Friday, April 30, 2004

பெருகிப் பாய்ந்தோடும் நகைச்சுவை தீட்சண்யம்

ஆபிதின் எழுத்துகளை அறிவதற்கு முன் அவர் பெயர் தெரியவந்து மனதில் தங்கிப் போனதுக்கு சாரு நிவேதிதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் எழுத்துகளைச் சாரு அவர் அனுமதியின்றித் தன் பெயரில் வெளியிட்டுக் கொண்டார் என்கிற விஷயம் புகைந்து கொண்டிருந்தபோது - அதன் மூலம் - ஆபிதின் அறிமுகமானார். அது தொடர்பான ஆவணங்களிலும், கடிதங்களிலும் ஆபிதினைப் படித்ததே அவர் எழுத்துகளுடனான என் முதல் அறிமுகம். தன் எழுத்துகள் திருடப்பட்டுவிட்ட வேதனையில் இருக்கிற ஒருவரிடம்கூட நகைச்சுவை இயல்பாகவும் கட்டற்றும் பிரவகிக்க முடியும் என்று அவர் கடிதங்களும் அதில் தென்பட்ட சுய எள்ளலும் உணர்த்தின.

அதற்கப்புறம் ஆபிதின் எழுத்துகளைப் படிக்கவும் நண்பராகச் சிலகாலமாக அறியவும் திண்ணை உதவியது. ஆபிதினின் நகைச்சுவை ரெடிமேட் ஜோக்குகள் நகைச்சுவையோ, வார்த்தை விளையாட்டு நகைச்சுவையோ, எல்லைகள் பார்த்துப் பார்த்துப் பிரிக்கப்பட்டு நேரம் எடுத்துக் கொண்டு அழகாகத் தைக்கப்பட்ட வண்ணத்துணி போன்ற நகாசு வேலை நகைச்சுவையோ இல்லை. இவர் நகைச்சுவை எந்த வரையறைகளூக்கும் உட்படாத ஓர் ஒரிஜினல் நகைச்சுவை. பெருகிப் பாயும் காட்டாற்று வெள்ளம் போன்ற தன்னிச்சையான நகைச்சுவை அது. எந்த விருப்புக்கும் வெறுப்புக்கும் அது கட்டுப்பட்டு நிற்பதில்லை. அந்த வெள்ளத்தில் தன்னையே கூட மூழ்கடித்துக் கொண்டு - சுய எள்ளல் - செய்து கொள்ள ஆபிதின் தவறுவதில்லை. இப்படி யார் மீதும் கருணை காட்டாமல், உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசாமல் - வந்ததைப் போட்டுத் தாக்குவதாலேயே அவர் நகைச்சுவை வீரியம் பெற்று வித்தியாசமாக எழுந்து நிற்கிறது. ஆனால் - தமிழில் பெரும்பாலான வாசகர்களுக்கு ஆபிதின் யாரென்று தெரியாமல் இருக்கக் கூடும். அதுதான் இங்கே நிதர்சனம் என்பதால் அதைப் பற்றிப் புலம்பி ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.

சமீபத்தில் எனக்கு எழுதிய மடலொன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார். "சிவகுமார், எங்கே நீங்கள் எழுதுவதேயில்லை. மரத்தடியில் பிசியாகி விட்டீர்களா? வேறு பெயரில் எழுதுகிறீர்களா? பெயர் ஆபிதின் இல்லையே" என்று. தன் வாழ்வின் சோக நிகழ்ச்சியொன்றோடு இப்படி இயல்பாய் நகைச்சுவையைப் பிணைத்து எழுதுகிற ஆற்றல் எல்லாருக்கும் வந்துவிடாது. சுய எள்ளல் என்கிற பெயரில் தன்னையோ தான் சார்ந்தவர்களையோ தாழ்த்திக் கொள்ளாத ஆனால் அறிவுக் கூர்மையும் நையாண்டியும் மிகுந்த ஸ்டைல் ஆபிதினுடையது.

இந்தியாவில் - முக்கியமாகத் தமிழில் - தம் மதம் குறித்த கடுமையான விமர்சனத்தை முன்வைக்கத் தவறாத இந்துக்கள் நிறைய இருக்கிறார்கள். இதற்கு நிறைய உதாரணங்கள் காட்ட முடியும். பெரும்பான்மையான சமூகத்தைச் சார்ந்தவர்களாக அவர்கள் இருப்பதால் - அத்தகைய விமர்சனங்களையும் யாரும் எதிர்மறையாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், சிறுபான்மை சமூகத்தினரிடையே தம் மதத்தின் மூடப் பழக்கங்கள், குறைகள் குறித்துப் பெரிதாக விமர்சனங்கள் வருவதில்லை. வந்தாலும் அவற்றை இந்து மதத்தை இந்துக்கள் விமர்சிப்பது போல் பிற மதத்தவர்கள் தங்கள் மதத்தை அதிக எண்ணிக்கையில் விமர்சிப்பதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். முக்கியக் காரணம் - சிறுபான்மை சமூகத்தினராய் அவர்கள் ஏற்கனவே பாதுகாப்பற்று உணரக் கூடும். இச்சூழ்நிலையில் தம் மதத்தின் குறைகளைத் தானே பட்டியலிட்டால் மற்றவர்களுக்கு அது வாய்க்கரிசி போட்டதாக ஆகிவிடக் கூடும் என்று அமைதி காக்கலாம். அல்லது பிற காரணங்களும் இருக்கக் கூடும். அவற்றுள் போவதோ அவற்றை ஆராய்வதோ அப்படி இருப்பது சரியா தவறா என்று சொல்வதோ என் நோக்கமில்லை. ஆனால், அப்படி சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் தாட்சண்யம் காட்டாமல் தம் மதத்தின், தன் சமூகத்தின் குறைகளைச் சொல்பவர்களும் ஒத்துக் கொள்பவர்களும் பாராட்டத் தக்கவர்கள். அவர்களின் அறிவொழுக்கம் (Intellectual Honesty) தலை வணங்கத் தக்கது. அத்தகைய அறிவொழுக்கம் நிரம்பியவர் ஆபிதின் என்பதை அவர் எழுத்துகளின் மூலம் ஒருவர் அறிந்து கொள்ள முடியும்.

ஆபிதின் நாத்திகவாதி இல்லை. இறை நம்பிக்கை உடையவர். பிரார்த்தனைகளுடன் - அன்பு செலுத்துதலும் சுயவிமர்சனங்களுமே நிறைவான வாழ்க்கைக்கு வழிகோலும் என்று உணர்ந்தவர். எனக்கு எழுதிய மடலொன்றில் அவர் குறிப்பிட்டிருந்த பின்வரும் வாசகங்கள் இன்னும் மனதில் நிற்கின்றன. "இறைநம்பிக்கைக் கொண்ட என்னைப் பொறுத்தவரை மனிதன்தான் முக்கியமானவன். இறைநம்பிக்கையும் எப்படி என்றால் அது ஒரு நல்ல குட்டிச்சுவர்; விடைதெரியாத ஆயிரம் கேள்விகளுக்கு நாம் தயாரித்த மாயாஜால பதில்கள். அவ்வளவுதான். அத்தனையும் கைவிட்டுப் போனபிறகு நாம் சாய்ந்து கொள்ள உதவுகிற இந்தத் தூண்களில் அவனவன் மாறிமாறி காறித்துப்பும்போது கவலை வருவதில் ஏதோ எழுதுகிறேன். இதில் என் சமூகத்தை விமர்சிக்கிறேன் என்றால் மற்ற சமூகத்தவர்களை விமர்சிக்க எனக்கு அருகதையில்லை என்றுதான்." இது, இதுதான் ஆபீதின்.

ஆபிதின் கதைகள் கரடுமுரடானவை போலத் தோன்றினாலும் அதனுள் ஊடுருவும் மனிதநேயத்தையும் வாழ்வின் நிதர்சனத்தையும் ஒருவர் அறிந்து கொள்ள முடியும். அவர் நகைச்சுவையின் அடியாழத்தில் விமர்சனங்கள் இருக்கும். ஆனால், எவர் மீதும் வெறுப்பு இருக்காது. எந்த நேரத்தில் வரும் என்று எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் வெடித்து நம்மை திடுக்குறச் செய்துப் பின் மகிழ வைக்கும் நகைச்சுவை அவருடையது. சூபியிஸத்தை சூப் குடிப்பதுடன் முடிச்சுப் போட்டி சிரிக்கவைக்க அவரைத் தவிர யாரால் முடியும். அவர் கதைகள் பெரும்பாலும் சுயசரிதை பாணியிலும், தன்மையிலும் (First Person narration) அமைந்துள்ளன. இது தேர்ந்த வாசகருக்குக் குறையாகத் தெரியாவண்ணம் உள்ளடக்கம் மூலமும் வரிக்கு வரி நகைச்சுவை மூலமும் ஈடு செய்துவிடுபவர் ஆபிதின். அவர் எழுத்துகளில் வலிந்து திணிக்கப்பட்டவை என்றும் எதையும் சுலபமாகக் காட்டிவிட முடியாது. அவ்வளவு வேகமும் இயல்புமானது அது.

அவர் எழுத்துகளில் வெகுளித்தனம் நிறைந்த உண்மைகள் விரியும். ஆனால், அது முற்றும் உணர்ந்த ஞானிகளின் வெகுளித்தனம் போன்றது. தெரிந்தும் தெரியாததுபோல நடிக்கிற பாசாங்கில்லை அது. மனிதர்கள் இப்படித்தான் என்பதை உணர்ந்த சூட்சுமம் அது. இன்றைக்கு எழுத்தாளனாக அங்கீகரிக்கப்பட ஓர் எழுத்தாளன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை ஆபிதின் அறிந்து வைத்திருக்கிறார். ஆனால், அவற்றையெல்லாம் செய்து கிடைக்கிற அங்கீகாரம் வேண்டாமென்று சும்மா இருப்பதாலேயே அவர் என் மதிப்பில் இன்னும் உயர்ந்து நிற்கிறார்.

அவர் நகைச்சுவையினூடே தெரிந்த கலகக்குரல் என்னை முதலில் கவர்ந்தது. அதைப் பாராட்டி எழுதியபோது - தன் கலகம் செத்துவிட்டதாகவும் வல்லூறுகள் வட்டமிடும் வாழ்க்கையாக ஊர் ஆகிவிட்டதாகவும் அவர் எழுதியிருந்த நேர்மை எனக்குப் பிடித்துப் போனது.

ஆபிதின் போன்ற குரல்கள் எல்லா மொழியிலும், எல்லா சமூகத்திலும், எல்லா மதத்திலும் தேவை. அந்தக் குரல்கள் நம்மை நாமே அறிந்து கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் உதவும். ஆபிதினை இன்ன சமூகத்தைச் சார்ந்தவர் என்று கொள்வதும்கூட ஓர் அடையாளத்துக்குத்தான். அவர் மனித குலத்துக்கான எழுத்தாளர். ஆபிதின் போன்றோர் தொடர்ந்து எழுத வேண்டும். பயமற்ற குரல்கள் எழவும் தொடரவும் அவை உதவும்.

ராணுவ அத்துமீறல்கள்

எந்த ராணுவமும் நல்ல ராணுவம் அல்ல - No army is good army - என்று சொல்வார்கள். ஆதிக்கம் செலுத்துகிற அல்லது அதிகாரம் கொண்ட ராணுவம் செய்கிற அத்துமீறல்கள், கொடுமைகள் ஆகியவை குறித்துத் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருப்பது இந்த நிஜத்தை உணர்த்தும். ஈராக் சிறைச்சாலையில் கைதிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து CBS தொலைகாட்சி தன் 60 Minutes நிகழ்ச்சியில் காட்டிய புகைப்படங்கள் ஈராக்கில் அதிகாரம் செலுத்துகிற அமெரிக்கர்களையும் ஆங்கிலேயர்களையும் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளன. தவறு செய்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்தின் சிறப்பாகும். மேலும் இத்தகைய குற்றங்கள் நிகழாமல் நடவடிக்கைகள் தடுக்குமோ தடுக்காதோ ஆனால் ஜனநாயகத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணமாக ராணுவ வீரர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அமையும்.

சமீபத்தில் இணையத்தில் நடந்த விவாதங்களின்போது இந்தியாவில் மனித உரிமை மீறப்படவில்லையா என்கிற கேள்வி எழுப்பப்பட்டு அதன் அடிப்படையில் பயங்கரவாதக் குழுக்கள் செய்கிற அத்துமீறல்கள் படுகொலைகள் ஆகியவற்றை விடுதலைக்காக என்கிற நோக்கத்துக்காகப் பொறுத்துக் கொள்ளலாம் என்று "அறிவுபூர்வமான" வாதங்கள் வைக்கப்பட்டன. இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை அட்டூழியங்கள் செய்யவில்லையா என்றும் கேள்வி எழுப்பப் பட்டது. குஜராத்தில் நடந்தது தெரியாதா என்றும் கேட்டார்கள். எந்த நாட்டின் அரசாங்கமும் ராணுவமும் செய்கிற அட்டூழியங்களைப் பத்திரிகைகள் தைரியமாக அம்பலப்படுத்த இயலும். பாதிக்கப்பட்டவர்களும் நீதி தேடிக் கொள்ளும் வழிகள் உள்ளன. நீதியும் பரிகாரமும் தேட உதவ சட்டங்கள் இருக்கின்றன. உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து சர்வதேச நீதிமன்றம் வரையும் மிலிட்டிரி டிரிபியூனல்வரையும் பல மார்க்கங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் பின் லேடனோ மற்றும் விடுதலைக்காகக் கஞ்சாவும் போதைப் பொருளூம் கடத்துகிற, தற்கொலைப் படைகள் நிறுவி அப்பாவி மனிதரைக் கொல்கிற இயக்கங்களும் செய்கிற அத்துமீறல்களையும் அரசியல் படுகொலைகளையும் எதிர்த்து எந்தக் கேள்வியையும் யாரும் கேட்க இயலாது; எந்த நீதியையும் பெற்றுவிட இயலாது. இதை நம்மில் பலர் அறிந்திருந்தும் அறியாதவர்போல் அபிமானத்தாலோ கட்டாயத்தாலோ கண்மூடித்தனமாகவோ நடிக்கிறோம்.

இலங்கையில் இந்திய அமைதி காக்கும்படை அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்க கூடும் என்பதில் சந்தேகமில்லை. எல்லா ராணுவங்களைப் போலவும் இந்திய ராணுவமும் ராணுவம் தானே. இந்திய அமைதி காக்கும்படையின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் பரிகாரமும் நிச்சயம் சட்டபூர்வமான வழிகள் மூலம் கிடைக்க வேண்டும். அதற்காக எந்த அளவுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால், அப்படிப்பட்ட அத்துமீறல்கள் நடந்தன என்று அடிக்கடிச் சொல்பவர்கள் - அவை குறித்து ஏதும் சட்டரீதியான புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவா, அத்தகைய புகார்கள் என்ன ஆயின என்பதைப் பற்றி ஏதும் சொல்வதில்லை. புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையென்றால், அது கண்டிக்கப்படத்தக்கது. ஆனால், புகார்கள் ஏதும் கொடுக்காமல் அல்லது பத்திரிகைகளில் ஆதாரபூர்வமான செய்திகள் வெளிவராமல் வெறுமனே இந்திய அமைதி காக்கும்படை அத்துமீறலில் ஈடுபட்டது என்று சொல்வது அதன் உண்மையை மற்றவர்கள் சந்தேகிக்க வழிவகுத்துவிடக் கூடும். இதை எழுதியதன் மூலம் இந்திய ராணுவம் புனிதமானது என்று நான் சொல்ல வரவில்லை. எந்த ராணுவமும் செய்த அட்டூழியங்களுக்குப் பதிலாகக் கூட பயங்கரவாத இயக்கங்களையோ அவற்றின் செயல்பாடுகளையோ விடுதலை என்ற பெயரால் கூட ஆதரிக்க இயலாது என்பதே என் நிலை.

உதாரணமாக, ராஜீவ் காந்தி கொலை போன்ற ஒரு படுகொலை மேலைநாடுகளில் நிகழ்த்தப்பட்டிருந்தால் - அதற்குக் காரணமான இயக்கம் ராணுவரீதியான பதிலடியால் வேரறுக்கப்பட்டிருக்கும். தன்னுடைய குடிமக்கள் பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டாலே நாடுகள் ராணுவ ரீதியான பதிலடிகள் தருவது வழக்கமாகிப் போய்விட்டன. இஸ்ரேலும் அமெரிக்காவும் அதைத்தான் செய்கின்றன. காரணமான இயக்கங்களின் நோக்கங்கள் புனிதமானவையா என்றெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. விடுதலையை பயங்கரவாத்தின் வழியாகவும் வன்முறை வழியாகவும் யாரும் ஆதரிப்பதில்லை. பாலஸ்தீனத்திலிருந்து, ஆப்கன்கானிஸ்தான், ஈராக் வரை ராணுவ பதிலடிகளையே மக்கள் பார்த்து வருகிறார்கள். சிலநேரங்களில் இவை அவசியமானதாகவும் ஆகிவிடுகிறது. ஆனால், இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வின்பால் இந்தியாவுக்கு இருக்கிற அக்கறையின் காரணத்தினாலும் கூடவே, ராஜீவ் காந்தி படுகொலைக்கு இந்தியா ராணுவ ரீதியான பதிலடி தராமல் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்று அனைவரும் அறிவர். இதுதான் ஜனநாயகத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் உள்ள வித்தியாசம் என்று நான் நம்புகிறேன். ஜனநாயகத்தின் குறைபாடுகளைக் கண்டறிய முடியும்; களைந்து கொள்ள முடியும். பயங்கரவாதமோ தன் குறைபாடுகளை மறைத்துக் கொள்ளவும் குறுகிய நோக்கங்களுக்காகவும் மற்றவரைக் களையெடுக்கும்.

ஈராக் சிறையில் வாடுபவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மனிதாபிமானம் உள்ளவர் செய்யக் கூடியதல்ல. அமெரிக்காவும் உலகமும் ஏற்றுக் கொண்டிருக்கிற சட்டங்களின் வழியாக தவறிழைத்தவர்கள் வெளிக்கொணரப்பட்டதும், தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பப்படுவதுமே ஜனநாயகத்தின் சிறப்பு என்று மேற்கண்ட உதாரணத்தால் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

மேலும் CBS TV இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கு முன்னர் - அது பற்றி அமெரிக்க அரசாங்கத்துக்குத் தெரிவித்ததாகவும் - ஈராக்கில் தற்போது நிகழ்ந்து வரும் கடுமையான சண்டைகளால் - இதைச் சற்றுத் தாமதமாக ஒளிபரப்பும்படி அமெரிக்க அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க - இருவாரங்கள் தாமதமாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டிருக்கிறது என்றும் அறிகிறோம். தன் நாட்டின் ராணுவம் செய்த அத்துமீறல்களையும் கூட ஒளிபரப்ப வேண்டாம் என்று தடுக்கிற அதிகாரம் கையிலிருந்தும் அதைப் பயன்படுத்தாமல் அனுமதித்ததும் ஜனநாயகத்தின் ஓர் அம்சமே. இதையே பின் லேடனும் அல்லது விடுதலைக்காகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிற பிற இயக்கங்களூம் செய்திருப்பார்களா என்ற கேள்விக்கான பதில் நாமறிந்ததே.

எதற்காக இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன் அமெரிக்க அரசாங்கத்திடம் CBS தொலைகாட்சி தகவல் சொல்லியது என்பது என் கேள்வி. இத்தகவல் சொல்லப்பட்டது நாகரீகத்துக்காகவா (Courtesy) அல்லது அப்படி ஏதும் சட்டரீதியான நிர்ப்பந்தம் தொலைகாட்சிகளூக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

இந்திய அமைதிகாக்கும் படை செய்த அட்டூழியங்கள் குறித்து வருந்துகிற நண்பர்கள் (வருந்த வேண்டிய விஷயம்தான் அது) - மற்றவர்கள் வருந்துவதில்லை என்று குற்றம் சொல்கிற நண்பர்கள் - ஈராக் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து வலிமையாகக் குரல் கொடுத்து தங்கள் நடுநிலைமையைப் பறை சாற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

Thursday, April 29, 2004

விடுப்பு விண்ணப்பம்

வசந்தகாலத்தில் வருகிற ஒவ்வாமைக்கு (Spring time allergies) என்னை அதிகம் பிடித்துப் போய் விட்டதால் - எரிகிற கண்களை தேய்த்துக் கொண்டும், மூக்கை உறிஞ்சிக் கொண்டும், தொண்டையைக் கனைத்துக் கொண்டும், மூக்கடைத்துக் கொண்டும் - கனமழை பெய்து Pollenஐ அடித்துக் கொண்டு போகக் கடவது என்று வேண்டிக் கொண்டும் - இருக்கிறேன். எனவே, தினமும் வலைப்பதியாமல் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பதிவது என்று தற்காலிகமாக முடிவு.

Sunday, April 25, 2004

பார்ன்ஸ் & நோபள் பரவசம்

என் குழந்தைகளின் ஆர்வத்திற்கிணங்க நான் இப்போது அடிக்கடி செல்கிற இடம் பார்ன்ஸ் & நோபள் (Barnes & Noble) புத்தகக் கடை. இங்கே புத்தகக் கடைகள் இன்னுமோர் நூல் நிலையமாக (library) செயல்பட்டு உதவி புரிகின்றன. கடைக்குள் சென்று உங்களுக்குப் பிடித்தப் புத்தகத்தைத் தேடி எடுத்து -எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றால் தேடி எடுத்துத் தந்து உதவுகிறார்கள் - எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்கேயே படித்துவிட்டு வரலாம். நேற்றுப் புதிதாய் வந்த புத்தகத்திலிருந்து எந்தப் புத்தகத்தை/சஞ்சிகையை வேண்டுமானாலும் இப்படிப் படிக்கலாம். குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம். மாணவர்களும் ஆய்வாளர்களும் நோட்டுப் புத்தகத்துடனும் லாப் டாப் கம்ப்யூட்டர்களுடனும் உட்கார்ந்து மும்முரமாய்ப் படித்துக் கொண்டிருப்பதை எந்நேரமும் காணலாம். எந்தத் துறையிலும் புதிதாக வந்திருக்கிற புத்தகங்கள் பொது நூல் நிலையங்களுக்கு வர சில நாள்கள், வாரங்கள் ஆகும். ஆனால், அத்தகைய புத்தகங்களைக் கூட இங்கே அமர்ந்து இலவசமாகப் படிக்க இயலும் என்பதால் இது நூல் நிலையத்தைவிட சிறந்தது.

உள்ளேயே காபி மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிட மிகவும் பிரபலமான Starbucks காபிக் கடை இருக்கிறது. காபியையும் ஸ்நாக்ஸையும் படிக்கிற இடத்திற்கே எடுத்துச் சென்றும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கென்று தனிப் பிரிவும் இருக்கிறது. அங்கே குழந்தைகள் அமர்ந்து படிக்கலாம். பெற்றோர்களும் குழந்தைகளுக்குப் படித்துக் காட்டலாம். இந்தப் புத்தகக் கடையில் உறுப்பினர் ஆனால், வாங்குகிற புத்தகங்களில் பத்து சதவீதம் கழிவும், காபி கடையில் வாங்குகிற பதார்த்தங்களுக்குப் பத்து சதவீதம் கழிவும் உண்டு. மேலும் அவ்வப்போது சிறப்புச் சலுகைகளும் உண்டு. உறுப்பினர் கட்டணம் என்று வருடத்திற்கு 25 டாலர்கள் வசூலிக்கிறார்கள். உறுப்பினர் அல்லாதவரும் தாராளமாக எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். அதிலே பேதங்கள் ஏதுமில்லை. வசந்த கோடைக்காலங்களில் ஏழுநாள்களும் காலை 9 மணிமுதல் இரவு 11 மணிவரை திறந்திருக்கிறார்கள். குளிர்காலத்தில் சற்று சீக்கிரம் மூடிவிடுகிறார்கள். எவ்வளவு நேரம் கடை திறந்திருக்கும் என்கிற விவரம் ஊருக்கு ஊர் மாறுபடும் என்று நம்புகிறேன். தேவையானப் புத்தகங்களைத் தேடி எடுத்துத் தரவும், படித்துவிட்டு வைத்துவிடுகிற புத்தகங்களை எடுத்து மீண்டும் அடுக்கவும் முகம் சுளிக்காத பணியாளர்கள் இருக்கிறார்கள். நடக்க ஆரம்பித்திருக்கிற கைக்குழந்தைக்குப் படித்துக் காட்டுகிற புத்தகத்திலிருந்து எல்லா வயதினருக்குமான புத்தகங்களும் சஞ்சிகைகளும், எல்லாத் துறையினருக்குமான புத்தகங்களும் சஞ்சிகைகளும் துறைவாரியாகப் பெயர் போட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். புத்தகங்கள் மட்டுமில்லாமல் ஆடியோ கேசட்டுகள், சிடிக்கள் முதலியவையும் கிடைக்கும்.

அடிக்கடி குழந்தைகளுக்கு வாசித்தல் மற்றும் இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். கடந்த வெள்ளியன்று இரவு கூட "Indo American Poetic Society" சார்பில் தேசியக் கவிதை மாதம் எங்களுக்கு அருகிலிருந்த ஒரு பார்ன்ஸ் & நோபள் புத்தகக் கடையில் கொண்டாடப்பட்டது. "சர்வபாஷா சரஸ்வதி" என்று ஹிந்தியில் எழுதிய வாசகத்தினை மேடையில் வைத்து, சரஸ்வதி தேவியும் நியூயார்க் சுதந்திரத் தேவி சிலையும் இருக்கிற புகைப்படத்துக்கு மாலை போட்டு மரியாதை செய்து அவரவர் மொழியில் கவிதை வாசித்தார்கள். குஜராத்தில் இருந்து வந்திருந்த ஒரு நகைச்சுவை எழுத்தாளர் சிறப்புரையாற்றினார்; அவர் கவிதையை வாசித்தும் காட்டினார். கவிஞர்கள் தம் கவிதைகளை எந்த இந்திய மொழியில் அல்லது ஆங்கிலத்தில் வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்று சொன்னார்கள். வந்தவர்கள் பெரும்பாலும் குஜராத்திக் கவிதைகளையும் அவற்றின் ஆங்கில மொழியாக்கங்களையும் வாசித்தார்கள். நானும் ஆசாரகீனனும் அடுத்தமுறை வரும்போது தமிழை அறிமுகப்படுத்தி AK ராமானுஜத்தின் Hyms for the Drowning-ல் இருந்து சில கவிதைகளையோ அல்லது ஞானக்கூத்தன் போன்ற கவிஞர்களின் சில கவிதைகளை மொழிபெயர்த்தோ, வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் புத்தகக் கடையினுள் நுழைந்து அங்கிருக்கிறப் புத்தகங்களைப் பார்க்கிற பரவசத்துக்கும் ஆனந்தத்துக்கும் எல்லையில்லை. பரவசத்துடன் நமக்குள் இனம்புரியாத எளிமையும் ஊடுருவும். நயாகரா நீர் வீழ்ச்சியின் பிரம்மாண்டத்தையும் சத்தத்தையும் அருகில் நின்றுப் பார்த்துக் கேட்ட போதும், அட்லாண்டிக் மகாசமுத்திரத்தின் நடுவில் கையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு நின்று ஆழ்கடலின் அமைதியை உள்வாங்கிக் கொண்ட போதும் என்னுள் நான் கண்டுகொண்ட பரவசமும் எளிமையும் அவை. எத்தனை வகைகள், எவ்வளவு புத்தகங்கள். இன்னும் படிக்க வேண்டியதும் கற்க வேண்டியதும் எவ்வளவு எவ்வளவு!

வாரவிடுமுறை வந்துவிட்டாலே இப்போதெல்லாம் குழந்தைகள் பார்ன்ஸ் & நோபள் என்று ராகமாகப் பாடிக் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால் பெரும்பாலும் வார விடுமுறையின் ஒரு நாளில் பாதியையாவது இங்கே பயனுள்ள முறையில் செலவிடுகிறோம். குடும்பமே சேர்ந்து படிப்பதும் ஒரு வித்தியாசமான அனுபவம்தான்.

அமெரிக்காவை முதலாளித்துவ நாடு என்றும் மோசமான நாடு என்றும் சொல்கிறார்கள். இருக்கலாம். ஆனாலும், இங்கேயும் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளன. இந்தப் புத்தகக் கடை நடத்துபவர்கள் இலவசமாக அனைவரையும் படிக்க அனுமதிப்பதால், புத்தகம் வியாபாரமாகாமல் தேங்கி விடும் என்று நினைக்காமல், யார் வேண்டுமானாலும் எந்தப் புத்தகத்தை/சஞ்சிகையை வேண்டுமானாலும் எடுத்து எவ்வளவு நேரமானாலும் படிக்கலாம் என்று அனுமதித்திருப்பது முதலாளித்துவ தொழில்முனைவோரின் சிறப்பே.

உதாரணமாக, என்னையே எடுத்துக் கொண்டால் - நான் இங்கே ஆண்டு உறுப்பினன். இங்கே இலவசமாகப் படிக்கக் கிடைப்பதனால் உண்டாகியிருக்கிற அபிமானத்தால் என் புத்தகங்களை முடிந்தவரை இங்கேயே வாங்குகிறேன் - சில நேரங்களில் ஓரிரு டாலர்கள் போட்டியாளர்களை விட விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று உவந்து தருகிறேன். கெண்டையைப் போட்டு விறால் மீன் (நண்பர் ராஜா, அவர்கள் ஊர்ப் பக்கம் கொடுவா மீன் என்று சொல்வார்கள் என்கிறார்) பிடிப்பது என்று எங்கள் ஊர்ப் பக்கம் சொல்வார்கள். அந்த மாதிரி, தன் புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் அனைவரையும் இலவசமாகப் படிக்க அழைத்து இத்தகைய வியாபாரங்கள் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன.

இந்த வாசிப்பு அனுபவத்தை நண்பர்களுடனும் செய்யலாம். என்ன படிக்கிறோம் என்று நமக்குள் விவாதித்துக் கொள்ள இயலும். பெரும்பாலான நேரங்களில் நண்பர் ஆசாரகீனனும் நானும் அருகருகே அமர்ந்து படித்தும் பேசியும் கொண்டிருப்பது நல்ல அனுபவம். எந்தப் புத்தகம் எப்படி என்று பரஸ்பரம் உடனடியாகப் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. ஆசாரகீனன் அவர் தொழில் சார்ந்த ஒரு புத்தகம், அவர் ஆர்வம் சார்ந்த ஒரு புத்தகம் என்று மாற்றி மாற்றிப் படிப்பார். எனக்குத் தொழில் புரியும் இடத்தை விட்டு நீங்கியதுமே தொழில் மறந்துவிடும். அடுத்த முறை வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குத் தேவையென்றால் மட்டுமே தொழில் சார்ந்த புத்தகங்கள் பக்கம் பார்வை செலுத்துவேன். மற்ற நேரங்களில் ஆர்வம் சார்ந்த புத்தகங்கள்தான். ஒவ்வொரு முறையும் அந்தக் கடையை விட்டு வெளியே வரும்போதும் குழந்தைகள் தாங்கள் படித்தப் புத்தகங்கள் அல்லது பக்கங்களின் எண்ணிக்கையை உற்சாகமாகச் சொல்லும்போது என் மனமும் எவ்வளவு படித்தோம் என்று அசைபோட்டுக் கொள்ளும். அப்போது கிடைக்கிற மனதிருப்தி அபரிதமானது.

தற்போது படித்துக் கொண்டிருக்கிற புத்தகம் Dan Brown எழுதிய The Da Vinci Code. ஏறக்குறைய 450 பக்கங்கள். இந்தப் புத்தகத்தின் வரலாற்றுப் பின்புலம் எனக்கு மிகவும் ஆர்வமளிக்கிறது. கத்தோலிக்கர்களைப் பற்றியும், போப்பைப் பற்றியுமான எதிர்மறையான வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகம் இது. அடிப்படையில் வரலாற்றுப் புன்புலத்துடன் கூடிய திரில்லர்தான். இரண்டு முறை சென்று அங்கேயே படித்தும் 150 பக்கங்கள் வரை மட்டுமே படிக்க முடிந்தது. நான் மிகவும் மெதுவாகப் படிப்பவன். எனவே, புத்தகத்தை வாங்கி விட்டேன். படித்து முடித்ததும் எழுதுகிறேன். இந்த மாதிரி ஒரு புத்தகத்தை இந்து மதம் குறித்தோ, தமிழ்ச் சைவர்கள் சமணர்களைக் கழுவேற்றியது குறித்தோ எழுத இயலுமா என்பது படிக்கும்போதே என் மனதுள் ஓடிக் கொண்டிருக்கிற கேள்வி. சுஜாதாவின் கதை மாந்தர் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தவர் என்கிற பொருள்பட்டதுமே, எதிர்ப்புகள் தெரிவித்து அந்தக் கதையை மேலும் தொடர விடாமல் நிறுத்திய சமூகம் தமிழ்ச் சமூகம் என்பதும் நினைவுக்கு வருகிறது. உணர்வுவயப்படாமல் விஷயங்களை எதிர்கொள்வதிலும் ஏற்றுக் கொள்வதிலும் இந்தியர்களும் தமிழர்களும் கடக்க வேண்டிய தொலைவு அதிகம்தான்.

தொல்லைகாட்சித் தொடர்கள்

தமிழ்த் தொலைகாட்சிகளின் மெகாசீரியல்கள் தமிழர்களின் ஆயுளை விழுங்கிக் கொண்டிருக்கின்றன எனலாம். சன் டிவியில் சீரியல்கள் பக்கமே எங்கள் வீட்டில் யாரும் போவதில்லை. வேறு சில நிகழ்ச்சிகளை என் குடும்பத்தினரும் நானும் தொடர்ந்து இல்லாமல் அவ்வப்போது பார்ப்பதுண்டு. ஆனாலும், தமிழ் தொலைகாட்சித் தொடர்கள் இங்கும் பிரபலம்தான். அதைப் பார்த்துவிட்டுத் தூங்கப் போகிறவர்களையும், பார்க்க முடியாவிட்டால் ரெகார்ட் செய்து பின்னர் பார்ப்பவர்களையும் நான் அறிவேன். தமிழர்கள் சந்திக்கிற இடங்களில் பேசப்படுகிற விஷயங்களில் தமிழ்த் தொலைகாட்சித் தொடர்களும் ஒன்று. பீட்ஸாவும் அமெரிக்க கலாசாரமும் தமிழ்நாட்டைக் கலக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்குப் பதிலாக தமிழ்த் தொலைகாட்சி அமெரிக்காவில் மெகாசீரியல்களைப் பரப்பிப் பழிதீர்த்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். எப்போதாவது சேனல்களை மாற்றும்போதோ என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம் என்று சில நிமிடங்கள் பார்க்கும்போதோ கிடைக்கிற தொலைகாட்சித் தொடர்கள் படு திராபையாக உள்ளன. நடிப்பு, செட், கதை, வசனம், இயக்கம் அனைத்தும் மேடை நாடகங்களின் தொனியிலும், அரைவேக்காட்டுத்தனமாகவும் இருக்கின்றன. பக்தி மணம் கமழவிட்டு பார்ப்பவரை சாமியாட வைக்கிற சீரியல்கள் இன்னமும் வருகின்றன. மணல் பரப்பில் தொலைந்துபோன குண்டுமணி போல ஓரிரண்டு நல்ல அல்லது சுமாரான தொடர்களும் இருக்கக் கூடும். என்னுடைய அதிர்ஷ்டம் என் பார்வையில் அவை இதுவரை சிக்கவில்லை.

சில பிற இந்திய மொழித் தொலைகாட்சிகள் அமெரிக்காவில் வாழ்கிற அம்மொழி பேசுபவர்க்கென்று தனியே நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்புகின்றன. சன் டிவி இதுவரை தமிழ்நாட்டில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளையே அப்படியே தருகிறது. இது இங்கே இருக்கிற தமிழர்களுக்குப் பெரிய குறையாக இன்னும் தெரியவில்லை எனலாம். சினிமா தொடர்பான ஒளிபரப்புகள் அல்லது மெகாசீரியல்கள் இரண்டும் இருக்கும் போது வேறு என்ன வித்தியாசமாக வேண்டும் தமிழர்களுக்கு. இடையிடையே சில நல்ல நிகழ்ச்சிகளும் வருகின்றன. எல்லாமே மோசமாக எங்கும் இருந்துவிட முடியாது அல்லவா?

தொலைகாட்சித் தொடர்களைப் பார்க்கும்போது - அமெரிக்கத் தொலைகாட்சித் தொடர்களில் இருந்து நம்மவர்கள் கற்றுக் கொள்வதற்கு நிறையவே இருக்கிறது என்று தோன்றுகிறது. கதை மாந்தரை அமெரிக்காவில் படிப்பவர்கள், பணிபுரிபவர்கள் என்று காட்டுவதில் மட்டுமே திருப்தியடைந்து விடுகிறார்கள் நம் திரைப்பட மற்றும் தொடர் இயக்குனர்கள். பீட்ஸா, ஷாப்பிங் மால், அமெரிக்க பிராண்ட் உடைகள், இன்னபிற அமெரிக்க நவநாகரீகங்கள் என்று அமெரிக்கர்களாய் வாழ விரும்புகிற தமிழ்ச் சமூகம் (இதில் என்னைப் பொருத்தவரை தவறேதுமில்லை!) இங்கே இருக்கிற sitcom-களிலிருந்து உருப்படியாகக் கற்றுக் கொண்டு தொலைகாட்சித் தொடர்களின் தரத்தை உயர்த்தலாம்.

1970க்குப் பிறகு அமெரிக்கத் தொலைகாட்சித் தொடர்களில் எதிர்பார்க்கப்படுவன என்று ஒரு பட்டியலைப் படித்தேன். அவை, 1. தொடர்கள் நகைச்சுவை நிரம்பியவாக மட்டும் இல்லாமல், கருத்தளவில் முக்கியமானவையாகவும் இருக்க வேண்டும். 2. சர்ச்சைக்குரிய பொருளைப் பற்றிப் பேச வேண்டும். 3. சமூக முன்னேற்றத்தை - வாழ்க்கையில், கலாசாரத்தில், நாகரீகத்தில், மதிப்பீடுகளில், பொருளாதாரத்தில், அரசியலில் என்று பலவகையான நடைமுறை சமூகப் போக்குகளை - ஆவணப்படுத்துவதாக இருக்க வேண்டும். 4. அவற்றில் அங்கதம் (sattire) இருக்க வேண்டும். 5. அவற்றிற்கு ஒரு நோக்கம் (mission) இருக்க வேண்டும் - எதைப் பற்றியாவது அவை பேச வேண்டும் - அல்லது எதைப்பற்றியும் பேசப்போவதில்லை என்கிற ஒன்றைப் பற்றியாவது பேச வேண்டும் - Seinfeld போல.

அமெரிக்கத் தொலைகாட்சித் தொடர்களில் எதிர்பார்க்கப்படுகிற விஷயங்களை தொலைகாட்சிகளும் அவற்றின் தொடர் இயக்குனர்களும் இந்த அளவிற்கு அறிந்து வைத்திருந்தது படிக்கும்போது ஆச்சரியமளிக்கவில்லை. பார்ப்பவர்களை ஓ போட்டு ரசிக்க வைத்து பணம் பண்ணுகிற நேர்த்தியான வழிகளை அமெரிக்கத் தொழில்முனைவோர்க்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. தமிழ் தொலைகாட்சித் தொடர்களுக்கு இந்த மாதிரி ஏதும் பொதுவான கூறுகள் இருக்கின்றனவா அல்லது இருக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஆராய வேண்டும். இல்லையென்றால், குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு "உலகத் தொலைகாட்சிகளில் முதன்முறையாக" என்று கத்திக் கொண்டு, நம்மை நாமே தட்டிப் பாராட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

Saturday, April 24, 2004

எழுத்தாளர் கந்தர்வன் மறைவு

திரு.கந்தர்வன் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். இந்தச் செய்தியை மின்மடல் மூலம் தெரியப்படுத்திய ஜெயமோகனுக்கு நன்றி. கந்தர்வன் குறித்து ஜெயமோகன் எழுதிய குறிப்புகளைக் கீழே காணலாம்.

"முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவராக இருந்த கந்தர்வன் 23-4-04 அ·ன்று விடிகாலையில் அவரது மகள் வீட்டில் மாரடைப்பில் காலமானார். ஏற்கனவே நோயுற்று சிகிழ்ச்சையில் இருந்தபோதும்கூட தொடர்ந்து இலக்கியக்கூட்டங்களில் கலந்துகொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்.

அரசு ஊழியர் சங்கத்தில் தீவிரமாகப் பணியார்றி பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு பழிவாங்கல்களுக்கு ஆளான கந்தர்வனின் வாழ்வின் பெரும்பகுதி தொழிற்சங்கவாதத்திலேயே கழிந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கியமான வழிகாட்டிகளில் ஒருவராக இருந்தார்.

கந்தர்வன் அதிகமும் சிறுகதைகளே எழுதினார். குறைவாக கவிதைகள். பூவுக்கு கீழே , ஒவ்வொரு கல்லாய் ஆகிய கதைத்தொகுப்புகள் பரவலாகக் கவனிக்கப்பட்டவை. அவரது இறுதிக் காலத்தில் எழுதிய கதைகள் தமிழ்ச்சிறுகதைவரலாற்றில் அவருக்கு முக்கிய இடத்தை உருவாக்கியளிப்பவை.

- ஜெயமோகன்"

Friday, April 23, 2004

பதில்களும் பார்வைகளும்

என் மகளுக்கு மூன்று வயது ஆகிறது. வாரம் இரண்டு நாள் நாளுக்கு இரண்டரை மணி வீதம் Pre-school போகிறார். அங்கே பெரிதாக ஒன்றும் சொல்லித் தந்துவிடுவதில்லை. விளையாட்டுகளிலும், வண்ணம் தீட்டுவதிலும் மகிழ்கிறார். ஆனாலும், பகிர்தல், பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல், கூடி விளையாடுதல், மரியாதையும் பண்புகளும் கற்றல் என்று சமூகப் பழக்கங்களைப் பயில்வதற்கு அது மிகவும் உதவுகிறது. ஆனாலும், வீட்டில் அண்ணா, அம்மா உதவியோடு ABCD, One Two Three எல்லாம் கற்றுக் கொண்டாயிற்று. நான் ஹன்ட்ரட் என்று சொன்னபோது, அவர் "ஹன்ட்ரட் இல்லை டாடி, சே ஒன் அன்ட்ரட்" என்று திருத்தியதைக் கவிதையிலும் சொல்லியிருக்கிறேன். பேனா எடுத்தவர் கை சும்மா இருக்காது என்பதுபோல கற்றுக் கொள்கிற மனம் சும்மா இருக்குமா? வீடுகளின் சுவர்களிலிருந்து பார்க்கிற இடமெல்லாம் என் மகள் தன் கைவண்ணத்தைக் காட்டுவார். ABCD, எண்கள், சித்திரம் என்று மனம்போன போக்கில் எழுதுவார். என் மகன் சிறுவயதில் இதையே செய்து வாடகை வீட்டைக் காலி செய்யும்போது வெள்ளையடிக்க தண்டம் ஏதும் அழ வேண்டுமோ என்று என் மனைவி வருந்தியதுண்டு. நான் பொதுவாக எதுவும் சொல்வதில்லை. எழுதப் படிக்க மாட்டேன் என்று சொல்லாமல், ஏதோ ஆர்வத்துடன் செய்து கொண்டிருக்கிறார்களே என்று விட்டுவிடுவதுண்டு. ஆனாலும், பழைய வீட்டைக் காலி செய்யும்போது பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை என்பதால், இப்போது தைரியத்தில் என் மகள் வீட்டுச் சுவர்களில் வரைந்து விளையாடுவதை அதிகம் கண்டு கொள்வதில்லை. அப்படியே என் மனைவி எவ்வளவு முறை சொன்னாலும், அவர் கவனிக்காத சில நிமிடங்களில் என் மகள் எங்காவது எழுதிவைத்து விடுவார். அம்மா பேப்பரில் எழுத வேண்டும் என்று சொல்கிறார் என்பதும், வேறு இடங்களில் எழுதக் கூடாது என்பதும் என் மகளுக்குத் தெரிந்ததுதான். ஆனாலும் ஆர்வமும் விருப்பமும் அவரை எழுத வைக்கிறது போலும்.

நேற்று காலை, படுக்கையின் மீது விரித்திருந்த அழகான வெளிர்நிற படுக்கை விரிப்பில் ABCD, அப்புறம் மாடர்ன் ஆர்ட் போல கோடுகள் நிறைந்த சித்திரங்களைப் பார்த்தேன். ஒரு நிமிடம் சிரிப்பு வந்துவிட்டது. என் மகளை அழைத்து அவற்றைக் காட்டியபடி கேட்டேன்.

"இது என்னமா?"

என் மகளுக்கு உடனடியாகப் புரிந்து விட்டது. அவர் அங்கே எழுதியிருப்பதை நான் விரும்பவில்லை என்று. ஆனால், இங்கெல்லாம் எழுதக் கூடாது என்று பொதுவாக நான் சொல்வதில்லை என்பதும் அவருக்குத் தெரியும். ஆனாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல், சமாளிக்கிறார். "தட் இஸ் ABCD டாடி"

"அது சரிம்மா, அது எப்படி படுக்கை விரிப்பில் வந்தது"

சற்றும் தளராமல் சிரித்தபடி, "தட் இஸ் ABCD டாடி"

"ஆமாம்மா, ABCDயுடன் நான் இன்னும் டிராயிங்கும் பார்க்கிறேன்."

சிரிப்பைச் சற்றுக் குறைத்தபடி, "தட் இஸ் ABCD டாடி"

"அது எப்படி இங்கு வந்தது"

சற்று இறுகிய குரலில் - "தட் இஸ் ABCD டாடி"

"ஆமாம்மா, இதை யார் வரைந்தது"

உடைந்துபோய் அழுகை எந்நேரமும் வந்துவிடக் கூடும் என்று தெரிகின்ற குரலில் "தட் இஸ் ABCD டாடி"

இதற்குமேல் நான் ஒன்றும் கேட்கவில்லை. "சரிம்மா, போய் விளையாடு" என்று சொல்லிவிட்டேன்.

என் மகளின் பதிலைப் பார்த்தீர்களேயானால் - அதில் பொய் என்று எதுவும் இல்லை. அவர் சொன்னது உண்மைதான். ஆனால், கேள்விக்கேற்ற சரியான பதிலா என்றால் இல்லை. திரும்பத் திரும்ப பிரச்னை இல்லை என்று தெரிகிற ஓர் உண்மையைப் பதிலாக வைப்பதனால், மேற்கொண்டு தர்மசங்கடமானக் கேள்விகள் வருவதைத் தடுக்க இயலும் என்பதையும், தனக்கு பலவீனமாய்ப் போய்விடக் கூடிய பதில்களைத் தவிர்க்க முடியும் என்பதையும் அந்தக் குழந்தை மனம் மூன்று வயதிலேயே அறிந்திருக்கிறது.

எனக்கு ஏனோ என் மகளுடனான இந்த உரையாடலுக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஞாபகம் வந்தது. ஈராக் மீதான போர் பற்றிய தர்மசங்கடம் அளிக்கிற கேள்விகளுக்கெல்லாம் புஷ் "இன்று அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கிறது. இது பயங்கரவாதத்துக்கு எதிரான போர்." என்கிற ஒரே பதிலின் பல்வேறு வடிவங்களை உபயோகப்படுத்தி பதிலளிப்பார். அமெரிக்கர்களும் ஒரு கேள்விக்கு அவர்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லையென்றால், ஓரிரண்டு முறைக்கு மேல் துருவித் துருவிக் கேட்காமல், அப்படியே விட்டுவிடுவர். இது அமெரிக்கர்களின் பழக்கம். இன்றைக்கு புஷ் மட்டுமில்லை அவர் கட்சியினர் அனைவருமே ஈராக் போர் பற்றிய எல்லாக் கேள்விகளுக்கும் இந்த முறையைப் பயன்படுத்தியே பதிலளித்து வருகின்றனர். இதற்கு "ஒருவரின் வலிமையானக் கருத்துகளை உபயோகப்படுத்தி வெல்வது" (Playing to one's strength) என்றுவேறு பெயர் வைத்திருக்கிறார்கள். எனவே, வெல்வதுதான் முக்கியம். உண்மை முக்கியமில்லை. வெல்வதற்கான வியூகங்களும் உபகரணங்களுமே பதில்களும் செயல்பாடுகளும் என்று வாழ்க்கை ஆகிவிட்டது. இந்த இடத்தில் உண்மையைத் தேடுவது உண்மைக்கும் தேடுபவர்க்கும் இடைஞ்சல் ஊட்டுகிற விஷயமாகவே முடியும்.

சற்று இதையே யோசித்துப் பார்க்கும்போது, இதைச் செய்வது புஷ் மட்டுமில்லை, மனிதர்களில் பெரும்பாலோர் இப்படித்தான் இருக்கிறோம் என்று தோன்றுகிறது. தமிழ்ப் பத்திரிகைகளிலும் இணையத்திலும் இன்னும் நம்மைச் சுற்றிலும் நடக்கிற விவாதங்களைப் பாருங்கள். கேள்வி கேட்பவர்களும் பதில் சொல்பவர்களும் இருவேறு அலைவரிசைகளில் பேசிக் கொண்டிருப்பார்கள். இடையில் கிடைக்கிற வார்த்தைகள், வாய்ப்புகள் ஆகியவற்றைக் கொண்டு சமாளிப்புகள், திசைதிருப்பல்கள் ஆகியவை நிறைய நேரங்களில் நடைபெறும். இப்படிப் பேசுபவர்கள் பெரும்பாலும் அமெரிக்க ஜனாதிபதி போல சமூக மதிப்பிலும் பதவியிலும் அந்தஸ்திலும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களாக இருக்கிறார்கள் அல்லது நமக்கு மிகவும் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள். அதனால், அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டு பின்பாட்டு பாடுபவர்கள்தான் இருக்கிறார்களே யொழிய, பதில்களின் உண்மையை, பதில் சொல்பவரின் அறிவொழுக்கத்தை, அந்தப் பதில் நேர்மையானதா என்று காணுகிற பார்வையைப் பெரும்பாலோர் கொண்டிருப்பதில்லை. அல்லது பிடிக்காத ஆளா, நிறைய தொந்தரவு செய்கிற கேள்விகள் கேட்பவரா, நம்மைவிட வேறு நம்பிக்கைகள், வேறு சித்தாந்தங்கள் உடையவரா, அவர் சொல்வதற்கெல்லாம் விவரமான அல்லது அறிவுபூர்வமான பதில்கள் சொல்ல வேண்டியதில்லை. ஒரு சார்பானவர் என்று மேம்போக்கில் சொல்லிவிட்டுப் போனாலே போதுமென்று நினைக்கிறோம். தமிழில் மட்டுமில்லை எந்த இடத்திலும் ஓர் ஆரோக்கியமான விவாதத்தை நடத்த விரும்புபவர்களும், கருத்தைச் சொல்ல விரும்புபவர்களும் சந்திக்கிற பிரச்னைதான் இது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிற நான் - என் மகள் அவர் செய்த தவறை ஒத்துக் கொள்ளவில்லை என்று கோபித்துக் கொள்வதற்கோ கேள்விகளுக்குச் சரியான பதில் தரவில்லை என்று வருந்துவதற்கோ என்ன நியாயம் இருக்க முடியும்? அவரைப் பற்றியாவது நிறைய நம்பிக்கை இருக்கிறது. மூன்று வயதுதான் ஆகிறது. அவருக்கென்று அறிவும் புரிதலும் வருகிறபோது அவர் மாறிவிடக் கூடுமென்று.

இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்

எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள் ஏப்ரல் 24. நாளை அவர் 70 வயதை நிறைவு செய்கிறார். அவருக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துகள். ஜெயகாந்தனின் நண்பர் சிற்பி பாலசுப்ரமணியமும் பிற கோவை நண்பர்களும் ஏப்ரல் 26 அன்று கோவையில் அவர் பிறந்தநாளை ஒட்டி ஜெயகாந்தனுடன் ஒரு மாலைப் பொழுது என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சிலநாள்களுக்கு முன் நானறிந்த தகவல்களின்படி, கே.எஸ்.சுப்ரமணியம், சிற்பி, பி.ச.குப்புசாமி உள்ளிட்டவர்கள் பேசுகிறார்கள். தமிழில் ஜெயகாந்தன் உக்கிரமாக எழுதிய காலகட்டம் அவருடைய யுகம் என்றழைக்கப்படும் வகையில் பெருமை வாய்ந்தது. பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றவர் அவர். எழுதத் தெரிந்ததைப் போலவே எழுதுவதை நிறுத்திக் கொள்ளவும் எழுத்தாளருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உணர்ந்தவர் அவர். தமிழில் சுயமாக சிந்தித்தவர்களில் அவரும் ஒருவர். காலம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிற இலக்கியப் பெயர்களில் ஜெயகாந்தன் என்றும் இருப்பார். இந்த நேரத்தில் அவரை, இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் என்று வாழ்த்துகிறேன்.

Thursday, April 22, 2004

கோயில் விளையாட்டு

(திண்ணையில் முன்னர் பிரசுரமான என் சிறுகதை ஒன்று. திண்ணைக்கு நன்றி.)

கோயில் விளையாட்டு
- பி.கே. சிவகுமார்

விழித்ததும் 'இன்னைக்கு கோயிலுக்குப் போகிற நாள்' என்ற ஞாபகம் வந்தது சரணுக்கு. பக்கத்தில் கீதாவும், அவள் கழுத்தைக் கட்டியவாறு குழந்தை நிவேதாவும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மைக்ரோ வேவில் காபி வைத்தபோது, 'இவள் குழந்தையுடன் அல்லாடிக்கொண்டு, ஒன்றும் சாப்பிடாமல் கிடப்பாள். சாமி தரிசனம் முடிந்தபின்னால்தான் பல்லிலே பச்சைத் தண்ணீர்கூட விடுவாள்' என்ற நினைப்பு வந்தது. 'கோயிலுக்குப் போகிற நாட்களில் செய்வதுபோலவே, இன்னைக்கும் ஆபிஸிலிருந்து சீக்கிரம் வந்துவிட வேண்டும்' என்று சொல்லிக் கொண்டான்.

அவனுக்கு இறைவழிபாட்டில் நம்பிக்கை உண்டு. ஆனால், "உள்ளம் தொட்டு நின்றால் போதுமடா" என்றுணர்ந்த பக்தி அது! அம்மாவால் சிறுவயது முதலே இறைநம்பிக்கையூட்டி வளர்க்கப்பட்டதால், கடவுள் குறித்த அறிவியல்பூர்வமான கேள்விகள் பெரும்பாலும் அவனிடம் எழுந்ததில்லை. கல்லூரியில் படித்த காலங்களில் சிலவேளைகளில் தன்னை ஒரு agnostic என்று அவன் நினைத்துக் கொண்டதுண்டு. அதுவும்கூட அந்தப் பருவத்திற்கேயுரிய இயல்பான உணர்ச்சிபோல் தோன்றிப் பின் மெல்ல மறைந்து விட்டது.

சிறுவயதில் அம்மாவின் கைப்பிடித்து வாரம் இரண்டு மூன்று முறை கோயில் போகும் வழக்கமிருந்தது. அப்போதெல்லாம் கூட கோயிலின் சிற்பங்களும், பொரி வாங்கிப் போட்டால் கூட்டமாய் வந்து மொய்க்கும் கோயில் குளத்து மீன்களும், மெல்லிய குரலில் சன்னமாய் சுருதி பிசகாமல் அவ்வப்போது தேவாரம் இசைக்கும் பெண்டிரும், நெய்மணக்கக் கிடைக்கும் வெண்பொங்கல் பிரசாதமும், சாமி கும்பிட்டு முடித்தபின் ஆசுவாசமாக அமர்ந்து பெண்கள் பேசும் குடும்பக்கதைகளுமே, அவனைப் பெரிதும் கவர்ந்தவை. அம்மாதான் பாலும் தௌ¤தேனும் என்றும், நாள் என்செய்யும் வினைஎன் செய்யும் என்றும் எளிமையாய்த் தொடங்கி, தமிழ் இலக்கியத்தின்மேல் அவனுக்குக் காதல் பிறக்கச் செய்தாள். வளர்ந்த பின்னர், தமிழ் பக்தி இலக்கியங்களில் துய்க்க துய்க்க, அவற்றை ஆழ்ந்துணர்ந்து அனுபவிப்பதற்காவது கடவுள் நம்பிக்கை இருப்பதாக பாவித்துக் கொள்வது அவசியமென்று அவன் உணர்ந்து கொண்டான்.

வீட்டோடு தங்கிப் படிக்கும்வரையிலும் அம்மாவின் துணையோடு கோயில் போகும் பழக்கமும் தொடர்ந்தது. கடவுளை ஒரு தோழனாக பாவிப்பதற்குரிய மனோபாவத்தை அவன் அம்மாவிடமே கற்றுக் கொண்டான். இத்தனைக்கும், அம்மா சோமவார விரதம், கிருத்திகை விரதம் என்று எல்லா விரதங்களையும் அனுஷ்டிப்பாள். ஆனால், கடவுளிடம் இது வேண்டும், அது வேண்டும் என்கிற விண்ணப்பங்கள் ஏதும் வைக்க மாட்டாள். 'சாமி மட்டும்தான் நாம கும்பிடணும். நமக்கு எது நல்லதோ அதை அவரே தருவார்' என்று அவள் பலமுறை சொன்னது வேதவாக்காய் மனசில் பதிந்துவிட்டது. அதனால்தானோ என்னவோ, நமக்கு வேண்டியதை கடவுள் தருவார் என்பதால், வளர்ந்தபின் கல்லூரியில் சேர ஊரைவிட்டு வந்தபின், கோயிலுக்குப் போகும் பழக்கமும் அவனுக்குக் குறைந்து போனது. வருடம் ஒருமுறை ஊரில் விசேஷமாய் கொண்டாடப்படும் பங்குனி உத்திரத்தின்போது ஒன்றுசேரும் சொந்தக்காரர்களையெல்லாம் பார்க்க, லீவு போட்டுவிட்டு ஊருக்குப் போவான். அப்போது கோயிலுக்குப் போவதோடு சரி என்றாகிவிட்டது. இவன் பிறந்தநாட்களின் போது மட்டும் அம்மா தவறாமல் கோயிலுக்குப் போகச் சொல்லுவாள். சில சமயம் போயிருக்கிறான். சில சமயம் போக முடிந்ததில்லை.

யு.எஸ். வந்தபின் - எப்போதாவது நண்பர்களுடனும், சமைக்க முடியாது சோம்பிக் கிடக்கும்போது கோயில் கேப்டீரியாவில் புளியோதரையும், மெதுவடையும் சாப்பிடவும் கோயிலுக்குப் போயிருக்கிறான். அமெரிக்கக் கோயில்களின் கடவுள்கள் எல்லாம் கூட, அமெரிக்காவைப் போலவே பணக்காரர்கள் என்று ஜோக்கடித்திருக்கிறான். கிரானைட் ப்ளோர் என்ன, ஒவ்வொரு சாமிக்கும் குட்டிப்பிரகாரத்துடன் சன்னதி என்ன, எல்லாச் சாமிகளுக்கும் இடம் என்கிற சமத்துவம் என்ன என்று டாலரில் இழைத்து இழைத்துக் கட்டப்பட்ட கோயில்கள் அவனுக்கு ஆச்சரியமளித்தாலும், கரியும் எண்ணெய்ப் பிசுக்குமேறிய ஊர்க்கோயிலின் வாசமும், அதன் கற்பிரகாரமும் கவர்ந்ததுபோல் இந்த நவீனக் கோயில்கள் அவனை ஆகர்ஷிக்கவில்லை.

கல்யாணம் ஆனதும் எல்லாம் மாறிப்போனது. கீதா ஒரு தீவிர பக்தை. விரதங்கள் அனுஷ்டிப்பதில் அம்மாவைப் போன்றவள். இப்படித்தான், கல்யாணம் ஆகிவந்தவுடன் "இந்த சனி ஞாயிறில் நியூயார்க் சுத்திப் பாக்க போகலாமா" என்று கேட்டான். "மொதல்ல பக்கத்துல இருக்கிற கோயிலுக்குக் கூட்டிப் போங்க" என்றாள் அவள். "என்ன இது! பொண்டாட்டி வேணும்னு சாமியாரினியைக் கட்டிட்டு வந்துட்டேன்போல" என்று கிண்டலடித்தாலும் வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குப் போகவேண்டும் என்கிற அவளின் ஆசையைப் புரிந்து கொண்டான். வாரமொருமுறை என்றில்லாவிட்டாலும் அடிக்கடி - மாதத்திற்குக் குறைந்தது இருமுறையேனும் - கோயிலுக்குப் போவது வழக்கமாகிப் போனது. அவன் அலுவலகத்தில் இருந்து வருவதற்குள் நேரமாகிவிடும் என்பதாலும், வாரவிடுமுறைகளின் கூட்ட நெரிசலில் கோயிலுக்குப் போவதை அவன் விரும்புவதில்லை என்பதாலும் அவளும் வாரமொருமுறை அழைத்துச் சென்றேயாக வேண்டும் என்று சத்தாய்ப்பதில்லை. சாமி தரிசனம் முடித்தபின் அவள் முகத்தில் தெரிகிற திருப்தியும் பரவசமும் அவள் அழகைக் கூட்டுவதாக அவனுக்குத் தோன்றும். அதைப் பார்ப்பதற்காகவே முடிந்தபோதெல்லாம் அவளை கோயிலுக்கு அழைத்துச் செல்வான்.

கோயிலுக்குச் சென்றால், அவள் ஒவ்வொரு சாமிக்கும் நேரம் எடுத்து நெக்குருக வேண்டிய பின்னே அடுத்த சாமிக்குச் செல்வாள். சிலநேரங்களில் பக்திப் பரவசத்தில் அவள் கண்களில் மாலை மாலையாய் நீர் பெருகும். "பார்க்கிறவர்கள் யாரேனும் நான் உன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், அதை நீ சாமியிடம் முறையிடுவதாகவும் நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்" என்று அவன் கிண்டலடிப்பான். "எல்லாமே உங்களுக்குக் கிண்டல்தான்" என்று அதை ஒதுக்கிவிட்டாள். அவன் வேகவேகமாய் கும்பிட்டுவிட்டு வந்து உட்கார்ந்து விடுவான். "பொண்டாட்டிகூட நின்னு சாமிகும்பிட முடியாம கூட அப்படி என்ன அவசரம்" என்று அவள் முதலில் நிறைய ஆதங்கப்பட்டாள். நாளாக ஆக அவன்போக்கில் விட்டுவிட்டாள்.

நிவேதா பிறந்தபின் - இரண்டே கால் வருஷங்களாக - வாரம் ஒருமுறை கோயிலுக்குப் போவது கட்டாயமாகிப் போனது. 'வெளிநாட்டிலே இருக்கிறோம். குழந்தைக்கு நம்ம வேல்யூஸ், கலாச்சாரம் எல்லாம் சொல்லித் தந்து வளர்க்க வேணாமா" என்று காரணம் சொன்னாள்.

அவன் குளித்து முடித்து உடைமாற்றிக் கொண்டிருக்கும்போது கீதா எழுந்துவந்தாள்.

"குட்மார்னிங்! என்னை எழுப்பறதுதானே, லஞ்ச் ரெடிபண்ணி இருப்பேனே."

"குட்மார்னிங்! எனக்கு மட்டும்தானே, வெளியே சாப்பிட்டுக்கறேன்"

"ஐயோ அதுல என்ன சிரமம், வெளியிலே அடிக்கடி சாப்பிட்டா உடம்பு என்ன ஆகும், பிரேக் பாஸ்டுக்கு சீரியல்தானே சாப்பிடுவீங்க. இட்லி மாவு இருக்கு. இட்லி ஊத்தறேன். லஞ்சுக்கு அதை எடுத்துப் போங்க."

வேண்டாம் என்று சொல்லி இவளை ஜெயிக்க முடியாது என்று நினைத்தபடி "சரி" என்றான்.

டிவியில் டிராபிக் ரிப்போர்ட் பார்த்தபடி சீரியல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கண்களைக் கசக்கியபடி எழுந்துவந்த குழந்தை அப்பா மடியில் வந்து உட்கார்ந்தாள்.

"வணக்கம் செல்லம். அம்மா என்ன சொல்லி இருக்கேன்" என்றாள் கீதா.

"வன்கம் மாமி" என்ற குழந்தை "சாமிக்கு பஸ்ட் வன்கம் சே பண்ணும். பிரே பண்ணும்" என்றாள். (பண்ணும் = பண்ணனும்)

"அப்போ எழுந்ததும் நீ சாமிக்கு வணக்கம் சொன்னியா"

"மாத்தேன். ஐ வன்கம் சாமி. சாமி நோ வன்கம்" (மாட்டேன். நான் சாமிக்கு வணக்கம் சொல்றேன். ஆனால், சாமி பதிலுக்கு வணக்கம் சொல்றதில்லை.)

சரணுக்கு சிரிப்பில் புரையேறிக் கொண்டது. "அப்பா லொள்ளு அப்படியே வந்திருக்கு" என்று சரண் தலையை தட்டிக் கொடுத்தாள் கீதா. பின் - "நீ கண்ணை மூடி கும்பிட்டு வணக்கம் சொன்னா, சாமியும் உனக்கு வணக்கம் சொல்லுவார். வா... சாமி கும்பிட்டுட்டு, பிரஷ் பண்ணலாம். அப்புறம் அம்மா இட்லி ஊட்டிட்டே டிவிலே பூ ஸ்டோரி போடறேன்" என்று மகளை அழைத்தாள்.

"அய்ய்ய்... பூ ஸ்டோரி" என்றபடி அவன் மடியை விட்டு இறங்கி ஓடினாள் குழந்தை.

"சரி, சாயந்திரம் கோயிலுக்குப் போக ரெடியாக இருங்கோ" என்றபடி ஆபிஸீக்குக் கிளம்பினான் முரளி.

"பை பை டாடி, ஐ லவ் யூ" - சாமி க்ளோசட் அருகிலிருந்து குழந்தையின் குரல்.

"பை பை செல்லம். ஐ லவ் யூ டூ. கீதா போயிட்டு வரேன்."

"லஞ்ச் பேக் எடுத்துக்கிட்டீங்களா? பாத்து பத்திரமா கார் ஓட்டுங்க" என்ற பதில் வந்தது வழக்கம்போல.

***** ***** ***** *****

ஆபிஸிலிருந்து வந்து வீட்டுக் கதவைத் திறந்ததும் "டாடி" என்று கத்தியபடி ஓடிவந்த குழந்தை "வீ கோ கோவில்?" என்றாள்.

குழந்தையைத் தூக்கிக் கொஞ்சியவாறே, "ஆமாம் செல்லம்" என்றான் சரண்.

"அய்ய்ய்.... மாமி... வீ கோ கோவில் வீ கோ கோவில்" என்று கூச்சல்.

"கீழே இறங்கு. அப்பா காபி சாப்பிடட்டும்" என்றபடி வந்த கீதா "இந்தாங்க காபி" என்றாள்.

"யூ தூக்கு மீ" என்று அம்மாவிடம் கைமாறினாள் குழந்தை.

வழக்கம்போல - மூணாவது ப்ளாக்கில் ப்ளவர் பொக்கே விற்கிற குஜராத்தி அம்மாவிடம் பூ வாங்கி அதை கோயிலுக்குத் தொடுத்து வைத்திருந்தாள் கீதா.

கோடையானதால் மாலை ஆறுமணிக்கு மேலும் வெயில் குறையவில்லை. கோயிலுக்கு போகிற வழியில் - அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸீக்குள் இருந்த பார்க்கையும் ஊஞ்சலையும் பார்த்துவிட்டாள் குழந்தை. "டாடி பார்க்.. மாமி ஸ்விங். ஐ வாண்ட் ஸ்விங், ஐ வாண்ட் ஸ்விங்" எனக் கேட்டு கார்சீட்டில் இருந்து எம்பிக் குதிக்க முயற்சித்தாள். குழந்தைக்கான கார்சீட்டும், அதன் பெல்ட்டும் முழுதும் எம்பவிடவில்லை.

"இன்னைக்குக் கோயிலுக்குப் போய்ட்டு நாளைக்கு அம்மா பார்க் கூட்டிட்டு போறேன்".

"நோ கோவில்... ஐ வாண்ட் ஸ்விங்" என்று உரத்த குரலெடுத்து அழுகை.

"அழாம கோயில் வந்தா, அம்மா லாலிபாப் தருவேன்"

"நோ லாலிபாப், ஐ வாண்ட் ஸ்விங்... டாடி ஐ வாண்ட் ஸ்விங்"

"அம்மா நெறிப்படுத்தும்போது அப்பா தலையிடாமல் இருக்க வேண்டும், அப்பா நெறிப்படுத்தும்போது அம்மா தலையிடாமல் இருக்க வேண்டும்" என்று கீதா எங்கேயோ படித்த "பேரண்ட்டல் டிப்"புக்கேற்ப, காது கேட்காதவன்போல் கார் ஓட்டலானான் அவன்.

"சரி அப்போ, நோ லாலிபாப், நோ ஸ்விங்"

அரை நிமிடம் அழுகை; அரை நிமிடம் சிணுங்கல்; அரை நிமிடம் அமைதி; அதற்கப்புறம் - "ஐ வாண்ட் ரெட் கலர்"

"சரி, அழுவாம கோயில் வந்தா, அம்மா ரெட் கலர் லாலிபாப் தரேன்."

அதற்கப்புறம் அழாத குழந்தை, கொஞ்ச நேரத்தில் கார் சீட்டிலேயே தூங்கிப் போனாள். கோயிலுக்குச் சென்று கார் சீட்டிலிருந்து எடுத்ததும்தான் விழித்தாள்.

இப்போதெல்லாம் கோயிலில் அவனுக்கு வேலை அதிகமாகி விட்டது. முன்புபோல வேகமாக சாமி கும்பிட்டுவிட்டு வந்து உட்கார்ந்துவிட முடிவதில்லை. குழந்தை தொந்தரவு இல்லாமல் கீதா சாமி கும்பிட வேண்டும் என்பதற்காக குழந்தையை பார்த்துக் கொள்கிற வேலையும், குழந்தையும் சாமி கும்பிடப் பழக வேண்டும் என்பதற்காக - ஒவ்வொரு சன்னதி முன்னும் நின்று சாமி கும்பிட்டு - குழந்தைக்கும் கும்பிட கற்றுத் தருகிற வேலையும்.

கோயிலில் உள்ளே நுழைந்ததும் சிவன் சன்னதி முன்னிருந்த ஆலய மணியைப் பார்த்த குழந்தை, "டாடி, ஐ வாண்ட் பெல்" என்றாள்.

"சரி, அங்கே போகும்போது நீ மணி அடிக்கலாம். இப்போ எலபண்ட் சாமி கும்பிடலாம் வா" என்றான் சரண்.

பிள்ளையார் முன் நின்று "சாமி, அம்மா காப்பு, அப்பா காப்பு, ஆல் உயிர் காப்பு" (காப்பு = காப்பாத்து) என்று அவசரமாய் கிளிப்பிள்ளையாய் சொன்னாள்; குனிந்து தரையைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள்; பின் நிமிர்ந்து "டன் டாடி, ஐ வாண்ட் பெல்" என்றாள்.

"நல்லா விழுந்து கும்பிடு" என்றாள் பக்கத்திலிருந்த கீதா. குழந்தை அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல், மணியடிக்க ஓடினாள். பின்னாலேயே போன சரண், அவளைத் தூக்கி மணியடிக்க உதவி செய்தான். ஐந்தாறு முறை மணியடித்த பின்னும் குழந்தைக்கு ஆசை ஓயவில்லை. "ஐ வாண்ட் மோர்" என்றாள். "போதும். நம்ம டர்ன் முடிஞ்சு போச்சு. மத்தவங்க மணி அடிக்க வேணாமா" என்று சொல்லிக் கீழே இறக்கிவிட்டான். அதற்குள் - கொண்டுவந்த பூவை ஆரம்பிக்கப்போகும் முருகர் அபிஷேகத்திற்குக் கொடுக்கப் போன கீதாவைப் பார்த்துவிட்டு, "மாமி, ஐ வாண்ட் கிவ்" என்று ஓடினாள்.

ஒவ்வொரு சன்னதிக்கும் வேகமாக ஓடினாள்; ஒன்றிரண்டு சன்னதியருகே ஆராதனைத் தட்டும் குங்குமமும் இருந்தன; குங்குமத்தை எடுத்து நெற்றியில் கோணல்மாணலாக இட்டுக் கொண்டாள்; பின் கண்களை மூடிக்கொண்டு "டாடி, ஊது மீ" என்றாள். சில நொடிகள் கைகூப்பி வணங்கினாள்; அடுத்த நொடி கன்னத்தில் ஒருமுறை போட்டுக் கொண்டாள்; சன்னதியை ஒருமுறை ஓடிச் சுற்றிவந்தபின் "டன் டாடி" என அறிவித்தாள். "கோயிலுக்குள்ளே அவளை ஓடவிடாதீங்கோ. கைப் பிடிச்சிக் கூட்டிப் போங்க" என்றாள் கீதா வழக்கம்போல. "நீ நிதானமா கும்பிட்டுட்டு வா, நான் பாத்துக்கறேன்" என்றான் அவன். ஆஞ்சநேயரைப் பார்த்ததும் மலர்ந்து, "டாடி, மன்க்கி சாமி" என்று மகிழ்ந்தாள் குழந்தை.

எல்லாச் சன்னதியும் சுற்றி முடித்தபின், அபிஷேகம் நடந்து கொண்டிருந்த முருகர் முன்வந்து அமர்ந்தனர். குழந்தை நெற்றி முழுதுமிருந்த குங்குமத்தைச் சரியாக்கி நேர்படுத்தினாள் கீதா. சாமி முன் வைக்கப்பட்டிருந்த ஆப்பிள்களையும், வாழைப்பழச் சீப்பையும் பார்த்தவள் "மாமி... ஆப்பிள்" என்று சத்தமாகக் கத்தினாள். "அது சாமிக்குப் படைக்கறதுக்கு. கார்ல ஆப்பிள் இருக்கு. நான் அப்புறமா தரேன்" என்றாள் கீதா. அடிக்கடிக் கோயில் வருவதால் பரிச்சயமாகிப் போன - அபிஷேகம் செய்து கொண்டிருந்த - குருக்கள் குழந்தையின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்து நட்புடன் சிரித்தார். குழந்தை அதற்குள் கவனம் மாறி, பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்களின் கைக்குழந்தையைக் காட்டி "டாடி... பேபி" என்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். "உஷ். எல்லோரும் சாமி கும்பிடும்போது சத்தம் போட்டு பேசக் கூடாது" என்று எச்சரித்த கீதா "அப்பா மடியிலே அமைதியா உட்காரு" என்றாள்.

அபிஷேகம் முடிந்து ஆரத்தி வந்தது. குழந்தையும் பவ்யமாகத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். எல்லோருக்கும் பிரசாதம் கொடுக்கிறபோது குழந்தைக்கு ஆப்பிளும் வாழைப்பழமும் கொடுத்தார் குருக்கள். "டேங்க் யூ" என்று ஆப்பிளை மட்டும் வாங்கிக் கொண்டாள். பின் - "டாடி, சாமி நோ ஷேரிங்.. அங்கிள் ஷேரிங்" என்றாள். பளீரெனச் சிரித்துவிட்ட குருக்கள் "நல்லாப் பேசறியே" என்று குழந்தை கன்னத்தைத் தட்டிவிட்டு வாழைப்பழத்தையும், அபிஷேகப் பூவையும் கீதாவிடம் கொடுத்தார். "பேச்சுக்கு ஒரு குறைச்சலும் இல்லை" என்ற முனகிய கீதா, இவன் முகத்தில் தெரிந்த முறுவலைப் பார்த்து, "உன் அப்பாக்கு நீ செய்யறதெல்லாம் பெருமைதான் போ" என்று அவனுக்கு மட்டுமே கேட்கிற மெல்லிய குரலில் சொன்னாள்.

கோயிலைவிட்டுக் கிளம்புவதற்குமுன், கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தபோது, ஆப்பிளை வைத்து சில நிமிடங்கள் விளையாடினாள் குழந்தை. பின்னர் "மாமி, யூ ஹேவ் இட்" என்று கொடுத்துவிட்டாள். "அப்பவே எனக்குத் தெரியும் நீ ஆப்பிள் சாப்பிடமாட்டேன்னு" என்றாள் கீதா. "வீட்டுக்குப் போகலாமா" என்று சற்று நேரம் கழித்துக் கேட்டான் சரண். "சரி" என்று எழுந்தாள் கீதா. "மூலவர் முன்னாடி விழுந்து கும்பிட்டுட்டு வந்துடறேன்" என்று போனான். "அப்பாவோட போய் நீயும் விழுந்து கும்பிடு" என்றாள் அவள் குழந்தையிடம். சாஷ்டாங்கமாக விழுந்து அவன் கும்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ஒடிவந்து முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்ட குழந்தை "டாடி, லெட்ஸ் ப்ளே ஹார்ஸ்" என்றாள் உற்சாகமாக. "வீட்டிலே ஹார்ஸ் விளையாடலாம், இப்போ கீழே இறங்கி நீயும் விழுந்து கும்பிடு" என்றான் அவன். பின்னால் வந்த கீதா குழந்தையை அவன் முதுகில் இருந்து தூக்கி இறக்கி விட்டாள். பக்கத்திலிருந்த நாலைந்து பேர் மெல்லச் சிரித்தார்கள். "இவ பண்ற அட்டகாசம் தாங்கல" என்று முணுமுணுத்த கீதா, முழந்தாளிட்டு மூலவரைச் சேவித்து எழுந்தாள்.

படிகளில் இறங்கும்முன், "படிக்கட்டுல அப்பா கையைப் பிடிச்சிட்டுதான் வரணும்" என்றாள் கீதா. "ஓகே மாமி." அவன் கையைப் பிடித்துக் கொண்டு, "ஒன்", "டூ" என்று சத்தமாக ஓவ்வொரு படிக்கும் நம்பர் சொல்லியபடி குதித்து இறங்க ஆரம்பித்தாள். "த்ரீ" என்று குதித்து சட்டென நின்றவள் - திரும்பி, கைநீட்டி "மாமி, கிவ் மீ லாலிபாப்" எனக் கேட்டாள்.

Wednesday, April 21, 2004

சிவவாக்கியர் திருவாக்கியங்கள்

பெரியார் முன்னிலையில் ஜெயகாந்தன் பேசிய பேச்சில் இருந்து சிவவாக்கியர் என்கிற பெயர் அறிமுகமானது. "நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே சுற்றிவந்து மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா - நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்" என்று பெரியாரின் பாதி பகுத்தறிவாதத்தை முழுமையாக்குகிற சிவவாக்கியரின் வரிகளை ஜெயகாந்தன் மேற்கோள் காட்டியிருந்தது அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வமூட்டியது.

அப்புறம் அவரை இன்னும் சற்று அறிந்து கொள்ள சுஜாதா உதவினார். "சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே - வேர்த்திரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ" என்றும், "பறைச்சி ஆவதேதடா பனத்திஆவ தேதடா? - இறைச்சிதோல் எலும்பினும் இலக்கம் போட்டிருக்குதோ" என்றும் அவர் எழுதிய வரிகளைச் சுஜாதா சிலாகித்து எழுதியதைப் பார்த்து, இவரை மேலும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் உண்டாகியிருந்தது. வாய்ப்பு மட்டும் கிடைக்காமலேயே இருந்தது. போனவார விடுமுறையில் நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தபோது வழக்கம்போல் அவரிடமிருந்து நிறையப் புத்தகங்களைத் தள்ளிக் கொண்டு வந்தேன். அப்படிக் கேட்டு வாங்கி அழைத்து வந்தவர்களுள் சிவவாக்கியரும் ஒருவர்.

பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்பு இந்து மதம் சனாதன மதமாக மெதுவாக மாறத் தொடங்கியது. அதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள். அவற்றினுள் போவது இந்தக் கட்டுரைக்கு அப்பாற்பட்டது. சடங்குகளின் தொகுப்பாகவும் பஜனைகளின் கூச்சலாகவும் இந்து மதம் மாற ஆரம்பித்திருந்த காலம் அது. மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே இடைத்தரகர்களும், கடவுளை அடையத் தடையாய் அகழிகளும் தோன்றி வளர்ந்த காலம் அது. சித்தர்களின் காலம் பதினான்காம் நூற்றாண்டிலிருந்து செழித்தது என்று சொல்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் இந்துமதம் சனாதன தர்மத்தை நோக்கி நிறையவே முன்னேறியிருந்தது எனலாம். இந்தக் காலகட்டங்களில் தோன்றியவர்கள் சித்தர்கள். மறுமலர்ச்சிக் கருத்துகளை மொழிந்தவர்கள். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்துக்கு மட்டுமல்ல இன்றைக்கும் பல சித்தர்களின் கருத்துகள் புரட்சிகரமாகவும் புதுமையாகவும் விளங்குவதைக் காண இயலும். அப்படிப்பட்ட புரட்சிக்காரர்களுள் சிவவாக்கியர் முக்கியமானவர். திருமூலரை விளக்க வந்தவர் என்றும் இவரைச் சொல்கிறார்கள். இவர் பாடல்கள் சீர்திருத்தக் கருத்துகளை மட்டுமல்ல பகுத்தறிவையும் அடிப்படையாகக் கொண்டவை. பகுத்தறிவைப் பயன்படுத்தி இறைவனை மறுக்கிற நாத்திகர்களிடையே, பகுத்தறிவால் இறைவனை உணர்ந்து அறிய முடியும் என்று சொன்ன ஆத்திகர் இவர். நாத்திகமும் ஆத்திகத்தில் அடக்கம் என்பதற்கு சிவவாக்கியர் கருத்துகளை உதாரணமாய்ச் சொல்லலாம்.

இவர் பாடல்களை அனுபவித்தும் ரசித்தும் படித்தேன். இன்றைக்கும்கூட சடங்குகளிலும் பஜனைகளிலும் நம்பிக்கை கொண்டிருப்பதுதான் மதம் என்று நினைப்பவர்களைப் நிற்க வைத்துப் பொட்டில் அறைகிறப் பாடல்கள் அநேகம். அவைகளில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதே இந்தப் பதிவின் நோக்கம். இவர் பாடல்கள் பெரும்பாலும் எளிமையாகவும் பொழிப்புரை தேவையில்லாமலும் இருப்பது சிறப்பாகும். கருத்துகளில் புதுமையைப் போலவே, பாடலையும் எளிமையாக அமைத்திருக்கிறார்.

எடுத்ததுமே வேதம் ஓதுவதிலே இறைவனைக் காண முடியாது என்கிறார்:

நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய்கலந்தவாறு பாவிகாள்! அறிகிலீர்
ஆலமுண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலனென்று சொல்லுவீர், கனாவிலும் அ·தில்லையே

ஆணும் பெண்ணும் வேறுவேறு. சிலபல காரணங்களால் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக முடியாது என்று சிலர் நம்புகிறார்கள். சில மதங்களில் பெண்களை ஆண்களுடன் சேர்ந்து வழிபடுவதை ஏன் அனுமதிப்பதில்லை என்பதை நியாயப்படுத்த முனைவர்களும் மதங்களை மீறிய பார்வை கொள்ள வேண்டிய எழுத்தாளர்களும் முனைந்திருக்கிறார்கள். கற்றவர்களும் கூட அபிமானத்தால் மூடநம்பிக்கை கொள்வதும், நெருக்கமான மனிதர்களின் அல்லது நெருக்கமான விஷயங்களின் தவறுகளை நியாயப்படுத்துவதும் இயற்கைதானே. ஆனால், சிவவாக்கியர் சொல்கிறார் - "பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்" என்று.

நம்முடைய அரசியல்வாதிகளும் சினிமாப் பாடலாசிரியர்களும் (முக்கியமாக நாட்டுப்புறப் பாடல்களிலே) திடீரென "அட, நன்றாக இருக்கிறதே" என்று தோன்றும்படியான வரிகளையோ உவமைகளையோ பயன்படுத்திவிடுவார்கள். பாதி நேரங்களில் அவற்றை எங்கிருந்தாவது சுட்டும், மீதி நேரங்களில் சொந்தமாகவும் சொல்கிறார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு. அப்படிப் புகழ்பெற்ற உவமைகளுள் ஒன்று "கருவாடு மீனாகாது" என்று தொடங்குகின்ற உவமை வரிசை. காங்கிரஸை விமர்சிக்க இதைக் காளிமுத்து முதலில் பயன்படுத்தினார் என்று நினைக்கிறேன். சிவவாக்கியரைப் படிக்கும்போது இத்தகைய உவமைகளின் மூலம் சிவவாக்கியரோ என்று தோன்றுகிறது.

கறந்தபால் முலைப்புகா, கடைந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே.

கோயில் கட்டுவோம் என்ற கோஷத்துடன் ஆட்சியைப் பிடித்த கட்சிகள் இருக்கின்றன. புறப்பொருள்களை அகநம்பிக்கையின் அடையாளங்களாக அனுமதிப்பதற்கும், அந்த அடையாளத்தை அடுத்தவர் தம் குறுகிய நலன்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கும் மதங்கள் வழிவகுத்துவிட்டன. இந்துமதம் மட்டுமில்லை எல்லா மதங்களிலுமே இது இருக்கிறது. ஆலய வழிபாடு - அது கோயிலானாலும் சரி, மசூதியானாலும் சரி, சர்ச் ஆனாலும் சரி - மதத்தை நிறுவனமாக்குகிறது. கோயிலாவது குளமாவது என்று சிவவாக்கியர் கேட்கிறார்.

கோயிலாவது ஏதடா? குளங்க ளாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.

சிவவாக்கியரைப் படிக்கப் படிக்க நம்முடைய பகுத்தறிவுவாதிகள் செய்த செய்கிற தவறுகளை விளங்கிக் கொள்ள முடிகிறது. கடவுள் மறுப்பு என்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கெதிரான இயக்கமாக பகுத்தறிவு இயக்கத்தை வளர்த்ததும், போலிச் சடங்குகளை எதிர்க்கிறேன் என்று காலம் காலமாக அழிக்கப்பட முடியாமல் நிற்கிற ஒரு மதத்தை - நாத்திகமும் இந்து மதத்தின் ஒரு பகுதியே என்று உணராமல் - அதன் நல்ல கூறுகளுடனும் சேர்த்துப் பழித்ததுமே பகுத்தறிவுவாதிகள் செய்த தவறுகள். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்க வேண்டிய ஆன்மீகத் தேடலையும் மதவாதமென்று நினைத்துத் தூற்றியதும் பகுத்தறிவு இயக்கம் செய்ததே. சிவவாக்கியர் பழிக்காத மூடப் பழக்கங்கள் இல்லை. எள்ளாத சடங்குகள் இல்லை. ஆயினும், மதம், கடவுள் ஆகியவற்றின் அடிப்படையை அவர் அறிந்து வைத்திருக்கிறார். நம் பகுத்தறிவுவாதிகள் இவற்றையெல்லாம் ஆழமாக ஆராயாமல், மேல்மட்டத்தில் நின்று, உணர்வுகளின் அடிப்படையிலான ஒரு பாபுலிஸ்ட் மூவ்மெண்டாக தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார்கள். சிவவாக்கியர் அப்படியில்லை. "முனிவருள் நான் கபிலர்" என்ற கிருஷ்ண பரமாத்மாவையும், "முக்குணங்களுடன் வளர்ந்து நிற்கும் வேதங்கள் என்ற மரத்தை வேருடன் வெட்டி வீழ்த்துவாயாக" என்ற கீதையையும் சிவவாக்கியர் அறிந்திருக்கிறார் போலும். அதனாலேயே, மதத்தின் பெயரால் நடக்கிற மூடநம்பிக்கைகளை கடுமையாக எதிர்க்கிற் அவர், மனிதனுக்கான ஆன்மிகத் தேடலின் அவசியத்தைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.

எந்தப் பகுத்தறிவுப் பகலவரின் பேச்சும் பின்வரும் பாடலின் வீச்சையும் ஆழத்தையும் எட்டிப் பிடித்து மதத் தூய்மைவாதிகளைச் சாடிவிட முடியும் என்று தோன்றவில்லை.

ஓதுகின்ற வேதம் எச்சில்; உள்ள மந்திரங்கள் எச்சில்
போகங்களான எச்சில்; பூதலம் ஏழும் எச்சில்
மாதிருந்த விந்து எச்சில்; மதியும் எச்சில்; ஒளிஎச்சில்,
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே

"எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்கான பெண்கள்மட்டும் ஆவதேயில்லை" என்று பெண்கவிஞர் எழுதிய புதுக்கவிதை ஒன்று சிலாகிக்கப்படுகிறது. பெண்ணியம் பேசுகிற பெண்கவிகளுக்கெல்லாம் தகப்பன் கவியாக சிவவாக்கியர் தெரிகிறார்.

மாதமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான்
மாதமாற்று நின்றலோ வளர்ந்து ரூபம் ஆனது?
நாதமேது, வேதமேது, நாற்குலங்கள் ஏதடா?
வேதம்ஓதும் வேதியர் விளைந்த வாறும்பேசடா?

சிவவாக்கியரின் நக்கல் கலந்த நகைச்சுவை அபாரமானது. யோசிக்காமல், முறைப்படுத்தாமல், இலக்கணங்கள் பார்க்காமல், தானாக விழுகின்ற அருவி போன்ற கிண்டல் கலந்த நகைச்சுவையை அவர் பாடல்களிலும் உவமைகளிலும் காணலாம். ஓர் உதாரணம்:

காலைமாலை நீரிலே முழுகும் மந்த மூடர்காள்
காலைமாலை நீரிலேகிடந்த தேரை என்பெறும்?

புலால் உண்ணாமை மதக்குறியீடு என்றும் வேள்விக்காலங்களில் புலால் உண்ணக் கூடாது என்றும் புலால் உண்ணுவோர் கடவுளை நெருங்கி வழிபட இயலாது என்றும் விதவிதமாக வித்தியாசங்கள் இருந்த காலம் அது. "புலால்புலாலென்று பேதமைகள் பேசுகிறவரை" சிவவாக்கியர் கேட்கிறார்:

உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்ததொன்று இரண்டுபட்ட தென்னலாம்
மதிரமாக விட்டதேது மாங்கிசம் புலால் அதென்?
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான முடரே?

"சரஸ்வதி தேவி நாவில் குடியிருக்கிறாள் என்றால் அவள் மலஜலம் கழிப்பதும் அங்கேதானா?" என்கிற பகுத்தறிவு வாதத்தை அறிந்திருப்பீர்கள். இந்தக் கோஷத்திலே கடவுள் மறுப்பு வாதத்தை விட, மூடநம்பிக்கை வாதத்தைவிட, கடவுளை நம்புபவர்களைக் கழிவறை என்று சொல்கிற நேரடியான தனிமனித வெறுப்பே தொக்கி நிற்கிறது. இத்தகைய கோஷங்கள் எதிர்மறை விளைவுகளையே உருவாக்கின. சிவவாக்கியர் எந்தத் தளத்தில் நின்று இதையே பேசுகிறார் பாருங்கள்.

ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியீர்
ஆட்டிறைச்சி அல்லவொ யாகம்நீங்கள் ஆற்றலே?
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியீர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக்கு இடுவது?

மீனிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியீர்
மீனிருக்கும் நீரல்லோ மூழ்வதும் குடிப்பதும்?
மானிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியீர்
மானுரித்த தோலலோ மார்பு பூணூல் அணிவதும்?

கடவுளை அடையும் வழிகளாகச் சிவவாக்கியர் சொல்கிற வழிகள் மிகவும் எளிமையானவை; ஆழ்ந்த பொருளுள்ளவை:

அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்தது எவ்விடம், அழுக்கிலாதது எவ்விடம்
அழுக்கிருந்தது எவ்விடத்து அழுக்கறுக்க வல்லீரேல்
அழுக்கிலாத சோதியோடு அணுகிவாழல் ஆகுமே.

இந்தஊரில் இல்லைஎன்று எங்குநாடி ஓடுறீர்?
அந்தஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே?
அந்தமான பொந்திலாறில் மேவிநின்ற நாதனை
அந்தமான சீயில் அவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே.

சிவவாக்கியரின் நையாண்டியின் கூர்மைக்கு இன்னும் சில உதாரணங்கள்:

ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்து இரண்டாய் செய்துமே
வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும்நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே?

வாயில்எச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர்
வாயிருக்க எச்சில்போன வாயிலென்பது எவ்விடம்?
வாயில்எச்சில் அல்லவோ நீர்உரைத்த மந்திரம்?
நாயினை அறிந்தபோது நாடும்எச்சில் ஏதுகொல்?

மந்திரத்தை எச்சிலுக்கு ஒப்பிடுகிற சிவவாக்கியர் தான் தாக்கித் தகர்க்க வேண்டியது மூடப்பழக்கங்களை மட்டுமே என்று உணர்ந்திருக்கிறார். அவற்றைக் கொண்டிருக்கிற மாந்தர்களை அழிக்கத் தேவையில்லை, திருத்தி விடலாம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்திருக்கிறது. பகுத்தறிவின் முதிர்ச்சியல்லவா இது.


நிஜமான துறவு இல்வாழ்க்கையில் இருக்கிறது என்கிறார் சிவவாக்கியர். மாதர்தோள் சேர்ந்தால் மனிதவாழ்வு சிறக்கும் என்று பெண்களை உயர்வுபடுத்துகிறார்.

மாதர் தோள்சே ராததேவர் மானிலத்தில் இல்லையே
மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே
மாதராகும் சத்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்து கொண்டான் ஈசனே.

மதங்களின் மூர்க்கத்தனத்துக்கு எதிரான குரல் சிவவாக்கியருடையது. போலிச் சடங்குகளுக்கு மூடநம்பிக்கைகளுக்கு எதிரான குரல் சிவவாக்கியருடையது. ஜாதிவேறுபாடுகளுக்கெதிரான குரல் சிவவாக்கியருடையது. சமத்துவத்துக்கான குரல் சிவவாக்கியருடையது. பெண் விடுதலைக்கான குரல் சிவவாக்கியருடைது.

அவரைப் பற்றியக் கட்டுரைகளை விடவும் வர்ணனைகளை விடவும் அவர் பாடல்கள் எழுப்பும் உணர்வுகளும் சிந்தனைகளும் ஆழமானவை. அந்தரங்கமானவை. வாசிக்க வாசிக்க யோசிக்க வைத்துப் புரட்சிக் கருத்துகளும் புதுப்பொருள்களும் தரவல்லவை. முதலில், அவர் பாடல்களில் சிலவற்றை மட்டும் என் கருத்துகள் எதுவும் சொல்லாமல் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்புறம் வாசிப்பவரின் சிந்தனையை வழிநடத்துகிற அல்லது மயக்குகிற விவரமான வாதங்கள் இல்லாமல் சுருக்கமாகப் பாடல்களைப் பற்றிச் சிலவரிகள் சொல்லலாம் என்று தோன்றியது. அதைச் செய்தேன். நீங்களாகச் சிவவாக்கியரைப் படிக்கும்போது என்னைவிட அதிகமான அனுபவத்தையும் ஆனந்தத்தையும் அடையக் கூடும். அந்த வாசிப்பு அனுபவத்துக்கு என் கட்டுரை தடையாக இருக்கக் கூடாது என்பதால் நிறைய இடங்களில் விளக்காமலும், சுருக்கமாகவும் விட்டிருக்கிறேன். சிவவாக்கியரைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். பகுத்தறிவு இயக்கம் ஏறக்குறைய எண்பது ஆண்டுகளுக்கு மேலாகச் செய்யாததை (பகுத்தறிவு இயக்கம் அதன் தவறான வழிமுறைகளால் எதிர்மறை விளைவுகளையே அதிகம் உண்டாக்கி மதவாதம் வளரத் துணைபோனது என்று நான் நம்புகிறேன்) அவர்தன் பாடல்களிலே செய்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. (இந்த வரியை எழுதியதற்கு எவ்வளவு அடி வாங்கப் போகிறேனோ?)

இக்கட்டுரை எழுத உதவிய இன்னோர் நூல்: இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன்

அக்கினிப் பிரவேசம் கதை குறித்து ஜெயகாந்தன்

அக்கினிப் பிரவேசம் கதை குறித்து "சுயதரிசனம்" சிறுகதைத் தொகுப்பில் ஜெயகாந்தன் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரை ஜெயகாந்தன் பக்கத்தில் இருக்கிறது. அதிலிருந்து சிந்தனையைத் தூண்டிய பகுதிகளை இங்கே இடுகிறேன்.

"இந்த அக்கினிப் பிரவேசம் பலரை என் விஷயத்தில் அத்து மீறிப் பிரவேசிக்கச் செய்திருக்கிறது. ஒரு விதத்தில் எனக்குச் சந்தோஷம்தான். எனது கதையின் விளைவாய் ஏதோ ஒன்று இவர்கள் மனத்தில் எங்கோ புகுந்து குடைய இவர்கள் எதையோ பிடித்துப் பிறாண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ரொம்ப ரசமான விஷயம்தானே?

நான் எது குறித்து, எனது நெஞ்சம் புண்ணாகி எப்படிப்பட்ட விசால நோக்கில் என்ன சொல்ல வந்தேன் என்பதைப் புரிந்து கொள்ளாமல் - 'அக்கினிப் பிரவேச' தாயின் ஸ்தானத்தில் இருந்தோ அல்லது அவளது சரியான சகோதரனின் ஸ்தானத்திலிருந்தோ விஷயத்தைப் பார்க்காமல் இதைத் தங்களது சொந்த வாழ்க்கையின் - தங்களது பெண்டாட்டிகளின் கடந்த காலப் பிரச்சனையாகக் கருதி - இவர்களில் சிலர் வயிற்றெரிச்சல் கொள்வதோ வதை படுவதோ நியாயமாகாது.

தங்களின் நியாயமில்லாத வயிற்றெரிச்சலைத் தீர்த்துக் கொள்ளும் மற்றொரு சாரார் எனக்குப் பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு கதை வேறு எழுதி விடுகிறார்கள். எனது அக்கினிப் பிரவேசத்தின் எச்சங்களாக அவர்கள் தங்களுக்குச் சொந்தமில்லாத பிள்ளைகளைப் பெற்றுத் திருப்தி அடைகிறார்கள். பேனா பிடித்து எழுத வந்துவிட்ட இவர்கள் எனது சுய சிருஷ்டியின் தலைப்பையும் பாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் அப்படியே எடுத்துக் கையாளும்போது - என்னதான் இவர்கள் எனக்கு வாரிசுகளாக இருந்தபோதிலும் - அந்த சொந்தத்தை நிலை நிறுத்தவாவது 'இதன் விளைவு இது' என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த அடிப்படை நாகரிகம் கூட எழுதியவருக்கும் தெரியவில்லை; பிரசுரித்தவருக்கும் தெரியவில்லை என்பதை வருத்தத்துடன் சொல்ல நேருகிறது.

- சரி, போகட்டும். "

தேசியக் கவிதை மாதம்

இங்கே ஏப்ரலை "தேசியக் கவிதை மாதமாகக்" கொண்டாடுகிறார்கள். என் வலைப்பதிவில் நிறையக் கவிதைகள் போடுகிறேனோ என்று நினைத்திருந்தேன். சப்பைக்கட்டுச் சொல்ல ஒரு காரணம் கிடைத்தாயிற்று. குடியேற்றம் (immigration) குறித்து லோரி டயானா ரோஸன்பர்க் எழுதிய கவிதைகளைப் பின்வரும் சுட்டியில் காணலாம்.

லோரி டயானா ரோசன்பர்க்கின் கவிதைகள்

Tuesday, April 20, 2004

அமெரிக்க அரசியல் - சில பார்வைகள்

மாற்றுக் கருத்து சொன்னால் தமிழ்நாட்டில் சில அரசியல்வாதிகள் ஆட்டோ அனுப்புகிறார்களாம். அன்பான மிரட்டல்கள் வருகின்றனவாம். இணையத்தில் மாற்றுக் கருத்துச் சொன்னால் ஆட்டோ வராது, ஆனால் அதற்கினையான வார்த்தைகள் வரும். வம்புகளில் இழுத்துவிடப் படுவோம். நம்மைப் பற்றி மட்டுமில்லாமல் நம் முன்னோர்களையும் திட்டுகிற உரிமை இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆபாசமான வசை பாடுவதா கருத்துச் சுதந்திரம் என்று கேட்டால் அவர்களைப் பொருத்தவரை வசைகளும் கருத்தாக்கமே என்று சிலர் நியாயப்படுத்துகிறார்கள். இன்னும் சிலர் சாமர்த்தியமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு நம் சார்பாக அவர்கள் விஷயத்தைத் திரித்து விடுகிறார்கள். அரசியலில் இது எல்லாம் சகஜம் என்பதுபோல் வாழ்க்கையிலும் ஆகிவிட்டது. நேரடியாகச் சென்று முரண்களைச் சுட்டிக் காட்டிக் கேட்டால், சப்பைக்கட்டு பதில்களோ நான் சொல்லாததைப் பத்திரிகை பிரசுரித்து விட்டது என்று பிறர் மேல் பழிபோடும் காரணங்களோ கிடைக்கலாம். சொல்கிற கருத்து சரியோ தவறோ அதில் கடைசிவரை உறுதியாக நிற்க வேண்டும் என்கிற கொள்கை ஏதும் பொதுவாழ்வில் இருப்பவர்களில் பெரும்பாலோரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. சூழ்நிலைக்கேற்றவாறு எப்படித் தப்பித்துக் கொள்வது என்பதிலேதான் அனைவரும் மும்முரமாக இருக்கிறார்கள். உண்மையிலும் கூட எத்தனை கோணங்கள்!

அமெரிக்க அரசியலிலும் ஒன்றும் வாழ்ந்துவிடவில்லை. நிலைமை இதேதான். என்ன, ஆட்டோ அனுப்பப்படும் என்றெல்லாம் யாரும் மிரட்ட முடியாது. ஆனால், இருக்கிற பேச்சு, எழுத்து, அரசியல், சட்டம் ஆகியவற்றின் துணையுடன் மணிக்கணக்காகப் பேசி விஷயத்தை spin செய்து விடுவதில் மன்னர்கள். புஷ் ஈராக் மீது போர் தொடுத்தது சரியா என்று விவாதிக்க ஆரம்பித்தால், கிளிண்டனிலும் மோனிகாவிலும் கொண்டு நிறுத்துவார்கள். மாற்றுக் கருத்து சொல்கிற எதிராளியின் தனிப்பட்ட பலவீனங்கள் என்னவென்று தேடுவதிலும், எதிராளிக்கு நோக்கம் கண்டுபிடிப்பதிலுமே இங்குள்ள அரசியல் கட்சிகள் சிரத்தை காட்டுகின்றன.

வலதுசாரி பழமைவாதியான வில்லியம் எப். பக்லியிடம் (William F. Buckley) "நீங்கள் 45 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளீர்கள். இவ்வளவு புத்தகங்களை முனைப்புடன் எழுத உங்களைத் தூண்டியது எது?" என்று கேட்கப்பட்டது.

அவர் பதில்: "என்னுடைய எதிரி என்னை விட அதிகமாக எழுதிவிடக் கூடுமோ என்கிற பயம்தான்"

அமெரிக்க அரசியலில் பரஸ்பரம் குழிபறித்தலும் மாற்றுக் கருத்துடையோரை மேலே வரவிடக் கூடாது என்கிற எண்ணமும் எந்த அளவுக்கு முனைப்புடன் செயல்படுத்தப்படுகிறது என்பதை மேற்கண்ட கேள்வி-பதில் உணர்த்தும்.

ஆலிவர் ஸ்டோன் புகழ்பெற்ற இயக்குனர். ஆஸ்கார் பரிசு வென்றவர். சர்ச்சைக்குரிய விஷயங்களைப் படமெடுப்பவர் என்ற பெயரெடுத்தவர். "புஷ் குடும்பத்தைப் பற்றிய வரலாற்றைச் சொல்கிற தொலைகாட்சி படத்தை எப்போதாவது செய்வீர்களா?" என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அவர் பதில். "அந்த மாதிரி ஏதும் நான் செய்ய முயன்றால், ஓர் அடி படம் எடுப்பதற்குள் நான் அடுத்தடுத்தும் மூர்க்கமாகவும் தாக்கப்படுவேன். என் முதுகில் அந்த வடுக்களைச் சுமப்பதற்கு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று பதில் சொல்லியிருக்கிறார்.

என்ன அமெரிக்காவிலும், மனிதர்கள்தானே இருக்கிறார்கள். இப்படித்தான் இருக்கும் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

அமெரிக்க அரசியலில் டெமாக்கிரட்டுகள், ரால்ப் நேடருக்குப் போடும் வோட்டு புஷ்ஷீக்குப் போடப்படும் மறைமுக ஓட்டு என்று பிரச்சாரம் செய்கிறார்களாம். ஜான் கெர்ரிக்குப் போடப்படும் ஓட்டுகள் புஷ்ஷீக்குப் போடப்படும் ஓட்டு என்று ரால்ப் நேடர் பதிலடி கொடுக்கக் கூடும். பயப்படாமல் பதிலடி கொடுக்கக் கூடியவர்தான் அவர். சமீபத்தில் டைம் இதழில் ஒரு கட்டுரையில் ஜான் கெர்ரி ஜெயிக்க வேண்டுமானால் ஜான் மெக்எயினைத் தன் துணை ஜனாதிபதியாக அறிவிக்க வேண்டும் என்று ஒருவர் எழுதியிருந்தார். படித்ததும் சிரித்துவிட்டேன். இரு கட்சி முறையிலிருந்து ஒரு கட்சி முறைக்கு வழி சொல்கிறாரே என்று. ஓட்டு தேவைப்படும்போது விஷயங்களைக் குறித்துத் தங்களின் தீவிரமான கருத்தாங்களைக் காட்டிக் கொள்ளாமல், ஜெயித்தபின் அவற்றை மெதுவாக அமுலுக்குக் கொண்டுவருவது இங்கே இரண்டு கட்சிகளின் செயல்பாடாகவும் இருக்கிறது. ஜான் கெர்ரி ஜெயிக்க வேண்டுமானால், அதற்கு என்னுடைய ஆலோசனை. ரால்ப் நேடரின் ஆதரவு பெற்று அவரை ஜான் கெர்ரி தன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும். இதற்கு ரால்ப் நேடர் ஒத்துக் கொள்வாரா என்பது சந்தேகம்தான். ஆனால் ரால்ப் நேடர் மாதிரியான ஒருவரைத் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்காவிட்டால், இன்னும் நான்கு வருடங்களுக்கு புஷ் தொடர்வதற்கான வாய்ப்புகள் இப்போதைக்குப் பிரகாசமாகத் தெரிகின்றன. தேசபக்தி, பயங்கரவாதம் என்கிற கோஷங்களில் புஷ் வெற்றி பெற்றுவிடக் கூடும். ஜெயிக்கிறாரோ இல்லையோ அமெரிக்க அரசியலுக்கு ரால்ப் நேடர் மாதிரியானவர்கள் தேவைப்படுகிறார்கள். இந்திய தமிழ்நாட்டு அரசியலில் ரால்ப் நேடருக்குச் சமமாக யாரைச் சொல்ல முடியும் என்று யோசிக்கிறேன். ரால்ப் நேடர் ஜெயிப்பது என்பது கனவுதான். ஆனாலும், அவர் இருப்பது மற்ற வேட்பாளர்கள் தங்கள் வாக்குறுதிகளிலும், செயல்பாடுகளிலும் கவனம் காட்ட வைக்கும்.

பார்வை

பார்வை

- பி.கே. சிவகுமார்

நூறு எழுதினால்
ஒன்று தேறலாம்

அள்ளி வீசினார் பெருங்கவிஞர்
கவிதைக்கான அளவுகோலை

கவனமாய் பொறுக்கிக் கொண்டது
கேட்டு கிறுகிறுத்த
இளங்கவிஞர் கூட்டம்

நூறு யோசித்து
ஒன்று எழுதினால்
எல்லாம் தேறுமென்று
சொல்லியிருக்கலாமோ

முணுமுணுத்துக் கொண்டான்
மைக்செட் கட்ட வந்த
முனுசாமி தனக்குள்

(2003 கோடையில் எழுதப்பட்டது)

என் எழுத்தின் பெருமை

என் எழுத்தின் பெருமை

- பி.கே. சிவகுமார்

விமர்சனம் செய்வதற்கு
விசேடமாய் ஒன்றுமில்லை
என் எழுத்தில் என்றெண்ணிப்
பேனாவை மூடிவைத்து
பொடிநடை போகின்ற
விமர்சகரே

இப்படி ஒருவேளை
எதுவும் எழுதாமல்
உங்கள் பேனாவை
இழுத்து மூடவைத்த
பெருமை பெற்றதன்றோ
என் எழுத்து

(2003 கோடையில் எழுதப்பட்டது)

அறிவிப்பு

அறிவிப்பு

- பி.கே.சிவகுமார்

என் கவிதையினூடே
என்னைத் தேடவேண்டாம்
காணாமல் போயிருக்கக் கூடும்

(2003 கோடையில் எழுதப்பட்டது).

கற்றுக் கொடுக்கும் குழந்தைகள்

கற்றுக் கொடுக்கும் குழந்தைகள்

- பி.கே. சிவகுமார்

நண்பர் வீட்டில் வாங்கி
நட்டுவைத்த ரோஜாச் செடி
எப்போது பூக்கு மென்ற
ஏக்கம் போச்சு

எத்தனை இலை
துளிர்க்கிறதென தினம்
எண்ணி மகிழ்கின்ற
குழந்தைகளைப் பார்த்தபின்னே

(2003 கோடையில் எழுதப்பட்டது)

கவிதையில் நான் காணாதவை

கவிதையில் நான் காணாதவை

- பி.கே. சிவகுமார்

நவீனத்துவம்
பின்நவீனத்துவம்
தலித்தியம்
பெண்ணியம்
வெங்காயம்
வெள்ளைப் பூண்டு

ஜமாயுங்கள்
விமர்சக நண்பரே

கவிதை எழுதப்
போகணும் எனக்கு.

(2003 கோடையில் எழுதப்பட்டது.)

Monday, April 19, 2004

விமர்சகரும் வாசகரும்

தமிழில் விமர்சனத் துறை வளரவே இல்லை என்றே சொல்லலாம். இங்கே இருக்கிற விமர்சகர்கள் பொருள் குற்றம், சொற் குற்றம், இலக்கணக் குற்றம் என்று குற்றம் கண்டுபிடிப்பவர்களாகவே காலம்காலமாக இருந்து வருகிறார்கள். இடையில் க.நா.சு, கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி.ரகுநாதன் என்று பலர் விமர்சனத்தை ஒரு கலையாக வளர்க்க முயன்றார்கள். ஆனாலும், அவர்களும் கூட தங்களின் சுய விருப்பு வெறுப்பு சார்ந்து படைப்புகளை விமர்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டார்கள். அந்தக் குற்றச்சாட்டுக்கு பொருத்தமாக அவர்களின் மதிப்பீடுகள் அவ்வப்போது இருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. தமிழ் இலக்கண நூலான நன்னூலும் கூட பத்துக் குற்றம் என்று குற்றங்களைப் பட்டியலிடுகிறது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்னவரின் பரம்பரை என்று தமிழர்கள் இலக்கிய உலகில் குற்றம் கண்டுபிடித்துப் புஜம் தட்டிக் கொள்கிறார்கள். புகழ் பெற்றவர் எழுதியதில் குற்றம் கண்டுபிடிப்பது, பிடிக்காதவர் எழுதியதில் குற்றம் கண்டுபிடிப்பது, தன் அறிவைக் காட்டுவதற்கு விமர்சிக்கிற படைப்பைப் பலியாக்கிக் குற்றம் சொல்வது, தாம் நம்புகிற சித்தாந்தத்துக்குப் பொருந்தாததைத் தூக்கி எறிய விமர்சனம் செய்வது என்று தமிழில் விமர்சனத் துறை வெகுவேகமாக வளர்ந்திருக்கிறது.

படைப்புகளைப் பாராட்டுபவர்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அவர்களும் இத்தகைய குறுகிய மனப்பான்மைகளுக்கு உள்ளானவர்களாகவே இருக்கிறார்கள். குழு அமைத்துக் கொண்டும், நண்பர் குழாமுக்குள்ளும் ஒருவரை ஒருவர் லஜ்ஜையின்றியும் நார்ஸிஸ மனப்பாங்குடனும் பாராட்டிக் கொள்கிற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தமக்கென ஒரு சிறிய வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அந்த வாசகர்களின் பாராட்டில் பரமனைக் காண்பவர்கள். வாசகர்களின் பாராட்டைப் பெறுவதும், வாசகர்களை வெல்வதும் எழுத்தாளனின் வேலை அல்ல. எழுத்தாளனின் வெற்றி வாசகர்களை மட்டுமல்ல தன்னையேயும் கடந்து செல்வதில் இருக்கிறது என்று எழுதிய ஜெயகாந்தனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. அந்தத் தெளிவு இருந்ததால்தான் வாசகர்கள் என்ன சொல்வார்கள் என்கிற சுயக்கட்டுப்பாட்டு உணர்வுகள் இன்றித் தான் நம்பியதையும் விரும்பியதையும் ஜெயகாந்தன் போன்றவர்களால் எழுத முடிந்தது. ரசிகர்களின் விசிலுக்கும் கைதட்டலுக்கும் ஏற்றவாறு குனிந்தும் நெளிந்தும் வளைத்தும் குலுக்கியும் ஆடுகிற ரிகார்டு டான்ஸ்காரிகள் போல் வித்தை காட்டுபவர்களாக இன்றைக்குத் தமிழில் நிறைய எழுத்தாளர்கள் மாறி விட்டார்கள். வாசகர்களின் கரகோஷத்தின் வலிமைக்கேற்ப எழுத்தாளரின் எழுத்து மதிப்பிடப்படுகிறது. வெகுஜனக் கதைகள் எழுதுகிற எழுத்தாளர்களின் பின்னால் எத்தனை நீண்ட வரிசையும் கைதட்டி மகிழ்கிற குழாமும் இருக்கிறது என்பதை இன்று பத்திரிகையுலகில் மட்டுமில்லாமல் இணையத்திலும் ஒருவர் அறிந்து கொள்ள இயலும். லௌகீக வாழ்வின் வெற்றிகள், புகழால் கிடைக்கிற வெற்றிகள், இவற்றையெல்லாம் தாண்டியது எழுத்தின் வெற்றி என்பதை அறியாதவர்கள் இவர்கள்.

ஆனாலும், இத்தகைய எழுத்தாளர்கள் மிகவும் ஜாக்கிரதையானவர்கள். நான் உன்னை விமர்சிக்க மாட்டேன், நீ என்னை விமர்சிக்க வேண்டாம். நீ என்னைப் பாராட்டினால் நான் உன்னைப் பாராட்டுவேன் என்பது மாதிரியான எழுதாத ஒப்பந்தம் வைத்துக் கொண்டு, வாய்ப்பு கிடைக்கும்போது அதை நடுநிலை என்கிற போர்வையில் வெளிப்படுத்தி விடுவார்கள். தங்கள் வட்டத்தை விட்டு வெளியே போயோ, மாற்றாரின் இடத்திலோ பொது இடத்திலோ எழுதத் துணிய மாட்டார்கள். விவாதங்களில் இறங்க மாட்டார்கள். அப்படி இறங்குகிற ஒரு சிலரும் தம்முடைய சீட கோடிகளின் Z பிரிவு பாதுகாப்புடனேயே இறங்குவார்கள். எப்போதும் பரபரப்புடனும், செய்திகளில் தம் பெயர் அடிபடுமாறு பார்த்துக் கொண்டும், அமைதியற்றும், பிறர் பாராட்டும்வண்ணம் முயற்சியெடுத்து நடந்துகொண்டும் இருக்கிற இத்தகைய எழுத்தாளர்கள், தங்கள் மீதும் தங்களின் எழுத்துகள் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள். ஒரு மாதத்துக்கு யாரும் இவர்களைப் பாராட்டாவிட்டால், இவர்கள் எழுதுவதை விட்டுவிட்டு தேசாந்திரம் போய்விடக் கூடும்.

இன்னும் சிலர் வேறுவகையானவர்கள். ஜெயமோகன் வார்த்தைகளைப் பயன்படுத்திச் சொன்னால் இவர்கள் தகவல் சேகரிப்பவர்கள், செய்தி வாசிப்பவர்கள். சுருக்கமாக, புத்தகப் புழுக்கள். இவர்கள் அறிந்திராத விஷயமே இல்லையோ என்று மூக்கில் விரல் வைக்க வைப்பவர்கள். ஆனால், படைப்பூக்கம், ரசனை என்பது குறித்த அடிப்படைப் பிரக்ஞைகூட இல்லாதவர்கள். எதைப் பற்றி பேசினாலும் அதில் தங்களின் அறிவையும் வீச்சையும் காட்டிக் கொள்வதில் முனைகிற இவர்களால் பிறர் எழுதுகிற எதையுமே ரசிக்கவோ அனுபவிக்கவோ இயலும் என்று தோன்றவில்லை. ஏனெனில், எல்லாப் படைப்புகளையும் விடவும் தம் அறிவும் திறனும் உயர்ந்தது என்று நம்புகிறவர்கள் இவர்கள்.

இவற்றை அறிந்திருந்தும் அலட்டிக் கொள்ளாமல், மற்றவர்கள் படிக்கிறார்களா இல்லையா, வாசகக் கூட்டம் கைதட்டுகிறதா இல்லையா, விமர்சனம் வருகிறதா இல்லையா என்கிற கவலைப்படாமல், தவம் மாதிரி எழுதிக் கொண்டு மட்டுமே இருக்கிற எழுத்தாளர்களும் இல்லாமல் இல்லை. ஆனால், அவர்கள் பெரும்பாலும் வெளித்தெரியா விட்டாலும், அவர்களின் எழுத்துகள் காலம் காலமாக நிலைத்து நிற்கக் கூடியவை. தம் எழுத்தின் வலிமை உணர்ந்த ஞானச்செருக்கு பெற்ற இத்தகைய எழுத்தாளர்களை வாழ்க்கை பல நேரங்களில் புரட்டிப் போட்டு விடுகிறது. புரட்டிப் போடுகிற வாழ்க்கைக்குப் பயந்து போகிற சில நல்ல எழுத்தாளர்கள் சமரசங்கள் செய்து கொள்ளவும் தயங்குவதில்லை. மகள் கல்விக்காக சமீபத்தில் சமரசம் செய்து கொண்ட ஒரு கவிஞரைக் குறித்துப் படிக்கும்போது வருத்தம் உண்டாகியது. ஆனாலும், இவர்களின் லௌகீக சமரசங்களை மீறி எழுந்து நிற்கிற வலிமை கொண்டது இவர்கள் எழுத்து.

தமிழில் விமர்சனம் என்று ஆரம்பித்த உடனேயே மேற்கண்ட நிதர்சனங்கள்தான் கடை விரிக்கின்றன. விமர்சனம் வாசகனுக்கு உதவக் கூடியதாக இருக்கலாம். எழுத்தாளன் என்ற முறையில் எனக்கு அதன்மீது நம்பிக்கையில்லை என்கிறார் ஜெயகாந்தன். விமர்சனங்களிலேயே மொத்தமாக நம்பிக்கை இல்லை என்கிறார் சா.கந்தசாமி. இப்போது வருகிற விமர்சனங்கள் வாசகனைப் படைப்பை ரசிக்க இயலாமல் படைப்பின் மீது காய்தல் உவத்தலையே வளர்க்கின்றன என்பதால், விமர்சனங்களால் வாசகனுக்குக் கூட எவ்வளவு நன்மை என்கிற கேள்வி எழுகிறது.

ஒரு நல்ல விமர்சகர் முதலில் நல்ல வாசகராக இருக்க வேண்டும். நல்ல வாசகர்கள் ஒரு படைப்பு தன்னுள் ஏற்படுத்துகிற மாற்றங்களை அந்தரங்கமாக உணர்பவர்கள். ஒரு படைப்புச் சிறந்தது என்பதை அதன் குறைகளிலும் தொக்கி நிற்கிற வாழ்வின் அனுபவத்தையும் செய்தியையும் கொண்டு அறிபவர்கள். சிறந்த படைப்புகளுக்கு அதன் குறைகளே ஆபரணங்கள் என்று உணர்ந்து மகிழ்பவர்கள். சிறப்பற்ற படைப்புகளுக்கு அதன் நிறைகளும் குறைகளே என்றும் தெளிந்தவர்கள். எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். நான் சந்தித்த வாசகர்களிலே மிகச் சிறந்தவர். அவர் வெறும் வாசகர் மட்டுமல்ல. அறிவுஜீவியும் விஷயங்களில் நுனியளவு செல்கிற புலமையும் பெற்றவர். ஆயினும், ஒரு படைப்பைப் பற்றிப் பேசுகிற போது, ஒரு குழந்தையின் குதூகலத்துடன் படைப்பில் விமர்சகரும் சராசரி வாசகரும் காணத் தவறுகிற நுண்ணிய பகுதிகளையும் உணர்வுகளையும் ஒரு சாதாரண வாசகராக விளக்கக் கூடியவர். படைப்புகளைப் பற்றி அவரைப் பேச விட்டுவிட்டு, கேட்டுக் கொண்டிருக்கிற ஆனந்தத்துக்கு ஈடு இல்லை. எழுதிய எழுத்தாளரைவிடவும் சிறப்பாகவும் நுட்பமாகவும் எழுத்தாளரின் படைப்பை அனுபவித்து ரசிக்கக் கூடியவர் என்கிற பாராட்டு பெற்றவர். எந்த விமர்சகரும் இதைச் செய்துவிட இயலாது. நல்ல வாசகராக இருப்பதால் மட்டுமே நண்பருக்கு இது சாத்தியமாகிறது என்று நினைத்துக் கொள்வேன்.

தமிழில் விமர்சகர்கள் பெருகி விட்டார்கள். வாசகர்கள் குறைந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. ஒரு நல்ல படைப்பை எந்த விமர்சனமும் கெடுத்துவிட முடியாது. ஒரு தரமற்ற படைப்பை எந்த விமர்சனமும் தூக்கி நிறுத்திவிட முடியாது. நல்ல எழுத்து தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்று சொல்வதுபோல, நல்ல படைப்பு அதன் தரத்துக்கேற்ற வாசகர்களைத் தானே தேடிக் கொள்ளும். நமக்கு இன்று தேவை படைப்பு தன்னுள் ஏற்படுத்துகிற எண்ணங்களையும் சலனங்களையும் பகிர்ந்து கொள்கிற வாசக அனுபவங்களே அல்லாமல், விமர்சனம் என்கிற பெயரில் வருகிற சுய விருப்பு வெறுப்புகளும் குற்றச்சாட்டுகளும் இல்லை. எந்த ரசனையும் ஒருவரின் அறிவு, தேர்வு, முதிர்ச்சி, அனுபவம் மற்றும் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப சார்புடையதாக இருக்கக் கூடும் என்பது போல, எந்த விமர்சனமும் சார்புடையது என்பதிலே சந்தேகமில்லை. ஒரு நல்ல விமர்சனம் வாசக அனுபவத்தைச் சிறப்பாகச் சொல்வதாகவே இருக்கும். விமர்சனங்கள் இலக்கிய அறிவை வளர்த்துக் கொள்ள உதவக் கூடும். அனுபவித்தலின் ஆழத்தை முழுமையாகச் சொல்லிவிட இயலாது. நடுநிலையான விமர்சனம் என்று நம் காதில் பூ சுற்றுபவர்களிடையே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நல்லோர் பிறர்குற்றம் நாடார், நலந்தெரிந்து
கல்லோர் பிறர்குற்றம் காண்பரோ? அல்லாத
என்போல்வார் என்னை இகழ்வாரோ? என்கவிக்குப்
பின்பரோ காண்பார் பிழை

- என்னும் ஔவையாரின் பாடலுடன் விமர்சனம் குறித்த என் எண்ணங்களை நிறைவு செய்கிறேன்.

Sunday, April 18, 2004

கடத்தலும் கடத்தல் விளையாட்டு விளையாடும் குழந்தைகளும்

ஒரு குழந்தை காணாமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், ஓடிப்போனவர்கள், துரத்தப்பட்டவர்கள் என்று காணாமல் போகிற குழந்தைகளை வகைப்படுத்துகிறார்கள். 1999-ல் எடுக்கப்பட்டு 2002ல் வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி - 1999ல் 797,500 குழந்தைகள் அமெரிக்காவில் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 58,200 குழந்தைகள் குழந்தையின் குடும்பத்தைச் சாராதவர்களால் கடத்தப்பட்டனர். 203, 900 குழந்தைகள் குடும்பத்தினரால் கடத்தப்பட்டனர். கடத்தப்படுகிற குழந்தைகள் கொலை செய்யப்படுவது அரிதாக நிகழ்வது என்று 1997ல் வெளியான அறிக்கை ஒன்று சொல்கிறது. ஆனாலும், சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் காணாமல் போன குழந்தைகளைக் குறித்து மோசமான விளைவுகளை எதிர்பார்த்துக் கவலை கொள்ளச் செய்கிறது. கொலை செய்யப்படுகிற குழந்தைகளில் 74 சதவீதத்தினர் கடத்தப்பட்டு மூன்று மணிநேரங்களுக்குள் அத்தகுத் துயர முடிவை எதிர்கொள்கின்றனர் என்பதும் நெஞ்சை உறைய வைக்கிற நிஜம்.

கடத்தப்படும் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு இரையாவது இங்கு வளர்ந்து வருகிற அதிர்ச்சியூட்டுகிற நிகழ்வாகிவிட்டது. இதைத் தடுக்கும் பொருட்டே மேகன்ஸ் லா (Megan's Law) என்கிற சட்டம் அமுலுக்கு வந்தது. அச்சட்டத்தின்படி, சுற்றுவட்டாரத்தில் வாழ்கிற பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வரலாறுடைய நபர்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள இயலும். ஆனாலும், இவைகளை மீறிக் குழந்தைகள் கடத்தப்படுவதும், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதும் துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்தே வருகிறது. புளோரிடாவில் சார்லி புருசியா (Carlie Brucia) என்னும் 11 வயதுப் பெண் குழந்தை சமீபத்தில் பாலியல் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரால் கைப்பிடித்து நடத்தச் செல்லப்பட்டுக் காணாமல் போன காட்சி வீடியோவில் பதிவாகி வந்து அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரார்த்தனைகளும் போலிஸின் பிரயத்தனங்களும் பலிக்காமல்போய் சில நாள்களுக்குப் பின் அந்தக் குழந்தையின் உயிரற்ற உடலையே போலீஸார் மீட்க முடிந்தது. அந்தக் குழந்தையைக் கைப்பிடித்து கடைசியாக அழைத்துச் சென்ற நபர் இடையில் கைது செய்யப்பட்டும் குழந்தையைக் காப்பாற்ற இயலவில்லை. அதனாலேயே, குழந்தை காணவில்லை என்றாலே மனம் மோசமான ஒன்றையே நினைத்துக் கவலையுறுகிறது.

மரணதண்டனை கூடாது என்று நம்புகிறவர்களுள் நானும் ஒருவன். ஆனாலும், குழந்தைகளுக்கு இப்படி நேர்கிற கொடுமைகளைப் பார்க்கும்போது மனம் கொதிக்கிறது. ஒரு தந்தையாக அழுகையும், வேதனையும், கோபமும் பிறக்கின்றன. குழந்தைகளைச் சூறையாடிக் கொல்கிற பாதகர்களைத் தூக்கில் போட வேண்டும் என்கிற ஆவேசமும் சிலநேரங்களில் வருகிறது.

இப்படிப்பட்டச் சூழ்நிலையில் விஸ்கான்ஸின் மாநிலத்தில் பயிலும் ஆட்ரே ஸீலர் (Audrey Seiler) என்ற இருபது வயது இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி சமீபத்தில் காணாமல் போனது அமெரிக்கர்களைப் பதட்டம் கொள்ளச் செய்தது. ஆட்ரே உயர்நிலைப் பள்ளியில் வாலிபால் மற்றும் பாஸ்கட்பால் அணியின் தலைவியாக இருந்தவர். வகுப்பில் படிப்பில் மூன்றாவது இடம் பெற்றுக் கல்லூரியில் சேர்ந்தவர். மற்றவர்கள் ரோல் மாடல் என்று சொல்கிற அளவுக்குப் பள்ளியிலும் அவர் வாழ்ந்த சுற்றுப்புறத்திலும் பெயர் பெற்றவர். அவர் கல்லூரி டார்மிலிருந்து (dorm) அவர் கடைசியாக வெளியேறியக் காட்சியைத் தொலைகாட்சியில் பார்த்த அனைவருமே அவர் நல்லவிதமாக திரும்ப வேண்டும் என்று ஒரு கணமாவது வேண்டிக் கொண்டவர்கள்தான்.

நல்லவேளையாக இந்த முறை எதிர்பார்த்த எதிர்பாராதது எதுவும் நிகழ்வில்லை. ஆட்ரே சில நாள்களுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டார். அவரைத் தேடிய போலீஸீம், உள்ளூர் மக்களும், அவர் நண்பர்களும், அவர் ஓய்வு நேரச் சேவையாகப் பாடம் சொல்லிக் கொடுத்த பள்ளி மாணவர்களும் மட்டுமில்லாமல் அமெரிக்காவே சந்தோஷப் பெருமூச்சு விட்டது. அவரைக் கடத்தியவரைத் தேடுகிற பணி நடந்தது. பின்னர், வெளிவந்த தகவல் ஆச்சரியமளித்தது. ஆட்ரேவை யாரும் கடத்தவில்லை. இந்த நாடகத்தை அவரே நடத்தியிருக்கக் கூடும் என்று போலீஸார் சந்தேகிக்க ஆரம்பித்தனர். காணாமல் போன குழந்தைகளின் வகைகளில் "தன்னைத் தானே கடத்திக் கொண்டோர்" என்று ஒரு புதிய வகையைச் சேர்க்க வேண்டுமோ?

படிப்பிலும், சமூகத்திலும் வெற்றி பெற்றவராகக் கருதப்படுகிற, அனைவராலும் விரும்பப்படுகிற ஆட்ரே தன்னைத்தானே கடத்திக் கொள்வதற்கான சமூக, உளவியல் காரணங்கள் என்னவென்று ஆராய வேண்டும். "தனிமையை வேண்டி" அவர் இதைச் செய்ததாக முதலில் செய்திகள் வந்தன. அவர் பாய் பிரண்டின் கவனத்தைப் பெற அவர் இதைச் செய்தார் என்று இப்போது சொல்கிறார்கள். இந்தக் காலத்துக் குழந்தைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்குப் பெற்றோராகவும் நண்பனாகவும் இருப்பதே இந்த உலகத்தில் கடினமான வேலை என்பேன். ஆட்ரே மீது போலீஸார் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக இரண்டு மென்மையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆட்ரேவுக்குத் தேவை தண்டனை அல்ல, ஆதரவே என்று சில பத்திரிகைகள் எழுதியுள்ளன. நானும் அவ்வாறே நினைக்கிறேன்.

தண்டனைகளால் குழந்தைகளை விட்டு நாம் தூரவே செல்கிறோம். அன்பும் ஆதரவுமே குழந்தைகளுடனான நம்முடைய நீண்ட கால உறவில் உதவும். ஆனால், ஆட்ரே போன்ற குழந்தைகள் இப்படி செய்வதால், இது "புலி வருகிறது" கதையாக மாறி, தேவையான நேரத்தில் போலீஸ் மற்றும் நீதித்துறையினரை சரியாகச் செயல்படாமல் செய்துவிடுமோ என்கிற அச்சமும் இருக்கிறது. ஆனால், புலி வருகிறதோ இல்லையோ, புகார் வந்தால், காவல்துறையினர் அதைச் சிரமேற்கொண்டு விசாரிப்பவர்களாகவே இங்கே இருக்கிறார்கள் என்பது நல்ல விஷயம்.

குழந்தைகள் வீடு விட்டு வெளியே போய், படித்து, விளையாடி முடித்துவிட்டு, பத்திரமாக வீடு திரும்பும் வரை, வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிற பெற்றோரில் நானும் ஒருவன். அந்த வகையில் குழந்தைகளின் பாதுகாப்புக்கும் பத்திரத்துக்கும் உத்தரவாதமளிக்கக் கூடிய எந்தச் சட்டத்தையும் ஆதரிப்பவனாக நான் இருப்பேன். ஆனால், சட்டங்களை விடவும் குழந்தைகளிடையே நாம் வைத்திருக்கிற நல்லுறவு நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை. இந்த விஷயத்தில் என் குழந்தைகளின் உற்ற தோழன் என் மனைவிதான். அவர்களுடன் நான் செலவிடும் நேரம் மிகக் குறுகியது. என் குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் சமீபகால உறுதிமொழி.

Saturday, April 17, 2004

காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - 4ஆம் தொகுதி

பாரதி தம்முடைய நூல்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வரிசைக்கிரமமாய் வெளிக்கொணர விரும்பினார். அதன் பொருட்டு நிதி சேகரிப்புக்காக அவர் 28 ஜீன் 1920ல் எழுதிய ஆங்கிலச் சுற்றறிக்கை இன்று வரலாற்று ஆவணம். குறைந்தபட்சம் நூறு ரூபாயையாவது எதிர்பார்த்து பாரதி அன்று எழுதியக் கடிதத்துக்கு சரியான பதிலில்லாமல்போனது பாரதி போன்ற ஒரு கவிஞனை எவ்வளவு காயப்படுத்தியிருக்கும் என்று அறிய நேரும்போது இன்றும் உண்டாகிற வருத்தத்துக்கு அளவில்லை. தன் படைப்புகள் மீதிருந்த நம்பிக்கையினாலும் அவை நிச்சயம் விற்று விடும் என்கிற ஆர்வத்திலும் 40 தனிப்புத்தகங்களாக அவற்றை வெளியிடவும், ஒவ்வொரு புத்தகத்திலும் முதல் பதிப்பாக 10,000 பிரதிகள் அடிக்கவும் பாரதி திட்டமிட்டிருந்தது அவன் பெருங்கனவைக் காட்டுகிறது. கிடைக்கும் நிதியைக் கடனாகக் கொண்டு ஸ்டாம்பு ஒட்டிப் புரோ-நோட்டு எழுதித் தரவும், மாதம் 2 சதவீதம் வட்டி தரவும் பாரதி முன்வந்திருந்தது கவிஞனின் தன்மானத்தையும் ஜனநாயகத் தன்மையையும் காட்டுகிறது. பாரதி போன்ற கவிஞனைத் தமிழ் கூறும் நல்லுலகம் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் எதிர்பார்த்தபடி கொண்டாடி இருந்தால்தான் அது ஆச்சரியப்படத்தக்க விஷயமாக இருந்திருக்குமோ என்றும் சில நேரங்களில் தோன்றுகிறது.

ஆனாலும், பாரதிக்குப் பிந்தைய காலகட்டத்தில் தமிழிலும், வரலாற்றிலும் பாரதியின் இடத்தைப் பெற்றுத் தரவும் நிலை நிறுத்தவும் அயராது உழைத்திருக்கிற கணக்கற்ற பாரதிப் பித்தர்களுக்குக் காலம் கடமைப்பட்டிருக்கிறது. அவர்களின் வரிசை நீண்டு நெடிந்தது. வாழையடி வாழையாய் வளர்வது. பாரதிக்குப் பின் வந்த அனைவருமே பாரதியின் வாரிசுகள்தான் என்று ஜெயகாந்தன் சரியாகத்தான் சொன்னார். வ.ரா, ரா.அ. பத்மநாபன், ஜீவா, இளசை மணியன், பாரதிதாசன், ஜெயகாந்தன், தொ.மு.சி.ரகுநாதன், சீனி விசுவநாதன், பெ.சு.மணி என்று பலப்பலர் அவர்களுள் அடங்குவர். பாரதியை முன்னெடுத்துச் சென்றதிலும், தமிழில் அவனிடத்தை மீட்டுத் தந்ததிலும் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு சற்றும் குறைவானதும் அல்ல.

பாரதியைப் பற்றி இன்று தமிழில் கணக்கற்ற நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், பாரதி கனவு கண்ட விதமாக அவன் படைப்புகளை கால வரிசைப்படுத்தி வெளியிட்டவர்கள் யாருமில்லை என்ற பழி பாரதி தொண்டர் சீனி.விசுவநாதன் மூலம் கழிந்து வருகிறது. இதற்கு முன்னர் பாரதியைப் பற்றி ஏறக்குறைய 25 அரிய நூல்களை வெளியிட்டவர் சீனி.விசுவநாதன். தன் வாழ்க்கையையும் முயற்சிகளையும் பாரதிக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர். கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகளின் மூன்று தொகுதிகளை ஏற்கனவே சிறப்பாக வெளியிட்டவர். நான்காம் தொகுதி இப்போது வெளிவந்திருக்கிறது. தனிமனித முயற்சியாக இந்தப் பெரும் காரியத்தில் சீனி.விசுவநாதன் ஈடுபட்டுள்ளது, தொகுப்பில் காண நேரும் சில எழுத்துப் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளச் சொல்கிறது.

இத்தொகுப்பில் மொத்தம் 207 படைப்புகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரைக்கும் பின்னே இருக்கிற பதிப்பாசிரியரின் குறிப்பு வாசகருக்கு மிகவும் முக்கியமானது. கட்டுரை தொடர்பான வரலாற்றுத் தகவல்களையும், அதிலே குறிப்பிடப்பட்டிருக்கும் மாந்தர் தம் குறிப்புகளையும், இன்ன பிற விவரங்களையும் பதிப்பாசிரியர் குறிப்பு அளிக்கிறது. சீனி.விசுவநாதனின் அரிய பங்களிப்பு இது.

பாரதியை நேசிக்கிற ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய அரிய பெட்டகம் பாரதியின் கால வரிசைப்படுத்தப்பட்ட படைப்புகளின் தொகுதிகள். இதன் பிற தொகுதிகளையும் விரைவில் சீனி.விசுவநாதன் கொண்டுவர அவருக்கு இறையருள் புரிய வேண்டுகிறேன்.

சந்திப்புகள்

சந்திப்புகள்

- பி.கே. சிவகுமார்

முதல் சந்திப்பில்
நீ பொருட்படுத்தவில்லை
நானும்
நான் பொருட்படுத்தாததில் இருந்த
பொருட்படுத்தலைப் புரிந்து கொண்டாய்

அடுத்த சந்திப்பில்
கைகுலுக்கிக் கொண்டோம்
என் கையின் உறுதி
முரடனாய்க் காட்டியிருக்குமோ வென்றும்
உன் கையின் மென்மை
ஆர்வமில்லையெனக் காட்டியிருக்குமோ வென்றும்
நினைத்துக்கொண்டோம் மனதுக்குள்

மூன்றாம் சந்திப்பின்போது
குடித்திருந்தேன்
அசூயை படாமலும்
எச்சரிக்கை உணர்வின்றியும்
நீ பேசியது பிடித்திருந்தது
பீரின் வாசமும் புகையும்
நண்பர்களின் இரைச்சலும் விட்டு
காலாற நடந்தோம்
என்ன உளறினேன் என நினைவில்லை
மென்மையாய் சிரித்தாய்
சியர்ஸ் சொல்லும்போது
உரசிக் கொள்ளும் கோப்பையைப் போல்

அடுத்த சந்திப்பில்
மெதுவாக விட்டுவிட்டு
பீர் உறிஞ்சுவதுபோல்
உன்னைப் பற்றி
சொல்ல ஆரம்பித்தாய்
உன் முகம் காட்டும்
உணர்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
சினிமா பார்த்தோம்
சாப்பிட்டோம்
பார்க்கலாமெனப் பிரிந்தோம்

நான்கு சந்திப்புகள்
போதுமென்பர் நண்பர் சிலர்
காதல் சொல்ல
தனிமையின் கொடுமையும்
புறக்கணிப்பின் வலியும்
தெரியாது அவர்களுக்கு என்பதால்
அடுத்த சந்திப்புக்கு நாளும்
பேசுவதற்கு விஷயங்களும்
தேடிக்கொண்டிருக்கிறோமா.

(2003 கோடையில் எழுதியது.)

Friday, April 16, 2004

தமிழ் மாநாடு

தமிழ் மாநாடு

- பி.கே. சிவகுமார்

சுளையாய்த் தமிழ் சுவைக்கச்
சுற்றுப்புறக் கூட்டம் சேர்த்தார்
அலையாய்த் திரண்டு வந்தார்
அறிஞரும் அரங்கு சிறக்க

இந்தி வொழிக வென்று
இனப்பற்றைக் காட்டி வைத்தார்
செம்மொழி யாக்கச் சொல்லி
சேர்ந்து போராடுவோ மென்றார்

இத்தனை காலம் தமிழ்
இழிபட்டது போது மென்றார்
வாங்குகின்ற மூச்சை நிறுத்தி
வைத்திருந்த தண்ணீர் குடித்துப்பின்
புறநூனூறாய்ப் புறப்பட்டுப் போவோம்
துயர்பட்டு உரமாகிப்பின் தமிழன்
தூக்கத்தை விழிக்க வைப்போமென்றார்

தூங்குகின்ற கூட்டம் கண்டு
தூக்கி நிமிர்த்த இடையிடையே
சோக்குகள் சொல்லிச் சிரித்தார்
அரசியல் அபிமானம் ஆங்காங்கே
தெளித்துக் களித்தார் தேவைக்கேற்ப
கண்ணதாசன் கவித்திற மென்று
சினிமாப்பாட்டு பாடிச் சென்றார்

முடித்தி றங்கியபின் தனக்குள்ளே
அசத்தி விட்டோமென அகமகிழ்ந்தார்
எத்தனை காலம் செய்தி
எதில் வருமெனத் தெளிந்தார்
மற்றவர் பேசும்போது தன்னை
மறந்து றங்கிப் போனாரே.

(2003 கோடையில் எழுதப்பட்டது.)

Thursday, April 15, 2004

தொலைபேசி யெடுக்கும் முடிவுகள்

தொலைபேசி யெடுக்கும் முடிவுகள்

- பி.கே.சிவகுமார்

அப்பாவுக்கும் வயசாச்சாம்
இலக்கியமும் அலுத்துப் போச்சாம்
நானாவலசை ராமன்
கள்மொந்தை கட்டியிருக்கிறார்
உனக்குப் பிடிக்குமே
போதும் வந்துவிடு
பேசிக்கொண்டிருக்கலாம் என்கிறார்

அம்மாவுக்கு இன்னும் ஆஸ்த்துமாவுடன்
இடைவிடாத போராட்டம்
போதும் வந்துவிடு
நீ பக்கத்தில் இருந்தா
தைரியமா இருக்கும் என்கிறார்

போதும் வந்துவிடு வென்கிற
தங்கைக்கும் மைத்துனருக்கும்
அரசாங்க உத்தியோகம்
சிட்டியில் பிளாட் கார்
வாங்கும் அவசரக் கனவுகள்
நீ திரும்பி வந்தா
உன் தங்கைன்னு சொல்லிக்கற
அந்தஸ்து வேணாமா வென்று
என் அந்தஸ்து பற்றிக்
கவலைப்பட்டுச்
சிரிக்க முயல்கிறாள்

மாமியாருக்குத்தான்
யாருமில்லை
வருத்தமு மில்லை
வாரமொருமுறை மகளின்
நல்லா இருக்கேன்மா வும்
பேரக்குழந்தைகளின்
ஹாய் பாட்டியும்
போதும வருக்கு
மீதி நேரங்களில் மென்று துப்ப
புகையிலையும் வெற்றிலைச்
சாறு மிருக்கின்றன

சொந்தங்களின் சங்கடங்களும்
சண்டையுமில்லாத
நிம்மதியான வாழ்க்கை
இங்கேயே இருக்கலாம்
என்கிறாள் மனைவி

ஐ லவ் இண்டியா
திஸ் ஈஸ் மை கன்ட்ரி
என்கிறார்கள் குழந்தைகள்

வாழ்க்கை அலுத்தவர்க ளெல்லாம்
கம்ப்யூட்டர் ரசிக்கிறார்களாம் அங்கே
அப்பாவுக்கு ஒண்ணு வாங்கித் தரணும்
நண்பர் யாரேனும் போனால்
ப்ளூ லேபிள் அனுப்பி வைக்கணும்

அம்மாவுக்குத் தாதி
வைக்கச் சொல்லணும்
ஆஸ்த்துமா இன்ஹேலர்கள்
அனுப்பணும்
கிறுகிறுவென்று வராத
அமெரிக்க இன்ஹேலர்கள்
மாத்திரைக்கு மேலென்று
பார்ட்டியில் சொன்னார்
போனவாரம் டாக்ட ரொருவர்

தங்கைக்கு முடிந்தாலே
தும் உதவப் பார்க்கணும்

விடுமுறையில் வழக்கம்போல்
குடும்பத்தை அனுப்பி வைக்கலாம்
கடைசி யிரண்டு வாரம்
அழைத்துவரப் போகலாம்

கள்ளுக்குப் பதில்
கரோனா எக்ஸ்டரா இருக்கிறது
இலக்கியத்துக்கு?
திலீப்குமாருக்கு எழுதினால்
கப்பலில் அனுப்பி வைப்பார்

பாட்டியின் மரபீரோ

(சிறுபிராயத்து நினைவுகள், தாத்தா பாட்டிகள், குழந்தைப் பருவம் ஆகியவை குறித்து எழுதுவதெல்லாம் பழகிப்போன சாதாரண நிகழ்வுகள். கவிதை அதையெல்லாம் மீறி வித்தியாசமானக் கருப்பொருள்களைப் பேச வேண்டும் என்று கவிஞர்கள் சொல்வதுண்டு. ஆனாலும், பழகிப்போன விஷயங்களையும் புதிதாகத் தரவல்ல கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன். இந்தக் கவிதை குறித்து எனக்கு அவ்வளவாகத் திருப்தியில்லை. அம்மாவுக்குப் பாட்டியின்மீது மதிப்பில்லை என்கிற பொருளைக் கவிதை சுட்டுகிறதோ என்று தோன்றுகிறது. நான் சொல்ல வந்தது அதில்லை. மாறுகிற உலகத்தில் மதிப்புகள் மற்றவர்கள் ஆண்ட பொருள்களைச் சேமிப்பதில் இல்லை என்கிற முதிர்ச்சி வயதான அம்மாவுக்கும் வந்திருக்கிறது என்பதைச் சொல்ல விரும்பினேன். அதனாலேயே, எழுதி நாளானாலும் எங்கும் இடாதிருந்தேன். ஆனாலும், என் மனைவிக்குப் பிடித்துவிட்டக் காரணத்தால் அவர் சிபாரிசில் இக்கவிதை இங்கே இடம் பெறுகிறது.)

பாட்டியின் மரபீரோ

- பி.கே. சிவகுமார்

மரபீரோ
கல்யாணச் சீராய்
பாட்டி கொணர்ந்தது

இரண்டு அடுக்குகள்
உண்டு அதற்குள்
மேலடுக்கில்
செத்துப்போன தாத்தாவின்
இரண்டு சட்டை வேட்டிகள்
கீழடுக்கில்
பாட்டியின் புடவை ரவிக்கைகள்

பின்பக்க காலின் குமிழ்
வயதாகி உடைந்துவிட்டது
அட்டை கொடுத்து
நிறுத்தி வைத்திருந்தாள் பாட்டி
ஒருபக்க கதவும் கூட
எப்போதும் வந்துவிடுமென்பதுபோல்
சரியாக மூடாது

பாட்டி சொத்துகளுக்கு
பீரோதான் பேங்க்
பார்க்க வருகிறவர்கள்
கொடுக்கிற பணத்திலிருந்து
பதார்த்தங்கள் வரை
அங்கே
அவள் ஸ்பரிசத்துக்காகக்
காத்திருக்கும்

வெளுக்கத் துணி வாங்க வந்தவள்
நடைக்குப் பெயர்ந்திருந்த பீரோவைப் பார்த்து
நான் எடுத்துக்கட்டுமா எனக் கேட்க
கொஞ்ச நேரம் யோசித்த அம்மா
சரியெனச் சொல்லிப் போனாள்

பூஜையறையில்
மேலே விளக்கெறிய
ப்ரேம் போட்ட போட்டோவில்
பாட்டி சிரித்துக் கொண்டிருக்கிறாள்

இன்னும் கொஞ்சம் பழைய கவிதைகள்

என் கல்லறை வாசகம்:

எப்போதேனும்
எனைத் தேடி
இங்கு
வர வேண்டாம்
பூக்களுடன்

மரித்தவருக்கு
மரியாதை செய்ய
பூக்களைக் கொல்வதில்
விருப்பமில்லை
எனக்கு

நீங்களும்
நானும்கூட
அறிந்திராத ஏதோவொன்றாய்
எப்போதும் சிரிக்கிறேன்
உங்கள் வீட்டில்
நான்

அவ்வப்போது
அடையாளம் கண்டு
சிநேகமாய்
முறுவலிக்கும்
உங்கள் வீட்டு
பூச்செடிகள்

(மனுஷ்ய புத்திரன் "இங்கே யாரும் இல்லை" என்று கல்லறை வாசகம் என்னும் தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருப்பதாக நினைவு. அதைப் படித்த பாதிப்பில் எழுதியது மேலே இருப்பது)

**** **** ****

இதுவும் காதல்தான்:

நீயும்
நானும்
பேசினோம்
விவாதித்தோம்
குரல் உயர்த்தினோம்
சண்டை போட்டோம்
அடித்துக் கொண்டோம்
ஒருவரையொருவர்
ரணமாகக் கீறிக் கொண்டோம்
பிறர்
குருதி குடித்தோம் சுவைத்து
ஒரு மௌன கணத்தின்
ஆசுவாசத்தில்
ஆரத்தழுவி ஆலிங்கனம்
செய்து கொண்டோம் முரடர்களாய்
முத்தங்கள் பரிமாறிக் கொண்டோம்
உன்மத்தர்களாய்
'நாளைக்கு பார்க்கலாம்' என்ற முணுமுணுப்பில்
மெல்ல விலகி கையசைத்து
நடக்க ஆரம்பித்தோம்
வெவ்வேறு திசைகளில்
ஏமாற்றங்களை அடைகாத்தபடி

***** ***** *****

வழி விடுதல்:

என் கவிதை
உனக்குள்
உண்டாக்குகிற
சலனங்களையும்
மௌனங்களையும்
நான் அறிவேன்
பிடிக்காதவள் போல
பார்வையால் புறந்தள்ளி
போய்க்கொண்டிரு
வழக்கம்போல
நீ

(இக்கவிதைகள் 2003 வசந்தகாலத்தில் ஓர் நாள் எழுதப்பட்டவை)

Wednesday, April 14, 2004

ஹார்வார்டில் கொடிநாட்டும் பெண்கள்

பெண்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். வருகிற இலையுதிர்காலத்தில் ஹார்வார்டில் முதலாம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிற பெண்களின் எண்ணிக்கை முதன்முறையாக ஆண்களைவிட அதிகம் என்று டைம் எழுதியிருக்கிறது. வித்தியாசம் அதிகமில்லை. மூன்றுதான். இது என்ன? நம்ம ஊரு எஸ்.எஸ்.எல்.சி, ப்ளஸ் டூ முடிவுகளில் பெண்கள் ஆண்களை முந்திச் செய்கிற சாதனைகளைவிடவா என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்.

மேலும் இலையுதிர்காலத்தில் முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 18.9% மாணவ மாணவிகள் ஆசிய அமெரிக்கர்களாம். இதில் பெரும்பகுதி சீன மற்றும் இந்திய மூலத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்பது நிச்சயம். 10.3% ஆப்பிரிக்க அமெரிக்கர்களும், 9.5% லத்தினோஸ் (ஸ்பானிய மொழி பேசுபவர்கள்) என்றும் டைம் எழுதுகிறது. இம்மூன்று சதவீதங்களுமே இக்குறிப்பிட்ட பிரிவுகளில் சாதனைகளாம்.

மற்றவர்களை ஒப்பிடும்போது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கல்வியில் அவ்வளவாகத் தொடர்வதில்லை என்று ஒரு பிம்பம் இங்கே நிலவுகிறது. நானும் கொஞ்ச நாள் அப்படி நினைத்திருந்தேன். ஆனால், லத்தினோஸ் என்கிற ஸ்பானிய மொழி பேசுபவர்கள்தான் ஒப்பிடும்போது குறைந்த அளவில் மேற்படிப்பு வரைச் செல்பவர்களாக இருக்கிறார்கள் என்று அறிய வந்தேன். உதாரணமாக, எத்தனை சதவீதம் பேர் உயர்நிலைக் கல்வி வரை முடிக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரத்தில் லத்தினோஸ் கடைசி இடத்தில் இருப்பதாக கடந்த காலத்தில் புள்ளிவிவரங்கள் சொல்லின. வெள்ளைக்காரர்களுக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் இடையே எத்தனை சதவீதம் உயர்நிலைப் பள்ளியை முடிக்கிறார்கள் என்பதில் இருவருக்கும் அதிகப்பட்சம் 3 சதவீதத்துக்கு மேல் வித்தியாசம் இல்லை என்று படித்த ஞாபகம். பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைவர்க்கும் அமெரிக்காவில் இலவசக் கல்வி என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரிக்குப் போகும்போது பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவசமாகத் தந்ததற்கும் சேர்த்து வசூலித்து விடுகிறார்கள்.

அம்மா

சித்திரை அமாவாசையில்
நான் பிறந்தேன் என்றார்

புதன்கிழமை
சாயங்காலம் என்றார்

ஆபரேஷன் செய்து
வெளியில் எடுத்ததார்கள் என்றார்

நல்ல எடையும்
உயரமும் கொண்டிருந்தேனென்றார்

பிறக்கும்போதே
கருகருவென்று
நிறையமுடி என்றார்

பிறந்தவுடன்
கணீரென்று அழுதேனென்றார்

அப்பாக்கும்
தாத்தா பாட்டிகளுக்கும்
அளவிலாத சந்தோஷமென்றார்

நர்சுகள் தூக்கி
என்னைக் கொஞ்சுவர் என்றார்

தொந்தரவு செய்யாமல்
தூங்கிக் கொண்டிருப்பேன் என்றார்

குழந்தையில்
என்ன செய்தேன் என்றால்
பலர் ரசிக்கக்
குறும்புகள் செய்தேன் என்றார்

கர்ப்பக் காலமும்
ஆபரேஷனும் கொணர்ந்த
வலிகளைச் சொன்னதுமில்லை
நான் கேட்டதுமில்லை

Written On: Apr 14, 2004

சின்னத் தவறு

நன்றாக இருக்கிறது என்று நண்பர்கள் என் எழுத்தைப் பற்றி சொல்லுகிற கணம் நெஞ்சுக்குள் சந்தோஷத்துடன் பயத்தையும் கொணர்கிறது. மேலும் எழுதிக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற ஜாக்கிரதையுணர்வு பிறக்கிறது. அத்தோடு எழுதுவதை விட்டுவிட வேண்டும் என்கிற பொறுப்பையும் சுயதிருப்தியையும் அளிக்கிறது. ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்கள் ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டு அதைக் குறித்து அலட்டிக் கொள்ளாமல் ஆனந்தமாக இருக்கிறார்கள் என்று புரிபடுகிறது. ஆனாலும், வழக்கம்போல மீண்டும் என் எழுத்தைத் திரும்ப வாசிக்கும்போது ஏற்படுகிற திருப்தியின்மை எழுதத் தூண்டுகிறது. எவ்வளவு நாள்களுக்குப் பழைய படைப்புகள் கொணர்கிற பாராட்டில் வாழ்வது. ஏதேனும் புதிதாக எழுத வேண்டும் என்று இன்று உந்தியது. வரும் என்றால் நிறுத்த முடியாது. வராவிட்டால் ஒன்றும் செய்ய இயலாது. மனிதனின் இயற்கை உபாதையிலிருந்து எழுத்துவரை இப்படித்தான். மனமும் உளவியலும் சேர்ந்து நிகழ்த்துகிற இயற்கை உபாதை எழுத்து. ஆனாலும், பழைய கவிதைகளுக்குக் கிடைத்தப் பாராட்டைத் தூண்டிலாக்கிக் காத்துக் கொண்டிருந்தபோது கிடைத்தது இந்தக் கவிதை. எப்படியிருக்கின்றது என்று தெரியவில்லை. நன்றாக இருப்பதாக யாரும் நினைத்தால் அந்தப் பாராட்டு என் குழந்தைகளைச் சாரும்.

சின்னத் தவறு

- பி.கே. சிவகுமார்

எண்பத்தொன்பது மதிப்பெண்கள்
என்றான் மகன்
நூறு வாங்கவேண்டும்
என்றேன் நான்
ஒரு பதிலில்
சின்னத் தவறாகிவிட்டது
என்றான் மகன்
நூறு இல்லை அப்பா
ஒரு நூறு என்றாள் மகள்
சின்னத் தவறுகள்
எப்படி ஏற்படுகின்றன என்று
தெரிந்துபோனது எனக்கு

Written On: April 14, 2004

எந்திர வாழ்க்கை

எந்திர வாழ்க்கை

- பி.கே. சிவகுமார்


வேர்வை வழியாமல்
உழைப்பதற்கும்
உய்வதற்கும்
ஒயிட் காலர் வேலை

போஷிப்பதற்கும்
தூஷிப்பதற்கும்
படிதாண்டா பத்தினி

உணர்வதற்கும்
தெளிவதற்கும்
குழந்தைகள்

கடைகடையாய் ஏறி
கண்டதை வாங்க
கண்கவர் அக்கார்ட்

காலையில்
பள்ளியெழுப்ப
எம்.எஸ்.

வீட்டிற்குள் வந்து
சிரிப்பு மூட்ட
விவேக்கும் வடிவேலும்

ஜோவும் சிம்மும்
சலிப்படித்தால்
ட்ரூ பாரிமோர்
முத்தங்கள்

உறைகின்ற குளிருக்கு
ஸ்கீயிங்
உருக்குகின்ற வெயிலுக்கு
பீச்

இலக்கிய விசாரத்துக்கு
திண்ணையும் இணையமும்
அரசியல் வம்புக்கு
புஷ்ஷீம் ஜெவும்

மறந்துபோன கண்ணீரை
மூக்குறிஞ்சி வெளிக்கொணர
மெகா சீரியல்கள்

கழிவறையிலும்
கம்பெனி கொடுக்க
செல்பேசி

வாரக்கடைசிகளில்
பார்ட்டிகள்
நெடுந்தூக்கம்
கோயில் சினிமா
பார்க் பௌலிங்
இத்தியாதி

வாழ்க்கை
பறக்கிறது
வசதியாக

படைப்பூக்கம் தராத
பாழ்பட்ட வாழ்வென்று
யார் புலம்புவது
அங்கே

எந்திர வாழ்வென்று
கவிபாடச் சொல்லிக்
கைத்தட்டினால் போச்சு.

Tuesday, April 13, 2004

யேன் செய்ததில்லை?

யேன் செய்ததில்லை?

- பி.கே சிவகுமார்

வாசல்விளக்கைச் சுற்றிவந்து
விழுந்து மடியும் விட்டிலுக்கு
ஆயுள்காலம் அற்பம்தான்
ஆனாலும் ஏனொருமுறை
கூட விட்டிலைப் பார்த்தபின்னே
ஜன்னலை மூடாமல்
விளக்கணைக்க விரும்பியதில்லை

அந்தத் தெருநாய்
நண்பனுமில்லை
பகைவனுமில்லை
ஆனாலும்
பார்க்கும்போதெல்லாம்
பார்வையால் அங்கீகரிக்கும்
அலட்சியமாய் நான் நடக்க
வழிவிட்டு விலகிப் போகும்
பின்னிரவு வேளையில்
தனியாக வந்தபோதும்
தலைதூக்கிப் பார்த்ததன்றி
ஒருபோதும் உறுமியதில்லை
பின்வந்து பாய்ந்ததில்லை
ஏனதற்கு
வாங்கிப் போட்டதில்லை
வறண்டுபோன ரொட்டிகூட

தோட்ட மரக்கிளையில்
தாவிக் குதித்தோடும்
அணில் காட்டிச் சோறு
பகல்வேளையில் குழந்தைக்கு
எப்போதோ மாடியில்
காயப்போடும் கடலைக்கு
கண்வைத்து அதுவந்தால்
சத்தம்போட்டு விரட்டாமல்
சம்மதம் ஏன் சொன்னதில்லை

கொலைபழிகள் செய்யாமல்
தனிவரிசை அமைத்துப்போகும்
புத்தகத்தில் சேமிப்புக்குப்
எப்போதும் கதையாகும்
தப்பிதமாய் விழுந்துவிட்ட
சிறுதுளி பொறுக்கித் தின்று
கூடிவாழ சேதி சொல்லும்
ஆனாலும்
எறும்புப் புற்றை
கண்டவுடன் பதைபதைத்து
மஞ்சள்பொடி தூவாமல்
மண்ணெண்ணெய் ஊற்றாமல்
இருக்கட்டும் இதுவுமென்று
ஏனிங்கு இருந்ததில்லை

ஞாபகங்கள்

(அங்கங்கே சிதறிக் கிடக்கும் என் படைப்புகளை இங்கே ஆவணப்படுத்த ஆசை. அதன் முதல்படியாக இந்தக் கவிதை.)

ஞாபகங்கள்

- பி.கே. சிவகுமார்

வயல்வெளிகளினூடே
ஊர்ந்து கொண்டிருக்கிறேன்
கடக்கின்ற ஒவ்வொரு அங்குலத்திலும்
உன் காலடி பார்க்கின்ற
ஞாபகங்கள்

அவ்வப்போது
பெருத்துக் கொழுத்த
எலிகள் விருந்தாகவும்
நோஞ்சானாய் சிறுத்துக்
கருத்த எலிகள் பசிக்காகவும்
வந்து மாட்டுவதுண்டு
விழுங்குவதற்கு முன்
எல்லா எலிகளின்
கண்களின் பரிதாபத்திலும்
உன் ஞாபகங்கள்

சிலவேளைகளில்
இணைத் தேடி காத்திருக்கும்
சாரைகளின் மீது
நஞ்செனும் விந்து பாய்ச்சிருக்கிறேன்
பிணையும்போதும்
இணைந்து பிரியும்போதும்
உன்னுள் என்னை இழந்த
ஞாபகங்கள்

அவ்வப்போது
தலைக்குமேலே வட்டமிடும்
கருடன்களிலிருந்து
தப்பிக்க ஓடியிருக்கிறேன்
புதர்கள் தேடி.
அப்போதெல்லாமும் கூட
உன் பின்னே ஓடிக்
களைத்த ஞாபகங்கள்

எப்போதோ சிலமுறை
கீரியின் பாதையில்
சிக்கிக் கொண்டிருக்கிறேன்
சீறிச் சீறி சண்டையிட்டபோதும்
விஷம் கக்கி கக்கி
ரத்தம் சிந்த பின்வாங்கியபோதும்
உன்னை வெல்ல முயன்று
தோற்றுப்போன ஞாபகங்கள்

எத்தனை முறை
என்னை மறந்து
உன்னை மறக்கத் தோலுரித்தாலும்
ஒவ்வொரு சட்டையிலும்
திட்டு திட்டாய்
உன் ஞாபகங்கள்

நதிகள் இணைப்பு

பா.ஜ.க.வுக்குத் தான் ஓட்டுப் போடப் போவதற்குக் காரணமாக நதிநீர் இணைப்பை அக்கட்சித் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ரஜினி. ரஜினி காரணமே சொல்லாமல் பா.ஜ.க.வுக்கு அவர் ஓட்டு என்று சொல்லியிருந்தாலும் அவர் ரசிகர்கள் ஜென்ம சாபல்யம் அடைந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே, அவர் சொல்லியிருப்பது சால்ஜாப்பு என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ரஜினியின் அறிக்கையைப் படித்தவுடன் தேர்தலில் நிற்கிற பிற கட்சிகள் தாங்கள் எவ்வளவு ஆண்டுகளாய் நதிகளின் இணைப்புக்குக் குரல் கொடுத்து வருகிறோம் என்று பட்டியலிட ஆரம்பித்து விட்டன. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்புப் பற்றிச் சொல்லியிருந்தால் ரஜினி தன் ஓட்டை அனைத்துக் கட்சிகளுக்கும் அளித்துச் செல்லாத ஓட்டாகியிருப்பாரா என்கிற கேள்வி குதர்க்கமானதோ யூகத்தின் அடிப்படையிலானதோ இல்லை. நதிகளின் இணைப்பை எதிர்க்கிற எந்தக் கட்சியும் இருக்க முடியாது. நதிகளின் இணைப்பு அனைத்துக் கட்சிகளின் கொள்கை என்கிற அரசியலாகி வருடங்கள் பல ஓடிவிட்டதை ரஜினி அறியவில்லை என்றும் சொல்ல இயலாது. தபசில் இருந்தாலும் எது நடக்கிறது எங்கே நடக்கிறது என்பதையும் எப்போது வரவேண்டும் என்பதையும் நன்கறிந்தவர் ரஜினி. ரஜினி ஒரு கோடி ரூபாயை நதிகளின் இணைப்புக்குத் தருகிறேன் என்று அறிவித்தபோதும் அதற்கடுத்த ஆண்டுகளிலும் பா.ஜ.க.தான் ஆட்சியிலிருந்தது. அடுத்தத் தேர்தல் அறிக்கையில் அறிவிக்காமல், பா.ஜ.க. உடனடியாகவே நதிகளின் இணைப்பைக் கடந்த ஆட்சியிலேயே செயல்படுத்தத் தொடங்கி இருக்கலாம். ஏன் செய்யவில்லை என்றெல்லாம் ரஜினி யோசிக்க மாட்டார். யோசிப்பார் என்று எதிர்பார்ப்பதும் கூடாது.

சொந்தக் காரணங்களுக்காக அல்லது காரணங்கள் இல்லாத அபிமானம் காரணமாக ரஜினி பா.ஜ.க.க்கு இத்தேர்தலில் ஓட்டளிக்க முடிவெடுத்து விட்டார். அதற்கு நியாயம் தேடி நதிநீர் இணைப்பை இழுக்கிறார் என்று தோன்றுகிறது.

நதிகளின் இணைப்பைப் பற்றி எடுத்துக் கொண்டால், தமிழில் அது குறித்து விரிவாகவும் அறிவுபூர்வமாகவும் உருப்படியாகவும் எழுதியிருப்பவர் பழ.நெடுமாறன் ஒருவர் மட்டுமே என்று எண்ணுகிறேன். அவர் புத்தகத்தின் சில பகுதிகளை ஞாநி சில மாதங்களுக்கு முன் தீம்தரிகிடவில் வெளியிட்டார். பழ.நெடுமாறன் தேர்தலில் நின்றால், நதிநீர் இணைப்புக் குறித்து உருப்படியாகப் பேசியதற்கும் எழுதியதற்கும் ரஜினியின் ஓட்டைக் கட்டாயப்படுத்திக் கேட்கலாம். அல்லது, அப்போது பா.ஜ.க.வுக்கு ஓட்டளிக்க ரஜினி வேறு காரணங்கள் கண்டுபிடிக்க வேண்டியிருக்குமோ?

ரஜினியும் அவர் ரசிகர்களும் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கட்டும். தம்முடைய திறனை நிரூபிக்கட்டும். அதற்காக அடுத்தவர்களை முட்டாளாக்கும் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.

Sunday, April 11, 2004

வார விடுமுறையில் வாசித்தது

இந்த வார விடுமுறையில் படித்த புத்தகம் "அகென்ய்ன்ஸ்ட் ஆல் எனிமிஸ்". ரிச்சர்ட் கிளார்க் எழுதியது. அமெரிக்காவின் பயங்கரவாத சமாளிப்பு/எதிர்ப்புத் துறையின் தலைவராக இரண்டு ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றியவர் கிளார்க். அவரை அரசியல்வாதியின் சாதூர்யம் கொண்டவர் என்று இங்கே பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால், புத்தகத்தைப் படிக்கும்போது அரசியல் பேசுகிறார், தன் சொந்த நலன்களுக்காக எழுதியிருக்கிறார் என்கிற எந்த எண்ணமும் வாசகர் மனதில் தோன்றாமல், அவர் எழுதியிருப்பதைச் சராசரி வாசகர் பெருமளவு நம்பச் செய்கிற விவரங்களுடனும் நடையுடனும் புத்தகம் இருப்பது கிளார்க்கின் வெற்றி. சமீபத்தில் அவர் அளித்த வாக்குமூலமும் செப்டம்பர் 11-ல் உயிரிழந்தவர்களிடம் கடமையில் தவறிவிட்டேனென்று மன்னிப்புக் கேட்டதும் நீங்கள் அறிந்ததே.

புத்தகம் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. செப்டம்பர் 11, 2001 அன்று காலையில் வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பேசுகிற முதல் அத்தியாயம் (ஏறக்குறைய 34 பக்கங்கள்) பல புதிய தகவல்களையும், அந்தத் துயர் நாளின் பரபரப்பையும் அந்தச் சோகத்தை அமெரிக்க அரசாங்கம் எப்படி எதிர்கொண்டது என்பதையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஒரு துப்பறியும் கதையின் அல்லது சுவாரஸ்யமான வரலாற்று நாவலின் வேகத்துடன் புத்தகம் பேசுவது அதை ஒரே மூச்சில் தொடர்ந்து படித்து முடித்துவிட உதவுகிறது. ஏறக்குறைய 275 பக்கங்கள். நான் நேரமின்மையால் முதல்நாள் 70 பக்கங்களும், இரண்டாம் நாள் மீதியும் படித்தேன். அமெரிக்கர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தார்களேயானால், புஷ் மீண்டும் ஜெயிப்பது கஷ்டம். இந்தப் புத்தகத்தைப் பற்றி நேரம் கிடைத்தால் விவரமாக எழுத வேண்டும். சுருக்கமாக வாசக அனுபவம் எழுதச் சொன்னால் ஒரு வார்த்தையில் சொல்லலாம். படியுங்கள்.