெய்வம் போல. ஆனால் விசித்திரவீரியனுக்காகக் கூட அவள் தன்னிலை இழக்கவில்லை. (Chapter: 30)

மெல்லிய பொறாமை எழுந்தது. பேரிழப்பு என்பது பெரும் இன்பத்தின் மறுபக்கம் அல்லவா? வைரத்தை வைக்கும் நீலப்பட்டுமெத்தை அல்லவா அது? இந்தப்பெண் அறிந்திருக்கிறாள். இந்த வைரத்தை ரகசியமாக தனக்குள் வைத்திருப்பாள். வாழ்நாளெல்லாம் அந்தரங்கமாக எடுத்துப் பார்த்துக்கொண்டே இருப்பாள். பார்க்கப்பார்க்கப் பெருகுவது வைரம். (Chapter: 30)

இவளிடம் எப்படி வியாசனின் வருகையைப்பற்றிச் சொல்வது என்ற எண்ணம் எழுந்தது. அவளுக்குள் அழகிய சிறு தடாகமொன்றிருக்கிறது. அதை அவள் கலக்கி சேறாக்கவேண்டும். அதில் மலர்ந்திருக்கும் ஒற்றைத்தாமரையை மூழ்கடிக்கவேண்டும். (Chapter: 30)

எப்போதும் இருளைப்பார்த்துக்கொண்டுதான் மதுவை அருந்துவாள், அவ்விருளின் துளி ஒன்றை தன்னுள் ஏற்றிக்கொள்வது போல, உள்ளே விரிந்துபரவும் ஒளிக்குமேல் இருளைப்பரப்புவதே அதன் பணி என்பதுபோல. (Chapter: 30)

நீர்ச்சுனைகளுக்கு அருகே நீரோடும் பசுங்குழாயெனக் கிடக்கும் சோமச்செடி. அதற்கு நீராழத்தின் வாசனை. நீரிலிருந்து ஆழத்தை மட்டும் எடுத்து சேர்த்துக்கொள்கிறது. நிழல்களாடும் ஆழம். அடித்தட்டின் பல்லாயிரம் மென்சுவடுகள் பதிந்த மௌனம். சோமம் உடலுக்குள் ஒரு காட்டுக்கொடியை படரவிடுகிறது. நரம்புகளில் எங்கும் அது தளிர்விட்டுப் பரவுகிறது. (Chapter: 30)

“நீங்கள் சித்ராங்கதனின் மோகத்தை மட்டுமே அறிந்தீர்கள் பேரரசி. முதிய பராசரனில் முதிய சந்தனுவில்… அவன் உடலைக்காண யமுனைக்கு சென்றுகொண்டே இருந்தீர்கள்…”  ”ஆம்” என்றாள் சத்யவதி. “பிறகெப்போதும் நான் அவனைக் காணவில்லை.” (Chapter: 30)

கந்தர்வர்கள் மிகமிக அந்தரங்கமாகவே வந்துசெல்கிறார்கள். அவர்கள் வந்து சென்ற மனம் மேகங்கள் சென்ற வானம்போல துல்லியமாக எஞ்சும்…” என்றாள் சியாமை.. (Chapter: 30)

“நான் தங்கள் ஆடிப்பாவை அல்லவா தேவி? ஆடிகளைவிட குரூரமானவை எவை?” (Chapter: 30)

சியாமை அவளைப்பார்த்தபடி இரு கண்களும் இரு அம்புநுனிகள் போல குறிவைத்து நாணேறி தொடுத்துநிற்க பேசாமலிருந்தாள்.. (Chapter: 30)

*******

தோளில்புரளும் சடைக்கற்றைகளும் திரிகளாக இறங்கிய தாடியும், வெண்சாம்பல் பூசப்பட்ட மெலிந்து வற்றிய கரிய உடலும் கொண்ட வியாசர் சிதையில் இருந்து பாதியில் எழுந்துவந்தவர் போலிருந்தார். (Chapter: 31)

“சுவர்ணவனத்தில் நான் ஒருநாள் காலையில் செல்லும்போது சிறிய மரத்துக்குமேல் ஒரு பறவைக்குடும்பத்தைக் கண்டேன். பூவின் மகரந்தத் தொகைபோல ஒரு சிறிய குஞ்சு. அதன் இருபுறமும் அன்னையும் தந்தையும் அமர்ந்து அதை அலகுகளால் மாறி மாறி நீவிக்கொண்டிருந்தன. வேள்வியை இருபக்கமிருந்தும் நெய்யூற்றி வளர்க்கும் முனிவர்கள் போல பெற்றோரும் குழந்தையும் சேர்ந்து அன்பெனும் ஒளியை எழுப்பி வனத்தையே உயிர்பெறச்செய்தனர். அதைக்கண்டு என் மனம் முத்துச்சிப்பி நெகிழ்வதுபோல விரிந்தது. அதில் காதல் விழுந்து முத்தாகியது…” (Chapter: 31)

என் மனதிலெழுந்த பெருங்காதலுடன் நான் சென்றபோது அத்தனை பெண்களும் பேரழகிகளாகத் தெரிந்தனர். (Chapter: 31)

வியாசர் முகம் புன்னகையில் மேலும் விரிந்தது. “என் அழகின்மை அரண்மனைக்கு உகந்ததா அன்னையே?” என்றார். சத்யவதி அவர் கண்களைக் கூர்ந்து நோக்கி “அரண்மனை என்றுமே அறிவாலும் விவேகத்தாலும் ஆளப்படுகிறது கிருஷ்ணா” என்றாள்.  (Chapter: 31)

*******

நீண்ட வெண்ணிற வாள் என உள்ளே விழுந்த ஒளியால் வெட்டப்பட்டவளாகக் கிடந்த அம்பிகையை அம்பாலிகை எட்டிப் பார்த்தாள். (Chapter: 32)

நெல்மணி பொறுக்கும் சிறுகுருவி போல அவளிடம் ஒரு பதற்றம் இருந்தது. (Chapter: 32)

“உண்மையிலேயே ஓர் ஆணை எந்தப்பெண் அடையமுடியும் அம்பாலிகை? அவனை அவள் உண்மையிலேயே காணத்தொடங்கும்போது வயதாகிவிட்டிருக்குமே?” (Chapter: 32)

அம்பாலிகை, யாராக இருந்தாலும் நாம் நம்முடைய பிரியங்களைத்தான் பார்க்கிறோம். எல்லா உறவுகளும் மாயத்தோற்றங்கள்தான்… பிறகென்ன? (Chapter: 32)

பிறைநிலவு ஆடியில் தெரிவதுபோல இரு தந்தங்கள்தான் முதலில் தெரிந்தன. இரவு மேலும் இருண்டு திரண்டு நடந்துவருவது போல அந்தயானை முன்னால் வந்து என்னைப்பார்த்து துதிக்கையைத் தூக்கி மாபெரும் சங்கொலி எழுப்பியது. பின்பு அந்த நதியில் இறங்கி அதில் பரவியிருந்த விண்மீன்களைக் கலக்கி அலையெழுப்பியபடி என்னை நோக்கி வந்தது. (Chapter: 32)

வலிமை என்றால் அதற்கு கண்கள் இருக்கலாகாது. இது அது என்று பார்க்கமுடிந்தால் வலிமை குறைய ஆரம்பிக்கும். மூர்க்கம் என்பதும் வலிமை என்பதும் ஒன்றின் இருபெயர்கள்தான். (Chapter: 32)

அவர் மலையை அள்ளிக்கொண்ட பனித்துளி போல பிரம்மத்தை தன் சிந்தையில் வாங்கிக்கொண்டார். (Chapter: 32)

அன்னையின் பாலை அதிகம் உண்கின்ற குழந்தைகள் வளர்வதேயில்லை இளவரசி. (Chapter: 32)

“குழந்தைக்குள் கன்னியும் கன்னிக்குள் அன்னையும் குடியேறும் கணம் எதுவென்று தேவர்களும் அறிவதில்லை தேவி” என்றாள். (Chapter: 32)

*******

பிரம்மமுகூர்த்தத்தில் அரண்மனையின் முன்னால் இருந்த காஞ்சனம் முழங்குவது அத்தனை சூதர்குலப் பணியாளர்களும் எழுந்தாகவேண்டுமென்பதற்கான அறிவிப்பு. அதை மூலாதாரத்தின் முதல் விழிப்பு என்றும், பொன்னிறச் சூரியஒளியின் ஒலிவடிவம் என்றும், அஸ்தினபுரியின் அரண்மனையான சந்திரஹாசம் என்ற வண்டின் முரளல்நாதம் என்றும், புலரிதேவிக்கு முன் வைக்கப்பட்ட அஸ்தினபுரம் என்ற மலரின் தேன் என்றும் சூதப்பாடகர்கள் பாடினாலும் அத்தனை சூதர்குலப் பணியாளர்களுக்கும் அது கண்டிப்பான உரிமையாளரின் சாட்டைநுனியின் மெல்லிய தொடுகை மட்டும்தான். விஷப்பாம்பின் தீண்டலுக்கு நிகர் அது. (Chapter: 33)

சரஸ்வதியின் அருள் உடையவர்கள் நல்லூழ் கொண்டவர்கள், அவர்களுக்கு பட்டினியும் சுதந்திரமும் அருளப்பட்டிருக்கிறது. (Chapter: 33)

“இந்த முனிவர்கள் கருவை நுனியில் ஏந்தி அலைகிறார்களா என்ன?” என்றாள் கிருபை. (Chapter: 33)

சூதர்களின் கதைகளில் எல்லா அரசர்களும் தவமிருந்துதான் பிள்ளைகளைப் பெறுகிறார்கள். சூதர்களுக்கு கூழாங்கல்லை விட்டெறிந்தாலே குழந்தை பிறந்துவிடுகிறது” என்றாள் கிருபை.. (Chapter: 33)

“ஆட்டுக்குட்டிகளை ஏற்றிய ரதம் போல வருகிறாளே…சமநிலை தவறி விழுந்துவிடமாட்டாளா?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டாள் கிருபை. (Chapter: 33)
நீரில் அவளுடைய சிறிய உடல் பரல்மீன் போல நீந்துவதைக் கண்டாள் சிவை. (Chapter: 33)

மூத்தவள் கருநிலவுடன் புணர்ந்தாளாம். இவள் பிறைநிலவுடன் புணர்ந்திருக்கிறாள்” என்றாள் சிவை. கிருபை சிரித்து “சந்திரவம்சம் பெருகட்டும்” என்றாள். பின்பு “அந்த முனிவர் முழுநிலவை கொண்டுசென்று ஏதாவது குரங்குக்கோ கழுதைக்கோ கொடுத்துவிடப்போகிறார்…ஏற்கனவே ஒருவன் மீனுக்குக் கொடுத்ததன் விளைவை நாம் அனுபவிக்கிறோம்.” “யார் மீனுக்குக் கொடுத்தது?” என்றாள் சிவை. “சேதிநாட்டு மன்னன் உபரிசிரவசு காட்டுக்கு வேட்டைக்குப்போனபோது மீனுக்குக் கொடுத்த விந்துதான் சத்யவதியாகப் பிறந்ததாம்.” (Chapter: 33)

சிவை “துளைவிழுந்த மூங்கில்தான் பாடும் என்பார்கள் சூதர்கள்” என்றாள். (Chapter: 33)

*******

விந்தியமலையின் தென்மேற்குச்சரிவில் விதர்ப்ப நாட்டின் அடர்காடுகளுக்கு அப்பால் திட இருள் போல எழுந்த கரும்பாறைகளால் ஆன குன்றுகள் சூழ்ந்து மறைத்த சுகசாரிக்கு வியாசர் வந்துசேர்ந்தபோது அவரது தலைமயிர் சடைக்கற்றைகளாக மாறி மண்திரிகள் போல கனத்து தோளில் கிடந்தது. தாடி காற்றில் பறக்காத விழுதுகளாக நெஞ்சில் கிடந்தது. உடம்பெங்கும் மண்ணும் அழுக்கும் நெடும்பயணத்தின் விளைவான தோல்பொருக்கும் படிந்து மட்கி உலர்ந்த காட்டு மரம்போலிருந்தார். (Chapter: 34)

காடெங்கும் பச்சைப்பசுங்கிளிகள் இலைக்கூட்டங்கள் போல நிறைந்திருப்பதனால் அந்தக்காடே பகலெல்லாம் வேள்விக்கொடி ஏறிய சாலை போலிருக்கும் என்றார் சூதர். (Chapter: 34)

மழைநீர் வழிகண்டுபிடித்து ஒழுகிச்செல்வது போல பசுக்கள் இரு மலைகளுக்கு நடுவே சென்றன. அங்கே வெண்ணிறச்சரடு போல ஒரு சிறு நீரோடை நூற்றுக்கணக்கான பாறைகளில் விழுந்து விழுந்து நுரைத்து பளிங்கு மரம் கீழிருந்து எழுந்தது போல கீழே இறங்கிச்சென்று கொண்டிருந்தது. அந்த ஓடை அறுத்து உருவாக்கிய இடைவெளி பெரும் கோடைவாயில் எனத் திறந்து, பலகாதம் ஆழத்துக்குச் சுருண்டு கீழே சென்று, பச்சைப்படுங்காட்டில் முடிந்தது. காட்டுக்குமேல் வெண்பட்டாக மேகம் பரவியிருந்தது. (Chapter: 34)
வியாசர் “பாண்டியநாட்டைப்பற்றி நான் ஓரளவு அறிந்திருக்கிறேன்” என்றார். “கொற்கையின் முத்துக்களின் அழகை பாடியிருக்கிறேன்.” சாத்தன் புன்னகைத்து “அவை என் முன்னோரின் விழிகள். கடலுள் புதைந்த எங்கள் தொல்பழங்காலத்தைக் கண்டு பிரமித்து முத்தாக ஆனவை அவை. அவற்றின் ஒளியில் இருக்கின்றன என் மூதாதையர் வாழ்ந்த ஆழ்நகரங்கள். ஆறுகள், மலைகள், தெய்வங்கள். அன்று முதல் இன்றுவரை அந்த அழியாப்பெருங்கனவையே நாங்கள் உலகெங்கும் விற்றுக்கொண்டிருக்கிறோம்.” (Chapter: 34)

மிருகங்கள் நடந்தும், பறவைகள் பறந்தும், புழுக்கள் நெளிந்தும் அறத்தை அறிந்துகொள்கின்றன. அவையறியும் அறம் ஒன்றே, பிறப்பை அளித்தலே உடலின் முதற்கடமை. மண்ணில் தன் குலத்தையும் அக்குலத்தில் தன் ஞானத்தையும் விட்டுச்செல்வது மட்டுமே மனித வாழ்வின் இறுதியுண்மை என மனிதர்களும் கருதிய காலத்தின் அறத்தையே உத்தாலகரும் அந்தப்பிராமணரும் சொன்னார்கள். அவர் மனைவியும் அதை ஏற்றுக்கொண்டாள் என்று சுகன் ஜனகருக்குச் சொன்னான்.. அந்த அறத்தில் அனைத்தும் பிறக்கும் குழந்தைகளால் நியாயப்படுத்தப்படுறது. ஆனால் அக்குழந்தைகள் திரும்பிநின்று அது பிழையெனச் சொல்லும்போது அந்தக்காலம் முடிவுக்கு வந்துவிடுகிறது. தாய்தந்தையரின் கற்பொழுக்கம் பிள்ளைகளால் கட்டுப்படுத்தப்படும் புதியகாலம் பிறந்துவிட்டது. இனி அதுவே உலகநெறியாகும் அதை உணர்ந்தே உத்தாலகர் ஒன்றும் சொல்லாமல் காட்டுக்குள் சென்றார் என்று சுகன் அவ்வரங்கில் சொன்னான். (Chapter: 34)

“ஆசைகளையும் அகங்காரத்தையும் வெல்லமுடியாதவனுக்கு ஞானமே விஷம். நான் செய்தவை எல்லாமே சரிதான் என வாதிடவே நான் அடைந்த ஞானம் எனக்கு வழிகாட்டுகிறது. அதைவெறுத்து பிய்த்துவீசினால் அவை திரண்டு என்னை குற்றம் சாட்டி கடித்துக் குதறுகின்றன. துரத்தி வந்து எள்ளி நகையாடுகின்றன.” (Chapter: 34)

“கோடானுகோடி விண்மீன்கள்…கோடானுகோடி உயிர்கள். கோடானுகோடி வாழ்க்கைகள். இதில் பாவமென்ன புண்ணியமென்ன? கடலலைக் குமிழி நிலையற்றது. கடலே காலவெளியில் ஒரு வெறும் குமிழி…” என்றார். (Chapter: 34)

“உமது அகம் வழிகாட்டி அழைத்துச்செல்லும் வழியில் செல்க. ஆம், நீர்வழிப்படும் புணை போல” என்று சாத்தன் சிரித்தார். (Chapter: 34)

சுகன் ஆடையற்ற உடலுடன் இறகு ஒன்று காற்றில் மிதந்திறங்குவதுபோல வந்து, வானத்தால் உள்ளங்கையில் வைத்து மெதுவாக மண்ணில் இறக்கப்பட்டான். (Chapter: 34)

“தந்தையே, மண்ணில் ஒழுக்கமென ஏதுள்ளது? அன்றிலின் ஒழுக்கம் காக்கைக்கு இல்லை. தட்சிணத்தின் ஒழுக்கம் அஸ்தினபுரியிலும் இல்லை. கருணைகொண்ட செயல்கள் அனைத்தும் ஒழுக்கமே” என்றான் சுகன். (Chapter: 34)

*******
Note: Source: http://www.jeyamohan.in. Author of these text: Writer Jeyamohan. Jeyamohan owns the copyright for his works. If he objects, this post will be removed.

 

Thursday, January 16, 2014

மலைகள்.காம் இதழில் வெளியான என் கவிதைகள்

நண்பர் சிபிச்செல்வன் நடத்தும் மலைகள்.காம் இணைய இதழின் 40ஆவது இதழில் என்னுடைய கவிதைகள் பிரசுரமாகி இருந்தன. மலைகள்.காம் இதழுக்கு நன்றி. அவற்றை இங்கேயும் சேமித்து வைக்கிறேன்.

அடைகாக்கும் கோழி
யொன்றைப் பார்த்தேன்
முட்டைகளை நம்பியிருந்தது
கோழி வளர்ப்பவரிடம்
பேசிப் பார்த்தேன்
கோழியை நம்பியிருந்தார்
முட்டைகளைக் கவனித்தேன்
எதையும் நம்பியிருக்கவில்லை.

***** *****

கனவுக் காதலி:

வெயில் பிடிக்குமாவென்றேன்
வியர்வை பிடிக்குமென்றாள்

மழை பிடிக்குமாவென்றேன்
ஈரம் பிடிக்குமென்றாள்

நிலவு பிடிக்குமாவென்றேன்
நட்சத்திரங்கள் பிடிக்குமென்றாள்

மரங்கள் பிடிக்குமாவென்றேன்
கொடிகள் பிடிக்குமென்றாள்

பறவைகள் பிடிக்குமாவென்றேன்
சிறகுகள் பிடிக்குமென்றாள்

தனிமை பிடிக்குமாவென்றேன்
தன்வயப்படுதல் பிடிக்குமென்றாள்

இசை பிடிக்குமாவென்றேன்
குரல்கள் பிடிக்குமென்றாள்

கனவு பிடிக்குமாவென்றேன்
கண்டடைதல் பிடிக்குமென்றாள்

கவிதைகள் பிடிக்குமாவென்றேன்
கவிஞர்களைப் பிடிக்குமென்றாள்

கடவுள் பிடிக்குமாவென்றேன்
பிரார்த்தனை பிடிக்குமென்றாள்

காதல் பிடிக்குமாவென்றேன்
கலவி பிடிக்குமென்றாள்.

வெண்முரசு: பீஷ்மர் - அம்பை உரையாடல்

(இன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.)

ஜெயமோகன் எழுதும் வெண்முரசு அத்தியாயம் 16 படித்தபின் உணர்ச்சிப் பெருக்கும் சில இடங்களில் உடைந்துவிடுவேனோ என்ற அச்சமும் உண்டானது. இந்த அத்தியாயத்தை இதுவரை 5 முறை படித்து விட்டேன். இனிமேல் எத்தனை முறை படிப்பேன் என்று தெரியாது.

பீஷ்மருக்காக வருந்துகிறேனா, அம்பைக்காக வருந்துகிறேனா என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே இருந்தேன். அப்புறம் நண்பர் பாஸ்டன் பாலாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது சட்டென்று தோன்றியது. கைகூடாமல் போன எல்லாக் காதல்களுக்காகவும் அந்த அத்தியாயம் என்னைத் திரும்பத் திரும்ப மனதுக்குள் அழ வைக்கிறது. காவிய சோகம் கொண்ட வரிகள் அவை. ஒவ்வொருவ‌ரும் ஈகோவினாலும், வாழ்வின் நிர்ப்ப‌ந்த‌ங்க‌ளாலும் நிறைவேறாம‌ல் போன‌ த‌ம் காத‌லை இவ்வுரையாட‌லில் க‌ண்டுகொள்ள‌ இய‌லும். ப‌ல‌ காத‌ல‌ர்க‌ளால் இத்த‌கைய‌ உரையாட‌லை நிக‌ழ்த்திவிட்டுப் பிரிந்து போவ‌து சாத்திய‌மாகி இருக்காது. அவ‌ர்க‌ளுக்கெல்லாம் அவ‌ர்க‌ள் சார்பாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ உரையாட‌ல் மாதிரி இருக்கிற‌து இந்த‌ அத்தியாய‌ம்.

"இன்று உங்களிடமிருப்பது அடங்கிய அமைதி அல்ல, அடக்கப்பட்ட இறுக்கம்…” " என்றும் "குழந்தை நெருப்புடன் விளையாடுவதுபோல நாற்பதாண்டுகளாக காமத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்…" என்றும் அம்பை பீஷ்மரை நோக்கிச் சொல்கிற வரிகளில் எனக்கு மகாத்மா காந்தி தெரிந்தார். காந்தியின் புலனடக்கமும் அப்படிப்பட்டதுதானே. அதை நன்கறிந்து எழுதியிருப்பவர் ஜெயமோகன். பீஷ்மரின் பாத்திரத்தை வடிப்பதற்கு ஜெமோவிற்கு மகாத்மா காந்தி உதவியிருக்கலாம் என்று தோன்றுகிறது. புராணங்களில் இருந்து தம்மை வடிவமைத்துக் கொள்கிற மகாத்மாக்களை வரலாறு உருவாக்குகிறது. நிஜ வாழ்வின் மகாத்மாவிலிருந்து புராண நாயகர்களை மீட்டுருவாக்கம் செய்கிற ரசவித்தையை எழுத்தாளர்கள் செய்ய முடியும்.

கடைசியில், அம்பை சிகண்டியாகி, பீஷ்மர் மீது எய்யப்போகும் அம்புகளை, காதலின் கணைகள் என்ற கனிவுடன் ஏற்றுக் கொள்ளப் போகும் பீஷ்மரை ஜெமோ சமைத்துக் கொண்டிருக்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. அந்த பீஷ்மரைக் காணக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

விஜய் தொலைகாட்சி, சிவகார்த்திகேயன், பொங்கல்

(ஃபேஸ்புக்கில் பேசுகிறவற்றையும் இங்கே சேமிக்கலாம் என்று எண்ணுகிறேன். இன்று ஃபேஸ்புக்கில் எழுதியது இது.)

அந்த நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களுக்காக இந்த அறிமுகம். பொங்கலன்று விஜய் தொலைகாட்சியில் "எங்கள் வீட்டுப் பிள்ளை" என்ற தலைப்பில் நடிகர் சிவகார்த்திகேயனை நாயகராக்கி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. சிவகார்த்திகேயன் பூர்வாசிரமத்தில் விஜய் தொலைகாட்சியில் குப்பை கொட்டி, இப்போது கோலிவுட்டில் குப்பை கொட்டுமளவு வளர்ந்திருப்பதால் நிகழ்ச்சிக்கு அந்தத் தலைப்பாம். அந்நிகழ்ச்சியில் படித்த இளவயது பெண்கள் சிவகார்த்திகேயனிடம் தங்களுக்கு இருக்கும் கேள்விகளையும் அபிலாஷைகளையும் வெளிப்படுத்தினர். அவருக்கு பொங்கல் ஊட்டுவது, பதிலுக்கு அவர் கையால் பொங்கல் ஊட்டச் சொல்வது, அவர் தன்னைத் தூக்கிக் கொண்டு அரங்கைச் சுற்ற வேண்டும் அல்லது தன் லிப்ஸ்டிக் உதடுகளால் முத்தமிட்ட கறையுடன் இருக்கும் டிஷர்ட்டை அவர் அணிய வேண்டும், அவர் கன்னங்களைக் கிள்ள வேண்டும் என்பதுமாதிரியான சரித்திர முக்கியத்துவம் உள்ள அபிலாஷைகள். பெரும்பாலானவற்றை, ஐயோ இதுவா என்ற பொய்யான சலிப்புடன், சந்தோஷமாக சிவகார்த்திகேயன் செய்தார்.

சில வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு பற்றியும் அது திரைப்படமாக சில ஆண்டுகளுக்கு முன் வந்தது குறித்தும் பேச்சு. நண்பர் சொன்னார், சினிமாவுக்குப் போன சித்தாளு ஒரு பீரியட் நாவல். அந்த நாவலுக்கான பீரியட் முடிந்துவிட்டது. சினிமா நடிகர்கள் பின்னால் போகிற அளவுக்கு இங்கே இப்போது பெண்கள் இல்லை. கடந்த இருபது ஆண்டுகளில் தொழில்நுட்ப முன்னேற்றம், கல்வி, விழிப்புணர்வு என்று பெண்கள் முன்னேறியுள்ளனர். சினிமாவிலும் சினிமா நடிகன் மீதும் பெண்கள் பைத்தியமாக அலைவதாகச் சித்தரிப்பது இக்காலத்துக்குப் பொருந்தாது என்றார்.

விஜய் தொலைகாட்சியின் இந்நிகழ்ச்சியைப் பார்த்தபோது நண்பர் சொன்னது எவ்வளவு தவறு என்றும், ஜெயகாந்தன் எவ்வளவு தீர்க்க தரிசனத்துடன் எல்லாக் காலத்துக்கும் பொருந்தும்படி அக்கதையை எழுதியிருக்கிறார் என்றும் தெரிந்தது. ஜெயகாந்தனின் சித்தாளாவது படிக்காத நாயகி. இங்கே நம் வாழ்வின் படித்த நகர்ப்புறத்து சித்தாளுகள் நடிகர்கள் பின்னால் இன்னமும் போய்க்கொண்டிருக்கிற அவலத்தைச் சொல்ல இன்னொரு நாவலை யாராவது எழுதினால் தேவலை.

வெண்முரசு தொடரில் எனக்குப் பிடித்த உவமைகளும் வர்ணனைகளும்

ஜெயமோகனின் வெண்முரசு தொடரில் எனக்குப் பிடித்த உவமைகளும் வர்ணனைகளும்:

வே. சபாநாயகம் எழுத்தாளர்களின் படைப்புகளில் இருந்து தனக்குப் பிடித்த உவமைகள், வர்ணனைகளைத் தொகுத்துப் பகிர்ந்து கொள்வார். தினம் ஒரு அத்தியாயம், பத்துவருடம் தொடரும் என்று ஜெயமோகன் வெண்முரசு எழுதத் தொடங்கியபோது, படித்தவற்றில் பிடிக்கும் உவமைகளையும், வர்ணனைகளையும் சேர்த்து வைக்கத் தொடங்கினேன். இன்றுவரை அதைத் தொடர முடிந்திருக்கிறது. அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். என் வாசிப்பின்பத்துக்காகவும் இன்னும் புரிந்து கொள்ளவும் அத்தியாயங்களைத் திரும்பப் படிக்கும்போது பிடிக்கிற புதிய வரிகளையும் எடுத்துச் சேமிப்பது என்று இந்தப் பட்டியல் நாளும் மாறிக் கொண்டேதான் இருக்கிறது.

ஃபேஸ்புக்கிலும் இணையக் குழுமமொன்றிலும் நானிதைப் பகிர்ந்து கொண்டபோது, இதை என் வலைப்பதிவில் இட்டால் அவரைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கேட்டுக்கொண்ட நண்பர் டைனோபாய்க்காக இதை இங்கேயும் இடுகிறேன். தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படும்போதெல்லாம் எனக்குச் செய்து கொடுப்பவர் டைனோபாய். என்னால் அவருக்குச் செய்ய முடிகிற சிறு உதவி இது. தொடர்ந்து வருகிற அத்தியாயங்களில் இருந்தும் பிடித்தவற்றைச் சேமிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்!

ஜெயமோகன் எழுதியவை என்றாலும் இவை என் ரசனையின் அடிப்படையில், எனக்குப் பிடித்தவை என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. இணையம் என்கிற சுதந்திர வெளியில் இதைப் பகிர்ந்து கொள்வதில் இருக்கிற அசௌகரியங்களை நான் அறிவேன். பிரதியெடு (காபி), பிரதியிடு (பேஸ்ட்) நுட்பத்தால் இவை பிற இடங்களுக்குப் பிறர் தேர்ந்தெடுத்ததுபோல செல்கிற வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியே போனாலும் அவை எனக்குப் பிடித்த ஜெயமோகனின் வரிகளைத் தங்களுக்கும் பிடித்ததாகப் பிறர் உணர்ந்ததைச் சொல்லும் ஒரு வழிதானே என்பதால் துணிந்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நான் ஏற்கனவே ஃபேஸ்புக்கில் எழுதியதுபோல ஜெயமோகன் மீது பலருக்கும் இருக்கும் வருத்தங்களையும், அவரிடம் அவர்கள் காணும் குறைபாடுகளையும் போக்கிவிடுகிற எழுத்து வல்லமையை அவர் வெண்முரசு தொடரில் காட்டிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு முறை இந்த அற்புத வரிகளைப் படித்து மகிழுங்கள். அதை எழுதிய கரங்களுக்கு மானசீகமாக முத்தமிடுங்கள். சரஸ்வதி தேவி அந்தக் கைகளில் சன்னதம் கொண்டு ஆடுகின்றாள்.

*******

வெண்முரசு - நூல் ஒன்று - முதற்கனல்

இருள் முதல்முடிவற்றது. ஆதியில் அதுமட்டும்தான் இருந்தது. வானகங்கள் அனைத்தும் அந்த இருளுக்குள்தான் இருந்தன. அந்த இருள் ஒரு மாபெரும் நாகப்பாம்பின் வடிவிலிருந்தது. கற்பனையும் கனவும் தியானமும் எட்டமுடியாத அளவுக்கு நீளம்கொண்ட அந்த நாகம் கண்களற்றது. ஏனென்றால் அது பார்ப்பதற்கென அதுவன்றி ஏதுமிருக்கவில்லை. அது தன் வாலை வாயால் கவ்வி விழுங்கி ஒரு பெரிய வளையமாக ஆகி அங்கே கிடந்தது. அந்த ஆதிநாகத்துக்கு பெயர் இருக்கவில்லை. ஏனென்றால் அதை அழைக்க எவரும் இருக்கவில்லை. ஆகவே அது தன்னை நாகம் என்று அழைத்துக்கொண்டது. (Chapter: 1)

பாசிமணிகளுக்குள் பட்டுச்சரடுபோல மனிதர்களுக்குள் விதியின் நோக்கம் ஊடுருவிச்செல்கிறது. (Chapter: 1)

நீ கற்கும் கல்வி உன்னை முழுமையாக்கும். உனக்கு முதுமை இல்லை. உன் தந்தை உனக்களித்த வரமாகவே அதைக்கொள். உன்னை முதியவனாக பார்க்கும் நிலை எனக்கும் இல்லை. அது என் காதலுக்கு அவர் அளித்த கொடை என்றே எண்ணுகிறேன். உன்னுடைய சின்னஞ்சிறு உடலுக்குள் விதைக்குள் பெருமரம்போல இப்பிரபஞ்சத்தின் பெருநிகழ்வொன்று குடியிருக்கிறது.’ (Chapter: 1)

*******

அன்னை அவனுக்களித்தவை எல்லாம் வெறும் சொற்களாக இருந்தன. (Chapter: 2)

பாதாளநாகம் போன்ற கரிய உடல் மீது புதுமழையில் முளைத்த பசும்புற்கள் காற்றில் சிலுசிலுக்க வளைந்து ஓங்கிக் கிடந்தது கோட்டை. (Chapter: 2)

மரச்சிற்பங்கள் மேல் பச்சோந்திக்கால்கள் போல வேர் பதித்து படர்ந்து ஏறி பச்சை இலைகளை விரித்து காற்றிலாடி நின்ற கொடிகளுக்குள் கதவை மோதும் பகையானை மத்தகங்களைத் தடுக்கும் பித்தளைக்குமிழ்கள் களிம்புப்பச்சை நிறத்தில் காய்கள்போலத் தெரிந்தன. (Chapter: 2)

மூன்றடுக்கு மாளிகைகள் இருபக்கமும் அணிவகுத்த அகன்ற தெருக்களில் குழந்தைகள் நீரில் நீந்தும் பரல்மீன்கள் போல பெரிய கண்களுடன் ஓசையே இல்லாமல் விளையாடின. (Chapter: 2)

*******

அவன் சித்தமோ எரிதழல் காற்றை உணர்வதுபோல காலத்தை ஒவ்வொரு கணமும் அறிந்துகொண்டிருந்தது. (Chapter: 3)

விதவைகள் நிறைந்த அந்தப்புரத்தின் குளிர்ந்த அமைதியில் தன்னை பூமியுடன் பிணைக்கும் வயிற்றை தொட்டுத்தொட்டு சபித்தபடி அவள் ஒவ்வொரு நாளாக வாழ்ந்தாள். (Chapter: 3)

அதன் அன்னையின் துயரமெல்லாம் தேங்கிய சிமிழ் போலிருந்தது குழந்தை. (Chapter: 3)

தன் உடல் நீங்கி வெளியே வந்துகிடந்த குழந்தையை உடைந்த கட்டியிலிருந்து வெளிவந்த சீழைப் பார்க்கும் நிம்மதியுடன் பார்த்தபின் கண்களை மூடி மெல்ல விலகிப்படுத்துக்கொண்டாள். (Chapter: 3)

பித்தெழுந்த கனவில் நிற்பவன் போல பரீட்சித் அந்த மண்ணில் நின்றான். அக்கணமே அவன் அனைத்தையும் தனக்குள் கண்டுவிட்டான். நிலையழிந்தவனாக அந்த மண்ணில் ஓடி ஓடிச் சுழன்றுவந்தான். ஒரு புற்றை அவன் உடைத்தபோது உள்ளே ஓர் யானையின் எலும்புக்கூடு அதன் மத்தகத்தைப் பிளந்த வேலுடன் இருக்கக் கண்டான். பின்பு வெறிகிளம்பி ஒவ்வொரு புற்றாக உடைத்து உடைத்து திறந்தான். ஒவ்வொன்றுக்குள்ளும் வெள்ளெலும்புக் குவியல்களைக் கண்டான். ஒரு தருணத்தில் திகைத்து நின்று பின்பு தளர்ந்து விழுந்தபோது அந்த மண் ஒரு குடல்போல செரித்துக்கொண்டிருப்பதன் ஒலியைக் கேட்டான். (Chapter: 3)

*******

“ஒவ்வொரு உயிருக்கும் அதற்கான மனமும் உடலும் படைப்புசக்தியால் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் உணர்ந்து அவையனைத்தும் தங்களுக்கு உகந்தபடி வாழ்வதற்கு வழிசெய்வதே மன்னனின் கடமை. நக்குவது நாயின் இச்சையாகவும் தர்மமாகவும் உள்ளது. அதைச்செய்தமைக்காக நீ அதன் மெல்லிய சிறுகழுத்தையும் மலர்ச்செவிகளையும் வருடி ஆசியளித்திருக்கவேண்டும். உன் மனம் அதைக்கண்டு தாயின் கனிவை அடைந்திருக்கவேண்டும். ஆனால் நீ நெறிவழுவினாய்” என்றது சரமை. (Chapter: 4)

கண்ணிழந்த நாயின் பதைப்பை அதன்பின் தன்னுள் என்றும் உணர்ந்துகொண்டே இருந்தார் ஜனமேஜயன். தெரியாதவற்றிலும் அறியாதவற்றிலும் முட்டி மோதிச் சரிவதையே தன் வாழ்க்கையாகக் கொண்டிருந்தார். புரியாதவை எல்லாம் அகத்தில் எத்தனை பெரிதாகின்றன என்று அவர் அறிந்தார். (Chapter: 4)

அதர்வ வேத சூக்தங்கள் வானிலிருந்து இழியும் அருவியின் ஓசையில், துதிக்கை தூக்கி பிளிறும் மதகரியின் குரலில், நிலத்தை அறைந்து கர்ஜிக்கும் சிம்மத்தின் ஒலியில் கேட்டுக்கொண்டிருந்தன. (Chapter: 4)

ஆஸ்திகன் நெளியும் பல்லாயிரம் சர்ப்பங்களைப்போல அந்தக் கைகளை உணர்ந்தான். தன்னிலிருந்து தன்னை விலக்கும் கைகள் ஒரு கட்டத்தில் வெளியிலிருந்து தனக்குள் எதையோ அள்ளி நிரப்புபவையாகத் தோன்றின. அந்தச்சைகைகள் ஒருவகையான ஒத்திசைவை அடைந்த ஒரு கணத்தில் நீலத்தழல்பீடம் மீது ஏறிய செந்தழல் எழுந்து பறந்து கைநீட்டி வேள்விமண்டபத்தின் கூரைவிளிம்பைப் பற்றிக்கொண்டு மேலேறியது. வேள்விமண்டபத்தின் ஈச்சையோலைக்கூரை தீப்பற்றி செந்நெருப்புத்தழலாட எரியத்தொடங்கியது. (Chapter: 4)

துண்டிக்கப்பட்ட குரங்கு வால்கள் போன்ற சிறிய பாம்புகள். இருட்டின் தும்பிக்கை நீள்வதுபோல வந்த பெரும்பாம்புகள். அவர்கள் ஒவ்வொருவர் நடுவிலிருந்த இருட்டும் பாம்புகளாகியது. அவர்களின் மடியின் மடிப்புகளுக்குள் இருந்த நிழல்கள் பாம்புகளாக மாறின. அவர்களின் அக்குளுக்குள் இருந்த துளியிருள் பாம்பாயிற்று. பின் அவர்களின் வாய்களுக்குள்ளும் நாசிகளுக்குள்ளும் இருந்த நிழல்கள்கூட பாம்புகளாக மாறி மண்ணில் நெளிந்துசெல்லக் கண்டனர். அன்னை மடியில் தாவி ஏறும் குழந்தைகள் போல, ஆற்றில் கலக்கும் சிற்றோடைகள் போல நெருப்பை அணுகி அதில் இணைந்துகொண்டன. (Chapter: 4)

மண்ணை விலக்கி முளைத்தெழும் வாழைக்கன்றுபோல தலை நீட்டி தட்சன் மேலெழுந்து வந்தான். கரும்பனையின் தடி போன்ற உடலை மெதுவாக நெளித்து வேள்விச்சாலையில் தவழ்ந்து வேள்வித்தீ நோக்கிச் சென்றான். அவனுக்குப்பின்னால் அவனைப்போன்றே தெரிந்த தட்சகியும் எழுந்து வந்தாள். வேள்விக்கூடமே மரணமுனையில் பதுங்கியிருக்கும் வனமிருகம் போல விரைத்து அமர்ந்திருக்க நடுங்கும் கரங்களுடன் அவியளித்து ரித்விக்குகள் வேதக்குரலெழுப்ப பாம்புகள் ஒன்றை ஒன்று தழுவி முறுகியபடி மெல்ல முன்னகர்ந்தன. (Chapter: 4)

“அறம் என்ற சொல்லை அறியாத எவருமில்லை. அறமென்றால் எதுவென்று முழுதறிந்தவரும் இல்லை. (Chapter: 4)

அவனுடைய அழகிய சிறுச்செந்நிற வாய் முலைக்கண் உருவி எடுக்கப்பட்ட கைக்குழந்தையின் இதழ்க்குவைபோல் இருந்தது. (Chapter: 4)

*******

ஒரு கிருஷ்ணபட்ச இரவில் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர், சமுத்திரத்தின் எல்லை தேடி குட்டியை பெறச் செல்லும் திமிங்கிலம்போல, தன்னந்தனியாக இருளில் நீந்தி அங்கே வந்தார். (Chapter: 5)

போர்முடிந்து வீரமரணமடைந்தவர்களுக்கெல்லாம் நீர்க்கடன்களும் முடிந்தபின்னர் வியாசர் குருஷேத்ரக் களத்துக்குச் சென்றார். காலைவெளிச்சத்தில் செம்மண்பூமி கருமைகொள்ளும்படி நாய்களும் நரிகளும் கழுதைப்புலிகளும் நெரிந்துபரவி கூச்சலிட்டு பூசலிடுவதைக் கண்டு திகைத்து நின்றார். வானத்தை கரியகாடொன்றின் இலையடர்வு போல சிறகுகளால் மூடியபடி கழுகுகளும் பருந்துகளும் காக்கைகளும் பறந்துச் சுழன்றன. அங்கே நடந்துகொண்டிருந்தது மானுடத்தின் மீதான மாபெரும் வெற்றியின் உண்டாட்டு என உணர்ந்து கால்கள் தளர்ந்து அமர்ந்துகொண்டார். (Chapter: 5)

மரணத்தை வென்றாலும் மூப்பை வெல்லமுடியாத உடல் தசை வற்றி காட்டுத்தீயில் எரிந்து எஞ்சிய சுள்ளி போலிருந்தது. ஒருகாலத்தில் தாடியாகவும் தலைமயிராகவும் விழுதுவிட்டிருந்த கனத்த சடைக்கற்றைகள் முழுமையாகவே உதிர்ந்துபோய், தேமல்கள் பரவிச் சுருங்கிய தோல்மூடிய மண்டைஓடு தெரிந்தது. ஒன்றுடன் ஒன்று ஏறிப்பின்னிய விரல்களில் நகங்கள் உள்நோக்கிச் சுருண்டிருக்க, கைகளிலும் கழுத்திலும் நரம்புகள் தளர்ந்த கொடிகள்போல் ஓடின. உள்ளடங்கிய வாயும் தொங்கிய நாசியும், சிப்பிகள்போன்று மூடிய கண்களுமாக அங்கே இருந்த அவருக்குள் அவர் வெகுதொலைவில் இருந்துகொண்டிருந்தார். (Chapter: 5)

இந்த நகரம் தோல்கிழிந்த பெருமுரசு போல எனக்குத் தோன்றியது. (Chapter: 5)

“கதையின் தொடக்கம் ஆசிரியனின் அகங்காரத்தில் அல்லவா? என்னிடமிருந்து அதைத் தொடங்குக!” என்றார் வியாசர். “என் அகங்காரம் திரண்டு முதிர்ந்து முத்தாகி உதிர்ந்த ஒரு தருணம். அந்த விதை முளைத்த வனம்தான் குருஷேத்ரமாகியது” (Chapter: 5)

நீரெனில் கடல், ஒளியெனில் சூரியன், இறையெனில் பிரம்மம், சொல்லெனில் வியாசனின் சொல்லேயாகும். அது அழியாது வாழ்க!” (Chapter: 5)

*******

அந்தப்பெரும்படை மழைமேகக்கூட்டம் போல பாரதத்தின் ஐம்பத்தாறு நாடுகளிலும் ஊடுருவியது. ஹஸ்தியின் படை சென்ற இடங்களிலெல்லாம் சூரிய ஒளியை கரிய யானைக்கூட்டங்கள் உண்டதனால் இருள் ஏற்பட்டது. (Chapter: 6)

யானைக்கூட்டங்கள் பாறைகளைத் தூக்கி வைத்து முன்னின்று கட்டிய மகாமரியாதமென்ற மாபெரும் மதில் ஒன்று அதைச்சுற்றி அமைந்தது. யானைகளின் அதிபனை ஹஸ்திவிஜயன் என்றும், அவனுடைய புதியமாநகரை ஹஸ்திபுரி என்றும் சூதர்கள் பாடினர். காலையில் யானைகளின் ஓங்காரத்தால் அந்நகரம் விழித்தெழுந்தது. பகலில் யானைகளின் கருமையால் அது நிழலிலேயே இருந்தது. யானைகளின் மதத்தில் மொய்க்கும் ஈக்களின் ரீங்காரம் மலர்ச்சோலைகளின் தேனீக்களின் ரீங்காரத்தை விட ஓங்கி ஒலித்தது. அந்த யானைகளின் எழிலைக்காண ஐராவதம் மீதேறி இந்திரன் விண்மீது வந்து நிற்பதனால் என்றும் அந்நகர்மேல் மழை பெய்துகொண்டிருந்தது. (Chapter: 6)

அஸ்தினபுரி என்ற அழகியின் மான்விழிகளாக நீலத்தடாகங்கள் அமைந்தன. அவள் நீலக்கூந்தலைப்போல அங்கே பூம்பொழில்கள் வளர்ந்தன. மண்ணில் நாரைச்சிறகுகள்போல வெண்கூம்புமுகடுகள் கொண்ட மாளிகைகள் அதில் எழுந்தன. நீர்பெருகும் மாநதிகள் என சாலைகள் அந்நகருக்குள் ஓடின. சூதர்களின் கிணையொலியும், நூல் பயில்வோரின் பாடல் ஒலியும், குழந்தைகளின் விளையாட்டுச் சிரிப்பும் யானைகளின் மூச்சொலிகளுடன் கலந்து ஒலிக்கும் அந்நகரம் இறையருளைப் பெறுவதற்காக மானுடன் மண்ணில் விரித்துவைத்த யானம் எனத் தோன்றியது. (Chapter: 6)

“வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது” (Chapter: 6)

நரம்புகள் புடைத்த தசைநார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இறுகிப்புடைத்து அதிர்வதைப் பார்க்கையில்தான் அவன் இன்பம் கொண்டான். மனித உடலென்பது வைரம்பாயும்போதே முழுமை கொள்கிறது என நினைத்தான். (Chapter: 6)

“சேற்றில் அகப்பட்ட யானையை புலிகள் சூழ்வதுபோல அவர்கள் அஸ்தினபுரியைச் சூழ்கிறார்கள் (Chapter: 6)

பலபத்ரருக்கு தெய்வங்களின் கண்களில் துயரம் மட்டுமே இருக்கமுடியும் என்று பட்டது. ஏனென்றால் அவை முடிவற்ற காலத்தில் மானுடவாழ்க்கையை பார்த்துநிற்கின்றன. (Chapter: 6)

*******

செம்பவளப் பாறைகள் மேல் பொன்னாலும் வெள்ளியாலும் உடல் கொண்ட மீன்கள் சிறகுகளை விசிறியபடி அவன் கேட்கமுடியாத சொற்களை உச்சரித்தபடி பறந்துசென்றன. (Chapter: 7)

ஒவ்வொரு பெண்ணிலும் ஒருவாழ்நாளைக் கழித்தவராக யுகயுகமாகச் சென்று ஒருகணம் கொப்பளித்து உடைவதுபோல நீருக்குமேலே வந்தார். (Chapter: 7)

நூறாண்டுகள் பழைய சோமரசம்போல, இமையத்தின் சிவமூலிகை போல அது அவரை மயக்கி உலகை மறக்கச்செய்தது. அவரது கண்கள் புறம்நோக்கிய பார்வையை இழந்தன என உள்நோக்கித் திரும்பிக்கொண்டன. கனவில் இசைகேட்கும் வைணிகனைப்போல அவர் விரல்கள் எப்போதும் காற்றை மீட்டிக்கொண்டிருந்தன. அன்னை மணம் அறிந்த கன்றின் காதுகளைப்போல அவர் புலன்கள் அவளுக்காக கூர்ந்திருந்தன. கந்தர்வர்களின் முகங்களில் மட்டுமே இருக்கும் புன்னகை எப்போதும் அவரிடமிருந்தது. பதினெட்டாண்டுகளில் இருநூற்று இருபது முத்துக்களும் தீர்வது வரை சந்தனு அந்தப்புரம்விட்டு வெளியே வரவில்லை. (Chapter: 7)

‘கன்றுக்கு பாற்கடல் மரணமேயாகும்’ என்று முதுநிமித்திகர் சொன்னார். அவருடலில் நாள்தோறும் காய்ச்சல் படிப்படியாக ஏறி வந்தது. அவரது நாடியைப்பிடித்துப்பார்த்த அரண்மனை வைத்தியர்கள் அதில் படைக்குதிரையின் குளம்படிச்சத்தம் ஒலிப்பதாகச் சொன்னார்கள். ‘ஆழம்’ என்ற சொல்லை சந்தனு கடைசியாகச் சொன்னார். நாசி விரித்து அதன் வாசனையை ஏற்பவர்போல மூச்சிழுத்தார். அம்மூச்சை வெளிவிடவில்லை. (Chapter: 7)

*******

சஞ்சலமேயற்ற பெரிய விழிகளும், அகன்ற மார்பும், பொன்னிற நாகங்கள் போன்ற கைகளும் கொண்ட சிறுவன் தன் தந்தையைவிட உயரமானவனாக இருந்தான். ஒவ்வொரு சொல்லுக்குப்பின்னும் அதுவரை அறிந்த ஞானம் அனைத்தையும் கொண்டுவந்து நிறுத்தும் பேச்சுடையவனாக இருந்தான். ஒரு கணமேனும் தன்னைப்பற்றி நினையாதவர்களுக்கு மட்டுமே உரிய கருணை நிறைந்த புன்னகை கொண்டிருந்தான். (Chapter: 8)

மலையுச்சியின் ஒற்றைமரத்தில் கூடும் தனிமை அவரிடம் எப்போதுமிருந்தது. ஒவ்வொரு பார்வையிலும் நான் இங்கிருப்பவனல்ல என்று சொல்வதுபோல, ஒவ்வொரு சொல்லிலும் இதற்குமேல் சொல்பவனல்ல என்பதுபோல, ஒவ்வொரு காலடியிலும் முற்றாக கடந்து செல்பவர்போல அவர் தெரிந்தார். (Chapter: 8)

சத்யவதி பெருமூச்சுடன் “யானை சேற்றில் சிக்கினால் நாய் வந்து கடிக்கும் என்பார்கள்” என்றாள். (Chapter: 8)

விருப்பமில்லாத பெண்ணைக் கவர்ந்துவருவது பைசாசிகம்…ஷத்ரியன் அதைச்செய்வதென்பது தன் முன்னோரை அவமதிப்பதன்றி வேறல்ல.” (Chapter: 8)

யாசிப்பவர் போல கைகள் அவரையறியாமல் நீண்டன. “பழிச்சொல்லில் வாழ்வதே வீரனின் மீளா நரகம் தாயே… (Chapter: 8)

பீஷ்மர் “அன்னையே, ஷத்ரியதர்மம் என்னவென்று நானறிவேன். ஆனால் மானுடதர்மத்தை அது மீறலாமா என்று எனக்குப் புரியவில்லை. தன் மனதுக்குகந்த கணவர்களைப் பெற எந்தப்பெண்ணுக்கும் உரிமையுண்டு…அந்தப்பெண்களை இங்கே கொண்டுவந்து அவர்களின் மனம்திறக்காமல் வயிறு திறந்தால் அங்கே முளைவிடும் கருவின் பழி என்னையும் குருகுலத்தையும் விடாது….அன்னையே, புராணங்களனைத்தும் சொல்லும் உண்மை ஒன்றே. பெண்பழி கொண்ட மண்ணில் அறதேவதைகள் நிலைப்பதில்லை….” என்றார் (Chapter: 8)

பெரும்பாறைகளைத் தூக்கி தன் எண்ணங்கள் மீது வைத்தது போல தளர்ந்திருந்தார். அனலையே ஆடையாக அணிந்ததுபோல எரிந்துகொண்டிருந்தார். (Chapter: 8)

தீர்க்கசியாமர் யமுனையைப் புகழ்ந்து பாட ஆரம்பித்தார். “சூரியனின் மகளாகிய யமுனை பாரதவர்ஷத்தின் குழலில் சூட்டப்பட்ட மயிலிறகு. கரியநிறம் கொண்டவளாதலால் யமுனையை காளிந்தி என்றனர் கவிஞர்கள். கங்கைக்கு இளையவள். வடக்கே கரிய கோபுரம் போலெழுந்து நிற்கும் களிந்தமலையில் தோன்றி மண்ணிலிறங்கி ஒருபோதும் கரைகள் மீறாதொழுகி தன் தமக்கையின் கைகள் கோர்ப்பவள். அவள் வாழ்க” என்றார். அவரது சொற்களின் வழியாக பீஷ்மர் யமுனையின் மரகதப்பச்சை நிறம்கொண்ட அலைகளைக் காண ஆரம்பித்தார். கடுந்தவச்சீலரான பராசரர் யமுனைக்கரைக்கு வந்து நின்றதை விழியற்ற சூதரின் பாடல் வழியாக பார்க்கலானார். (Chapter: 8)

அவன் வாசித்துமுடித்தபோது மலர்க்கனத்தால் மரக்கிளைகள் தாழ்ந்து தொங்கி தூங்கும் மதயானைகளின் மத்தகங்கள்போல மெல்ல ஆடின. அவன் சென்றபின் அந்தக் குழலிசையை மெல்ல திரும்ப மீட்டியபடி வேங்கை மலருதிர்க்கத் தொடங்கியது. (Chapter: 8)

தன் வல்லமையையும் எல்லையையும் உணர்ந்த பராசரர் அதன்பின் மலைச்சிகர நுனியில் நின்று வான் நோக்கி துதிக்கை தூக்கும் யானையையே தன்னுள் எப்போதும் உணர்ந்தார். (Chapter: 8)

காட்டில் எந்த மலரிலும் அதை அவர் உணர்ந்ததில்லை. பிறந்த குழந்தையிடமிருக்கும் கருவறை வாசனை போன்றது. அல்லது முலைப்பாலின் வாசனை. அல்லது புதுமீனின் வாசனை. யமுனையின் மையத்தை அடைந்தபோது அது நீராழத்தின் வாசனை என்று அவர் அறிந்தார். அவருடைய உள்ளும் புறமும் அவளன்றி வேறேதுமில்லாமலாக்கியது அவ்வாசனை. (Chapter: 8)

*******

அங்கே வேதநாதம் கேட்டுப்பழகிய சோலைக்குயில்கள் காயத்ரி சந்தத்திலும், மைனாக்கள் அனுஷ்டுப்பிலும், வானம்பாடிகள் திருஷ்டுப்பிலும், நாகணவாய்கள் உஷ்ணுக்கிலும், நாரைகள் ஜகதியிலும் இசைக்குரலெழுப்பும் என்று சூதர்கள் பாடினர். மலையில் உருண்டுவந்த வெண்கற்களினூடாக நுரைத்துச் சிரித்துப்பாயும் கங்கையின் கரையில் ஈச்சையோலைகளை கூரையிட்டு மரப்பட்டைகளைக் கொண்டு கட்டப்பட்ட சிறுகுடில்கள் இருந்தன. (Chapter: 9)

சிறகுகள் போல அவரது பட்டுச்சால்வை பின்னால் எழுந்து பறக்க, சிம்மப்பிடரி என அவர் தாடியும் சிகையும் காற்றில் ததும்பின. (Chapter: 9)

‘நீ என்னை அறியமாட்டாய். நானோ ஒவ்வொரு பிறவியிலும் உன்னை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன். உன்னுடைய ரதசக்கரங்கள் ஓடித்தெறிக்கும் கூழாங்கற்கள்கூட பிறவிகள் தோறும் உன்னை பின்தொடர்கின்றன என நீ அறியவும் முடியாது. நான் இந்த முதுமைவரை வேட்டையாடி வேட்டையாடி கண்டறிந்தது ஒன்றே. காலத்தின் முடிவில்லா மடிப்புகளிலெல்லாம் பின்னிப்பின்னிச்செல்லும் அழியாத வலையொன்றின் வெறும் கண்ணிகள் நாம்’ என்று சித்ரகர்ணி சொல்லிக்கொண்டது. தன் பிடரிமயிரில் மொய்த்த பூச்சிகளை விரட்ட சடைத்தலையை குலைத்துக்கொண்ட அசைவை புதருக்குள் காற்றுபுகுந்ததாக எண்ணினார் பீஷ்மர். (Chapter: 9)

கருங்கல்சில்லுகள் போல ஈரம் மின்னிய பெரியகண்களால் அந்தப் பசு தன்னிடம் எதையோ சொல்லமுற்படுவதுபோல பீஷ்மர் உணர்ந்தார். ஒருகணம் நின்று அதன் முன்னோக்கிக் குவிந்த காதுகளையும் விறகுக்கரிமீது தீச்சுடர்போல நாசியை நக்கிச்சென்ற நாக்கையும் பார்த்தபின் உள்ளே சென்றார். (Chapter: 9)

மெலிந்த வலிமையான கரிய உடல் மீது நரம்புகள் இறுக்கிக் கட்டப்பட்டவை போலிருந்தன. கருமையும் வெண்மையும் இடைகலந்த தாடியும் நீண்ட சாம்பல்நிறச்சடைகளும் மார்பிலும் தோளிலும் விழுந்துகிடந்தன. கண்கள் மீன்விழிகள் போலத் தோன்றின. (Chapter: 9)

“வானை எட்டமுடியாத எளிய மனிதர்கள் கோபுரங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்” என்றார் வியாசர். (Chapter: 9)

நான் மண்ணின் எளியசிக்கல்களுடன் போரிட்டுக்கொண்டிருப்பவன். எனக்கு சொற்கள் கைகூடவேயில்லை. ஆகவே அம்புகளை பயிற்சிசெய்கிறேன்” என்றார். (Chapter: 9)

“ஆயுதங்கள் உயிரற்றவை. உயிரற்றவைக்கு மட்டுமே கச்சிதம் கைகூடுகிறது. அவற்றை இயக்கும் விதிகளுக்கு அப்பால் அவற்றில் ஏதுமில்லை..” (Chapter: 9)

“ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது….பொறு நீ சேர்த்துக்கொண்டவை எல்லாம் உன்னைவிட்டு ஒழுகிமறையும் நாள் ஒன்று வரும்” (Chapter: 9)

“இத்தனை தர்க்கங்களுக்கும் அப்பால் மழையில் கரைக்கப்படாத பாறைபோல அந்த உண்மை நின்றுகொண்டிருக்கிறது மூத்தவரே. அந்தப்பெண்களின் உள்ளம். அவர்கள் இந்த மண்ணில் வந்து விடப்போகும் கண்ணீர். அதை களம் வரைந்த பின்பே ஆடத்தொடங்கும் என் எளிய தர்க்கஞானமும், நான்குவாயில்களையும் மூடிக்கொண்டிருக்கும் குலநீதியும் தாங்குமா என்ன?” “அந்தச் சிந்தனை வந்தபின் நீ வெறும் ஷத்ரியனல்ல…ரிஷிகளின் பாதையில் செல்கிறாய்” என்றார் வியாசர் “நீ ஒருபக்கம் ஷத்ரியனாக பேசுகிறாய். இன்னொரு பக்கம் ஒரு சாதாரண மனிதனாகவும் சிந்திக்கிறாய். போரில் நீ அறுத்தெறியும் தலைக்குரியவனின் குழந்தைகளின் கண்ணீரை ஒருகணமேனும் எண்ணிப்பார்த்ததுண்டா?” “எண்ணிப்பார்க்கவும்கூடும் என்று இப்போது நினைக்கிறேன் மூத்தவரே….சிலசமயம் நான் ஷத்ரியனை விட மனிதன் என்ற இடம் பெரிதென்றும் எண்ணுகிறேன்” என்றார் பீஷ்மர். (Chapter: 9)

அப்போது சாமரம்போன்ற சிறகுகள் வீசி ஒலிக்க எரித்துளிகள் போன்ற கண்களும், போரில் பின்னிக்கொண்ட குத்துவாட்களைப் போன்ற அலகுகளும், ஆற்றுக்கரை மரத்தின் வேர்ப்பிடிப்பு போன்ற கால்களும் கொண்ட செம்பருந்து ஒன்று வந்து அவன் உப்பரிகை விளிம்பிலமர்ந்தது. (Chapter: 9)

தன்னறம் என்பது புடவியின் பேரியக்கத்தில் தன் இடமென்ன என்றுணர்வது மட்டுமே. தன்னைச்சுற்றி இப்புடவி நிகழ்கிறது என்று எண்ணிக்கொள்வது தன்னகங்காரம் என்றே பொருள்படும். தன்னறம் முக்தியையும் தன்னகங்காரம் அழிவையும் அளிக்கும்” என்றது. (Chapter: 9)

சித்ரகன் சிலகணங்கள் சிந்தனைசெய்தபின் “மன்னனே நீ என் காலடியில் தலைகுனிந்ததனாலேயே என்னிடம் அடைக்கலம் கோரியவனாகிறாய். உன்னை உண்பதை விட நானும் என்குலமும் பட்டினியில் மடிவதே அறமாகும்” என்று சொல்லி பறந்துசென்றது. (Chapter: 9)

*******

செந்நிற ஆடையும் செவ்வரியோடிய பெரிய விழிகளும் கொண்டவள் அம்பை. நீலநிற ஆடையணிந்த மின்னும் கரியநிறத்தில் இருந்தவள் அம்பிகை. வெண்ணிற ஆடையணிந்து மெல்லிய உடல்கொண்டவள் அம்பாலிகை. முக்குணங்களும் காசிமன்னனிடம் மூன்று மகள்களாகப் பிறந்திருக்கின்றன என்றனர் நிமித்திகர்கள். (Chapter: 10)

பதினாறாயிரத்து எட்டு இமயமலை முடிகளையும் சுற்றிவளைத்துத் தழுவியபடி துயிலும் கரிய பேருருவம் கொண்டவன். அணையாத இச்சை என இமையாத கண்கள் கொண்டவன். மூன்று காலம்போலவே மும்மடிப்புடன் முடிவிலாதொழுகும் உடல் கொண்டவன். கணங்களைப்போல நிலையில்லாமல் அசையும் நுனிவாலைக் கொண்டவன். ஊழித்தீயென எரிந்தசையும் செந்நாக்குகளைக் கொண்டவன். பூமியெனும் தீபம் அணையாது காக்க விரிந்த கைக்குவிதல்போன்று எழுந்த படம் கொண்டவன். ஏழுலகங்களையும் எரித்தழித்தபின் தன்னையும் அழித்துக்கொள்ளும் கடும் விஷம் வாழும் வெண்பற்கள் கொண்டவன். (Chapter: 10)

அழகியரே, தந்தையின் கண்வழியாகவே பெண் முழு அழகு கொள்கிறாள். (Chapter: 10)

நீலவிடம்கொண்ட அவன் கழுத்தழகில் அவள் காலங்கள் மறைந்து காதல்கொண்டாள். (Chapter: 10)

களத்தில் நான் தோற்கவில்லை, உன் மேல் கொண்ட அன்பினால் தோற்றேன்” என்று தட்சன் ஆயிரம் தலைகளால் படமெடுத்து சீறினான். (Chapter: 10)

வெண்ணிற வானம் நெருங்கி வந்து விரிந்தது போல கட்டப்பட்டிருந்த மணப்பந்தலின் முகப்பில் அமைந்த ஏழடுக்கு மலர்க்கோபுரத்தை சிற்பிகள் அலங்கரித்துக்கொண்டிருந்தனர். (Chapter: 10)

*******

மூவரும் உள்ளே நெருப்பிட்ட கலங்கள் போல சிவந்து கனிந்திருப்பதாகத் தோன்றியது. செம்பு, இரும்பு, வெள்ளிக் கலங்கள். உள்ளே மலரிதழ் விரித்து எரியும் அந்த சுவாலையை அவளும் ஒருகாலத்தில் அறிந்திருந்தாள். ஒவ்வொரு கணமும் இனிக்கும் அந்தத் தருணம் பிறகெப்போதும் வாழ்வில் திரும்பியதேயில்லை. (Chapter: 11)

ஒவ்வொரு சொல்லுக்கும் அம்பையின் உடலில் காற்று அசைக்கும் செம்பட்டுத் திரை போல நாணம் நெளிந்துசென்றது. கண்களில் சிரிப்பு மின்னிமின்னி அணைந்துகொண்டிருந்தது. அவர்கள் பேசிக்கொள்ளும் அத்தனை சொற்களுக்கும் ஒரே பொருள்தான் என புராவதி அறிவாள். பிறந்த கன்று துள்ளிக்குதிப்பதன் பொருள். (Chapter: 11)

".... கன்னியின் மனம் எரியக்காத்திருக்கும் காடுபோன்றது. ஒரு மூங்கில் உரசினாலே போதும் என்று என் அன்னை சொல்வதுண்டு” (Chapter: 11)

இனிமேல் உங்கள் கற்பே உங்களுக்குக் காவலாக ஆகும். இன்றுவரை காசியின் பெருங்குலத்தின் உறுப்பினராக இருந்த நீங்கள் கனிகள் மரங்களிலிருந்து உதிர்வது போல விலகிச்செல்கிறீர்கள். உங்கள் உடலில் மலர்களை விரியவைத்த தேவதைகள் அனைவருக்கும் நன்றி சொல்லுங்கள். உங்கள் நெஞ்சில் கனவுகளை நிரப்பிய தேவதைகளை வணங்குங்கள். உங்கள் கண்களுக்கு அவர்கள் காட்டிய வசந்தம் நிறைந்த பூவுலகுக்காக அவர்களை வாழ்த்துங்கள். அன்னையின் ஆசியுடன் சென்றுவாருங்கள்” என்று வாழ்த்தி அவர்களின் நெற்றியில் மஞ்சள்பூசி ஆசியளித்தார். (Chapter: 11)

“மந்தையில் பின்னால் செல்லும் நோயுற்ற மிருகம் சிம்மங்களுக்கு உணவாகும். அதுவே அரச நெறியாகவும் உள்ளது” என்றாள் புராவதி. (Chapter: 11)

“முதல் இளவரசியின் பெயர் அம்பை. அனலைக் கழலாக அணிந்த கொற்றவையின் பெயர்கொண்டவர். முக்கண் முதல்வியின் ரஜோகுணம் மிக்கவர். செந்நிற ஆடைகளையும் செந்தழல் மணிகளையும் விரும்பி அணிபவர். (Chapter: 11)

“பாய்கலை ஏறிய பாவை போலிருக்கிறார்….’’ என்றான். (Chapter: 11)

கங்கைக்கரையின் பெரும்படிக்கட்டுகளில் உருண்டு உருண்டு முடிவேயில்லாமல் விழுந்துகொண்டே இருப்பவள் போல உணர்ந்தாள். (Chapter: 11)

*******

வேட்டையில் இரையை நெருங்கும் வேங்கையைப்போல மெல்லிய தாழ்நடையுடன் கையில் மாலையுடன் அம்பை சால்வனை மட்டும் நோக்கி அவனைப்பார்த்து சென்றாள். (Chapter: 12)

அவள் கையில் வெள்ளிநிற மலர் போலச் சுழன்ற வாளைப்பார்த்து பீஷ்மர் சிலகணங்கள் மெய்மறந்து நின்றார். (Chapter: 12)

அவரது வில்லில் இருந்து ஆலமரம் கலைந்து எழும் பறவைக்கூட்டம் போல அம்புகள் வந்துகொண்டே இருந்தன என்று அங்கிருந்த சூதர்களின் பாடல்கள் பின்னர் பாடின. அவரெதிரே நின்ற ஷத்ரியர்களின் கைகளிலிருந்து அம்புகளும் விற்களும் சருகுகள் போல உதிர்ந்து மண்ணில் ஒலியுடன் விழுந்தன. மென்மையாக வந்து முத்தமிட்டுச்செல்லும் தேன்சிட்டுகள் போன்ற அம்புகள், தேனீக்கூட்டம் போன்ற அம்புகள், கோடைகால முதல்மழைச்சாரல் போன்ற அம்புகள் என்று பாடினர் சூதர். (Chapter: 12)

அவரது சிற்றம்புகள் சிறிய குருவிகள் போல வந்து மண்ணில் இறங்கிப்பதிந்து நடுங்குவதையும் கைகளும் தோள்களும் காயம்பட்டு குருதி வழிய விழுந்துகிடக்கும் ஷத்ரியர்களையும் புராவதி கண்டாள். (Chapter: 12)

அவர்களின் கொடிகளும் மேலாடைகளும் சிறகுகளாக அலைபாய ரதங்கள் விண்ணில் பறப்பவையாகத் தெரிந்தன. (Chapter: 12)

அது சினம்கொண்ட பறவைகளின் வான்போர் போலிருந்தது என்று பின்னாளில் ஒரு சூதன் பாடினான். அம்புகள் அம்புகளை வானிலேயே ஒடித்து வீழ்த்தின. கால்கள் முறிந்த குதிரைகள் ஓட்டத்தின் வேகத்தில் சிதறித்தெறித்து விழுந்தன. (Chapter: 12)

பீஷ்மரின் வில்வித்தை ஒரு நடனம் போலிருந்தது. அவர் குறிபார்க்கவில்லை, கைகள் குறிகளை அறிந்திருந்தன. அவர் உடல் அம்புகளை அறிந்திருந்தது. அவரது கண்கள் அப்பகுதியின் புழுதியையும் அறிந்திருந்தன. (Chapter: 12)

தன் ரதத்தின் தடமெங்கும் அவரது அம்புகள் விழுந்து சிதறி பின்னால் செல்வதைக் கண்டான். அவை மிகமெல்லிய ஆனால் உறுதியான புல்லால் ஆனவை. புல்லால் வாலும் இரும்பால் அலகும் கொண்ட பறவைகள். மீன்கொத்திகள் போல அவை வானில் எழுந்து மிதந்து வந்து சரேலென்று சரிந்து கொத்த அந்த புல்நுனிகளே காரணம் என்று புரிந்துகொண்டான். (Chapter: 12)

வெண்நாரை சிறகுவிரிப்பதைப்போல படகுகளின் பாய்கள் விரிந்தன. காசிநகரம் அதன் கோட்டையுடனும் மாளிகைகளுடனும் விஸ்வநாதன் பேராலயத்துடனும் கடல்யானம் போல தன்னைவிட்டு விலகிச்செல்வதைக் கண்டு அமர்ந்திருந்தார் பீஷ்மர். அவரது தோளில் பட்டிருந்த காயத்தின் மீது நெய்யுடன் சேர்த்து உருக்கிய பச்சிலைமருந்து ஊற்றி சேவகன் கட்டவந்தபோது புலிபோல உறுமி அவனை அகற்றினார். (Chapter: 12)

அம்பிகையும் அம்பாலிகையும் அஞ்சி அலறியபடி மழைக்கால குருவிகள் என படகின் மூலையில் ஒடுங்கிக்கொண்டனர். இரை பறிக்கப்பட்ட கழுகு போல சினந்தவளாக அம்பை மட்டும் எழுந்தாள். (Chapter: 12)

“எதைத்தாங்குவது? குயவன் களிமண்ணைக் கையாள்வதுபோல அன்னிய ஆணொருவன் நம் உடலைக் குழைப்பதையா? நம்மில் நாம் விரும்பாத ஒன்றை அவன் வடித்தெடுப்பதையா?” என்றாள் அம்பை. (Chapter: 12)

“…என் வழி நெருப்பின் வழி என்று முதுநாகினி என்னிடம் சொன்னாள். குன்றாத விஷம் கொண்டவையாக என் சொற்கள் அமையவேண்டுமென என்னை வாழ்த்தினாள். இப்போதுதான் அவற்றின் பொருள் எனக்குப்புரிகிறது. என் பாதையை நானே அனைத்தையும் எரித்து அமைத்துக்கொள்வேன்.” (Chapter: 12)

“இளவயதில் காதல்வயப்படாத கன்னியர் எவர்? இளவரசியே, இளங்கன்னி வயதில் ஆண்களைப் பார்க்கும் கண்களே பெண்களுக்கில்லை என்று காவியங்கள் சொல்கின்றன. ஆண்கள் அப்போது அவர்களுக்கு உயிருள்ள ஆடிகள் மட்டுமே. அதில் தங்களைத் தாங்களே நோக்கி சலிப்பில்லாமல் அலங்கரித்துக்கொள்வதையே அவர்கள் காதலென்று சொல்கிறார்கள்….” பீஷ்மர் குனிந்து அம்பையின் கண்களைப்பார்த்தார். அவரது திகைப்பூட்டும் உயரம் காரணமாக வானில் இருந்து ஓர் இயக்கன் பார்ப்பதுபோல அவள் உணர்ந்தாள். “பெண்கள் கண்வழியாக ஆண்களை அறியமுடியாது. கருப்பை வழியாக மட்டுமே அறியமுடியும். அதுவே இயற்கையின் நெறி…அவனை மறந்துவிடுங்கள்.” (Chapter: 12)

இளவரசியே, சூதர்பாடல்கள் வேதவனத்தின் கிளிகள் போல. நீட்டிய கைகளை அவை அஞ்சும். அவற்றை அறியாது தியானத்தில் இருக்கும் யோகியரின் தோள்களிலேயே அமரும்.” (Chapter: 12)

*******

அவன் உடலெங்கும் நரம்புகள் நீலநிற சர்ப்பக்குழவிகள் போல சுற்றிப்படர்ந்து இதயத்துடிப்புக்கு ஏற்ப அதிர்ந்துகொண்டிருந்தன. (Chapter: 13)

சித்திரமெத்தையில் சாய்ந்து நரம்புகளில் விஷம் ஓடும் குளம்படியைக் கேட்டபடி அரைக்கண்மூடிக் கிடந்த விசித்திரவீரியனின் முன்னால் அமர்ந்து சூதர் தன்னுடைய கிணைப்பறையைக் கொட்டி அப்சரஸ்கள் நிலவில் மானுடப் பொன்னுடலுடன் நீராடிக்களிக்கும் காட்சியை பாடிக்கொண்டிருந்தார். (Chapter: 13)

விசித்திரவீரியன் “காது மட்டும்தான் உழைப்பில்லாமல் பணியாற்றும் உறுப்பு ஸ்தானகரே” என்றான் (Chapter: 13)

தலையை கைப்பிடியாகக் கொண்டு சுழலும் சாட்டைகள். மலையிடுக்கின் மண் பொழிவுகள். இருள்படிந்த காட்டுவழிகள். தொங்கி காற்றிலாடும் அருவிகள். கைநீட்டும் கொடிநுனிகள். சுருண்டுபற்றும் வானர வால்கள். நெளியும் மயில்கழுத்துகள். தயங்கி வழியும் ஓடைகள். நெளியும் கருங்கூந்தல்கள். விழியை வளைத்த புருவங்கள். அகம் மட்டுமறியும் ஆப்தவாக்கியத்தின் தன்னந்தனியான இருண்ட பயணம்.. (Chapter: 13)

முற்றியநாகத்தின் வாயில் விளங்கும் நாகமணிபோல நீல ஒளியுடன் அது அவரது கழுத்தில் தங்கியது. (Chapter: 13)

இளங்காற்றில் இருந்த ஈரப்பதத்திலிருந்து வந்தவை போல ஏதேதோ எண்ணங்கள் அவனூடாகச் சென்றுகொண்டிருந்தன. (Chapter: 13)

விப்ரதன் சொல்லின் வேகத்தில் சற்றே முன்னகர்ந்து “வேள்விக்கூடம் மேல் படர்ந்து ஏறும் நெருப்பு போலிருந்தார்” என்றான். “ஏழுமுறை தீட்டப்பட்ட வாள் போல. ஆவணிமாதம் ஆயில்யநட்சத்திரத்தில் அதிகாலையில் படமெடுக்கும் ராஜநாகம்போல…” (Chapter: 13)

*******

பிரபஞ்சத்தில் கைவிடப்பட்டு திசைவெளியில் அலையும் அடையாளம்காணப்படாத கோளத்தைப்போல தன்னை உணர்ந்தாள். (Chapter: 14)

வங்கத்துக்குச் செல்லும் வணிகப்படகுகள் சிக்கிக்கொண்ட பறவைகள் போல வண்ணக்கொடிகள் காற்றில் படபடக்க, வெண்பாய்கள் மாபெரும் சங்குகள் போலப் புடைத்து நிற்க, தென்திசை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. (Chapter: 14)

“அன்னையே, இந்தத் துடுப்பு எனக்கு மீனுக்குச் சிறகுபோல. நான் இதனுடன்பிறந்தவன்” என்றான். (Chapter: 14)

“அன்னையே, படகிலிருக்கும் காற்றுபுடைத்த பாய்போலிருக்கிறீர்கள்....." (Chapter: 14)

அவள் அண்ணாந்து பார்ப்பதைக்கண்டு “அவை பூச்சிகளைப்பிடிப்பவை….வானத்தின் புலிகள் அவை” என்றான் நிருதன். (Chapter: 14)

அவளுடைய படகு யானை விலாவை நெருங்கும் சிட்டு போல பெரும் நாவாயொன்றை நெருங்கிச்சென்றது. பின்பு நாவாயின் உடல் மரத்தாலான கோட்டைபோல மாறி கண்களை மறைத்தது. கங்கைக்குள் நடப்பட்ட தோதகத்தி மரத்தடிகள் கரிய அட்டையின் ஆயிரம் கால்கள்போலத் தோன்றின. நெருங்க நெருங்க காடுபோல மாறி பின்பு கோபுரத்தூண்களாக ஆயின. (Chapter: 14)

காற்றில்பறக்கும் ஆடையை இடையில் சுற்றிச் செல்லும் இறகு போல சென்றுகொண்டிருந்தாள். (Chapter: 14)

ரதத்தில் செல்லும் வணிகன் இரவலனின் திருவோட்டில் இட்ட பிச்சையா நீ?” என்றான். (Chapter: 14)

“இளவரசியே, அரசர்களுக்கு அரசியலில் மட்டுமே காதல் இருக்கமுடியும்….” என்றார். (Chapter: 14)

“சூதர்களின் பாடல்களில் ஓடும் சிரிப்பைக்கூட புரிந்துகொள்ளமுடியாத உன்னால் என் ஆன்மாவை எப்படிப் புரிந்துகொள்ளமுடியும்?” (Chapter: 14)

அவளுடைய மூச்சிரைப்பு நாகத்தின் பத்திவிரியும் அசைவுபோலவே தோன்றியது. நாகம்போல சீறும் மூச்சுடன் “நான் உன்னையா இத்தனைநாள் விரும்பியிருந்தேன்? பல்லக்கில் பிணம் இருப்பது போல என் நெஞ்சில் நீயா இருந்தாய்?” என்றாள். (Chapter: 14)

அம்பை வெளியே இறங்கிச்செல்வது பொன்னிற நாகமொன்று சொடுக்கிச்சுழன்று செல்வதுபோலிருந்தது என்று நினைத்தான். (Chapter: 14)

அனல்பட்ட காட்டுக்குதிரைபோல அவள் படிகளில் இறங்கி சாலையில் ஓடி கங்கையை அடைந்தாள். (Chapter: 14)

*******

சரடுகள் அறுபட்ட கூத்துப்பாவைபோல அம்பையின் கைகளும் கால்களும் விழுந்தன. (Chapter: 15)

மாளாச் சுமை இழுக்கும் குதிரை போல தசைகள் இறுகித்தெறித்தன. (Chapter: 15)

நான் மின்னல் மறைவதுபோல எச்சமின்றி கணத்தில் விலகும் விதி கொண்டவள் (Chapter: 15)

கருப்பை என்னும் நங்கூரத்தால் ஆழக்கட்டப்பட்டவர்கள் பெண்கள்” என்றாள் விருஷ்டி. (Chapter: 15)

*******

ஒரு தெய்வம் இறங்கிச்சென்று பிறிதொரு தெய்வம் வந்து படகிலேறியதுபோல நிருதன் உணர்ந்தான் (Chapter: 16)

திரும்பிவந்த அம்பை மெல்லிய நடையும், உடல்பூத்த சலனங்களும், செவ்வாழைமெருகும் கொண்டவளாக இருந்தாள். (Chapter: 16)

வடதிசையிலிருந்து வானில் பறந்துசெல்லும் வெண்நாரை பொன்னிற அலகால் இழுபட்டுச்செல்வதுபோல அவள் சென்றுகொண்டிருந்தாளென நினைத்தான். அவளருகே ஒரு வீணையை வைத்தால் அது இசைக்குமென்றும் அவள் விரல்பட்டால் கங்கைநீர் அதிரும் என்றும் எண்ணிக்கொண்டான். (Chapter: 16)

நெய்விழும் தீ போல அவ்வப்போது சிவந்தும், மெல்ல தணிந்தாடியும், சுவாலையென எழுந்தும் படகுமூலையில் அவள் அமர்ந்திருக்கையில் படகு ஒரு நீளமான அகல்விளக்காக ஆகிவிட்டது என்று நிருதன் எண்ணிக்கொண்டான் (Chapter: 16)

அம்பை பேசுவதற்கான மூச்சு எஞ்சியிராதவளாக, உடலெங்கும் சொற்கள் விம்மி நிறைந்தவளாக நின்றாள். உள்ளெழுந்த எண்ணங்களின் விசையால் அவள் உடல் காற்றிலாடும் கொடிபோல ஆடியபோது நகைகள் ஓசையிட்டன. அமர்ந்திருக்கும்போதும் அவளுடைய உயரமிருந்த அம்மனிதனை முதல்முறையாக பார்ப்பவள் போல இருகண்களையும் விரித்து, மனதை விரித்து, தாகத்தை விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள். (Chapter: 16)

அப்பார்வை பட்டதுமே அவளுடலில் பரவிய மெல்லிய அசைவை, அவளில் இருந்து எழுந்த நுண்ணிய வாசனையை அவர் உணர்ந்ததும் அவரது உள்ளுக்குள் இருந்த ஆமை கால்களையும் தலையையும் இழுத்துக்கொண்டு கல்லாகியது (Chapter: 16)

வேட்டைநாய் முன் சிக்கிக்கொண்ட முயல்போல பீஷ்மர் அச்சத்தில் சிலிர்த்து அசைவிழந்து நின்றார். (Chapter: 16)

அம்பையின் முகம் கனிந்தது. பிழைசெய்துவிட்டு பிடிபட்ட குழந்தையிடம் அன்னை போல “காங்கேயரே, நான் மிக இளையவள். ஆனால் காதலில் மனம்கனிந்த பெண். உண்மையில் அன்னையும்கூட. உங்கள் தனிமையை நான் அறியமாட்டேன் என நினைக்கிறீர்களா? உங்கள் உள்ளுக்குள் நீங்கள் ஏங்குவதென்ன என்று நான் அறிவேன்….நீங்கள் விரும்புவது ஓர் அன்னையின் அணைப்பை மட்டும்தான்.” (Chapter: 16)

“அரசே, அன்புகொண்டவர்கள் வரமுடியாத ஆழம் என ஏதும் எவரிடமும் இருப்பதில்லை” என்றாள் அம்பை. (Chapter: 16)

முற்றிலும் திறந்தவராக அவள் முன் நின்ற பீஷ்மரின் பழகிய அகந்தை சுண்டப்பட்டு கீழே விழும் நாணயம் இறுதிக்கணத்தில் திரும்புவதுபோல நிலைமாறியது. (Chapter: 16)

அம்பை அம்புபட்ட கிருஷ்ணமிருகம் போன்ற கண்களால் அவரை நோக்கி “நான் உங்களிடம் கெஞ்சவேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?” என்றாள். (Chapter: 16)

உலகம் மீது வன்மம் கொண்டவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களையே வதைப்பார்கள்” என்றாள். (Chapter: 16)

நீர் விழுந்த கொதிநெய் என அவரது அகம் பொங்கியபோது அவர் சொல்லவேண்டிய கடைசி வாக்கியம் நாக்கில் வந்து நின்றது. அழுக்கு மீது குடியேறும் மூதேவி என. (Chapter: 16)

என்னை கிழித்துப்பார்க்கும் ஒரு பெண்ணருகே என்னால் வாழமுடியாது. எனக்குத் தேவையானவள் ஒரு பேதை. நான் கண்ணயர விழைவது ஒரு பஞ்சுமெத்தையில், கூரிய அம்புகளின் நுனியில் அல்ல” சொல்லிமுடித்ததும் அவரது உடல் நடுங்கத் தொடங்கியது. எய்யப்பட்ட அம்புக்குப்பின் அதிரும் நாண் போல. (Chapter: 16)

ஆணெனும் சிறுமையை பிரம்மனே அறிந்த கணம்போல அவர் உதடுகளில் ஒரு மெல்லிய ஏளனச்சுழிப்பு வெளிப்பட்டது. அதைக்கண்ட அக்கணத்தில் வெண்பனி நெருப்பானதுபோல, திருமகள் கொற்றவையானதுபோல அவள் உருமாறினாள். (Chapter: 16)

அவளுக்குப்பின்னால் சிதையில் இதயம் வேகும்போது எழுந்தமரும் பிணம்போல பீஷ்மர் மெல்ல அசைந்தார். அதன் ஒலியிலேயே அனைத்தையும் உணர்ந்தவளாக அம்பை திரும்பினாள். காதல் பெண்ணில் உருவாக்கும் அனைத்து அணிகளையும் அணிந்தவளாக, அவளுடைய கன்னியழகின் உச்சகணத்தில் அங்கே நின்றாள். கைகள் நெற்றிக்குழலை நீவ, கழுத்து ஒசிந்தசைய, இடை நெகிழ, மார்பகங்கள் விம்ம, இதோ நான் என. (Chapter: 16)

இடிபட்டெரியும் பசுமரம்போல சுருங்கி நெரிந்து துடித்த அவளுடலில் இருந்து சன்னதம் கொண்டெழும் மயான சாமுண்டியின் பேரோலம் கிளம்பியது. ரத்தமும் நிணமும் சிதற எலும்பை உடைத்து இதயத்தைப் பிழிந்து வீசுபவள் போல மார்பை ஓங்கியறைந்து சினம் கொண்ட சிம்மக்கூட்டம்போல குரலெழுப்பியபடி அவள் வெளியே பாய்ந்தாள். (Chapter: 16)

*******

ஓருருவம் ஒன்பதாவதைக் கண்டேன்! ஒன்பதும் ஒருத்தியே எனத் தெளிந்தேன் (Chapter: 17)

குறுவாட்கள் என பத்து கைவிரல்களும் விரிந்திருக்க, சினம்கொண்ட பிடியானை போல மண்ணில் காலதிர நடந்தபோது அரண்மனைச்சேவகர் அஞ்சி சிதறியோடினர். (Chapter: 17)

எரிபோல நிலமுண்டு வான்பொசுக்கி அவள் சென்றவழியில் ஒரு மனிதர்கூட இருக்கவில்லை. (Chapter: 17)

காலைக்குளிர் உறைந்து சொட்டுவதுபோன்ற மலையருவியில் சென்று அவள் நின்றாள். அவளுடல் பட்டதும் அருவியில் நீராவி எழுந்து மேகமாகியது. மலைச்சரிவின் வானம் சுழித்த பொழில்களில் அவளிறங்கினாள். அவை கொதித்துக்குமிழியிட்டன. ஆங்காரம்கொண்டு மலைப்பாறைகளை ஓங்கி அறைந்தாள். அவை உடைந்து சரிந்தன. ஆலமர விழுதுகள் அவளைக்கண்டு அஞ்சி நெளிந்தாடின. மதவேழங்கள் மத்தகம் தாழ்த்தி மண்ணில் கொம்பிறக்கின. ஊன்வாய் சிம்மங்கள் பதுங்கிக் கண்களை மூடிக்கொண்டன. (Chapter: 17)

‘கருப்பை ஈன்று மண்ணுக்கு வரும் ஒவ்வொரு ஆண்மகனும் வணங்கியாகவேண்டிய பெண்மையின் அருங்கணம் ஒன்று உள்ளது. அதை அவமதித்தவனை நான் பலிகொண்டாகவேண்டும். திருமகளின் மணிமுடியை மிதித்தவன் கொற்றவையின் கழல்நெருப்பில் எரிந்தாகவேண்டும். ஆணை! ஆணை!ஆணை!’ (Chapter: 17)

மலையிலிறங்கிய காட்டாறு என அவள் சென்றுகொண்டே இருந்தபோது பிறைநிலவுகள் போல வெண் கோரைப்பற்களும் மதமெரிந்த சிறுவிழிகளும் செண்பகமலர்போல சிறிய காதுகளும் கொண்ட பன்றிமுகத்துடன், புல்முளைத்த கரும்பாறைபோன்ற மாபெரும் மேனியுடன் வராஹி தேவி அவள் முன் வந்து நின்றாள். (Chapter: 17)

சிம்மத்திலேறிய துர்க்கை போல காற்றிலேறிவந்த அவளுடைய இடிக்குரலை கேட்டுக்கொண்டிருந்தான். (Chapter: 17)

பாறை பிளக்கும் ஒலியுடன் உறுமியபடி தேவி எழுந்து நின்றாள். அவள் தெய்வ விழிகள் அவனைப் பார்த்தன. அவளுக்கு அப்பால் மதவிழிகளில் குவிந்த இருள் என நின்ற பெரும்பன்றி உறுமியது. கூப்பிய கரங்களுடன் தன் முன் கண்மூடி குனிந்து அமர்ந்திருந்த விசித்திரவீரியன் தலைமேல் தன் கருகித்தோலுரிந்த காலைத் தூக்கி வைத்தாள். கண்ணீர் வழிய நடுங்கியபடி விசித்திரவீரியன் அமர்ந்திருந்தான். அவனுடைய அலைகடல்மேல் குளிர்நிலவு உதித்தது. (Chapter: 17) ‘

பிறவிப் பெரும்பாதையைப் போன்ற அக்குகைக்குள் தேவி கருவறை புகும் ஆன்மா போல சென்று கொண்டிருந்தாள் (Chapter: 17)

Note: Source: http://www.jeyamohan.in. Author of these text: Writer Jeyamohan. Jeyamohan owns the copyright for his works. If he objects, this post will be removed.