Friday, December 03, 2004

செல்வராஜின் கவிதைக்கான பின்னூட்டம்

செல்வராஜ் வலைப்பதிவில் எழுதிய கதைகள் மட்டும் மிஞ்சும் என்ற கவிதையை மரத்தடி இணையக்குழுவிலும் பகிர்ந்து கொண்டார். அதற்கு மரத்தடியில் நான் எழுதிய பின்னூட்டம் கீழே:

செல்வராஜ், ராசா ஆகியோர் எழுதுகிறவற்றில் இருக்கிற கொங்கு வட்டார வழக்கு, வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை நான் உற்சாகமாகப் படிப்பதுண்டு. ராசா ஒருமுறை எழுதினார். "பெண்கள் கோயிலுக்குப் போய் வரிசையில் நின்று சாமி கும்பிட்டுவிட்டு வந்தபின், மீண்டும் ஒருமுறை சாமி கும்பிட்டுட்டு வரேன்" என்று போவதைப் பற்றி. மிகவும் கூரிய அவதானிப்பு அது. அத்தருணங்களைக் கொங்கு வட்டாரப் பெண்களிடம் நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

கொங்கு வட்டார வாழ்க்கை முறை என்பது பெரும்பாலும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் வாழ்க்கை முறையாக இருப்பது புரிந்து கொள்ளத் தக்கது. அப்பகுதிகளில் அவர்கள் கணிசமாக இருப்பதாலும், அவர்களின் மொழி, வாழ்க்கை முறை ஆகியவற்றில் கணிசமானவற்றை அந்தப் பகுதிகளில் வாழ்கிற பிறரும் பின்பற்றக் காண்கிறோம். கி.ராஜநாராயணன் கூட கரிசல் காட்டு இலக்கியம் என்று நாயக்கர்களின் வாழ்க்கை முறை பற்றியே அதிகம் எழுதினார். பூமணி போன்றவர்கள் வந்தபின்னே இது மற்ற பிரிவினரைப் பற்றியும் எழுதுகிற இலக்கியமாக மாறியது. ஜாதீயம் என்ற அடிப்படையில் இல்லாமல், மனிதநேய அடிப்படையில் ஜாதி அடிப்படையிலான குழுக்களின் வாழ்க்கை முறையைப் படம்பிடித்துக் காட்டுவதே நாட்டார் இலக்கியம் அல்லது வட்டார இலக்கியம் எனப்படுகிறது. அந்த வகையில் ராசா, செல்வராஜ் ஆகியோர் எழுதுவது கொங்கு கவுண்டர்கள் வாழ்க்கைமுறை சார்ந்த படைப்புகள் என்றாலும், அவை ஜாதீயத்தைத் தாண்டிய விஷயங்களைச் சொல்வதால் உவப்பாகவும், வரவேற்கத்தக்கதாகவும் இதுவரை இருந்து வந்துள்ளன.

வாழ்க்கையின் அதிர்ஷ்டத்தால் கொங்கு வட்டார வாழ்க்கை முறையோடு எனக்கு வாழ்க்கைத் தொடர்பு ஏற்பட்டுப் போனது ஒரு காரணமென்றாலும், கோவையில் ஆறு ஆண்டுகள் கழித்ததால் விளைந்த அபிமானமும் இன்னொரு காரணம். கொங்கு கவுண்டர்கள் வாழ்க்கையில் "ஆத்தா"வுக்கு பேரப்பிள்ளைகளிடம் இருக்கிற இடமும், மரியாதையும், அன்பும் வார்த்தைகளில் சொல்ல அடங்காதது. அவற்றை அனுபவித்து உணர்பவர்களை அருகிலிருந்து பார்க்கிற வாய்ப்பு எனக்கு இருக்கிறது. அத்தகைய உணர்வொன்றை செல்வராஜின் இந்தக் கவிதை படம் பிடித்துக் காட்டுகிறது.

ஆர்.ஷண்முக சுந்தரத்துக்குப் பின் கொங்கு வட்டார வாழ்க்கையைப் படைப்பாக்கியவர்களின் விவரங்கள் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை. சி.ஆர். ரவீந்திரனின் ஈரம் கசிந்த நிலம் மட்டும் நினைவுக்கு வருகிறது. நல்ல நாவல் அது. கரிசல் இலக்கியத்துக்கு ஈடாக இல்லையென்றாலும், கொங்கு தொடர்பான இலக்கியங்கள் உண்டென்றே நான் நம்புகிறேன்.

இப்படிப்பட்ட சூழலில், இத்தகைய வட்டார வாழ்க்கை முறை, மொழி, வழக்குகள் ஆகியவற்றைக் கொண்ட படைப்புகள் மாற்று மருந்தாகவும், புதிய காற்றாகவும் இருக்கின்றன. ராசா, செல்வராஜ் போன்றவர்கள் இத்தகையவற்றைத் தொடர்ந்து எழுத வேண்டும்.

3 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி பிகேஎஸ். உணர்ச்சிகளுக்கு வெகு அருகாமையில் அமைந்திருக்கிற காரணத்தால் வட்டார இலக்கியமாய் எழுதப் பிடித்திருக்கிறது. நேர்மறையான கருத்துக்களாய் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கவனமாய் இருக்க முயல்கிறேன். உங்கள் பின்னூட்டங்களும் வரவேற்புக்களும் அந்த நோக்கம் ஓரளவு வெற்றி பெறுகிறது என்பதைக் காட்டுகிறது. நன்றி.

Kasi Arumugam said...

பீகேயெஸ்,

தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்புகள் இருந்தாலும் இதை எழுதாமல் இருக்கமுடியவில்லை. சென்னைப்பக்கம் (சொல்லப்போனால் கோவை-சேலம் மேற்குப்பகுதி தவிர்த்த தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில்) உணவகங்களில் ஒரு வழக்கத்தை அனுமானிக்கலாம். தோசை என்று ஒரு பண்டம் எல்லாரும் அறிவோம். அதிலேயே விசேஷமாக சற்று முறுவலாக, லேசாக, எண்ணெய்விட்டு செய்தால் அதற்கும் முதலில் சொன்னதுக்கும் வித்தியாசம் வேண்டும் என்பதற்காக இதை 'ஸ்பெஷல் தோசை' என்பார்கள் (என்றார்கள்?). முன்னதை 'சாதா தோசை' என்பார்கள். இதில் காலப்போக்கில் வேகத்தோடு ஈடுகொடுக்க முதல் சொன்னது 'சாதா'வாகிப்போனது அதவது உரிச்சொல் பெயர்ச்சொல்லாகிப் போனது. இரண்டாவது 'ஸ்பெஷல்' ஆனது. இதில் இன்னமும் சில நாள் கழித்து 'ஸ்பெஷல் தோசை' 'ஸ்பெஷல் சாதா' ஆனது. இன்னும் பல இடங்களில் 'ஸ்பெஷல் சாதா' என்றால்தான் தெரியும். கோவைப்பக்கம் இதுக்குப்பேர் 'ரோஸ்ட்', அது வேற கதை.

இருங்க, இப்ப தோசைக்கு என்ன அவசியம் வந்தது.

'கொங்கு' வேளாளர் என்பதில் உள்ள கொங்கு என்பது அப்படியான உரிச்சொல். கொங்குப்பகுதியில் பேசப்படுவது கொங்குத்தமிழ். கொங்குப்பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர்கள், 'வெள்ளாமை'யை பிரதானத்தொழிலாகக் கொண்டவர்கள் 'கொங்கு' + 'வேளாளர்கள்'. அதேபோல பூர்வீகமாக அங்கே வசிக்கும் மற்ற சாதியினரும் அச்சு அசலாக கொங்குத் தமிழ் பேசுபவர்கள்தான். நீங்கள் சொல்வது தலைகீழாக இருக்கிறது. //கொங்கு வட்டார வாழ்க்கை முறை என்பது பெரும்பாலும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் வாழ்க்கை முறையாக இருப்பது புரிந்து கொள்ளத் தக்கது. // என்பது முழுதும் சரியானதல்ல. அப்படியானால் காலகாலமாக வேளாளரரைத்தவிர்த்து வேறுகுடிகளே அங்கே வாழ்ந்திருக்கவில்லையா? அல்லது அவர்களெல்லாருமே வேறு மொழி பேசினரா?

நான் பிறந்த ஊரிலேயே ஒரு விசித்திரம் தாழ்த்தப்பட்ட குடிகளைத்தவிர்த்து, மூன்று முக்கியக் குடிகள் உண்டு, வேளாளர், நெசவுசெய்யும் முதலியார், முஸ்லிம்கள்(ஆம்!). முஸ்லிம்கள் கூட நீங்கள் 'கவுண்டர் பாஷை' என்று சொல்லும் பாஷை தான் பேசினர். முதலியார்களும் கவுண்டர்களும் பேசினால் எந்த வேறுபாடும் காணமுடியாது. இதேபோலத்தான் மற்ற சிறுகுடிகளும். எனவே ஒரேயடியாக கொங்கு பாஷையை, கொங்கு வாழ்க்கைமுறையை 'கொங்கு'வேளாளர் என்று அறியப்படும் ஒரு சாதியினருக்கு மட்டும் உரிமையாக்கி தேவையில்லாமல் அமைதியாக ஒற்றுமையாக வசிக்கும் சமுதாயத்தினரைப் பிரிக்கவேண்டாம். என் நண்பர்களே பலர் கொங்கு வேளாளர்தான், அவர்களின் பெரும்போக்கிலும், நட்புணர்விலும் தனித்தன்மையானவர்கள். ஆனாலும் இதை நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.

அன்புடன்,
-காசி

PKS said...

Kasi, I just saw your comments now after replying to your personal mail. I dont know why blogger has not mailed it to me. Or may be it put it under bulk folder and I did not notice. I think you have missed my point. I have replied to your personal mail. If possible, when time permits, I will reply to your public comments in public. Thanks and regards, PK Sivakumar