Sunday, April 18, 2004

கடத்தலும் கடத்தல் விளையாட்டு விளையாடும் குழந்தைகளும்

ஒரு குழந்தை காணாமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், ஓடிப்போனவர்கள், துரத்தப்பட்டவர்கள் என்று காணாமல் போகிற குழந்தைகளை வகைப்படுத்துகிறார்கள். 1999-ல் எடுக்கப்பட்டு 2002ல் வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி - 1999ல் 797,500 குழந்தைகள் அமெரிக்காவில் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 58,200 குழந்தைகள் குழந்தையின் குடும்பத்தைச் சாராதவர்களால் கடத்தப்பட்டனர். 203, 900 குழந்தைகள் குடும்பத்தினரால் கடத்தப்பட்டனர். கடத்தப்படுகிற குழந்தைகள் கொலை செய்யப்படுவது அரிதாக நிகழ்வது என்று 1997ல் வெளியான அறிக்கை ஒன்று சொல்கிறது. ஆனாலும், சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் காணாமல் போன குழந்தைகளைக் குறித்து மோசமான விளைவுகளை எதிர்பார்த்துக் கவலை கொள்ளச் செய்கிறது. கொலை செய்யப்படுகிற குழந்தைகளில் 74 சதவீதத்தினர் கடத்தப்பட்டு மூன்று மணிநேரங்களுக்குள் அத்தகுத் துயர முடிவை எதிர்கொள்கின்றனர் என்பதும் நெஞ்சை உறைய வைக்கிற நிஜம்.

கடத்தப்படும் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு இரையாவது இங்கு வளர்ந்து வருகிற அதிர்ச்சியூட்டுகிற நிகழ்வாகிவிட்டது. இதைத் தடுக்கும் பொருட்டே மேகன்ஸ் லா (Megan's Law) என்கிற சட்டம் அமுலுக்கு வந்தது. அச்சட்டத்தின்படி, சுற்றுவட்டாரத்தில் வாழ்கிற பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வரலாறுடைய நபர்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள இயலும். ஆனாலும், இவைகளை மீறிக் குழந்தைகள் கடத்தப்படுவதும், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதும் துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்தே வருகிறது. புளோரிடாவில் சார்லி புருசியா (Carlie Brucia) என்னும் 11 வயதுப் பெண் குழந்தை சமீபத்தில் பாலியல் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரால் கைப்பிடித்து நடத்தச் செல்லப்பட்டுக் காணாமல் போன காட்சி வீடியோவில் பதிவாகி வந்து அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரார்த்தனைகளும் போலிஸின் பிரயத்தனங்களும் பலிக்காமல்போய் சில நாள்களுக்குப் பின் அந்தக் குழந்தையின் உயிரற்ற உடலையே போலீஸார் மீட்க முடிந்தது. அந்தக் குழந்தையைக் கைப்பிடித்து கடைசியாக அழைத்துச் சென்ற நபர் இடையில் கைது செய்யப்பட்டும் குழந்தையைக் காப்பாற்ற இயலவில்லை. அதனாலேயே, குழந்தை காணவில்லை என்றாலே மனம் மோசமான ஒன்றையே நினைத்துக் கவலையுறுகிறது.

மரணதண்டனை கூடாது என்று நம்புகிறவர்களுள் நானும் ஒருவன். ஆனாலும், குழந்தைகளுக்கு இப்படி நேர்கிற கொடுமைகளைப் பார்க்கும்போது மனம் கொதிக்கிறது. ஒரு தந்தையாக அழுகையும், வேதனையும், கோபமும் பிறக்கின்றன. குழந்தைகளைச் சூறையாடிக் கொல்கிற பாதகர்களைத் தூக்கில் போட வேண்டும் என்கிற ஆவேசமும் சிலநேரங்களில் வருகிறது.

இப்படிப்பட்டச் சூழ்நிலையில் விஸ்கான்ஸின் மாநிலத்தில் பயிலும் ஆட்ரே ஸீலர் (Audrey Seiler) என்ற இருபது வயது இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி சமீபத்தில் காணாமல் போனது அமெரிக்கர்களைப் பதட்டம் கொள்ளச் செய்தது. ஆட்ரே உயர்நிலைப் பள்ளியில் வாலிபால் மற்றும் பாஸ்கட்பால் அணியின் தலைவியாக இருந்தவர். வகுப்பில் படிப்பில் மூன்றாவது இடம் பெற்றுக் கல்லூரியில் சேர்ந்தவர். மற்றவர்கள் ரோல் மாடல் என்று சொல்கிற அளவுக்குப் பள்ளியிலும் அவர் வாழ்ந்த சுற்றுப்புறத்திலும் பெயர் பெற்றவர். அவர் கல்லூரி டார்மிலிருந்து (dorm) அவர் கடைசியாக வெளியேறியக் காட்சியைத் தொலைகாட்சியில் பார்த்த அனைவருமே அவர் நல்லவிதமாக திரும்ப வேண்டும் என்று ஒரு கணமாவது வேண்டிக் கொண்டவர்கள்தான்.

நல்லவேளையாக இந்த முறை எதிர்பார்த்த எதிர்பாராதது எதுவும் நிகழ்வில்லை. ஆட்ரே சில நாள்களுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டார். அவரைத் தேடிய போலீஸீம், உள்ளூர் மக்களும், அவர் நண்பர்களும், அவர் ஓய்வு நேரச் சேவையாகப் பாடம் சொல்லிக் கொடுத்த பள்ளி மாணவர்களும் மட்டுமில்லாமல் அமெரிக்காவே சந்தோஷப் பெருமூச்சு விட்டது. அவரைக் கடத்தியவரைத் தேடுகிற பணி நடந்தது. பின்னர், வெளிவந்த தகவல் ஆச்சரியமளித்தது. ஆட்ரேவை யாரும் கடத்தவில்லை. இந்த நாடகத்தை அவரே நடத்தியிருக்கக் கூடும் என்று போலீஸார் சந்தேகிக்க ஆரம்பித்தனர். காணாமல் போன குழந்தைகளின் வகைகளில் "தன்னைத் தானே கடத்திக் கொண்டோர்" என்று ஒரு புதிய வகையைச் சேர்க்க வேண்டுமோ?

படிப்பிலும், சமூகத்திலும் வெற்றி பெற்றவராகக் கருதப்படுகிற, அனைவராலும் விரும்பப்படுகிற ஆட்ரே தன்னைத்தானே கடத்திக் கொள்வதற்கான சமூக, உளவியல் காரணங்கள் என்னவென்று ஆராய வேண்டும். "தனிமையை வேண்டி" அவர் இதைச் செய்ததாக முதலில் செய்திகள் வந்தன. அவர் பாய் பிரண்டின் கவனத்தைப் பெற அவர் இதைச் செய்தார் என்று இப்போது சொல்கிறார்கள். இந்தக் காலத்துக் குழந்தைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்குப் பெற்றோராகவும் நண்பனாகவும் இருப்பதே இந்த உலகத்தில் கடினமான வேலை என்பேன். ஆட்ரே மீது போலீஸார் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக இரண்டு மென்மையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆட்ரேவுக்குத் தேவை தண்டனை அல்ல, ஆதரவே என்று சில பத்திரிகைகள் எழுதியுள்ளன. நானும் அவ்வாறே நினைக்கிறேன்.

தண்டனைகளால் குழந்தைகளை விட்டு நாம் தூரவே செல்கிறோம். அன்பும் ஆதரவுமே குழந்தைகளுடனான நம்முடைய நீண்ட கால உறவில் உதவும். ஆனால், ஆட்ரே போன்ற குழந்தைகள் இப்படி செய்வதால், இது "புலி வருகிறது" கதையாக மாறி, தேவையான நேரத்தில் போலீஸ் மற்றும் நீதித்துறையினரை சரியாகச் செயல்படாமல் செய்துவிடுமோ என்கிற அச்சமும் இருக்கிறது. ஆனால், புலி வருகிறதோ இல்லையோ, புகார் வந்தால், காவல்துறையினர் அதைச் சிரமேற்கொண்டு விசாரிப்பவர்களாகவே இங்கே இருக்கிறார்கள் என்பது நல்ல விஷயம்.

குழந்தைகள் வீடு விட்டு வெளியே போய், படித்து, விளையாடி முடித்துவிட்டு, பத்திரமாக வீடு திரும்பும் வரை, வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிற பெற்றோரில் நானும் ஒருவன். அந்த வகையில் குழந்தைகளின் பாதுகாப்புக்கும் பத்திரத்துக்கும் உத்தரவாதமளிக்கக் கூடிய எந்தச் சட்டத்தையும் ஆதரிப்பவனாக நான் இருப்பேன். ஆனால், சட்டங்களை விடவும் குழந்தைகளிடையே நாம் வைத்திருக்கிற நல்லுறவு நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை. இந்த விஷயத்தில் என் குழந்தைகளின் உற்ற தோழன் என் மனைவிதான். அவர்களுடன் நான் செலவிடும் நேரம் மிகக் குறுகியது. என் குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் சமீபகால உறுதிமொழி.

No comments: