Thursday, January 16, 2014

வெண்முரசு தொடரில் எனக்குப் பிடித்த உவமைகளும் வர்ணனைகளும்

ஜெயமோகனின் வெண்முரசு தொடரில் எனக்குப் பிடித்த உவமைகளும் வர்ணனைகளும்:

வே. சபாநாயகம் எழுத்தாளர்களின் படைப்புகளில் இருந்து தனக்குப் பிடித்த உவமைகள், வர்ணனைகளைத் தொகுத்துப் பகிர்ந்து கொள்வார். தினம் ஒரு அத்தியாயம், பத்துவருடம் தொடரும் என்று ஜெயமோகன் வெண்முரசு எழுதத் தொடங்கியபோது, படித்தவற்றில் பிடிக்கும் உவமைகளையும், வர்ணனைகளையும் சேர்த்து வைக்கத் தொடங்கினேன். இன்றுவரை அதைத் தொடர முடிந்திருக்கிறது. அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். என் வாசிப்பின்பத்துக்காகவும் இன்னும் புரிந்து கொள்ளவும் அத்தியாயங்களைத் திரும்பப் படிக்கும்போது பிடிக்கிற புதிய வரிகளையும் எடுத்துச் சேமிப்பது என்று இந்தப் பட்டியல் நாளும் மாறிக் கொண்டேதான் இருக்கிறது.

ஃபேஸ்புக்கிலும் இணையக் குழுமமொன்றிலும் நானிதைப் பகிர்ந்து கொண்டபோது, இதை என் வலைப்பதிவில் இட்டால் அவரைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கேட்டுக்கொண்ட நண்பர் டைனோபாய்க்காக இதை இங்கேயும் இடுகிறேன். தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படும்போதெல்லாம் எனக்குச் செய்து கொடுப்பவர் டைனோபாய். என்னால் அவருக்குச் செய்ய முடிகிற சிறு உதவி இது. தொடர்ந்து வருகிற அத்தியாயங்களில் இருந்தும் பிடித்தவற்றைச் சேமிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்!

ஜெயமோகன் எழுதியவை என்றாலும் இவை என் ரசனையின் அடிப்படையில், எனக்குப் பிடித்தவை என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. இணையம் என்கிற சுதந்திர வெளியில் இதைப் பகிர்ந்து கொள்வதில் இருக்கிற அசௌகரியங்களை நான் அறிவேன். பிரதியெடு (காபி), பிரதியிடு (பேஸ்ட்) நுட்பத்தால் இவை பிற இடங்களுக்குப் பிறர் தேர்ந்தெடுத்ததுபோல செல்கிற வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியே போனாலும் அவை எனக்குப் பிடித்த ஜெயமோகனின் வரிகளைத் தங்களுக்கும் பிடித்ததாகப் பிறர் உணர்ந்ததைச் சொல்லும் ஒரு வழிதானே என்பதால் துணிந்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நான் ஏற்கனவே ஃபேஸ்புக்கில் எழுதியதுபோல ஜெயமோகன் மீது பலருக்கும் இருக்கும் வருத்தங்களையும், அவரிடம் அவர்கள் காணும் குறைபாடுகளையும் போக்கிவிடுகிற எழுத்து வல்லமையை அவர் வெண்முரசு தொடரில் காட்டிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு முறை இந்த அற்புத வரிகளைப் படித்து மகிழுங்கள். அதை எழுதிய கரங்களுக்கு மானசீகமாக முத்தமிடுங்கள். சரஸ்வதி தேவி அந்தக் கைகளில் சன்னதம் கொண்டு ஆடுகின்றாள்.

*******

வெண்முரசு - நூல் ஒன்று - முதற்கனல்

இருள் முதல்முடிவற்றது. ஆதியில் அதுமட்டும்தான் இருந்தது. வானகங்கள் அனைத்தும் அந்த இருளுக்குள்தான் இருந்தன. அந்த இருள் ஒரு மாபெரும் நாகப்பாம்பின் வடிவிலிருந்தது. கற்பனையும் கனவும் தியானமும் எட்டமுடியாத அளவுக்கு நீளம்கொண்ட அந்த நாகம் கண்களற்றது. ஏனென்றால் அது பார்ப்பதற்கென அதுவன்றி ஏதுமிருக்கவில்லை. அது தன் வாலை வாயால் கவ்வி விழுங்கி ஒரு பெரிய வளையமாக ஆகி அங்கே கிடந்தது. அந்த ஆதிநாகத்துக்கு பெயர் இருக்கவில்லை. ஏனென்றால் அதை அழைக்க எவரும் இருக்கவில்லை. ஆகவே அது தன்னை நாகம் என்று அழைத்துக்கொண்டது. (Chapter: 1)

பாசிமணிகளுக்குள் பட்டுச்சரடுபோல மனிதர்களுக்குள் விதியின் நோக்கம் ஊடுருவிச்செல்கிறது. (Chapter: 1)

நீ கற்கும் கல்வி உன்னை முழுமையாக்கும். உனக்கு முதுமை இல்லை. உன் தந்தை உனக்களித்த வரமாகவே அதைக்கொள். உன்னை முதியவனாக பார்க்கும் நிலை எனக்கும் இல்லை. அது என் காதலுக்கு அவர் அளித்த கொடை என்றே எண்ணுகிறேன். உன்னுடைய சின்னஞ்சிறு உடலுக்குள் விதைக்குள் பெருமரம்போல இப்பிரபஞ்சத்தின் பெருநிகழ்வொன்று குடியிருக்கிறது.’ (Chapter: 1)

*******

அன்னை அவனுக்களித்தவை எல்லாம் வெறும் சொற்களாக இருந்தன. (Chapter: 2)

பாதாளநாகம் போன்ற கரிய உடல் மீது புதுமழையில் முளைத்த பசும்புற்கள் காற்றில் சிலுசிலுக்க வளைந்து ஓங்கிக் கிடந்தது கோட்டை. (Chapter: 2)

மரச்சிற்பங்கள் மேல் பச்சோந்திக்கால்கள் போல வேர் பதித்து படர்ந்து ஏறி பச்சை இலைகளை விரித்து காற்றிலாடி நின்ற கொடிகளுக்குள் கதவை மோதும் பகையானை மத்தகங்களைத் தடுக்கும் பித்தளைக்குமிழ்கள் களிம்புப்பச்சை நிறத்தில் காய்கள்போலத் தெரிந்தன. (Chapter: 2)

மூன்றடுக்கு மாளிகைகள் இருபக்கமும் அணிவகுத்த அகன்ற தெருக்களில் குழந்தைகள் நீரில் நீந்தும் பரல்மீன்கள் போல பெரிய கண்களுடன் ஓசையே இல்லாமல் விளையாடின. (Chapter: 2)

*******

அவன் சித்தமோ எரிதழல் காற்றை உணர்வதுபோல காலத்தை ஒவ்வொரு கணமும் அறிந்துகொண்டிருந்தது. (Chapter: 3)

விதவைகள் நிறைந்த அந்தப்புரத்தின் குளிர்ந்த அமைதியில் தன்னை பூமியுடன் பிணைக்கும் வயிற்றை தொட்டுத்தொட்டு சபித்தபடி அவள் ஒவ்வொரு நாளாக வாழ்ந்தாள். (Chapter: 3)

அதன் அன்னையின் துயரமெல்லாம் தேங்கிய சிமிழ் போலிருந்தது குழந்தை. (Chapter: 3)

தன் உடல் நீங்கி வெளியே வந்துகிடந்த குழந்தையை உடைந்த கட்டியிலிருந்து வெளிவந்த சீழைப் பார்க்கும் நிம்மதியுடன் பார்த்தபின் கண்களை மூடி மெல்ல விலகிப்படுத்துக்கொண்டாள். (Chapter: 3)

பித்தெழுந்த கனவில் நிற்பவன் போல பரீட்சித் அந்த மண்ணில் நின்றான். அக்கணமே அவன் அனைத்தையும் தனக்குள் கண்டுவிட்டான். நிலையழிந்தவனாக அந்த மண்ணில் ஓடி ஓடிச் சுழன்றுவந்தான். ஒரு புற்றை அவன் உடைத்தபோது உள்ளே ஓர் யானையின் எலும்புக்கூடு அதன் மத்தகத்தைப் பிளந்த வேலுடன் இருக்கக் கண்டான். பின்பு வெறிகிளம்பி ஒவ்வொரு புற்றாக உடைத்து உடைத்து திறந்தான். ஒவ்வொன்றுக்குள்ளும் வெள்ளெலும்புக் குவியல்களைக் கண்டான். ஒரு தருணத்தில் திகைத்து நின்று பின்பு தளர்ந்து விழுந்தபோது அந்த மண் ஒரு குடல்போல செரித்துக்கொண்டிருப்பதன் ஒலியைக் கேட்டான். (Chapter: 3)

*******

“ஒவ்வொரு உயிருக்கும் அதற்கான மனமும் உடலும் படைப்புசக்தியால் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் உணர்ந்து அவையனைத்தும் தங்களுக்கு உகந்தபடி வாழ்வதற்கு வழிசெய்வதே மன்னனின் கடமை. நக்குவது நாயின் இச்சையாகவும் தர்மமாகவும் உள்ளது. அதைச்செய்தமைக்காக நீ அதன் மெல்லிய சிறுகழுத்தையும் மலர்ச்செவிகளையும் வருடி ஆசியளித்திருக்கவேண்டும். உன் மனம் அதைக்கண்டு தாயின் கனிவை அடைந்திருக்கவேண்டும். ஆனால் நீ நெறிவழுவினாய்” என்றது சரமை. (Chapter: 4)

கண்ணிழந்த நாயின் பதைப்பை அதன்பின் தன்னுள் என்றும் உணர்ந்துகொண்டே இருந்தார் ஜனமேஜயன். தெரியாதவற்றிலும் அறியாதவற்றிலும் முட்டி மோதிச் சரிவதையே தன் வாழ்க்கையாகக் கொண்டிருந்தார். புரியாதவை எல்லாம் அகத்தில் எத்தனை பெரிதாகின்றன என்று அவர் அறிந்தார். (Chapter: 4)

அதர்வ வேத சூக்தங்கள் வானிலிருந்து இழியும் அருவியின் ஓசையில், துதிக்கை தூக்கி பிளிறும் மதகரியின் குரலில், நிலத்தை அறைந்து கர்ஜிக்கும் சிம்மத்தின் ஒலியில் கேட்டுக்கொண்டிருந்தன. (Chapter: 4)

ஆஸ்திகன் நெளியும் பல்லாயிரம் சர்ப்பங்களைப்போல அந்தக் கைகளை உணர்ந்தான். தன்னிலிருந்து தன்னை விலக்கும் கைகள் ஒரு கட்டத்தில் வெளியிலிருந்து தனக்குள் எதையோ அள்ளி நிரப்புபவையாகத் தோன்றின. அந்தச்சைகைகள் ஒருவகையான ஒத்திசைவை அடைந்த ஒரு கணத்தில் நீலத்தழல்பீடம் மீது ஏறிய செந்தழல் எழுந்து பறந்து கைநீட்டி வேள்விமண்டபத்தின் கூரைவிளிம்பைப் பற்றிக்கொண்டு மேலேறியது. வேள்விமண்டபத்தின் ஈச்சையோலைக்கூரை தீப்பற்றி செந்நெருப்புத்தழலாட எரியத்தொடங்கியது. (Chapter: 4)

துண்டிக்கப்பட்ட குரங்கு வால்கள் போன்ற சிறிய பாம்புகள். இருட்டின் தும்பிக்கை நீள்வதுபோல வந்த பெரும்பாம்புகள். அவர்கள் ஒவ்வொருவர் நடுவிலிருந்த இருட்டும் பாம்புகளாகியது. அவர்களின் மடியின் மடிப்புகளுக்குள் இருந்த நிழல்கள் பாம்புகளாக மாறின. அவர்களின் அக்குளுக்குள் இருந்த துளியிருள் பாம்பாயிற்று. பின் அவர்களின் வாய்களுக்குள்ளும் நாசிகளுக்குள்ளும் இருந்த நிழல்கள்கூட பாம்புகளாக மாறி மண்ணில் நெளிந்துசெல்லக் கண்டனர். அன்னை மடியில் தாவி ஏறும் குழந்தைகள் போல, ஆற்றில் கலக்கும் சிற்றோடைகள் போல நெருப்பை அணுகி அதில் இணைந்துகொண்டன. (Chapter: 4)

மண்ணை விலக்கி முளைத்தெழும் வாழைக்கன்றுபோல தலை நீட்டி தட்சன் மேலெழுந்து வந்தான். கரும்பனையின் தடி போன்ற உடலை மெதுவாக நெளித்து வேள்விச்சாலையில் தவழ்ந்து வேள்வித்தீ நோக்கிச் சென்றான். அவனுக்குப்பின்னால் அவனைப்போன்றே தெரிந்த தட்சகியும் எழுந்து வந்தாள். வேள்விக்கூடமே மரணமுனையில் பதுங்கியிருக்கும் வனமிருகம் போல விரைத்து அமர்ந்திருக்க நடுங்கும் கரங்களுடன் அவியளித்து ரித்விக்குகள் வேதக்குரலெழுப்ப பாம்புகள் ஒன்றை ஒன்று தழுவி முறுகியபடி மெல்ல முன்னகர்ந்தன. (Chapter: 4)

“அறம் என்ற சொல்லை அறியாத எவருமில்லை. அறமென்றால் எதுவென்று முழுதறிந்தவரும் இல்லை. (Chapter: 4)

அவனுடைய அழகிய சிறுச்செந்நிற வாய் முலைக்கண் உருவி எடுக்கப்பட்ட கைக்குழந்தையின் இதழ்க்குவைபோல் இருந்தது. (Chapter: 4)

*******

ஒரு கிருஷ்ணபட்ச இரவில் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர், சமுத்திரத்தின் எல்லை தேடி குட்டியை பெறச் செல்லும் திமிங்கிலம்போல, தன்னந்தனியாக இருளில் நீந்தி அங்கே வந்தார். (Chapter: 5)

போர்முடிந்து வீரமரணமடைந்தவர்களுக்கெல்லாம் நீர்க்கடன்களும் முடிந்தபின்னர் வியாசர் குருஷேத்ரக் களத்துக்குச் சென்றார். காலைவெளிச்சத்தில் செம்மண்பூமி கருமைகொள்ளும்படி நாய்களும் நரிகளும் கழுதைப்புலிகளும் நெரிந்துபரவி கூச்சலிட்டு பூசலிடுவதைக் கண்டு திகைத்து நின்றார். வானத்தை கரியகாடொன்றின் இலையடர்வு போல சிறகுகளால் மூடியபடி கழுகுகளும் பருந்துகளும் காக்கைகளும் பறந்துச் சுழன்றன. அங்கே நடந்துகொண்டிருந்தது மானுடத்தின் மீதான மாபெரும் வெற்றியின் உண்டாட்டு என உணர்ந்து கால்கள் தளர்ந்து அமர்ந்துகொண்டார். (Chapter: 5)

மரணத்தை வென்றாலும் மூப்பை வெல்லமுடியாத உடல் தசை வற்றி காட்டுத்தீயில் எரிந்து எஞ்சிய சுள்ளி போலிருந்தது. ஒருகாலத்தில் தாடியாகவும் தலைமயிராகவும் விழுதுவிட்டிருந்த கனத்த சடைக்கற்றைகள் முழுமையாகவே உதிர்ந்துபோய், தேமல்கள் பரவிச் சுருங்கிய தோல்மூடிய மண்டைஓடு தெரிந்தது. ஒன்றுடன் ஒன்று ஏறிப்பின்னிய விரல்களில் நகங்கள் உள்நோக்கிச் சுருண்டிருக்க, கைகளிலும் கழுத்திலும் நரம்புகள் தளர்ந்த கொடிகள்போல் ஓடின. உள்ளடங்கிய வாயும் தொங்கிய நாசியும், சிப்பிகள்போன்று மூடிய கண்களுமாக அங்கே இருந்த அவருக்குள் அவர் வெகுதொலைவில் இருந்துகொண்டிருந்தார். (Chapter: 5)

இந்த நகரம் தோல்கிழிந்த பெருமுரசு போல எனக்குத் தோன்றியது. (Chapter: 5)

“கதையின் தொடக்கம் ஆசிரியனின் அகங்காரத்தில் அல்லவா? என்னிடமிருந்து அதைத் தொடங்குக!” என்றார் வியாசர். “என் அகங்காரம் திரண்டு முதிர்ந்து முத்தாகி உதிர்ந்த ஒரு தருணம். அந்த விதை முளைத்த வனம்தான் குருஷேத்ரமாகியது” (Chapter: 5)

நீரெனில் கடல், ஒளியெனில் சூரியன், இறையெனில் பிரம்மம், சொல்லெனில் வியாசனின் சொல்லேயாகும். அது அழியாது வாழ்க!” (Chapter: 5)

*******

அந்தப்பெரும்படை மழைமேகக்கூட்டம் போல பாரதத்தின் ஐம்பத்தாறு நாடுகளிலும் ஊடுருவியது. ஹஸ்தியின் படை சென்ற இடங்களிலெல்லாம் சூரிய ஒளியை கரிய யானைக்கூட்டங்கள் உண்டதனால் இருள் ஏற்பட்டது. (Chapter: 6)

யானைக்கூட்டங்கள் பாறைகளைத் தூக்கி வைத்து முன்னின்று கட்டிய மகாமரியாதமென்ற மாபெரும் மதில் ஒன்று அதைச்சுற்றி அமைந்தது. யானைகளின் அதிபனை ஹஸ்திவிஜயன் என்றும், அவனுடைய புதியமாநகரை ஹஸ்திபுரி என்றும் சூதர்கள் பாடினர். காலையில் யானைகளின் ஓங்காரத்தால் அந்நகரம் விழித்தெழுந்தது. பகலில் யானைகளின் கருமையால் அது நிழலிலேயே இருந்தது. யானைகளின் மதத்தில் மொய்க்கும் ஈக்களின் ரீங்காரம் மலர்ச்சோலைகளின் தேனீக்களின் ரீங்காரத்தை விட ஓங்கி ஒலித்தது. அந்த யானைகளின் எழிலைக்காண ஐராவதம் மீதேறி இந்திரன் விண்மீது வந்து நிற்பதனால் என்றும் அந்நகர்மேல் மழை பெய்துகொண்டிருந்தது. (Chapter: 6)

அஸ்தினபுரி என்ற அழகியின் மான்விழிகளாக நீலத்தடாகங்கள் அமைந்தன. அவள் நீலக்கூந்தலைப்போல அங்கே பூம்பொழில்கள் வளர்ந்தன. மண்ணில் நாரைச்சிறகுகள்போல வெண்கூம்புமுகடுகள் கொண்ட மாளிகைகள் அதில் எழுந்தன. நீர்பெருகும் மாநதிகள் என சாலைகள் அந்நகருக்குள் ஓடின. சூதர்களின் கிணையொலியும், நூல் பயில்வோரின் பாடல் ஒலியும், குழந்தைகளின் விளையாட்டுச் சிரிப்பும் யானைகளின் மூச்சொலிகளுடன் கலந்து ஒலிக்கும் அந்நகரம் இறையருளைப் பெறுவதற்காக மானுடன் மண்ணில் விரித்துவைத்த யானம் எனத் தோன்றியது. (Chapter: 6)

“வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது” (Chapter: 6)

நரம்புகள் புடைத்த தசைநார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இறுகிப்புடைத்து அதிர்வதைப் பார்க்கையில்தான் அவன் இன்பம் கொண்டான். மனித உடலென்பது வைரம்பாயும்போதே முழுமை கொள்கிறது என நினைத்தான். (Chapter: 6)

“சேற்றில் அகப்பட்ட யானையை புலிகள் சூழ்வதுபோல அவர்கள் அஸ்தினபுரியைச் சூழ்கிறார்கள் (Chapter: 6)

பலபத்ரருக்கு தெய்வங்களின் கண்களில் துயரம் மட்டுமே இருக்கமுடியும் என்று பட்டது. ஏனென்றால் அவை முடிவற்ற காலத்தில் மானுடவாழ்க்கையை பார்த்துநிற்கின்றன. (Chapter: 6)

*******

செம்பவளப் பாறைகள் மேல் பொன்னாலும் வெள்ளியாலும் உடல் கொண்ட மீன்கள் சிறகுகளை விசிறியபடி அவன் கேட்கமுடியாத சொற்களை உச்சரித்தபடி பறந்துசென்றன. (Chapter: 7)

ஒவ்வொரு பெண்ணிலும் ஒருவாழ்நாளைக் கழித்தவராக யுகயுகமாகச் சென்று ஒருகணம் கொப்பளித்து உடைவதுபோல நீருக்குமேலே வந்தார். (Chapter: 7)

நூறாண்டுகள் பழைய சோமரசம்போல, இமையத்தின் சிவமூலிகை போல அது அவரை மயக்கி உலகை மறக்கச்செய்தது. அவரது கண்கள் புறம்நோக்கிய பார்வையை இழந்தன என உள்நோக்கித் திரும்பிக்கொண்டன. கனவில் இசைகேட்கும் வைணிகனைப்போல அவர் விரல்கள் எப்போதும் காற்றை மீட்டிக்கொண்டிருந்தன. அன்னை மணம் அறிந்த கன்றின் காதுகளைப்போல அவர் புலன்கள் அவளுக்காக கூர்ந்திருந்தன. கந்தர்வர்களின் முகங்களில் மட்டுமே இருக்கும் புன்னகை எப்போதும் அவரிடமிருந்தது. பதினெட்டாண்டுகளில் இருநூற்று இருபது முத்துக்களும் தீர்வது வரை சந்தனு அந்தப்புரம்விட்டு வெளியே வரவில்லை. (Chapter: 7)

‘கன்றுக்கு பாற்கடல் மரணமேயாகும்’ என்று முதுநிமித்திகர் சொன்னார். அவருடலில் நாள்தோறும் காய்ச்சல் படிப்படியாக ஏறி வந்தது. அவரது நாடியைப்பிடித்துப்பார்த்த அரண்மனை வைத்தியர்கள் அதில் படைக்குதிரையின் குளம்படிச்சத்தம் ஒலிப்பதாகச் சொன்னார்கள். ‘ஆழம்’ என்ற சொல்லை சந்தனு கடைசியாகச் சொன்னார். நாசி விரித்து அதன் வாசனையை ஏற்பவர்போல மூச்சிழுத்தார். அம்மூச்சை வெளிவிடவில்லை. (Chapter: 7)

*******

சஞ்சலமேயற்ற பெரிய விழிகளும், அகன்ற மார்பும், பொன்னிற நாகங்கள் போன்ற கைகளும் கொண்ட சிறுவன் தன் தந்தையைவிட உயரமானவனாக இருந்தான். ஒவ்வொரு சொல்லுக்குப்பின்னும் அதுவரை அறிந்த ஞானம் அனைத்தையும் கொண்டுவந்து நிறுத்தும் பேச்சுடையவனாக இருந்தான். ஒரு கணமேனும் தன்னைப்பற்றி நினையாதவர்களுக்கு மட்டுமே உரிய கருணை நிறைந்த புன்னகை கொண்டிருந்தான். (Chapter: 8)

மலையுச்சியின் ஒற்றைமரத்தில் கூடும் தனிமை அவரிடம் எப்போதுமிருந்தது. ஒவ்வொரு பார்வையிலும் நான் இங்கிருப்பவனல்ல என்று சொல்வதுபோல, ஒவ்வொரு சொல்லிலும் இதற்குமேல் சொல்பவனல்ல என்பதுபோல, ஒவ்வொரு காலடியிலும் முற்றாக கடந்து செல்பவர்போல அவர் தெரிந்தார். (Chapter: 8)

சத்யவதி பெருமூச்சுடன் “யானை சேற்றில் சிக்கினால் நாய் வந்து கடிக்கும் என்பார்கள்” என்றாள். (Chapter: 8)

விருப்பமில்லாத பெண்ணைக் கவர்ந்துவருவது பைசாசிகம்…ஷத்ரியன் அதைச்செய்வதென்பது தன் முன்னோரை அவமதிப்பதன்றி வேறல்ல.” (Chapter: 8)

யாசிப்பவர் போல கைகள் அவரையறியாமல் நீண்டன. “பழிச்சொல்லில் வாழ்வதே வீரனின் மீளா நரகம் தாயே… (Chapter: 8)

பீஷ்மர் “அன்னையே, ஷத்ரியதர்மம் என்னவென்று நானறிவேன். ஆனால் மானுடதர்மத்தை அது மீறலாமா என்று எனக்குப் புரியவில்லை. தன் மனதுக்குகந்த கணவர்களைப் பெற எந்தப்பெண்ணுக்கும் உரிமையுண்டு…அந்தப்பெண்களை இங்கே கொண்டுவந்து அவர்களின் மனம்திறக்காமல் வயிறு திறந்தால் அங்கே முளைவிடும் கருவின் பழி என்னையும் குருகுலத்தையும் விடாது….அன்னையே, புராணங்களனைத்தும் சொல்லும் உண்மை ஒன்றே. பெண்பழி கொண்ட மண்ணில் அறதேவதைகள் நிலைப்பதில்லை….” என்றார் (Chapter: 8)

பெரும்பாறைகளைத் தூக்கி தன் எண்ணங்கள் மீது வைத்தது போல தளர்ந்திருந்தார். அனலையே ஆடையாக அணிந்ததுபோல எரிந்துகொண்டிருந்தார். (Chapter: 8)

தீர்க்கசியாமர் யமுனையைப் புகழ்ந்து பாட ஆரம்பித்தார். “சூரியனின் மகளாகிய யமுனை பாரதவர்ஷத்தின் குழலில் சூட்டப்பட்ட மயிலிறகு. கரியநிறம் கொண்டவளாதலால் யமுனையை காளிந்தி என்றனர் கவிஞர்கள். கங்கைக்கு இளையவள். வடக்கே கரிய கோபுரம் போலெழுந்து நிற்கும் களிந்தமலையில் தோன்றி மண்ணிலிறங்கி ஒருபோதும் கரைகள் மீறாதொழுகி தன் தமக்கையின் கைகள் கோர்ப்பவள். அவள் வாழ்க” என்றார். அவரது சொற்களின் வழியாக பீஷ்மர் யமுனையின் மரகதப்பச்சை நிறம்கொண்ட அலைகளைக் காண ஆரம்பித்தார். கடுந்தவச்சீலரான பராசரர் யமுனைக்கரைக்கு வந்து நின்றதை விழியற்ற சூதரின் பாடல் வழியாக பார்க்கலானார். (Chapter: 8)

அவன் வாசித்துமுடித்தபோது மலர்க்கனத்தால் மரக்கிளைகள் தாழ்ந்து தொங்கி தூங்கும் மதயானைகளின் மத்தகங்கள்போல மெல்ல ஆடின. அவன் சென்றபின் அந்தக் குழலிசையை மெல்ல திரும்ப மீட்டியபடி வேங்கை மலருதிர்க்கத் தொடங்கியது. (Chapter: 8)

தன் வல்லமையையும் எல்லையையும் உணர்ந்த பராசரர் அதன்பின் மலைச்சிகர நுனியில் நின்று வான் நோக்கி துதிக்கை தூக்கும் யானையையே தன்னுள் எப்போதும் உணர்ந்தார். (Chapter: 8)

காட்டில் எந்த மலரிலும் அதை அவர் உணர்ந்ததில்லை. பிறந்த குழந்தையிடமிருக்கும் கருவறை வாசனை போன்றது. அல்லது முலைப்பாலின் வாசனை. அல்லது புதுமீனின் வாசனை. யமுனையின் மையத்தை அடைந்தபோது அது நீராழத்தின் வாசனை என்று அவர் அறிந்தார். அவருடைய உள்ளும் புறமும் அவளன்றி வேறேதுமில்லாமலாக்கியது அவ்வாசனை. (Chapter: 8)

*******

அங்கே வேதநாதம் கேட்டுப்பழகிய சோலைக்குயில்கள் காயத்ரி சந்தத்திலும், மைனாக்கள் அனுஷ்டுப்பிலும், வானம்பாடிகள் திருஷ்டுப்பிலும், நாகணவாய்கள் உஷ்ணுக்கிலும், நாரைகள் ஜகதியிலும் இசைக்குரலெழுப்பும் என்று சூதர்கள் பாடினர். மலையில் உருண்டுவந்த வெண்கற்களினூடாக நுரைத்துச் சிரித்துப்பாயும் கங்கையின் கரையில் ஈச்சையோலைகளை கூரையிட்டு மரப்பட்டைகளைக் கொண்டு கட்டப்பட்ட சிறுகுடில்கள் இருந்தன. (Chapter: 9)

சிறகுகள் போல அவரது பட்டுச்சால்வை பின்னால் எழுந்து பறக்க, சிம்மப்பிடரி என அவர் தாடியும் சிகையும் காற்றில் ததும்பின. (Chapter: 9)

‘நீ என்னை அறியமாட்டாய். நானோ ஒவ்வொரு பிறவியிலும் உன்னை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன். உன்னுடைய ரதசக்கரங்கள் ஓடித்தெறிக்கும் கூழாங்கற்கள்கூட பிறவிகள் தோறும் உன்னை பின்தொடர்கின்றன என நீ அறியவும் முடியாது. நான் இந்த முதுமைவரை வேட்டையாடி வேட்டையாடி கண்டறிந்தது ஒன்றே. காலத்தின் முடிவில்லா மடிப்புகளிலெல்லாம் பின்னிப்பின்னிச்செல்லும் அழியாத வலையொன்றின் வெறும் கண்ணிகள் நாம்’ என்று சித்ரகர்ணி சொல்லிக்கொண்டது. தன் பிடரிமயிரில் மொய்த்த பூச்சிகளை விரட்ட சடைத்தலையை குலைத்துக்கொண்ட அசைவை புதருக்குள் காற்றுபுகுந்ததாக எண்ணினார் பீஷ்மர். (Chapter: 9)

கருங்கல்சில்லுகள் போல ஈரம் மின்னிய பெரியகண்களால் அந்தப் பசு தன்னிடம் எதையோ சொல்லமுற்படுவதுபோல பீஷ்மர் உணர்ந்தார். ஒருகணம் நின்று அதன் முன்னோக்கிக் குவிந்த காதுகளையும் விறகுக்கரிமீது தீச்சுடர்போல நாசியை நக்கிச்சென்ற நாக்கையும் பார்த்தபின் உள்ளே சென்றார். (Chapter: 9)

மெலிந்த வலிமையான கரிய உடல் மீது நரம்புகள் இறுக்கிக் கட்டப்பட்டவை போலிருந்தன. கருமையும் வெண்மையும் இடைகலந்த தாடியும் நீண்ட சாம்பல்நிறச்சடைகளும் மார்பிலும் தோளிலும் விழுந்துகிடந்தன. கண்கள் மீன்விழிகள் போலத் தோன்றின. (Chapter: 9)

“வானை எட்டமுடியாத எளிய மனிதர்கள் கோபுரங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்” என்றார் வியாசர். (Chapter: 9)

நான் மண்ணின் எளியசிக்கல்களுடன் போரிட்டுக்கொண்டிருப்பவன். எனக்கு சொற்கள் கைகூடவேயில்லை. ஆகவே அம்புகளை பயிற்சிசெய்கிறேன்” என்றார். (Chapter: 9)

“ஆயுதங்கள் உயிரற்றவை. உயிரற்றவைக்கு மட்டுமே கச்சிதம் கைகூடுகிறது. அவற்றை இயக்கும் விதிகளுக்கு அப்பால் அவற்றில் ஏதுமில்லை..” (Chapter: 9)

“ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது….பொறு நீ சேர்த்துக்கொண்டவை எல்லாம் உன்னைவிட்டு ஒழுகிமறையும் நாள் ஒன்று வரும்” (Chapter: 9)

“இத்தனை தர்க்கங்களுக்கும் அப்பால் மழையில் கரைக்கப்படாத பாறைபோல அந்த உண்மை நின்றுகொண்டிருக்கிறது மூத்தவரே. அந்தப்பெண்களின் உள்ளம். அவர்கள் இந்த மண்ணில் வந்து விடப்போகும் கண்ணீர். அதை களம் வரைந்த பின்பே ஆடத்தொடங்கும் என் எளிய தர்க்கஞானமும், நான்குவாயில்களையும் மூடிக்கொண்டிருக்கும் குலநீதியும் தாங்குமா என்ன?” “அந்தச் சிந்தனை வந்தபின் நீ வெறும் ஷத்ரியனல்ல…ரிஷிகளின் பாதையில் செல்கிறாய்” என்றார் வியாசர் “நீ ஒருபக்கம் ஷத்ரியனாக பேசுகிறாய். இன்னொரு பக்கம் ஒரு சாதாரண மனிதனாகவும் சிந்திக்கிறாய். போரில் நீ அறுத்தெறியும் தலைக்குரியவனின் குழந்தைகளின் கண்ணீரை ஒருகணமேனும் எண்ணிப்பார்த்ததுண்டா?” “எண்ணிப்பார்க்கவும்கூடும் என்று இப்போது நினைக்கிறேன் மூத்தவரே….சிலசமயம் நான் ஷத்ரியனை விட மனிதன் என்ற இடம் பெரிதென்றும் எண்ணுகிறேன்” என்றார் பீஷ்மர். (Chapter: 9)

அப்போது சாமரம்போன்ற சிறகுகள் வீசி ஒலிக்க எரித்துளிகள் போன்ற கண்களும், போரில் பின்னிக்கொண்ட குத்துவாட்களைப் போன்ற அலகுகளும், ஆற்றுக்கரை மரத்தின் வேர்ப்பிடிப்பு போன்ற கால்களும் கொண்ட செம்பருந்து ஒன்று வந்து அவன் உப்பரிகை விளிம்பிலமர்ந்தது. (Chapter: 9)

தன்னறம் என்பது புடவியின் பேரியக்கத்தில் தன் இடமென்ன என்றுணர்வது மட்டுமே. தன்னைச்சுற்றி இப்புடவி நிகழ்கிறது என்று எண்ணிக்கொள்வது தன்னகங்காரம் என்றே பொருள்படும். தன்னறம் முக்தியையும் தன்னகங்காரம் அழிவையும் அளிக்கும்” என்றது. (Chapter: 9)

சித்ரகன் சிலகணங்கள் சிந்தனைசெய்தபின் “மன்னனே நீ என் காலடியில் தலைகுனிந்ததனாலேயே என்னிடம் அடைக்கலம் கோரியவனாகிறாய். உன்னை உண்பதை விட நானும் என்குலமும் பட்டினியில் மடிவதே அறமாகும்” என்று சொல்லி பறந்துசென்றது. (Chapter: 9)

*******

செந்நிற ஆடையும் செவ்வரியோடிய பெரிய விழிகளும் கொண்டவள் அம்பை. நீலநிற ஆடையணிந்த மின்னும் கரியநிறத்தில் இருந்தவள் அம்பிகை. வெண்ணிற ஆடையணிந்து மெல்லிய உடல்கொண்டவள் அம்பாலிகை. முக்குணங்களும் காசிமன்னனிடம் மூன்று மகள்களாகப் பிறந்திருக்கின்றன என்றனர் நிமித்திகர்கள். (Chapter: 10)

பதினாறாயிரத்து எட்டு இமயமலை முடிகளையும் சுற்றிவளைத்துத் தழுவியபடி துயிலும் கரிய பேருருவம் கொண்டவன். அணையாத இச்சை என இமையாத கண்கள் கொண்டவன். மூன்று காலம்போலவே மும்மடிப்புடன் முடிவிலாதொழுகும் உடல் கொண்டவன். கணங்களைப்போல நிலையில்லாமல் அசையும் நுனிவாலைக் கொண்டவன். ஊழித்தீயென எரிந்தசையும் செந்நாக்குகளைக் கொண்டவன். பூமியெனும் தீபம் அணையாது காக்க விரிந்த கைக்குவிதல்போன்று எழுந்த படம் கொண்டவன். ஏழுலகங்களையும் எரித்தழித்தபின் தன்னையும் அழித்துக்கொள்ளும் கடும் விஷம் வாழும் வெண்பற்கள் கொண்டவன். (Chapter: 10)

அழகியரே, தந்தையின் கண்வழியாகவே பெண் முழு அழகு கொள்கிறாள். (Chapter: 10)

நீலவிடம்கொண்ட அவன் கழுத்தழகில் அவள் காலங்கள் மறைந்து காதல்கொண்டாள். (Chapter: 10)

களத்தில் நான் தோற்கவில்லை, உன் மேல் கொண்ட அன்பினால் தோற்றேன்” என்று தட்சன் ஆயிரம் தலைகளால் படமெடுத்து சீறினான். (Chapter: 10)

வெண்ணிற வானம் நெருங்கி வந்து விரிந்தது போல கட்டப்பட்டிருந்த மணப்பந்தலின் முகப்பில் அமைந்த ஏழடுக்கு மலர்க்கோபுரத்தை சிற்பிகள் அலங்கரித்துக்கொண்டிருந்தனர். (Chapter: 10)

*******

மூவரும் உள்ளே நெருப்பிட்ட கலங்கள் போல சிவந்து கனிந்திருப்பதாகத் தோன்றியது. செம்பு, இரும்பு, வெள்ளிக் கலங்கள். உள்ளே மலரிதழ் விரித்து எரியும் அந்த சுவாலையை அவளும் ஒருகாலத்தில் அறிந்திருந்தாள். ஒவ்வொரு கணமும் இனிக்கும் அந்தத் தருணம் பிறகெப்போதும் வாழ்வில் திரும்பியதேயில்லை. (Chapter: 11)

ஒவ்வொரு சொல்லுக்கும் அம்பையின் உடலில் காற்று அசைக்கும் செம்பட்டுத் திரை போல நாணம் நெளிந்துசென்றது. கண்களில் சிரிப்பு மின்னிமின்னி அணைந்துகொண்டிருந்தது. அவர்கள் பேசிக்கொள்ளும் அத்தனை சொற்களுக்கும் ஒரே பொருள்தான் என புராவதி அறிவாள். பிறந்த கன்று துள்ளிக்குதிப்பதன் பொருள். (Chapter: 11)

".... கன்னியின் மனம் எரியக்காத்திருக்கும் காடுபோன்றது. ஒரு மூங்கில் உரசினாலே போதும் என்று என் அன்னை சொல்வதுண்டு” (Chapter: 11)

இனிமேல் உங்கள் கற்பே உங்களுக்குக் காவலாக ஆகும். இன்றுவரை காசியின் பெருங்குலத்தின் உறுப்பினராக இருந்த நீங்கள் கனிகள் மரங்களிலிருந்து உதிர்வது போல விலகிச்செல்கிறீர்கள். உங்கள் உடலில் மலர்களை விரியவைத்த தேவதைகள் அனைவருக்கும் நன்றி சொல்லுங்கள். உங்கள் நெஞ்சில் கனவுகளை நிரப்பிய தேவதைகளை வணங்குங்கள். உங்கள் கண்களுக்கு அவர்கள் காட்டிய வசந்தம் நிறைந்த பூவுலகுக்காக அவர்களை வாழ்த்துங்கள். அன்னையின் ஆசியுடன் சென்றுவாருங்கள்” என்று வாழ்த்தி அவர்களின் நெற்றியில் மஞ்சள்பூசி ஆசியளித்தார். (Chapter: 11)

“மந்தையில் பின்னால் செல்லும் நோயுற்ற மிருகம் சிம்மங்களுக்கு உணவாகும். அதுவே அரச நெறியாகவும் உள்ளது” என்றாள் புராவதி. (Chapter: 11)

“முதல் இளவரசியின் பெயர் அம்பை. அனலைக் கழலாக அணிந்த கொற்றவையின் பெயர்கொண்டவர். முக்கண் முதல்வியின் ரஜோகுணம் மிக்கவர். செந்நிற ஆடைகளையும் செந்தழல் மணிகளையும் விரும்பி அணிபவர். (Chapter: 11)

“பாய்கலை ஏறிய பாவை போலிருக்கிறார்….’’ என்றான். (Chapter: 11)

கங்கைக்கரையின் பெரும்படிக்கட்டுகளில் உருண்டு உருண்டு முடிவேயில்லாமல் விழுந்துகொண்டே இருப்பவள் போல உணர்ந்தாள். (Chapter: 11)

*******

வேட்டையில் இரையை நெருங்கும் வேங்கையைப்போல மெல்லிய தாழ்நடையுடன் கையில் மாலையுடன் அம்பை சால்வனை மட்டும் நோக்கி அவனைப்பார்த்து சென்றாள். (Chapter: 12)

அவள் கையில் வெள்ளிநிற மலர் போலச் சுழன்ற வாளைப்பார்த்து பீஷ்மர் சிலகணங்கள் மெய்மறந்து நின்றார். (Chapter: 12)

அவரது வில்லில் இருந்து ஆலமரம் கலைந்து எழும் பறவைக்கூட்டம் போல அம்புகள் வந்துகொண்டே இருந்தன என்று அங்கிருந்த சூதர்களின் பாடல்கள் பின்னர் பாடின. அவரெதிரே நின்ற ஷத்ரியர்களின் கைகளிலிருந்து அம்புகளும் விற்களும் சருகுகள் போல உதிர்ந்து மண்ணில் ஒலியுடன் விழுந்தன. மென்மையாக வந்து முத்தமிட்டுச்செல்லும் தேன்சிட்டுகள் போன்ற அம்புகள், தேனீக்கூட்டம் போன்ற அம்புகள், கோடைகால முதல்மழைச்சாரல் போன்ற அம்புகள் என்று பாடினர் சூதர். (Chapter: 12)

அவரது சிற்றம்புகள் சிறிய குருவிகள் போல வந்து மண்ணில் இறங்கிப்பதிந்து நடுங்குவதையும் கைகளும் தோள்களும் காயம்பட்டு குருதி வழிய விழுந்துகிடக்கும் ஷத்ரியர்களையும் புராவதி கண்டாள். (Chapter: 12)

அவர்களின் கொடிகளும் மேலாடைகளும் சிறகுகளாக அலைபாய ரதங்கள் விண்ணில் பறப்பவையாகத் தெரிந்தன. (Chapter: 12)

அது சினம்கொண்ட பறவைகளின் வான்போர் போலிருந்தது என்று பின்னாளில் ஒரு சூதன் பாடினான். அம்புகள் அம்புகளை வானிலேயே ஒடித்து வீழ்த்தின. கால்கள் முறிந்த குதிரைகள் ஓட்டத்தின் வேகத்தில் சிதறித்தெறித்து விழுந்தன. (Chapter: 12)

பீஷ்மரின் வில்வித்தை ஒரு நடனம் போலிருந்தது. அவர் குறிபார்க்கவில்லை, கைகள் குறிகளை அறிந்திருந்தன. அவர் உடல் அம்புகளை அறிந்திருந்தது. அவரது கண்கள் அப்பகுதியின் புழுதியையும் அறிந்திருந்தன. (Chapter: 12)

தன் ரதத்தின் தடமெங்கும் அவரது அம்புகள் விழுந்து சிதறி பின்னால் செல்வதைக் கண்டான். அவை மிகமெல்லிய ஆனால் உறுதியான புல்லால் ஆனவை. புல்லால் வாலும் இரும்பால் அலகும் கொண்ட பறவைகள். மீன்கொத்திகள் போல அவை வானில் எழுந்து மிதந்து வந்து சரேலென்று சரிந்து கொத்த அந்த புல்நுனிகளே காரணம் என்று புரிந்துகொண்டான். (Chapter: 12)

வெண்நாரை சிறகுவிரிப்பதைப்போல படகுகளின் பாய்கள் விரிந்தன. காசிநகரம் அதன் கோட்டையுடனும் மாளிகைகளுடனும் விஸ்வநாதன் பேராலயத்துடனும் கடல்யானம் போல தன்னைவிட்டு விலகிச்செல்வதைக் கண்டு அமர்ந்திருந்தார் பீஷ்மர். அவரது தோளில் பட்டிருந்த காயத்தின் மீது நெய்யுடன் சேர்த்து உருக்கிய பச்சிலைமருந்து ஊற்றி சேவகன் கட்டவந்தபோது புலிபோல உறுமி அவனை அகற்றினார். (Chapter: 12)

அம்பிகையும் அம்பாலிகையும் அஞ்சி அலறியபடி மழைக்கால குருவிகள் என படகின் மூலையில் ஒடுங்கிக்கொண்டனர். இரை பறிக்கப்பட்ட கழுகு போல சினந்தவளாக அம்பை மட்டும் எழுந்தாள். (Chapter: 12)

“எதைத்தாங்குவது? குயவன் களிமண்ணைக் கையாள்வதுபோல அன்னிய ஆணொருவன் நம் உடலைக் குழைப்பதையா? நம்மில் நாம் விரும்பாத ஒன்றை அவன் வடித்தெடுப்பதையா?” என்றாள் அம்பை. (Chapter: 12)

“…என் வழி நெருப்பின் வழி என்று முதுநாகினி என்னிடம் சொன்னாள். குன்றாத விஷம் கொண்டவையாக என் சொற்கள் அமையவேண்டுமென என்னை வாழ்த்தினாள். இப்போதுதான் அவற்றின் பொருள் எனக்குப்புரிகிறது. என் பாதையை நானே அனைத்தையும் எரித்து அமைத்துக்கொள்வேன்.” (Chapter: 12)

“இளவயதில் காதல்வயப்படாத கன்னியர் எவர்? இளவரசியே, இளங்கன்னி வயதில் ஆண்களைப் பார்க்கும் கண்களே பெண்களுக்கில்லை என்று காவியங்கள் சொல்கின்றன. ஆண்கள் அப்போது அவர்களுக்கு உயிருள்ள ஆடிகள் மட்டுமே. அதில் தங்களைத் தாங்களே நோக்கி சலிப்பில்லாமல் அலங்கரித்துக்கொள்வதையே அவர்கள் காதலென்று சொல்கிறார்கள்….” பீஷ்மர் குனிந்து அம்பையின் கண்களைப்பார்த்தார். அவரது திகைப்பூட்டும் உயரம் காரணமாக வானில் இருந்து ஓர் இயக்கன் பார்ப்பதுபோல அவள் உணர்ந்தாள். “பெண்கள் கண்வழியாக ஆண்களை அறியமுடியாது. கருப்பை வழியாக மட்டுமே அறியமுடியும். அதுவே இயற்கையின் நெறி…அவனை மறந்துவிடுங்கள்.” (Chapter: 12)

இளவரசியே, சூதர்பாடல்கள் வேதவனத்தின் கிளிகள் போல. நீட்டிய கைகளை அவை அஞ்சும். அவற்றை அறியாது தியானத்தில் இருக்கும் யோகியரின் தோள்களிலேயே அமரும்.” (Chapter: 12)

*******

அவன் உடலெங்கும் நரம்புகள் நீலநிற சர்ப்பக்குழவிகள் போல சுற்றிப்படர்ந்து இதயத்துடிப்புக்கு ஏற்ப அதிர்ந்துகொண்டிருந்தன. (Chapter: 13)

சித்திரமெத்தையில் சாய்ந்து நரம்புகளில் விஷம் ஓடும் குளம்படியைக் கேட்டபடி அரைக்கண்மூடிக் கிடந்த விசித்திரவீரியனின் முன்னால் அமர்ந்து சூதர் தன்னுடைய கிணைப்பறையைக் கொட்டி அப்சரஸ்கள் நிலவில் மானுடப் பொன்னுடலுடன் நீராடிக்களிக்கும் காட்சியை பாடிக்கொண்டிருந்தார். (Chapter: 13)

விசித்திரவீரியன் “காது மட்டும்தான் உழைப்பில்லாமல் பணியாற்றும் உறுப்பு ஸ்தானகரே” என்றான் (Chapter: 13)

தலையை கைப்பிடியாகக் கொண்டு சுழலும் சாட்டைகள். மலையிடுக்கின் மண் பொழிவுகள். இருள்படிந்த காட்டுவழிகள். தொங்கி காற்றிலாடும் அருவிகள். கைநீட்டும் கொடிநுனிகள். சுருண்டுபற்றும் வானர வால்கள். நெளியும் மயில்கழுத்துகள். தயங்கி வழியும் ஓடைகள். நெளியும் கருங்கூந்தல்கள். விழியை வளைத்த புருவங்கள். அகம் மட்டுமறியும் ஆப்தவாக்கியத்தின் தன்னந்தனியான இருண்ட பயணம்.. (Chapter: 13)

முற்றியநாகத்தின் வாயில் விளங்கும் நாகமணிபோல நீல ஒளியுடன் அது அவரது கழுத்தில் தங்கியது. (Chapter: 13)

இளங்காற்றில் இருந்த ஈரப்பதத்திலிருந்து வந்தவை போல ஏதேதோ எண்ணங்கள் அவனூடாகச் சென்றுகொண்டிருந்தன. (Chapter: 13)

விப்ரதன் சொல்லின் வேகத்தில் சற்றே முன்னகர்ந்து “வேள்விக்கூடம் மேல் படர்ந்து ஏறும் நெருப்பு போலிருந்தார்” என்றான். “ஏழுமுறை தீட்டப்பட்ட வாள் போல. ஆவணிமாதம் ஆயில்யநட்சத்திரத்தில் அதிகாலையில் படமெடுக்கும் ராஜநாகம்போல…” (Chapter: 13)

*******

பிரபஞ்சத்தில் கைவிடப்பட்டு திசைவெளியில் அலையும் அடையாளம்காணப்படாத கோளத்தைப்போல தன்னை உணர்ந்தாள். (Chapter: 14)

வங்கத்துக்குச் செல்லும் வணிகப்படகுகள் சிக்கிக்கொண்ட பறவைகள் போல வண்ணக்கொடிகள் காற்றில் படபடக்க, வெண்பாய்கள் மாபெரும் சங்குகள் போலப் புடைத்து நிற்க, தென்திசை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. (Chapter: 14)

“அன்னையே, இந்தத் துடுப்பு எனக்கு மீனுக்குச் சிறகுபோல. நான் இதனுடன்பிறந்தவன்” என்றான். (Chapter: 14)

“அன்னையே, படகிலிருக்கும் காற்றுபுடைத்த பாய்போலிருக்கிறீர்கள்....." (Chapter: 14)

அவள் அண்ணாந்து பார்ப்பதைக்கண்டு “அவை பூச்சிகளைப்பிடிப்பவை….வானத்தின் புலிகள் அவை” என்றான் நிருதன். (Chapter: 14)

அவளுடைய படகு யானை விலாவை நெருங்கும் சிட்டு போல பெரும் நாவாயொன்றை நெருங்கிச்சென்றது. பின்பு நாவாயின் உடல் மரத்தாலான கோட்டைபோல மாறி கண்களை மறைத்தது. கங்கைக்குள் நடப்பட்ட தோதகத்தி மரத்தடிகள் கரிய அட்டையின் ஆயிரம் கால்கள்போலத் தோன்றின. நெருங்க நெருங்க காடுபோல மாறி பின்பு கோபுரத்தூண்களாக ஆயின. (Chapter: 14)

காற்றில்பறக்கும் ஆடையை இடையில் சுற்றிச் செல்லும் இறகு போல சென்றுகொண்டிருந்தாள். (Chapter: 14)

ரதத்தில் செல்லும் வணிகன் இரவலனின் திருவோட்டில் இட்ட பிச்சையா நீ?” என்றான். (Chapter: 14)

“இளவரசியே, அரசர்களுக்கு அரசியலில் மட்டுமே காதல் இருக்கமுடியும்….” என்றார். (Chapter: 14)

“சூதர்களின் பாடல்களில் ஓடும் சிரிப்பைக்கூட புரிந்துகொள்ளமுடியாத உன்னால் என் ஆன்மாவை எப்படிப் புரிந்துகொள்ளமுடியும்?” (Chapter: 14)

அவளுடைய மூச்சிரைப்பு நாகத்தின் பத்திவிரியும் அசைவுபோலவே தோன்றியது. நாகம்போல சீறும் மூச்சுடன் “நான் உன்னையா இத்தனைநாள் விரும்பியிருந்தேன்? பல்லக்கில் பிணம் இருப்பது போல என் நெஞ்சில் நீயா இருந்தாய்?” என்றாள். (Chapter: 14)

அம்பை வெளியே இறங்கிச்செல்வது பொன்னிற நாகமொன்று சொடுக்கிச்சுழன்று செல்வதுபோலிருந்தது என்று நினைத்தான். (Chapter: 14)

அனல்பட்ட காட்டுக்குதிரைபோல அவள் படிகளில் இறங்கி சாலையில் ஓடி கங்கையை அடைந்தாள். (Chapter: 14)

*******

சரடுகள் அறுபட்ட கூத்துப்பாவைபோல அம்பையின் கைகளும் கால்களும் விழுந்தன. (Chapter: 15)

மாளாச் சுமை இழுக்கும் குதிரை போல தசைகள் இறுகித்தெறித்தன. (Chapter: 15)

நான் மின்னல் மறைவதுபோல எச்சமின்றி கணத்தில் விலகும் விதி கொண்டவள் (Chapter: 15)

கருப்பை என்னும் நங்கூரத்தால் ஆழக்கட்டப்பட்டவர்கள் பெண்கள்” என்றாள் விருஷ்டி. (Chapter: 15)

*******

ஒரு தெய்வம் இறங்கிச்சென்று பிறிதொரு தெய்வம் வந்து படகிலேறியதுபோல நிருதன் உணர்ந்தான் (Chapter: 16)

திரும்பிவந்த அம்பை மெல்லிய நடையும், உடல்பூத்த சலனங்களும், செவ்வாழைமெருகும் கொண்டவளாக இருந்தாள். (Chapter: 16)

வடதிசையிலிருந்து வானில் பறந்துசெல்லும் வெண்நாரை பொன்னிற அலகால் இழுபட்டுச்செல்வதுபோல அவள் சென்றுகொண்டிருந்தாளென நினைத்தான். அவளருகே ஒரு வீணையை வைத்தால் அது இசைக்குமென்றும் அவள் விரல்பட்டால் கங்கைநீர் அதிரும் என்றும் எண்ணிக்கொண்டான். (Chapter: 16)

நெய்விழும் தீ போல அவ்வப்போது சிவந்தும், மெல்ல தணிந்தாடியும், சுவாலையென எழுந்தும் படகுமூலையில் அவள் அமர்ந்திருக்கையில் படகு ஒரு நீளமான அகல்விளக்காக ஆகிவிட்டது என்று நிருதன் எண்ணிக்கொண்டான் (Chapter: 16)

அம்பை பேசுவதற்கான மூச்சு எஞ்சியிராதவளாக, உடலெங்கும் சொற்கள் விம்மி நிறைந்தவளாக நின்றாள். உள்ளெழுந்த எண்ணங்களின் விசையால் அவள் உடல் காற்றிலாடும் கொடிபோல ஆடியபோது நகைகள் ஓசையிட்டன. அமர்ந்திருக்கும்போதும் அவளுடைய உயரமிருந்த அம்மனிதனை முதல்முறையாக பார்ப்பவள் போல இருகண்களையும் விரித்து, மனதை விரித்து, தாகத்தை விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள். (Chapter: 16)

அப்பார்வை பட்டதுமே அவளுடலில் பரவிய மெல்லிய அசைவை, அவளில் இருந்து எழுந்த நுண்ணிய வாசனையை அவர் உணர்ந்ததும் அவரது உள்ளுக்குள் இருந்த ஆமை கால்களையும் தலையையும் இழுத்துக்கொண்டு கல்லாகியது (Chapter: 16)

வேட்டைநாய் முன் சிக்கிக்கொண்ட முயல்போல பீஷ்மர் அச்சத்தில் சிலிர்த்து அசைவிழந்து நின்றார். (Chapter: 16)

அம்பையின் முகம் கனிந்தது. பிழைசெய்துவிட்டு பிடிபட்ட குழந்தையிடம் அன்னை போல “காங்கேயரே, நான் மிக இளையவள். ஆனால் காதலில் மனம்கனிந்த பெண். உண்மையில் அன்னையும்கூட. உங்கள் தனிமையை நான் அறியமாட்டேன் என நினைக்கிறீர்களா? உங்கள் உள்ளுக்குள் நீங்கள் ஏங்குவதென்ன என்று நான் அறிவேன்….நீங்கள் விரும்புவது ஓர் அன்னையின் அணைப்பை மட்டும்தான்.” (Chapter: 16)

“அரசே, அன்புகொண்டவர்கள் வரமுடியாத ஆழம் என ஏதும் எவரிடமும் இருப்பதில்லை” என்றாள் அம்பை. (Chapter: 16)

முற்றிலும் திறந்தவராக அவள் முன் நின்ற பீஷ்மரின் பழகிய அகந்தை சுண்டப்பட்டு கீழே விழும் நாணயம் இறுதிக்கணத்தில் திரும்புவதுபோல நிலைமாறியது. (Chapter: 16)

அம்பை அம்புபட்ட கிருஷ்ணமிருகம் போன்ற கண்களால் அவரை நோக்கி “நான் உங்களிடம் கெஞ்சவேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?” என்றாள். (Chapter: 16)

உலகம் மீது வன்மம் கொண்டவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களையே வதைப்பார்கள்” என்றாள். (Chapter: 16)

நீர் விழுந்த கொதிநெய் என அவரது அகம் பொங்கியபோது அவர் சொல்லவேண்டிய கடைசி வாக்கியம் நாக்கில் வந்து நின்றது. அழுக்கு மீது குடியேறும் மூதேவி என. (Chapter: 16)

என்னை கிழித்துப்பார்க்கும் ஒரு பெண்ணருகே என்னால் வாழமுடியாது. எனக்குத் தேவையானவள் ஒரு பேதை. நான் கண்ணயர விழைவது ஒரு பஞ்சுமெத்தையில், கூரிய அம்புகளின் நுனியில் அல்ல” சொல்லிமுடித்ததும் அவரது உடல் நடுங்கத் தொடங்கியது. எய்யப்பட்ட அம்புக்குப்பின் அதிரும் நாண் போல. (Chapter: 16)

ஆணெனும் சிறுமையை பிரம்மனே அறிந்த கணம்போல அவர் உதடுகளில் ஒரு மெல்லிய ஏளனச்சுழிப்பு வெளிப்பட்டது. அதைக்கண்ட அக்கணத்தில் வெண்பனி நெருப்பானதுபோல, திருமகள் கொற்றவையானதுபோல அவள் உருமாறினாள். (Chapter: 16)

அவளுக்குப்பின்னால் சிதையில் இதயம் வேகும்போது எழுந்தமரும் பிணம்போல பீஷ்மர் மெல்ல அசைந்தார். அதன் ஒலியிலேயே அனைத்தையும் உணர்ந்தவளாக அம்பை திரும்பினாள். காதல் பெண்ணில் உருவாக்கும் அனைத்து அணிகளையும் அணிந்தவளாக, அவளுடைய கன்னியழகின் உச்சகணத்தில் அங்கே நின்றாள். கைகள் நெற்றிக்குழலை நீவ, கழுத்து ஒசிந்தசைய, இடை நெகிழ, மார்பகங்கள் விம்ம, இதோ நான் என. (Chapter: 16)

இடிபட்டெரியும் பசுமரம்போல சுருங்கி நெரிந்து துடித்த அவளுடலில் இருந்து சன்னதம் கொண்டெழும் மயான சாமுண்டியின் பேரோலம் கிளம்பியது. ரத்தமும் நிணமும் சிதற எலும்பை உடைத்து இதயத்தைப் பிழிந்து வீசுபவள் போல மார்பை ஓங்கியறைந்து சினம் கொண்ட சிம்மக்கூட்டம்போல குரலெழுப்பியபடி அவள் வெளியே பாய்ந்தாள். (Chapter: 16)

*******

ஓருருவம் ஒன்பதாவதைக் கண்டேன்! ஒன்பதும் ஒருத்தியே எனத் தெளிந்தேன் (Chapter: 17)

குறுவாட்கள் என பத்து கைவிரல்களும் விரிந்திருக்க, சினம்கொண்ட பிடியானை போல மண்ணில் காலதிர நடந்தபோது அரண்மனைச்சேவகர் அஞ்சி சிதறியோடினர். (Chapter: 17)

எரிபோல நிலமுண்டு வான்பொசுக்கி அவள் சென்றவழியில் ஒரு மனிதர்கூட இருக்கவில்லை. (Chapter: 17)

காலைக்குளிர் உறைந்து சொட்டுவதுபோன்ற மலையருவியில் சென்று அவள் நின்றாள். அவளுடல் பட்டதும் அருவியில் நீராவி எழுந்து மேகமாகியது. மலைச்சரிவின் வானம் சுழித்த பொழில்களில் அவளிறங்கினாள். அவை கொதித்துக்குமிழியிட்டன. ஆங்காரம்கொண்டு மலைப்பாறைகளை ஓங்கி அறைந்தாள். அவை உடைந்து சரிந்தன. ஆலமர விழுதுகள் அவளைக்கண்டு அஞ்சி நெளிந்தாடின. மதவேழங்கள் மத்தகம் தாழ்த்தி மண்ணில் கொம்பிறக்கின. ஊன்வாய் சிம்மங்கள் பதுங்கிக் கண்களை மூடிக்கொண்டன. (Chapter: 17)

‘கருப்பை ஈன்று மண்ணுக்கு வரும் ஒவ்வொரு ஆண்மகனும் வணங்கியாகவேண்டிய பெண்மையின் அருங்கணம் ஒன்று உள்ளது. அதை அவமதித்தவனை நான் பலிகொண்டாகவேண்டும். திருமகளின் மணிமுடியை மிதித்தவன் கொற்றவையின் கழல்நெருப்பில் எரிந்தாகவேண்டும். ஆணை! ஆணை!ஆணை!’ (Chapter: 17)

மலையிலிறங்கிய காட்டாறு என அவள் சென்றுகொண்டே இருந்தபோது பிறைநிலவுகள் போல வெண் கோரைப்பற்களும் மதமெரிந்த சிறுவிழிகளும் செண்பகமலர்போல சிறிய காதுகளும் கொண்ட பன்றிமுகத்துடன், புல்முளைத்த கரும்பாறைபோன்ற மாபெரும் மேனியுடன் வராஹி தேவி அவள் முன் வந்து நின்றாள். (Chapter: 17)

சிம்மத்திலேறிய துர்க்கை போல காற்றிலேறிவந்த அவளுடைய இடிக்குரலை கேட்டுக்கொண்டிருந்தான். (Chapter: 17)

பாறை பிளக்கும் ஒலியுடன் உறுமியபடி தேவி எழுந்து நின்றாள். அவள் தெய்வ விழிகள் அவனைப் பார்த்தன. அவளுக்கு அப்பால் மதவிழிகளில் குவிந்த இருள் என நின்ற பெரும்பன்றி உறுமியது. கூப்பிய கரங்களுடன் தன் முன் கண்மூடி குனிந்து அமர்ந்திருந்த விசித்திரவீரியன் தலைமேல் தன் கருகித்தோலுரிந்த காலைத் தூக்கி வைத்தாள். கண்ணீர் வழிய நடுங்கியபடி விசித்திரவீரியன் அமர்ந்திருந்தான். அவனுடைய அலைகடல்மேல் குளிர்நிலவு உதித்தது. (Chapter: 17) ‘

பிறவிப் பெரும்பாதையைப் போன்ற அக்குகைக்குள் தேவி கருவறை புகும் ஆன்மா போல சென்று கொண்டிருந்தாள் (Chapter: 17)

Note: Source: http://www.jeyamohan.in. Author of these text: Writer Jeyamohan. Jeyamohan owns the copyright for his works. If he objects, this post will be removed.

1 comment:

Kasthuri Rengan said...

வெகு நேர்த்தியாக கோர்க்கப்பட்ட வர்ணனைகள்

எறிந்த வீட்டில் எஞ்சிய மர சிற்பம் என்பது பலமுறை என்னை சிந்திக்க தூண்டியது ...

வலிதரும் வர்ணனை