Sunday, February 12, 2006

சிந்தனைத் தாவல்கள்

ஆங்கிலத்தில் அப்போது ஏ.ஜி. கார்டனர் என்பவர் எழுதிவந்த வாழ்க்கை சார்ந்த கட்டுரைகளையொட்டித் தமிழில் "நடைச்சித்திரத்தை" அறிமுகப்படுத்தியவர் வ.ரா. என்று வல்லிக்கண்ணன் எழுதிப் படித்த ஞாபகம். வ.ரா. எழுதிய நடைச்சித்திரங்கள், அவர் ஆசிரியராக இருந்து தொடங்கப்பட்ட "மணிக்கொடியில்" வெளியாகிப் பிரசித்தம் பெற்றவை. நடைச்சித்திரம் பாணியில் சிறுகதை எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள். பொதுவாகக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்துவிட்டுப் பின் கதை எழுதப் புகுபவர்களின் ஆரம்பகால கதைகள் சிறுகதை மாதிரி இல்லாமல் நடைச்சித்திரம் மாதிரி தோற்றம் தருவதுண்டு. என்னுடைய ஆரம்பகால சிறுகதை(?) ஒன்றைப் படித்துவிட்டு நண்பர் கோபால் ராஜாராம் - "நன்றாக இருக்கிறது. ஆனால், சிறுகதை என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. நடைச் சித்திரம் மாதிரி இருக்கிறது" என்றது நினைவுக்கு வருகிறது. சிறுகதையின் இலக்கணங்களையும் நுட்பங்களையும் முழுதாகக் கொண்டுவருவதற்கு நிறையவே சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பதை சிறுகதைகள் எழுத முயன்ற என் சொந்த அனுபவத்திலும் - பிறர் எழுதிய அருமையான சிறுகதைகளைப் படித்தபோதும் - நான் உணர்ந்ததுண்டு. சிறுகதையின் குறைகள் தெரியாமல் இருக்க, கதையைத் "தன்மை"யிலும் (first person), உரையாடல்களிலும் சொல்லிவிடுகிற உத்திகளைப் பரவலாகப் பார்த்திருக்கிறேன். சுந்தர ராமசாமியை முதன்முறையாகச் சந்தித்தபோது, ".... என்பவர் சிறுகதைக்கும் நடைச்சித்திரத்துக்கும் இடைபட்ட ஒரு வடிவத்தில் நகைச்சுவை சேர்த்து எழுதுகிறார்" என்று சொன்னபோது, அவர் "ஆமாம்" என்று தலையசைத்தது நினைவுக்கு வருகிறது. (பெயர்கள் முக்கியமில்லை என்பதால் யார் என்பதை நான் குறிப்பிடவில்லை.) ஆனாலும் கூட அந்த எழுத்தாளரின் எழுத்தும் திறமையும் குறைத்து மதிப்பிடக் கூடியன அல்ல என்பது என் கருத்து.

சிட்டி பெ.கோ. சுந்தரராஜன், அசோகமித்திரன், ப. முத்துக்குமாரசாமி ஆகியோர் தொகுத்துக் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மணிக்கொடி இதழ் தொகுப்பில் வ.ரா. எழுதிய பல நடைச்சித்திரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தி.க. சிவசங்கரன் அவருடைய ஒரு புத்தகத்தில் (தலைப்பு மறந்துவிட்டது!), பி.எஸ். ராமையாவின் புகழ்பெற்ற "கார்னிவல்" என்ற கதையைப் பற்றி மட்டுமே ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்ததிலிருந்து அந்த கார்னிவெல் கதையைத் தேடிப் படிக்க வேண்டும் என்று தீராத தாகம் கொண்டு என் மனம் அலைந்திருக்கிறது. அந்த அளவுக்குத் தி.க.சி.யின் கட்டுரை அந்தக் கதை மீதான என் ஆர்வத்தைத் தூண்டி விட்டிருந்தது. போஸ்ட் கார்டு மூலம் இலக்கியம் வளர்ப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிற வல்லிக்கண்ணன், தி.க.சி. போன்றோர் ஒரு சாதாரண வாசகருக்கு நல்ல இலக்கியத்தை அறிமுகம் செய்கிறவர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதை என் சொந்த அனுபவத்தின் மூலமே உணரும்போது அதை இப்படிப் பதிவு செய்து வைப்பது சரியான செயலாக இருக்குமென்று நினைக்கிறேன். அதனாலேயே, வல்லிக்கண்ணன் போன்றோர் கடந்த ஐம்பது வருடத்தில் புதிய எழுத்தாளர்கள் எவரையும் அடையாளம் காட்டவில்லை என்று என் மதிப்பிற்குரிய ஜெயமோகன் என் புத்தக முன்னுரையில் எழுதும்போதும் ஒரு புன்னகையில் அந்த வாக்கியத்தை என்னால் கடந்து சென்றுவிட முடிகிறது. வண்ணநிலவனும் (வண்ண நிலவன் என்ற புனைப்பெயரை வைத்தவரே வல்லிக்கண்ணன்தான்), வண்ணதாசனும் வல்லிக்கண்ணன் ஊக்குவித்து வளர்த்த இலக்கியவாதிகள்தாம் என்பது ஜெயமோகன் அறிந்ததே.

மற்றபடிக்குச் சுந்தர ராமசாமி போன்ற நவீன இலக்கியவாதிகளின் வழிவந்தவர்கள் முற்போக்கு இலக்கியவாதிகளைத் தாக்குவதும், முற்போக்கு இலக்கியவாதிகள் நவீன இலக்கியவாதிகளை நிராகரிப்பதும், தமிழ் இலக்கியத்தின் அரசியல் என்றே நான் நம்புகிறேன். ஒரு வாசகனாக இருதரப்பிலும் இருக்கிற பொன்மணிகளைப் பொறுக்கிக் கொள்வதே என் சுதர்மத்துக்கு நான் செய்கிற நியாயமாக இருக்கும். சுந்தர ராமசாமி முன்வைத்த பல இலக்கியக் கருத்தாக்கங்களை ஆராய்ந்து பார்த்து நிராகரித்த பெருமையுடைய ஜெயமோகன், வல்லிக்கண்ணன், தி.க.சி போன்றோர்மீதான விமர்சனத்தை மட்டும் இன்னும் அப்படியே தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுகிறது. முற்போக்கு அணியினரால் தொடர்ந்து ஜெயமோகன் போன்றோர் தாக்கப்பட்டு வருவது ஒரு காரணமாக இருக்கலாம் என்று என் மனம் சொன்னாலும், ஜெயமோகனுக்கு அந்தக் காரணம்தான் இருக்கும் என்று நம்ப முடியவில்லை.

பத்மநாப ஐயருக்கு இயல்விருது கொடுக்கப்பட்டபோது அதைப் பாராட்டி ஜெயமோகன் எழுதிப் படித்த ஞாபகம். எழுத்தாளர்களை ஊக்குவிப்பதைப் பெரும் கடமையாகச் செய்துவருகிற பத்மநாப ஐயரின் பங்களிப்புகளைச் சரியாக ஏற்றுக் கொள்கிற ஜெயமோகன், மற்றவர்களை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல், தானே எழுதியும் வந்திருக்கிற வல்லிக்கண்ணன், தி.க.சி. போன்றோரை ஏன் நிராகரிக்கிறார் என்ற கேள்விக்கு ஜெயமோகன்தான் பதில் சொல்ல வேண்டும். நடைச்சித்திரத்தில் ஆரம்பித்து, கார்னிவெல்லுக்குக் கிளைதாவி ஜெயமோகனில் நின்றிருக்கிறேன். நனவோடையாக எழுதுவதில் ஏற்படுகிற பாய்ச்சல்கள் இவை என்றாலும், "மேட்டருக்குத் திரும்பி வா" என்று காதருகே கத்துகிற குரலுக்குச் செவிசாய்க்காமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொரு கிளையாகத் திரும்ப முயற்சிக்கிறேன்.

பி.எஸ். ராமையாவின் கார்னிவெல் கதையைச் சில வருடங்களுக்கு முன் எதிர்பாராத விதமாக மணிக்கொடி இதழ் தொகுப்பில் கண்டபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தி.க.சி.யின் கட்டுரை எழுப்பியிருந்த எதிர்பார்ப்புகள் பொய்யாகாத வண்ணம் அந்தக் கதை என் ரசனைக்கு அமைந்திருந்தது.

அடுத்த கிளைதாவி நடைச்சித்திரத்துக்கு மீண்டு வருகிறேன். அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தவன், அதைப் பற்றியெழுதி முடிப்பதே பொருத்தமாக இருக்கும். மணிக்கொடி இதழ் தொகுப்பில் வ.ரா. சொல்லுக்கு மதிப்பு என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதை நடைச்சித்திரம் என்று சொல்ல முடியாது. கட்டுரை என்று சொல்லலாம். அதில் வருகிற ஒரு பத்தி என்னைக் கவர்ந்தது. அந்தக் காலத்திலேயே (1933/1934-இல்) பாரா என்ற சொல்லையே தமிழில் பத்தியைக் குறிப்பிட வ.ரா. பயன்படுத்துகிறார் என்பதும் என் கவனத்தில் தைத்தது. சொல்லுக்கு ஒப்பனை செய்து மிகையுணர்ச்சியில் எழுதுகிற ரொமான்டிசிஸ நடையை "ஆஹா தமிழென்று அள்ளிப் பருகுகிற" அன்பர்களை இணையத்தில் நான் பார்த்திருக்கிறேன். எனக்கென்னவோ அத்தகைய நடைகள் "most pretentious" ஆகத் தோன்றுகின்றன. இந்த இடத்தில் நான் அடுக்குமொழி அலங்கார வசனங்களைச் சொல்லவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். நவீன தமிழென்று வருகிற சொற்குப்பைச் சமுத்திரங்களின் நாடகத்தன்மையையே சொல்கிறேன். இந்த நேரத்தில் லா.ச.ரா.வின் எழுத்தை அலங்காரமென்று சுபமங்களா நேர்காணலில் சொன்ன சா.கந்தசாமியும் நினைவுக்கு வருகிறார். இப்படிப்பட்ட மனப்பாங்குடன் இருக்கிற எனக்கு, வ.ரா. கட்டுரையின் பின்வரும் பத்தி பிடித்திருந்தது:

"சிலர் வர்ணனை ஆசையால் சொற்களைத் தூவிச் சிதற அடிக்கிறார்கள். நாலா பக்கங்களிலும் அடிபட்டு விழும் சொற்கள் வீரிட்டு அலறி அழுகின்றன. அவைகளுடைய அழுகைக் குரல் காதில் கேட்கிறதே யல்லாமல், அவைகள் வர்ணிக்க வந்த அழகு கண்ணில் புலப்படுவதில்லை. இந்தச் சொற்கள் தவிக்கும் தவிப்பைக் கண்கொண்டு பார்க்க முடியாது". - வ.ரா.

வ.ரா. நன்றாகத்தான் சொல்லியிருக்கிறார்.

No comments: