Monday, January 10, 2005

புத்தகங்களும் நானும்

இதற்கு முன் புத்தகங்கள் பற்றி எழுதிய பதிவு: பார்ன்ஸ் & நோபள் பரவசம்

என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. அதைக் கெட்டப் பழக்கம் என்கிறார்கள் என் குடும்பத்தினர். அது, புத்தகக் கடையினுள் நுழைந்தால் கண்ணில் படுவதையெல்லாம் வாங்கி விடுவது. புத்தகக் கடையில் மட்டுமில்லாமல் பிற கடைகளிலும் அப்படித்தான் என்ற பெயரும் உண்டு. ஆனால், பிற கடைகளில் ஒரு பொருளைப் பார்த்துப் பிடித்திருந்தாலும், சூழல் கருதி வேண்டாமென்று வந்திருக்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. புத்தகக் கடையில் பார்த்துப் பிடித்துவிட்டு புத்தகத்தை வாங்காமல் வந்த சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. ஒரு குழந்தை எப்படி பார்க்கிற பொம்மையனைத்தையும், ஆசைப்படுகிற மிட்டாய் அனைத்தையும் அப்போதே வாங்கிவிட வேண்டும் என்று ஆசைப்படுமோ, அப்படிப், பார்க்கிற புத்தகங்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குழந்தைத்தனமான பேராவல் எனக்கு. பொம்மையை வாங்கியதும் சிறிது நேரம் ஆர்வத்துடன் விளையாடியபின், அந்தப் பொம்மையைப் பலநாள்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிற குழந்தையின் போக்கைப் புத்தகங்கள் பாலும் நான் காட்டுவதுண்டு. என் அலமாரியில் இன்னும் நான் படிக்க ஆரம்பிக்காத பல புத்தகங்கள் உண்டு. ஆனாலும், அவையெல்லாம் அருகில் இருப்பது நிறைவையும் திருப்தியையும் தருகிற மாதிரியான உணர்வு. படிக்காத புத்தகம்கூட அருகில் இருந்தால் வருகிற பரவசமும் வேட்கையும் அலாதியானது.

கல்லூரியில் படிக்கிற காலங்களில், வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், ஒரு பிரிட்ஜ் வாங்கி அதனுள் பியர் மாட்டில்களாக வாங்கி அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு "சில்"லிட்ட பியராவது குடித்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று நண்பர்களுக்குள் பேசிக் கொள்வோம். வேலைக்குப் போய், பிரிட்ஜ் வாங்கிய, இரண்டாவது வாரத்தில் அந்த ஆசை நீர்த்தும் அலுத்தும் போனது. ஆனால், புத்தகங்கள் மீதான தேடலும், கனவுகளும் இன்னமும் தொடர்கின்றன. இறையருள் கிடைக்குமேயானால், எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு புத்தகங்கள் வாங்கிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற உந்துதல் இன்னமும் இருக்கிறது.

இப்படி நிறையப் புத்தகங்கள் இருப்பதாலேயே, ஒரே நேரத்தில் பல புத்தகங்கள் வாசிப்பது, தேவையான பகுதிகளை மட்டும் வாசிப்பது, வேகவேகமாக அள்ளித் தெளித்த கோலம் மாதிரி வாசிப்பது, எப்போது வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளலாமே என்று வாளாவிருப்பது என்று பல பழக்கங்கள் என்னிடம் ஒட்டிக் கொண்டன போலும்.

Barnes & Nobles கடைக்குள் நுழைவதற்கு முன்னரே, பார்ப்பதையெல்லாம் வாங்கக் கூடாது என்ற அன்புக் கட்டளை வரும். பிடித்திருந்தால் அங்கேயே உட்கார்ந்து படிங்க, வேலை தொடர்பாக என்றால் கூட பரவாயில்லை என்ற ஆலோசனையும் வரும். பூம் பூம் மாடு மாதிரி எல்லாவற்றுக்கும் தலையாட்டிவிட்டு உள்ளே நுழைவேன். சில மணி நேரங்கள் அங்கே உட்கார்ந்து படித்தபின், வெளியே வரும்போது என்னிடம் எப்படியும் சில புத்தகங்கள் இருக்கும். "இதைப் படித்துப் பார்த்தேன். மிக அருமையாக இருக்கிறது. அடுத்த வாரமோ அதற்கடுத்த வாரமோ இங்கு வந்து படிக்கிற அளவுக்குப் பொறுமையில்லை" என்ற ரீதியில் ஏதோ காரணம் சொல்லி, தாஜா செய்து, புத்தகங்களை வாங்கி விடுவேன். புத்தகங்களால் சண்டையும் வருவதுண்டு. தமிழ்ப் புத்தகங்கள் வாங்குவது கொஞ்சம் சுலபம். புத்தகங்கள் தபாலில் வந்து சேரும்போதே என்னென்ன புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன் என்று வீட்டாருக்குத் தெரியும். கொஞ்ச நேரம் பேச்சு, கோபம் எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் சொல்வதில் நிறைய நியாயம் இருக்கிறது. எப்போதும் கண்மண் தெரியாமல் புத்தகங்கள் வாங்குவதில் காலை விடுகிற ஆள் நான். இப்போதெல்லாம் குழந்தைப் புத்தகங்களின் பட்டியல், அவருக்குத் தேவையான புத்தகங்களின் பட்டியல் என்று அவரும் ஆரம்பித்து விட்டார். ஆனாலும், ஒரு மயக்கம் போல, தீராத போதை போல, புத்தகங்களின் மீதான பிடிப்பு தீர்வதில்லை. புத்தகங்களைப் பற்றி எவ்வளவு எழுதினாலும், கூறியது கூறினாலும், அலுப்பு வருவதில்லை.

கிறிஸ்துமஸ¤க்கு இரு நாட்கள் முன்பு, Gift Cards வாங்குகிறேன் என்ற சாக்கில், Barnes & Noble போனபோது கூட, Barnes & Noble Classics வரிசையிலிருந்து மூன்று புத்தகங்கள் எடுத்துக் கொண்டு வத்தேன். The death of Ivan Ilych and other stories by Leo Tolstoy, The brothers of Karamazov by Fyodor Dostoevsky (இதன் தமிழாக்கத்தின் சில பகுதிகள் குமுதம் தீராநதியில் முன்னர் வெளிவந்தன.), Great American Short Stories (From Hawthorne to Hemingway). "இவ்வளவு நாட்கள் புதுப் புத்தகங்கள் நூலகத்துக்கு வந்தாலும், உடனடியாகப் படிக்கக் கிடைப்பது அரிது (reserve செய்து வரிசையில் காத்திருந்து பெற வேண்டும்) என்று புதுப் புத்தகங்கள் வாங்குவீர்கள். இப்படிப்பட்ட பழைய எழுத்தாளர்களின் புத்தகங்கள் எல்லாம்தான் நூலகத்தில் இருக்கின்றனவே. எதற்கு வாங்கினீர்கள்?" என்ற பேச்சு கிடைத்தது. செவ்வியல்களை (Classics) வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த எழுத்தாளர்களுக்கு நாம் தருகிற மரியாதை அது என்று பதில் சொன்னேன். அந்தக் காரணத்துக்காகவுமே அவற்றை வாங்கினேன். கடைசியாக - என்னைத் திருத்த முடியாது என்று விட்டுவிடுவார்கள். அதுவும் உண்மைதான். இந்த claasics-உடன் Dan Brown-ன் Angels & Demon-ஐயும் வாங்கியதை வீட்டில் கவனிக்கவில்லை. நானும் இங்கே சொல்ல மறந்துவிட்டேன், பாருங்கள்.

இதுமட்டுமில்லாமல், நண்பர்கள் வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அங்கிருந்து புத்தகங்களை எடுத்து வருகிற வியாதி வேறு எனக்கு இருக்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு நண்பர் வீட்டுக்குப் போன போது அங்கிருந்து, ஷோபா சக்தியும் சுகனும் பதிப்பித்த சனதருமபோதினி, இரா. முருகனின் தேர் உள்ளிட்ட மூன்று நான்கு புத்தகங்களை எடுத்து வந்து வைத்திருக்கிறேன். என் மீதுள்ள அன்பினால், நண்பர்கள் எந்தப் புத்தகத்தை நான் எடுத்தாலும் ஒன்றும் சொல்வதில்லை.

சென்னையில் புத்தகக் கண்காட்சி நடக்கிற ஜனவரியில் அதில் கலந்து கொள்கிற மாதிரி இந்தியா செல்ல வேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை. ஆனால், இன்னமும் அது கைகூடி வரவில்லை. வலைப்பதிவுகளில் புத்தகக் கண்காட்சி பற்றி நண்பர்கள் எழுதும்போதெல்லாம் ஏக்கமாகவும், தவறவிடுகிறோமே என்ற வருத்தமாகவும் இருக்கும். ஆனாலும், புத்தகக் கண்காட்சி குறித்து நண்பர்கள் எழுதுகிறவற்றிலிருந்து ஒரு நேரடி வர்ணனையாவது கிடைக்கிறதே என்று அவற்றை ஆர்வத்துடன் படித்து விடுவேன். எழுதப்படுபவற்றில் விளம்பரம், தனிப்பட்ட அபிமானம் ஆகியன இருந்தாலும், அவை எனக்குப் பொருட்டல்ல. அவற்றை வடிகட்டி எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு எடுத்துக் கொள்வேன். எல்லா எழுத்துகளையும் நான் அப்படியே அணுகுகிறேன். படித்துமுடித்தபின் கொள்ள வேண்டியவற்றைக் கொண்டு, தள்ள வேண்டியவற்றைத் தள்ளி விடுவது. ஒரு தேர்ந்த வாசகர் தன் கொள்ளலையும் தள்ளலையும் தன் அறிவு, ரசனை, கருத்தாக்கங்கள், அபிமானம், தேவை, நட்பு, பகை ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்த்தினாலும், கருத்தாக்கம், தனிப்பட்ட வெறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே எதையும் நிராகரிக்கக் கூடாதென்பதில் ஜாக்கிரதையாக இருப்பார்.

ஒரு புத்தகக் கடையினுள் நுழைந்து வெளிவரும்போதே எனக்குக் கள் குடித்த மாதிரி இருக்கும். புத்தகக் கண்காட்சி என்கிற சந்தையில் நுழைந்து பார்த்துவிட்டு வெளிவந்தால் எப்படி இருக்கும் என்ற கனவுகள் என்னுள் ஓடுவதுண்டு. ஏறக்குறைய ஐந்து வருடங்கள் சென்னையில் குப்பை கொட்டியிருந்தபோதும், அப்போதெல்லாம் புத்தகக் கண்காட்சி என்று ஒன்று நடைபெற்ற விவரமே அறியாதவனாய் இருந்திருக்கிறேன். அது குறித்த வருத்தம் இன்னமும் எஞ்சி நிற்கிறது.

இன்றைக்கு மதியம் மூன்று மணி சுமாருக்கு தபால் வந்திருக்கிறதா என்று பார்க்க கதவைத் திறந்தால் - வாசற்படியில் ஒரு பெரிய புத்தகக் கட்டு. திலீப்குமாரிடம் கடைசியாக அனுப்பச் சொன்ன புத்தகங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிட்டனவா என்ற கேள்வியுடன் பார்சலைக் கையில் எடுத்தேன். அவரிடமிருந்து இல்லை. கூரியரில் வேறு வந்திருந்தது.

நண்பர் சீனி. விசுவநாதன் பாரதியைப் பற்றி 25 புத்தகங்களுக்கு மேல் பதிப்பித்திருக்கிறார். பாரதிப் பணிகளில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட சீனி.விசுவநாதன் மீது எனக்குப் பெரும் மரியாதையும் அன்பும் உண்டு. அவரிடம் கடைசியாகத் தொலைபேசியபோது, அவர் பதிப்பித்த (நான் படிக்காத) புத்தகங்கள் அனைத்தும் எங்குக் கிடைக்கும், வாங்குவதற்கு எனக்கு விருப்பம் என்று கேட்டேன். பாரதி பற்றி அவர் வெளியிட்டிருக்கிற புத்தகங்களைச் சேமித்து வைக்க வேண்டும் என்பது என் ஆசை. அவரின் கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி பதிப்புகளின் நான்கு தொகுதிகள், மகாகவி பாரதி வரலாறு ஆகிய புத்தகங்கள் தவிர வேறு என்னிடம் இல்லை. பல புத்தகங்கள் பதிப்பில் தற்சமயம் இல்லை என்றவர், அவரிடம் இருக்கிற புத்தகங்களை அனுப்பித் தருவதாக அன்புடன் சொன்னார். அதிகபட்சமாகப் பிரதிகள் இல்லையென்றால் அனுப்புவது பற்றிக் கவலைப்பட வேண்டாமென்றும், சிரமம் இல்லையென்றால் மட்டுமே இந்தப் பேருதவியைச் செய்யுமாறும் அப்போது அவரிடம் சொல்லியிருந்தேன். இது நடந்து சில மாதங்கள் இருக்கும்.

இன்றைக்கு அவர் புத்தகங்கள் வந்திருக்கின்றன.

பாரதியும் சங்கீதமும் - சீனி. விசுவநாதன்,
பாரதி ஆய்வுகள் - சில சிக்கல்கள் - சீனி. விசுவநாதன்,
மகாகவி ஸர் ரவீந்திரநாத் தாகூர் அருளிய பஞ்ச வியாசங்கள் - பாரதியார் மொழிபெயர்த்தது,
மரணத்தை வென்ற மகாகவி - சீனி. விசுவநாதன்
பாரதியார் பாடல்களுக்குத் தடை (சட்டமன்ற விவாதங்களின் மொழிபெயர்ப்பு)
புதுயுகக் கவிஞர் - திருலோக சீதாராம்
மகாகவி பாரதி மஞ்சரி - சீனி. விசுவநாதன், டி.வி.எஸ். மணி,
பாரதி நூல்கள் பதிப்பு வரலாறு - சீனி. விசுவநாதன்
பாரதியின் வித்தியாசமான பார்வைகள் - சீனி. விசுவநாதன்
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் - டாக்டர். நல்லி குப்புசாமி செட்டியார்

- ஆகிய புத்தகங்களோடு, சமீபத்தில் தன்னுடைய எழுபதாவது ஆண்டு நிறைவாக சீனி. விசுவநாதன் எழுதி வெளியிட்ட, பாரதி தேடல்கள் - சில நினைவலைகள் என்ற புத்தகத்தையும் எனக்கு அன்புகூர்ந்து அனுப்பிக் கொடுத்திருக்கிறார்.

புத்தகங்களை வாங்கியவுடன் அவற்றில் என் பெயரையும் அன்றைய தேதியையும் எழுதிவிடுவது என் வழக்கம். இது பொஸஸிவ்னஸ்தான். ஆனாலும், நண்பர்கள் எடுத்துச் சென்றாலும், யார் புத்தகம் என்ற குழப்பம் வராமல் இருக்க உதவுகிறது. அப்படி இவற்றிலும் பெயர் எழுதி தேதி போட்டுவிட்டேன். இந்தப் புத்தகங்களை உடனடியாகப் படித்து முடித்துவிடப் போவதில்லை. ஆனாலும், இவை கொணர்ந்திருக்கிற அன்பும் சந்தோஷமும் அளவிட முடியாதவை.

இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சியைப் பார்க்காத ஏக்கம் இதனால் தீர்ந்தது. இப்புத்தகங்கள் கண்காட்சியில் கிடைக்குமா என்று தெரியாத நிலையில், இப்புத்தகங்களை இங்கிருந்தே பெற முடிந்தது இறையருளே. என்னுடைய ஏக்கத்தைப் போக்கி சொல்லவொணா நிறைவை மனதுக்கு அளித்த சீனி. விசுவநாதனுக்கு நன்றி சொல்வது அலங்காரமாகவோ சடங்காகவோ இருக்கும். அவர் இன்னுமொரு நூற்றாண்டு இருந்து, இன்னும் பல பாரதி ஆய்வுகளையும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

நியூ ஜெர்ஸியில் இருக்கிற தமிழ் நண்பர்கள் என் புத்தகங்களை படிக்க எடுத்துக் கொள்ளலாம். கவனமாகத் திருப்பித் தந்துவிடுகிற உறுதிமொழியுடன் என்று பலமுறை எழுதியிருக்கிறேன். சொல்லியிருக்கிறேன். ஆனாலும், இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்வதில் நியூ ஜெர்ஸியில் இருக்கிற இணைய நண்பர்களிடையேகூட பெரிய ஆர்வம் ஒன்றும் இல்லை. அருண் வைத்யநாதன் எப்போதாவது வந்து புத்தகங்கள் எடுப்பார். மற்றபடிக்கு, என் மனைவியின் நண்பர்களும், என் பிற நண்பர்களும்தான் இவ்வசதியைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். யாருக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, எதிர்காலத்தில் தமிழ் இலக்கியம் குறித்த ஆர்வமும் ஈடுபாடும் என் குழந்தைகளுக்கு வருமேயானால், அவர்களுக்குப் பயன்படுமே என்ற திருப்தியில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். பற்றிப் பிடித்துக் கொள்ளவும், செய்வதைத் தொடரவும் ஒரு காரணம் தேவைப்படுகிறதல்லவா?

2 comments:

சன்னாசி said...

Brothers Karamazov ஐ ஒரே மூச்சில் படிக்க முயலுங்கள். சிரமம்தான். இருந்தாலும்...
Aloysha கதாபாத்திரத்தில் ஒரு ஹோமோசெக்ஸுவல் தன்மை உண்டென்று படித்தபோது நான் கருதியதுண்டு...

chinathambi said...

நல்ல இடுகை..
Download Bharathiar songs Mp3
http://chinathambi.blogspot.com