Saturday, July 22, 2006

பெயர் அரசியல் - லக்ஷ்மி சுப்ரமணியன்

சென்னை: பெயரியல் மூலம் பெயரை மாற்றிக் கொண்டால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே என்றும் இருக்கத்தான் செய்கிறது. இந்த நம்பிக்கை அடிப்படையில் பெயரியல் கோவில் ஒன்று சென்னையில் நிறுவப்பட்டிருக்கிறது. டிவியில் தோன்றி பெயரியலின் 'மகிமை'யை கூறும் சி.வி. ராஜராஜனுக்குச் சொந்தமான இக்கோவிலைத் திறந்து வைத்தவர்கள் யார் என்பது எல்லோருக்கும் ஆச்சரியம் தரும். தலித் விடுதலை, பகுத்தறிவு, தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று இயக்கம் நடத்தும் விடுதலைச் சிறுத்தை அமைப்பாளர் தொல். திருமாவளவன், கவிஞர் மு. மேத்தா, பேராசிரியர் பெரியார்தாசன் ஆகியோர்தான் இந்தக் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள். சென்னை விருகம்பாக்கம் பக்கிரித் தோட்டத்தில் அமைந்திருக்கும் அந்தக் கோவிலின் குடமுழுக்கு, திருமுறை திருப்புகழ் முழங்க பக்தி சிரத்தையுடன் நடத்தப்பட்டது. கோவிலைத் திறந்து வைத்தவர் திருமாவளவன். ராஜராஜன் பெயரில் அறக்கட்டளையைத் திறந்து வைத்தவர் அவரது கட்சி எம்.எல்.ஏ. செல்வம். ராஜராஜன் பெயரில் மகிழமும் நிறுவப்பட்டது. இதைக் கவிஞர் மு. மேத்தா திறந்து வைத்தார். ஏற்கனவே தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்ப் பெயர் என்று முழங்கிக் கொண்டிருக்கும் திருமாவளவன் இந்தக் கோவிலில் பெயரியல் மூலம் பெயரை மாற்றி அமைத்துக் கொள்ள வருபவர்களுக்குத் தமிழ்ப் பெயர்களைத்தான் வைக்க வேண்டும் என்று ராஜராஜனிடம் சொன்னாரா என்று தெரியவில்லை. ஏனென்றால் ராஜராஜன் அமைத்திருப்பது பெயரியல் கோவிலைத்தான். தமிழ்ப் பெயரியல் கோவிலை அல்ல. அதோடு பெயரை மாற்ற வேண்டும் என்றால் முதலில் ராஜராஜன் பெயரைத்தான் மாற்ற வேண்டும்.

நன்றி: இந்தியா டுடே (தமிழ்), ஜூலை 26, 2006 தேதியிட்ட இதழ்.

No comments: