Tuesday, February 18, 2014

ஜெயமோகனின் வெண்முரசு - உவமைகள் வர்ணனைகள் - 3


முந்தைய தொகுப்புகளை இங்கே வாசிக்கலாம்:
  1. அத்தியாயங்கள் 1 - 17
  2. அத்தியாயங்கள் 18  - 34

ஜெயமோகனின் வெண்முரசு: எனக்குப் பிடித்த உவமைகளும் வர்ணனைகளும்: 3

வெண்முரசு - நூல் ஒன்று - முதற்கனல்

நீலம் பாரித்துக் குளிர்ந்து கிடந்த சடலத்தில் இருந்து முலைப்பால் வரவில்லை என்பதை மதியம் வரை அழுதபின் கண்டுகொண்ட குழந்தை அவளுடலில் இருந்து பேன்கள் இறங்கிச்சென்றதைப்போல தானும் சென்றது. (Chapter: 35)

முலைகளையே மனமாகக் கொண்டிருந்த அந்தப் பெண்பன்றி தன் காலைச் சற்று விரித்து குழந்தைக்கு இடம் கொடுத்தது. (Chapter: 35)

அவள் முலைகள் ஒடிக்கப்பட்ட கள்ளிச்செடியின் தண்டுகள் போல பால் சுரந்து சொட்டிக்கொண்டிருந்தன. முகத்தை மறைத்த சடைமுடிக்கற்றைகளை விலக்கி சற்றே குனிந்து புழுதியில் நெளியும் புழுவெனக்கிடந்த குழந்தையைப் பார்த்தபின் மெல்ல அமர்ந்து அதைத் தொட்டுப்பார்த்தாள். பின்பு அதை எடுத்து தன் மார்புடன் அணைத்துக்கொண்டு இன்னொரு முலைக்காம்பை அதன் வாய்க்குள் வைத்தாள். (Chapter: 35)

அவளுடனேயே அக்குழந்தை வளர்ந்தது. பாம்பைப் பற்றியபின் விடுவதறியாத வானரம் போல அவள் கங்கைக்கரை ஊர்களெங்கும் பதறியலைந்தாள். எரிந்த வீட்டில் எஞ்சிய மரச்சிற்பம் போன்றிருந்தாள். (Chapter: 35)

அவளுக்குள் ஏற்றம் ஒன்று ஊறிநிறையாத கிணறொன்றை அடியற்ற அகழிக்கு இறைத்துக்கொண்டிருப்பதுபோல. உடலால் துடுப்பிட்டு நிலத்தில் படகொன்றைச் செலுத்துபவள் போல. (Chapter: 35)

எந்நிலையிலும் பின்னடையாமலிருப்பதே வலிமை என்று சிகண்டினிக்கு பன்றிகள் சொல்லின. தன்உயிரை அஞ்சாத கண்மூடித்தனமான முன்னோக்கிய வேகத்தைத்தடுக்கும் ஆற்றலென ஏதும் மண்ணில் இல்லை என்று அறிந்து அதுவானாள். (Chapter: 35)

வராகியின் பெரும்பசி கொண்டிருதாள் சிகண்டினி. முட்டிமுட்டி உழுதுபுரட்டி அழுகலும் குப்பையுமாக அனைத்தையும் அவள் உண்டாள். அவள் கரிய உடல் திரண்டு பருத்தது. முலைகள் முன்னெழுந்து, இடைதிரண்டு விரிந்து, இருளுலகம் விட்டு எழுந்த அரக்கிபோலானாள். அவள் சருமம் இளமையின் ஒளிகொண்டு நனைந்த கரும்பாறை என மின்னியது. அவள் பற்கள் வெண்பளிங்குக் கற்களென மின்னின. அவள் இரு மேலுதட்டு ஓரத்திலும் பன்றியின் தேற்றைகள் என கோரைப்பற்கள் முளைத்தன. (Chapter: 35)

புயலில் ஆடும் பாய்மரம் கொடிமரத்திலறைவது போல மார்பில் மாறி மாறி அறைந்துகொண்டாள். (Chapter: 35)

நாவாய்கள் நகர்ந்த பெருநீர்ப்பரப்பில் வடக்கு வானில் இருந்து தெற்குநோக்கி களைத்த சிறகுகளுடன் தனித்துச்செல்லும் கடைசி வலசைப்பறவைகள் போல அவர்கள் இருவரும் நீந்திக்கொண்டே இருந்தனர். (Chapter: 35)

கரையிலிருந்து நீரில் இறங்கிய ஆலமரத்துப் பெருவேர்களில் கட்டப்பட்ட சிறியபடகுகள் முலைகுடிக்கும் பன்றிக்குட்டிகள்போல துறையை ஒன்றையொன்று முந்தி முட்டிக்கொண்டிருந்தன. வந்தமரும் நாரைகள் சிறகுமடக்குவதுபோல பாய்சுருக்கியபடி பெரும்படகுகள் கரையை அணைந்தபோது அப்பால் முரசுமேடைகளில் இருந்தவர்கள் ஒலியெழுப்பினர். (Chapter: 35)

*******

சிகண்டி ஒருமுறை இமைத்தபின் திடமான குரலில் “ஆம்” என்றான். நெய்கொதித்து ஆவியாவதுபோலஅன்னை உடலில் இருந்து அவள் உயிர் பெருமூச்சுகளாக வெளிவந்துகொண்டிருந்தது. “நான் காசிமன்னன் மகள் அம்பை. அஸ்தினபுரியின் பீஷ்மனால் ஆன்மா அழிக்கப்பட்டு பித்தியானவள். அகத்தின் கனலில் எரிந்து பேயானவள்” என்றாள் அன்னை. மெல்லமெல்ல அவள் உடலில் இருந்த மிருகத்தன்மை ஒழுகிச்சென்றதை, கருகிச்சுருண்டு சேறும் அழுக்கும் படர்ந்த உடலிலேயே பெண்மை குடியேறியதை சிகண்டி வியப்புடன் பார்த்தான். “மகனே, நீ எனக்காகச் செய்யவேண்டிய கடமை ஒன்றிருக்கிறது” என்றபோது அது கைவிடப்பட்ட பெண்ணின் கோரிக்கையாகவே ஒலித்தது. (Chapter: 36)

மட்கிய மரப்ப‌ட்டைபோன்ற கன்னங்களில் விழுந்த கண்ணீர் சுருக்கங்களில் பரவி தாடையில் சொட்டியது. (Chapter: 36)

செய்கிறேன்” என்றான் சிகண்டி. “நீ பீஷ்மரைக் கொல்லவேண்டும்” என்று அன்னை சொன்னாள். சிகண்டி அவள் கையைப்பற்றி “கொல்கிறேன்” என்றான். திடுக்கிட்டவள்போல அம்பை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். “உனக்கு அவர் யாரெனத்தெரியுமா?” என்றாள். சிகண்டி மெல்லிய திடமான குரலில், “யாராக இருந்தால் என்ன?” என்றான். அவள் கைகள் மேல் தன் கைகளைவைத்து மெல்லிய குரலில் “அது நிகழும்” என்றான். “நீ பீஷ்மரை போர்க்களத்தில் கொல்லவேண்டும். அவர் நெஞ்சை என் பெயர்சொல்லி விடும் உன் வாளி துளைத்தேறவேண்டும்” என்றாள். அவள் கைகள் சிகண்டியின் கைகளைப்பற்றியபடி நடுங்கின. சிகண்டி “ஆம்” என்றான். அன்னையின் பேய்முகத்தில் அழகியபுன்னகை ஒன்று எழுவதை சிகண்டி பார்த்தான். அவள் அவன் இருதோள்களையும் பிடித்துக்கொண்டாள். பெருமூச்சுடன் “ஆம், நீ அதைச்செய்வாய். ஒற்றை இலக்குக்காக மட்டுமே வாழ்பவன் அதை அடைந்தாகவேண்டுமென்பது பெருநியதி…இப்போதே அக்காட்சியைப் பார்த்துவிட்டேன்.. பீஷ்மர் உன் அம்பு துளைத்த நெஞ்சில் இருந்து வழியும் குருதியுடன் களத்தில் கிடக்கிறார்…. நீ என் கனல்…” என்றாள். (Chapter: 36)

அழியாத ஒன்றுக்கென்றே வாழ்பவன் சிரஞ்சீவி மகனே. நீ என்றென்றும் சொல்லில் வாழ்வாய்” என்றாள். (Chapter: 36)

நிருதன் வந்து வணங்கினான். அன்னை அவனை நோக்கித்திரும்பினாள். “நிருதரே, இதன்பின் உங்கள் இல்லம் திரும்புங்கள். என் சிதைச்சாம்பலைக் கொண்டு சென்று நீங்களும் உங்கள் குலமும் உங்கள் சிறுதங்கைக்கு நீர்க்கடன் செய்யுங்கள். உங்கள் குலத்தில் நான் என்றென்றும் பிறந்துகொண்டிருப்பேன்” என்றாள். நிருதன் “தங்கையே, அது என் தவப்பயன்” என்றான். (Chapter: 36)

கற்களை உரசி நிருதன் ஏற்றிய நெருப்பு மெல்லச்சிவந்து படபடவென்ற ஒலியுடன் பொற்சிறகுகள் கொண்டு எழுந்தது. அண்டபேரண்டங்களை துப்பும் ஆதி நாகத்தின் செந்நா என தழல் மேலெழுந்து பொறிகிளப்பியது. அலகிலா எல்லைவரை நிறைந்த இருளில் பொறிகள் விழுந்து மறைய காடு மெல்லிய காற்றோடும் மூச்சொலியாகச் சூழ்ந்திருந்தது. அன்னை எழுந்து சிகண்டியின் தலையைத் தொட்டாள். நிருதனின் பாதங்களைத் தொட்டபின் மெல்ல நெருப்பைநோக்கிச் சென்றாள். காதலனை அணுகும் பெதும்பை என தளரும் காலடிகளுடன். பின்பு பசித்தழும் குழந்தையை நோக்கிச்செல்லும் அன்னைபோல. தீ அவள் உடலில் பிரதிபலித்து அவள் செவ்விழிகள் சுடர்ந்த இறுதிக்கணத்தை சிகண்டி தன் நெஞ்சில் பதித்துக்கொண்டான். அருகே சென்ற கணம் அவளில் நெருப்பு தழலாடியது. அவளே ஒரு செந்தழலாகத் தெரிந்த மறுகணத்தில் நெருப்பின் இதழ்கள் விரிந்து அவளை உள்ளே அள்ளிக்கொண்டன. செந்திரை அசையும் பல்லக்கிலேறுவது போல அவள் எரிசிதைமேல் ஏறிக்கொண்டாள். தலைமேல் தூக்கிய கரங்களுடன் அலறியபடி நிருதன் தரையில் விழுந்தான். புற்பரப்பில் முகத்தைப்புதைத்து இருகைகளாலும் செடிகளைப்பற்றியபடி மண்ணுக்குள் புதைந்து விடமுயலும் மண்புழு போல உடல் நெளிந்தான். நின்ற இடத்தில் அசையாமல் சிகண்டி நின்றிருந்தான். அவன் முகத்தில் சிதைநெருப்பின் செம்மை அலையடித்தது. நெருப்புக்குள் அன்னையின் கரிய கைகால்களின் அசைவை, கருஞ்சடைகள் பொசுங்கும் நாற்றத்தை, அவளுடன் எம்பி விழுந்து எரிவிறகில் மெல்லப்படிவதை, அவள் உடல் திறந்து ஊன்நெய் சொட்டி சிதை நீலச்சுவாலையாவதை, உண்டுகளித்த செந்தழல்கள் நின்று நடமிடுவதை இமையா விழிகளுடன் அவன் பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு அவன் களம்படும் கணம் வரை விழிமூடவில்லை என்றனர் சூதர். அவன் துயிலறிந்ததே இல்லை. அவன் கண்ணிமைத்ததேயில்லை என்று அவர்களின் பாடல்கள் பாடின. (Chapter: 36)

நெற்றியில் உந்தப்பட்ட கடா என எம்பி முன்சென்றது. (Chapter: 36)

மீண்டும் சிலையாக நின்ற அவன் முன் கூழாங்கல்லை அடைகாக்கும் பறவைபோல சிகண்டி அமர்ந்திருந்தான். (Chapter: 36)

அதில் எலியின் உடல்போல மெல்லிய மீசையும் தாடியும் முளைக்கத்தொடங்கியிருந்ததைக் கண்டான். (Chapter: 36)

*******

செஞ்சதுப்பில் உழுதுவாழும் காட்டுப்பன்றி மதமெழுந்து நகர்நுழைந்ததுபோல சிகண்டி காட்டிலிருந்து வெளியே வந்தான். (Chapter: 37)

உண்ணும்போது சருகை எரித்து எழும் நெருப்பு போன்ற ஒலி அவனிடமிருந்து எழுவதை அவன் கைகளும் நாக்கும் உதடுகளும் தீயின் தழலாகவே நெளிவதை ஊரார் கண்டனர். (Chapter: 37)

சிகண்டி அவ்வழியாகச் சென்றபோது வியர்த்த பளிங்குமேல் விரலால் இழுத்ததுபோல அமைதியாலான வழியொன்று உருவாகி வந்தது. (Chapter: 37)

தொங்கியிருந்த செம்பட்டுத்திரைச்சீலைகள் காற்றில் நெளிய தீபூத்த வனம்போலிருந்தது அது. (Chapter: 37)

“நான் பீஷ்மரைக் கொல்லவேண்டும்” என்று சிகண்டி சொன்னான். சோமகசேனர் அதிர்ந்து அறியாமல் உயிர்பெற்ற கைகளை மார்பின்மேல் கோர்த்துக்கொண்டார். “நீ சொல்வதென்னவென்று தெரிந்துதான் இருக்கிறாயா? பீஷ்மரைக் கொல்வதென்பது பாரதவர்ஷத்தையே வெல்வதற்குச் சமம்” என்றார். மாற்றமில்லாத குரலில் “அவர் எவரோ ஆகட்டும். அது என் அன்னையின் ஆணை” என்றான் சிகண்டி. சோமகசேனர் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. உதடுகளை அழுத்தியபடி “இக்கணம் நான் பீஷ்மரை எண்ணி பொறாமைகொள்கிறேன். மகத்தான எதிரியைக் கொண்டவன் விண்ணகத்தால் வாழ்த்தப்படுகிறான்” என்றார். (Chapter: 37)

சிகண்டி செல்வதைப் பார்த்தபோது சாளரத்திரைச்சீலைகளை அசைத்து உள்ளே வந்த காற்றை உணர்வதுபோல அவர் நிம்மதியை அறிந்தார். அவருள் இருந்த புகைமேகங்களெல்லாம் அள்ளி அகற்றப்பட்டு ஒவ்வொன்றும் ஒளியுடன் துலங்கி எழுந்தன. (Chapter: 37)

மறுநாள் சிகண்டி அம்பால் மரக்கிளைகளை வெட்டி வீழ்த்தினான். பறக்கும் அம்பை இன்னொரு அம்பால் துண்டித்தான். அவன் கையில் கரியவில் பெருங்காதல் கொண்ட பெதும்பைப்பெண் என நின்று வளைந்தது. அவன் யாழின் தந்தியைத் தொடும் சூதனின் மென்மையுடன் நாணைத்தொட்டபோது குகைவிட்டெழும் சிம்மம் போல அது உறுமியது. வில்குலைத்துநாணேற்றி அவன் அம்புவிடுவதை மீன் துள்ளி விழும் அசைவைப்போலவே காணமுடிந்தது. (Chapter: 37)

*******

அக்னிவேசர் உரத்தகுரலில் சொன்னார். “இளையவர்களே, படைப்பில் அழகு அழகற்றது, நல்லது கெட்டது, தேவையானது தேவையற்றது என்ற அனைத்துப்பிரிவினைகளும் நாம் செய்துகொள்வதென்று அறியுங்கள். அதைச்செய்யும் ஒவ்வொருமுறையும் பிரம்மனிடம் மன்னிப்பு கோருங்கள். அவற்றை பிரம்மனின் விதி என எண்ணிக்கொள்ளும் மூடன் அந்த ஒவ்வொரு எண்ணத்துக்கும் என்றோ பதில்சொல்லக் கடமைப்பட்டவன்.” (Chapter: 38)

சிகண்டி “நான் எப்படி இருக்கவேண்டுமென நானே முடிவெடுத்தேன்” என்றான். (Chapter: 38)

“அறிதலை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை” என்றான் சிகண்டி. (Chapter: 38)

கண்கள் சற்றே விரிய உறுமலின் ஒலியில் சிகண்டி சொன்னான் “என் அன்னையின் சொல்லன்றி எனக்கு எக்கடமையும் இல்லை.” (Chapter: 38)

நடனம்போல மெல்லிய கரம் பின்னால் பறந்து வில்லின் நாணை பூங்கொடி போல வளைத்தது. நாணேறியதை வில் விடுபட்டதை எவரும் காணவில்லை. ஆடித்துண்டில் இருந்து ஒளிக்கதிர் எழுவதுபோல அவரிடமிருந்து கிளம்பிய அம்பு சிகண்டியின் சிகையை வெட்டிவீசியது. (Chapter: 38)

அக்னிவேசர் “உன் அன்னை…” என்று சொல்லவந்த கணமே அனைத்தையும்புரிந்துகொண்டார். நடுங்கியபடி தன் இரு கரங்களையும் விரித்தார். “குழந்தை, என் அருகே வா. என்னுடன் சேர்ந்து நில்!” என்றார். சிகண்டி அருகே வந்ததும் அவனை தன் மார்புடன் அணைத்துக்கொண்டார். “ரஜோகுணத்தை ஆள்பவன் ஷத்ரியன். நீ ஒவ்வொரு அணுவிலும் ஷத்ரியன். என் வித்தையெல்லாம் உன்னுடையது” என்று அவன் தலையில் கையை வைத்தார். கண்கள் கலங்க நடுங்கும் கையுடன் அக்னிவேசர் சொன்னார் “பிறரை வாழ்த்துவதுபோல செல்வம், போகம், மைந்தர், அரசு, புகழ், ஞானம், முக்தி எதையும் நீ அடையும்படி நான் வாழ்த்தமுடியாது என்பதை நான் அறிவேன் மகனே. உன் அன்னையின் பொருட்டு காலகால மடிப்புகள் தோறும் அவமதிப்பையும், வெறுப்பையும், பழியையும் மட்டுமே பெறுபவனாக வந்து நிற்கிறாய். மானுடனுக்கு பிரம்மம் இட்ட தளைகள் அனைத்தையும் கடந்தவன் நீ. கர்மத்தை யோகமாகக் கொண்ட ஞானியை தெய்வங்கள் அறியும். எளியவனாகிய இந்த ஆசிரியன் யுகபுருஷனாகிய உன் முன் பணிந்து உன்னை வாழ்த்துகிறேன் மகனே, நீ வெல்க!” என்றார். (Chapter: 38)

*******

இளவரசே, வீரம் வேறு  படைநடத்தல் வேறு” என்றார் தளகர்த்தரான பிரசேனர். (Chapter: 39)

முதல் மலையுச்சியில் நின்று கீழே நோக்கியபோது அடர்காட்டின் கொடிப்பின்னலுக்கு நடுவே கங்கபுரி வட்டமான தாலத்தில் அள்ளிவைத்த சிறிய சிமிழ்கள் போலத் தெரிந்தது. (Chapter: 39)

யானைகள் முட்டினாலும் தாங்கும்படி உள்ளே பெரிய தடிகள் முட்டுக்கொடுக்கப்பட்டு சாய்ந்து ஊன்றி நிற்க அந்த மதில்சுவர் நூறு கால்கள் கொண்ட முதலை வளைந்து நிற்பதுபோலத் தோன்றியது. (Chapter: 39)

அங்கே கங்கை குலப்பெண் சன்னதம் கொண்டதுபோல பெரும்பாறைகளில் மோதிச்சிதறி வெண்கொந்தளிப்பாக சுழித்துச்சென்றது. (Chapter: 39)

அது நீரில் குருதிபோலக் கரைந்து இறகுபோல நீண்டு புடவைபோல இழுபட்டுச் சென்றது. (Chapter: 39)

ஆயிரம் தலையும் படமெடுத்த வெள்ளிநாகம் போலிருந்தது கங்கை. ஒரு படத்திலிருந்து இன்னொன்றுக்குத் தாவினான். கங்கையின் ஆயிரம் பறக்கும் நாவுகளுடன் சேர்ந்து பறந்து அவள் மடியில் விழுந்து எழுந்தான். (Chapter: 39)

*******

அவளுடைய முலைக்கண்கள் ஊமத்தைப்பூவின் குவளை போல மிகப்பெரிதாகி நீண்டிருக்கின்றன.  (Chapter: 40)

அம்பாலிகையின் வலதுமுலை பெரிதாகிச் சரிந்திருக்கிறது. காம்புகள் நீலோத்பலத்தின் புல்லிவட்டம்போல நீண்டிருக்கின்றன. (Chapter: 40)

சிவையின் இருமுலைகளும் சமமாகச் சரிந்துள்ளன. முலைக்கண்கள் நீலச்செண்பகம் போல நீண்டிருக்கின்றன. (Chapter: 40)

அவன் கண் தூக்கி நோக்கியபோது மாலைநேரத்தின் மங்கிய ஒளியில் கீற்றுநிலா செம்பட்டில் விழுந்த சங்குவளைக்கீற்று போலத் தெரிந்தது. (Chapter: 40)

காட்டெருதின் கொம்புகளைப் பிணைத்ததுபோல் அலகுள்ள சாதகப்பறவையான கௌரன்... (Chapter: 40)

இறகுகள் முழுக்க உதிர்ந்து கருக்குழந்தைபோல ஆன சுப்ரை சிறகுகள் முளைக்காமல் புழுக்கள் போல நெளிந்த சிறு குஞ்சுகளுடன் மரப்பொந்தில் காத்திருந்தது. (Chapter: 40)

நெறிகளை அறியாத பருவத்தில் செய்யும் பிழைகள் பாவங்களாகா - என்று உரைத்து மறைந்தான். (Chapter: 40)

பன்றியைக் கவ்வி விழுங்கமுடியாமல் நெளிந்து இறக்கும் மலைப்பாம்பு போல நான்குநாட்கள் அன்னையை கதறித்துடிக்கச்செய்தது அது. (Chapter: 40)

*******

கீழ்வாயுவை வெளியேற்றும் உடலின் நிம்மதி என நினைத்துக்கொண்டதும் அவர் உதடுகள் மெல்லிய புன்னகையில் வளைந்தன. (Chapter: 41)

ஆனால் திமிறும் குழந்தையின் உடல்போல அவ்வசைவுகளில் ஒரு புறக்கணிப்பு வெளிப்பட்டது.  (Chapter: 41)

காற்றில் நழுவி பின்னால்செல்லும் பொன்பட்டு மேலாடை போல நகர் நீங்குகையில் அஸ்தினபுரியை உணர்வது அவர் வழக்கம். அன்று தோள்சுமையொன்று உதிர்ந்ததுபோல நினைத்துக்கொண்டார். (Chapter: 41)

மதூகமலரை அழுகச்செய்து நீரில் கொதிக்கவைத்து எடுக்கப்படும் அந்த மது சிந்தனையின் அனைத்துச் சரடுகளையும் எண்ணையில் நெளியும் மண்புழுக்களாக ஆக்கிவிடும் என பீஷ்மர் அறிந்திருந்தார். (Chapter: 41)

ஒருபெண்ணை விரும்புபவனை தண்டிக்க சிறந்தவழி அந்தப்பெண்ணையே அவன் அடையும்படிச் செய்வது அல்லவா? (Chapter: 41)

அவர் மணக்கோரிக்கையை முன்வைத்தபோது கங்கை நான் என்ன செய்தாலும் உன் மைந்தன் ஏன் என்று கேட்கலாகாது என்று சொன்னாள். அன்றிலிருந்தே அக்கோரிக்கையை அனைத்து மணமகள்களும் முதல்நாளிரவில் முன்வைக்கும் நிலை மண்ணில் உருவாகியது என்றறிக! ஓம், அவ்விதி என்றும் அவ்வாறே ஆகுக! (Chapter: 41)

நீ செய்யும் தீமைகளை முழுக்க நல்ல நோக்குடனயே செய்வாய். ஆகவே உனக்கு எப்பாவமும் சேராது, நீ பிறவியறுப்பாய் என்றாள். (Chapter: 41)

******

சப்தசிந்து என்றழைக்கப்பட்ட ஏழுநதிகளான சுதுத்ரி, பருஷ்னி, அஸிக்னி, விதஸ்தா, விபஸ், குபா, சுஷோமா ஆகியவை இமயமலைச் சரிவிறங்கியபின் அடர்ந்த காட்டுக்குள் புதர்கள் அசையாமல் செல்லும் புலிக்குட்டிகள் போல ஒலியெழுப்பாமல் ஓடி அப்பால் விரிந்த நிலவெளிநோக்கி ஒளியுடன் எழுந்து கரைகளைத் தழுவிச்சென்றன. (Chapter: 42)

கரைநோக்கியவர்கள் உரக்கப்பேசினர். நீரை நோக்கியவர்கள் தங்களுக்குள் மூழ்கியிருந்தனர். (Chapter: 42)

இருள்படர்ந்தபின் அப்பகுதியில் செல்பவர்கள் மின்மினிக்கூட்டம்போல எருமைவிழிகள் மின்னுவதைக் கண்டார்கள். அவை மெல்ல உறுமியபடி தங்களுக்குள் பேசிக்கொண்டும், காட்சிகளைக் கண்டு தொங்கிய காதுகளை அசைத்தும், காதுகள் வழியாக வழிந்து வளைந்த கொம்புகளை மெல்லச்சரித்து அழகிய கருவிழிகளால் நோக்கியும் பெரும்பாலும் நீருக்குள்ளேயே கிடந்தன. (Chapter: 42)

ஒரு நீர்ப்பாம்பு வயலையே அலையிளகச்செய்தபடி சென்றது. ஏடு வழியாகச் செல்லும் எழுத்தாணி போல என பீஷ்மர் நினைத்துக்கொண்டார். (Chapter: 42)

அஸ்வமேதக்குதிரை அணிகளுடன் வேள்விமேடைக்கு வந்ததுபோலிருந்தாள். (Chapter: 42)

“தங்கள் தோள்களில் நாண்பட்ட தழும்பு உள்ளது” என்றாள் அவள் சிரித்தபடி. “ஆனால் அது கூடத் தேவையில்லை. எதையும் குறிபார்ப்பவராகவே நோக்குகிறீர்கள்.” (Chapter: 42)

உடைதிருத்திக்கொண்ட பெண் போல காற்றில் உலைந்த இலைகளை எல்லாம் மீண்டும் படியவைத்து தாமரைக்குளம் அமைதியாகக் கிடந்தது. (Chapter: 42)

பெண்ணின் அன்பைப்பெறாதவன் பிரம்மஞானத்தால் மட்டுமே அந்த இடத்தை நிறைத்துக்கொள்ளமுடியும். (Chapter: 42)

******

"சினமின்றிப் போர்புரிய மனிதர்களால் இயலாது. சினமே போருக்கு பெரும் தடையும் ஆகும். இந்த முரண்பாட்டை வெல்வதற்காகவே எந்தப் போர்க்கலையும் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார் அக்னிவேசர். (Chapter: 43)

“புறத்தை கட்டுப்படுத்தியவன் அதன் அகப்பிம்பமான அகத்தையும் கட்டுப்படுத்தியவனாவான். இருபுடை வல்லமைகொண்ட அவனையே ஸவ்யசாச்சி என்று தனுர்வேதம் போற்றுகிறது” என்றார் அக்னிவேசர். “ஒருகையால் உள்ளத்தையும் மறுகையால் உடலையும் கையாள்பவன் அவன். ஒருமுனையில் அம்பும் மறுமுனையில் இலக்கும் கொண்டவன். அவன் ஒருமுனையில் பிரபஞ்சமும் மறுமுனையில் பிரம்மமும் நிற்கக்காண்பான்.” (Chapter: 43)

அங்கே பாறை ஒன்றின் நடுவே சிறிய நீலநிறமான சுனை ஒன்று மான்விழி போலக் கிடந்தது. (Chapter: 43)

பொறுப்புகள் அச்சமாகக் கனிகின்றன. அச்சம் வஞ்சகமாகிறது. வஞ்சகம் அனைத்து ஞானத்தையும் விஷமாக்கிவிடுகிறது - என்றார். (Chapter: 43)

“உன் ஆசை உன் வித்தைமேல் இருக்கிறது. மண்ணில் பிறந்த மாபெரும் வில்லாளிகளில் ஒருவனாக ஆகவேண்டுமென்ற கனவுடன் இருக்கிறாய். அக்கனவு உன்னுள் பதற்றத்தை நிறைக்கிறது. நீ நாணை இழுக்கையில் இங்குள்ள அத்தனை மாவீரர்களையும் போட்டியாளர்களாக நினைத்துக்கொள்கிறாய். உன்னுள் அலை எழுகிறது.” - (Chapter: 43)

தீக்கோல் படுவதற்கு முன்னரே சருமம் கூசிக்கொள்வதுபோல நீர்ப்பரப்பு அதிரத் தொடங்கியது. (Chapter: 43)

அக்னிவேசர் தனக்குள் ஆழ்ந்தவராகச் சொன்னார் “கருவுறுதல் என்றால் என்ன? காமத்தால்தான் கருவுறவேண்டுமா, கடும் சினத்தால் கருவுறலாகாதா? உடலால்தான் கருவுறவேண்டுமா, உள்ளத்தால் கருவுறலாகாதா?" - (Chapter: 43)

“தந்தையைக் கொல்ல விழையும் கணம் ஒன்று எல்லா மைந்தர் நெஞ்சுக்குள்ளும் ஓடிச்செல்லும். நீ அக்கணமே காலமாக ஆகிய மைந்தன், அவ்வளவுதான்” என்றார். (Chapter: 43)

“தந்தையர் அனைவருக்கும் இருமுகம். ஒன்று கொலை இன்னொன்று ஆசி. நீ கொலைமுகத்தை மட்டும் கண்டிருக்கிறாய். பெரும்பாலான அன்னையர் அதையே மைந்தருக்கு அளிக்கிறார்கள். தானும் தந்தையாக ஆகி தந்தையை இழந்தபின்பு மட்டுமே மைந்தர்கள் தந்தையின் ஆசியை உணர்கிறார்கள்” என்றார். (Chapter: 43)

“மைந்தரிலும் இருமுகங்கள் உண்டு. தந்தையைக் கொல்லவும் தந்தையாக வாழவும் வருபவன் மைந்தன். தன்னைக் கொன்று தன் காட்டை கைப்பற்ற வந்தது மகவு என்று அறியாத வேங்கை இல்லை” என்றார் அக்னிவேசர். “சிகண்டியே, தந்தை மைந்தன் விளையாட்டுதான் இப்புவியில் நிகழும் உயிர்நடனங்களிலேயே அழகியது, மகத்தானது. அதைப்புரிந்துகொள்பவன் அனைத்தையும் புரிந்துகொள்கிறான். ஏனென்றால் பிரம்மமும் பிரபஞ்சமும் ஆடும் லீலையும் அதைப்போன்றதே. பரமாத்மனும் ஜீவாத்மனும் கொண்டுள்ள உறவும் அதற்கு நிகரானதே.” - (Chapter: 43)

இருள் படர்ந்து விழிக்காடு மறைந்து செவிக்காடாகியது. “தத்வமசி” என்ற சொல் அவனைச் சூழ்ந்திருந்தது. இருளாக, மின்மினிகளாக, விழியொளிகளாக, காற்றாக, இலையோசையாக, விண்மீன்களாக, பால்வழியாக, முடிவின்மையாக. (Chapter: 43)

“சொல், நீ கண்ட அந்தக் கனவில் வந்த கிளிஞ்சல்மாலையணிந்த கிராமத்துப்பெண் எப்படி இருந்தாள்?” சிகண்டி பார்வையை விலக்கி சில கணங்கள் நின்றான். அவன் கை நாணை நெருட சிறு ஒலி எழுந்தது. பின்பு “என் அன்னை அம்பாதேவியைப்போல” என்றான். (Chapter: 43)

******

அஷிக்னியில் பாய்விரித்த படகுகள் சிறகசையாமல் மிதக்கும் பருந்துகள் போல அசையாத பாய்களுடன் தெற்குநோக்கிச் சென்றுகொண்டிருந்தன. மீன்பிடிப்பவர்களின் தோணிகள் மெல்ல அலைகளில் எழுந்தமர்ந்து நிற்க அவ்வப்போது அவற்றிலிருந்து தவளை நாக்குநீட்டுவதுபோல வலைகள் எழுந்து நீரில் பரவி விழுந்தன. (Chapter: 44)

சிறிய உருளைக்கற்களைக்கொண்டு கட்டப்பட்ட அந்தக்கோட்டை மழையில் கறுக்காத மஞ்சள்நிறமான கல்லடுக்குகளுடன் செதில்கள் நிறைந்த சாரைப்பாம்பு போலத் தோற்றமளித்தது. அதன்மேல் மரத்தாலான காவல்கோபுரங்களில் வெண்பட்டில் செந்நிறமாகத் தீட்டப்பட்ட சூரியனின் சின்னம் இருந்தது. (Chapter: 44)

******

சிகண்டி நிமிர்ந்து அந்த மலைகளைப் பார்த்தான். அவை ஒன்றுக்குப்பின் ஒன்றாக வெவ்வேறு வண்ண அழுத்தங்களில் பளிங்குப்புட்டிக்கு அப்பால் பளிங்குப்புட்டியை வைத்ததுபோலத் தெரிந்தன. (Chapter: 45)

அவற்றுக்கருகே பறவைக்கூட்டம் ஒன்று சிறுகாற்றில் சுழன்று படியும் சருகுக்குவியல் போல பறந்தது. (Chapter: 45)

பாறை இடுக்கு ஒன்றில் உடும்பு ஒன்றை ஒருவன் சுட்டிக்காட்டினான். கல்லால் ஆன உடல்கொண்டதுபோலிருந்த அது அவன் அருகே நெருங்கியதும் செதில்களை விரித்து தீ எரிவதுபோல ஒலியெழுப்பி நடுங்கியது. (Chapter: 45)

தொலைவிலிருந்து பார்க்கையில் யாரோ விட்டுச்சென்ற கம்பளி ஆடை போலத்தெரிந்த காடு நெருங்கியதும் குட்டை மரங்களான ஸாமியும் பிலுவும் கரிரும் அடர்ந்த சிறிய சோலையாக ஆகியது.  (Chapter: 45)

விண்மீன்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் சிறிய கனல் உருளைகளாக இருளில் மிதந்து நின்றன. (Chapter: 45)

பெரிய மண்பானைகளைக் கவிழ்த்து வைத்ததுபோலவோ மண்குவியல்கள் போலவோ தெரிந்தன அந்நகரின் அனைத்துக் கட்டடங்களும். (Chapter: 45)
நான்கு மூலைகளும் மழுங்கி வட்டமாக ஆன நீள்சதுர வடிவில் மண்நிறத்தில் இருந்த அவ்வறை தன் வெம்மையால் ஓர் இரைப்பைக்குள் இருப்பதுபோல உணரச்செய்தது.  (Chapter: 45)

******

முதுமையால் தளர்ந்த கீழ்த்தாடை பசு அசைபோடுவதுபோல அசைந்தது.  (Chapter: 46)

அவரது கண்விழிகள் மீன்கள் திளைக்கும் மலைச்சுனை போல சலனம் கொண்டது. (Chapter: 46)

“ஆம்” என்றார். “நெடுநாட்களாகின்றன… நான் அவனை வென்றேன். அல்லது நாங்கள் இருவரும் வெல்லவில்லை. அல்லது இருவருமே தோற்றோம்.. என்ன நடந்தது என்று என்னால் இப்போது சொல்லமுடியவில்லை” என்றார். (Chapter: 46)

நான் அஸ்தினபுரியின் பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் காளான் போலிருக்கிறார்கள். மெலிந்து வெளுத்து. வீரர்கள் ஒருபோதும் அந்த அந்தப்புரத்து குழிமுயல்களை காதலிக்க முடியாது. (Chapter: 46)

கோடைகால நதிபோல அவள் மெலிந்து வற்றி மறைந்தாள் என்று அஸ்தினபுரியின் சூதர்கள் பாடிக்கேட்டிருக்கிறேன். (Chapter: 46)

இரைவிழுங்கும் பாம்புபோல கண்கள் பிதுங்கி வாய் திறந்து பற்கள் தெரிய அதிர்ந்து கூவி நகைத்தார். (Chapter: 46)

******

தண்டகர் என்ற நாகசூதர் சொன்னார். “வீரரே, பருந்துகளுக்கு தொலைப்பார்வையையும் எலிகளுக்கு அண்மைப்பார்வையையும் அளித்த அன்னைநாகங்களை வாழ்த்துங்கள். பார்வையின் எல்லையை மீறியவர்கள் தங்களை இழக்கிறார்கள். அவர்கள் மீண்டுவருவதற்கு பாதைகள் இல்லை.” அவர் முன் அமர்ந்திருந்த பீஷ்மர் “திரும்புவதற்கு பாதையில்லாமல் பயணம் செய்பவர்களே வீரர்கள் எனப்படுகிறார்கள்” என்றார். “ஆம், அவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் பிறந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்” என்றார் தண்டகர். (Chapter: 47)

"... முடிவின்மையின் எளிமையை உணர்ந்தவனே விடுதலை பெறுகிறான். அந்த அறிவைத் தாளமுடியாதவன் பேதலிக்கிறான்…” தண்டகர் சொன்னார். “அதை நீங்கள் இந்த யானத்து நீரில் பார்க்கவேண்டியதில்லை. ஒரு கைப்பிடி கூழாங்கற்களில் காணலாம். ஒரு மரத்தின் இலைகளில் பார்க்கலாம். பார்க்கத்தெரிந்தவன் உள்ளங்கையை விரித்தே உணர்ந்துகொள்ளலாம்.” - (Chapter: 47)

இலவம்பஞ்சு விதையைச் சுமந்து செல்வதுபோல அவர்களின் தவம் அவர்களைக் கொண்டுசென்றது. (Chapter: 47)

கருவறை திறந்து வரும் குழந்தை போல, உறையிலிருந்து எழும் வாள்போல அவள் மெல்ல எழுந்துவந்தபோது முதியமன்னர் காமத்தின் உச்சிநுனியில் அவர் நின்றிருப்பதை உணர்ந்தார்.. (Chapter: 47)

பெண்ணில் பெண்ணுக்கு அப்பாலுள்ளவற்றைத் தேடுபவனின் காமம் நிறைவையே அறியாதது. (Chapter: 47)

வீரரே, ஆயிரம் பெண்களை ஒரு பெண்ணில் அடைபவனே காமத்தை அறிகிறான். (Chapter: 47)

வீரரே, உள்ளூர நிறைவின்மையை அறிபவர்கள் பொய்யாக அகந்தையை காட்டுவார்கள்” என்றார். (Chapter: 47)

******

நீர்வளம் மிக்க மண்ணில் பிறந்து வளர்ந்த எவருக்கும் பாலையைப் பார்க்கையில் வரும் எண்ணங்கள்தான் முதல்முறையாக அந்த வெற்றுநிலவிரிவைப் பார்க்கையில் அவருக்கும் எழுந்தன. கல்லில் செதுக்கப்பட்ட பறைவாத்தியத்தை பார்ப்பதுபோல. ஓவியத்தில் வரையப்பட்ட உணவைப்போல. பயனற்றது, உரையாட மறுப்பது, அணுகமுடியாதது. பிறிதொரு குலம் வணங்கும் கனியாத தெய்வம். (Chapter: 48)

பாலைநிலம் என்பது ஒரு மாபெரும் நிகழ்தகவு. இன்னும் நிகழாத கனவு. யுகங்களின் அமைதியுடன் காத்திருக்கும் ஒரு புதிய வாழ்வு. எழுந்து நின்று அந்தமண்ணைப் பார்த்தபோது திகைப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. உறங்கும் காடுகள். நுண்வடிவத் தாவரப்பெருவெளி. மண்மகளின் சுஷுப்தி. அந்தப் பொன்னிறமண் மீது கால்களை வைத்தபோது உள்ளங்கால் பதறியது. (Chapter: 48)

அவரை அணுகிய பாலைவன உடும்பு தன் சிறு கண்களை நீர்நிரம்பும் பளிங்குமணிக் குடுவைகள் போல இமைத்து கூர்ந்து நோக்கியபின் அவசரமில்லாமல் கடந்து சென்றது. (Chapter: 48)

பின்னர் அவர் அறிந்தார், பாலைநிலம் அவருக்கு
ள்தான் சுருண்டு சுருங்கி அடர்ந்து ஒரு ரசப்புள்ளியாக மாறிச் சென்று அமைகிறது என்று. எந்த இருளில் கண்களை மூடினாலும் பொன்னுருகிப் பரந்த பெருவெளியை பார்த்துவிடமுடியும். அங்கே துயிலும் விதைகளில் ஒரு விதைபோல சென்றுகொண்டிருக்கும் மண்மூடிய நெடியமனிதனை பார்த்துவிடமுடியும். தனிமையில் அவன் அடையும் சுதந்திரத்தை. அவன் முகத்தில் நிறைந்திருக்கும் புன்னகையை. (Chapter: 48)

பீஷ்மர் புன்னகைசெய்தபோது சூதர் சிரித்துக்கொண்டு ‘சுமைகளால் வடிவமைக்கப்பட்ட உடல்கொண்டவர்கள் பின்பு சுமைகளை இறக்கவே முடியாது’ என்றார். (Chapter: 48)

“ஆம், பாலைவனம் போல அன்னியர்களை நண்பர்களாக ஆக்கும் இடம் வேறில்லை” என்றார் பீஷ்மர். (Chapter: 48)

ஆம், எது மெய்யான நாடோ அதைத் தேடுகிறேன். எது நிலையான அரியணையோ அதை அடையவிரும்புகிறேன்” என்றார் பீஷ்மர். (Chapter: 48)
அவன் மூச்சுக்கும் மட்கிய மாமிசத்தின் வெம்மையான வாசனை இருந்தது. (Chapter: 48)

“ஆம். நானும் அவரும் உருவும் நிழலும்போல என்று நாகர் சொன்னார். அல்லது ஒன்றின் இரு நிழல்கள் போல. அவர் செய்ததைத்தான் நானும் செய்தேன்” என்றான் சிகண்டி . “அவரில்லாமல் நான் இல்லை. அவர் ஒரு நதி என்றால் அதில் இருந்து அள்ளி எடுக்கப்பட்ட ஒரு கை நீர்தான் நான்.” (Chapter: 48)

“பீஷ்மரைப் பார்த்ததும் உன் சினம் தணிந்துவிட்டதா?” என்று பீஷ்மர் கேட்டார். “ஆம், என் முகமாக அவரைப் பார்த்த அக்கணத்திலேயே நான் அவர்மேல் பேரன்புகொண்டுவிட்டேன். அவர் உடலில் ஒரு கரம் அல்லது விரல் மட்டுமே நான்” என்றான். “நாகர் என்னிடம் சொன்னார், அவரைச் சந்திக்கும் முதற்கணம் அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவேன் என்று. அவருக்கும் எனக்குமிடையே இருப்பது என் அன்னையின் பெருங்காதல் என்று அவர் சொன்னார்.” (Chapter: 48)

“நான் எதன்பொருட்டு உன்னை மாணவனாக ஏற்கவேண்டும்?” என்றார் பீஷ்மர். சிகண்டி உளவேகத்தால் சற்று கழுத்தை முன்னால் நீட்டி பன்றி உறுமும் ஒலியில் “என் அன்னைக்காக. அவள் நெஞ்சின் அழலுக்கு நீதி வேண்டுமென நீங்கள் நினைத்தால்…” என்றான். “உங்கள் நெஞ்சத்தைத் தொட்டு அங்கே வாழும் நீதிதேவனிடம் கேட்டு முடிவெடுங்கள் குருநாதரே!” பீஷ்மர் இருளுக்குள் இருள் போல நின்ற அவனைப் பார்த்துக்கொண்டு சில கணங்கள் நின்றார். தலையை அசைத்துக்கொண்டு “ஆம், நீ சொல்வதில் சாரமுள்ளது” என்றார். வானத்தை அண்ணாந்து நோக்கி துருவனைப் பார்த்தபின் “காசிநாட்டரசி அம்பையின் மைந்தனும் பாஞ்சால இளவரசனும் வழுவா நெறிகொண்டவனுமாகிய சிகண்டி எனும் உனக்கு நானறிந்தவற்றிலேயே நுண்ணிய போர்வித்தைகள் அனைத்தையும் இன்று கற்பிக்கிறேன். அவை மந்திரவடிவில் உள்ளன. உன் கற்பனையாலும் பயிற்சியாலும் அவற்றை கைவித்தையாக ஆக்கிக்கொள்ளமுடியும்” என்றார். சிகண்டி தலைவணங்கினான். “என்னை வணங்கி வடமீன் நோக்கி அமர்வாயாக!” என்றார் பீஷ்மர். சிகண்டி அவர் பாதங்களை வணங்கியபோது அவனுடைய புழுதிபடிந்த தலையில் கைவைத்து “வீரனே நீ உன் இலக்கை அடைவாய். அடைந்தபின் ஒருகணமும் வருந்தமாட்டாய். வீரர்களுக்குரிய விண்ணுலகையும் அடைவாய்” என்று வாழ்த்தினார். (Chapter: 48)

******

வெண்கல்கோபுரம் போல எழுந்து நின்றிருந்த மருதத்தின் வேர்கள் மேல் அமர்ந்திருந்த முதியவர் இருவர் கண்கள் சுருக்கி தங்கள் எண்ணங்களுக்குள் மூழ்கியிருந்தனர். (Chapter: 49)

அவன் காலடியில் பணிபவர்களை தன்னிலிருந்து கீழானவர்களாக எண்ணும் மனநிலையை கடந்துவிட்டிருந்தமையால் அவ்வணக்கங்களுக்கு முற்றிலும் உரிய முனிவனாக இருந்தான். அவர்களை சிரம்தொட்டு ஆசியளித்தான். (Chapter: 49)

அந்தக்கலத்தை தன் கையில் வாங்கிய ஆஸ்திகன் அதைத்திறந்து உள்ளே இருந்து கரிய தழல்போல கணத்தில் எழுந்த ராஜநாகத்தின் குழவியை அதே கணத்தில் கழுத்தைப்பற்றித் தூக்கினான். அதை தன் கழுத்தில் ஆரமாகப் போட்டுக்கொண்டு உள்ளே இருந்த ஊமைத்தைப்பூவின் சாறும் நாகவிஷமும் கலந்து சுடப்பட்ட மூன்று அப்பங்களையும் உண்டான். (Chapter: 49)

******

இருத்தல் என்னும் தட்சனும் பிறப்பு என்னும் பிரசூதியும் இணைந்தபோது இருட்டு கருக்கொண்டது.  (Chapter: 50)

உண்பதும் உண்ணப்படுவதுமாக இரு பேருடல்களும் ஒன்றை ஒன்று அறிந்தன. (Chapter: 50)

விலகும்போது தழுவலையும் தழுவும்போது விலகலையும் அறிந்தன. (Chapter: 50)

இரு பேருடல்களும் புயலைப் புயல் சந்தித்ததுபோல ஒன்றோடொன்று மோதின. இரு பாதாள இருள்நதிகள் முயங்கியது போலத் தழுவின. (Chapter: 50)

தன் அனைத்துச் சொற்களையும் சொல்லிமுடித்தபின்பு சொல்லில்லாமல் நின்ற தட்சன் சொல்லாக மாறாத தன் அகத்தை முடிவிலியென உணர்ந்து பெருமூச்சுவிட்டான். அவளோ அவனுடைய இறுதிச் சொற்களையும் கேட்டவளாக அப்பெருமூச்சை எதிரொலித்தாள். (Chapter: 50)

தட்சகிக்குள் வாழ்ந்த கோடானுகோடி நாகக்குழந்தைகள் மகிழ்ந்தெழுந்து அவள் உடலெங்கும் புளகமாக நிறைந்து குதூகலித்தன. (Chapter: 50)

******
Note: Source: http://www.jeyamohan.in. Author of these text: Writer Jeyamohan. Jeyamohan owns the copyright for his works. If he objects, this post will be removed.
 

No comments: