Sunday, May 15, 2011

ஃபேஸ்புக் குறிப்புகள் - தமிழக தேர்தல் 2011


மே 14, 2011 (சனி):

இந்த அளவுக்குத் தோற்போம் என்று கலைஞரோ, இந்த அளவுக்கு ஜெயிப்போம் என்று ஜெவோ எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என்பது இருக்கட்டும். இந்த அளவுக்கு ஜெயிக்கும் என அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த அந்த கணம் வாக்களித்தவர்கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

மே 15, 2011 (ஞாயிறு):


இது ஜெயலலிதாவின் அல்லது அதிமுக கூட்டணியின் வெற்றி அல்ல. இது கலைஞரின் (திமுக செயற்பாடுகளின்) தோல்வி. கூட்டணி குளறுபடிகளுடன், ஒன்றுமே செய்யாமல், கொடநாட்டில் ஓய்வெடுத்தபடியே ஆட்சியைப் பிடிக்க ஜெயலலிதாவுக்குக் கலைஞர் குடும்ப அரசியல் பெரிதும் உதவியுள்ளது. ஜெயலலிதாவுக்கு அதிர்ஷ்டம்தான். எம்ஜிஆர்கூட ஜெவை அரசியலுக்குத்தான் கொண்டுவந்தார். கலைஞர் மீண்டும் ஜெவை முதல்வராகவே ஆக்கியுள்ளார்.

வாழ்க்கை மும்முரங்களுக்கிடையே இம்முறை தமிழக தேர்தலைக் கூர்ந்து கவனிக்க முடியவில்லை. ஆனாலும் முடிவுகள் தெரிந்தபின்னர், எல்லாரையும்போல, நாமும் கருத்துகளை உதிர்க்க வேண்டும் என்ற உந்துதல் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மற்றபடி, இந்திய/தமிழக அரசியல் குறித்து, ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன என்ற விட்டேற்றி/விரக்தி மனபாவம் வந்துவிட்டதென்றே நினைக்கிறேன். ஏனெனில் இந்த அரசியலில் ராமர்கள் யாருமில்லை.

ஈழம் குறித்த நிலைப்பாட்டுக்காக திமுகவை மக்கள் தோற்கடித்துள்ளார்கள் என்கிறார் பழ.நெடுமாறன். சிரிப்பு வருகிறது. ஈழ அரசியல் எரிந்து கொண்டிருந்த காலத்திலேயே திமுகவை பாராளுமன்ற தேர்தலில் இதேமக்கள் ஆதரித்துள்ளார்கள். இத்தேர்தலில் ஈழ அரசியலுக்காகக் குரல் கொடுத்த விடுதலை சிறுத்தைகள், பா.ம.க.வும் படுமோசமாக தோற்றுள்ளனவே. மேலாக, ஜெ என்றைக்கு ஈழ அரசியல் சார்ந்த விடுதலைப் புலிகளை ஆதரித்துள்ளார்?

என் அவதானிப்பில், திமுக கூட்டணியின் தோல்விக்கு இவை இவ்வரிசைப்படி காரணங்களாக இருக்கலாம். 1. மின்வெட்டு, 2. விலைவாசி உயர்வு 3. திரை, ஊடகம் என வணிக முனைவுகளிலும் குடும்ப ஆதிக்கம் பிறரைச் செயல்படாமல் தடுக்குமளவு ஏகாதிபத்தியமாக மாற முயன்றது, 4. குடும்ப அரசியல் கட்சியில் கொண்டுவந்த குழப்பங்கள், 5. கூட்டணி கட்சிகளிடம் பெரிய அண்ணன் பாணியில் நடந்துகொண்டது, 6. ஊழல், 7. 2ஜி. (பின்குறிப்பு: 2ஜி தமிழக கிராமப்புறங்களில் ஈழப்பிரச்னை போலவே எத்தாக்கத்தையும் உண்டுபண்னவில்லை என இப்பிப்ரவரியில் நேரில் கண்டேன்.)